Sunday, October 25, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 61


61. எட்டு, எட்டா திரைக்கதையைப் பிரிச்சுக்கோ!

கதைச்சுருக்கத்தில் இருந்து பீட் சீட் எழுதிப் பார்த்துவிட்டீர்கள். ஒரு திரைக்கதைக்குத் தேவையான ஏற்ற, இறக்கங்கள் உங்கள் கதையில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டீர்கள். இனி திரைக்கதை எழுத ஆரம்பிக்கலாம். அதற்கு முந்தைய கடைசி ஸ்டெப், கதை வரிசை (சீகுவென்ஸ்).

இன்றைய திரைக்கதை வடிவத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை உருவாக்கியவர் சிட் ஃபீல்ட்.

ஆக்ட்-1 (ஆரம்பம்) - 30 பக்கங்கள்

ஆக்ட்-2 (பிரச்சினை) - 60 பக்கங்கள்

ஆக்ட்-3 (முடிவு) - 30 பக்கங்கள்

என ஒரு திரைக்கதை மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும் என்று வடிவமைத்தார். ஆனால் நடைமுறையில் மூன்று ஆக்ட் போதுமானதாக இல்லை என்பதை ஏற்கனவே பீட் ஷீட் பற்றிய விரிவான பகுதியில் பார்த்தோம்.

ப்ளேக் ஸ்னிடர், Pilar Alessandra போன்ற பல திரைக்கதை வல்லுநர்கள் திரைக்கதையை நான்கு ஆக்ட் கொண்டதாக பிரித்தார்கள். உங்கள் பீட் ஷீட்டையும் கீழே உள்ளபடி நான்காக பிரித்துக்கொள்ளுங்கள் :

ACT 1 - SET UP, CATALYST, DEBATE, BREAK INTO TWO (30 பக்கங்கள்)

ACT 2A - B STORY, FUN & GAMES, MID POINT (30 பக்கங்கள்)

ACT 2B - BAD GUYS CLOSE IN, ALL IS LOST, DARK NIGHT OF THE SOUL, BREAK INTO THREE (30 பக்கங்கள்)

ACT 3 - FINALE, FINAL IMAGE (30 பக்கங்கள்)

அடைப்புக்குறிக்குள் உள்ள பக்க எண்ணிக்கை ஒரு வழிகாட்டி மட்டும் தான். அதை இம்மிபிசகாமல் ஃபாலோ செய்ய வேண்டியதில்லை. பிசாசு படம் செட்டப்பே இல்லாமல் கேட்டலிஸ்ட்டில் துவங்கியது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே கதைக்குத் தேவையானபடி, பக்கங்கள் கூடலாம், குறையலாம். இப்போதெல்லாம் 100-110 பக்கங்களுக்குள் திரைக்கதையை முடித்துவிடுகிறார்கள். திரைக்கதையில் ஒரு பக்கம் என்பது படத்தில் ஒரு நிமிடம் என்று ஒரு கணக்கு உண்டு. 120 பக்க திரைக்கதையில் பாட்டு, சண்டை, பில்டப் ஸ்லோமோசன்(!) எல்லாம் சேர்ந்து இரண்டரை மணி நேரம் வந்துவிடும்.

 
திரைக்கதை என்பது ஒரு கதையை வெவ்வேறு நேரத்தில் சிறுசிறு தகவல்களாகச் சொல்வது தான். ஹிட்ச்காக்கின் பாம் தியரியில் இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம். எதை ஆடியன்ஸுக்கு முன்னால் சொல்வது, எதை பின்னர் சொல்வது எனும் ஜட்ஜ்மென்ட் தான் திரைக்கதையில் மிகவும் முக்கியம். கதைக்கு எப்படி க்ரியேட்டிவிட்டியோ, அதே போன்று திரைக்கதைக்கு இந்த ஜட்ஜ்மென்ட். வெற்றி பெற்ற படங்களை ஸ்டடி செய்யுங்கள் என்று நாம் சொல்வதற்கு அர்த்தம், இந்த ஜட்ஜ்மென்ட்டை அவர்கள் எப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பது தான்.

ஒவ்வொரு ஆக்ட்டும், ஒவ்வொரு சீகுவென்ஸும், ஒவ்வொரு சீனும் எதையோ ஆடியன்ஸுக்கு தெரியப்படுத்திகொண்டே இருக்கின்றன. ஒரு முழுக்கதையை பார்ட், பார்ட்டாக உடைத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ஆக்ட்-சீகுவென்ஸ்-சீனிலும் சொருகிப்பார்ப்பது தான் திரைக்கதை எழுதுவதில் உள்ள அதிசுவாரஸ்யமான விஷயம்.

மேலே குறிப்பிட்ட நான்கு ஆக்ட்களும் எதையோ ஆடியன்ஸிற்கு தெரிவிக்கின்றன.உங்கள் கதைக்கு அது என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். அதை சுருக்கமான தலைப்பாக மாற்றுங்கள். முழு திரைக்கதையை தவிர்த்து மற்ற குறிப்புகள் உங்களுக்கு மட்டும் புரிந்தால் போதும். துப்பாக்கி படத்திற்கு இப்படி வரும்:

Act-1: Personal life & Bomb blast

Act-2A: Capture of sleeper cell & killing

Act-2B: Villain's Reaction & Finding hero

Act-3: Hero to destroy villain

எப்போதுமே ஒரு வேலைக்கான டார்கெட்டை ஒரு பெரிய விஷயமாக வைக்காமல், சிறு சிறு டார்கெட்களாக வைத்துக்கொள்வது நல்லது. அது வேலையை எளிதாக்குவதோடு, சரியான நேரத்தில் சரியான தரத்துடன் சரியான அளவு வேலை முடிந்திருக்கிறதா என்று சரிபார்க்க உதவும். Project management, Planning போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

120 பக்கங்களுக்கு திரைக்கதை எழுத உட்கார்வதை விட, அதை சிறு சிறு பகுதிகளாக பிரித்து எழுத ஆரம்பிப்பது நல்லது. ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மட்டும் நம் கவனத்தைக் குவிக்கவும், கடைசியில் ஒரு தெளிவுடன் அனைத்தையும் சரிபார்க்கவும் இது உதவும். எனவே மேலே குறிப்பிட்ட நான்கு ஆக்ட்களை மேலும் உடைத்து, எட்டு வரிசைகளாக (Sequence) ஆக்கிக்கொள்ளுங்கள்.

Act-1 : Title

Sequence-1 : Opening Image, theme Stated, Set-up

Sequence-2 : Catalyst, Debate, Break Into Two

 
Act-2A: Title

Sequence-3 : B-Story, Fun & Games

Sequence-4 : Fun & Games, Mid Point

 
Act-2B: Title

Sequence-5: Bad Guys Close In

Sequence-6 : Fun & Games

 
Act-3: Title

Sequence-7 : All is Lost, Break Into Three

Sequence-8 : Finale, Final Image

உங்களுடைய பீட் ஷீட்டை இப்படி சீகுவென்ஸாக பிரிக்கும்போது தான், சில சீகுவென்ஸுக்கே நம்மிடம் சீன் இல்லை என்பது தெரியும். அதை இப்போதே டெவலப் செய்யுங்கள். எட்டு சீகுவென்ஸிலும் நடக்க, போதுமான சம்பவங்கள் உங்கள் கைவசம் இருக்க வேண்டும். இந்த நிலையில், உங்கள் கதைச்சுருக்கமானது முழுமையான கதையாக ஒரு நாவல் போன்று உங்கள் மனதில் விரிந்திருக்க வேண்டும். மிஸ் ஆகும் சீகுவென்ஸை  ஏ-ஸ்டோரியில் உள்ள எல்லா விஷயங்களையும் எழுதிவிட்டீர்கள். இன்னும் சில சீகுவென்ஸ் உதைக்கிறதென்றால், அதை நிரப்ப, பி-ஸ்டோரி உதவும்.

ஒரு படம் நகரும்போதே, கதையும் நகரவில்லை என்றால் ஆடியன்ஸ் கடுப்பாகிவிடுவார்கள். 'என்னடா நடக்குது இங்கே? சும்மா கூத்தடிக்கிறாங்க' எனும் விமர்சனம் தியேட்டரிலேயே எழுந்துவிடும். அலெக்ஸ்பாண்டியனின் முதல்பாதியும், பில்லா-2 & அஞ்சானின் இரண்டாம்பாதியும் கதையை ஒரு இஞ்ச் கூட நகர்த்தாமல் டைம் பாஸ் செய்தன. விளைவு, உங்களுக்கே தெரியும்.

குறிக்கோள் என்பது ஹீரோவுக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்று பார்த்தோம். அதே போன்று ஒவ்வொரு சீகுவென்ஸுக்கும் குறிக்கோள் முக்கியம். எதற்காக இந்த சீகுவென்ஸ், இதில் கதை பற்றிய எந்த தகவலை சொல்லப்போகிறோம், என்ன நடக்கப்போகிறது என்று ஒவ்வொரு சீகுவென்ஸுக்கும் ஒரு குறிப்பு ரெடி பண்ணுங்கள்:

ஒரு ஆக்ட்டில் என்ன நடக்க வேண்டும் என்று ஒரு தலைப்பு கொடுத்திருந்தீர்கள். இப்போது அதையும் ப்ளேக் ஸ்னிடரின் பீட்டையும் அடிப்படையாக வைத்து, கீழே உள்ளபடி சீகுனெவ்ஸுக்கு ஒரு குறிப்பு தயார் செய்யுங்கள்.

Act-1 : Title

Sequence-1 : Opening Image, theme Stated, Set-up

 

Goal : ----------------------- (இந்த சீகுவென்ஸின் குறிக்கோள் என்ன?)

Action:-------------------- (இதில் என்ன நடக்கிறது?)

Conflict: ------------------- (இதில் என்ன சிக்கல் வருகிறது)

 
மீண்டும் துப்பாக்கியை கையில் எடுப்போமா?

 
Act-1 : Personal life & Bomb blast

 

Sequence-1 :  (Opening Image, theme Stated, Set-up)

 

Goal : ----------------------- ஹிரோவின் பெர்சனல் (நார்மல்) லைஃபை காட்டுவது

Action:-------------------- பெண் பார்க்கப் போவது, நண்பனுடன் ஊர் உலா.

Conflict:  ஹீரோவுக்கு பெண் பிடிக்கவில்லை, ஹீரோயின் கடுப்பாகிறாள்.

ஹீரோ கேஸில் தலையிடுவது போலீஸ் நண்பனுக்குப் பிடிக்கவில்லை, நண்பன் கடுப்பாகிறான்.

 
ஹீரோ பெண் பார்க்கப்போனான், பிடித்திருந்தது, கல்யாண ஏற்பாடு என்பது தான் அனைவரும் எதிர்பார்ப்பாக இருக்க முடியும். பிடிக்கவில்லை எனும் முரண்பாடு தான் அந்த காட்சியை சுவாரஸ்யமாக ஆக்குகிறது. காஜல் அகர்வால் தான் அந்த படத்தின் ஹீரோயின் என்பது தியேட்டருக்குள் வரும் முன்பே ஆடியன்ஸுக்குத் தெரியும். அவரை விஜய் பிடிக்கவில்லை என்று சொல்வது தான் முரண்பாடு /சிக்கல். ஒரு நீண்ட பி-ஸ்டோரிக்கான  முரண்பாடு திறந்துவிடுகிறது.

ஹீரோ போலீஸ் கேஸில் இன்வால்வ் ஆவதை சத்யன் விரும்புவதில்லை. ஹீரோ ஒரு ராணுவவீரன் என்பது ஒரு தடை என்றால், நண்பனும்(போலீஸ்) ஒரு தடையாக இருக்கிறான். இந்த முரண்பாடு தான் ஏ-ஸ்டோரிக்கு அடிப்படை.

ஆக்சன், ஆக்டிவிட்டி இரண்டையும் செயல் என்ற பொருளில் தான் நாம் தமிழில் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் இரண்டுக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு.

ஒருவன் பைக்கில் போய்க்கொண்டு இருக்கிறான் - என்பது நோக்கம் இல்லாத செயல். இது ஆக்டிவிட்டி.

ஒருவன் பைக்கில் ஹாஸ்பிடலுக்குப் போகிறான் - என்பது நோக்கத்துடன் கூடிய செயல், இது ஆக்சன்.

அதாவது, கதையை கொஞ்சமேனும் நகர்த்தும் செயல் தான் ஆக்சன். அதை சுவாரஸ்யமாக ஆக்குவது முரண்பாடு. ஹீரோ ஆந்திரா போகிறான், அமெரிக்கா போகிறான் என்று கலர்ஃபுல்லாக காட்சிகளை அடுக்கினாலும், அது கதைக்கு உதவவில்லை என்றால் வீண் தான்.

ஒரு சீகுவென்ஸ் எதற்காக நடக்கிறது என்பதை கோல் சொல்லும்.

அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் என்ன நடக்கிறது என்பதை ஆக்சன் சொல்லும்.

அதில் சுவாரஸ்யம் இருக்கிறதா என்பதை முரண்பாடு/சிக்கல் சொல்லும்.

நீங்கள் திரைக்கதை தான் எழுதப்போகிறீர்களா அல்லது சும்மா கதை விடப்போகிறீர்களா என்று நீங்களே உங்களை செக் செய்துகொள்ள, இது உதவும்.

எனவே உங்கள் கதைக்கு எட்டு சீகுவென்ஸ் குறிப்புகளை கோல், ஆக்சன், முரண்பாட்டுடன் பிடியுங்கள். அதில் உள்ள ஆக்சன் & முரண்பாடு தான் அடுத்து நீங்கள் டெவலப் செய்யப்போகும் சீன்ஸ். 

ஒரு ஒன்லைன்

ஒரு கதை

மூன்று ஆக்ட்

பதினைந்து பீட்ஸ்

எட்டு சீகுவென்ஸ்

- ஆகியவற்றை டெவலப் செய்ததின் மூலம், உங்கள் கதையை நீங்களே அடித்துத் துவைத்து சரிசெய்துவிட்டீர்கள். சரியான கற்பனை வளமும், தெளிவான திட்டமிடலும், நேர்மையான சுயபரிசோதனையும் இருந்தால் திரைக்கதை உங்களுக்கு வசப்படும்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.