Friday, November 14, 2014

திருடன் போலீஸ் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
ஆரண்ய காண்டம் என்ற அற்புதமான படம் கொடுத்துவிட்டு, சோனாவின் யுத்த காண்டத்தில் காணாமல் போன எஸ்.பி.பி.சரணின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம், திருடன் போலீஸ். அட்டக்கத்தி தினேஷ், யுவன் சங்கர் ராஜா என அட்ராக்சன்ஸுக்கும் குறைவில்லை. படம் எப்படின்னு பார்ப்போம், வாருங்கள்.

ஒரு ஊர்ல..:
போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளின் மகனான தினேஷ், அப்பாவின் அருமை தெரியாமல் வெட்டி ஆபீசராக இருக்கிறார். ஒரு சதியினால் அப்பா பலியாக, போலீஸ் வேலை தினேஷுக்கு கிடைக்கிறது. அதன்பின் அப்பாவைக் கொன்றவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதே கதை.

உரிச்சா....:
அக்கறையுள்ள கோபக்கார அப்பாவுக்கும் வெட்டியாகச் சுற்றும் அப்பாவை வெறுக்கும் மகனுக்கும் இடையிலான உறவை விவரித்தபடி ஆரம்பமாகிறது படம். போலீஸ் காலனிலேயே வில்லன் ஏ.சி குடும்பமும், ஹீரோ குடும்பமும் இருக்கிறது. அதே காலனிக்கு ஹீரோயின் ஐஸ்வர்யாவும் புதிதாகக் குடிவருகிறார். அவரை டாவடிப்பதில் ஏ.சியின் மகனான நிதின் சத்யாவுக்கும் தினேஷ்க்கும் முட்டிக்கொள்கிறது. நிதின் சத்யாவின் செய்யும் சில குற்றங்களுக்கான ஆதாரம் ராஜேஸிடம் கிடைப்பதால் அவர் சொல்லப்படுகிறார்.

அதன்பின் ஹீரோவுக்கு வேலை கிடைப்பது, ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான லவ் என்று படம் நன்றாகவே செல்கிறது. குறிப்பாக செண்டிமெண்ட்டான இண்டர்வெல் ப்ளாக் அருமை. பரவாயில்லையே, நன்றாக இருக்கிறதே என்று நினைத்தால்....

’இப்போல்லாம் நல்ல படத்தை யார் சார் பார்க்கிறாங்க..காமெடிப்படம் தான் ஓடுகிறது’ என்று யாரோ ஒரு புண்ணியவான் டைரக்டரிடம் சொல்லியிருப்பார் போலும். அதுவரை உருக்கமாக இருந்த ’அப்பாவைப் புரிந்துகொள்ளும் மகன்’ எனும் கான்செப்ட்டையே காமெடி ஆக்கிவிடுகிறார்கள். அப்பாவைக் கொன்ற வில்லனின் கையாட்களான ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் ஜான் விஜய்யும் முதல் பாதியில் டெரர் காட்டுகிறார்கள். அவர்களே பின்பாதியில் காமெடி பீஸ் ஆகும்போது, கதை படுத்துவிடுகிறது. 

அப்பாவைக் கொன்றது யார் என்பது ஹீரோவுக்குக்கூட தெரிந்துவிட்டபின்னும், காமெடி-பாட்டு-காதல் என்று படம் தறிகெட்டு ஓடுகிறது. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, கிளைமாக்ஸை சப்பையாக முடித்து அனுப்புகிறார்கள்.



’அட்டக்கத்தி’ தினேஷ்
:
இந்தப் படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட்டே தினேஷ் கேரக்டரை வடிவமைத்த விதமும், அவரின் அசமஞ்ச நடிப்பும் தான். அட்டக்கத்தியிலும் குக்கூவிலும் நடித்த மனிதரா இவர் என்று நமக்கே ஆச்சரியம் தான். மொக்கையாக, எக்ஸ்பிரசனே இல்லாமல் வந்து போகிறார். அந்த போலீஸ் கட்டிங்கில் ஆளைப் பார்க்க முடியவில்லை. பல சீன்களில் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி முகத்தை வைத்துக்கொள்கிறார். ஆக்சன் காட்சிகளில் இன்னும் கொடுமை. அட்டக்கத்தி எனும் அடைமொழிக்கு வேறு அர்த்தத்தை கொண்டு வந்துவிடுவார் போலும். ஆக்சன் மட்டுமல்லாது ரியாக்சனும் நடிப்பில் முக்கியம். பிறர் வசனம் பேசும்போது, தினேஷ் கொடுக்கும் ரியாக்சன்களைப் பார்க்கும்போது கொடுமையாக இருக்கிறது. சாரி தினேஷ்..ஒரு முழுமையான ஹீரோவாக இன்னும் பல தூரம் போக வேண்டும்!

ஐஸ்வர்யா:
அம்மணிக்கு என்ன ஆச்சு? உடலைக் குறைத்து ஸ்லிம்மாக, ஃபுல் மேக்கப்பில் வந்திருக்கிறார். முந்தைய படங்களில் சீரியலில் வரும் வேலைக்காரி போன்று இருப்பார். இதில் தான் கொஞ்சம் பார்க்கும்படி இருக்கிறது. அவர் படத்தில் பேசும் வசனங்கள் ஒரு பக்கம்கூட வராது; ஆனால் அவர் கண்கள் பேசும் கவிதைகளை ஒரு ஸ்கொயர் நோட்டில் எழுதலாம். கோவில் சீனில் பைக்கும் கையுமாக தினேஷைப் பிடிக்கும் சீன் அருமை. அப்புறம், அண்ணன் விஜய் சேதுபதிகூட ஒரு பாட்டுக்கு வருகிறார். (அது ஏன் இப்போ ஞாபகம் வருது?...!)

சொந்த பந்தங்கள்:

ராஜேஸ், நரேன், வில்லனாக நடித்த அந்த ஏ.சி போன்ற ஜாம்பவான்கள் வழக்கம்போல் நடிப்பில் பின்னிவிட்டுப் போகிறார்கள். கனா காணும் காலங்கள் பாலா ஹீரோவுடன் வருகிறார். இவர் சீக்கிரம் ஒரு நல்ல காமெடி ஸ்க்ரிட் ரைட்டரைப் பிடிப்பது நல்லது. சிக்ஸர் அடிக்க வேண்டிய இடத்தில்கூட வசனங்கள் சவசவ என்று வந்து விழுகின்றன. இரண்டாம்பாதியில் ஹீரோவிடம் மாட்டிக்கொண்டு இவர் புலம்புவது மட்டும் ஓகே.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- நல்ல ஆக்சன் கதையை கிக்கிலிப்பிக்கிலி ஆக்கிய இரண்டாம்பாதி
- ஹீரோவின் நடிப்பும், அவரிடம் இப்படி வேலை வாங்கிய இயக்குநரும்
- ஹீரோயினை இதிலும் ஊறுகாயாக மட்டும் யூஸ் செய்திருப்பது
- ஹீரோ அப்பாவைப் புரிந்து உருகுவதை கேலிப்பொருள் ஆக்கியது
- கண்டினியூட்டி (குறிப்பாக ஹேர்ஸ்டைல், மீசையில்) படு மோசம்
- கிளைமாக்ஸ்
- டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன பாஸ் சம்பந்தம்?

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- முதல் பாதி
- போலீஸ் வேலையில் இருக்கும் கஷ்டங்களையும், சில உள்ளடி மேட்டர்களையும் சொன்னது. இனி டிராஃபிக்கில் வெயிலில் நிற்கும் ஒரு போலீஸ்காரரைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம் வரும். வெல்டன்!
- ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் இறுதியில் அடிக்கும் லூட்டி (கதைக்குப் பொருந்தாவிட்டாலும்!)
- பாடல்கள். விஜய் சேதுபதி ஆடும் பாடலும் அந்த வாலி எழுதிய டூயட்டும் அருமை.

பார்க்கலாமா?:
முதல்பாதிக்காக மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்காக............பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. பரவாயில்லை போல தெரிகிறது... :-) இன்னிக்கி போவலாம்னு இருக்கேன்

    ReplyDelete
  2. இண்டர்வெல்வரை பரவாயில்லை தான்.

    ReplyDelete
  3. பாத்துடுவோம்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.