Saturday, May 2, 2015

உத்தம வில்லன் - விமர்சனம் அல்ல.

கமலஹாசன் எனும் நடிகனின் அடையாளமே மற்ற நடிகர்களிடம் இருந்து மாறுபட்டு, வித்தியாசமான கேரக்டர்களில் கலக்குவது தான். ஆனால் விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் அதையே ‘குழப்பாமல்’ வெற்றிகரமாகச் செய்ய ஆரம்பித்தபின், கமலுக்கான தேவை தீர்ந்துவிட்டது போல் ஒரு மாயை. அடுத்த தலைமுறை தன் இடத்தில் அமர்ந்தபின், ஒரு திறமையான கலைஞன் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயம் வந்துசேர்ந்துவிடுகிறது. தன் இருப்பை நிலைநாட்டும் ஆவேசத்தை, அந்தக் கட்டாயம் கொடுக்கிறது.

அப்படி கமல் தன் இருப்பை மீண்டும் வெற்றிகரமாக நிலைநாட்டியிருக்கும் படம் தான் உத்தம வில்லன். ‘எவனும் என் பக்கத்தில்கூட வர முடியாது’ என்று ஒரு நடிகராக மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியாகவும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல். இப்படி ஒருவரைப் பெற்றது, தமிழ் சினிமாவின் வரப்பிரசாதம்!

’இரண்டு ஜென்மக்கதை-நாடக நடிகர்-சினிமா நடிகர்-மாறி, மாறிச் சொல்லப்படும் திரைக்கதை’ என்று கேட்டாலே கதிகலங்க வைக்கும் பல தகவல்கள் படத்தைப் பற்றி, அவர்களாலேயே பரப்பப்பட்டன. ஆனால் அப்படி குழப்பியடிக்கும் விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை. அதிசயமாக, கொஞ்சம்கூடக் குழப்பாமல், ஒரு கமல் படம்.

எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தபோது, ’எம்.ஜி.ஆர் எப்படிங்க சாவார்?’ என்று கேள்வி கேட்கப்பட்ட மண் இது. நடிகர்கள் என்றாலே பிரமிப்பு தான். அது அவர்களே விரும்பிக் கட்டமைக்கும் மாய பிம்பம். அதுவே ஒரு வேடிக்கைப் பொருளாக அவர்களை ஆக்கிவிடுகிறது. ‘என் படத்தைப் பாருங்க..என் பெட்ரூமுக்குள்ளே எட்டிப்பார்க்காதீங்க’என்று நடிகர்களைக் கதறவைக்கிறது. பிரபலமான ஸ்டாராக இருந்தாலும், அவரும் ஆசாபாசம் நிரம்பிய மனிதர் எனும் நினைவு நமக்கு வருவதே இல்லை. அப்படிப் பட்ட ஒரு சினிமா ஸ்டாரின் வாழ்க்கையை பட்டவர்த்தனமாகப் பேசும் படம் தான் உத்தம வில்லன்.

50 வயது தாண்டியும் மசாலாப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஸ்டார். ’சினிமாவில் ஸ்டார் ஆகும் வெறியில் கை விட்டுப்போன ஒரு காதலி-ஒரு வசதி படைத்த மனைவி- ஒரு அழகான கள்ளக்காதலி’ என்று வாழ்க்கைப் பயணம் போய்க்கொண்டிருக்கும்போது, ரெட் சிக்னலாக ப்ரைன் ட்யூமர் வந்து சேர்கிறது. ’மசாலாப்படம் எடுத்தே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமே..மீண்டும் குருநாதருடன் இணைந்து ஒரு நல்ல படம் கொடுப்போம்’ என்று கமல் நினைக்க, ஆரம்பமாகிறது உத்தம வில்லன் ஷூட்டிங்.

’உத்தமன் என்று ஒரு கூத்துக்கலைஞன். எத்தனை முறை இறந்தாலும் உயிர் பிழைத்து வந்துவிடுகிறான். சாகாவரம் பெற்றவன் என்று அவனைச் சொல்கிறார்கள். அதுவே கிறுக்கு ராஜா நாசரிடம் அவனை சிக்க வைக்கிறது.’ என்று போகிறது உத்தமனின் கதை. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இந்தப் பகுதி முழுக்க நகைச்சுவையாக வருவது தான். கமல்-நாசர் என்ற இரு அற்புதமான நடிகர்கள் நகைச்சுவையில் பின்னுகிறார்கள். கூத்து ஸ்டைலில் வரும் நகைச்சுவை தான்   என்றாலும், குழந்தைகள் உட்பட அனைவரும் சிரிக்கிறார்கள். அதிலும் நாசருக்கு வயிற்றைக் கலக்கும் காட்சியும் பீப்பி ஊதுவதும்...சான்ஸே இல்லை. இதில் இன்னொரு ஆச்சரியம், பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் ப்ளாக் காமெடி டைப். 

ஒரு நடிகரைப் பற்றி ரசிகர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை என்று சொன்னேனல்லவா, கமல் இதில் அவர்களின் வாழ்வின் இன்னொரு அவலத்தை முன்வைக்கிறார். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தினர் & சுற்றி இருப்போர்க்குக்கூட அவரைப் பற்றி ஒன்றும் தெரிவதில்லை, அவருக்கு எது நல்லது என்றுகூட அவர்களுக்குப் புரிவதில்லை. கமலின் மகளும் சரி, மகனும் சரி, அவரை வில்லனாக நினைத்து வெறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கமல் தன்னைக் காதலிப்பதாக, அவர் மனைவி அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றிய உண்மைகள் தெரியவரும்போது, படமே உணர்ச்சிப்பிரவாகமாகிறது. சமீபத்தில் எந்தவொரு படத்திற்கும் கண்கலங்கியதில்லை, இதில் மனதை நெகிழ வைக்கும் காட்சிகளில் ‘விமர்சகர்லாம் அழக்கூடாதுடே’ என்று கட்டுப்படுத்தி வீடுவந்து சேர்ந்தேன்.

எல்லாக் கமல் படங்களிலும் கமலே துருத்திக்கொண்டு திரிகிறார் என்று ஒரு விமர்சனம் உண்டு. இதிலும் அப்படியே. ஆனால் அந்த சினிமா ஸ்டார் கதாபாத்திரமும் அது சந்திக்கும் சொந்த வாழ்க்கைத் துயரங்களும் ஏதொவோரு விதத்தில் கமலையே ஞாபகப்படுத்துவதால், அது துருத்தல்தன்மை அப்படியே பொருந்திப்போகிறது. முதல் காட்சியில் மனைவி-குடும்பத்தை அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்த காட்சியிலேயே ஆண்ட்ரியாவுடன் கொஞ்சிக்குலாவும் கேஷுவல் கேரக்டரை கமலைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்? ஹீரோ எனும் இமேஜை அங்கேயே உடைத்து நொறுக்கிவிட்டு, வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் இருக்கும் கலைஞனாக நம் நெஞ்சில் நிறைந்துவிடுகிறார். கமல் படத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் நடிக்கவிட மாட்டார் எனும் விமர்சனமும் இங்கே அடிபட்டுப் போகிறது. மனைவி ஊர்வசியில் ஆரம்பித்து, எம்.எஸ்.பாஸ்கர், மகன் கேரக்டரில் வரும் இளைஞன் என அனைவருக்கும் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப்.

அப்பாவுக்கு கேன்சர் என்று அறியும் சீனாகட்டும், ’ரைட்டிங் கோர்ஸ் படிச்சு, உங்களுக்கு ஒரு திரைக்கதை எழுதணும்’ என்று சொல்லும் சீன் ஆகட்டும் நம்மைக் கலங்க வைத்துவிடுகின்றன. ஒரு சீன் உத்தமனின் காமெடி சீன், அடுத்த சீன் ஸ்டாரின் செண்டிமெண்ட் என்று திரைக்கதையைப் பின்னிப் பின்னி எழுதியிருக்கிறார்கள். எனவே ஓவர் செண்டிமெண்ட்டும் ஆகாமல், நாடகத்தனமும் வந்துவிடாமல் படம் சீராகச் செல்கிறது. கமர்சியல் வேல்யூவிற்காகத்தான் காமெடியை நுழைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால், அது தவறு.

ஸ்டார் மனோரஞ்சிதன் சாவின் விளிம்பில் நிற்கிறான். உத்தமனோ சாகாவரம் பெற்றவனாக இருக்கிறான். உத்தமனின் சாவும், அதைத் தொடரும் காட்சிகளும் காமெடியாகவே காட்டப்படுகின்றன. உதாரணம், உத்தமன் பாம்பு கடித்து இறக்கிறான். பாம்பு கடித்தது, உத்தமனின் பிருஷ்டத்தை! ‘நம்மாளுங்கிறதுக்காக எல்லாம் அங்கே வாய் வைத்து உறிய முடியாது’ என்கிறான் நண்பன். இப்படி ப்ளாக் காமெடியாகவே உத்தமன் எபிசோட் நகர்கிறது. ‘காலா..என் அருகில் வாடா..உன்னைக் கேலி செய்கிறேன்’ என்று மரணத்தை கேலிப்பொருளாக ஆக்குகிறது உத்தமன் வரும் காட்சிகள். அதற்கும், நிஜத்தில் மனோரஞ்சிதனும் சுற்றி இருப்போரும் சாவை எதிர்கொள்வதற்கும் உள்ள முரண்பாட்டைச் சொல்கிறது கமலின் திரைக்கதை.

நுண்ணிய வேலைப்பாடுகளுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் அர்விந்த்.(யாருய்யா அங்க சிரிக்கிறது?..சரி, கமல்னே வச்சுக்குவோம்!) எம்.எஸ்.பாஸ்கர் யாமினியின் லெட்டரை வாசிக்கும்போது, வில்லன் எனும் லெட்டர்ஸ் அருகே கமல் நிற்பது, ‘இன்னொரு பெண்ணுக்காக அம்மாவை விட்டுப் போறீங்களா?’என்று கேட்கும் மகன் கிளைமாக்ஸில் உண்மை தலைகீழானது என்று உணர்வது, கிளைமாக்ஸ் கடைசி ஷாட் என ’ஸ்டடி’ பண்ண நிறைய விஷயங்கள் அடங்கிய படம் இது.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது. முதலில்..’நாற்பதே வயதான’ ஹீரோயின் பூஜா குமார். படைப்பாளீஸ், உங்களுக்கு இந்த அம்மையாரைப் பிடித்திருந்தால் தனியாக்கூப்பிட்டு ரசிச்சுக்கோங்க..ஏன் எங்களை இம்சை பண்றீங்க? அதிலும் லூஸாக அவர் கொடுக்கும் ஓவர் ஆக்ட்டிங் இருக்கிறதே, கொடுமை. அடுத்து ஆண்ட்ரியா உடனான ரொமான்ஸ் சீன்கள். இது ஃபேமிலி ஆடியன்ஸை நெளிய வைக்கிறது. (இதையும் தனியே வைத்துக்கொள்ளலாம், ஒன்றும் தப்பில்லை.) உத்தமன் வரும் சீன்கள் எதுவும் எனக்கு நீளமாகத் தெரியவில்லை. கூத்து ஸ்டைலிலேயே அமைக்கப்பட்ட நகைச்சுவைக்காட்சிகளை ரசிக்க முடிந்தது. படத்தின் இறுதிக்குறை, கிளைமாக்ஸை சட்டென்று முடித்தது. ’என்னாச்சு..படம் முடிஞ்சிருச்சா?’எனும் கேள்வி தியேட்டரில் எழுந்தது. (இதில் உள்ள பாசிடிவ் விஷயம், படம் போரடிக்காமல் சென்றதால்தான் இப்படிக் கேட்கிறார்கள்.)

’உங்களுக்கு மேதைகள் வேண்டுமென்றால், அவர்களின் கிறுக்குத்தனங்களையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்’ என்று ஒருமுறை  சொன்னார் ஜெயமோகன். இந்தப் படத்தின் ஹீரோ கேரக்டருக்கு மட்டுமல்ல, ஹீரோ கமலுக்கும் அது பொருந்தும். இந்தப் படத்திற்கும் கூட!

தமிழ் சினிமாவைப் ‘பேய்’ பிடித்திருக்கும் இந்தச் சூழலில், அதிலிருந்து மீண்டு நல்ல படம் உத்தமவில்லன். நல்ல படத்தைப் பார்க்க விரும்புவோர், தவிர்க்கக்கூடாத படம். இந்த நல்ல படத்தைக் கொடுத்த கமலஹாசனுக்கும் திருப்பதி பிரதர்ஸுக்கும் நன்றி.

எக்ஸ்ட்ரா பிட்: ‘இப்போல்லாம் காமெடிப் படம் தான் சார் ஓடுது..படத்தை சீரியஸா முடிக்காதீங்கோ’ என்று யாரோ ஒரு பிரகஸ்பதி சொல்லியிருப்பார் போல. படம் நல்ல செண்டிமெண்ட்டுடன் முடிந்ததும், கிளைமாக்ஸ் டைட்டில் ஓடும்போது உத்தமன் சம்பந்தப்பட்ட காமெடிக்காட்சிகள் மீண்டும் காட்டப்படுகின்றன. இது ஒரு மோசமான ஐடியா!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. படம் பார்க்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
  2. சீரான விமர்சனம்.கமல் படம் என்றால் எதிர்பார்ப்புகள் வேறாக இருக்கும்.இதனால் தானோ என்னவோ எதிர்மரை விமர்சனங்களும் வருகின்றன.......////படமாய்யா இது?????சில இளசுகளின் ஓலம்!

    ReplyDelete
  3. The movie will be good when you watching at 2030..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.