Saturday, December 10, 2011

பிராமண நண்பர்களுக்கு..(வர்ணம், ஜாதி, இடஒதுக்கீடு) _ நிறைவுப் பகுதி


அன்பு நண்பர்களுக்கு,

வர்ணம், இடஒதுக்கீடு என்று நாம் பேசிக்கொண்டே போனாலும், ஜாதி/ஜாதிப்பற்று/ஜாதி வெறி பற்றிப் பேசாமல் இந்த விவாதத்தை முடிப்பது முறையாகாது. 

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என ஆரம்பித்து பல்வேறு விதங்களில் ’ஜாதியே இல்லை’ என்று சொல்லப்பட்டு வந்தாலும், ஜாதி என்பது இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜாதியை ஒழிப்பது என்பதன் சாத்தியம் பற்றி இன்னும் சந்தேகம் கொள்ளவே வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், பெரும்பாலான மக்கள் இன்னும் ஜாதியைக் கைவிடத் தயாராக இல்லை என்பதே.

ஜாதி ஏன் நம் மக்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று யோசிக்கிறேன்...

ஜாதி என்பது சமூகத்தை மேல்கீழாக அடுக்கும் அவலமான ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில், அதே ஜாதி தான் நம் வம்சத்தின் நீட்சியாக இருக்கிறது. ஜாதியைத் தூக்கி எறிதல் என்பது நம் பாட்டனை-பூட்டனை-முன்னோரை தூக்கி எறிவதாய் ஆகிவிடுமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிவகங்கை தான் எங்கள் பூர்வீகம்..அந்த வானம் பார்த்த பூமியில் பிழைக்க வழியின்றி தெற்கு நோக்கி நகர்ந்தனர் என் முன்னோர். அவர்களின் அந்த முடிவும், அதன்பிறகான அவர்களின் உழைப்புமே இன்றைய என் நிலைக்கு அடிப்படை. என் தந்தையார் இருந்த ஒரு காட்டையும் விற்றே என்னைப் படிக்க வைத்தார். இவ்வாறு பலரின் தியாகங்களும், கடின உழைப்பும் சேர்ந்ததே என் வம்சம். அதுவே என் ஜாதியில் ஒரு அங்கம். ஜாதியைக் கைவிடு எனும்போது, இவர்களை என்ன செய்வது?

அதே நேரத்தில், படித்த நாகரீக மனிதனாக ஜாதிய ஏற்றத்தாழ்வால் ஏற்பட்ட/படுகின்ற அவலங்களை ஏற்றுக்கொள்வதும் நம்மால் இயலவில்லை. ஏறக்குறைய படித்து, கிராமச் சூழலில் இருந்து வெளியேறும் பலரும் சந்திக்கும் அறச்சிக்கல் இதுவே.
நீங்களும் இதையே வேறுவிதத்தில் உணர்ந்திருப்பீர்கள். பலரும் வெளியில் ஜாதியை ஒழிப்பதாகப் பேசிவிட்டு தனக்கோ தன் குழந்தைகளுக்கோ திருமணம் முடிக்கையில், கவனமாக தன் ஜாதியிலேயே மணம் முடிப்பதைப் பார்க்கிறோம்(நான் உட்பட). இளம்பருவத்தில் ஜாதியை ஒழிப்போம் என்று கோஷமிட்ட பலரும் வயதான காலத்தில் ஜாதிப்பற்றில் மூழ்குவதையும் நாம் பார்க்க்கிறோம்.

என் நண்பர் ஒருவர் தீவிரமான பகுத்தறிவுவாதி. ஆனால் சீமானைக் குறை சொல்லிப் பேசினால்/எழுதினால் மட்டும் டென்சன் ஆகிவிடுவார். ‘சீமானே மாற்றுசக்தி’ என்று தீவிரமாக நம்பினார்/நம்puகிறார். எனக்கு நீண்டநாள் கழித்தே சீமானின் ஜாதியும் நண்பரின் ஜாதியும் ஒன்று என்று தெரிந்தது. இதேபோன்று பிரபலங்களைத் தாங்கிப்பிடிக்கும் ஆட்களில் பெரும்பாலானோரின் ஜாதி, அந்தப் பிரபலங்களின் ஜாதியாகவே இருப்பதைக் காணலாம். ஏதேனும் ஒரு வடிவில் ஜாதியுணர்வு, நம் மக்கள் மறைத்தாலும் வெளிப்பட்டுவிடுகிறது.

ஜாதி என்ற கத்தியின் கைப்பிடியாக வம்ச நீட்சியும், கூர்முனையாக ஏற்றத்தாழ்வும் இருக்கிறது.எனவே ஜாதியை ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. ‘இந்த ஜாதிமுறை இப்படியே நீடிப்பது சரிதானா?’ என்ற நியாயமான கேள்வியும் நம்மை உலுக்குகின்றது.(இதைப்பற்றி ஜெயமோகனும் ஒரு பதிவு எழுதியிருந்தார்..படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..)

இப்போது ஜாதிய அடையாளங்களை வெளியே காண்பிப்பதில், சொல்வதில்  நாம் தயங்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. முன்பெல்லாம் நேரடியாக ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பார்கள். இப்போது கேட்பதில்லை அல்லது சுற்றி வளைத்துக் கேட்கின்றனர். பெரியாரால் விளைந்த நன்மைகளுள் ஒன்றாக இதனைக் கொள்ளலாம். 

சமூக ஜாதிய அடுக்கில் நடுவில் உள்ளவன் என்ற முறையில் இருபக்கத்தையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன். பிராமணர்களின் ஜாதி வெறி எங்கள் மேல் காட்டப்பட்டதையும் அனுபவித்துள்ளேன். என் சுய ஜாதியினர் தன் ஜாதிவெறியை தாழ்த்தப்பட்டோர் மேல் காட்டுவதையும் கண்டுள்ளேன். அதுவே இந்த ஜாதி முறைகள் பற்றிய மறுபரிசீலனையை நாம் செய்வது அவசியம் என்று எண்ண வைத்தது.நம்மை ஒருவன் தன் ஜாதியைக் காரணமாகக் காட்டி அவமானப்படுத்தும்போது ஏற்படும் அவமானமும் கோபமுமே, நாம் பிறரிடம் நம் ஜாதியைப் பற்றிக் காட்டும்போது ஏற்படும் என்ற ‘அறிவு’, நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.

நிலப்புரபுத்துவக் காலகட்டத்தில் சரியாக இருந்த பல விஷயங்கள், இந்த நவீன ஜனநாயகக் காலகட்டத்தில் தவறானதாக ஆகிவிட்டதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் செய்தது சரி தான் என்றால் ‘ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை’ என்று ஒளவையார் தான் பாட வேண்டிய அவசியம் என்ன? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி அக்ரகாரத்தை விட்டே துரத்தப்பட்டது ஏன்? நம் முன்னோர்கள் செய்தது சரி தான் என்று இன்னும் பிடிவாதமாகச் சாதிப்பது, நம்மிடையே எவ்வித நல்லுறவையும் ஏற்படுத்தாது. நம் முன்னோர் அவர்கள் காலகட்டத்தில் கூறப்பட்ட சமூக ஒழுங்கின்படி, சில விஷயங்களைக் கடைப்பிடித்தனர். அதனை இனியும் தொடர்வது இக்காலகட்டத்திற்கு ஒவ்வாத ஒன்று என்பதை நாம் முதலில் மனதார ஒத்துக்கொள்ள வேண்டும்.

இன்று கல்வியும் பணமுமே ஒருவரது வாழ்நிலையை தீர்மானிக்கிறது. இனியும் ஜாதிய ஏற்றத்தாழ்வை நாம் தொடர முடியாது, தொடரவும் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஜாதிகளுக்கிடையிலான உறவு என்பது சர்ச்சைகளற்ற இயல்பான ஒன்றாக ஆக முடியும்.பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் தங்களுக்கிடையே உறவை/நட்பைப் பேணுவதில் பெரிய சிக்கல் இல்லை. அதே எண்ணத்துடன் பிற பிரிவுகளில் உள்ள ஜாதிகளுடனும் பழகுவது அவசியம் ஆகிறது.அதற்குத் தடையாக இருப்பது நம் ஜாதியினர்/முன்னோர் செய்ததெல்லாம் சரி தான் என்று நாம் நம்புவதும், அதே முறையை தொடர விரும்புவதுமே.

பிற ஜாதிகளுடனான உறவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வாசந்தி எழுதிய ஒரு கதை ஞாபகத்திற்கு வரும்..

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகன், ஆதிக்க ஜாதி பண்ணையாரை அவர் வீட்டில் சந்திப்பான். அவர் ‘உட்காருங்க தம்பி..நான் ஜாதியெல்லாம் பார்ப்பதில்லை’ என்று உபசரிப்பார். பிறகு கிளம்பி வெளியே வரும்போது, அங்கே கிணற்றடியில் இருக்கும் பாத்திரத்தை கதாநயாகன் ’பண்ணையார் அனுமதியின்றி’ தொட்டுவிடுவான். ‘யாரைக் கேட்டடா தொட்டாய்?’ என்று பண்ணையார் அடிக்கப் பாய்ந்துவிடுவார்.

அதாவது, சம உரிமை என்பது நாங்களாக மனமிரங்கிப் போடும் பிச்சை என்ற ஆதிக்க சாதி மனோபாவத்தை தெளிவாகக் காட்டிய கதை அது. (கதைப் பெயரோ, முழுக்கதையோ ஞாபகம் இல்லை..சாரி). முற்போக்கு வாதிகளாக காட்டிக்கொள்ளும் ஆதிக்க சாதியினர் செய்வதும் ஏறக்குறைய இதையே..’நான்லாம் ஜாதி பார்க்கறதில்லைப்பா..தயங்காம என் வீட்டுக்கு வா..கூச்சப்படாம உட்கார்ந்து சாப்பிடு’ என்பது போன்ற பேச்சுகள், மனதில் இன்னும் படிந்திருக்கும் ஜாதிய அழுக்கை காட்டுபவையே.

எனவே நாம் இத்தைய போலி முற்போக்கு வாதியாக ஆகிவிடாமல் தவிர்ப்பது அவசியம். அதற்கான உண்மையான வழி ‘நாம் ஒரு ஜாதியில் பிறந்தாலேயே உயர்ந்தவர் ஆகிவிட மாட்டோம். அது நம் நடத்தையால், எண்ணத்தால் வருவது. உள்ளே நாம் யாரோ அதுவே நம் ஜாதி’ என்று உளமார நாம் உணர்வதே ஆகும். உங்களுடன் இத்தனை நாள் விவாதித்ததில் நாம் அத்தகைய எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டேன். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

ஜாதியை தற்போதைய சூழலில் ஒழிக்க முடியாவிட்டாலும் (ஏன் ஒழிக்கவேண்டும் என்று இன்னும் நமக்கு முழுதாக புரியாவிட்டாலும்), ஜாதிய ஏற்றத்தாழ்வை நம் மனதில் இருந்து அகற்றுவது அவசியம் ஆகிறது. ஏறக்குறைய 17 வருடங்களாக என் பிறந்த மண்ணை விட்டு வெளியே நான் இருக்கின்றேன். இங்கே ஜாதிய அடையாளம் தேவைப்படவேயில்லை. இத்தனை வருடங்களில் என் ஜாதி என்ன என்பதை நான் வெளிப்படுத்திக்கொண்டதும் இல்லை. இவ்வளவு விவாதித்தும் நீங்களும் என் ஜாதி என்ன என்று கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. இதுவே ஜாதியின், ஜாதிய அடையாளத்தின் தேவை சமூகத்தில் தீர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

தற்போதைய நிலையில் நான் கோவில்பட்டிக்காரன் என்பதை என்ன உணர்வோடு நான் நினைக்கின்றோனே அதே உணர்வோடே ’ நான் *** ஜாதிக்காரன்’ என்றும் நினைக்கின்றேன். கோவில்பட்டியிலும், அந்த ஜாதியிலும் பிறந்தது இயல்பாக நடந்துவிட்ட ஒன்று. கோவில்பட்டிக்காரன் மட்டுமே புத்திசாலி-நல்லவன்-உயர்ந்தவன் என்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அதேயளவு அறியாமை ‘இந்த ஜாதி மட்டுமே உயர்ந்தது’ என்று நம்புவதும்.

இந்த விவாதத்தில் இருக்கும் நாம், சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட முயலும் புரட்சியாளர்கள் அல்ல..சாமானியர்களே என்பதாலேயே வெளிப்படையாக இவற்றைப் பேசுகின்றேன்..நம் மனசாட்சிக்கு உட்பட்டு, நியாய-தர்மத்துடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கான முயற்சியில் இருக்கும் மனிதர்கள் தானே நாம்..அத்தகைய நியாய வாழ்விற்கு ஒத்துவரும்வரையே ஜாதிக்கு நம் வாழ்வில் இடம் உண்டு.

நீங்கள் தொடர்ந்து இந்த விவாதத்தைப் பொதுவில் வைக்கச் சொல்கிறீர்கள்..நாம் பேசுகின்ற பாஷை எந்த அளவிற்கு படிப்போர்க்குப் புரியும் என்று தெரியவில்லை..’ஜாதிக்கான இடம் நம் வாழ்வில் என்ன? அது சார்ந்த விஷயங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன?’ என்று மதநம்பிக்கையுள்ள - ஜாதி வட்டத்திற்குள்ளும் உள்ள சாரசரி மனிதர்கள் பேசிக்கொண்டதன் தொகுப்பு என்று இதைச் சொல்லலாமா? இதைப் பொதுவில் வைப்பதன்மூலம், இதேபோன்ற வசைகளற்ற விவாதம் படிப்போரிடையே நடைபெறும் என்று நம்புகிறீர்களா என்ன..!

’என் முன்னோர்கள் செய்தது அனைத்தும் சரி தான்’ என்று பேசுவதோ, ’உன் முன்னோர் கெட்டவர்கள்..அதனால் நீயும் கெட்டவனாகத்தான் இருப்பாய்’ என்று நம்புவதோ இருசமூகங்களுக்கிடையில் நல்ல உறவை ஒருபோதும் ஏற்படுத்திவிடாது.

முடிவாக நாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம், நம் முன்னோர்கள் நவீன ஜனநாயகத்தை புரிந்துகொள்ளாமல் பழைய நினைவுகளுடன் பல தவறுகளைச் செய்தார்கள் என்பதையே. அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அந்தப் பழைய தவறுகளையும் அதனால் விளைந்த வெறுப்பையும் இனியும் நாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிடக்கூடாது.

அதுவே நாம் அனைவரும் இதைப் படிப்போர்க்குச் சொல்லும் செய்தியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
செங்கோவி

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

  1. இரவு வணக்கம்,செங்கோவி!எனக்கும் தெரியவில்லை என்று சொல்லி ஜகா வாங்கிவிடுவது மேலானது.ஏனெனில்,நான் கூட கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி பார்க்கவில்லை.இப்போது தான் என்னோடு கூடப் பிறந்தவர்களே தெளிந்திருக்கிறார்கள்.அதனால் வர இருக்கும் கருத்தாளர்களுக்கு இடம் விட்டு........................................

    ReplyDelete
  2. சில வாரங்களின் பின் மீண்டும் இரவு வணக்கம் செங்கோவி ஐயா!
    தொடராக ஒரு விவாதத்தை நடத்தி இன்று முடிவை இப்படி வைக்கலாம் என்று முடித்திருக்கின்றீர்கள்.இனிவரும் தலைமுறையினரிடம் நிச்சயம் மாற்றம் வரும். இப்போதே புலம் பெயர் அடுத்த தலைமுறையினர் தம் உழைப்பு, படிப்பு என்ற வட்டத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். காலமாற்றம் முன்னோரின் செயல்களை கைவிட்டுவிட்டார்கள் ஈழத்திலும் இதன் போக்கு தொடங்கிவிட்டது போராட்டத்தின் விளைவு என்று கூடச் சொல்லமுடியும். முன்னர் இதற்கு(சாதியத்திற்கு) எதிராக மஹாகவி,டானியல்,டொமினிக்ஜீவா என பலர் இலக்கியம் மூலம் முன்னோடிகளாக இருந்தார்கள் .இன்று வாசித்த சோபாசக்தியின்  கப்டன் சிறுகதையும் முடிவில் சாதியத்தை எதிர்பதாக அல்லது மறைப்பதாக ஒரு பாத்திரம் மூலம் முற்போக்கினை விட்டுச் செல்கின்றார்.
    இனி வருவோரின் கருத்தையும் ஆவலாக பார்க்க இருக்கின்றேன் .மீண்டும் சந்திக்கலாம் சில வாரத்தில்.
    நன்றி. இரவு வணக்கம்!

    ReplyDelete
  3. நடுநிலமையாக பல விடயங்களைச் சொல்லிய பதிவு ஐயா!

    ReplyDelete
  4. நடுநிலமையாக பல விடயங்களைச் சொல்லிய பதிவு ஐயா!

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    நல்ல விவாதம்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //கோவில்பட்டிக்காரன் மட்டுமே புத்திசாலி-நல்லவன்-உயர்ந்தவன் என்று நினைப்பது எவ்வளவு அறியாமையோ, அதேயளவு அறியாமை ‘இந்த ஜாதி மட்டுமே உயர்ந்தது’ என்று நம்புவதும்.//

    ஒரு முறை மூதறிஞர் ராஜாஜியிடம் அஞ்சல் மூலம் அவரது கோத்திரம் என்ன என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் தம் பதிலை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினார்:

    "I belong to Srivatsa Gothra. Neither my intellect nor my folly is traceable to it"

    அந்தப் பெரியவரின் வாசகங்களை உங்கள் இந்த வரிகள் நினைவுபடுத்தின.

    ReplyDelete
  7. //முன்பெல்லாம் நேரடியாக ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பார்கள். இப்போது கேட்பதில்லை அல்லது சுற்றி வளைத்துக் கேட்கின்றனர். பெரியாரால் விளைந்த நன்மைகளுள் ஒன்றாக இதனைக் கொள்ளலாம்.//

    இதை நன்மையென்று எப்படி எடுத்துக் கொள்வது.? வியாதியை மறைப்பது போன்றது இது. மூட மூட ரோகம்.

    ReplyDelete
  8. //இளம்பருவத்தில் ஜாதியை ஒழிப்போம் என்று கோஷமிட்ட பலரும் வயதான காலத்தில் ஜாதிப்பற்றில் மூழ்குவதையும் நாம் பார்க்க்கிறோம்.//

    என் பின்னூட்டங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை இக் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.

    ஜாதி ஒழிக!(என் ஜாதியைத்தவிர)என்பதே அந்த கோஷத்தின் பொருள்.

    ReplyDelete
  9. //நிலப்புரபுத்துவக் காலகட்டத்தில் சரியாக இருந்த பல விஷயங்கள், இந்த நவீன ஜனநாயகக் காலகட்டத்தில் தவறானதாக ஆகிவிட்டதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். //

    ஆங்கில பாணி நிலப்பிரபுத்துவம் இங்கே இருக்கவில்லை என்பது தெரிகிறது.
    அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

    நகரத்தில் இருந்து நிர்வாகம் செய்த ஆங்கிலேயன் நமது கிராம அமைப்பை மாற்றி பண்ணையார், மிராசுதார், மிட்டாதார் என்றெல்லாம் சீர்திருத்தம் என்ற பெயரால் பல குளறுபடிகளைச் செய்ததால் நிலபிரபுத்துவம் போன்ற ஒரு தன்மை இங்கே காண்கிறது.

    காந்திஜி சொன்ன அறங்காவலர்(டிரஸ்டிஷிப்) அமைப்பே முன்னர் இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

    ஜாதிய அமைப்பின் நற் பலன்க‌ளைப் புக‌ழ்ந்தும் பல ஐரோப்பிய‌ சமூக‌வியலாளர் எழுதியுள்ள்னர்.

    இன்னும் சில கிராமங்கள் குடி போன்றவைகளில் கிராமக் கட்டுப்பாடு காரணமாக ஒழுக்கமாக ஒற்றுமையுடன் செயல்படுவது பழமையின் நீட்சியே!

    சாதிய அமைப்புக்கள், ஒழிப்பாளர்கள் சொல்வது போல மிகவும் மோசமாக இருந்திருந்தால் இவ்வளவு நாளும் எப்படி தாக்குப் பிடித்து நிற்கின்றது என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

    எதையும் முற்றிலுமாக ஓழிக்க முடியாது.ஒன்றை ஒழித்தால் அதுவே வேறொன்றாக வெளிப்படும்.

    ஒழிக்க வேண்டும் என்பதை விட மாறுதல் செய்ய வேண்டும். புதிப்பிக்க வேண்டும் என்பது நேர்மறை எண்ணமாகும்.

    உங்கள் எழுத்தாற்றலுக்கும், எண்ணங்களுக்கும்,துணிவுக்கும், நடுவுநிலைமைக்கும் என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. முன்பே சொன்னது போல இந்தியாவில் சாதியை ஒழிப்பது என்பது குடும்ப அமைப்பை ஒழிப்பதற்கான முயற்சியே ஆகும். மேற்கத்திய நாடுகள் போல சமூகப் பாதுகாப்பு இல்லாத ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சாதி குழுக்களும், இனக்குழுக்களும் தழைத்தோங்குவதைக் காணலாம். மேற்கத்திய நாடுகள் போல பொருளாதார முன்னேற்றம், சமூகப் பாதுகாப்பு இந்தியாவில் நடைமுறைக்கு வரும் காலத்தில் குடும்பங்கள் வலுவிழந்து போய் சாதி வழக்கொழியும். ஆனால் அப்பொழுது நீங்கள் குடும்பத்தைக் காப்பது எப்படி என்று பதிவு போட வேண்டி வரும்.

    இட ஒதுக்கீடால் பாதிக்கப்படும் முன்னேறிய சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் எனச் சொல்லிக் கொள்வோரில் இட ஒதுக்கீடு உண்மையாக யாருக்குத் தேவையோ அவர்களை மட்டும் கண்டறிந்து இட ஒதுக்கீடு அளிப்பதுமே இப்போதைய தேவை. அதற்கு ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகையையும், அவர்களின் பொருளாதார நிலையையும், கல்வித் தகுதிகளையும், வேலைவாய்ப்புத் தகுதிகளையும் விரிவாக ஆராய்வது மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலமே இட ஒதுக்கீடு பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். மேலும் இரு தலைமுறைகளுக்கு மேல் இட ஒதுக்கீடு தரக் கூடாது என்பதும் சிறந்த பலனளிக்கும்.

    ReplyDelete
  11. Kudos Jagannaath! Pointed suggestions.Well thought out.
    Congrats.

    ReplyDelete
  12. ரொம்ப நல்ல படைப்பு. நன்றி.

    ReplyDelete
  13. Sengovi,Good and useful post I ever read!! Thanks!Jagannath,This what I thought when i read this post. Well thought dude.

    -Eswaran

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.