Sunday, December 28, 2014

திரைக்கதை சூத்திரங்கள் – II - பகுதி 31

Blake Snyder எனும் குரு

ஒரு டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு மகனாகப் பிறந்தவர் ப்ளேக் ஸ்னிடர். எனவே கலைக்கும் அவருக்குமான தொடர்பு, அவரது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ப்ளேக் ஸ்னிடரும் முதலில் டிஷ்னியின் டிவி சீரியலுக்கே எழுத ஆரம்பித்தார். அங்கிருந்து, தனது முதல் திரைக்கதையான Stop! Or My Mom Will Shoot (1992) மூலம் ஹாலிவுட்டில் களமிறங்கினார். பின்னர் திரைக்கதை ஆலோசகராகவும், திரைக்கதை வித்தையைக் கற்றுத்தரும் குருவாகவும் ஆனார். அவர் எழுதிய மூன்று புத்தகங்களும், திரைக்கதையை கற்றுத் தேற விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள், குறிப்பாக அவரது முதல் புத்தகமான ‘Save the Cat’.

சிட் ஃபீல்டு சொன்ன மூன்று அங்க வடிவத்தினை வைத்து, முழு திரைக்கதையை எப்படி எழுதுவது என்று பலரும் குழம்பியதைச் சென்ற பதிவில் பார்த்தோம். ப்ளேக் ஸ்னிடர், பல படங்களை ஸ்டடி செய்து எல்லா நல்ல திரைக்கதையிலும் சில அம்சங்கள் இருப்பதைக் கண்டுகொண்டார். அவற்றை 15 பீட் ஷீட் எனும் பெயரில் ஒரு வடிவத்திற்குக் கொண்டுவந்தார்.

இன்றளவும் ஹாலிவுட் படங்களின் திரைக்கதையில் செல்வாக்கு செலுத்தும் வடிவம் அது. அவதார் போன்ற பெரிய பட்ஜெட் படங்களானாலும் Miss Congeniality போன்ற சிறிய படங்களானாலும், ப்ளேக் ஸ்னிடர் சொல்லும் வடிவத்தை அடியொற்றியே திரைக்கதைகள் அமைக்கப்படுகின்றன. நான் ஏற்கனவே சொன்னபடி, மற்ற திரைக்கதை வடிவங்களைவிட, இவரின் மெத்தட் நம் சினிமாவிற்கு ஒத்துவருகின்ற ஒன்று என்பதால், 15 பீட் ஷீட்டைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். தொடர்ந்து அது எப்படி தமிழ் சினிமாவிற்கு ஒத்து வரும் என்றும் பார்ப்போம்.


15 பீட் ஷீட்டில் ப்ளேக் ஸ்னிடர் 15 விஷயங்கள் ஒரு திரைக்கதையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அவை:

  1. Opening Image
  2. Theme Stated
  3. Set up
  4. Catalyst
  5. Debate
  6. Break Into Two
  7. B Story
  8. Fun & Games
  9. Mid Point
  10. Bad Guys Close In
  11. All is Lost
  12. Dark Night of the Soul
  13. Break Into Three
  14. Finale
  15. Final Image

இந்த தொடரின் முதல் பகுதியின் முடிவிலேயே ஒரு கதையை முப்பது சீன்கள்வரை உருவாக்கிவிட முடியும் என்று பார்த்தோம், இல்லையா? அதை என்ன ஆர்டரில், எப்படி சுவாரஸ்யமாக வடிவமைப்பது என்பதற்கு இந்த பீட் ஷீட் உதவும். இந்தத் தொடரின் முதல் பாகத்தையும், இந்த பிட் ஷீட்டையும் கற்றுத் தேர்ந்தாலே திரைக்கதை எழுதுவது 75% பிடிபட்டுவிடும். மீதி 25%, உங்கள் கிரியேட்டிவிட்டியால் மட்டுமே நிரப்ப முடியும்!

இந்த 15 விஷயங்களும் உங்கள் திரைக்கதையில் இருந்தே ஆக வேண்டுமா? என்னைப் பொறுத்தவரை, இந்த பதினைந்தில் பத்தாவது இருந்துவிட்டால், அது ஒரு நல்ல திரைக்கதையாக உருவம் பெறும். 

இப்போது பீட் ஷீட்டில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும், விரிவாகப் பார்ப்போம். முதலில்....

Opening Image:

உங்கள் திரைக்கதையின் முதல் பக்கத்தில் நீங்கள் எழுதப் போகும் முதல் சீன், சில நேரங்களில் முதல் ஷாட் தான் இந்த ஓப்பனிங் இமேஜ்.

நாம் பார்த்த சில படங்களின் ஓப்பனிங் சீனை நினைத்துப் பார்ப்போம்.
தேவர் மகன் – ட்ரெய்னில் பங்க் தலையுடன் வந்திறங்கும் ஹீரோ தாரை தப்பட்டக்கு ஆடும் சீன்.

சுப்ரமணியபுரம் – சிறையில் இருந்து விடுதலையாகும் ஒருவன், சிறை வாசலிலேயே கத்தியால் குத்தப்படும் சீன்

சித்திரம் பேசுதடி – பைக்கில் ஹாயாக வரும் ஹீரோயினை, யாரையோ துரத்தும் ரவுடிகள் இடித்துவிட, அவள் சிறு ஆக்சிடெண்டில் சிக்குகிறாள்.
இந்த சீன்கள் எதையாவது நமக்குச் சொல்ல முயல்கின்றனவா?

ப்ளேக் ஸ்னிடர், ஓப்பனிங் இமேஜ் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்த்துவிடுவோம். ஓப்பனிங் இமேஜ் என்பதற்கு இரண்டே இரண்டு குறிக்கோள்கள் தான் இருக்க முடியும் என்கிறார் ப்ளேக் ஸ்னிடர்.  

ஒன்று : ஹீரோவின் கேரக்டர் ஆர்க்கின் ஆரம்ப நிலையைக் காட்டுவதற்கு. இப்படி இருந்த ஹீரோவுக்கு, இப்படி இப்படி நடந்ததால், இறுதியில் இப்படி ஆனான் எனும் Joseph Campel வட்டத்தினை மையமாகக் கொண்ட படங்களுக்கு ஒப்பனிங் சீன், இந்த வகையில் தான் வரும்.

தேவர் மகனின் ஆரம்பத்தில், கமல் ஊர்ப்பிரச்சினை பற்றி அலட்டிக்கொள்ளாத, நடுரோட்டில் ஆடுகிற ஜாலியான மனிதனாக வந்திறங்குகிறார். ஆனால் அது ஒரு ரத்தபூமி என்பது பின்னர் தான் தெரியவருகிறது. அவரது வாழ்வை தலைகீழாக அடுத்து நடக்கும் சம்பவங்கள் புரட்டிப் போடுகின்றன. ஆடியன்ஸ் ஹீரோவுடன் தான் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள் என்பதால், இந்தவகைப் படங்களில் ஓப்பனிங் இமேஜ் மிக முக்கியமானது. இது தான் ‘save the cat’ சீனாக இருக்கும்.

ஓப்பனிங் இமேஜின் இரண்டாவது வகைக் குறிக்கோள் : படத்தின் தன்மை அல்லது படத்தின் கரு எப்படிப்பட்டது என்று காட்டுவது.

சுப்பிரமணிய புரம் படத்தின் மையம், துரோகம். நாம் எதையோ நம்பிக்கையுடன் எதிர்பார்க்க, இந்த உலகம் நமக்கு அளிப்பது நம்பிக்கை துரோகம் தான். இந்த கசப்பான உண்மையை உடைத்துச் சொன்ன படம், சுப்பிரமணியபுரம். கவுன்சிலர், ஹீரோயின், நண்பன் என படத்தில் வரும் பல கேரக்டர்களும் துரோகம் செய்துகொண்டே செல்கின்றன. அது அவர்களாலேயே தவிர்க்க முடியாததாக, ஒரு நியாயத்துடன் செய்யப்படும் செயலாக துரோகம் இருக்கிறது.

படத்தின் ஓப்பனிங் சீனில், ஒருவன் ஜெயிலில் இருந்து விடுதலை பெறுகிறான். அப்போது நாம் எதிர்பார்ப்பது, அவன் வெளியே வந்து வானத்தைப் பார்க்க, அங்கே பறவைகள் பறந்து செல்லும் காட்சியை. ஆனால் நம் நம்பிக்கை, ஓப்பனிங் சீனிலேயே தகர்க்கப்படுகிறது. வன்முறையும், நம்பிக்கையைக் குலைக்கும் செயல்களுமே அடுத்து வரப்போகின்றன என்று ஆடியன்ஸின் சப்கான்ஷியஸ் மைண்ட்டை செட் செய்ய, இந்த ஓப்பனிங் சீன் உதவுகிறது. இது தான் ஒரு நல்ல திரைக்கதையின் முதல் அடையாளம்.

சித்திரம் பேசுதடியில் ஏன் அந்த சீன் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். கூடவே, உங்கள் திரைக்கதையின் முதல் சீன் என்னவாக இருக்கிறது என்று பாருங்கள்.

ஓப்பனிங் சீனில் இன்னொரு வகை உண்டு. அது, ஏற்கனவே நடந்த சில விஷயங்களை சுருக்கமாகச் சொல்வது. மேட்டுக்குடியில் ஒரு சரித்திர நிகழ்வு சொல்லப்படுவது ஒரு உதாரணம். இரு குடும்பப் பகை, முக்கியக் கேரக்டரின்(குறிப்பாக வில்லனின்) இயல்பைக் காட்டும் ஏதோவொரு சம்பவம் என திரைக்கதையில் பின்னால் சொன்னால் ஒட்டாமல் துருத்திக்கொண்டு தெரியும் சீன்களை, முதலிலேயே முன்கதைச் சுருக்கமாகச் சொல்வதும் மரபு.

பீட் ஷீட்டின் அடுத்த அம்சங்களை அடுத்த வாரம் பார்ப்போம். ஒரு முக்கிய வேலையில் இருப்பதால், தொடர் இடையில் எழுதமுடியாமல் போனது. இனி தொடர்ந்து வரும் என்று நம்புகிறேன். அக்கறையுடன் கேட்ட நண்பர்களுக்கு நன்றி.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. ஆரண்யகாண்டம்.
    ஜாக்கி ஷெராப் முதல் காட்சியே யாஸ்மினோட உடலுறவு கொள்ள முயன்று ' முடியாமல் ' கோபத்தில் அவளை அடிப்பது .

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...வானரத்தையும் கெடுத்துட்டேனா!!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.