Friday, October 2, 2015

புலி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
இரண்டாம் புலிகேசி தவிர்த்து வேறு ஒரு ஹிட் கொடுக்காத இயக்குநர் சிம்புதேவன். இருந்தும், விஜய் போன்ற பெரிய ஸ்டார் கால்ஷீட் கொடுக்கிறார் என்றால் கண்டிப்பாக இந்தப் படம் விஷேசமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு ஓப்பனிங் சாங், நாலு குத்துப்பாட்டு, அஞ்சு பஞ்ச் டயலாக் என்ற தனது கம்ஃபோர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, விஜய் ஒரு ஃபேண்டஸி படத்தில் நடிக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? பக்கத்து ஸ்டேட் ஆட்கள்கூட ‘புலி ரிலீஸாமே?’என்று கேட்டபோது, கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. ஸ்ரீதேவி, ஸ்ருதி, ஹன்சிகா,சுதீப்,நட்டி என டீம் ஆட்கள் பெயரும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால்.....!

ஒரு ஊர்ல :

ஒரு முன்னாள் ஹீரோயின் நாட்டை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம், நாட்டையே குட்டிச்சுவராக்குகிறது. ஆனாலும் ஆட்சி செய்பவருக்கு அது தெரிவதேயில்லை.

மக்களைப் போலவே விஜய்யையும் அதிகாரக்கூட்டம் சீண்டுகிறது. விஜய் புத்திசாலியல்லவா, தொப்பென்று ‘என்னை மன்னிச்சிருங்க..என்று காலில் விழுந்துவிடுகிறார். ஆனாலும் ரசிகர்களிடம் ‘புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்’ என்று சொல்கிறார்.

- சரிய்யா, அதெல்லாம் இருக்கட்டும். கதையைச் சொல்லச் சொன்னால், ஏன்யா நக்கீரன் மாதிரி எழுதறேன்னு கேட்கறீங்களா? அய்யா, படத்தோட கதையே இது தானுங்க. கடைசியில் அம்மாவிடம்..ச்சே..ஸ்ரீதேவியிடம் இருந்து தானே ஆட்சிப்பொறுப்பை ஏற்று, மக்களைக் காப்பாற்றுகிறார். ‘தளபதி’யும் கெட்டவர் என்று பேலன்ஸ் வேறு.

ரஜினிகூட மன்னன் படத்தில் சண்டி ராணியே என்று ஒரு பாட்டோடு முடித்துக்கொள்வார், படையப்பாவில் திமிர் பிடித்த பெண் என்று மட்டுமே காட்டினார். விஜய்க்கு உண்மையில் துணிச்சல் அதிகம் தான். விட்டு விலாசியிருக்கிறார். ’உனக்குத் தான் நாட்டுல என்ன நடக்குது, கூட இருக்கிறவன் என்ன செய்யிறான்னு தெரியலையே..மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி அலையறியே..பேசாமல் ஆட்சியை என்னிடம் கொடு’ என்று ரவுண்டு கட்டுகிறார். அப்புறம் வீடு தேடி ரெய்டு வராமல், அவார்டா வரும்?

உரிச்சா:
புலிகேசி தவிர்த்து மற்ற சிம்புதேவன் படங்கள் எல்லாமே அரைவேக்காடு தான். நல்ல ஒரு ஃபேண்டஸி கதையும் சில அட்டகாசமான சீன்களும் கிடைத்துவிட்டால், போதும் என்று ஷுட்டிங் கிளம்பிவிடுவார். இங்கேயும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த கதை தான். ஆனால் அதற்கு வைத்திருக்கும் சீன்கள் தான் கொடுமை.

ஒரு பெரிய ஹீரோ..அவருக்கு ஒரு ஓப்பனிங் சீன். வில்லன் ஆட்களை அடிக்க ஓடிவருகிறார்..தியேட்டரில் விசில்..ஓடிவந்தவர், அடியாள் காலில் விழுகிறார். காமெடியாம்! ஜில்லாவில்கூட தெறி மாஸாக இண்ட்ரோ சீன் இருக்கும். முதல் சீனிலேயே மைல்டாக டவுட் வந்துவிட்டது. அடுத்து ஸ்ருதியுடன் காதல் சீன்கள். ஆஹா..இப்படி ஒரு செத்த காதலை எங்கேயும் பார்க்கமுடியாது. சீன்களும் வசனங்களும் பொறுமையைச் சோதிக்கின்றன. ஸ்ருதியை வில்லன்கள் கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள். இது தான் கதையின் முக்கியமான சீன். ஆனால், அதைக்கூட காட்சியாகக் காட்டாமல் வசனத்திலேயே சொல்கிறார்கள்.

கடத்தப்பட்ட ஹீரோயினை மீட்க, ஹீரோ மேற்கொள்ளும் பயணம் தான் படத்தோட ப்ளாட்டே..அப்போ கடத்தற சீனும், அது ஹீரோவுக்கு தர்ற வலியும் எப்படி நமக்கு உறைக்கணும்? காமெடியன்ஸ் வந்து ‘அண்ணே...ஸ்ருதியை தூக்கிட்டாங்க’என்று ஒப்பிக்கிறார்கள். (ஒருவேளை இங்கே அந்த சீன் கட்டா?)

இப்படி முதல் அரைமணி(!) நேரத்தை பொறுத்துக்கொண்டால், ஒரு அழகான ‘குழந்தைகளுக்கான’ உலகம் விரிகிறது. சித்திரக்குள்ளர்கள், பெரிய பேசும் ஆமை, பேசும் பறவைகள், கரும்சிறுத்தையுடன் சண்டை(!) என்று அம்புலிமாமா கதைகள் போன்று அந்த பயணம் விரிகிறது. அதில் வரும் ஜோக்குகளுக்கு பெரிதாக சிரிப்பு வரவில்லையென்றாலும், தவளையை நக்கும் சீனுக்கு தியேட்டரில் செம வரவேற்பு. உண்மையில் குழந்தைகள் இந்த பகுதியை நன்றாகவே செஞ்சாய் செய்கிறார்கள். ஒரு அனிமேசன் படம் பார்த்தமாதிரி ஃபீலிங் அவர்களுக்கு வந்துவிடுகிறது. ஃபேண்டஸி கதை என்பதால், லாஜிக்கும் பிரச்சினை இல்லை. ஓரளவு நன்றாகவே போகிறது.

அப்படி போகலாமா? தப்பில்லையா? இப்போது விஜய்க்கு எப்போதும் இருக்கும் டைம் டூ ஓடு..ச்சே’டைம் டூ லீட்...நெக்ஸ்ட் சி.எம்’ ஆசை தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யணும்..கஷ்டப்படற மக்களுக்கு உதவணும்...மக்கள்லாம் ‘உன்னை மாதிரி ஒருத்தனைத் தான்யா தேடிக்கிட்டிருந்தேன்’ன்னு சொல்லணும்..அதுக்கு ஏத்தமாதிரி சீன்ஸ் வர ஆரம்பிக்கிறது. ‘கொடூர ராணி..பாதுகாப்பு நிறைந்த தேசம்..ராணியை ஆட்டுவிக்கும் தளபதி’ என்று கதைக்குள் மட்டுமே படம் நகர்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. ரஜினி ஸ்டைலில் பாலிடிக்ஸ் பஞ்ச்களை தூவி, நம்மை பஞ்சராக்குகிறார்கள்.

இப்போது தான் லிங்காவை ‘நீங்க பல வருசமா எங்களுக்காக தியாகம் பண்ணிட்டீங்க..போதும்’ன்னு அனுப்பி வச்சிருக்கோம். அதே ரஜினி ஸ்டைல்ல, அப்பா தியாகி-மகன் ஜாலி என்று ஃப்ளாஷ்பேக்கில் அப்பா விஜய்யை இறக்குகிறார்கள். நம் தலையில் இடி விழுகிறது. ஸ்ரீதேவி வேறு க்ளோசப்பில் வந்து மிரட்ட, என்ன தான் ஸ்ருதியும் ஹன்சியும் குலுக்கினாலும் நம்மால் நிமிர்ந்து உட்காரவே முடியவில்லை..செத்தாண்டா சேகர் தான்!

விஜய் மாதிரி ஒரு ஆக்சன் ஹீரோ, இப்படி ஒரு ஃபேண்டஸி கதையில் நடிக்க வந்தது பெரிய விஷயம். அதை சிம்புதேவன் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம். விஜய்யும் பாலிடிக்ஸ் பாசத்தை மறந்துவிட்டு நடித்திருக்கலாம்...க்கலாம்..லாம்..ம்.

படத்தை உட்கார முடியாத அளவிற்கு மொக்கை என்று சொல்ல முடியாது. ஆர்ட், ஒளிப்பதிவு, விஜய், ஹன்சிகா, சுதீப் என்று பல நல்ல விஷயங்கள் படத்தில் இருக்கின்றன. ஆனால் பரிமாறியதில் தான் பிரச்சினை!


விஜய்:
வழக்கம்போல் யூத்தாக, எனர்ஜியுடன் வருகிறார். அதிமுக-திமுக-விஜய் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மக்கள் ஒரு வெற்றியைக் கொடுத்தால், தாங்களே அதை கெடுத்துக்கொண்டு தோல்வியை வாங்கியே தீர்வார்கள். எப்போதெல்லாம் காதலுக்கு மரியாதை, கில்லி, துப்பாக்கி என்று நல்ல படங்கள் கொடுக்கிறாரோ, அப்போதெல்லாம் அரசியல் ஆசை துளிர்விட்டு நெஞ்சினிலே, சுறா, தலைவா என்று அணுகுண்டுகளை இறக்கிவிடுவார். நிஜத்தில் மட்டும் அரசியல் செய்துகொண்டு, சினிமாவில் இந்த வேலையை அவர் விடுவது அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது. ‘பதவி எனக்கு முக்கியமில்லை..உங்க சந்தோசம் தான் முக்கியம்’ என்று பேசும்போது தியேட்டரில் சிரிக்கிறார்கள். இது எம்.ஜி.ஆர் காலமல்ல சாரே!

ஸ்ருதி:
கவர்ச்சியை எப்போதாவது காட்டணும் அம்மணி..மரணப் படுக்கையில் கிடந்தாலும் கவர்ச்சியாத்தான் படுப்பேன்னு அடம்பிடிக்கிறது என்ன வகை கலைச்சேவையோ? ஏம்ப்பா, இந்த புள்ளைக்காகவா ஒருத்தரை பொடதில அடிச்சீங்க? அட, கூறுகெட்ட கூவைகளா!

ஹன்சிகா:
படத்தில் வேடப்பொருத்தம் கச்சிதமாக அமைந்திருப்பது இளவரசியாக வரும் இவருக்குத்தான். விஜய்யை காதலிக்கிறார், இரண்டு பாட்டுக்கு ஆடுகிறார். கிளைமாக்ஸில் அந்த லவ் என்ன ஆச்சு என்றே டைரக்டர் கவலைப்படவில்லை. அதுசரி, அவர் நம்மளைப் பற்றியே கவலைப்படலியே!

ஸ்ரீதேவி:
ஏன்யா, பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து கூட்டிவரும் அளவுக்கு ஒர்த் இல்லையே. ஒரு இஞ்சுக்கு மேக்கப் போட்டும், பயங்கரமா இருக்கிறார். இதில் க்ளோசப்பில் வில்லி சிரிப்பு வேறு..உங்களுக்கு வேணும்னா வாழ்வே மாயம், குரு படத்து சிடிகளை தர்றேன்யா..பழைய நினைப்புல கூட்டிட்டு வந்து, எங்களைக் கொல்லாதீங்க.

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- குழந்தைகளுக்கான படமே இப்போதெல்லாம் வருவதில்லை. அப்படியிருக்கும்போது, விஜய் மாதிரி ஹீரோவின் படம் குழந்தைகளைக் கவரும் வகையில் வருவது பாராட்டுக்குரியது. ஸ்ருதியின் ஆபாசத்தையும், கை/கழுத்தை வெட்டும் வன்முறையையும் தவிர்த்தால் இது ஒரு நல்ல, குழந்தைகளுக்கான மூவி.
- கலர்ஃபுல்லாக எப்போதும் ஸ்கீரினை வைத்திருக்கும் நட்டுவின் ஒளிப்பதிவு
- சிம்புதேவனின் ஸ்பெஷல்களில் ஒன்றான, நல்ல ஆர்ட் டைரக்சன்
- நெருப்பில் இருந்து விஜய் மீளும் சீன் + அந்த ட்விஸ்ட்
- ஃபேண்டஸியான கதையும் காட்சிகளும்..அந்த பயணத்தில் வரும் எல்லாமே கலக்கல்
- பாடல்கள்

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- முதல் அரைமணிநேரம்
- விஜய்யின் அரசியல் பஞ்ச்களும், சீன்களும்
- ஸ்ருதியின் முகம் சுளிக்க வைக்கும் கவர்ச்சி
- அந்த அப்பா கெட்டப்
- 'பாகுபலி வேறு..புலி வேறு. இரண்டையும் ஒப்பிடாதீர்கள்’என்று சிம்புதேவன் கடந்த ஒரு மாதமாக சொல்லிக்கொண்டிருந்தார். ’அவர் சொல்வதும் சரி தானே..பாகுபலி பட்ஜெட் பெரியது. எனவே கிராபிக்ஸில் அதே தரத்தை எதிர்பார்க்கக்கூடாது’ என்று நாமும் நினைத்திருந்தோம். ஆனால் சிம்புதேவன் புலம்பியது கிராபிக்ஸுக்காக அல்ல என்று இன்று தான் புரிந்தது.

ஹீரோவுக்கு அப்பா-மகன் என்று இரட்டை வேடம். அப்பா மக்களுக்காக நல்லது செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து செத்துப்போகிறார். பிறகு மகன் கேரக்டர் அதே இடத்திற்கு வருகிறார். - இது பாகுபலி, புலி இரண்டிலும் பொதுவான அம்சம்.

பாகுபலியில் மகனது முகமும் அப்பா முகம் போலவே இருப்பதால், அந்த நாட்டில் இருக்கும் படைவீரன், கூலிக்காரன் முதல் மன்னன்/வில்லன் வரை அனைவரும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

புலியில்.....? நாட்டுல ஒருத்தனுக்கும் ‘அடையாளம்’ தெரியலை..ஸ்ரீதேவிக்கு ’அப்பா விஜய்’ பிரதர். கூடப்பிறந்த மூஞ்சிகூடவா அந்த மூதேவி ராணிக்கு மறந்து போகும்? இல்லே, அந்த வில்லன் என்ன கேணயா? அவன் தான் அப்பனைக் கொன்னது. அவன் முன்னாடி அதே மூஞ்சி வந்து நிக்குது..ங்கொய்யால, இரண்டு மூஞ்சிக்கும் இடையில ஆறு வித்தியாசம்கூட கிடையாதேய்யா!

இப்போ புரியுதா, சிம்புதேவன் ஏன் நம்ம கால்ல விழாத குறையா பாகுபலியோட கம்பேர் பண்ணாதீங்கன்னு கெஞ்சுனாருன்னு!

பார்க்கலாமா?:

குழந்தைகளும் விஜய் ரசிகர்களும் பார்க்கலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. ரொம்பப் பெருசு... விமர்சனம்தான்...நீங்க பாட்டுக்கு ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க... அக்டோபர் முதல் வாரம் பூராவும் குழந்தைகளுக்கு லீவு என்று தெரிந்து சமயத்தில் படத்தை வெளியிட்டதில் சிம்புதேவன் வெற்றிக் கண்டுள்ளார்....மீண்டும் மீண்டும் இது போல பல படங்களை கொடுக்கணும்...கொஞ்சம் நஞ்சம் இருக்கும் வெறியர்களின் விசை முதல்வர் ஆசையை அழித்தொழிக்கணும்...செய்வீங்களா...செய்வீங்களா...

    ReplyDelete
  2. நானும் முதல்வர் ஆவேன் ஆசையில் தனக்குத்தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளும் விஐய் எப்போது திருந்தப் போகிறார்?

    ReplyDelete
  3. ஜனரஞ்சகமான ஓர் நடிகருக்கு இந்த அரசியல் ஆசை தேவையா? சிறப்பான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  4. கல கல விமர்சனம்! இந்த அரசியல் யாரை விட்டது? தங்கள் தளத்திற்கு புதியவன்! இனி தொடர்வேன்! நன்றி

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.