Monday, April 13, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 41

இந்திய உணவுகளைப் போன்றே, இந்திய சினிமாக்களுக்கும் உரிய சிறப்பம்சம், மசாலா.

மசாலா என்ற வார்த்தையே சமீபகாலத்தில் மரியாதை இழந்துவிட்டாலும், மசாலா இல்லாமல் நம் சினிமாக்கள் இல்லை. இங்கே மசாலா என்று எதைச் சொல்கிறோம்?

ஒரே படத்தில் ஆக்சன், காமெடி, காதல், சென்டிமென்ட் என அனைத்துமே மிக்ஸ் செய்யப்பட்ட கதைகளையே மசாலாக்கதைகள் என்கிறோம். இந்த அளவுகோலின்படி வந்தமாளிகை-சுறா-ஆரண்ய காண்டம் மூன்றுமே மசாலாப்படங்கள் தான். மசாலாவின் அளவு தான் வேறுபடும். ஹீரோயிசப் படங்கள் மட்டும் தான் மசாலாப்படங்கள் எனும் கருத்து சமீபகாலமாக சொல்லப்படுகிறது. உண்மையில் அது சரியான கருத்து அல்ல.

மசாலா என்பது சினிமாவில் மட்டுமல்லாது நமது புராணக்கதைகளில் ஆரம்பித்து இலக்கியங்கள்வரை இருக்கின்ற ஒரு விஷயம். மசாலாவுக்கென்று நம் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மோசமான காலகட்டம் என்று நீங்கள் கருதும் காலத்தை நினைவில் கொண்டுவாருங்கள். அது, ஒருவேளை நீங்கள் வேலையில்லாமல் அவமானத்துடன் அலைந்த காலமாகக்கூட இருக்கலாம். அந்த நேரத்தில், நீங்கள் ஒருநாள்கூட சிரிக்கமால் அலைந்தீர்களா? அந்தச் சமயத்தில் துக்கத்தைத் தவிர வேறு உணர்வுகளுக்கே இடமில்லையா? அப்போதும் நீங்கள் சிரித்திருப்பீர்கள், எங்காவது பிரியாணியை வெளுத்துக்கட்டியிருப்பீர்கள், யார் கண்டது, காதலில்கூட விழுந்திருக்கலாம்!

ஏன் அப்படி? ஏனென்றால், வாழ்க்கையே அப்படித்தான். வேலை இல்லைஎனும் துக்க உணர்ச்சி ஓங்கியிருந்தாலும், கூடவே மற்ற உணர்வுகளுக்குரிய காரியங்கள் நடந்துகொண்டே தான் இருக்கும். ஒரு படைப்பு என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது தான். எனவே தான் நம் முன்னோர், கதை சொல்வதிலும் இதே பேட்டர்னைக் கொண்டுவந்தார்கள். ஒரு கதை.கூத்து/நாடகத்தைப் பார்க்கும் ஒருவனுக்கு, ஒரு வாழ்க்கையைப் பார்த்த ஃபீலிங் வரவேண்டும் என்றால் சந்தோசம், துக்கம், கோபம் உள்ளிட்ட எல்லா உணர்வுகளுக்கும் அவன் ஆட்பட வேண்டும். எனவே ஒரு கலையை எப்படிப் படைப்பது என்பதற்கு பல்வேறு இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றைத் தொகுத்து, ரத முனிவர் எழுதிய நூல் தான் நாட்டிய சாஸ்திரம்.

அந்த நூல் குறிப்பாக பரத நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்டது என்றாலும், ஒரு படைப்பில் இருக்க வேண்டிய சுவைகள் பற்றி தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. எட்டு சுவைகள் ஒரு கலைப்படைப்பில் இருக்க வேண்டும் என்று பரத முனிவர் வகுத்தார். பின்னர், அது ஒன்பது சுவையாக நவரசங்களாக ஆக்கப்பட்டன.

அந்த நவரசங்கள் : அன்பு/காதல், நகைச்சுவை, துக்கம், கோபம், வீரம், பயம், அருவறுப்பு, வியப்பு, அமைதி. (இந்தப் பட்டியலின் மாறுபட்ட வெர்சன்களும் புழக்கத்தில் உள்ளன.!)

ஹாலிவுட் மிஸ் பண்ணுவது இதைத்தான்..இரண்டே உணர்ச்சிகள், ஒன்று ஏ ஸ்டோரிக்கு..ஒன்று பி ஸ்டோரிக்கு என்று கதையை முடித்துவிடுகிறார்கள். Die-Hardபோன்ற படங்கள் இவற்றிற்கு நல்ல உதாரணங்கள். கொஞ்சம் யோசித்தாலே, இத்தகைய படங்கள் உள்ளீடற்ற, எலும்புக்கூடுகள் என்பது புரியும்.

சாப்பாட்டில்கூட ஃபுல் மீல்ஸ் என்று வெளுத்துக்கட்டும் தமிழனிடம் இரண்டே இரண்டு சுவைகளை மட்டும் கொடுத்தால் என்ன செய்வா? 'என்னய்யா படம் இது..சவசவன்னு' என்று தான் விமர்சனம் செய்வான். முன்பு ஹாலிவுட்கூட நன்றாகத்தான் இருந்தது. Jaws, Starwars போன்ற படங்களின் வெற்றியால் எப்போது சர்வதேச மார்க்கெட் என்று உருவானதோ, அப்போதே ஹாலிவுட் படங்கள் தன் ஆன்மாவை இழந்தன.

அதே நேரத்தில் சிட் ஃபீல்ட் போன்றோர் திரைக்கதை வித்தையைப் பொதுவில் வைக்க, ஹாலிவுட்டிற்கு திரைக்கதை எழுதுவது என்பது வெறும் டெக்னிகல் விஷயமாக மாறிப்போனது. படைப்பாளிகளின் கையில் இருந்த சினிமா, டெக்னினிஷியன்களின் கையில் சிக்கியது. வாழ்க்கையில் சொந்தமாக ஒரு சிறுகதைகூட எழுதியிராத ஆட்கள் எல்லாம், ஆக்ட்-1 ,ஆக்ட்-2 என திரைக்கதையைப் பிரித்து மேய ஆரம்பித்தார்கள். ஏகப்பட்ட திரைக்கதைப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒட்டுமொத்த விளைவாக, உள்ளீடற்ற டைம்-பாஸ் மூவிகள் உருவாக்கப்பட்டன. சினிமா என்பது டெக்னிஷியன்களும் வியாபாரிகளும் உருவாக்கும் இங்கிபிங்கி பாங்கியாக ஆகிப்போனது. அதன்விளைவை சமீபத்தில் வந்த Fast & Furious 7 வரை பார்க்கலாம்.

அதிர்ஷ்டவசமாக ஐரோப்பிய சினிமாக்களும் ஆசிய சினிமாக்களும் இந்தக் கொடுமையில் இருந்து தப்பித்தன. ஹாலிவுட்டில் பெயர் பெற்ற பல நல்ல படைப்பாளிகள், ஐரோப்பியர்களாக இருப்பதைக் காணலாம். எனவே பத்து ஹாலிவுட் படங்களும் பத்து ஆங்கில திரைக்கதைப் புத்தகங்களையும் படித்தால், தமிழில் திரைக்கதை எழுதிவிடலாம் என்று நினைத்தால்...சாரி ப்ரதர்.

நம் மக்கள் நவரசங்களுடன்கூடிய கதைக்குப் பழக்கப்பட்டவர்கள். இந்த மண்ணுடன் பின்னிப்பிணைந்த, அவர்களின் மனங்களுடன் உறவாடும் கேரக்டர்களையும் படைப்புகளையும் படைத்தால் மட்டுமே இங்கே ஜெயிக்க முடியும். இதற்கு சமீபத்திய உதாரணம், வேலையில்லாப் பட்டதாரி.
உலகத்தில்  உள்ள எந்த திரைக்கதை விதிகளுக்கும் பொருந்தாத படம். ஆனால் ஒரு எஞ்சினியரிங் பட்டதாரியின் வாழ்க்கையைச் சொன்ன படம்.

வி.ஐ.பி.மாதிரித் திரைக்கதை எழுதுவது ரிஸ்க்கான விஷயம். எந்தவகையிலும் சேராத குப்பையாக ஆகவே வாய்ப்பு அதிகம். ஆனால் வி.ஐ.பி.யில் இருக்கும் வாழ்க்கையையும், இதுவரை படித்த 'ஸ்ட் ரக்சரையும்' மிகச்சரியாக இணைத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் தான் திரைக்கதை மன்னன்.

துப்பாக்கி படத்தை சீன் பை சீன் எழுதிய முந்தைய பதிவுக்குப் போய்ப் பாருங்கள். பி ஸ்டோரியும் காமெடியும் எப்படி படம் முழுக்க தூவப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். ஒரு நல்ல மசாலாப் படத்திற்கு அதுவொரு நல்ல உதாரணம்.

இப்போது நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கதை, வெறும் ஹாலிவுட் எலும்புக்கூடா அல்லது தமிழ் சினிமாவா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

 (தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.