Saturday, April 18, 2015

ஓ காதல் கண்மணி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
அலைபாயுதே எனும் ஹிட் கொடுத்து 15 வருடங்கள் ஆகிவிட்ட சோகச்சூழ்நிலை. கூடவே எங்கு சென்றாலும் ‘அலைபாயுதே மாதிரி ஒரு படம் கொடுங்க சார்’ எனும் நச்சரிப்பு. இதையெல்லாம் கண்டு வெகுண்டெழுந்த மணிரத்னம், மீண்டும் ஒரு லவ் ஸ்டோரியுடன் களமிறங்கியுள்ளார். கூடவே ஏ.ஆர்.ரஹ்மானும், பி.சி.ஸ்ரீராமும் சேர்ந்துகொள்ள, வழக்கம்போல் மணிரத்னம் படத்தின் எதிரியான ’எதிர்பார்ப்பு’ எகிறிவிட்டது. மணியின் கடைசி பிரம்மாஸ்திரமான ‘அலை பாயுதே’-வைக் கையில் எடுத்த பின்பாவது, ஜெயித்தாரா?
ஒரு ஊர்ல :
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்யாணம் என்றாலே பிடிக்காது. (காரணம், கீழே சொல்கிறேன்!). எனவே லிவிங் டுகெதராக வாழ முடிவு செய்கிறார்கள். அந்த முடிவில் ஜெயித்தார்களா? அல்லது லிவிங் டுகெதர் அபத்தம் உணர்ந்து, கல்யாணம் எனும் ஓல்டு ஃபேசனுக்கே திரும்பினார்களா என்பதே கதை. (ஆக்சுவலி இது தான் கதைன்னு மணிரத்னத்துக்கே தெரியாது. படம் முடிஞ்சு, இரண்டு மணி நேரம் நானா யோசிச்சுக் கண்டுபிடிச்சேன்! படத்தில் வேறு கதைகூட இருக்கலாம், ஜாக்ரதை!)

உரிச்சா:
ஹிட் படம் கொடுத்து 15 வருடங்கள் ஆனாலும், மணி மீதான கிரேஸ் கொஞ்சமும் குறைந்துவிடவில்லை. இண்டர்வெல்வரை, படத்தில் இருப்பது காதல்..காதல்..காதல் மட்டுமே. மணி எப்போதுமே ரொமான்ஸாகக் கதை சொல்வதில் மன்னன். இதிலும் அப்படியே. படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் வரும் சர்ச் சீனில் துல்கரும் நித்யாவும் பேசிக்கொள்ளும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது இளமைத் துள்ளல். வாவ்!

மணிரத்னத்தின் வயது 58 என்றும், அவர் மனைவி சுகாசினி என்றும் விக்கிபீடியா சொல்கிறது. இருந்தும், அவரிடம் இருந்து இப்படி ரகளையான ரொமான்ஸ் சீன்கள் வருகிறது என்பதை, நம்பவே முடியவில்லை. வேலைக்காக மும்பை வரும் துல்கர், நித்யா மேனனைப் பார்க்கிறார். இருவருக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்துப்போகிறது. அடிக்கடி சந்திக்கிறார்கள். நித்யா போகும் இடமெல்லாம் துல்கரும் போகிறார். ஏறக்குறைய இண்ட்ர்வெல்வரை இது தான். ஆனால் அத்தனை சீன்களும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது.

அகமதாபாத்தில் இருவரும் தங்கும் சீனில் ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்து நம்மைப் ’பறந்து செல்ல’ வைக்கின்றன. ஒரு பக்கம் இந்த ஜோடியின் இளமைத் துள்ளல், இன்னொரு பக்கம் ஹவுஸ் ஓனரான பிரகாஷ்ராஜுக்கும் அவரது ‘அல்சைமர்’ மனைவிக்கும் இடையிலான முதிர்ச்சியான காதல். இரண்டு ஜோடிகளும் நம் மனதில் நிறையும்போது, ‘கல்யாணம் வேண்டாம்...லிவிங் டுகெதராக வாழ்வோம்’ என்று முதல்ஜோடி முடிவெடுக்கிறது. ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறார்களென நாம் பலவாறு யோசித்ததில் கிடைத்த பதில், ***க்கொழுப்பு தான்.

ஹீரோயினுக்காவது ஒரு சப்பைக்காரணம் இருக்கிறது. ஹீரோவுக்கு அதுவும் இல்லை. ’படிக்கணும், கல்யாணமே(!) வேண்டாம்....பில்கேட்ஸ் மாதிரி ஆகணும், அதனால் கல்யாணமே(!) வேண்டாம்’ என்று ஹீரோ-ஹீரோயின் முடிவெடுக்கிறார்கள். ‘ஏம்ப்பா..படிக்கிறதுக்கும் பில்கேட்ஸ் மாதிரி ஆகறதுக்கும் கல்யாணத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? படிச்சிட்டுக் கல்யாணம் பண்ணு, இல்லேன்னா கல்யாணம் பண்ணிட்டுப் படி’ என சி செண்டர் ரசிகன்கூட இண்டர்வெல்லுக்கு முன்பே சொல்வதை, ஏகப்பட்ட கும்தலக்கடி கும்மா செய்து கிளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினும் சொல்கிறார்கள்.

ஹீரோவின் கடுமையான அண்ணன் என்று அறிமுகமாகும் ஒரு சப்பை ஆள்கூட கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். பயங்கர வில்லியாக அறிமுகமாகும் கோடீஸ்வரியான நித்யாவின் அம்மாவும் கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்கிறார். பிரகாஷ்ராஜும் கல்யாணம் செஞ்சுக்கோங்கப்பா என்று கெஞ்சுகிறார். ஆடியன்ஸும் ‘ங்கொய்யால...என்னதாண்டா பிரச்சினை உங்களுக்கு? கல்யாணம் செஞ்சு தொலைங்கடா’ என்று திட்டுகிறார்கள். ம்ஹூம்..அதெப்படி?..’கிளைமாக்ஸ் இன்னும் வரலைல்ல’ என அந்த அருமையான ஜோடி நிறுத்தி, நிதானமாக யோசித்து முடிவு செய்கிறார்கள்..கூடவே நம்மையும் செய்கிறார்கள்..யப்பா!

அலைபாயுதேவில் ஹவுஸ் ஓனர் அழகம்பெருமாள் கேரக்டர் + அர்விந்தசாமி-குஷ்பூ ஜோடிகளை ஜெராக்ஸ் எடுத்து, பிரகாஷ்ராஜ் ஜோடியை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த ஜோடி அறிமுகமாகும்போதே, கிளைமாக்ஸ் இந்த ஜோடியை வைத்துத்தான் என்று தெரிந்துவிடுகிறது. எனவே கிளைமாக்ஸில் ஹீரோ-ஹீரோயின் பரபரப்பாக அங்கே இங்கே ஓடினாலும், ஒன்றும் வேலைக்காகவில்லை.

அலைபாயுதேவில் ’காதல் என்பது கல்யாணத்தில் முடியும் கலர் கனவல்ல.’ எனும் செய்தி அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இங்கே லிவிங் டுகெதரின் பிரச்சினைகள் எதுவும் பேசப்படவேயில்லை. ’இரண்டுபேர் விரும்புகிறார்கள், ஒன்றாகத் தங்குகிறார்கள், ஜல்சா செய்கிறார்கள், கிளைமாக்ஸில் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்’ என்று தட்டையாகப் படம் நகர்வது தான் கொடுமை.

இண்டர்வெல்வரை, படம் ஒரு கலர்ஃபுல் கனவு. பி.சி.ஸ்ரீராம், ஏ,ஆர்,ரஹ்மான், மணிரத்னம் மூவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். அதன்பின், படம் ஒரு கொடுங்கனவு!

மொத்தத்தில், முதல்பாதி............ஓகே இல்லை, ..........பெஸ்ட்.
இரண்டாம்பாதி...கண்மணி இல்லை, ...சுகாசினி.

துல்கர் சல்மான்:
’வாயை மூடிப் பேசவும்’ படத்தில் மொக்கையாக வந்த மம்முட்டியின் வாரிசு. இதில் பெண்கள் ரசிக்கும் வண்ணம் அட்டகாசமாக வருகிறார். செம ஜாலியான கேரக்டர். பல இடங்களில் மாதவன் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதுவே இவருக்கு முதல் படமாக இருந்திருக்க வேண்டும். இனி ரொமாண்டிக் ஹீரோவாக ஒரு ரவுண்டு வருவார்.

நித்யா மேனன்:
’ஜேகே’ பார்க்கும்போதே, இந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல படம் அமைந்தால் கலக்கிவிடுவார் என்று தோன்றியது. இதில் அதை நிரூபித்திருக்கிறார். உயரம்தான் அவ்வப்போது இடிக்கிறது. ஆனாலும் அழகும் நடிப்புத்திறமையும் கலந்த நடிகை. அந்தக் கண்களே அவர் நினைப்பதைச் சொல்லிவிடுகின்றன. துல்கருக்கு இணையாக, உற்சாகமான பெண்ணாக வருகிறார். அதிலும், தான் கர்ப்பமாக இருப்பதாக துல்கரை கலங்க வைக்கும் சீனில் பின்னிவிட்டார். இரண்டாம்பாதியில் சீரியஸ் சீன்களில் அவர் நன்றாக நடித்தாலும், நாமும் ‘சீரியஸ்’ கண்டிசனில் இருப்பதால் ரசிக்க முடியவில்லை.

பிரகாஷ்ராஜ் - லீலா:

ரொம்ப நாளைக்கு அப்புறம், பிரகாஷ்ராஜ். இவர் எப்படி நடிப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இவருக்கு ஜோடியாக வரும் லீலா என்பவரின் நடிப்பும் கேரக்டரைசேசனும் சூப்பர். இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்களும், இருவருக்கிடையிலான அன்பும் சூப்பர். கிளைமாக்ஸ்வரை நமக்கு ஆறுதல் தருவது, இந்த ஜோடி தான்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- இரண்டாம்பாதி. உண்மையில் என்ன செய்வது எனத் தெரியாமல் சுற்றோ சுற்றென்றி சுற்றியிருக்கிறார்கள். முதல்பாதியில் இருந்த மேஜிக் எல்லாம் காணாமல் போய், ஆடியன்ஸின் பொறுமையை முடிந்தவரை சோதிக்கிறார்கள்.
- இரண்டு பேர் லிவிங் டுகெதர் வாழ முடிவெடுக்கிறார்கள் என்றால், ஏதாவது ஒரு வலுவான காரணம் வேண்டும். கொழுப்பு தான் காரணம் என்றால், அந்தக் கேரக்டர்கள்மீதே வெறுப்பு வந்துவிடுகிறது. ஏற்கனவே இதுவொரு சென்சிடிவ்வான விஷயம். இதில் ’ஜஸ்ட் லைக் தட்’ என லிவிங் டு கெதரில் குதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- கிளைமாக்ஸில் திருந்துவதற்கும் வலுவான காரணம் இல்லை. பிரகாஷ்ராஜ் ஜோடியைப் பார்த்துத் திருந்துகிறார்கள் என்றால், படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஜோடி இருக்கிறதே?
- தன் ட்யூனைத் தானே காப்பியடிக்கிற ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரி மணிரத்னம் ஆகிட்டாரே!

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:


- மணிரத்தினத்தின் ரொமாண்டிக் முதல்பாதி ஸ்க்ரிப்ட்
- நித்யாமேனன்..........வாவ்!
- அழுக்கான மும்பையைக்கூட அழகாகக் காட்டும் பி.சி.ஸ்ரீராமின் கேமிரா. ஆர்க்கிடெக்ட் பற்றி வரும் வசனங்களைவிட, ஷாட்கள் அசத்தல்.
- ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான இசையில் மெண்டல் மனதில், நமநம, பறந்து செல்லவா மூன்றும் சூப்பர். மற்றவை மனதில் ஒட்டவில்லை. பிண்ணனி இசையில் இளமைத்துள்ளல் அதிகம். இன்னொருவரும் பிண்ணனி இசையில் ரஹ்மானுடன் இணைந்திருக்கிறார். பெயர் மறந்துவிட்டது.
- பிரகாஷ்ராஜ்+லீலா ஜோடி

ரேட்டிங்:

                       2/5

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

 1. வரட்டும் ...........மவுஸ ஆட்டிக்கிட்டே பாக்க........!

  ReplyDelete
 2. //வழக்கம்போல் மணிரத்னம் படத்தின் எதிரியான ’எதிர்பார்ப்பு’ எகிறிவிட்டது// ஹிஹி செம...

  ReplyDelete
 3. ரெண்டாம் பகுதி சுகாசினி ஹி ஹி...

  ReplyDelete
 4. வெண்டைகாய் ... வெளக்கெண்ண்ய்ல
  வேற அதுக்கு ஒரு தாளிப்பு...

  ReplyDelete
 5. சில இடங்களில் சிரிச்சிட்டேன் விமர்சனத்தில் தான் சொல்றேன்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.