Sunday, May 24, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – III-பகுதி 42

இந்தத் தொடரின் முதல் பாகத்தில் திரைக்கதை பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். அடுத்து இரண்டாம் பாகத்தில் Blake Snyder-ன் Beatsheet-ஐ அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை வடிவத்தை எப்படி அமைப்பது என்று பார்த்தோம். ஒரு கதையை எப்படி திரைக்கதை வடிவத்திற்கு ஒன்லைன்களாகக் கொண்டுவருவது, எங்கே கேடலிஸ்ட் சீன் வரவேண்டும், எங்கே 'ஆல் இஸ் லாஸ்ட்' வரவேண்டும் என்பது போன்ற ஃபார்மேட் விஷயத்தில் இப்போது உங்களுக்கு ஓரளவு தெளிவு வந்திருக்கும்.

அடுத்து சீன்களை எழுத ஆரம்பித்துவிடலாமே என்று கைகள் பரபரக்கும் இச்சமயத்தில், ஜெனர்(கதை வகை) எனும் இன்னொரு சப்ஜெக்டை இந்த மூன்றாம் பாகத்தில் விரிவாகப் பார்ப்போம். ஜெனர் பற்றிய தெளிவில்லாமல் இறங்கினால், எவ்வளவு நல்ல கதையும் சொதப்பிவிடும் என்பதால், இதைப் பார்த்துவிட்டு அடுத்து சீன்கள் எழுதுவது பற்றிப் பார்க்கலாம்.

இப்போது........

ஜெனர் - அறிமுகம்
கதை சொல்வது என்பது ஒரு கலை. ஏன் அது கலையாக வகைப்படுத்தப்படுகிறதென்றால், அது நமது உணர்வுகளுடன் ஊடுறுவும் விஷயமாக இருப்பதனால் தான். ஒரு சினிமாவின் மூலமாக நாம் என்ன செய்கிறோம்? ஆடியன்ஸ் மனதில் பலவகை உணர்ச்சிகளைத் தூண்டுகிறோம், அவர்களை மெய் மறக்க வைத்து அழ வைக்கிறோம், சிரிக்க வைக்கிறோம், அறச்சீற்றம் கொள்ள வைக்கிறோம். இவற்றில் ஏதாவது ஒரு உணர்ச்சி தான் மேலோங்கி இருக்கும் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம்.

சில படங்கள் சந்தோசத்தை மையப்படுத்தி வருகின்றன, சில படங்கள் பயத்தை மையப்படுத்தி வருகின்றன. ஒரு படம், ஒட்டுமொத்தமாக என்னவகை உணர்வினை நமக்குக் கொடுக்கிறது, அதன் கதையோட்டம் எப்படிச் செல்கிறது, முடிவு என்ன ஆகிறது என்பதையெல்லாம் வைத்துத்தான், ஒரு படம் இத்தகையது என்று வகைப்படுத்துகிறோம். அதில் இருந்து தான் ஜெனர் எனும் கதைவகைகள் காலப்போக்கில் பிரிக்கப்பட்டன.

ஆக்சன் படம், காதல் கதை, காமெடி என சினிமா பலவகையகாப் பிரிக்கப்பட்டது.  வணிக சினிமாவின் பெரிய சவாலே, படைப்பாளியின் சிந்தனையும் ஆடியன்ஸின் எதிர்பார்ப்பும் ஒத்துப்போவது தான். ஆடியன்ஸை தியேட்டருக்குள் நுழையும் முன்பே தயார்படுத்த, இந்த வகைப்படுத்தல் பேருதவியாக அமைந்தது.


கூடவே, திரைக்கதை எழுதுபவர்க்கும் இதுவொரு வழிக்காட்டியாக ஆனது. கொடூரமான ரத்தம் தெறிக்கும் சீனை இந்தக் கதைக்கு வைப்பதா, வேண்டாமா என்பது போன்ற முடிவுகளை எளிதாக எடுக்க, ஜெனர் உதவி செய்தது. பெரும்பான்மையான படங்களின் ஜெனர் கீழ்க்கண்ட ஏதோவொன்றாகத்தான் இருக்கும்:

1. ஆக்சன் கதை
2. காதல் கதை
3. காமெடிக் கதை
4. குடும்பக்கதை
5. ஹாரர் படம்
6. Crime/Thrillar
7. சைன்ஸ்பிக்சன்/Mystry/Supernatural
8. பக்திப்படங்கள்
9. வரலாற்றுப் படங்கள்
10. மற்றவை

பொதுவாகப் படங்களை இரண்டே ஜெனரில் சொல்லிவிட முடியும். ஒன்று, மெலோடிராமா..மற்றது த்ரில்லர்.

மேற்கொண்டு ஜெனர் பற்றிப் பார்க்கும் முன், இரு முக்கிய விஷயங்களை நினைவில் வைக்கவும்:

1. ஒரு ஜெனரின் கூறுகள் கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் காலத்து ஆக்சன் படங்களையும், ரஜினி காலத்து ஆக்சன் படங்களையும், இன்றைய ஆக்சன் படங்களையும் ஒப்பிட்டால் இது உங்களுக்கே புரியும். அடிப்படையாக அந்தப் படங்கள் கொடுத்த/கொடுக்கும் உணர்வுகள் ஒன்று தான். ஆனால் சொல்லும் முறையில் பல மாற்றங்கள் வந்துவிட்டன, இல்லையா? எனவே ஒரு ஜெனரில் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஃபிக்ஸ் செய்ய முடியாது. சமூக மாற்றங்கள், ஆடியன்ஸ் மனநிலை, டெக்னலாஜியின் வளர்ச்சி போன்ற பல காரணிகளே அவற்றை முடிவு செய்யும்.

உதாரணமாக....சூப்பர்ஹிட் படமான வண்ணக்கிளி படத்தில் வந்த 'அடிக்கிற கை தான் அணைக்கும்' பாடலைப் பார்த்து, கண்ணீர் விட்ட பெண்களை நானறிவேன். ஆனால் இன்று அந்தப் பாட்டை டிவியில் பார்த்தாலே, வீட்டில் ஆண்களுக்கு அடி விழும்!!

2. மேலே உள்ள லிஸ்ட்டில் ஆக்சன், காமெடி என கொடுக்கப்பட்டிருப்பது அடிப்படை வகைகள். இதை வைத்து ரொமான்டிக் காமெடி, ரொமாண்டிக் த்ரில்லர் என் ஜெனர்களை மிக்ஸ் செய்து, புதுவகை மசாலாக்களை உருவாக்குவது திரைக்கதை ஆசிரியரின் திறமை. எனவே பெரும்பாலான படங்களை, குறிப்பாக இந்தியப்படங்களை ஒரே ஒரு ஜெனரில் அடக்கிவிட முடியாது. ஜெனர் பற்றிய அடிப்படைகளைக் கற்றபின், மிக்ஸிங்கில் நீங்கள் கலக்கலாம்...சியர்ஸ்!


சரி, ஒரு படம் என்ன ஜெனர் என்பதை சில விஷயங்களை வைத்து முடிவு செய்யலாம். உதாரணமாக…:

ஒட்டுமொத்தப் படம் கொடுக்கும் உணர்வு
ஹீரோ மற்றும் முக்கியக் கேரக்டர்களின் இயல்பு
திரைக்கதை வடிவம் (லீனியர், நான் லீனியர், டாகுமென்டரி ஸ்டைல்..)
கதை சொல்லப்பட்ட விதம்
படத்தின் முடிவு.

ஒவ்வொரு ஜெனருக்கும் மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் வெறுபடும். ஒரு குறிப்பிட்ட ஜெனரில் எடுபடும் வன்முறை, வேறொரு ஜெனரில் அபத்தமாகத் தோன்றும். ஒரு ஜெனரில் பொருந்தும் காமெடி, இன்னொரு ஜெனரில் ஒட்டாமல் நிற்கும்.

படத்தின் கரு உருவானதுமே, படத்தின் ஜெனரை முடிவு செய்துவிடுவது நல்லது. ஆனால் பிராக்டிகலாகப் பார்க்கும்போது, படத்தின் ஒன்லைன்/பீட் ஷீட் எழுதும்போதே ஜெனர் பற்றி தெளிவு பிறக்கும். படத்தின் ஒட்டுமொத்த உணர்வினை முடிவு செய்வது ஜெனர் தான் என்பதால், சீக்கிரமே ஜனரை முடிவு செய்துவிடுவது நல்லது.

ஒவ்வொரு ஜெனரிலும் இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்தே ஆக வேண்டும். உதாரணமாக ஆக்சன் ஜெனர் என்றால் வலுவான வில்லன். அது இல்லையென்றால் ஆடியன்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சும். மக்கள் எதிர்பார்ப்பதை, க்ளிஷேவாக இல்லாமல் ட்விஸ்ட் செய்து கொடுப்பதே நம் முன் இருக்கும் பெரும் சவால்.

எனவே சீன்களை எழுதும் முன், ஜெனர் பற்றிய தெளிவு அவசியம்.நம் சினிமாக்களில் அதிகம் வரும் ஜெனர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. ஜெனர் பற்றிய தெளிவு அவசியம்.நம் சினிமாக்களில் அதிகம் வரும் ஜெனர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.// இது பற்றி நான் அறியேன் எழுதுங்க காத்து இருக்கின்றேன் வாசிக்க!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.