Friday, October 31, 2014

ஹிட்ச்காக்: Rebecca (1940) - ஒரு அலசல் (பாகம்-2)

ரிபெக்கா எனும் பிம்பம்
சென்ற பகுதியைப் படித்த நீங்கள் படம் பார்க்காதவராக இருந்தால், ’ரிபெக்கா எப்படி இருப்பார்?, ரிபெக்கா கேரக்டரில் நடித்த நடிகை யார்?, அவர் ஸ்டில் எங்கே?’ என்றெல்லாம் யோசித்திருப்பீர்கள். இந்த படத்தின் விஷேசமே, அதில் தான் அடங்கி இருக்கிறது. ஆம், ரிபெக்கா வேடத்தில் யாருமே நடிக்கவில்லை. வசனங்களில் மட்டுமே வாழ்கிறாள் ரிபெக்கா.
சொல்லாதே…காட்டு (Show…Don’t tell)’ என்பது திரைக்கதையில் அடிப்படை விதிகளில் ஒன்று. ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை வசனங்களில் சொல்லாதீர்கள், காட்சியாகக் காட்டுங்கள் என்பதே பாலபாடம். ‘அவர் நல்லவர்..வல்லவர்’ என்றெல்லாம் மற்ற கதாபாத்திரங்கள் பேசுவதன் மூலம் சொல்வதை விட, ஒரு காட்சி மூலம் ஆடியன்ஸுக்கு விஷுவலாகப் புரிய வைப்பதே நல்ல சினிமா என்று திரைக்கதைப் பாடம் சொல்கிறது.

ஆனால் இங்கே ரிபெக்காவைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விஷுவலாக ரிபெக்கா வருவதேயில்லை. ‘அவளை மாதிரி ஒரு அழகிய படைப்பை நான் பார்த்ததேயில்லை. அவள் எதற்கும் பயப்படுபவள் அல்ல’ என்று வசனங்கள் மட்டும் வந்துகொண்டே இருக்கின்றன. ரிபெக்கா வருவதில்லை. ஏன்?

’அவர் யார் தெரியுமா?’ என்று பில்டப் ஏற்றிக்கொண்டே போய்விட்டு, கடைசியில் வந்து நிற்பது ராஜூ பாய் என்றால் என்ன ஆகும் என்று நமக்கே தெரியும். மீன் தொட்டியில் அடைக்கப்பட முடியாத திமிங்கலம் போல், இந்தப் படத்தினுள் அடக்க முடியாத பெரும் பிம்பமாக ரிபெக்கா உருவெடுத்து நிற்கிறாள். இந்த கேரக்டரில் யார் நடித்தாலும், அதுவரை ஏற்படுத்திய பில்டப்பை நியாயப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

அதையும் மீறி, ஒரு சிறந்த நடிகையைப் பிடித்து நடிக்க வைத்துவிடலாம். அதில் இன்னொரு சிக்கல், இது ஒரு புகழ்பெற்ற நாவலின் திரைவடிவம். நாவலைப் படித்த எல்லாருக்குமே, ரிபெக்கா எனும் பேரழகி பற்றிய ஒரு மனப்பிம்பம் இருக்கும். யார் அந்த கேரக்டரில் நடித்தாலும், முழுமையாக திருப்திப் படுத்த முடியாது. தமிழில் மோகமுள் நாவலில் வந்த யமுனா கேரக்டரை உதாரணமாகச் சொல்லலாம். யமுனா, பல இலக்கிய வாசகர்களின் ரகசியக் காதலி. அந்த நாவல் படமான போது, யமுனாவை நாம் கற்பனை செய்து வைத்திருந்ததற்கு அந்த நடிகையால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே ஆடியன்ஸின் கற்பனைக்கே ரிபெக்கா உருவத்தை விட்டுவிடுவது தான் சாலச் சிறந்தது. அதைத் தான் ஹிட்ச்காக் செய்தார்.


German Expressionism தந்த தவப்புதல்வரான ஹிட்ச்காக், விஷுவலாகக் கதை சொல்லும் பாணியை விட்டுக்கொடுத்துவிட்டாரா என்றும் ஒரு ஃபிலிம் மேக்கராக அவருக்கு இது தோல்வி தானே என்றும் கேள்வி எழலாம். அங்கே தான் ஹிட்ச்காக்கின் விஸ்வரூபத்தை நாம் பார்க்கிறோம்.

’ரிபெக்கா இந்த அறையில் தான் ஃபோன் பேசுவாள். இங்கே தான் உட்கார்ந்திருப்பாள். இந்த ஜன்னலோரம் தான் நிற்பாள்’ என மற்ற கேரக்டர்கள் சொல்லும்போதெல்லாம், கேமிரா அவர்களின் முகத்தில் நிற்பதில்லை. ரிபெக்கா இல்லாத அந்த வெற்று இடங்களில் மேய்கிறது கேமிரா. ஒரு வெறும் படுக்கை, பிண்ணனியில் ரிபெக்கா பற்றிய வர்ணனை, அதற்கு ஏற்றாற்போல் அழகாக நகரும் கேமிரா என ஹிட்ச்காக் விஷுவலாக அதகளப்படுத்தியிருக்கிறார்.

தமிழில் ரிபெக்கா போன்ற கேரக்டராக ஞாபகம் வருவது, புதியபறவை சௌகார் ஜானகி கேரக்டர் தான். சிவாஜி காதலிக்கும் அளவிற்கு சௌகார் ஜானகியிடம் என்ன இருக்கிறது என்று நான் குழந்தையாக இருக்கும்போதே குழம்பியிருக்கிறேன்.

அடுத்து, ஏறக்குறைய ரிபெக்கா டெக்னிக்கை சந்திரமுகியில் காணலாம். உண்மையான சந்திரமுகி எப்படி இருப்பாள் என்று நமக்குத் தெரியாது. ஃப்ளாஷ்பேக்கில் ஜோதிகாவையே சந்திரமுகியாகக் காட்டியிருப்பார்கள். அப்படிக் காட்டாமல் விட்டிருந்தால், அதன் எஃபக்ட் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். அப்படிக் காட்டியதால், சந்திரமுகியை விட வேட்டைய மகாராஜா தான் நம் மனதில் இடம் பிடித்துவிட்டார். 

ரிபெக்கா பற்றிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் முன் கொட்டப்படுகின்றன.அவள் தைரியமான, கம்பீரமான பேரழகி. ஆண்களை துச்சமாக மதித்தவள். தன் அழகால் பல ஆண்களை வீழ்த்தியவள். கணவனையே பொம்மை மாதிரி நடத்தியவள். கேன்சர் வந்து, அவளின் ஆட்டத்தை முடித்து வைக்கிறது.

ரிபெக்கா எப்படி இறந்தாள் என்பது பற்றி குழப்பமான பதிலே கிடைக்கிறது. ‘கேன்சர் வந்ததால் சூசைடு செய்துகொண்டாள்’ என்று படத்தில் வரும் போலீஸும், பேட்டியில் ஹிட்ச்காக்கும் சொல்கிறார்கள். ஆனால் படத்தில் அப்படி வரவில்லை.

ரிபெக்கா தான் கர்ப்பமாகியிருப்பதாக நினைக்கிறாள். சோதனையில், அது கேன்சர் கட்டி என்று தெரியவருகிறது. கணவனிடம் அவள் ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்கு காரணம் நீயல்ல. ஆனால் அது உன் குழந்தையாக வளரும்’ என்று வேண்டுமென்றே அவனைக் கோபப்படுத்தும் விதத்தில் பேசுகிறாள். கோபத்தில் ஹீரோ அவளை அடிக்க, கீழே விழும் அவள் தலையில் அடிபட்டு இறக்கிறாள்.

வலிய ஹீரோவை கோபப்படுத்தியதாலேயே இது தற்கொலை கணக்கில் வந்துவிடாது. தற்கொலை செய்ய ஹீரோயின் விஷம் எதுவும் அருந்தியதாகவும் வரவில்லை. ஹீரோவைக் கோபப்படுத்தினால், அவன் அடிப்பான் அல்லது கொல்வான் என்று தெரிந்தே ரிபெக்கா அதைச் செய்கிறாள். இதன் நோக்கம், கணவன் கையால் சாவது.

ஆனால் அதன் அடிப்படை நோக்கம், தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக கணவன் கையால் சாக நினைத்தாளா அல்லது சாகும்போதுகூட கணவனை கொலைகாரனாக்கி ஜெயிலுக்கு அனுப்ப நினைத்தாளா என்பது பற்றியும் படம் விவரிக்கவில்லை. ஆடியன்ஸின் பார்வைக்கே, அதை விட்டுவிடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, பாவப்பிராயச்சித்தமாகவே ரிபெக்காவின் முடிவைக் காண்கிறேன். ஹீரோ ரிபெக்காவை அடித்தது போலீஸுக்குத் தெரியாது என்பதால், தற்கொலை என்று அறிவிக்கிறார்கள்.
ரிபெக்காவின் இன்னொரு ஆபத்தான மறுபக்கத்தைப் பற்றியும் படம் பூடகமாகச் சொல்லிச் செல்கிறது. 

அது பற்றி…..அடுத்த பதிவில்!

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்: Rebecca (1940) - ஒரு அலசல் (பாகம்-2)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, October 27, 2014

ஹிட்ச்காக்: Rebecca (1940) - ஒரு அலசல்

டிஸ்கி: சிறு இடைவேளைக்குப் பின் ஹிட்ச்காக் தொடரை மீண்டும் தொடர்வோம், நண்பர்களே!

 அறிமுகம்:
 Jamaicca Inn படத்தை ஒரு வழியாக எடுத்து முடித்த ஹிட்ச்காக், ஆளை விட்டால் போதுமென்று ஹாலிவுட்டுக்கு மூட்டை முடிச்சுக்களுடன் ஓடினார். Gone with the wind போன்ற வெற்றிப்படங்களின் தயாரிப்பாளரான David O. Selznick-ன் தயாரிப்பில் டைட்டானிக் பற்றிய படத்தினை எடுப்பதாக ஒரு திட்டம் முதலில் இருந்ததை சென்ற ஹிட்ச்காக் பதிவில் பார்த்தோம், இல்லையா? டைட்டானிக் பற்றிய கதையைவிட Rebecca எனும் நாவலை படமாக எடுக்கலாம் எனும் முடிவுக்கு இப்பொழுது Selznick வந்திருந்தார். அது, பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை தான்.

 ஏனென்றால் Jamaicca Inn படத்தின் மூல நாவலை எழுதிய  Daphne du Maurier தான், இந்த Rebecca நாவலையும் எழுதியிருந்தார். ஹிட்ச்காக்கிற்கும் இந்த நாவலை படமாக எடுக்கும் ஆசை இருந்தது. எனவே செல்ஸ்னிக் சொன்னதும், ஹிட்ச்காக் சந்தோசமாக திரைக்கதை தயாரிக்கும் வேலையில் இறங்கினார். ‘கண்ணுகளா..இதுவரைக்கும் நீங்க பார்த்தது ட்ரெய்லர் தான். மெயின் பிக்சரை இனிமே தான் பார்க்கப் போறீங்க’ என்று ஐரோப்பிய சினிமாவில் இருந்து ஹாலிவுட்டில் குதித்தார் ஹிட்ச்காக்.
திரைக்கதையின் முதல் டிராஃப்டை எழுதியவர் Joan Harrison. இவர் யாரென்று கேட்டால், அசந்துவிடுவீர்கள். நம் ஹிட்ச்காக்கின் செக்ரட்டரி அவர். ஹிட்ச்காக்கை நேரில் பார்க்காத பலருக்கும் அவர் இன்ஸ்பிரேசனாக இருக்கும்போது, செக்ரட்டரிக்கு இருக்க மாட்டாரா? கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவி பாடும் என்பதற்கிணங்க, திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை ஹிட்ச்காக் எனும் நடமாடும் பல்கலைக்கழகத்தை வேடிக்கை பார்த்தே, கற்றுக்கொண்டார் Joan Harrison. அவரும் ஹிட்ச்காக்கும் இணைந்து உருவாக்கிய திரைக்கதைக்கு முதல் வடிவம் கொடுத்தார்கள்.

நாம் முந்தைய பகுதிகளில் பார்த்தபடி, மூலக்கதையில் கண்டபடி கைவைப்பது ஹிட்ச்காக் வழக்கம். அவரது ஸ்டைலுக்கு கொண்டுவர, என்ன வேண்டுமானாலும் செய்வார். இங்கேயும் அதையே செய்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் செல்ஸ்னிக் கடுப்பாகி, இப்படி பதில் அனுப்பினார் : ’அப்பு, நாம ரிபெக்கா நாவலோட ரைட்ஸை காசு கொடுத்து வாங்கியிருக்கோம். அதனால ரிபெக்கா கதையைத் தான் எடுக்கிறோம். புரியுதா?’ பிறகு Robert Emmet Sherwood  எனும் அமெரிக்க நாடக ஆசிரியர் கைக்கு, இந்த முதல் டிராஃப்ட் போனது. பலகட்ட விவாதங்களுக்குப் பிறகு, ரிபெக்கா திரைக்கதை தயாரானது. செல்ஸ்னிக்கிற்காக ஹிட்ச்காக் நிறைய விட்டுக்கொடுத்திருந்தார். ஹிட்ச்காக்கிடம் உள்ள பல நல்ல பழக்கங்களில் அதுவும் ஒன்று.

கதை:(படம் பார்க்காதவர்கள், இதைத் தவிர்க்கலாம்!)
 
 ஒரு பணக்காரப் பெண்மணிக்கு கம்பேனியனாக, எடுபிடியாக இருக்கும் ஒரு அனாதைப்பெண் ஹீரோயின். அந்தப் பெண்மணியுடன் Monte Carlo எனும் ஊருக்குப் போகும்போது, ஹீரோவை அங்கே சந்திக்கிறார். ஹீரோ தன் மனைவியை இழந்தவர் என்று தெரிந்து அனுதாபம் கொள்கிறார். ஹீரோவுக்கு ஹீரோயினின் எளிமையும் அப்பாவித்தனமும் பிடித்துப்போகிறது. அங்கேயே திருமணம் செய்துகொண்டு, தன் ராஜாங்கமான Manderley-க்கு அழைத்துச் செல்கிறார். அங்கே தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. ஏழையான ஹீரோயினால், உடனே தாழ்வுமனப்பான்மையை உதறி மகாராணியாக மாறமுடிவதில்லை. அதைவிடவும் பெரும் சிக்கல், ரிபெக்கா.
ரிபெக்கா ஹீரோவின் இறந்துபோன முதல்மனைவி. பேரழகி, கம்பீரமானவள், மகாராணி போன்று வாழ்ந்தவள் என ரிபெக்கா பற்றிக் கேள்விப்படும் விஷயங்கள் எல்லாமே ஹீரோயினுக்கு நேரெதிர் விஷயமாக இருக்கின்றன. ஹீரோவால் ரிபெக்காவை மறக்கவே முடியாது, ரிபெக்காவின் இடத்தை ஹீரோயினால் அடையவே முடியாது என்பதை அங்குள்ளவர் அவளுக்கு உணர்த்துகிறார்கள். குறிப்பாக, ரிபெக்காவுடன் அங்கே வந்த, அந்த மாளிகையை நிர்வகிக்கும் Mrs. Danvers. ஹீரோயினின் வாழ்க்கையை நரகமாக ஆக்க, கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறாள் Mrs. Danvers. கைகேயி உடன் வந்த கூனி போன்ற ஆள், ரிபெக்காவுடன் வந்த Mrs. Danvers!

ரிபெக்கா தைரியமானவள், தனியே படகினில் செல்லும் ஹாபி கொண்டவள், நீச்சலில் தேர்ந்தவள். ஆனாலும் ஒரு புயலில் சிக்கி, இறந்துவிட்டதாக அறிகிறாள் ஹீரோயின். ஹீரோவும் டெட் பாடியை அடையாளம் காட்டி, அடக்கமும் செய்துவிட்டார் ஹீரோ என்று புரிந்துகொள்கிறார். அப்போது தான், அந்த ட்விஸ்ட் வருகிறது

ரிபெக்கா சென்ற படகும் அந்த படகினுள் ஒரு பிணமும் கிடைக்கின்றன. அது தான் ரிபெக்காவின் பிணம் என்று ஹீரோ சொல்கிறார். கூடுதல் அதிர்ச்சியாக, தான் தான் கொன்றதாகச் சொல்கிறார். ரிபெக்காவின் நடத்தை சரியில்லாததாலும், வேறொருவனின் குழந்தையை அவள் கருவில் சுமப்பது தெரிய வந்ததாலும் கோபத்தில் அடித்ததில் அவள் இறந்துவிட்டதாக ஹீரோ சொல்கிறார்.

போலீஸ் விசாரணை மீண்டும் ஆரம்பிக்கிறது. தன் கணவன் ரிபெக்காவை விரும்பவில்லை எனும் சந்தோசம் ஒரு புறமும், கணவனைக் காப்பாற்றும் கவலையும் ஹீரோயினுக்கு ஒருசேர வருகின்றன. போலீஸ் விசாரணையில் ரிபெக்கா கொலை செய்யப்படவில்லை, தனக்கு கேன்சர் இருந்ததால் தற்கொலை செய்துகொண்டாள் என்று கேஸ் முடிகிறது. அதைக் கேள்விப்படும் Mrs. Danvers, அந்த மாளிகையை எரித்து தானும் எரிந்து போகிறாள். ஹீரோவும் ஹீரொயினும் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

 திரைக்கதை:
 இந்த படத்தின் திரைக்கதையை மூன்று ஆக்ட்களாகப் பிரிக்கலாம். முதலாவது ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. இரண்டாவது ஹீரோயின் மாண்டெர்லி மாளிகையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவரிக்கும் சைக்கோ த்ரில்லர். மூன்றாவது ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் சஸ்பென்ஸ் த்ரில்லர். லவ் ஸ்டோரியை விட சைக்கோ த்ரில்லரில் வேகமும் சீரியஸ்னெஸும் அதிகம். அதைவிட மூன்றாவது ஆக்ட்டில் வேகம் அதிகம். எனவே படம் இறுதிவரை சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

ரிபெக்கா, ஹீரோ, ஹீரோயின் என மூன்று முக்கியக் கேரக்டர்கள் கதையில் வருகின்றன. ஆனாலும் ஹிட்ச்காக், இந்தப் படத்தை ஹீரோயினின் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறார். முதல் காரணம், ஹீரோயின் கேரக்டருடன் நம்மால் எளிதில் அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். ஹீரோவின் பிரச்சினையை முதலிலேயே சொன்னால், சஸ்பென்ஸ் போய்விடும். எனவே ஹீரோவை கதைநாயகனாக ஆக்க முடியாது. ஹீரோவின் மனதில் இருக்கும் முதல் மனைவியின் இடத்தைப் பிடிப்பதும், இடம் பிடித்தவுடன் கணவனைக் காப்பாற்ற நினைப்பதுமாக இரண்டு குறிக்கோள்கள் ஹீரோயினுக்கு இருக்கின்றன. கதையின் மையம் ரிபெக்கா. ஆனால் அவளையும் கதைநாயகி ஆக்க முடியாது. எனவே, எளிமையான அப்பாவி ஹீரோயினுக்கே அதிர்ஷடம்.

படத்தில் காமெடிக்கு என்று வருவது, ஹீரோயின் எடுபிடியாக இருக்கும் அந்த பணக்காரப் பெண்மணி தான். (Florence Bates – அற்புதமான நடிகை). அவர் ஹீரோவுக்கு ரூட் விடுவதும், ஹீரோ அவருக்கே தெரியாமல் ஹீரோயினை லவட்டுவதும் என ஆரம்பமே கலகலப்பாக ஆரம்பிக்கிறது.  ஹீரோ ஹீரோயினை திருமணம் செய்யப்போகிறார் என்று தெரிந்ததும், ஒரு வேலைக்காரி மகாராணி ஆவதா என்று கடுப்பாகிறார் அந்தப் பெண்மணி. 

ஏற்கனவே மனதைரியம் இல்லாத ஹீரோயினிடம் அவர் பேசும் வசனங்கள், ஹீரோயினை பெரும் பயத்திற்குள் தள்ளுகின்றன. ’மேண்டர்லிமாளிகைக்குச் சென்றபின்பும் அந்த பயம் அவளை விட்டு விலகுவதேயில்லை. ’ஒரு கிரேட் லேடியாக இருப்பதற்கு என்ன அர்த்தம் என்றே உனக்குத் தெரியாது. உன்னால் ஆகவும் முடியாதுஎன்று சொல்கிறார். ஆடியன்ஸை படத்துடன் பிணைக்கும் வசனம் அது தான். ஹீரோயின் தன் இயல்பை விட்டு வெளியே வருவாரா என்று நாம் யோசிக்க ஆரம்பிக்கிறோம்.

ஹீரோ அவளை தன் மாண்டர்லி மாளிகை நோக்கி காரில் கூட்டிப்போகும் காட்சியைப் பார்த்தபோது, வசந்தமாளிகையில் சிவாஜி வாணிஸ்ரீயை அதே போன்று தன் அரண்மனைக்கு கூட்டிப்போகும் காட்சி ஞாபகம் வந்தது. ஆனால் வாணிஸ்ரீ தைரியமானவர், மகாராணி(சிவாஜியின் அம்மா)வையே வந்து பார் என்று ஈகோவை விட்டுக்கொடுக்காமல் நிற்பவர். இந்தப் படத்தின் ஹீரோயின் அதற்கு நேரெதிர் என்பது தான் பிரச்சினையே.

திடீரென ஒரு வசதியான வாழ்க்கை வரவும், ஹீரோயினால் அதனுடன் ஒத்துப்போக முடிவதில்லை. வேலைக்காரர்களிடம்கூட தயங்கித் தயங்கியே பேசுகிறாள். தாழ்வுமனப்பான்மையை விட்டு அவளால் வெளிவரவே முடிவதில்லை. ஒரு புதிய அலுவலகத்தில் அல்லது நிறைய பெரிய மனிதர்கள் இருக்கும் இடத்தில் அல்லது நம்மை ஒழித்துக்கட்ட ஒரு கூட்டமே இருக்கும் இடத்தில், நாமும் இருக்க நேரும்போது மிகவும் தொந்தரவாக உணர்ந்திருப்போம். படத்தின் ஆரம்பம் முதல் ஹீரோயின் அந்த மனநிலையில் தான் இருக்கிறாள். இந்த காட்சிகள் தான் நம்மை ஹீரோயினின் இடத்திற்கு நகர்த்துகின்றன. ஹீரோயினுடன் நாம் ஐக்கியம் ஆகின்றோம்..

ஹீரோவின் பிரச்சினையும் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு சொல்லப்படுகிறது. முதல் காட்சியிலேயே தற்கொலைக்கு முயல்பவர் போல் அறிமுகம் ஆகிறார். அவர் மனைவி இறந்த விஷயம் அடுத்து நமக்கு சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்து, மூழ்குவது, Sail போன்ற வார்த்தைகள் ஹீரோவை சோகத்தி ஆழ்த்துவது தெரியவருகிறது. பிறகு தான் ரிபெக்கா கடலில் இறந்தாள் என்றும் அதனாலேயே அவர் இப்படி சோகமாக இருக்கிறார் என்றும் காட்சிகள் வருகின்றன. ரிபெக்காவை தன்னால் ஜெயிக்க முடியாது என்று ஹீரோயின் முடிவுக்கு வரும் நேரத்தில், ’ஹீரோவுக்கு ரிபெக்காவையே பிடிக்காது, அவளை கொலையே செய்ததே ஹீரோ தான்’ எனும் ட்விஸ்ட் வருகிறது. சுவாரஸ்யத்தை கூட்டிக்கொண்டே செல்வது எப்படி என்று இதில் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

ஹீரோ ஏன் ஹீரோயினை பார்த்த உடனே விரும்புகிறார் எனும் காரணம் நமக்கு வெளிப்படையாகச் சொல்லப்படுவதேயில்லை. ரிபெக்கா பற்றியும் ரிபெக்காவுடன் ஹீரோ வாழ்ந்த நரக வாழ்க்கை பற்றியும் மட்டுமே சொல்கிறார்கள். மீதியை ஆடியன்ஸே புரிந்துகொள்வார்கள் என்று விட்டுவிடுகிறார்கள். ரிபெக்கா ஹீரோவுக்கு அடிபணியும் ஆள் இல்லை, உலகத்தில் உள்ள எல்லா ஆண்களையும் தன் காலடியில் விழ வைக்கும் ஆவல் கொண்டவள். கபடம் நிறைந்த, கம்பீர அழகி. ஹீரோயின் எளிமையான, அப்பாவி. ஹீரோவைச் சார்ந்தே இருப்பவள். ரிபெக்காவின் நேரெதிர் பிம்பம். ஹீரோவுக்குத் தேவை அது தான். ஹீரோயினிடம் அவர் காதலைச் சொல்லும் வசனமே அதிரடியாக இருக்கும் : ”I’m asking you to marry me, you little fool!”

ஹிட்ச்காக் ஆடியன்ஸின் கவனத்தைக் கவர்வதற்கு உபயோகிக்கும் டெக்னிக், சஸ்பென்ஸ். ஆனால் இந்தப் படத்தின் முக்கால்பகுதி, ஹீரோயின் சைக்காலஜிகலாக எப்படி மிரள்கிறார், மிரட்டப்படுகிறார் என்றே விவரிக்கிறது. ரிபெக்கா கொலை பற்றிய காட்சிக்கு அப்புறம் தான், ஹீரோ தப்பிப்பாரா இல்லையா எனும் சஸ்பென்ஸ் ஆரம்பிக்கிறது. இறந்து போன ஒருவரால், தற்போது உயிரோடு இருக்கும் ஒருவரை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர முடியுமா எனும் கேள்வி, பின்னாளில் வந்த வெர்டிகோ மற்றும் சைக்கோவில் அலசப்பட்டது. இந்தப் படத்தில் அதற்கான விதையைக் காண முடிகிறது. இறந்து போன ரிபெக்கா, அந்த மாளிகையைவே ஆக்ரமித்து இருக்கிறாள். ரிபெக்காவின் பிடியில் இருந்து ஹீரோவும் ஹீரொயினும் விடுபட வேண்டுமென்றால், அந்த மாளிகை அழிவது தான் ஒரே வழி.

இத்தனைக்கும் ரிபெக்கா பேயாக எல்லாம் வருவதில்லை. ஆனால் அவளது வாழ்க்கை, அங்கே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறது. அங்கே இருக்கும் ஒவ்வொரு மனிதர்களும், ஒவ்வொரு செங்கல்லும் ரிபெக்காவின் பெயரை ஆச்சரியத்துடன் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

திரைக்கதையின் ஒரு முக்கியமான விதியை இந்தப் படத்தில் உடைத்தார் ஹிட்ச்காக்..அது பற்றி அடுத்த பதிவில்!

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக்: Rebecca (1940) - ஒரு அலசல்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.