Sunday, April 22, 2012

முருக வேட்டை_2 (அதிரடித் தொடர்)


முத்துராமன் வீட்டின் முன் போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. சரவணன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, கேட்டை நோக்கி நடந்தான்.

கேட் வாசலில் நின்றிருந்த போலீஸ்காரர் மறித்தார்.

“சரவணன்..சிபிசிஐடி” என்றபடியே ஐடெண்டிகார்டைக் காட்டினான் சரவணன். ஸ்விட்ச் போட்டாற்போல் சட்டென்று விறைப்பாகி சல்யூட் அடித்தார் கான்ஸ்டபிள்.

சரவணன் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தான். அகிலாவுடன் இங்கே ஒருமுறை வந்தது ஞாபகம் வந்தது. அகிலா அப்போது தான் சிபிசிஐடி டிஎஸ்பியாக புரமோட் ஆகியிருந்தார். எனவே முத்துராமனிடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள். அப்போதே அவர் வயதாகி தளர்ந்துபோய் இருந்தார். அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? பணத்திற்காகவா? என்று யோசித்தபடியே வீட்டினுள் நுழைந்தான்.

தடித்த உருவமுள்ள போலீஸ்காரர் ஒருவர் “யாருப்பா நீ? உன்னை யார் உள்ளே விட்டது?’ என்றபடியே பாய்ந்து வந்தார்.

“சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சரவணன்..ஸ்ரீனிவாசன் ஃப்ரெண்ட்”என்றபடியே கையில் இருந்த கார்டைக் காட்டினான்.

“ஓ..வாங்க சார் வாங்க..நான் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்..நினைச்சேன், என்னடா இவ்வளவு நேரம் ஆச்சே..சிஐடி குரூப்பைக் காணோமேன்னு..தண்ணி லாரியில பன்னி அடிபட்டாலே சிபிசிஐடி தான் கரெக்டா விசாரிக்கும்னு கேஸை உங்ககிட்டத் தூக்கிக் கொடுத்துடுவாங்க..இப்போ யானையே அடிபட்டிருக்கு..விட்ருவீங்களா? நீங்கள்லாம் எங்களை விட புத்திசாலிங்க..துப்ப்ப்பறியறதுல வல்லவங்க..நாங்க சாதா போலீஸ் தானே..”

இந்த மாதிரிப் பேச்சுகள் சரவணனுக்குப் புதிதல்ல. எப்போதெல்லாம் கேஸ் கை மாறுகிறதோ, அப்போதெல்லாம் இதே போன்ற வார்த்தைகள் வந்து விழும். எனவே அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக “அப்படியில்லை சார்..ஸ்ரீனிவாசன் ஃபோன் பண்ணாரு..அதான் வந்தேன்..அவரை எங்கே?”

“மேல ஆறு ரூம் இருக்கு..ஆறையும் ஒன்னுன்னா செக் பண்ணச் சொல்லியிருக்கேன். அவரையும் கூட வச்சுக்கிட்டே செக் பண்றாங்க”

”ஓகே, உள்ளே போய்ப் பார்க்கலாமா?” என்றான் சரவணன்.

"ம்..போங்க..லெஃப்ட் சைடுல ரெண்டாவது ரூம்..”

“தெரியும் சார்..ஏற்கனவே வந்திருக்கிறேன்”

சரவணன் முத்துராமனின் ரூமை நோக்கி நடந்தான். இரண்டு போலீஸார் தரையில் கிடந்த முத்துராமனைச் சுற்றி சாக்பீஸால் கோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். முத்துராமன் வெறும் அண்டர்வேயருடன் கிடந்தார். கட்டியிருந்த கைலியை இரண்டாகக் கிழித்து, பாதி காலைக் கட்டவும், பாதி வாயைக்கட்டவும் யூஸ் பண்ணியிருந்தார்கள். சரவணன் நெருங்கி உடலை உற்றுப்பார்த்தான்.

உடம்பு முழுக்க அடி வாங்கி கன்னிப்போயிருந்தது. கை நகக்கணுவில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. கழுத்து இறுக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. டார்ச்சர்..ரொம்ப டார்ச்சர் பண்ணிக் கொலை செய்திருக்கிறார்கள். இவ்வளவு டார்ச்சர் செய்திருக்கிறார்கள் என்றால், ஏதாவது தனிப்பட்ட குரோதம் காரணமாக இருக்கலாம். இல்லையென்றால் பணம் அல்லது ஏதாவது தகவல் கேட்டு சித்திரவதை செய்திருக்கலாம்.

சரவணன் இது போன்ற எத்தனையோ பிணங்களைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் ஏற்கனவே அறிந்த மனிதரை இந்தக் கோலத்தில் பார்ப்பது கஷ்டமாக இருந்தது. இதனால்தான் அகிலா இங்கு வரவில்லை என்று புரிந்தது.
 அந்த அறையை நன்கு பார்த்தான்.கட்டில்கூடக் கசங்கவில்லை. வீட்டில் வேறு எங்கோ வைத்து சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, இங்கு வந்து போட்டிருக்க வேண்டும்.

சரவணன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். இன்ஸ்பெக்டர் ஹாலில் நின்றுகொண்டிருந்தார். 

“என்ன சார்..பார்த்தாச்சா?” என்றார்.

“பார்த்தாச்சு சார்..டார்ச்சர் பண்ணிக் கொன்றுப்பாங்க போல..?”

“ஆமாம்..ஹால் சோஃபாவைப் பாருங்க..உட்கார்ந்து பேசியிருக்காங்க..அப்புறம் தான் தகராறு ஏதோ நடந்திருக்கு”

“கரெக்ட் சார்..அப்போ வாசல் வழியாத் தான் உள்ளே வந்திருக்காங்களா?”

“ஆமா..அப்படித்தான் இருக்கணும்..வேற எங்கயேயும் ப்ரேக் பண்ணலை”

"அப்போ கொலையாளிகள் முத்துராமன் சாருக்கு நல்லாத் தெரிஞ்சவங்களாத்தான் இருக்கணும், இல்லியா?”

சரவணன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, மேலேயிருந்து “சார்..” என்ற அலறல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தால் கான்ஸ்டபிள் ஒருவர் “உடனே மேல பூஜை ரூமுக்கு வாங்க சார்” என்றார் வெளிறிய முகத்துடன்.


(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

  1. வணக்கம் பாஸ்...
    நல்லா இருக்கீங்களா?
    நீண்ட நாளுக்குப் பின்னர் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!

    மொய் எல்லாம் கேட்கலைங்கோ...நீங்க பதிவு போடுவதே ரொம்ப புண்ணியம்!

    படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  2. முதல் பாகத்தை தவற விட்டு விட்டேன். த்ரிலிங்கா இருக்கு பாஸ்..

    தொடருங்கள்!

    ReplyDelete
  3. இரவு வணக்கம்,செங்கோவி!த்ரில்லாக இருக்கிறது!!!!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. விறுவிறுப்பாக செல்கிறது.....

    ReplyDelete
  5. கிரைம் கதைகளுக்கே உரிய விறுவிறுப்பு கொஞ்சம் குறையாமல்,அடுத்த பகுதிக்கு காத்திருக்க வைக்கும் நேக்குடன் அமர்க்களப்படுத்துகிறது,அதிரடியான தொடர் தான்.

    ReplyDelete
  6. கிரைம் ..கதை நல்லா இருக்கு ..ஆனா டக் டக் ன்னு முடிஞ்சிடுது ...

    ReplyDelete
  7. நல்லா திரில்லா எழுதியிருக்கிறீங்க....தொடர்ந்தும் எழுதுங்க நண்பா...

    ReplyDelete
  8. hm adutha twista....waiting boss.

    ReplyDelete
  9. செம இன்ட்ரஸ்டிங்!

    ReplyDelete
  10. மாம்ஸ், கடைசியல ட்விஸ்ட், அடுத்த பாகம் எப்போ வரும்?

    வாரத்துல எப்போ எப்போ வரும்னு சொன்னா மிஸ் ஆகாம வாசிப்போம்ல...

    ReplyDelete
  11. //தண்ணி லாரியில பன்னி அடிபட்டாலே சிபிசிஐடி தான் கரெக்டா விசாரிக்கும்னு கேஸை உங்ககிட்டத் தூக்கிக் கொடுத்துடுவாங்க..இப்போ யானையே அடிபட்டிருக்கு..விட்ருவீங்களா?//

    க்ரைம் ஸ்டோரின்னாலும் அண்ணனோட லொள்ளு குறையவே இல்ல. ரெண்டு பாகத்திலேயே கதைக்குள்ள மொத்தமா இழுத்திடுரீங்களே, இந்த டெக்னிக்க எங்க கண்டுபிடிச்சீங்க?

    ReplyDelete
  12. அருமை. விறுவிறுப்பாக இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
  13. தண்ணீர் லாரியில் பன்னி அடிபட்டாலும் நகைச்சுவையாக  நிஜத்தைச் சொல்லிக்கொண்டு நகரும் விசாரணை வேட்டை தொடருங்கள் !

    ReplyDelete
  14. /////.தண்ணி லாரியில பன்னி அடிபட்டாலே சிபிசிஐடி தான் கரெக்டா விசாரிக்கும்னு//////////

    என்னா டயலாக்கு.............

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.