Saturday, November 22, 2014

வன்மம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
’கெஸ்ட் ரோல்’ ஸ்பெஷலிஸ்ட் விஜய் சேதுபது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொஞ்சம் முன்னேறி டபுள் ஹீரோவாக நடித்திருக்கும் படம், வன்மம். யாமிருக்கே பயமே புகழ் கிருஷ்ணா இன்னொரு ஹீரோவாக நடிக்க, இன்று வெளியாகியிருக்கும் படம் வன்மம்.

ஒரு ஊர்ல..:

விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நண்பர்கள். நண்பனின் உயிரைக்காக்க, ஹீரோயினின் அண்ணனைக் கொல்கிறார் விஜய் சேதுபதி. அந்தக் கொலையும், அதனால் நட்பில் விரிசல் வருவதும், அதன் பின்விளைவுகளுமே படம்.

உரிச்சா....:
நட்பை அடிப்படையாக வைத்து எத்தனையோ படங்கள் தமிழில் வந்துவிட்டன. இதுவும் அந்தவகைப் படம் தான். ஆனாலும், படத்தில் எழும் சிக்கலை வித்தியாசமானதாக ஆக்கியதால் கதையும் புதிதாகத் தெரிகிறது.

கிருஷ்ணாவின் ராசியோ என்னவோ, ’யாமிருக்க பயமே’ மாதிரியே இதிலும் படத்தின் முதல் அரைமணி நேரம் செம போர். அந்த அரைமணி நேரத்தில் விஜய் சேதுபதி அடக்கி வாசித்து, கிருஷ்ணாவிற்கு அதிக சீன்களை வாரி வழங்கியிருக்கிறார். கிருஷ்ணாவும் சுனைனாவும் காதலிக்கும் சீன்களில் கற்பனை வறட்சி. சுனைனாவின் அண்ணனாக நடித்துள்ள ‘கோலி சோடா’ மதுசூதனன் கொஞ்ச நேரமே வந்தாலும், செம நடிப்பு. அவர் கிருஷ்ணாவை வெட்ட வருவதும், விஜய் சேதுபதி அதைத் தடுக்கப்போய் அவரைக் கொல்வதும் செம ட்விஸ்ட்.

அதற்குப் பிறகு நண்பர்கள் பிரிகிறார்கள். கிருஷ்ணா சுனைனா குடும்பத்துடனும், விஜய் சேதுபதி வில்லனுடனும் சேருவார்கள் என்று நினைத்தால், அது இங்கே தலைகீழாக நடக்கிறது. ‘நீதி’ பட சிவாஜி போல் ஆகிறது விஜய் சேதுபதியின் நிலைமை. இரண்டாம்பாதி முழுக்க நல்ல விறுவிறுப்பு. படம் போரடிக்காமல் செல்கிறது. கிளைமாக்ஸை யூகிக்க முடிகிறது என்றாலும், யாருமே யூகிக்காத கிளைமாக்ஸ் வேண்டும் என்றால் எங்கே போவது???

நீண்டநாட்களுக்குப் பிறகு, கிராமத்துப் பிண்ணனியில் செண்டிமெண்ட்டுடன் ஒரு படத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இயக்குநர் ஜெய் கிருஷ்ணா நாஞ்சில் நாட்டுக்காரராம். நாஞ்சில் நாட்டு அழகை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லாருமே நன்றாக நாஞ்சில் தமிழ் பேசியிருக்கிறார்கள்.

கொலை மேல் கொலை விழுந்துகொண்டே போக, போலீஸை ஒன்றுமே செய்யாமல் வேடிக்கை பார்ப்பவர்களாக காட்டியிருப்பது ஒன்று தான் இரண்டாம்பாதியில் நெருடல்.

விஜய் சேதுபதி:

படத்தை ஒற்றை ஆளாய்த் தாங்கும் கதாபாத்திரம். மனிதர் வழக்கம்போல் நடிப்பில் பிய்த்து உதறுகிறார். நட்புக்காக கொலையே செய்யத்துணிவதும், அந்த நண்பனே காட்டிக்கொடுத்ததும் கலங்கி நிற்பதுமாக செம பெர்ஃபார்மன்ஸ். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருந்தும், தன் நடிப்பால் இதை சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டாக ஆக்கிவிடுகிறார். பஞ்ச் டயலாக் மட்டும் தான் பேசவில்லை, மற்றபடி ஒரு ஆக்சன் ஹீரோவாக இதில் ஆகியிருக்கிறார்.

கிருஷ்ணா:

சுறுசுறுப்பான ஆளாக இருக்கிறார் கிருஷ்ணா..ஆனால் முதல்பாதியில் புதிதாக ஏதும் இல்லாததால், இவரது நடிப்பு பெரிதாக நம்மை ஈர்ப்பதில்லை. இரண்டாம்பாதியில் விஜய் சேதுபதிக்கே நடிக்க வாய்ப்பு. கிருஷ்ணாவை பி&சி செண்டரில் பிரபலமாக்க இந்தப் படம் உதவலாம்.
சுனைனா:
ஃபுல் மேக்கப்பில் வருவது, ஹீரோவைத் திட்டுவது முதல்பாதி வேலை..அண்ணனை நினைத்து அழுவது மட்டுமே இரண்டாம்பாதி வேலை. பெரிதாக நடிக்க ஒன்றும் வாய்ப்பில்லை..இருக்கிறார், அவ்வளவு தான்.

சொந்த பந்தங்கள்:

’கோலி சோடா’ மதுசூதனனுடன் வரும் இரு இளைஞர்களும் கவனம் ஈர்க்கிறார்கள். நிறையப் பேர் நாஞ்சில் நாட்டு முகங்களாகவே தெரிகிறார்கள். விஜய் சேதுபதி அப்பா, கிருஷ்ணா அம்மா, அந்த வில்லன் என நல்ல நடிகர் செலக்சன். எல்லாருமே இயல்பான மனிதர்களாக வருவது ரசிக்க வைக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- முதல் அரைமணி நேரம்
- டம்மி போலீஸ்
- கம்மியான காமெடி
- வழக்கமான கிளைமாக்ஸ்

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- விஜய் சேதுபதி
- இரண்டாம் பாதி
- நாஞ்சில் மண்ணை ஸ்க்ரீனில் அப்படியே அள்ளிக்கொண்டு வந்தது...ஒளிப்பதிவும் வசனங்களும், நடிகர் தேர்வும் அருமை
-  தமனின் பாடல்கள்..குறிப்பாக ஓப்பனிங் சாங் மற்றும் மனமே..மனமே.

பார்க்கலாமா?

பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

 1. அப்போ பார்த்து விடுவோம் .

  ReplyDelete
 2. அப்ப படத்துக்கு லேட்டா போனாலும் பிரச்னையில்லே னுக்கு நினைக்கிறேன்

  ReplyDelete
 3. நன்றி. இன்று பர்மிஷன் போட்டுவிட்டு செல்கிறேன் ஐயா

  ReplyDelete
 4. பாஸ், படத்திற்கு பர்மிசன் போட்டு போனா... யாருமே இல்லை, ஓரமா நில்லு என்று நிப்பாட்டிட்டாங்க... கடைசியில் ஒரு ஐந்து பேர் கூட தேரவில்லை என ஷோ கேன்ஷல் பண்ணிட்டாங்க... பன்மிஷன் வீணா போச்ச்ச்ச்ச்

  ReplyDelete
 5. பார்த்தேன்.விமர்சனப்படி நகர்ந்தது,படம்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.