Friday, May 15, 2015

36 வயதினிலே - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..
மொழி, சந்திரமுகி என மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தபோது, சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டு திருமணவாழ்வில் செட்டில் ஆனார் ஜோதிகா. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் வெள்ளித்திரையில் வந்திருக்கும் படம், 36 வயதினிலே. ஏற்கனவே மலையாளத்தில் ஹிட் அடித்த கதை என்பதால், தைரியமாக களத்தில் இறங்கியிருக்கிறார். படம் எப்படி என்று பார்ப்போம். (டிஸ்கி: நான் ஒரிஜினல் ‘How Old Are You?'-ஐ பார்க்கவில்லை.)

ஒரு ஊர்ல :
கணவன், குழந்தைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, தனக்கென்று எந்த சொந்த அடையாளமும் இல்லாமல் வாழும் சாமானியப் பெண்களில் ஒருத்தி வசந்தி. அவரின் தியாகம், கணவனாலும் பெண்ணாலும் புரிந்துகொள்ளப்படாமல் போவதும், தனக்கென்று ஒரு அடையாளத்தை அடைவதற்காக வசந்தி மேற்கொள்ளும் லட்சியப்பயணமுமே கதை.

உரிச்சா:
தாய் என்பது தான் இன்றும் ஒரு பெண்ணிற்கு சமூகத்தில் மிகப்பெரும் கௌரவம் தரும் விஷயமாக இருக்கிறது. ஒரு நல்ல இல்லத்தரசியாக வாழ்ந்து, மடிவதையே பெருமையாக நினைக்கும் பெண்களும் பலர் உண்டு. ஆணின் வெற்றிக்குப் பின்னால் மட்டுமே இருக்க வேண்டிய விஷயமாகவே, பெரும்பாலும் அவர்களை வைத்திருக்கிறோம். இதில் ஜோவும் அப்படிப் பட்ட நல்ல அம்மாவாக, நல்ல மருமகளாக, உலகம் அறியாத இல்லத்தரசியாக வருகிறார்.

குடும்பம் அல்லது சமூகம் என்பதை விட தனி மனித சந்தோஷமும்/சுதந்திரமுமே முக்கியம் என்பது இன்னொரு மாற்றுத்தரப்பு. அமெரிக்கா இதில் உச்சம் தொட்ட நாடு. பெற்றோரைப் பேணுவது பிள்ளைகளின் கடமை என்றால், ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அன்னையர் தினம் அன்று (மட்டும்) கண்டிப்பாக முதியோர் இல்லம் சென்று அம்மாவைத் தரிசிக்கும் புண்ணிய ஆத்மாக்கள் அவர்கள். தற்போது, நமது சமூகத்திலும் பரவலாகி வரும் விஷயம். எனவே இந்த இரு மாறுபட்ட பண்பாடுகளின் உரசல், பல இடங்களில் நடக்க ஆரம்பித்திருக்கும் நேரம் இது. அதைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது, இந்தப் படம்.

நமது பண்பாட்டின் பிரதிநிதியாக ஜோ இருக்க, ‘தியாகம் என்பதெல்லாம் முட்டாள்தனமான சுயசித்திரவதை..நம்ம லைஃபை நாம எஞ்சாய் பண்ணனும்’எனும் மாற்றுத் தரப்பாக அவரின் மகளும், கணவனும். 13 வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம், தன் கனவுகளைத் தியாகம் செய்து வாழ்ந்ததற்கு என்ன அர்த்தம் என்று ஜோ யோசிக்க ஆரம்பிக்குபோது...இடைவேளை.

முதல்பாதி முழுக்க, கலகலப்பாகச் செல்கிறது. போலீஸ் ஜோ பற்றி ரகசிய விசாரணை செய்வது ஒரு பக்கம், விவரமற்ற மக்கு அம்மாவாக ஜோவின் வாழ்க்கை ஒரு பக்கம் என காமெடியும் பரபரப்ப்புமாக படம் துவங்குகிறது. அதிலும் பிரசிடெண்டை ஜோ சந்திக்கும் காட்சியும் அதன் பின்வரும் காட்சிகளும் செம ரகளை! ஹோட்டல் ஏசி ரூமில் ஜோவின் மாமியார் சொல்லும் ‘ஃப்ரிட்ஜ்ல பாலைத் தான் வைப்பாங்க..இவங்க என்னடான்னா நம்மளை வச்சுட்டாங்க’ டயலாக்கிற்கு தியேட்டரே அதிர்கிறது. கூடவே, ஆபீஸ் பாலிடிக்ஸை செம காமெடியாகச் சொல்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு, வீட்டின் மொட்டை மாடியில் இயற்கை விவசாயம் என்று ஜோ இறங்கும்போதே, நமக்கு பிண்ணனியில் ‘அண்ணாமலை டூ படையப்பா’ மியூசிக் ஓட ஆரம்பித்துவிடுகிறது. பெண்களின் பிரச்சினையை மட்டும் பேசாமல், பூச்சி மருந்துகளால் நம் உணவெல்லாம் விஷமாகியிருக்கும் அவலத்தைச் சொன்னது பாராட்டக்கூடியது. ஆனாலும், அதுவே கிளைமாக்ஸ்வரை நீள்வதைக் கொஞ்சம் பொறுமையுடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் ஃபேஸ்புக் போராளிகளை ஓட்டுவது, அந்த வேலைக்கார பாட்டி கேரக்டர், அம்மா செண்டிமெண்ட்டுக்கு ஜோ கொஞ்சம் அசர்வது என இரண்டாம்பாதியிலும் ரசிக்க வைக்கும் சீன்கள் இருப்பதால், தப்பிக்கிறோம்.

ஜோதிகா:

படம் முழுக்க ஜோ மயம். ரீ-எண்ட்ரிக்கு சரியான கேரக்டர். பிய்த்து உதறுகிறார். முகத்தில் கொஞ்சம் பளபளப்பு குறைந்திருக்கிறது என்பதைத் தவிர்த்து, பெரிய வித்தியாசம் தெரியவில்லை. கணவனும் பிள்ளையும் கிளம்பும்போது, அவரது நடிப்பு கலங்க வைக்கிறது. முதல்பாதியில் காமெடியிலும், இரண்டாம்பாதியில் செண்டிமெண்டிலும் கலக்கியிருக்கிறார்..வெல்கம் பேக்.

சொந்த பந்தங்கள்:
ஹீரோ ’மாதிரி’ ரகுமான் வருகிறார். மிகவும் ஜாக்கிரதையாக ஜோதிகாவைத் தொடாமலேயே, கணவனாக நடித்திருக்கிறார். அவரைவிட, அவரின் மகளாக வரும் அந்தப் பெண் தான் நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். பிராக்டிகலான பெண்ணாக, செண்டிமெண்ட் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாதவராக நல்ல நடிப்பு. டெல்லி கணேஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் என சீனியர்கள் கெஸ்ட் ரோலில் வந்து பின்னியிருக்கிறார்கள். அபிராமியும் டபுள் சைஸில் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- முக்கால்வாசிப் படத்தில் இருந்து, கிளைமாக்ஸ் வரை..இண்டரெஸ்ட்டாக நடப்பதற்கு ஏதும் இல்லாமல், தட்டையாகப் படம் நகர்வது.
- சந்தோஷ் நாராயணனின் பாடலில் ஒன்றை மட்டுமே படத்தில் யூஸ் செய்திருக்கிறார்கள். ராசாத்தி டைட்டில் பாடலாகவும், ஹேப்பி பாடல் படத்தின் எண்ட் டைட்டிலிலும் வருகிறது. இரண்டையும் படத்தில் நல்ல விஷுவல்ஸூடன் கொடுத்திருக்கலாம்..ஏமாற்றமே!
- கணவனை நெகடிவ்வாக மட்டுமே காட்டியிருப்பது. (என்ன இருந்தாலும், விட்டுக்கொடுக்க மாட்டோம்ல!)
- இயற்கை விவசாயத்தில் ஜோதிகா இறங்கியதும், மத்திய-மாநில அரசுகள் உடனே திருந்தி அவருக்கு உதவுவதாகக் காட்டியிருப்பது. நம்மாழ்வார் எனும் கிழவன் இந்த அரசுகளிடம் கத்திக் கத்தி ஒன்றும் நடக்காமல், தனி மனிதராகக் கடைசிவரை போராடிச் செத்தது ஞாபகம் வந்தது.

- மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த மஞ்சுவாரியாருக்கு ஏறக்குறைய இந்தக் கதை போன்றே பெர்சனல் பிராப்ளம் இருந்தது. கணவர் திலீப்பிற்காக, நடிப்பை விட்டு 16 வருடம் நல்ல மனைவியாக் வாழ்ந்தார். ஆனால் திலீப்போ காவ்யா மாதவனுடன் கள்ளக்காதலில் இருப்பதாகத் தெரியவர, வாழ்க்கையே வெறுத்துப்போனார். இத்தனை வருடங்கள் கணவனுக்காகவும், பிள்ளைக்காகவும் வாழ்ந்தது என்ன அர்த்தம் என நொந்து, டைவர்ஸ் வாங்கினார். (மகளும் படத்தில் வருவது போன்றே அப்பாவுடன் சென்றார்). அதற்குப் பிறகு மஞ்சு நடித்த படம் தான் இந்தக் கதை. எனவே ஆடியன்ஸ் மத்தியில் சிம்பதியைக் கிளப்பி, படம் பாக்ஸ் ஆபீஸீல் கலெக்சனை அள்ளியது. இங்கே சூர்யா போன்ற நல்ல கணவர் கிடைத்த ஜோதிகா செய்திருப்பது, அந்த வகையில் நெகடிவ்.

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:


- முதல் பாதி
- ஜோதிகாவின் அருமையான நடிப்பு..மீண்டும் ஒரு மொழி.
- சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் அமர்க்களம்
- விஜியின் வசனங்கள்..தொடர்ந்து புன்சிரிப்பிலேயே நம்மை வைத்திருக்கின்றன.
- இன்றைக்கு அவசியம் விவாதிக்கப்பட வேண்டிய...படத்தின் கான்செப்ட்
-கூடவே, ஆர்கானிக் வெஜிடபிள்ஸ் அருமையைச் சொல்லியிருப்பது

பார்க்கலாமா?
 
நல்ல படம்...ஃபீல் குட் மூவி பார்க்க விரும்புபவர்கள் அவசியம் குடும்பத்துடன்.........பார்க்கலாம்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.