Thursday, December 30, 2010

திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்

டிஸ்கி: கதையல்ல நிஜம்.

நம்ம அதிரடிக்கார மச்சான் தன் தர்மபத்தினியுடன் கொடைக்கானலுக்கு ஹனிமூன் போயிருந்தபோது, சனியன் மாதிரி அறுவைக்கார நண்பன் ஒருவன் அவருக்கு ஃபோன் செய்தான். இவரும் எடுத்துப் பேசினார். அவன் போன கதை வந்த கதை என பேசிக்கொண்டேயிருந்தான்.

நம்ம அக்காவும் இவரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். மச்சானும் ’அறுக்கானே ’என நினைத்துக்கொண்டு, வாயை லேசாகக் கோணிக்கொண்டே உஷ்..உஷ்.. என மெதுவாக சொல்லிக்கொண்டேயிருந்தார்..அரை மணி நேர அறுவைக்குப் பின் ஒருவழியாய் ஃபோனைக் கீழே வைத்தார்.

உடனே அக்கா கேட்டார்:” ஏன் ஃபோன்ல பேசும்போது, வாயை வாயைக் கோணிக்கிறீங்க?”

மச்சானும் பெருமையாக “அவன் சரியான பிளேடும்மா!..யாராவது ஃபோன்ல பேசி ரொம்ப அறுத்தா அந்த மாதிரி வாயைக் கோணிப்பேன்..ஆமா, ஏன் கேட்கிறே?” என்றார்.

அவரது மனைவி கடுப்புடன் சொன்னார்:” இல்லே, நேத்து எங்கப்பா பேசும்போதும் இப்படித்தான் பண்ணீங்க..அதான் என்ன விவரம்னு கேட்டேன்”

“ஹே..அது..அதுவந்து..சும்மா..ஹி..ஹி..”

டம்..டும்..டமார்..

நீதி:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (644)

பொருள்:
கேட்பவரின் மனப்பான்மை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும். அதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை.

மேலும் வாசிக்க... "திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, December 26, 2010

வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)

1991ல் எங்கள் ஊரில் தம்பி வைகோ எனது போர்வாள்என கலைஞர் மேடையில் பேசியபோது கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அதிலிருந்து சரியாக இரு வருடங்கள் கழித்துவைகோ என்னைக் கொல்ல சதி செய்கிறார்என்று குற்றம் சாட்டினார் கலைஞர். வைகோவிற்கு ஆதரவாக 5 தொண்டர்கள் தீக்குளித்ததைத் தொடர்ந்து கலைஞரின் கதை-வசனத்தில் பொதுக்குழு நாடகங்கள் அரங்கேற, வைகோவும் அவரது ஆதரவாளர்களும் திமுகவிலிருந்து வெளியேற்றப் பட்டனர். 1994ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது.
மற்றொரு எம்.ஜி.ஆரை கலைஞர் உருவாக்கிவிட்டார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஏனென்றால் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையானவர் வைகோ. அவரது வீட்டிற்கு எந்தவொரு அப்பாயிண்மெண்டும் இல்லாமலேயே சென்று, அவரைச் சந்திக்க முடியும்; இப்போதும். மேலும் அவர் செல்லும் வழியில் யாரும் அவரது காரை நிறுத்தி உதவி கேட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தில் அடிபட்டுக் கிடந்தாலோ நேரடியாக களத்தில் இறங்கி உதவக் கூடியவர் வைகோ.

அப்போதைய அதிமுகவின் மோசமான ஆட்சி மீதிருந்த அதிருப்தியால், வைகோ எங்கு சென்றாலும் மக்கள் ஆதரவு கிட்டியது, கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் தேர்தலைச் சந்திக்கத் தயாரானது மதிமுக. அப்போதுதான் விதி மூப்பனார் வடிவில் விளையாடியது. டெல்லி மேல் அதிருப்தியான மூப்பனார் காங்கிரஸை உடைக்க, தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது. ரஜினிகாந்த்தின் ஆதரவுடன் களமிறங்கியது.

தமாகா மதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், இரு பலம் பொருந்திய புதிய கட்சிகள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். ஆனால் இரு கட்சிகளும் இணைய முடியாமைக்குக் காரணம் ராஜீவ்காந்தி கொலையும், ஈழ விஷயத்தில் வைகோவின் நிலைப்பாடும். அந்தத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் இணைந்து போட்டியிட்ட மதிமுக கடும் தோல்வியைத் தழுவியது.

தனியே போட்டியிடுவது தற்கொலை முயற்சி எனப் புரிந்ததாலும், பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதற்காகவும், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் வைகோ. எந்த ஜெயலலிதாவை எதிர்த்து நடைப் பயணமெல்லாம் மேற்கொண்டாரோ அவருடனேயே பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை அமைந்தது துரதிர்ஷ்டமே. அப்போதிருந்து வைகோவின் வீழ்ச்சி ஆரம்பமானது.

தொடர்ந்து தேர்தல் அரசியலில் பிழைத்திருக்க வேண்டுமென்றால் ஏதோவொரு பெரிய கட்சியுடன் கூட்டணி என்பது மதிமுகவிற்கு அத்தியாவசியமானது. அடுத்த வந்த தேர்தலில் திமுகவுடனேயே கூட்டணி வைத்து, தான் இன்னொரு அதிமுக அல்ல பா.ம.க. மட்டுமே என வாக்காளப் பெருமக்களுக்கு மதிமுக தெளிவாக உணர்த்தியது. அதன்பிறகு மதிமுக ஒரு மாற்று சக்தி என்ற எண்ணமே மக்கள் மனதில் இருந்து அழிந்துபோனது.

தற்பொழுது மதிமுக அதிமுகவின் கூட்டணியில்.அதிமுகவிற்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு நல்ல பேச்சாளர் இல்லையென்பதால், வைகோ தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் உதவிகரமாக இருப்பார். இருந்தும், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவை விட ராமதாஸிற்கே அதிக முக்கியத்துவமும் சீட்டும் கொடுத்தார் ஜெ. ஆனால் ஜெயித்ததென்னவோ மதிமுக தான்.


மதிமுகவிற்கு தற்போதைய சிக்கல் விஜயகாந்த் தான். மதிமுகவின் வாக்கு வங்கியான நாயக்கர் இன வோட்டுகளை விஜயகாந்த் பங்கு போடுகிறார். நாயக்கர் இன இளைஞர்கள் விஜயகாந்த் கொடுக்கும் ஆட்சிக் கனவால் அவர் பக்கம் ஈர்க்கப் படுகின்றனர்.கடந்த தேர்தலில் விஜயகாந்த் அதிமுக வோட்டுகள் அளவிற்கு மதிமுக ஓட்டுகளையும் பிரித்தார். அதனாலேயே இப்போது ஜெ. விஜயகாந்த்தை வளைக்கின்றார்.

அதிமுகவுடன் கூட்டணி சேர காங்கிரஸும் ஓரளவு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸும் தேமுதிகவும் ஜெ. பக்கம் வந்துவிட்டால், அங்கு வைகோவிற்கான தேவை இருக்குமா என்பதே சந்தேகம்.  வருகின்ற தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழலும், ஈழத் தமிழர் பிரச்சினையயும் பற்றியே வைகோ முழங்குவார். வைகோவின் இருப்பு காங்கிரஸை சங்கடப்படுத்தவே செய்யும்.

அதையும் மீறி வைகோ அங்கு இருந்தாலும் சொற்ப சீட்டுகளைக் கொடுத்து அவமானப்படுத்தவும் ஜெ. தயங்க மாட்டார். காங்கிரஸ் வராமல் தேமுதிக மட்டும் வந்தால் ஓரளவு மரியாதையான சீட்டுகளை வைகோ எதிர்பார்க்கலாம். விஜயகாந்த்தை விட அதிக சீட்டுகளை ஜெ.யிடமிருந்து வைகோ பெற முடியுமா என்பதும் சந்தேகமே. இல்லையென்றால், இருக்கவே இருக்கிறார் ’அண்ணன்’ கலைஞர்(!). 


ஒரு மனித நேயமிக்க தலைவர் தேர்தல் அரசியலில் பகடைக் காயாய் ஆகிப்போனது மிகவும் கவலை தரக்கூடிய விஷயமே.

ஆட்சியைப் பிடிப்பதும் அதிகாரத்தில் அமர்வதுமே ஒரு கட்சியின்/தலைவரின் வெற்றி எனக் கொண்டால் வைகோவின் அரசியல் படு தோல்வியே. ஆனால், எத்தகு இடர்ப்பாடு வந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிற்பதுதான் வெற்றி என்றால் வைகோ வெற்றியாளரே.


தொடர்வது :சீமானும் சீமானின் தாத்தாக்களும்(தேர்தல் ஸ்பெஷல்)
மேலும் வாசிக்க... "வைகோவும் மதிமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

கமலஹாசன் கே.எஸ்.ரவிக்குமார் வெற்றிக் கூட்டணியின் ஐந்தாவது படம். உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதாலும் கடைசி நேரத்தில் ஜெமினி சர்க்யூட்டிற்கு படத்தைக் கைமாற்றி விட்டதாலும் ஒரு கலவையான எதிர்பார்ப்பு கொண்ட படம்.



மதனகோபால்(மாதவன்)க்கு தன் காதலியான நடிகை நிஷா என்ற அம்பு (த்ரிஷா)வின் நடத்தை மேல் சந்தேகம். எனவே சொகுசுக் கப்பல்-டூரில் இருக்கும் அம்புவை வேவு பார்க்க மன்னார்(கமல்) என்ற டிடெக்டிவ்வை மாதவன் அனுப்புகிறார். கமலும் துப்பறிந்து திரிஷா தவறாக எதுவும் செய்யவில்லை என சொல்ல, ’அதான் எதுவும் நடக்கலையே..அப்புறம் ஏன் உனக்கு காசு கொடுக்கணும் என்கிறார் மாதவன். இதனால் கடுப்பாகும் கமல் த்ரிஷாவிற்கு ரகசியக்காதலன் இருப்பதாகப் புருடா விடுவதில் ஆரம்பிக்கும் குழப்பங்களே கதை. கடைசியில் திரிஷா தன்னைச் சந்தேகப்படும் மாதவனைக் கைப்பிடித்தாரா அல்லது வேவு பார்ர்க்க வந்த கமலைக் கைப்பிடித்தாரா என்பதை வெண்திரையில் காண்க.

முதல் பாதியில் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை மிகப்பெரும் பலவீனம். இரண்டாம் பாதியில் படம் ஓரளவு விறுவிறுப்பாகவே போகிறது. கடைசி 20 நிமிடங்கள் கமலின் ஃபேவரிட்டான (மிகவும் சுமாரான) ஆள் மாறாட்டக் காமெடியோடு படம் முடிகிறது. அவ என்ன NOன்றது?” “என்னது, அவ உன்னை நோண்டுனாளாஎன ஒரு சில இடங்களில் டைமிங் காமெடி சிரிக்க வைத்தாலும். கிரேஸி மோகன் அளவிற்கு கமலின் வசனங்கள் சிரிப்பு வரவழைக்கவில்லை.

தன் வயதிற்கேற்ற கேரக்டரை தேர்ந்தெடுப்பதற்கு கமலுக்கு பாராட்டுகள். எக்ஸ்-ஆர்மி மேனாக கனகச்சிதமாகப் பொருந்துகிறார். நண்பனின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சூப்பர் ஆக்டர் என்பதை நிரூபிக்கிறார். த்ரிஷா அம்மையாருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். க்ளோஸ்-அப் பயமுறுத்தினாலும் நன்றாக நடித்திருக்கிறார்.

மாதவனும் த்ரிஷாவின் தோழியாக வரும் சங்கீதாவும் கிடைக்கிற சான்ஸில் ஸ்கோர் செய்கிறார்கள். மாதவனின் அம்மாவாக வரும் உஷா உதூப் பொருத்தமான தேர்வு. காமெடி என்ற பெயரில் மலையாள ஜோடிகள் செய்யும் ஓவர் ஆக்டிங் எரிச்சலை மூட்டுகிறது. பஞ்சதந்திரம் போல் இல்லாமல், உன்னைப் போல் ஒருவனைப் போன்றே இதிலும் மற்றவர்களை கமல் நடிக்க விட்டிருப்பது ஆறுதல்.

நான் கப்பல் கட்டும் தளத்தில் டிசைன் எஞ்சினியராகப் பணியாற்றியிருக்கிறேன். சில பகுதிகளை டிசைன் செய்துமிருக்கிறேன். எனவே சொகுசுக் கப்பலான  MSC Cruise-ஐ ஐ திரையில் காண மிகவும் ஆவலாய் இருந்தேன். மனுஷ் நந்தனின் கேமரா அவ்வளவு அழகாகக் காட்டுகிறது கப்பலை. இது கப்பலா..லாஸ் வேகாஸ் நகரமா என பிரமிக்க வைக்கும் அழகு. மெயின் டெக் (மேல் தளம்)-லேயே காட்சிகளை எடுத்து ஒப்பேற்றாமல் உள்ளுக்குள்ளும் புகுந்து விளையாடுகிறது நந்தனின் கேமரா. காஸ்ட்லியான இந்தக் கப்பலை பரிந்துரைத்த உதயநிதிக்கு சபாஷ்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் தெலுங்கு வாடை மிஸ்ஸிங்.அதனாலோ என்னவோ இரண்டு பாடல்களே தேறுகின்றன. எவ்வளவு பெரிய கூட்டத்தையும் கட்டிமேய்ப்பதில் வல்லவர் கே.எஸ்.ரவிக்குமார். இதிலும் அப்படியே.

கமலின் ஃப்ளாஷ்பேக்கை முழுக்க முழுக்க ரிவர்ஸில் எடுத்திருக்கிறார்கள். ஒரு பாடல் முழுக்க வாயசைப்பு ஃபார்வர்டில் இருக்க, காட்சிகள் ரிவர்ஸில் வருவது மிகவும் அழகு. கமலின் டச் இந்தக் காட்சிகளில் நன்றாகத் தெரிகிறது. மொத்த டீமும் இந்தப் பாடலுக்கு நன்றாக உழைத்திருக்கிறார்கள்.

காமெடிப்படம் என்ற எதிர்பார்ப்பில் வந்திருந்த சிலர் ஏமாற்றமடைந்து கத்திக்கொண்டிருந்தனர். இந்தப் படம் மெதுவாக நகரும் ஒரு ஃபீல்-குட் வகைப் படம். அவ்வை சண்முகி வரிசையில் வரும் காமெடிப் படமல்ல. அந்நிய நாடு, நடிகை, டிடெக்டிவ் என்பது போன்ற விஷயங்கள் முதல் பாதியில் ஒரு அந்நியத்தன்மையைக் கொடுப்பதும் படத்திற்கு மைனஸ் பாயிண்ட்.

மன்மதன் அம்பு இலக்கை மிக மெதுவாகத் தாக்குகிறது.

மேலும் வாசிக்க... "மன்மதன் அம்பு - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

30 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, December 20, 2010

ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்

புதிய வலைப்பதிவரா நீங்கள் அல்லது ஏதோவொரு ஆர்வத்துல கடையைத் திறந்துட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறவரா நீங்கள்?..அப்போ நீங்க நம்ம ஆளு..வாங்க..வாங்க!

எப்படி நம்ம வலைப்பூவை மணக்க வைப்பதுன்னு தீவிரமா முடி உதிர யோசிச்சு 7 மேட்டரை தேத்தியிருக்கேன்..அவை என்னன்னு ஒன்னொன்னாப் பார்ப்போமா!

1.தலைப்பு: 
ஒய்யாரக் கொண்டையாம், உள்ளார ஈறும் பேனுமாம்னு கேள்விப்பட்டிருப்பீங்களே. அந்த ஒய்யாரக் கொண்டைதான் பதிவோட தலைப்பு....உதாரணமாக’ ”வயசுக்கு வந்த பாட்டிஎனத் தலைப்பிடுங்கள். பதிவிற்குள்  கடந்த ஒரு வருடமாக 79 வயசிலேயே இருந்த என் பாட்டி இன்று 80வது வயசுக்கு வந்தார். அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்என மொக்கை போடுங்கள்.

2. பயணம் செய்யுங்கள்:

நீங்கள் சென்னைவாசி என்றால் கன்யாகுமரிக்கும், கன்யாகுமரிக்காரர் என்றால் சென்னைக்கும் ஒரு அப்பர் பர்த் டிக்கெட் வாங்கி ரயிலேறி, விடியும்வரை தூங்காமல், என்ன நடக்கிறதெனக் கவனியுங்கள். நிச்சயம் உங்களுக்கு பதிவில் எழுதக்கூடிய ஒரு மேட்டரோ அல்லது எழுதமுடியாத ஒரு மேட்டரோசிக்கும். இரண்டில் எது கிடைத்தாலும் சந்தோசமே!


அடுத்து பகலில் அதே ரயிலில் பயணம் செய்யுங்கள். நம்ம நேரத்துக்கு எப்படியும் அந்த கோச்சில் சப்பை ஃபிகர்கூட இல்லாமல் சக்கையாய் ஆன பாட்டிதான் வரும்..மனதைத் தளரவிடாமல் பேச்சுக்கொடுங்கள். உதாரணமாக..
உங்க வீட்டுக்காரர் என்ன செய்கிறார்?”

ம்ஹூம்..அந்த மனுசன் இருந்தா நான் ஏன் இப்படி சீரழியிறேன்!

உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது?”

பெருசா ஒன்னும் பிரச்சினையில்லை..ஏறும்போதும் இறங்கும்போதும்தான் ரொம்ப மூச்சு வாங்குதுஇதே ரீதியில் வளவளவென பேசிக்கொண்டேயிருங்கள். வீட்டிற்கு வந்ததும் அந்த பேச்சு முழுவதையும் டைப் பண்ணுங்கள். இதை அப்படியே பதிவேற்றினால், இப்போது இருப்பதை விடவும் கேவலமான நிலைமைக்கு நம் ப்ளாக் போய்விடும். எனவே பாட்டிஎன வரும் இடத்தையெல்லாம் விலைமாதுஎன மாற்றுங்கள்.விலைமாதுடன் ஒரு பயணம்எனத் தலைப்பிடுங்கள்..இப்போது படித்துப்பாருங்கள்..சூடான பதிவு தயார்.


3.சினிமா செய்திகள்: 
உங்கள் தெருவில் சாக்கடை அடைத்ததைப் பற்றி எழுதும் சமூக அக்கறை எதுவும் இருந்தால், அதை அந்த சாக்கடைக் குழியிலேயே புதைத்துவிடுங்கள்..தமிழனின் உயிர்மூச்சான சினிமாவைப் பற்றி எழுதவில்லையென்றால் நீங்கள் பதிவெழுத வந்ததே வேஸ்ட்சினிமாத்துறையில் நண்பர்கள் இல்லையே, நான் வெளிநாட்டில் வாழ்கிறேனே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள்..குமுதம்/விகடன்/தினத்தந்தி படியுங்கள்..அதில் வரும் செய்தியையே கிசுகிசுவாக எழுதுங்கள்.
உதாரணமாக வானம் சூட்டிங்கில் சிம்புவுக்கும் இயக்குனருக்கும் தகராறுஎன படித்தால் அதை விரல் நடிகர் தற்போது நடிக்கும் படத்தின் இயக்குனரை டார்ச்சர் செய்தாராம்..இயக்குனர் ஓடிவிட்டாராம்என எழுதுங்கள்..நம் மக்கள் அதையும் படிப்பார்கள்..சலிக்காமல் இதையும் படிப்பார்கள்..இந்த சிம்பு பற்றிய கிசுகிசுவில் இருக்கும் ஒரு வசதி என்னவென்றால் இதையே 3 மாத்திற்கு ஒருமுறை மீண்டும் மாற்றாமல் வெளியிடலாம்!

4. சினிமா விமர்சனம்: 
படம் வெளியாகி 3 நாட்கள் கழித்துப் பார்க்கும் சோம்பேறியா நீங்கள்..ரொம்ப கஷ்டம்ங்க..படம் வெளியான அன்றே பாருங்கள்..அல்லது ப்ரிவியூ ஷோ பார்க்க முடிந்தால் மிகவும் நல்லது..நீங்கள் ஒரு வெட்டி ஆபீசர் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டை ஒரு மாதம் தொடர்ந்து வேடிக்கை பார்த்து கதையை மோப்பம் பிடித்து விமர்சனம் எழுதுங்கள். ஆர்வக்கோளாறில் ஷூட்டிங் ஆரம்பிக்காத படத்திற்கு விமர்சனம் எழுதுவதைத் தவிர்க்கவும். 
விமர்சனத்திற்கு இடையே ஹீரோவின் மூஞ்சியைப் போடாமல் ஹீரோயின் படத்தைப் போடுங்கள்.(கிளிவேஜ் முக்கியம் அமைச்சரே!)
எச்சரிக்கை: ஈசன் -விமர்சனம்

5.ஜாதி:
தமிழ்கூறும் நல்லுலகில் பல நூறு ஜாதிகள் இருந்தாலும் பதிவுலகில் அப்படியில்லை...........................எல்லோரும் டீசண்ட் பீப்பிள் என அவசரப்பட்டு நினைத்துவிடாதீர்கள்..இங்கு ஜாதி மேல்மட்டம், கீழ்மட்டம் என இரு மட்டங்களில் உள்ளது. மேல்மட்டத்தில் இருப்பது பிராமணர்-பிராமணர் அல்லாதோர் என இரண்டு ஜாதிகளே. 
நீங்கள் பிராமணர் என்றால் ஷங்கர்-மணிரத்னம்-கமல் படங்களை தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தும் முயற்சிஎன எழுதுங்கள்.ஜெயலலிதாவின் துணிச்சலையும் நரேந்திரமோடியால் குஜராத் வளர்ச்சி அடைவதையும் சோவின் புத்திசாலித்தனத்தையும் பாராட்டுவது அதிக கூட்டத்தை உங்கள் பதிவின் பக்கம் கூட்டும்; உங்களைப் பாராட்டவோ/திட்டவோ. திடீரென்று ஏதாவது நல்ல பதிவு எழுதத் தோன்றினால் பகவத் கீதை, காயத்ரி மந்திரம் போன்றவைகளுக்கு தமிழில் விளக்கமும் சொல்லலாம்..


நீங்கள் பிராமணரல்லதோர் பிரிவென்றால் ஷங்கர்-மணிரத்னம் கமல் படங்களை ஆரியக் கொழுப்புஎன்றும் துருத்தித் தெரியும் உச்சிக்குடுமிஎன்றும் வசை பாடுங்கள். கருணாநிதி-வீரமணி போன்றோர் என்ன செய்தாலும் தயங்காமல் பாராட்டுங்கள்..உருப்படியாய் ஏதாவது செய்யத் தோன்றினால் இடையிடையே தந்தை பெரியாரின் பேச்சு/கட்டுரைகளை வெளியிடுவதும் நலமே.

மேலே சொன்னதில் திருப்தி அடையாத மாவீரர் நீங்கள் என்றால் கேவலமாக அதற்கும் கீழே இறங்கலாம். கீழ்மட்டத்தில் உள்ள ஜாதிப் பிரிவுகள் நம் சமூகத்தைப் போலவே சிக்கலானவை..வேண்டுமென்றால் இரு பெரும் பிரிவுகளாகச் சொல்லலாம். முதல் பிரிவில் அய்யர்-அய்யங்கார்-வடகலை-தென்கலை-சைவம்-வைணவம் என பிரிந்து அடித்துகொள்ளலாம். இரண்டாவது பிரிவில் நாயக்கர்-வன்னியர்-தேவர்-முதலியார்-நாடார்-தேவேந்திரர்-செட்டியார் (கவனிக்க: இது தர வரிசையல்ல!)-மற்றும் உங்கள் அபிமான ஜாதிகள் எனப் பிரிந்து அடித்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை: இதில் இறங்கினீர்கள் என்றால் மனநிலை பாதிக்கப்படவோ, பதிவுலகை விட்டு ஓடவோ நேரிடலாம். அது உங்கள் மனதிடத்தைப் பொறுத்தது.


6.வம்பு:
இது மிகவும் எளிய, ஜாலியான வழி. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஜெயமோகன் அல்லது சாருநிவேதிதாவைத் திட்டி ஒரு பதிவிடுங்கள்..அதை அவர்களுக்கே மின்னஞ்சலில் அனுப்புவதும் சீக்கிரம் பிரபலமாவதற்கு உதவும். பெரும்பான்மையான ஜெயமோகன் வாசகர்கள் மந்திரித்து விட்டது போல் சிவனேயென்று திரியும் சித்தர்கள்..நீங்கள் எழுதும் எளிய நடை அவர்களுக்குப் புரிவதும் சிக்கலே..அதனால் பெரிய ரெஸ்பான்ஸை எதிர்பார்க்க முடியாது..
எனவே சாருவைக் கும்முவதே நல்லது. சாரு விசயத்தில் உள்ள வசதி என்னவென்றால் ரஜினி ரசிகர்கள்-கமல் ரசிகர்கள் போன்ற எதிரெதிர் துருவங்கள் கூட உங்களுக்கு ஆதரவை வாரி வழங்குவார்கள்..எப்படியும் 98% மக்களின் ஆதரவு கிடைக்கும்.

எச்சரிக்கை: திடீரென்று சாருவே அம்மி ரிடர்ன்ஸ்எழுதி, உங்களை நாறடிக்கலாம்.


7.மேலே சொன்ன எதையும் செய்ய மனத் தெம்பு இல்லையென்றால் நீங்களும்  ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்என மொக்கை போடுங்கள். நான் வெளியிலிருந்து முழுஆதரவு கொடுக்கிறேன்.

டிஸ்கி: இந்த பதிவை நீங்கள் சீரியஸாய் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!

மேலும் வாசிக்க... "ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, December 19, 2010

அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்

டிஸ்கி : கதையல்ல நிஜம்.


நள்ளிரவில் திருநெல்வெலி பஸ் ஸ்டாண்டில் நானும் என் அதிரடிக்கார மச்சானும் நின்றிருந்தோம். மச்சான் விட்ட ஏப்பத்தில் பீர் வாசம் தெரிந்தது. கூட்டமேயில்லா மதுரை பஸ் வர ஏறி அமர்ந்தோம்.
பஸ் கிளம்பி திருநெல்வேலியை தாண்டியவுடன், பீர் தன் வேலையை காட்டியது. ஏய் மாப்ளே, ஒண்ணுக்கு முட்டுதுலேஎன அலறினார் அதிரடிக்கார மச்சான். இந்த கருமத்தை குடிக்காதீரும்னா கேட்டீரா? செத்த நெரம் பொறுத்துக்கோரும்என்றேன்.


இதை எப்படிலே பொறுக்க முடியும்?" என புலம்பினார் மச்சான்.

பஸ் வேகம் பிடித்தது. அடுத்து 10 நிமிடம் பொறுத்துப் பார்த்த மச்சான் மறுபடி அலறினார். ஏலே மாப்ளே, கண்டக்டர் கிட்டே அடுத்து பஸ் எங்கன நிக்கும்னு கேளுலே


மெதுவாக நடந்து டிரைவரின் அருகில் அமர்ந்திருந்த தடித்த, மீசைக்கார கண்டக்டரிடம்,”அடுத்த ஸ்டாப் எப்போ வரும் அண்ணாச்சி?” என்றேன்.


அடுத்த ஸ்டாப்பு கோவில்பட்டி, அதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கேஎன்றார் கண்டக்டர்.


என்னது ஒருமணி நேரமா?..செத்தேன் நான்..மாப்ளே, போர்க்களத்துலயோ நோயிலயோ செத்தா பரவாயில்ல..இதுல செத்தா நம்ம பயக வம்ச வம்சமா பேசி  நாறடிச்சிருவாங்கலேமச்சான் கதறினார்.

அப்போதுதான் எனக்கு அந்த ஐடியா தோன்றியது.

மச்சான், சிப்ஸ் பாக்கட் ஒன்னு மிச்சம் இருக்கில்லெ..அதை எடுத்து சிப்ஸை கீழ கொட்டுங்க

கொட்டீட்டு?”

அதுல அடிச்சு, தூரப்போட்டுருங்க


மச்சான் முகத்தில் பல்பு எறிந்தது. சூப்பர் ஐடியாலே, திரும்பிக்கோலேஎன்றபடி காரியத்தில் இறங்கினார்.


வளைந்து, நெளிந்து பலவித சர்க்கஸ் வித்தைகளை காட்டியபடி சிந்தாமல் சிதறாமல் பாக்கட்டை நிரப்பினார்.


ஜன்னலைத் திறந்து, முகம் கொள்ளா சிரிப்புடன் வெளியே எறிந்தார்..அவர் எறிவதற்கும் பஸ் ஒரு வளைவில் திரும்பவும் சரியாக இருந்தது. திரும்பிய பஸ்ஸை, டிரைவர் சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தினார்.


மாப்ளே, டிரைவர்மேல கண்டு பட்டுடிச்சாபேயறைந்த முகத்துடன் மச்சான் கேட்டார். 

மீசைக்கார கண்டக்டர் எழுந்து எங்களை நோக்கி வந்தவர், தன் பருத்த கையை என் எதிரில் இருந்த சீட் கம்பிமேல் போட்டபடியே சொன்னார்:
பஸ் அஞ்சு நிமிசம் நிக்கும்..ஒன்னுக்கு கின்னுக்கு போறவங்க போய்ட்டு வந்துருங்க



மேலும் வாசிக்க... "அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 17, 2010

ஈசன் – விமர்சனம்

டிஸ்கி-1 : வேணும்..எனக்கு நல்லா வேணும்...பதிவர் ஆயிட்டமே..படம் பார்த்து நம்ம மக்களுக்கு படத்தைப் பத்தி நம்ம கருத்தைச் சொல்லுவோம்னு சசிகுமாரை நம்பி போனேன் பாருங்க..எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்..இப்பதான்யா நம்ம அண்ணாச்சிகளான கேபிளார், உண்மைத்தமிழன், ஜாக்கி அருமையெல்லாம் தெரியுது..எவ்வளவு மொக்கை படத்தில இருந்து காப்பாத்தியிருக்காங்க..அவங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாதுங்க..அய்யா, ராசாக்களா..உங்களுக்கு கல்யாணம் ஆயிருந்தாலும் சரி..ஆகாட்டியும் சரி..நீங்க நிறைய குழந்தைகளைப் பெத்துகிட்டு, புள்ளை குட்டிகளோட சந்தோசமா இருக்கணும்யா..பதிவரா இருக்குறது இவ்வளவு டேஞ்சரான விசயமா?..யப்பா..முருகா!

 ”(படத்திலும்) வாய் பேச முடியாத அக்கா அபினயாவை சில மேல்தட்டு பப் கலாச்சார மைனர்கள் கெடுத்துவிட, தம்பி ஈசன் அவர்களை பழிக்குப் பழி வாங்குகிறார்” இது தாங்க கதை! நல்லாத் தானே இருக்கு..இது நமக்குப் பழக்கமான கதைதானேன்னு நினைக்கிறீங்களா...இதுக்கு ஒரு உலகத் தரமான திரைக்கதை சசிகுமார் எழுதியிருக்காரு பாருங்க:

ஒரு கோப்பையில இருக்கிற ஒயினை காட்டுறதோட டைட்டில் ஆரம்பிக்குது. உண்மையில் ரொம்ப நல்லா இருந்த்து. கலர்ஃபுல் டைட்டில்..இன்னொரு விசேஷம், படத்தோட பேரை கடைசிவரை போடலை.

வைபவ்வும் நண்பர்களும் பப்ல குடிச்சிட்டு பொண்ணுங்களோட ஆடுறாங்க..அப்புறம் வீட்டுக்கு போறாங்க..அப்புறம் பப்ல ஆடுறாங்க..இப்படியே ஒரு அரை மணி நேரம்..

வைபவ்வின் அப்பாவான மந்திரி ஏ.எல்.அழகப்பன் பிறரை மிரட்டி ஒன்னு, சொத்தை எழுதி வாங்குறார், இல்லே கமிசனை வாங்குறார். படியாத ஆட்களை விசுக்-னு போட்டுத் தள்ளறார்..நேர்மையான ஏ.சி.யான சமுத்திரக்கனி, நேர்மையா இருக்க ட்ரை பண்றார்..ஆனாலும் மேலே சொன்ன மந்திரியால இவர் நேர்மையா இருக்க முடியலை..இதை நமக்குச் சொல்ல ஒரு அரை மணி நேரம்..

வைபவ் பப்ல ஒரு ’மூக்கு ரொம்ப அடி வாங்குன’ பொண்ணைப் பார்க்குறார்..அவர் மேலே லவ் ஆகிறார்...அந்தப் பொண்ணு ஒத்துக்கலை..அப்புறம் சில கேவலமான சீனுக்கு அப்புறம் ஒத்துக்குது..அப்புறம்தான் தெரியுது..அந்தப் பொண்ணு அரசியல்வாதிகளையே உருவாக்குற/ஆட்டிப் படைக்குற பெரிய பிஸினஸ் மேனோட பொண்ணு..மந்திரிக்கு ஓ.கே..ஆனா, பிஸினெஸ் மேன் ஒத்துக்க மாட்டேன்னு சொல்ல, சில லாஜிக்கே இல்லாத சீன்+ மிரட்டலால அவர் ஒத்துக்கிடுதார்..இதுக்கு ஒரு அரை மணி நேரம்..1 ½ மணி நேரம் ஆச்சா?

இப்போ இதுவரைக்கும் பார்த்ததை/படித்ததை மறந்திடலாம்..ஏன்னா இது தான் படத்தோட கதையே இல்லையே...

திடீர்னு வைபவ்வின் பின்னந்தலையில் பெரிய இரும்பு கியர் ராடால் ஒரு அடி விழுது..மண்டை பொழந்து விழுற அவர் “ யார் நீ”ன்னு கேட்கிறார்..”ஈசன்’னு டைட்டிலப்போ போடாத பெயரை இப்போ போடுறாங்க..இடைவேளை!

இடைவேளைக்கு அப்புறம் ஆஹா..படம் சூடு பிடிக்குதுன்னு நினைச்சு உட்கார்ந்தா, நமக்குத்தான் சூடு பிடிக்குது.

மந்திரி பையனைத் தேடுறார்..ஏ.சி.சமுத்திரக்கனியும் ரொம்ப மொக்கைத்தனமா தேடுறார்..இப்படியே ஒரு அரை மணி நேரம்..(நோ பேட் வேர்ட் ப்ளீஸ்)

ஒரு வழியா ஈசனைப் பிடிக்கிறார். அவன் ஒரு பள்ளி மாணவன்..அப்போ அவன் ஒரு ஃப்ளாஷ்பேக்கைச் சொல்றான். அழகான அபிநயாவோட நல்லாதான் ஆரம்பிக்குது..ஆனா ஃபினிஷிங்?..கற்பழிப்பு..ப்ளட் லாஸ்..வேதனை..தற்கொலை..ன்னு தியெட்டர்ல கண்கொண்டு பார்க்க முடியல்லை..பருத்திவீரனுக்குப் போட்டியா யோசிச்சாங்க போல!..இப்படியே கொடுமையா ஒரு அரை மணி நேரம்..

அந்தக் கொடுமை முடிஞ்சதும் அப்பாடின்னு கண்ணைத் திறந்தா, வன்முறைன்னா வன்முறை..அப்படியொரு வன்முறை..மேலே சொன்ன இரும்பு ராடால அந்தப் பையன் அக்கவைக் கற்பழிச்ச வைபவ் மண்டையைப் பொளக்குறான்..மந்திரி, பையன் மண்டையைப் பொளக்குறார். சும்மா நங்கு நங்குன்னு ரத்தம் தெறிக்க விழும்போது, என் பக்கதுல குழந்தையோட வந்திருந்த ஃபேமிலி எந்திரிச்சு வெளில போயிருச்சு..கடைசில சமுத்திரக்கனியும் ஈசனும் சிதைஞ்சு போய் தப்பிக்கிறாங்க..நம்மையும் சிதைச்சு வெளில அனுப்புறாங்க.

படத்துல நல்ல விஷயம்னா சமுத்திரக்கனி, அபிநயா, ஈசனா வர்ற பையன் ஆகியோரின் நடிப்பு நல்லா இருக்கு..’வந்தனம்ங்கிற பாட்டு சூப்பர். 

இன்னும் படத்தோட ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் பத்தியெல்லாம் பேசலாம் தான்..ஆனா, சேதாரம் ரொம்ப ஆயிட்டதால, பெட் ரெஸ்ட் எடுக்கப் போறேன்...வேணாம்..வலிக்குது..

டிஸ்கி-2: காலை 11 மணிக்கே தியேட்டரில் நல்ல கூட்டம்..நிறைய இளைஞர்கள்..சில ஃபேமிலிகள்..எல்லோர் கண்ணிலும் சசிக்குமார் படத்தைப் பார்க்கப் போறோம்கிற ஆர்வம் தெரிந்தது. சிலர் சசியின் கடைசிப்படம் எப்போ வந்ததுன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தாங்க..அத்தனை கூட்டமும் வந்தது ’சசிகுமார்’ என்ற ஒற்றை வார்த்தைக்காகவே..ஆனால் அதற்கு ஏற்ற பொறுப்புணர்ச்சி சசிக்கு இருந்ததா என்று பார்த்தால் ஏமாற்றமே..

உலகத் திரைப்படம் என்றால் ரத்தக்களறியான கற்பழிப்பும், ரத்தம் தெறிக்கும் வன்முறையும் இருக்கணும்னு யார் கிட்டயோ சசிகுமார் தப்பாக் கத்துக்கிட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கார்னு நினைக்கிறேன்..ஆனால் உலத் திரைப்படம்னா என்னன்னு தெரிஞ்சுக்க சசி ஆசைப்பட்டா நான் அவருக்கு ஒரு படத்தை பரிந்துரைக்கிறேன்..அது ஒரு தமிழ்படம்தான்..அந்தப் படத்தை சசி 100 தடவையாவது பார்க்கணும்..அதுதான் நான் அவருக்கு கொடுக்க விரும்புகிற தண்டனை..அந்தப் படத்தோட பேரு : சுப்பிரமணிய புரம்.
மேலும் வாசிக்க... "ஈசன் – விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

54 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, December 16, 2010

ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

ஆ.ராசாவாக இருந்தவர் ஆ! ராசாவாக ஆனதால் கடுப்பான எதிர்க்கட்சிகள் ராசாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமெனக் கேட்டும், காங்கிரஸ் மறுத்துவிட்டது. ஆகவே அவர்களையும் உங்களையும் குஷிப்படுத்த நானே மன்மோகன் சிங்கைத் தலைவராகப் போட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவைக் கூட்டிவிட்டேன்..இனி விசாரணை ஆரம்பம்..


மன்மோகன் சிங்: மிஸ்டர் ராசா..நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்?

ராசா: ஏலம் விடச் சொன்னீங்க. 
சிங்: எவ்வளவுக்கு விடச் சொன்னேன்?
ராசா: 1,80,000 கோடிக்கு.
சிங்: விட்டீங்களா
ராசா: விட்டனே!
சிங்: ஏலம் எடுத்தவங்க பணத்தைக் குடுத்தாங்களா?
ராசா: கொடுத்தாங்க.
சிங்: சரி, அதுல 10,000 கோடி இங்க இருக்கு..மீதி எங்க?
ராசா: அதான் சார் இது.

அத்வானி: ப்ச்..இவர் சரிப்பட்டு வர மாட்டாருங்க..பேசாம இவருக்கு சுன்னத் பண்ணி குஜராத்ல விட்டுடுவோம்ங்க. மத்ததை நண்பர் மோடி பார்த்துக்கிடுவார்..

சோனியா:(வருகிறார்): என்ன இங்க சத்தம்..என்ன இங்க சத்தம்..
ராகுல்: மம்மி..சிங் ராசாகிட்ட ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடச்சொன்னராம்..ராசாவும் விட்டுட்டு 10,000 கோடியைக் கொண்டுவந்திருக்காரு..மீதி எங்கேன்னு கேட்டா அதான் இதுங்கிறார்..ஹா..ஹா..
சோனியா: மை சன். இப்பவும் இளிப்பா..எதைத் தான் நீ சீரியஸா எடுத்துக்கப் போறியோ..உன்னையெல்லாம் வச்சு...சரி..சரி..மிஸ்டர் ராசா, சிங் உங்ககிட்ட என்ன சொன்னாரு?
ராசா: ஏலம் விடச் சொன்னாரு..
சோனியா: விட்டீங்களா?
ராசா: விட்டேனே.
சோனியா: எவ்வளவுக்கு விட்டீங்க?
ராசா: 1.80,000 கோடிக்கு.
சோனியா: சரி..அதுல 10,000 கோடி இங்கயிருக்கு..மீதி எங்க?
ராசா: அதான் மேடம் இது..
சிங்: ஏய்..நான் சத்தமாப் பேசி நானே கேட்ட்தில்லை..என்னைப் பேச வச்சுடாதே..
ராகுல்: சிங்ஜி..பஞ்ச் டயலாக் சூப்பர்..ஹா..ஹா..

பிரகாஷ் காரத்: ராசா, அடிச்ச காசை நீங்க ஏதாவது சின்ன வீட்டுக்குக் கொடுத்தாக் கூட நாங்க விட்டிருப்போம்..ஆனா தேர்தலப்போ அதுல ஒரு பிட்டை மக்களுக்கு கொடுத்து எங்களுக்கு ஆப்பு வைக்கிறீங்களே..அதுதான் எங்களைக் கடுப்பேத்துது..

மைத்ரேயன்: ஊழல் விசாரணைக்கு தலைவரா சிங்கைப் போட்ட்து தப்புங்க..எங்க அம்மாவைப் போட்டிருக்கணும்..கடந்த 10 வருஷத்துல பல ஊழல் வழக்குகளைக் கண்டவர் எங்க புரட்சித் தலைவி!
ப்ரணாப் முகர்ஜி: என்னமோ அவர் ஜட்ஜா இருந்து பார்த்த மாதிரி சொல்றாங்களே..இவங்களுக்கு மனச் சாட்சியே கிடையாதா..
மைத்ரேயன்: ஆகவே, ராசாவை டெலிஃபோனில் விசாரணை பண்ண எங்க அம்மா தயாரா இருக்காங்க..மேலும் இந்த ராசாவும் ஃபோன்லதான் உண்மையைப் பேசுவார்..நேர்ல உண்மை பேசி இவருக்குப் பழக்கமிருக்கான்னே சந்தேகம்தான்.
சிங்: நோ..நோ..அதெல்லாம் அனுமதிக்க முடியாது.
மைத்ரேயன்: அப்போ, நீங்க அம்மாகிட்ட பேசுங்க..
சிங்: அய்யோ!..வேணாம்..வேணாம்..ராசாவே பேசட்டும்.

(மைத்ரேயன் சேரிலிருந்து எழுந்து, இடுப்புக்கு மேலே உடம்பை முன்பக்கமாக 30 டிகிரி வளைத்து, முழங்காலுக்கு மேல்பகுதியை 30டிகிரி பின்னால் வளைத்து நின்றுகொண்டு செல்போனில் கால் பண்ணுகிறார்)

மம்தா பானர்ஜி: என்னங்க பண்றார்?

டி.ஆர்.பாலு: இதுக்குப் பேரு கொக்காசனம்’..அதிமுக காரங்க அந்தம்மாகிட்ட பேசறதுக்குன்னே கண்டுபிடிச்சது..இவங்க கிட்ட நீங்க கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு..

மைத்ரேயன்:(போனில்)..அம்மா..ஆமாங்கம்மா....குடுக்கிறென்மா..ராசா, இந்தாங்க.

அம்மா: என்ன ராசா, விசாரணை அது இதுன்னு ரொம்ப டார்ச்சர் பண்றாங்களா?

ராசா: ஆங்!...ஆமாம்மா..ரொம்பப் படுத்தறாங்க..

அம்மா: பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும்..அது புரியாத சின்னப் பசங்க அவங்க..

ராசா: கரெக்டாச் சொன்னீங்கம்மா.

அம்மா: இந்த ஊழல், பணம், கோடி இதெல்லாம் விடுங்க..6 கோடித் தமிழர்கள் மனசை அரிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு விசயத்தை உங்க கிட்டே இப்போ கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொன்னாப் போதும்.

ராசா: கேளுங்கம்மா..சொல்றேன்.

அம்மா: நீங்க அவரைக் கரெக்ட் பண்ணீட்டீங்களா?..இன்னும் இல்லையா?

ராசா: அம்மாஆஆஆஆ!.. சொல்லால் அடித்த சுந்தரி..மனம் சுட்டுவிட்ட கோலம் என்னடி...பட்ட காயத்துக்கு மருந்தென்னடி....


மேலும் வாசிக்க... "ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 14, 2010

சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை

டிஸ்கி-1 : இது சாரு சம்பந்தப்பட்ட பதிவு. ஆகவே 18 வயதிற்கு உட்பட்டோரும், அன்புச்சகோதரிகளும், கலாச்சாரக் காவலர்களும் மற்ற பிற யோக்கியக் கனவான்களும் இப்பதிவைத் தவிர்க்கவும். அடுத்ததாக ‘ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்’ என்ற ’நல்ல’ பதிவு வந்துகொண்டேயிருக்கிறது. அதில் சந்திப்போம்.

டிஸ்கி-2 : இந்த நாவல் அனுஷ்காவையோ, அனுஷ்காவின் தெலுங்கு டப்பிங் படமான தேகத்தையோ தழுவி எழுதப் பட்டதல்ல.

பரந்து விரிந்த பொட்டல் காட்டில் சாரைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது.  அதையறியாத சிறுவர்களாகிய நாங்கள் வெறும் அரை டவுசரோடு, சுட்டெரிக்கும் வெயிலில் அந்த செம்மண் காட்டிற்கு விளையாடப் போனோம், ஆள் அரவம் கேட்ட சாரைப்பாம்பு சரசரவென ஓடத்துவங்கியது. ’ஹோ’வென்ற கூச்சலோடு ஏதோவொரு குருட்டு தைரியத்தில் அந்தப் பாம்பைத் துரத்திக்கொண்டு புழுதி பறக்க ஓடினோம். வெயிலில் உடல் மின்ன, அந்த நீண்ட செம்மண் பரப்பில் வளைந்தும் நெளிந்தும் சரசரவென அந்தச் சாரைப்பாம்பு ஓடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்த்து. கொஞ்ச தூரம் ஓடிய பின் பாம்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் களைத்து விழுந்தோம். அதன்பின் அந்தப் பாம்பு ஓடிய சித்திரம் என் நினைவில் நெடுநாள் நின்றது. பிறகு ’அறிவு’ வளர்ந்துவிட்டதால் அதை மறந்தும்போனேன்.

’டார்ச்சர் செய்யும்போது தர்மா தன் முகத்தைக் கறுப்புத்துணியால் மூடிக்கொள்வது வழக்கம்’ என்ற வரியோடு துவங்கும் சாருவின் எழுத்து, அந்த சாரைப்பாம்பின் ஓட்டத்தை பல வருடங்களுக்குப் பின் எனக்கு ஞாபகப்படுத்தியது. தொடர்ந்து இங்கும் அந்த எழுத்தைப் பிடிக்க மூச்சிரைக்க, தேகத்தின் கடைசிவரை ஓடவேண்டியதாயிற்று. 

கதையென்ன என்றால் ‘சிறுவயது முதலே சுற்றத்தில் வன்முறையைப் பார்த்து வளர்கின்ற தர்மா, பின்னாளில் பிறரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடியவனாக ஆகின்றான்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம். மற்றபடி ‘ கலவி கொள்ளும்போது இன்பம் கிடைக்க அந்த வளையங்கள் தான் காரணம்’, ‘அவனுடைய 15வது வயதில் எதிர்வீட்டு ஆங்கிலோ இந்தியக் கிழவியைப் புணர்ந்தபோது’, ‘குப்பி அடிப்பவன்’ (இங்க இவ்வளவுதாங்க எழுத முடியும்!) போன்ற சாருவின் ஸ்பெஷல் அணுகுண்டுகளால் நிறைந்தது இந்த நாவல். வன்முறையாளர்களுக்கு தர்மா என்றும் நீதி என்றும் பெயரிட்டிருப்பது சாருவுக்கே உரித்தான நக்கல்(இது, அது அல்ல!).

இந்த நாவலில் குறையென்று பார்த்தால், திடீரென்று சாருவே இடையில் தோன்றுகிறார், கூடவே கிருஷ்ணா வேறு. இவர்களைப் பார்த்ததுமே அய்யய்யோ மறுபடியும் ஜீரோ டிகிரியா எனப் பதறினேன். நல்ல வேளையாக சீக்கிரம் காணாமல் போனார்கள். இந்த தரிசனத்திற்கு ஒரு வேளை பின் நவீனத்துவம் தான் காரணமோ? 

கடைசி அத்தியாயத்தில் மறுபடியும் கிருஷ்ணா வந்து” நாவலின் முடிவெங்கே” என்கிறார். சாருவும் பிரசன்னமாகி” அப்புறம் என்னாச்சுன்னா..”என விளக்குகிறார். இதற்கும் அந்த  நாசமாய்ப் போன பின் நவீனத்துவம் தான் காரணமோ என்னவோ? பழைய திரைப்படங்களில் கிளைமாக்ஸில் மொத்தமாக எல்லோரும் ஃபோட்டொவிற்கு போஸ் கொடுக்கும்போது, மொக்கையாக காமெடியன் ஏதாவது சொல்வதைக் கேட்டு சிரிப்பார்கள். அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. கடைசி அத்தியாயம் கொஞ்சம் தேவையற்றதாகவே எனக்குப் பட்டது. எங்கே கடைசி வரியில் மேஜர் சுந்தர்ராஜன் வந்து “தர்மா, யூ ஆர் அண்டெர் அரெஸ்ட்..நான் உங்களைக் கைது செய்யுறேன்’ என சொல்லி விடுவாரோ எனப் பயந்தேன். நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்த நாவல் கருப்பொருளாய் வதையை, வன்முறையை எடுத்துள்ளது. வன்முறை நம் மனதிற்குள் எப்போதும் வெளிவரத் தயாராய்த் தான் இருக்கிறது. அதற்கு வாய்ப்புக் கொடுக்கவில்லையெனில், மனதிற்குள்ளாவது வன்முறை நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. நாம் வன்முறையில் இறங்க தேவையெல்லாம் நம் மனச்சாட்சியைக் கன்வின்ஸ் பண்ணுகிற ஒரு காரணமே. உதாரணமாக ஒரு கலாச்சாரக் காவலர் சாருவைக் கத்தியால் குத்த, இந்த நாவல் ஒன்றே போதுமானது.

ஆண்களின் மீதும், பெண்களின் மீதும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நிகழ்த்தப் படும் வன்முறை தொடர்ந்து இந்த நாவலில் காட்டப்படுகிறது. வழக்கமாக இந்த வன்முறையானது பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையிலோ அல்லது மிஸ்டர்.பொதுஜனத்தின் பார்வையிலோ தான் காட்டப்படும். இந்த நாவல் அதிலிருந்து மாறுபட்டு, வன்முறையாளனின் பார்வையில் அவனது நியாயங்களோடு காட்டப்படுகிறது. ஆகவே தான் வெறும் பரபரப்பு நாவலாக ஆகியிருக்க வேண்டிய தேகம், இலக்கியமாக ஆகிறது.

சாரு தன் அபின் தடவிய சாரைப்பாம்பு எழுத்தால், நம்மை தர்மாவோடு ஒன்றச் செய்கிறார். பஸ்ஸில் பெண்கள்மீது நடக்கும் வன்முறையை, வன்முறையாளனின் பார்வையில் மிகவும் ரசனையோடு விவரிக்கிறார். நாமும் மனதள்வில் லுங்கியை ஏற்றிக் கட்டி பஸ்ஸில் ஏறிவிடுகிறோம். தொடர்ந்து இந்த நாவல் முழுக்க திட்டமிட்டே நம்மை வன்முறையில் கூட்டாளியாக ஆக்குகின்றார். வன்முறையின் சுவை இந்நாவல் முழுக்க செக்ஸாகவோ, வதையாகவோ நமக்குக் காட்டப் படுகிறது. வன்முறை என்பது ஏதோ ஒரு தேசத்தில் யாரோலோ நட்த்தப் படுவது மட்டுமல்ல, தனி மனிதனுக்குள்ளும் உறைந்திருப்பது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது இந்த நாவல். இதைப் படித்து முடித்தபின் இதில் எதையெல்லாம் ரசித்தோம் என்று பார்த்தால் ’நாமெல்லாம் கல்வி கற்ற நாகரீக மனிதர்தானா’ என்ற கூச்சத்தை சாரு தன் எழுத்தால் உண்டாக்குகின்றார். யோசித்துப் பார்க்கையில் நமக்கே நம்மைக் கண்டால் பயம் வருகிறது.

உபநிஷத்களும் பைபிளும் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கொஞ்சம் நக்கலுடன் மேற்கோள் காட்டப்படுகின்றன. உதாரணமாக தர்மா பட்டினியால் வாடும் அத்தியத்தில் வரும் சாண்டோக்ய உபநிஷத் : ”நாய்களுக்கும் பட்சிகளுக்கும் என்னவெல்லாம் உணவாகக் கிடைக்கிறதோ அதெல்லாம் உனக்கும் உணவாகும்”

இந்த நாவலின் மூலம், எவ்வளவு தான் சர்ச்சையில் மாட்டினாலும்,  தமிழ் இலக்கிய சூழலில் தான் ஒரு தவிர்க்க முடியாத, முக்கியமான எழுத்தாளர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சாரு நிவேதிதா.

நூல் விபரம்:
தலைப்பு : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
மேலும் வாசிக்க... "சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.