Sunday, October 4, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57

டிஸ்கி: ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக??) செல்வதாக கம்ப்ளைண்ட் செய்தார்கள். எனவே பிராக்டிகல்களை கொஞ்சம் பார்த்துவிட்டு, இடையில் அதைப் பற்றி எழுதுகிறேன்.
PART IV - திரைக்கதை ‘எழுதுவது’ எப்படி?

நம் தொடரில் இறுதிப் பாகம் இது. முதல் பாகத்தில் சில அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். அடுத்து ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட் பற்றிப் பார்த்தோம். மூன்றாவது ஜெனர் பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்த்தோம். இது களத்தில் இறங்கும் நேரம்.

PART IV-ல் தான் திரைக்கதை எழுதுவது பற்றி பார்க்கப் போகிறோம் என்றால், இதுவரை என்ன செய்துகொண்டிருந்தோம் என்ற கேள்வி வரலாம். ஒருவன் தான் திரைக்கதை எழுத வேண்டும் என்றால், இதுவரை பார்த்த விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். அடிப்படைகள் (Part-I & III) பற்றியும், வடிவம் (Part-II) பற்றியும் படிப்பறிவு அவசியம். காலேஜில் டிகிரி படிப்பது போன்றது தான் இதுவரை நாம் செய்தது. இப்போது அந்த படிப்பை செயல்படுத்திப் பார்க்கப்போகிறோம். இந்தப் பகுதியில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக, திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு தனியாக ஒரு நோட் புக்கை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது லேப்டாப்பில் தனி ஃபோல்டர் ஓப்பன் செய்துகொள்ளுங்கள். ரெடி, ஸ்டார்ட்!

பகுதி 57 : ஐடியா / கரு - நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா!

உங்கள் நோட் புக்கில் அல்லது வேர்டு ஃபைலில் முதலில் நீங்கள் கொடுக்க வேண்டிய தலைப்பு : ஐடியா அல்லது கரு & ஹை கான்செப்ட்


முதலில் பகுதி-2 ல் உள்ள ‘கரு உருவாவது எப்படி?’ என்பதை இன்னொருமுறை வாசித்துக்கொள்ளுங்கள். ஒரு திரைக்கதை ஆசிரியனாக இப்போதிருந்து மிகவு விழிப்புடன் வாழ வேண்டிய நேரம் ஆரம்பம் ஆகிறது. ஐம்புலன்களையும் ஐடியாவிற்காக ஆ-வென பிளந்து வைப்பது அவசியம்.

உங்கள் வாழ்வில் அல்லது தெரிந்தவர்களின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள், செய்திகளில் அல்லது கதைகளில் வரும் சுவாரஸ்யமான விஷயங்கள் போன்றவற்றை ஒரு மனிதனாக மட்டுமல்லாது ஒரு படைப்பாளியாகவும் அணுக வேண்டும். ஒரு ஆபரேசன் செய்யும் டாக்டர் எப்படி நோயாளியை ஒரு மெசின் போன்று அணுகுகிறாரோ அத்தகைய அணுகுமுறைகூட சில நேரங்களில் தேவைப்படும். ஆனால் டாக்டரின் நோக்கம் மற்றும் அவுட்புட் போன்றே நம்முடையதும் மனிதநேயத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

தமிழ் சினிமாவில் முக்கியமான படம், சேது. அந்த கருவினை தன் நண்பனின் வாழ்க்கையில் இருந்து எடுத்தார் பாலா. பாலியல் வறட்சி பற்றிய செல்வராகவனின் படங்கள், பெரும்பாலும் சொந்த அனுபவங்களே. கௌதம் மேனனின் காதல்கதைகள் அவரது சொந்த அனுபவத்தில் இருந்து வந்தவை.(ஒரே காதல் கதை தான்!!) புதுமைப்பித்தனின் சித்தி குறுநாவலைப் படித்த மகேந்திரனுக்கு உதிரிப்பூக்களுக்கான கரு கிடைத்தது. (ஆம், அந்த குறுநாவலுக்கும் படத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். ஆனாலும் கதை என்று புதுமைப்பித்தன் பெயருக்கு கிரெடிட் கொடுத்தார்).

எனக்குத் தெரிந்த ஒரு வயதான தம்பதி உண்டு. அந்த பாட்டி அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டவர். கடைக்குக் கிளம்பினால், தான் எங்கே போக கிளம்பினோம் என்று பாதி வழியிலேயே மறந்துவிடுவார். தாத்தா தான் அவரை பத்திரமாக பார்த்துக்கொண்டது. பாட்டி இறந்த அதே நாளில், தாத்தாவும் தற்கொலை செய்துகொண்டார். (பார்க்க: ஆத்தாவும் தாத்தாவும்  ). அதே போன்றே தமிழில் புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர், மனைவி இறந்த ஒரு மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார். சமீபத்தில் என்னுடைய பாட்டி ஒருவர் இறந்தார். அவரை அடக்கம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் தாத்தா சொன்னது ‘அவ்வளவு தான்ப்பா..இனி நம்ம வண்டி ரொம்ப நாள் ஓடாது’. அடுத்த ஏழாவது நாள், அவர் இயற்கை மரணம் அடைந்தார்.

’சமைக்கச் சொல்றான்..வேலைக்குப் போக மாட்டேங்கிறா’ என்றெல்லாம் டைவர்ஸுக்கு ஓடும் காலத்தில், இப்படியும் சில அப்பாவி ஜென்மங்கள். அவர்களை நினைத்து பெருமைப்படும் அதே நேரத்தில், அந்த அன்பு தான் நமக்கு கிடைக்கும் கரு. நான் நோட் செய்துவைத்திருந்தேன், இப்படி:

’ஆத்தாவும் தாத்தாவும் ஜோடி. அவர்களுக்கு ஒரு பையன். ஐ.டி.யில் வேலை செய்யும் அவனுக்கு ஒரு விளையாட்டுக் காதல் கல்யாணம், பிரச்சினையால் டைவர்ஸுக்கு அப்ளை செய்த நிலை. இந்த இரண்டு காதல்களுக்கு இடையே உள்ள வித்தியாசம்..............ஆத்தாவும் தாத்தாவும் சாவதால் வரும் கிளைமாக்ஸ் அதிர்ச்சி, அந்த முதிர்ச்சியற்ற ஜோடிக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று சொல்லித்தருகிறது.’

இனி இதை எடுக்க முடியாது, ஏனென்றால் மணிரத்னமே ஓகே..கண்மணியில் இந்த மேட்டரை உபயோகித்துவிட்டார். (அதனால் தானே, என் ஐடியாக்களில் இதை மட்டும் வெளியே சொல்கிறேன்!).

இன்னொரு உதாரணம்..

’பத்திரிக்கையாளர்களின் கார் ஆக்சிடெண்ட் ஆகி, ரோட்டில் நின்றது. அப்போது வந்த ஒரு அரசியல் தலைவர் நின்று உதவாமல் வேகமாகச் சென்றுவிட்டார்’ என்பது சமீபத்திய செய்தி. இது மற்றவர்களுக்கு வெறும் செய்தி. ஆனால் நமக்கு..?

ஒரு அரசியல் தலைவர் இரவில் காரில் செல்லும்போது ஒரு ஆக்சிடெண்ட்டைப் பார்க்கிறார். உதவுவதற்காக அருகே செல்கிறார். அந்த இன்சிடெண்ட், அவரது அரசியலுக்கே எமனாக மாறுகிறது.

எப்படி? - தெரியாது..நோட் பண்ணி வைப்பது தான் இப்போதைக்கு நம் வேலை. இது மலரலாம் அல்லது வாடிப் போகலாம்.

ஆக்சிடெண்ட் ஆனவுடன் உதவுவது போல் ஓடிவந்து திருடும் கும்பல் பற்றி வேறொரு நியூஸ் வந்தது. இதையும் மேலே சொன்ன செய்தியையும் இணைத்தால் :

ஒரு சாமானியனான ஹீரோ (அரசியல்வாதி அல்ல), உதவுவதற்காக ஒரு ஆக்சிடெண்ட் வண்டியை நோக்கிப் போகிறான். அப்போது வில்லன் கும்பலை அவன் எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அவனது மனிதநேயம், அவன் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. - இப்படியும் மாற்றலாம்.

ஒரு சம்பவம்..அதற்கு சம்பந்தமேயில்லாத மற்றொரு சம்பவம் அல்லது கேரக்டர்கள். இப்படி பல ஆப்சன்களை யோசிக்கும்போது, ஏதோவொன்று சட்டென்று க்ளிக் ஆகும்.
இப்போதைக்கு எழுதி வைக்கவும். அது ஏதோ ஒரு தருணத்தில்,பீறிட்டுக் கிளம்பும். ’இது இத்தனை நாளா தோணலியே’ என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

’இது தேறும்’ என்று நீங்கள் நம்புகிற விஷயங்களை தொடர்ந்து எழுதி வைக்கவும். ஒருமுறை நோட் பண்ணிவிட்டாலே, உள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். சில மாதங்கள் கழித்துப் பார்க்கும்போது, எவை தேறும் அல்லது தேறாது என்று தெரிந்துவிடும். இதில் வேதனையான விஷயம், அதே கருவினை வேறு யாராவது படமாக எடுத்துவிடலாம். சில பச்சப்புள்ளைகள் ‘அய்யோ..காப்பி..திருட்டு’ என்று அலறுவார்கள். நம்மைப் போன்றே வாழ்க்கையில் கதை தேடும் ஒருவர், அதே கருவினைக் கண்டடைவது ஆச்சரியமும் அல்ல, குற்றமும் அல்ல. (கூப்பிட்டு கதை கேட்டு, ஒன்லைனை மட்டும் திருடுவதோ அல்லது டிவிடி பார்த்து உருவுவதோ இதில் வராது. அது வன்மையாக தண்டிக்கப்படவேண்டிய விஷயங்கள்) கருக்கள் காலாவதியாவது சினிமாவில் சாதாரணம். காதல் கோட்டையை இன்று எடுக்க முடியாது. செல்ஃபோன் இல்லாத காலத்தில் மட்டுமே செல்லுபடியாகும் விஷயம் அது. எனவே சீக்கிரம் இந்த கருக்கள் வளர்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்த முக்கியமான விஷயம், ஹை கான்செப்ட்.

இதை தமிழில் ‘செம மேட்டர்(!)’ என்று சொல்லலாமா? ஒரு தயாரிப்பாளரோ அல்லது ஹீரோவோ கதை கேட்டதும், உடனே அட்வான்சை நீட்ட வைப்பது, இந்த ஹை கான்செப்ட் தான். தமிழில் எத்தனை ஆயிரம் காதல் படங்கள் வந்துள்ளனவோ தெரியாது. அவற்றின் கதை, இருவர் காதலிக்கிறார்கள்-சேர்கிறார்கள்/பிரிகிறார்கள். இந்த ஒரே கதைக்கு எப்படி இன்னும் தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்?

ஆக்சன் படம் என்றால், வில்லன் கெடுதல் செய்கிறான். ஹீரோ வில்லனை அழிக்கிறார் என்பது தான் கதை. ஆனால் இன்னும் நூறு வருடம் ஆனாலும், இதே கதையுடன் படங்கள் வந்து வெற்றிவாகை சூடவே செய்யும். ஏன்? ஒரு பழைய கதையை புதியதாக ஆக்குவது தான் ஹை-கான்செப்ட்.

இரண்டு பேர் காதலிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதே இல்லை. ‘பார்க்காமலேயே காதல்’. புதிதாக மாட்டிய செம மேட்டர். காதல் கோட்டை பிச்சுக்கிச்சு!

இரண்டு பேர் காதலிக்கிறார்கள், சேர்கிறார்கள். ஆனால் பெற்றோருக்கு துரோகம் செய்துவிட்டோமோ என்று மனசாட்சி உறுத்த, பிரிகிறார்கள். ‘பெற்றோருக்கு மரியாதை’ தான் இங்கே ஹை கான்செப்ட். காதலுக்கு மரியாதை ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆனது. பிறகு விதவிதமாக பெற்றோருக்கு மரியாதை செய்து, தமிழ் சினிமா நம்மை கதற வைத்தது.

இரண்டு பேர் காதலிக்கிறார்கள், பிரிகிறார்கள். ஹீரோ கல்யாணம் ஆன ஊர் பெரிய மனிதன், ஹீரோயின் தாழ்ந்த ஜாதி, வெளியூர்ப் பெண். ‘வாழ்க்கையே அமையாத ஒருவருக்கு வந்த காதல்’ தான் இங்கே ஹை கான்செப்ட்.

வில்லன் கெடுதல் செய்கிறான், ஹீரோ தடுத்து நிறுத்துகிறார். பழசு. தீவிரவாதி வில்லன் கெடுதல் செய்கிறான், ராணுவ வீரன் தடுத்து நிறுத்துகிறான். அரதப் பழசு. ஆனால் ‘ஸ்லீப்பர் செல்’ எனும் ஹை கான்செப்ட் சிக்கியதும், படம் தாறுமாறு.

பெரும்பாலான படங்கள் மொக்கையாக இருக்கக் காரணம், ஹை கான்செப்ட்டே இல்லாமல் பழைய கதையையே சொல்வதால் தான். ஹை கான்செப்ட் தான், ஒரு கதையை புதியதாகவும் சுவாரஸ்யமானதாகவும் ஆக்கும். அது இதுவரை சொல்லாத விஷயமாக அல்லது பழைய விஷயத்தையே புதிய கோணத்தில் அணுகியதாக இருக்கும். கேட்டவுடன், ‘செம மேட்டரை பிடிச்சுட்டான்யா’ என்று கதை கேட்டவருக்கு தோன்ற வைக்கும்.

திரைக்கதை எழுத ஆரம்பிக்கும்போது, நமக்கு உள்ள முதல் சவால், ஹை கான்செப்ட் எனப்படும் வித்தியாசமான கான்செப்ட் கிடைப்பது தான்.

சேதுவில் பாண்டி மடம் மேட்டர் நுழைக்கப்பட்டதும். ஒரு காதல் கதை, உணர்ச்சிகரமான காவியமாக ஆகிவிட்டது.
பழி வாங்குதல் கதைகளை நூற்றுக்கணக்கில் பார்த்துவிட்டோம். அதில் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்ற ஹை கான்செப்ட் சேர்ந்ததும், கஜினி (மெமண்டோ) எனும் செம த்ரில்லர் மூவி கிடைத்தது.

எல்லாப் படங்களிலுமே வித்தியாசமான கான்செப்ட் (என்று படக்குழு நம்பும்) ஒரு விஷயம் இருந்தே தீரும். இல்லையென்றால், கதை அரதப்பழசாகத் தெரியும்.
எனவே கான்செப்ட் பிடிப்பது ஒரு சவால். அது சிக்கிவிட்டால், அதைச் சுற்றி கேரக்டர்களையும் சம்பவங்களையும் அடுக்கிவிட முடியும். ஒரு நல்ல திரைக்கதை ஆரம்பிக்கும் புள்ளியே இது தான்.

மாசு(!) படத்திற்கும், அதன் ஒரிஜினல் படங்களாக சொல்லப்பட்ட படத்திற்கும் ஆதிமூலம், சிக்ஸ்த் சென்ஸ் படம் தான். ’இறந்தவர்கள் கண்ணுக்குத் தெரிந்தால்..ஹீரோவின் உதவியை அவர்கள் நாடினால்?’ எனும் புதுமையான பேய் கான்செப்ட்டுடன் வந்து, சிக்ஸ்த் சென்ஸ் பட்டையைக் கிளப்பியது.

ஆனால் இத்தகைய படங்கள் ஓடுவதற்குக் காரணம், கான்செப்ட் மட்டுமே அல்ல. அந்த கான்செப்ட்டை வைத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது மேட்டர். கஜினி ஓடியதற்கும், தாண்டவன் ஃப்ளாப் ஆனதிற்கும் அது தான் காரணம்.

ஹை கான்செப்ட் என்பது நல்ல ஒரு செட்டப்பைக் கொடுக்கும். அதை அடுத்து சுவராஸ்யமாக ஆக்குவது, கதை சொல்லும் விதமும் கதையின் முடிவும் தான். நான் சிகப்பு மனிதன், தாண்டவம், மாஸ் போன்றவை நல்ல ஹை கான்செப்ட் இருந்தும், தோல்வியடைந்த படங்கள். எனவே ஹை கான்செப்ட் சிக்கியதும், ரிலாக்ஸ் ஆகிவிடாதீர்கள்.

ஹை கான்செப்ட் என்பது நீங்கள் கதை எழுத ஆரம்பிக்க, கிடைக்கும் க்ரீன் சிக்னல். அவ்வளவு தான். அது இல்லாமல் நகரக்கூடாது. என்னிடம் யாராவது ‘பாஸ், என்கிட்டே ஒரு ஸ்க்ரிப்ட்/கதை இருக்கிறது’என்று சொன்னால், அதில் நான் முதலில் தேடுவது இந்த ஹை கான்செப்ட்டைத் தான். அது இல்லாமல், சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை.

எனவே தேடுங்கள்..கருவினையும், ஹை கான்செப்ட்டையும் வாழ்க்கையிலும் செய்திகளிலும் தேடுங்கள். அது சிக்கி விட்டதென்றால், அந்த கரு அடுத்த கட்டமான ’கதை’யை நோக்கி, நகரலாம்.

கரு மற்றும் ஹை கான்செப்ட் என குறைந்தது பத்து விஷயங்களையாவது கையில் வைத்திருக்க வேண்டும். இப்போது எழுத ஆரம்பியுங்கள்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. பல நுனுக்கங்கள் சொல்லி புதிய இயக்கம் செய்வோருக்கு ஆலோசனை வழிகாட்டல் ! புலிபோல முடியுது என்று வந்தால் தொடரும் என்று இன்னும் விளக்கம் தொடருரம் என்ற உங்க ஆசைக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. அப்படியே பதிவர் விழா பற்றி ஒரு பதிவையும் போட்டு பத்மினி குழுவை உசார் படுத்தங்க குருவே[[

    ReplyDelete
  3. அருமையான வழிகாட்டல் தொடர்! இனி தவறமாட்டேன்! தொடர்ந்துவருவேன்! நன்றி!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.