அரிஸ்டாட்டில் எனும் ஆரம்பம்
குருகுலக் கல்வி தான் நம் சமூக வழக்கம். மருத்துவமானாலும் சாஸ்திரங்கள் ஆனாலும்
ஒரு குருவினை அண்டி கற்றுக்கொள்வதே நம் வழக்கம். இந்த முறையில் ஒரு மிகப்பெரிய குறை
உண்டு. ஒரு குரு பரம்பரை அழிந்தால், அந்த கல்விச் செல்வங்களும் அவர்களுடன் அழிந்துவிடும்.
வானியல், சித்த மருத்துவம் என பல விஷயங்களில் நாம் அப்படி இழந்தவை அதிகம்.
கல்வியைப் பொதுவில் வைப்பது எனும் பழக்கமே இல்லாத சமூகம் நம்முடையது. அது இன்று
மாறிவிட்டது என்று நீங்கள் நம்பினாலும், சினிமாவைப் பொறுத்தவரை இன்னும் தொடர்கிறது
என்பதே வேதனை. நாடக காலம் முதல் டிஜிடல் சினிமா வரை எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கே சாதித்திருக்கிறார்கள்.
திரைக்கதை பற்றியோ, ஒளிப்பதிவு பற்றியோ, இயக்கம் பற்றியோ எதையாவது எங்காவது எழுதி
வைத்திருக்கிறார்களா என்று தேடிப் பாருங்கள். இருக்கவே இருக்காது. ‘அவர் தமிழ் சினிமாவில்
புதிய அலையைத் தோற்றுவித்தவர். இவர் நடிகர்களை அடிப்பார். அவருக்கும் அந்த நடிகைக்கும்
காதல்ல்ல்ல்ல்’ என்பது போன்ற அரிய விஷயங்கள் தான் நமக்குக் கிடைக்குமேயொழிய, டெக்னிகலாக
எதுவும் உங்களுக்குக் கிடைக்காது.
பட வாய்ப்பே இல்லாமல் சும்மா இருந்தாலும்கூட, தான் கற்றதை பொதுவில் வைப்போம் எனும்
எண்ணம் பெரும்பாலோனோர்க்கு வருவதேயில்லை. காரணம், நம் வம்சம் அப்படி!
ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? ’வா..வந்து என்னிடம் அடிமையாக இரு. ஏவல்
வேலைகளைச் செய். முடிந்தால், கற்றுக்கொள்’ எனும் நவீன குருகுல மனோபாவமே இன்னும் பெரும்பாலான
இடங்களில் கோலோச்சுகிறது. ஒரு கேரக்டரை எப்படி வடிவமைத்தார்கள் என்றோ, ஒரு ஷாட்டை ஏன்
அப்படி எடுத்தார்கள் என்றோ பொதுவில் யாரும் பேசுவதேயில்லை. (இப்போழுது பரவாயில்லை!)
அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், திரைப்படக் கல்லூரிகளுக்குத் தான் நீங்கள்
போக வேண்டும். கல்வியே சென்ற தலைமுறையில் தான் பரவலாக்கப்பட்டிருக்கிறது. நல்ல வேலையும்
சம்பளமும் இந்த தலைமுறையில் தான் பரவலாகக் கிடைக்கிறது. இதில் குடும்பத்தைக் காப்பாற்றுவதா,
திரைப்படக் கல்லூரிக்குப் போவதா?
பிறநாட்டுப் படைப்பாளிகள் குறிப்பாக ஹாலிவுட் படைப்பாளிகள் அந்த விஷயத்தில் தங்கமோ
தங்கம். ஹிட்ச்காக்கும், மார்டினோ ஸ்கார்ஸேஸியும் இன்னபிற பெரியவர்களும் கொடுத்திருக்கும்
பேட்டிகளைப் பார்த்தால், பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும், சில முக்கிய காட்சிகளை,
சில ஷாட்களை எப்படி எடுத்தோம் என்று விலாவரியாக விளக்குகிறார்கள். ‘அய்யய்யோ…அடுத்தவன்
கற்றுக்கொள்வானே’ எனும் பயமே(!) இல்லை.
ஹிட்ச்காக் ஹாலிவுட் வரும் முன்பே, தனது ஐரோப்பியப் படங்களின் கதையை எப்படி உருவாக்கினோம்
என்று மீட்டிங்கிலும் பேட்டிகளிலும் வெளிப்படையாகப் பேசுகிறார். இங்கே பில்டப்களும்,
துதிபாடல்களும் தான் நமக்குக் கிடைக்கின்றன. (பாலு மகேந்திரா, பாக்கியராஜ் போன்ற சிலர்
மட்டும் விதிவிலக்கு. அவர்களின் பேட்டிகளில் நல்ல தகவல்கள் இருக்கும்)
இயல், இசை, நாடகம் என எல்லாவற்றிலும் நாம் தனித்தன்மை உடையவர்களாக இருந்தும், சினிமாவைக்
கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நம் மண்ணின் மைந்தர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்பதே
பொதுவான நிலை. எனவே தான் திரைக்கதை பற்றிக் கற்றுக்கொள்ள, ஆங்கிலப் புத்தகங்களை நாடினேன்.
பல புத்தகங்களைப் படித்தபின்னர், ஹிட்ச்காக் கொடுத்த 12 மணி நேரப் பேட்டியான
“Hitchcock/Traufut புத்தகத்தைப் படித்தேன். ஆச்சரியகரமாக, இதுவரை நான் படித்த பல விஷயங்களையும்
இந்தப் புத்தகத்தில் இவர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். இந்த தொடரின் முதல் பாகத்தில்
வந்தவற்றில், பெரும்பாலானவை அவரிடம் நான் கற்றுக்கொண்டது தான்.
நம் கதை, நம் முன்னோர்களுடனே முடிந்துவிட்டாலும் ஹாலிவுட்டில் நிலைமை அப்படி இல்லை
என்பது பெரும் ஆறுதல்.
கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் தன் Poetics நூலில் நாடகம் பற்றி எழுதுகையில் ‘ஆரம்பம்,
மத்திமம், முடிவு ஆகிய மூன்றைக் கொண்ட நாடகமே முழுமையானது’ என்று சொன்னார். அந்த தீப்பொறி
தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதில் இருந்து ஒரு நாடகத்திற்கு மூன்று ஆக்ட்கள் அவசியம்
என்றும் அவை ‘Set Up(அமைப்பு), Confrontation(எதிர்கொள்ளல்), Resolution(தீர்வு)’ என்றும்
ஒரு நாடக இலக்கணம் உருவானது. இவற்றையே மூன்று அங்க வடிவம் (Three Act Structure) என்று
அழைத்தார்கள்.
இது ஒரு அடிப்படையான இலக்கணம் தான். இது ஏறக்குறைய ‘தோன்றுதல், திரிதல், ஒடுங்குதல்’
எனும் நமது இலக்கணத்திற்கு இணையானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இது காலம்
காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஒரு வடிவம் தான்.
இதை வைத்து ‘ ஹீரோ & முக்கிய கேரக்டர்கள் அறிமுகம் – ஒரு பிரச்சினை அல்லது
சவால் – கிளைமாக்ஸ்’ என்று சீன் டெவலப் செய்யலாம். நாம் சென்றபகுதியிலேயே முப்பது சீன்
எழுதும் அளவிற்கு டெவலப் ஆகிவிட்டோமே என்று நீங்கள் யோசிக்கலாம். நல்ல காமன் சென்ஸும்,
ஆடியன்ஸின் பல்ஸ் அறியும் சைக்காலஜியும் இருந்தால், 60 சீன்களையும் டெவலப் செய்ய இந்த
தொடரின் முதல் பாகமே போதுமானது.
ஆனாலும் நமக்கு ஏதோவொன்று குறைவதால், தொடர்ந்து இணைந்து கற்போம்!
(தொடரும்)
பாஸ், ஏதோ dry யா போகிற மாதிரி தெரியுது பாஸ்... சாரி, நான் ஒரு பொது ரசிகன் தான், சினி துறையில் இல்லை... அதனால் கூட அப்படி இருக்கலாம்...
ReplyDeleteடோண்ட் ஒர்ரி...இதெல்லாம் இரண்டாம் பகுதிக்கான முன்னுரைகள் தான்.
Deletemass. Kaaturiga ponga. Going interesting
ReplyDelete