Tuesday, November 11, 2014

ஹிட்ச்காக் : Rebecca(1940) - ஒரு அலசல் (நிறைவுப் பகுதி)

ரிபெக்கா குளிர் காய்ந்த நெருப்பு
ரிபெக்காவிற்கு ஃபாவெல் எனும் ஒரு கள்ளக்காதலன் படத்தில் வருகிறார்.
George Sanders அந்த கேரக்டரில் கலக்கியிருப்பார். மிகவும் எனர்ஜெடிக்கான ஆசாமி. ரிபெக்காவை ஃபாவெல் கேரக்டரை விடவும் அதிகம் நேசிப்பது, Mrs.Danver தான்.

ரிபெக்காவின் கம்பேனியனாக வந்து, அந்த மாளிகையை நிர்வகிக்கும் பெண்மணி. Judith Anderson எனும் நாடக நடிகை அந்த கேரக்டரைச் செய்திருப்பார். ஹீரோயினை சைக்காலஜிக்கலாக டார்ச்சர் செய்யும் கேரக்டர் என்பதால், ஒரு மர்மமான பெண்மணியாக அசத்தியிருப்பார்.

ரிபெக்காவின் அடையாளங்கள் கொஞ்சமும் அழியாமல் பார்த்துக்கொள்வது.

ரிபெக்காவின் பெட் முதல் கர்ச்சீப் வரை, ரிபெக்கா உயிருடன் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே மெயிண்டெய்ன் செய்வது.

ஹீரோயின் எங்கு சென்றாலும், ரிபெக்காவை ஞாபகப்படுத்தும் ஏதோவொன்று இருக்கும்படி பார்த்துக்கொள்வது

அதன்மூலம், ஹீரோவும் ரிபெக்காவை முழுக்க மறந்துவிடாதபடி செய்வது.

கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வுமனப்பான்மையின் உச்சத்திற்கே ஹீரோயினைத் தள்ளுவது

ஹீரோயினை தற்கொலை செய்யத் தூண்டுவது – என மிஸஸ் டேன்வரின் லீலைகள் கணக்கில் அடங்காதவை. ஹீரோவை விடவும் முக்கியமான ரோல் இது. ஆனால் இதையேல்லாம் இவர் ஏன் செய்கிறார்?
ரிபெக்காவுடன் அந்த மாளிகைக்கு வந்தவர். ரிபெக்காவை ஆராதித்தவர். முதலாளியம்மா மேல் உள்ள பாசத்தினால் மட்டுமே அதைச் செய்கிறாரா? யாராவது முதலாளியம்மா இறந்துவிட்டால், அந்த இடத்திற்கு வேறு யாரும் வரக்கூடாது என்று நினைப்பார்களா? ஹீரோயின் போன்ற அப்பாவி முதலாளியம்மா கிடைத்தால், கொண்டாட மாட்டார்களா? சரி, ஹீரோவுக்கு ரூட் விடுகிறாரா என்றால், அதுவும் இல்லை. அப்புறம், ஏன்?

அதில் தான் ஹிட்ச்காக் ஒரு அணுகுண்டை ஒளித்து வைத்திருக்கிறார். ரிபெக்கா ஒரு லெஸ்பியன் என்றே யூகிக்கிறேன். மிசஸ் டேன்வரும் ரிபெக்காவும் காதலர்கள். 1940களில் அமெரிக்க சென்சார் போர்டு நம்மூர் சென்சார் போன்று ஸ்ட்ரிக்ட்டாக இருந்தது. ஓரினச்சேர்க்கை பற்றிய காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் அனுமதியில்லை. அனுமதி இருந்திருந்தாலும், ஹிட்ச்காக் இதை ஆடியன்ஸின் யூகத்திற்கு விடவே விரும்பியிருப்பார் என்று நம்புகிறேன்.

ரிபெக்காவுக்கும் மிசஸ் டேன்வருக்குமான உறவை கீழ்க்கண்ட விஷயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

- She adores Rebecca எனும் மிசஸ்.டேன்வர் பற்றிய வசனம்
- தன் காதலி ரிபெக்காவின் இடத்தில் இன்னொருத்தியா என்று கடுப்பாவது
- ஹீரோ வேறு யாரையும் அந்த இடத்திற்கு கொண்டுவந்துவிடக்கூடாது என்று நினைப்பது
- போலீஸிடம் ஃபாவெல் ரிபெக்காவும் தானும் காதலர்கள் என்று சொல்லும்போது, கடுப்பில் முகம் சிவப்பது.
- அவனிடம் கோபமாக ‘Love was a game to her…It made her laugh. She used to sit on the bed and rock with the laughter at the lot of you’ என்று சொல்வது.
- ரிபெக்காவை ஹீரோ கொன்றான் என்று கேள்விப்பட்டதும் கோபமாகி, அந்த டாக்டர் பற்றிச் சொல்வது. கல்யாணத்திற்கு முன்பே அந்த டாக்டரிடம் ரிபெக்கா செல்வது வழக்கம் என்று சொல்வது. அதாவது, மிசஸ்.டேன்வர் பலவருடங்களாக ரிபெக்காவை அறிவார்.

மிசஸ்.டேன்வர் என்று அழைக்கப்படாலும் மிஸ்டர்.டேன்வர் என்று யாரும் இல்லாதது. டாக்டரிடம் சென்ற ரிபெக்காவும் தன் பெயரை மிசஸ்.டேன்வர் என்றே கொடுத்திருப்பது. அதாவது, இருவருமே ஒருவருக்கொருவர் மிசஸ்.டேன்வர் தான்.

இறுதியில் ரிபெக்கா தற்கொலை தான் செய்துகொண்டாள் எனும் செய்தியைக் கேட்டதும், அந்த மாளிகையை அழித்துவிட்டு, மிசஸ்.டேன்வரும் இறந்து போவது!

விபத்தில் ரிபெக்கா இறந்தாள் எனும் எண்ணத்தில் தான் அதுவரை ரிபெக்கா வாழ்ந்த இடத்தை மிசஸ்.டேன்வர் பொத்திப் பாதுகாத்து வருகிறார். ரிபெக்காவின் இடத்திற்கு இன்னொருவர் வருவதைக்கூட ஜீரணிப்பதில்லை. இறுதியில் தன் துணை கேன்சர் வந்த காரணத்தால், தன்னிடம்கூட அதைச் சொல்லாமல் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து தானும் தற்கொலை செய்துகொள்வது. ஹீரோ-ஹீரோயின் காதலை விடவும், இந்தக் காதலின் சக்தி அதிகம் தான்.


இன்னும் கொஞ்சம்..:
இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியவர் யாரென்றால், ஹீரோயின் Joan Fonataine தான். ஒரு அப்பாவிப் பெண் என்பதை வசனங்களைப் பேசாமலேயே உணர்த்திவிடுகிறார். இதில் நடித்தமைக்காக இவரது பெயர் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும் ஜஸ்ட் மிஸ்.

ஹீரோவாக நடித்த Laurence Oliver-ம் சாதாரண ஆசாமி அல்ல. பின்னாளில் Hamlet போன்ற படங்களை இயக்கிய சாதனையாளர். Spartacus படத்திலும் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியிருப்பார். இந்த படத்திலும் குற்றவுணர்ச்சியுடனும் கவலையுடனும் அலைபவராக பின்னியிருப்பார். ‘உனக்கும் எனக்கும் இடையில் ரிபெக்கா நிழல் போல் இருந்துகொண்டே இருக்கிறாள். அவள் ஜெயித்துவிட்டாள்’ என்று ஹீரோயினிடம் அவர் சொல்லும் காட்சியில் இருவருமே பண்பட்ட நடிப்பை வழங்கியிருப்பார்கள்.

ரிபெக்கா கேரக்டர்க்கு உருவம் கிடையாது என்பது போலவே, ஹீரோயின் கேரக்டர்க்கு பெயரும் கிடையாது. ஹீரோ அவரை டார்லிங் என்பார், மற்றவர்கள் அவரை Mrs. De Winter என்று அழைக்கிறார்கள். இறுதிவரை அவர் பெயர் நமக்குத் தெரிவதேயில்லை.

‘காதல் காட்சியை மர்டர் சீன் போல் எடுக்கிறார். மர்டர் சீனை காதல் காட்சி போல் எடுக்கிறார்’ எனும் செல்ல குற்றச்சாட்டு/பாராட்டு ஹிட்ச்காக் மேல் உண்டு. ஹிட்ச்காக்கை சஸ்பென்ஸ் மன்னன் என்று சொன்னாலும், உண்மையில் காதல் காட்சிகளை உணர்ச்சிப்பூர்வமாக எடுப்பதில் மன்னன் அவர். வெர்டிகோ எதில் உச்சம். இந்தப் படத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, காதல் உணர்வே மேலோங்கி இருக்கிறது.

அவரை சஸ்பென்ஸ் மன்னன் என்று கட்டம் கட்டாமல் இருந்திருந்தால், இன்னும் பல சிறப்பான காதல் கதைகளை அவர் வழங்கியிருப்பார். எனவே தான் அந்த வருட சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதினை இந்தப் படம் தட்டிச்சென்றதில் நாம் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மொத்தத்தில், ஹாலிவுட்டில் முதல்படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டினார் ஹிட்ச்காக். இந்த 1940லிருந்து 1976வரை முப்பத்தாறு வருடங்கள் ஹாலிவுட், ஹிட்ச்காக்கின் மந்திரத்தில் கட்டுண்டு கிடந்தது. அதை ஒவ்வொன்றாக இன்னும் பார்ப்போம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.