Sunday, November 16, 2014

திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27

1.   மூன்று அங்கங்களையும் தாண்டி..

விளாத்திகுளம் வில்லுப்பாட்டில் ஆரம்பித்த சென்ற பகுதி 3 ஆக்ட் ஸ்ட்ரக்சரில் முடிந்தது. காரணத்தோடு தான் அதைச் செய்தேன்.

தமிழ் சமூகத்தின் சாபங்களில் ஒன்று, தன்னம்பிக்கை இல்லாமை. எதுவாக இருந்தாலும், நம்மால் செய்ய முடியாது என்றும் அது வெள்ளைக்காரத் துரைகளால் மட்டுமே ஆகக்கூடிய காரியம் எனும் அடிமை மனோபாவம் நம்முள் ஊறிக்கிடக்கிறது. உண்மையிலேயே நம் ஆள் ஒரு விஷயத்தைச் செய்தாலும், அதை மட்டம் தட்டி வேறு எதனுடனோ ஒப்பிட்டு, உலகில் எங்கோ ஒரு மூலையில் தற்செயலாக நடந்த ஒரு விஷயத்துடன் பொருத்தி, அந்த ஆளை முட்டாள் என்று நிரூபிக்கும் அறிவுஜீவித்தனம் இங்கே கொடிகட்டிப் பறக்கிறது.

இலக்கியம், ஆன்மீகம், சினிமா என எல்லாவற்றிலும் உள்நாட்டுச் சரக்கென்றால் அது தரமற்ற ஒன்று தான் எனும் மனோபாவம் இங்கே ஊறிக்கிடக்கிறது. திரைக்கதை எழுதப் போகும் நீங்கள், இந்த சமூகத்தின் இந்த மனநிலை பற்றியும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. நீங்கள் ஒரு குப்பைப் படம் எடுத்தால், பிரச்சினையில்லை. உண்மையிலேயே உருப்படியாக ஏதாவது செய்ய முயன்றீர்கள் என்றால், கடும் எதிர்ப்பையும் கேலியையும் பழியையும் சுமக்க வேண்டிவரும். அதற்கு இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள்.

ஆனாலும் உள்ளுக்குள் நீங்கள் தன்னம்பிகையுடனும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னோர் பற்றிய பெருமைகள் உங்கள் முன் வைக்கப்படுகின்றன. நீங்கள் பெருமை மிகுந்த ஒரு கதை சொல்லும் பரம்பரையின் நீட்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சென்ற பகுதியில் மூன்று அங்கங்கள் பற்றிப் பார்த்தோம். மூன்று அங்கங்கள் மட்டுமே போதாது எனும் புரிதல் நம் முன்னோர்களுக்கு அப்போதே வந்திருந்தது. எனவே நாடக இலக்கணங்கள் உருவாகி வர ஆரம்பித்தன. பரத முனிவரும் அகத்தியரும் நாடக இலக்கண நூல்கள் எழுதியிருந்ததாகவும், அவைகளைப் பின்பற்றியே நாடகங்கள் நடத்தப்பட்டதாகவும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவைகள் இப்போது கிடைப்பதில்லை.

இப்போது நமக்குக் கிடைப்பதில் முக்கியமானது, சூரிய நாராயண சாஸ்திரிகள் எழுதிய ‘நாடகவியல்’ எனும் நாடக இலக்கண நூல். நடிப்பு பற்றியும், நவரசம் பற்றியும், நாடக இலக்கணம் பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் முக்கியமானவை. எனவே அந்த நூலை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

நாடகம் என்பதை அங்கங்கள் அடிப்படையில் பத்து வகைகளாகப் பிரித்தார்கள். அதில் ஐந்து அங்கம் உடையதற்கு மட்டுமே நாடகம் என்று பெயர். ஆனாலும் நடைமுறையில் இன்று எல்லா வகைகளுமே நாடகம் என்றே அழைக்கப்படுகின்றன.

ஒரு தகவலுக்காக, அந்த பத்து வகைகள் பற்றிய சுருக்கமான குறிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள் :
நாடகம் :

ஐந்தில் குறையாத அங்கங்கள் கொண்டது. ஒன்பது சுவைகளைக் கொண்டது, ஆனால் இன்பம்(உவகை) அல்லது வீரத்தினை(பெருமை) செம்மையாகத் தெரிவித்து வியப்புச் சுவையுடன் முடிவது நாடகம்.

பிரகரணம்:
அந்தணன் - வணிகன் - அமைச்சர் ஆகிய மூவரில் ஒருவனை தலைவனாகக் கொண்டு, பத்தினி அல்லது பரத்தை அல்லது இருவரையும் தலைவியாகக் கொண்டு ஐந்து அங்கங்களைக் கொண்டு, உவகைச் சுவையை இனிது உரைப்பது பிரகரணம் ஆகும்.

பாணம் :
ஒரு அங்கத்தை உடைய ஓரங்க நாடகம்.
மிக்க காமத்தை அல்லது அதீத வீரத்தைக் காட்டுவதாய், ஒரே பாத்திரம் தான் அனுபவித்த இன்பத்தையும் பிறரது இன்ப அனுபவத்தையும் பெரிதும் பேசி பாடி ஆடுவதே பாணம் ஆகும்.

வியாயோகம்:

உவகையும் நகையும் மேலான சமநிலைச் சுவையும் நீங்கிய சுவைகளை உடையதாய், ஒரு அங்கத்தைக் கொண்டதாய், பெண்கள் காரணமாய் உண்டாகாத வலிமையான போரினைத் தெரிவிப்பது வியோயோகம்

சமவகாரம்:

தனித்தனியாக வேறுபட்ட எண்ணங்களைக் கொண்ட பல தலைவியர்களைக் கொண்ட, எல்லாச்சுவைகளையும், அதிகமாக வீரச்சுவையையும் கொண்ட, மூன்று அங்கங்களைக் கொண்டது. முதல் அங்கத்தில் காமத்தின் இன்பமும், இரண்டாம் அங்கத்தில் அறத்தின் இன்பமும், மூன்றாம் அங்கத்தில் இனிது விளங்குவதே சமவகாரம் ஆகும்.

இடிமம்:
நான்கு அங்கங்கள் உடையது
வெகுளிச்சுவையை மிகுந்து தோன்றுவதாய், இந்திரஜாலம்-தந்திரம்-மாயமும் வலிமையான சினமிக்க போரும், கலகங்களும் தீயநிமித்தங்களும் பலவாறு பொருந்திவருவது.
தேவர்களும் அசுரர்களும் பாத்திரங்களாக, இன்பம்-நகை-சமம் ஆகிய சுவைகள் நீங்கிய ஏனைய சுவைகள் உடையதாய் கூறப்படுவது இடிமம் ஆகும்.
ஈகாமிருகம்:
மான் போன்ற மிரட்சியுடைய, தன்மேல் விருப்பங்கொள்ளாத விண்ணுல பெண்ணொருத்தியை கவர்ந்து சென்றதைக் காட்டி, பெரிய போரினைச் செய்வதற்குத் தேவையான செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து சம்பவித்து, அவைகள் ஒவ்வொன்றும் முற்றுப்பெறாமல், இன்பச்சுவையின் இழிவைப் புலப்படுத்தி, தமக்குள் மாறுபட்ட தலைவர்கள் இருவரைப் பெற்று, நான்கு அங்கங்கள் கொண்ட நாடகச்சாதி ஈகாமிருகம்.

அங்கம்:
ஒரு அங்கத்தை உடையது.
அவலச்சுவையை மட்டுமே பெரிதாக உரைப்பது. பெண்கள் மனம் கசிந்து அழும்படி, சமீபத்தில் இருப்பவர்கள் வாய்விட்டுக் கதறுந் தன்மையுடையதாய் வாக்குவாதம் நடக்கப்பெற்று, மானுடமக்கள் நாடகப் பாத்திரங்கள் ஆக விளங்குவதே அங்கம் ஆகும்.

வீதி:
ஒரு நாடகபாத்திரம், ஒரே அங்கத்தில் கைசிகி எனும் விருத்தியினை உண்மையாக விளங்குமாறு காட்டி, இன்பச்சுவை நன்றாகப் பொருந்த, ஆச்சரியம் மிக்க பல மொழிகளைப் பேசுவதும் அசரீரி வாக்கும் பொருந்தியது வீதி எனும் நாடகம் ஆகும்.

பிரகசனம்:
முனிவர், தேவர், அந்தணர் ஆகியோர் இடைவர, இழிவும் பழியும் பெற, வெறும் போலிகள் தலைமக்களாகவும், சாத்துவதியும் கைசிகியும் ஆகிய இவ்விரு விருத்திகளைக் காட்டி, நகைச்சுவையைப் பெரிதும் காட்டி, ஒன்று அல்லது இரண்டு அங்கங்களைக்கொண்டது பிரகசனம் ஆகும்.
நம்முடைய இலக்கியங்கள், சமூகம், முன்னோர் பற்றிய புரிதல் இல்லாமல் திரைக்கதை  எழுத ஆரம்பித்தால், ஹாலிவுட் அல்லது கொரிய படங்களின் பிடியில் தான் நீங்கள் விழ நேரிடும் என்பதாலேயே இவற்றை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம்.

அடுத்த பகுதிக்குப் போவதற்கு முன் ஒரு வேண்டுகோள். குறைந்த பட்சம் ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் படிக்காமல் தயவு செய்து திரைக்கதை எழுத வராதீர்கள்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.