Monday, April 6, 2015

முதல் மரியாதை - தமிழில் ஒரு உலக சினிமா

 உலகசினிமா:
உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் பல்லாயிரம் சினிமாக்கள் படைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் மட்டுமே உலக சினிமா என்று கொண்டாடப்படுகின்றன. உலக சினிமா என்பதற்கான வரையறை சிக்கலானதாக இருந்தாலும், எளிமையாகப் பின்வருமாறு சொல்லலாம்

தன் சொந்த மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக முன்வைக்கின்ற, அதே நேரத்தில் மனித வாழ்வின் அபத்தத்தை/மேன்மையை நமக்கு உறைக்கின்றாற் போன்று சொல்கின்ற, இதுவரை நாம் தரிசிக்காத கோணத்தில் வாழ்வைப் பேசுகின்ற சினிமாவே உலக சினிமா ஆகின்றது.  

அந்த வகையில் தமிழில் வந்த முக்கியமான படங்கள் பற்றி www.tamilss.com-ல் தொடராக எழுதினேன். அவை இனி இங்கே பதிவிடப்படும். திரைக்கதை தொடரைப் படிப்பவர்கள் இதைத் தவறவிட வேண்டாம்.

           முதல் மரியாதை - தமிழில் ஒரு உலக சினிமா
 
ல்லா இடத்திலும் தான் இருக்க முடியாது என்பதாலேயே இறைவன் தாயைப் படைத்தான். இறுதிவரை தாய் உடன்வர முடியாது என்பதாலேயே மனிதன் தாரத்தையும் படைத்துக்கொண்டான். தாயன்பும், அதற்கு நிகரான தாரத்தின் அன்பும் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இரண்டும் சரியாக அமைந்துவிடுகிறது. பலருக்கு ஒன்று கிடைத்தால் இன்னொன்று இல்லையென்றாகி விடுகிறது.  முதலில் தாயன்பு கிடைக்காமல், பின்னர் நல்ல தாரத்தின் அன்பில் நனைவோர் வாழ்க்கையாவது பரவாயில்லை எனலாம். ஆனால் நல்ல தாயன்பைப் பெற்றுவிட்டு, மோசமான தாரத்திடம் சிக்குவது நரகம். நாற்பது வயதைக் கடந்த நிலையிலும்பாராட்ட..மடியில் வைத்துத் தாலாட்டதாய்மடி தேடித் தவிப்பது கொடுமை. அத்தகைய ஒரு துரதிர்ஷ்டசாலியான மலைச்சாமி எனும் மனிதரின் கதை தான் முதல் மரியாதை.
கிராமத்துப் பெரிய வீட்டுப் பெண்ணான பொன்னாத்தா, காதல் என்ற பெயரில் ஒருவனிடம் ஏமாந்து வயிற்றில் பிள்ளையுடன் நிற்கிறாள். குடும்ப கௌரவம் காக்க,மாமாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஏழை மலைச்சாமி பொன்னாத்தாவை மணக்கிறார். அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தன் குழந்தையாகவே எண்ணி வளர்த்து, திருமணம் செய்து கொடுக்கிறார். ஆனாலும் பொன்னாத்தா மலைச்சாமியை மதிப்பதே இல்லை. அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வரும் குயிலியுடன் மலைச்சாமிக்கு நட்பு ஏற்படுகிறது. அதுவே அவளின் அன்பினால், காதலாக ஆகிறது.

பொன்னாத்தாவுக்கு விஷயம் தெரிய வந்து, அவர்களைப் பிரிக்க முற்படுகிறாள். அதே நேரத்தில் பொன்னாத்தாவின் காதலன் அவளைத் தேடி அந்த ஊருக்கு வர, மலைச்சாமியின் குடும்ப கௌரவத்தைக் காக்க குயிலி அவனைக் கொன்றுவிட்டு, ஜெயிலுக்குப் போகிறாள். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் மலைச்சாமி, பெயிலில் வரும் குயிலியைப் பார்த்துவிட்டு மனநிறைவுடன் இறக்கிறார். குயிலியும் அவர் பிரிவு தாளாது மரணமடைய,  வாழ்க்கையை அடுத்த உலகிலாவது மகிழ்ச்சியுடன் வாழ, அந்த உன்னத காதல் ஜோடி நம்மிடமிருந்து விடை பெறுகிறது! (இடையில் செல்லக்கண்ணு-செவ்வளியின் விடலைக்காதலும், அதன் சோக முடிவும் உண்டு)

ஒரு திரைப்படத்தின் வெற்றியானது உண்மையில் கதையில் இல்லை, அதைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் திரைக்கதையிலேயே உள்ளது. அதனாலேயே கதையே இல்லாத அல்லது அரதப்பழசான கதையுள்ள திரைப்படம்கூட, பெரும் வெற்றி பெறுகிறது. முதல் மரியாதையைப் பொறுத்தவரை நல்ல கதையும் அமைந்துவிட, பாரதிராஜாவால் இந்த திரைக்கதை பின்னப்பட்ட விதம் தனி ஆய்வுக்குரியது. தமிழ்சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்றாக முதல் மரியாதையைத் தாராளமாகக் குறிப்பிடலாம். நேர்கோட்டுப்பாணியில், பொன்னாத்தாவின் காதலில் இருந்து படத்தை ஆரம்பித்து இருந்தால், பெரிதாக சுவாரஸ்யமோ திருப்பமோ படத்தில் இருந்திருக்காது. அதை கொஞ்சம், கொஞ்சமாக சரியான சமயத்தில் வெளிப்படுத்தியதில்தான், இந்தப் படம் ஜெயித்தது.

பொன்னாத்தா ஒரு கடுமையான பெண்மணி என்று ஆரம்பித்து, மலைச்சாமி செருப்புப் போட மாட்டார் என்று சொல்லி, யாரோ காலில் விழுவதாக பின்னர் காட்டி, அது பொன்னாத்தாவின் அப்பா தான் என்று சுவாரஸ்யம் கூட்டுகிறார் பாரதிராஜா. பின்னர் மலைச்சாமி-குயிலி காதல் பார்வையாளனுக்கு உறுதிப்படுத்தப்படும்போது, ஒரு பெரிய மனுசன் இதைச் செய்யலாமா எனும் சிறுகேள்வி நமக்கு உதிக்கும் நேரத்தில், ’மலைச்சாமி பொன்னாத்தாவுடன் வாழவே இல்லை..பொன்னாத்தா மகள் அவர் பெண்ணே இல்லை, பொன்னாத்தா யாரிடமோ ஏமாந்ததில் பிறந்தவள்என்று கதையிம் மர்மமுடிச்சு அவிழ்க்கப்படுகிறது. ஒரு கதையின் முக்கிய விஷயத்தை, எந்த நேரத்தில், எப்படிச் சொன்னால் படம்பார்ப்போர், கலங்கிப்போய் படத்துடன் ஒன்றிவிடுவார்கள் என்பதற்கு அந்தக் காட்சி நல்ல உதாரணம். ஏற்கனவே மலைச்சாமியின் நல்ல மனதும், வேடிக்கையான சுபாவமும், மோசமான வாழ்க்கையும் சொல்லப்பட்டுவிட்ட நிலையில், இந்த விஷயத்தை இப்போதும் மலைச்சாமி சொல்வதாக காட்சி அமைக்காமல் பொன்னாத்தாவே சொல்வதாக காட்சிப்படுத்தியது தான் இயக்குநரின் திறமைக்குச் சான்று

இந்தப் படத்தின் கதையில் செல்லக்கண்ணு-செவ்வளி காதலுக்கு எவ்வித முக்கியமும் இல்லை தான். ஆனால் திரைக்கதையில் அந்தக் காதலின் இடம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் ஒருவகையில் அந்தக் காதல், பொன்னாத்தா காதலின் கண்ணாடி பிம்பம் தான். விடலைப்பருவத்தில் வாழ்க்கையின் சிக்கல்களை அறியாமல், தனக்கென்று தனி உலகத்தை அமைத்துக்கொண்டு வளர்கிறது அந்தக் காதல். படம் பார்ப்போரின் சப்-கான்சியஸ் மைண்ட்டில் பதியும் இந்தக் காதல், பொன்னாத்தாவின் காதல்கதை வெளிப்பட்டதும் அதனுடன் எளிதில் இணைந்துகொள்கிறது. அந்தக் காதலின் முடிவு போன்றே பொன்னாத்தாவிற்கு அவளது காதலனாலேயே ஒரு முடிவு ஏற்பட்டிருக்கலாம். உண்மையில் பொன்னாத்தாவின் காதலன் கதாபாத்திரமானது, செல்லக்கண்ணு மற்றும் மலைச்சாமி மருமகன் ஆகிய இரு கதாபாத்திரங்களின் கலவை தான். (படத்தின் கதைக்கு அந்த மருமகனும் தேவையில்லை!). 

திரைக்கதையைப் போன்றே படத்தின் பல காட்சிகளும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு படத்தின் காட்சிகளிலேயே முக்கியமானது, அதன் முதல் காட்சி தான். (இதை மெய்ப்பிக்க நல்ல கதை அவசியம்.) முதல் மரியாதையின் முதல் காட்சி, ஆற்றோரம் இருக்கும் ஒரு குடிசைவீட்டையும், அதை ஆவலுடன் எட்டிப்பார்க்கும் சிறுவர்களையும் காட்டுகிறது.  ஒரு காதலின் நினைவுச்சின்னமான அந்தக் குடிசைக்குள் கிடப்பது மலைச்சாமி மட்டுமல்ல, அவரின் காதலும்தான். அந்தக் குடிசையை ஆவலுடன் எட்டிப்பார்ப்பது சிறுவர்கள் மட்டுமல்ல, நாமும் தான். அந்தக் காட்சி தாம் மொத்தப் படமே. ’உங்களை விழி விரிய வைக்கும் ஒரு காதலைக் காட்டுகிறேன்எனும் இயக்குநரின் சிம்பாலிக் ஷாட் தான் அது. ஏற்கனவே குளோசப் ஷாட்களையும், உவமை ஷாட்களையும் வைப்பதில் கை தேர்ந்தவர் பாரதிராஜா. ’..கிளியிருக்குபாடலில்மாலை வருமுன்னு சோலைக்கிளி ரெண்டும் மத்தளம் கொட்டிக்கிச்சாம்! பாடலுக்கு அவர் வைத்திருக்கும் ஷாட் அதகளம்!

அதே போன்றதேபூங்காற்று திரும்புமாபாடல் முடியவும் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சியின் கேமிராக் கோணம். மலைச்சாமியின் வாழ்வில் குயிலி புகும் நேரம் அது. அவனது துயரத்தை சரிபாதியாக பங்கிட வந்தவளாக அவள் அவருக்கு காட்சி தரும் நேரம் அது. அந்த முக்கியமான தருணத்தை, இருவரும் ஒருவரில் பாதி இன்னொருவராக ஆவதை பாரதிராஜா காட்டியிருக்கும் விதத்தைப் பாருங்கள், அவர் ஏன் தமிழ்சினிமாவின் முக்கியமான இயக்குநராக கொண்டாடப்படுகிறார் என்று புரியும். அந்த அர்த்தநாரீஸ்வர ஸ்டில் இங்கே:

இந்தப் படத்தின் நடிகர் தேர்வு குறிப்பிடத்தகுந்த விஷயம். ஒரு ஊர்ப் பெரிய மனிதர், அதே நேரத்தில் சோகத்தை நெஞ்சில் சுமப்பவர்; குயிலியால் மரியாதையுடன் பார்க்கப்படுபவர்-எனும் வேடத்திற்கு தமிழ் சினிமாவில் மரியாதைக்குரிய நடிகர் திலத்தை விட்டால், பொருத்தமான ஆளேது!சிவாஜியே சொன்னது போல், பல காட்சிகளில் அவர் இயல்பாக நிற்கிறார்;பேசுகிறார் அவ்வளவே. குளோசப் ஷாட்களில் மட்டுமே கண்களும் கன்னத்தசைகளும் நடிக்கின்றன.

ஏற்கனவே நிறைகுடம், அவன் தான் மனிதன் போன்ற சில படங்களில் நடிகர் திலகம் இத்தகைய நடிப்பை வழங்கியிருந்தாலும், அவை காலத்திற்கும் நிற்கும் கலைபடைப்புகளாக அமையவில்லை. காலத்திற்கும் நிற்கின்ற சிவாஜியின் படங்களான வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், பாசமலர் போன்ற பல படங்களில் கதாபாத்திரத்தின் தன்மை காரணமாகவும், அந்த காலகட்டத்தின் காரணமாகவும் உணர்ச்சிகரமான நடிப்பாக அமைந்துவிட்டது. (என்னதுய்யா..வரி கேட்டானா? அப்படியா?...என்றெல்லாம் சப்பையாக கட்டபொம்மன் பேசினால் காமெடி ஆகியிருக்காது?)

அடுத்த சிறந்த பாத்திரத் தேர்வு ராதா தான். அழகும் திறமையும் ஒருங்கே அமைவது அபூர்வம். அத்தகைய அபூர்வ நடிகைகளில் ஒருவர் ராதா. குயிலி கதாபாத்திரமானது உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண். ராதாவின் உடல்வாகு அதிக சதைப்பிடிப்பற்ற, அதே நேரத்தில் டொக்காகவும் தோன்றாத வகையைச் சேர்ந்தது. எனவே எளிதில் ராதா, குயிலி கேரக்டரில் செட்டாகிறார். அதற்கு ராதிகாவின் பிண்ணனிக்குரல் தரும் அப்பாவித்தனம், அழகூட்டுகிறது. மற்ற படங்களில் நளினத்தை மட்டுமே காட்டிய ராதா, இந்தப் படத்தில் காட்டியிருக்கும் உடல்மொழி தெனாவட்டானது.

உரசிக்கிறதுக்கு பொன்னாத்தா வீட்டுச்சுவர் தான் வசதியா இருக்குன்னா, வாங்கடி வாங்கஎனும் அற்புதமான டயலாக் பேச தமிழ் சினிமாவில் பொருத்தமான நடிகைகள் இருவர் தான். ஒருவர் காந்திமதி, இன்னொருவர் வடிவுக்கரசி. காந்திமதியின் பார்வையைவிட, வடிவுக்கரசியின் பார்வை கடுமையானது, அதே நேரத்தில் இளமையானது( நன்றி: சிவப்பு ரோஜாக்கள்). எனவே பொன்னாத்தாவாக வடிவுக்கரசியைத் தவிர வேறு யாரையும் நினைக்க முடியவில்லை. அதே போன்ற கள்ளம் கபடமற்ற காதல் ஜோடிகளான தீபன் - ரஞ்சனி முகமும் பொருத்தமானது.

கதை-வசனம் எழுதிய ஆர்.செல்வராஜ், சினிமாவுலகில் மரியாதைக்குரிய கதாசிரியர். படத்தின் பெரும்பலம், இவரது கிராமத்து இயல்பு கெடாத வசனங்கள் தான். அதே போன்றே ஒளிப்பதிவாளர்கள் கார்த்திக்-அசோக்கின் பங்களிப்பும் பாராட்டப்பட வேண்டியது. செவ்வளி அந்திவானம் பற்றிப் பேசப்பேச, குளோசப்பிலிருந்து லாங் ஷாட்டாக ஜூம் அவுட் ஆகி, மீண்டும் அவளை நெருங்கி வசனத்துடனே பயணிப்பது கொள்ளை அழகு.

ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு உச்சநேரம் வரும். அவனது கலைத்திறமை முழுவீச்சுடன் வெளிப்படும் அந்தக் காலகட்டம், கலைக்கு மிக முக்கியமானது. இந்தப் படமும் அப்படி ஒன்றல்ல, மூன்று மாபெரும் கலைஞர்களின் உச்ச நேரத்தில் வெளிவந்தது. பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து எனும் மூன்று கிராமத்து ராசாக்கள், இந்த மண் வாசனை நிறைந்த கதையை காலத்திற்கும் நிற்கும் பொக்கிஷமாக படைத்துத் தந்தார்கள். உண்மையில் இளையராஜாவின் இசையையும், வைரமுத்துவின் வரிகளையும் சிலாகிக்க தனிக் கட்டுரையே தேவைப்படும்.

.கிளியிருக்கு..பழமிருக்குஎன்று ஆரம்பிக்கும் ராஜாவின் இசை ராஜாங்கம், பூங்காற்றாக வருடி, புயலாக அடித்து ஓய்கிறது. இளையராஜாவின் படங்களிலேயே புல்லாங்குழல் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட படமாக இது இருக்கலாம். அதிலும் படம் முழுக்க வரும்பூங்காற்று திரும்புமாபாடலின் புல்லாங்குழல் பின்னணியிசை, நம் நெஞ்சை உருக்குவது. எப்போது கேட்டாலும், ஒரு தீவிர இலக்கியப்படைப்பைப் படித்தது போன்ற மனக்கிறக்கத்தைத் தருவது ;பூங்காற்று திரும்புமாபாடல். எந்தவொரு பாடலுமே இந்தப்படத்தில் சோடை போகவில்லை

கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் கிராமத்து வாசம் பொங்கிய காலம் அது. இதிலும் கவித்தன்மை பெரிதும் இல்லாத, இயல்பான வார்த்தைகளைப் போட்டே நம் மனதைக் கொள்ளை கொண்டிருப்பார். ‘ஏறாத மலைமேலே..இலந்தை பழுத்திருக்குஎனும் கிராமத்துக் குறும்புவரிகளும் உண்டு, ‘சுழியில படகு போல எம்மனசு சுத்துது சுத்துது..பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு..விவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சுஎனும் குயிலியின் நிலையைச் சொல்லும் அர்த்தமான வரிகளும் உண்டு. இளையராஜா-வைரமுத்து கூட்டணி உடைந்ததில் தமிழ்சினிமாவுக்கே பெரும் நஷ்டம்!

இந்த படத்தைப் பற்றியும், படத்தின் கேரக்டர்கள் பற்றியும் அதிகம் பலரால் எழுதப்பட்டுவிட்டாலும், பலரால் கண்டுகொள்ளப்படாத விஷயம் என்னவென்றால் பொன்னாத்தாவும் அவளின் காதலும்தான். இந்தப் படத்தின் அதிசயங்களில் ஒன்று அந்த கதாபாத்திர வடிவமைப்பு.

ஆண்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகும்போது வன்முறை மூலமோ, வெளியுலகில் நாட்டத்தைத் திசைதிருப்புவதன் மூலமோ அதிலிருந்து மீண்டுவிடுகிறார்கள். ஆனால் அவ்வாறு மீளமுடியாத சமூக நிலையில் இருக்கும் சில பெண்கள் வாழ்வில் அடையும் ஏமாற்றம், அவர்கள் மனதில் வன்மமாக, ஆங்காரமாக மாறி நின்றுவிடுகிறது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் பேச்சு/நடத்தை மூலம், எதிராளியை செருப்பின் கீழ் மாட்டிய புழுவைப் போல நசுக்கவல்லது அந்த வன்மம். (இந்த நேரத்தில் யாராவது அரசியல்வாதிகள் உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், இந்த தளம் பொறுப்பல்ல!)

பொன்னாத்தாவின் காதலன் பணத்தாசை பிடித்த, கெட்டபழக்கங்கள் உள்ளவன் என்பது நமக்குக் காட்டப்பட்டாலும் அது பொன்னாத்தாவிற்கு தெரிவதே இல்லை.  தன் காதலை குடும்ப கௌரவத்தின் பெயரால் பிரித்துவிட்டதாகவே எண்ணுகிறாள். அந்த வன்மத்துடனே எல்லாவற்றையும் அவள் அணுகிறாள். பிரித்த அப்பனை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறாள். மலைச்சாமியை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இழிவாக நடத்துகிறாள். மகளிடம்ஆயிரம் தெய்வம் உலகத்துக இருந்தாலும் பிள்ளை வரம் கொடுக்கிறது புருசன் தாங்கிறதை மறந்துராதேஎன்று மலைச்சாமி முன்னால் சொல்லி, தன் கணவன் தனக்கு பிள்ளை கொடுத்த காதலன் தான் என்கிறாள்

இறுதியில் பிணமாகக் கிடக்கும் காதலனைக் கண்டதும், ஆற்றுநீர் தெறித்து குங்குமம் அழிய நிற்கிறாள். கடைசிவரை அவள் வாழ்ந்தது ஒரு கற்பனை உலகம். அன்பான காதலனிடமிருந்து பிரித்து, வாழ்க்கையை சிதைத்துவிட்டார்களே எனும் ஆங்காரத்தைத் தவிர அவள் வாழ்க்கையில் வேறு ஏதும் இல்லை.

செல்லக்கண்ணு-செவ்வளி காதலை உண்மையில் பொன்னாத்தா தான் ஆதரித்திருக்க வேண்டும். நல்ல வாழ்க்கைக்கும், நல்ல சிந்தனைக்கும் நேரடித் தொடர்பு இருக்கவே செய்கிறது. தனக்குக் கிடைக்காத வாழ்க்கை செவ்வளிக்குக் கிடைக்கட்டுமே எனும் எண்ணமே அவளுக்கு வருவதில்லை. அவள் மனதில் இருப்பதெல்லாம் வெறுப்பும், வன்மமுமே; அங்கே அன்புக்கு இடம் இல்லை.

கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, பாடல்கள் என பலதுறைகளும் சிறப்பாக அமைந்த படங்கள் வெகுசிலவே. அந்தவகையில் முதல்மரியாதை, தமிழ்சினிமாவின் மகுடங்களில் ஒன்று. படம் வெளியாகி 38 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்று பூத்த மலராக, புதிதாகப் பார்ப்போரையும் கவரும் இந்த வெட்டி வேரின் வாசனையை மீண்டும் ஒருமுறை அனுபவியுங்கள்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.