Monday, May 4, 2015

ஹிட்ச்காக் : SUSPICION (1941) ஒரு அலசல்

அறிமுகம்:

Rebecca படத்திற்கு புக் பண்ணும்போதே ஹிட்ச்காக் ஒரு பொக்கிஷம் என்று அதன் தயாரிப்பாளர் Selznick தெரிந்து வைத்திருந்தார். எனவே அவரை ஏழு வருட கான்ட்ராக்ட்டில் ஒப்பந்தம் செய்திருந்தார். செல்ஸ்னிக்கின் ஸ்பெஷாலிட்டி, இப்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆட்களை நல்ல ரேட்டுக்கு வாடகைக்கு விடுவது. ஆம், அவர் ஹிட்ச்காக்கை வைத்து படம் தயாரித்ததைவிட வாடகைக்கு விட்டதே அதிகம். செல்ஸ்னிக்கிடம் வேலை செய்வதைவிட, சுதந்திரமாக வெளியாளிடம் வேலை செய்வதையே ஹிட்ச்காக்கும் விரும்பினார். அந்தவகையில் Harry E. Edington என்பவரின் தயாரிப்பில் (ஹிட்ச்காக் இணைத்தயாரிப்பாளர்!) உருவான படம், Suspicion.

ரிபெக்கா ஹீரோயின் Joan Fontaine மறுபடியும் ஹிட்ச்காக்குடன் இணைந்த படம். (அவரும் அண்ணாச்சி செல்ஸ்னிக்கின் கான்ட் ராக்ட்டில்தான் இருந்தார்.!) கூடவே, ஹீரோவாக தி கிரேட் Carry Grant. ஹிட்ச்காக்கின் நான்கு படங்களில் ஹீரோவாக நடித்தார். நான்குமே 'ஹிட்ச்காக்' பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. அதில் முதலாவது இந்தப் படம்.
கதை:
Francis Iles என்பவர் எழுதிய பிரபலமான நாவல் Before the Fact(1932). ரொம்ப வருடங்களாகவே இந்த நாவல் மேல் ஹிட்காக்கிற்கு ஒரு கண் இருந்தது. காரணம், கதையில் இருந்த சைக்காலஜிகல் ஃபேக்டர்.
ஒரு பெண், ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் காதலித்துக் கல்யாணமும் செய்துகொள்கிறாள். அதன்பிறகு அவனைப் பற்றிய விஷயங்கள் கொஞ்சம், கொஞ்சமாகத் தெரியவருகின்றன. ஆனாலும் அவன் மேல் உள்ள அன்பால் அவனை விட்டுப் பிரிய மறுக்கிறாள். இறுதியில் அவன் அவளைக் கொல்ல முயலும்போதுகூட, சந்தோசமாக உயிரையே கொடுக்கிறாள். (வழக்கம்போல், ஹிட்ச்காக் இந்தக்கதையை கொத்துப்புரோட்டா போட்டுவிட்டதால், படத்தில் இதே கதையை அப்படியே எதிர்பார்க்க வேண்டாம்.)

இதில் ஹிட்ச்காக்கிற்குப் பிடித்த இருவிஷயங்கள் இருந்தன. ஒன்று, ஹீரோயினின் கண்மூடித்தனமான காதல். (ஹிட்ச்காக்கின் மாஸ்டர்பீஸான வெர்டிகோ-வில் ஹீரோவுக்கு இது இருக்கும்.) இரண்டாவது, 'கொஞ்சம் கொஞ்சமாக விஷயங்கள் தெரியவரும்' கதையின் சர்ப்ரைஸான நடை. ஒரு நல்ல திரைக்கதைக்கு இது செம ஐடியா என்று ஹிட்ச்காக் நினைத்தார்.

அந்த நாவலைப் படமாக்க விரும்பியோர் எல்லோரும் கண்மூடித்தனமான காதலையே முக்கியமாக நினைக்க, ஹிட்ச்காக் இரண்டாவது வழியைப் பிடித்தார். 

ஒரு நல்ல குடும்பத்துப் பெண்..படித்தவள், ரூல்ஸ்&ரெகுலேசன்படி எல்லா விஷயத்திலும் நடப்பவள், இதுவரை யாரையும் காதலித்திராத பத்தரை மாற்றுத் தங்கம். ஹீரோவுக்கு குடும்பமே இல்லை, ரூல்ஸா அப்படீன்னா? என்று கேட்கும் நல்லவன், சூதாட்டத்திற்கு அடிமை, ஏகப்பட்ட பெண்கள் விரும்பும், பெண்களுடன் சுற்றிய சொக்கத் தங்கம். இந்த இரு எதெரெதிர் கேரக்டர்களும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்....? அதன்பின் அவன்மேல் ஹீரோயினுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தால்...? அது தான் சஸ்பிஷன்.

திரைக்கதை:
ஹீரோயின் ஹீரோவைப் பற்றி படிப்படியாக உண்மையை அறிகிறாள், மேலும் சில சந்தேகங்களையும் அடைகிறாள். இது தான் திரைக்கதையின் போக்கு. இதில் ஹிட்ச்காக் செய்த டெக்னிகல் மேட்டர் என்னவென்றால், திரைக்கதை முழுக்க முழுக்க ஹீரோயின் பாயின்ட் ஆஃப் வியூவிலேயே நகர்வது. ஹீரோயின் என்ன பார்க்கிறாரோ, அதை மட்டுமே நாம் பார்க்கிறோம். ஹீரோ ரேஸிற்குப் போகிரான், வேலைக்குச் செல்கிறான் போன்ற எல்லா விஷயங்களையும் ஹீரோயின் போலவே நாமும் கேள்வி தான் படுகிறோமேயொழிய, பார்ப்பதில்லை.

இதன்மூலம் ஹீரோயின் ஹீரோவைப் பற்றி என்ன சந்தேகங்களையெல்லாம் அடைகிறாரோ, அதையே நாமும் அடைகிறோம். ஒரு கட்டத்தில் ஹீரோ ஒருவேளை கொலைகாரனாக இருப்பானோ என்று ஹீரோயினுக்கு சந்தேகம் வரும்போது, நாமும் கதையில் பரபரப்பாக இன்வால்வ் ஆகிவிடுகிறோம். அது தான் சஸ்பென்ஸ் மன்னனின் ஸ்பெஷாலிட்டி.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் செட்டப் எனும் கேரக்டர்களின் சூழலை அறிமுகம் செய்யும் ஆரம்பப்பகுதியை 20 நிமிடங்களுக்காவது அமைப்பார்கள். இதில் ஹிட்ச்காக் பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்கிறார். ஹீரோயின் ஹீரோ மேல் காதலில் விழுவது, கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடுகிறது. 'கண்மூடித்தனமான காதல்' எனும் டாபிக்குள் போக வேண்டாம் என்பதாலேயே ஹிட்ச்காக் இதைச் செய்திருக்கலாம். ஆனாலும் அந்த காதல் போர்சனை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். யோசித்துப் பார்க்கையில் வெர்டிகோ தவிர்த்து, மற்ற படங்களில் ஹிட்ச்காக் காதலைப் பெரிதாகக் கண்டுகொண்டதேயில்லை. காதல் திருமணம் செய்தவர் என்பது கூட, இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹீரோ, ஹீரோயின் சந்திப்பு-காதல்-கல்யாணம் எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் நடந்து முடியும்போது, படத்தின் மூன்றாவது இன்ட்ரஸ்டிங் கேரக்டர் பெக்கீ வருகிறது. அதில் இருந்து சுறுசுறுப்பாகும் படம், ஹீரோ ஒரு கொலைகாரனோ எனும் சந்தேகத்தில் ஹீரோயின் சிக்கும்போது செம விறுவிறுப்பானதாக ஆகிவிடுகிறது. கிளைமாக்ஸ்க்கு முன்புவரை, ஒரு ஹிட்ச்காக் படம் பார்க்கிறோம் எனும் சந்தோஷ உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது.

கேரக்டர்கள்:
ஹீரோ Carry Grant, நம்மூர் கார்த்திக்/கமல் போன்ற குறும்புக்கார நடிகர். அவரது கேஷுவல் நடிப்பில் பெஸ்ட் என்று Charade படத்தைச் சொல்லலாம். (Charade ஒரு ஹிட்ச்காக் ஸ்டைல் மூவி, இயக்கியது Stanley Donen.) அப்படிப்பட்டவர், இந்தப் படத்தின் ஹீரோ கேரக்டருக்கு மிகவும் பொருந்திப்போகிறார். வாழ்க்கையில் வேலைக்கே போயிராத, கடன் வாங்கியும் ரேஸிற்குப் போயும் காலத்தை ஓட்டும் ஜாலியான மனிதராக வருகிறார் கேரி. அதிலும் ஹீரோயினிடம் 'ஃப்ரென்ட்டுக்கு ஆயிரம் டாலர் வேணுமாம்' என கேஷுவலாகச் சொல்வதும், ஹீரோயின் 'ஏன் கேட்கிறான்?' என்று கேட்க, 'அதுவா? ஆயிரம் டாலர் அவன்கிட்ட வாங்கியிருந்தேன்..புவர் ஃபெலோ..திரும்பக் கேட்கிறான்' என்று சொல்வதில் ஆரம்பித்து அடுத்து வரும் சீன் அதகளம். 'யூ ஆர் எ பேபி' என்று நொந்து போய், கவலையுடனும் அக்கறையுடனும் ஹீரோயின் ஹீரோவைச் சொல்லும் இடம் க்ளாஸ்!

முதலிலேயெ பார்த்தபடி ஹீரோயினின் பாயின்ட் ஆஃப் வியூவிற்கு ஆடியன்ஸ் போக வேண்டும். ஆனால் கேரி போன்ற சார்மிங் ஹீரோ இருக்கும்போது, ஆடியன்ஸை எப்படி நகர்த்துவது? அதற்கு என்றே ஒரு சீன் வருகிறது. கேரியின் ஹீரோ இமேஜ் அடிபடாமலும், நம்மை ஹீரோவிடமிருந்து அந்நியப்படுத்தியும் ஹிட்ச்காக் ஒரே சீனில் இரு மாங்காய் அடிப்பார். சிரிப்பே வராத ஹீரோயினை ஹீரோவும், பெக்கீயும்(Nigel Bruce) சிரிக்கச் சொல்லும் சீன் தான் அது. இரண்டாம்பாதியில் வரும் பல விஷயங்களுக்கு, இந்த சீன் தான் லீடாக இருக்கும்.

ஹீரோயின் Joan-ன் நடிப்புக்காக ஆஸ்கர் அவார்டு கிடைத்தது. ரிபெக்கா படத்தில் தன்னம்பிக்கையற்று, பயந்து வாழும் கேரக்டர். இதில் தன்னம்பிக்கையுடன் பயந்து வாழும் கேரக்டர். இந்த நுண்ணிய வித்தியாசத்தை அவர் காட்டியிருக்கும் விதத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆக்டிங் பற்றி கற்றுக்கொள்வோர் அனைவரும் ரிபெக்காவையும் சஸ்பிஷனையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். (ஆனால் அந்த ஹீரோயின் கேரக்டரில் நிறைய லாஜிக் மிஸ்டேக் உண்டு, அவை படம் முடியும்வரை நமக்குத் தோணாததே ஹிட்ச்காக்கின் வெற்றி.)

படத்தில் வரும் இன்னொரு முக்கியக் கேரக்டர் பெக்கீயாக நடித்தது Nigel Bruce. நம்மூர் டி.எஸ்.பாலையா போன்ற முக அமைப்பும் ஆக்டிங் ஸ்டைலும் கொண்டவர். ரிபெக்காவில் ஹீரோவின் அக்கா கணவராக வருவார். அவரது அப்பாவித்தனமும், ஹீரோவிடம் அவருக்கு உள்ள நட்பும் நீண்டநாட்களுக்கு நம் நினைவில் இருக்கும்.

ஹிட்ச் ஸ்டைல்:
ஹிட்ச்காக்கின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று  Rear Window. காலில் அடிபட்டுக்கிடக்கும் ஹீரோ, பக்கத்து வீடுகளை வேடிக்கை பார்ப்பதை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் படம். அதில் மொத்தப்படமும் ஹீரோவின் பார்வையிலேயே நகரும். அதற்கு முன்னோடியாக சஸ்பிஷன் இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹீரோவை நம்பும் ஹீரோயின்..கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவரும் உண்மைகள் - எனும் இந்தக் கதையில் ஹீரோவின் செயல்களை நாம் தனியே காண்பதில்லை. அதையும் சேர்த்தால், அது ஹிட்ச்காக்கின் பிந்தைய படமான Shadow of a Doubt (1943).
மூல நாவலில் இருந்த கண்மூடித்தனமான காதலின் எஃபக்ட்டை வெர்டிகோவில் பார்க்கலாம்.

ஒரு கேரக்டர் ஒரு முக்கியமான உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது அல்லது ஏதேனும் முக்கியமான நிகழ்வு நடக்கும்போது, கட் பண்ணாமல் ஒரே ஷாட்டாக கதை சொல்லும் ஹிட்ச்காக் ஸ்டைல் இதிலும் உண்டு. ஹீரோ ஹீரோயினுக்கு பால் எடுத்து வரும் சீன் ஒரு உதாரணம். இந்தப் படத்தில் அதிக சஸ்பென்ஸான சீன் அது தான். பொதுவாக வில்லன் கத்தி அல்லது துப்பாக்கி எடுத்துவரும் காட்சிகள் தான் டெரராக இருக்கும். இதில் பாய்சன் கலந்த(?!) பால் டம்ப்ளரை வைத்து கச்சிதமாக அதைச் செய்திருப்பார். (ஆடியன்ஸ் கவனம் பால் டம்ப்ளரில் இருக்க என்னசெய்யலாம் என்று யோசித்த ஹிட்ச்காக், ஒரு எரியும் பல்பை(ஒயர்லெஸ்!) அந்த டம்ப்ளருக்குள் போட்டுவிட்டதாகப் பின்னாளில் சொன்னார்!)

கிளைமாக்ஸ்:
(டிஸ்கி: படம் பார்த்தபிறகு, இதைப் படிக்கவும்.)

கேரி பால் டம்ப்ளரை எடுத்துக்கொண்டு மேலே வரும்வரை படம் சிறப்பாகச் செல்கிறது. அதன்பிறகு, அடுத்த ஐந்து நிமிடத்தில் அவசர அவசரமாக படம் முடிகிறது. அதிலும் கிளைமாக்ஸ் பெரும்பாலானோர்க்குத் திருப்தி தராது.

ஐரோப்பாவில் லாட்ஜர் படம் செய்தபோது ஹிட்ச்காக் சந்தித்த அதே பிரச்சினை இப்போதும் வந்து சேர்ந்தது. கேரி கிரான்ட் மாதிரி ஒரு ஹேண்ட்சம் ஹீரோவை கொலைகாரனாகக் காட்டுவதா எனும் குழப்பம் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது. 

 படம் முழுக்க கேரி ஒரு வில்லன் என்று குறியீடுகளை வைத்துவிட்டு, காட்சிகளையும் அப்படியே எடுத்து முடித்தபின் வழக்கம்போல் ஆரம்பித்துவிட்டார்களே என்று ஹிட்ச்காக் நொந்துபோனார். நாம் பல இஅடங்களில் பார்த்தபடி ஹிட்ச்காக் அட்ஜஸ்ட் செய்துகொன்டு போகும் ஆள் என்பதால், 'என்ன செய்யணுமோ சொல்லுங்க..பண்ணித் தொலைக்கிறேன்' என்று ஒத்துக்கொண்டார். (இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஹிட்ச்க்காக் தன்னை நிரூபித்தபின் வெர்டிகோ, சைக்கோ, மார்னி போன்ற படங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ண ஒத்துக்கொள்ள வில்லை. இப்போதே அடம்பிடித்தால், பெயர் கெட்டுவிடும் என்று நினைத்திருக்கலாம். ஏற்கனவே நடிகர்களை உணர்ச்சிகரமாக நடிக்க விடுவதில்லை எனும் புகார் அவர் மேல் உண்டு; கூடவே நடிகைகள் மேல் 'தனிப்பிரியம்' கொண்டவர் எனும் புகாரும்!)

அந்த விஷம் பற்றிய விவரத்தை ஹீரோ கொலை பண்ணுவதற்காக சேகரிக்கவில்லை, தற்கொலை செய்துகொள்ளவே சேகரித்தார் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது படத்துடன் ஒட்டவில்லை. படம்பார்த்தோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். படம் வணிகரீதியில் தப்பித்தாலும், அவரது முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்ல முடியாமல் போனது.

ஹீரோ நல்லவர் என்பதற்கான லீட் சீன் எதுவும் கொடுக்காமல், தடுக்கென்று மாற்றியது படத்தின் தரத்தையே கீழிறக்கிவிட்டது. ஹீரோயினின் சந்தேகம் தான் படமே..அந்தச் சந்தேகம் ஒரு தப்பு என்றால், படமே தப்பு என்றாகிவிட்டது.

சரி..ஹிட்ச்காக் வைக்க நினைத்த கிளைமாக்ஸ் என்ன?

ஹீரோ கொடுத்த விஷம் கலந்த பாலைக் குடிக்க முடிவுசெய்கிறாள் ஹீரோயின். அதே நேரம் அவனைத் தண்டிக்கவும் நினைக்கிறாள். எனவே அவளது அம்மாவிற்கு இதைப் பற்றி விரிவாக ஒரு லெட்டர் எழுதிவைக்கிறாள். பால் கொண்டு வரும் ஹீரோவிடமே அந்த லெட்டரைக் கொடுக்கிறாள். அதில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமல் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுமோ என ஹீரோ அதை போஸ்ட் செய்கிறான்..THE END.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.