Monday, April 16, 2012

குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்...


குவைத் முத்தமிழ் கலை மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் கலந்துகொள்ளப் போவதாய் அறிந்த போது, சந்தோசத்தில் துள்ளினேன். பலவருடங்களாக ஜெயமோகனின் வாசகன் என்பதாலும், அவருக்கு அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவன் என்பதாலும் கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்தே தீருவது என்று முடிவு செய்தேன். எனவே ஒரு வரவேற்பு மின்னஞ்சலை அனுப்பிவைத்தேன். அவரும் நேரில் சந்திப்போம் என்று பதில் அனுப்பிவிட குஷியானேன்.

அதே நேரத்தில் என் மனம் கவர்ந்த சில எழுத்தாளர்களை சந்தித்த தருணங்கள் ஞாபகத்தில் வந்தன. சுஜாதாவை மெரீனா பீச்சில் திடீரென நேரில் பார்த்து, இன்ப அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் சிலை மாதிரி நின்றேன். அவர் சிறுபுன்னகையுடன் கடந்து சென்றார். திரும்பிச் சென்று பேசலாம் என்றால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. "நான் உங்க வாசகன் சார்..நல்லா எழுதுறீங்க” என்று மட்டுமே சொல்லத் தோன்றியது. ஆனாலும் சொல்லாமல் நடையைக் கட்டினேன். அதே போன்றே பாலகுமாரனைப் பார்த்தபோதும் ‘என்னத்தைப் பேச...’ என்று வியப்புடன் பார்த்தபடி நகர்ந்திருக்கிறேன்.
நாஞ்சில் நாடன் பேசுகிறார்
எனவே ஜெயமோகன் வருகிறார் என்றதும் என்ன செய்வது என்று யோசித்தேன். எழுத்தாளனை வாசகன் சந்திப்பது அவசியம் தானா? எழுத்தாளன் சொல்ல விரும்புவது அனைத்தையும் எழுத்தின் மூலமே சொல்லியிருப்பாரே..நேரில் சொல்வதெற்கென்றே தனியாகக் கருத்துக்களை வைத்திருப்பார்களா என்று யோசனை ஓடியது. ’ஜெயமோகனை எதற்காகச் சந்திக்க வேண்டும்?’ என்று யோசிக்கையில் ‘ஜெயமோகன் ஏன் எனக்கு முக்கியமானவராய் ஆனார்?’ என்று யோசித்தேன். எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்து, எத்தனையோ உபயோகமான கருத்துக்களை சிறுவயது முதலே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த வகையில் ஜெயமோகன் எனக்கு முக்கியமானவர். ஏன் என்றால், அதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

மூன்றாவது காரணம், காந்தியடிகளை இந்த தலைமுறையிடம் புதிய வெளிச்சத்தில் இன்றைய காந்தி மூலம் அறிமுகப்படுத்தியது. உள்நாட்டு-வெளிநாட்டு சக்திகளால் தொடர்ந்து வசை பாடப்பட்டு, ’காந்தியம் என்பது வழக்கில் இருகக்கூடாத, இருக்க முடியாத போலி கற்பனாவாதம், காந்தியத்தை ஏற்பது நவநாகரீக உலகில் கோமாளித்தனம்’ என்று பெரும்பாலான அறிவுஜீவிகள் சொல்லிகொண்டிருந்த வேளையில் ஜெயமோகன் துணிந்து இன்றைய காந்தியை எழுதினார். மானுட தரிசனங்களில் மகத்தான ஒன்றாக சத்தியாக்கிரகத்தை முன்னிறுத்தினார். காந்தியத்தின் மேல் ஈடுபாடு கொண்ட எனக்கு அது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

இரண்டாவது காரணம், முரணியக்கம் என்ற ஒன்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது மார்க்ஸிய சிந்தனைகளில் இருந்தே தான் பெற்றதாகச் சொன்னாலும், பெருவாரியான தமிழ் வாசக வட்டத்திடம் தொடர்ந்து அதை எல்லா முக்கியமான விஷயங்கலிலும் போட்டுக்காட்டி, விளக்கியது ஜெயமோகன் தான். 
மேடையில் ஜெயமோகன்
முதல் காரணம், அவர் எனக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலில் சொல்லிய ஒரு வாக்கியம். “நமது மனநிலையையும் கருத்துக்களையும் நாமே தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமே தவிர எதற்கும் எதிர்வினையாக அவற்றை உருவாக்கக்கூடாது” எனது சொந்த வாழ்விலும் அலுவலக வாழ்விலும் அந்த வாக்கியம் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. எதற்கும் எளிதில் ரியாக்ட் பண்ணாமல், நமது இயல்பு/சுயதர்மத்தின்படியே நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆணியடித்தாற்போன்று அவ்வாக்கியம் சொல்லியது. பல இக்கட்டான தருணங்களிலும், உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை இழக்கும் சூழ்நிலைகளிலும் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருக்கும் ஆற்றலை அது கொடுத்தது.


எனவே இந்த மூன்று காரணங்களுக்காக ஜெயமோகனைச் சந்தித்து நன்றி கூறுவது என்று முடிவு செய்தேன். ஒரு வாசகன் எழுத்தாளனைச் சந்திக்க, இதை விடவும் நல்ல காரணம் இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.

விழாவுக்குச் செல்ல ஆஃபீசில் பெர்மிசன் வாங்கிக்கொண்டேன். (எனக்கு ஜெயமோகனை நல்லாத் தெரியும் சார்..நான் போகலேன்னா ஃபீல் பண்ணுவார் சார்..ஹி..ஹி) அதன்பிறகே தெரிந்தது என் நெருங்கிய நண்பரின் நண்பர் பழமலை.கிருஷ்ணமூர்த்தி தான் விழா ஏற்பாட்டாளர் என்று. பின்னர் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கே ஆவலுடன் போய் காத்திருந்தேன்.  இலக்கிய விழாவுக்கு கூட்டம் வராது, ஜெயமோகனுடன் நன்றாகப் பேசலாம் என்று நினைத்தால், குடும்ப சகிதம் பலரும் வந்து அரங்கத்தையே நிறைத்திருந்தார்கள். ’அவரை இந்தக் கூட்டத்தில் எப்படி நெருங்குவது? அப்படியே நெருங்கினாலும் பிரபல எழுத்தாளர் ஆயிற்றே..நம்மை ஞாபகம் வைத்திருப்பாரா..சொக்கா..எனக்கில்லே..எனக்கில்லே’ என்று மனதிற்குள் புலம்பியபடியே உட்கார்ந்திருந்தேன். 

ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வந்து சேர்ந்தார்கள். நாஞ்சிலார் கல்லூரி பேராசிரியர் போல் தோற்றமளித்தார். ஜெயமோகன் ஜீன்ஸில் கேசுவலாய் வந்திருந்தார்.விழா ஆரம்பமாக குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது ஜெயமோகன் யாரையோ பார்க்க எழுந்து அரங்கத்தை விட்டு வெளியே வந்தார். நானும் இது தான் சமயமென கூட்டத்தில் இருந்து நழுவி, வெளியேறினேன். அதற்குள் அவர் அரங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார். ‘வடை போச்சா..’ என்று அவசரமாக நெருங்கினேன்.
ஜெயமோகனுடன் நான்..ஒளிவட்டத்துடன்!
“ஹலோ சார்..”என்றபடியே கைகுலுக்க கை நீட்டினேன். அவரும் சிரித்தபடியே கை குலுக்கும்போது “நான்..செங்கோவி” என்றேன். அதற்கு அவர் ‘அப்படி யாரையும் தெரியாதே’ என்று சொல்லவில்லை..”செங்கோவியா..மெயில் அனுப்புவீங்களே..”என்றார். மிக மென்மையான குரலுடன் அவர் கேட்டதும் சந்தோசம் தாங்கவில்லை..அவரை வழிமறித்திருப்பது ஞாபகம் வந்ததால் ‘ஓகே சார்..விழா முடியட்டும் பார்ப்போம்’ என்று சொல்லி வழிவிட்டேன். அவரும் சரியென்றபடியே நகர்ந்தார்.

விழாவில் ஜெயமோகன் ‘அறம் எனப்படுவது யாதெனின்..’ என்ற தலைப்பில் பேசினார். அறம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல்லில் ஆரம்பித்து சங்ககாலம்-சிலப்பதிகாரக் காலம்-தற்கால அறம்-இல்வாழ்வில் அறம்-துறவு அறம்-அரசியல் அறம் என பிரமிடு போல் அடுக்கிகொண்டே வந்து அனைவருக்கும் பொதுவான மானுட அறத்தில் பேச்சை முடித்தார். ‘குழந்தையிடம் விளையாட்டுப் பொருளைக் கொடுத்துவிட்டு உடைக்காமல் விளையாடு என்று சொல்வதைப் போல இந்தப் பிரபஞ்சம் மனிதனிடம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று ஜெயமோகன் சொன்னதை மிகவும் ரசித்தேன். (இப்போதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்).

நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல் எழுத்தாளர்களை கூட்டம் மொய்த்துக்கொண்டது.கூட்டம் காலியாகி சாப்பாடை நோக்கி நகர்ந்ததும் நான் மெதுவாக முன்னேறி நாஞ்சிலாருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, ஜெயமோகனை அடைந்தேன். 
மீண்டும் நாங்கள்...
“உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் சார்..நாலு வருசம் முன்ன எனக்கு மெயிலில் நீங்கள் சொன்ன ‘நம் மனநிலையையும்....’ வாக்கியம் இன்னைக்கும் எனக்கு உபயோகமா இருக்கு சார்” என்றேன்.

“அது உண்மை..அப்படித்தானே நாம இருக்கணும்” என்றவர் தொடர்ந்து “செங்கோவி..இது என்ன பெயர்?” என்று கேட்டார். செங்கோவி-பெயர்க்காரணம் பதிவை சுருக்கமாகச் சொன்னேன்.

“கோவில்பட்டியா நீங்க? அங்கே எங்கே? செண்பகப்பேரியா? அது எங்கே இருக்கு? தேவதச்சன் தெரியுமா? பார்த்ததில்லையா? அடுத்த முறை வரும்போது அவரைப் போய்ப் பாருங்க..முடிந்தால் நாமளும் மீட் பண்ணுவோம்” என்று சகஜமாகப் பேசிக்கொண்டே போனார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, இளைஞர் கூட்டம் ஒன்று அவரை நெருங்கி விஷ்ணுபுரம் பற்றிப் பேச ஆரம்பித்தது.

“படிக்கவே கஷ்டமா இருக்கு சார்” என்று ஒரு அன்பர் புகார் செய்தார். நானும் அதிமேதாவியாக "முதல்-40-50  பக்கங்கள் தான் அப்படி இருக்கும்..பிறகு எளிதாக இருக்கும்..ஏன் சார், பர்ப்பஸாவே அப்படி எழுதினீங்களா? இதைத் தாண்டி வர்றவங்க வரட்டும்ங்கிற மாதிரி...?”என்றேன். 

அவர் சிரித்தபடியே “அப்படி இல்லை..மொத்தமும் ஒன்னுபோல தான் இருக்கு..படிக்கப் படிக்க பழகிடுது”என்றார்.

மேலும் பலரும் அவரைச் சந்திக்க,பொண்ணு பார்க்க வந்தவர்கள் போல் அவரை உற்றுப்பார்த்தபடியே நின்றுகொண்டிருந்ததால், அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன். நாஞ்சில் நாடனை அதிகம் நான் படித்ததில்லை என்பதால், அவரை நான் நெருங்கவில்லை.

அவர் காந்தியத்தை எழுத மட்டுமே செய்யவில்லை, வாழ்க்கையிலும் காந்திய எளிமையை கடைப்பிடிக்கிறார் என்று தெரிந்தது. எவ்வித அலட்டலும் இன்றி, சிரித்த முகமாய் பேசிக்கொண்டிருந்தார். தினமும் 1000 ஹிட்ஸ் வந்தாலும் தலைகால் புரியாத நபர்களுக்கு மத்தியில் இப்படி ஒருவரா? கொஞ்சம்கூட கெத்து காட்டாமல் ஏமாற்றி விட்டாரே என்று தோன்றியது. ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் ஒருமுறை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. 


அதுவொரு இனிய பொன்மாலைப் பொழுதாகவே முடிந்தது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

 1. அருமைஅவரின் அறம் குறித்த பேச்சையும் பகிருங்கள், பிற வாசகர்கள் என்ன உரையாடினார்கள் என்பதையும் ramjiyahoo

  ReplyDelete
 2. அன்பு ராம்ஜி,

  ஜெ.வின் முழுப்பேச்சும் அவரது தளத்தில் வரும் என்று நம்புகிறேன்..அதனாலேயே விரிவாக எழுதவில்லை..அவரது வார்த்தைகளிலேயே அதைச் சுவைப்போமே!

  ReplyDelete
 3. அண்ணா வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி.. அப்புறம் குருநாதர் ஜெ வை சந்தித்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. நான் அவரது வீட்டுக்கு வெகு அருகில்தான் வசிக்கிறேன். (வேலை சென்னையில்). இருந்தும் ஒரே ஒருமுறை மினி பஸ்ஸில் அவருக்கு அருகில் உட்கார்ந்து பயணம் செய்ததைத் தவிர அவரைப் பார்த்ததில்லை.
  நீங்கள் சாரு வின் தீவிர ரசிகர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தேகம் விமர்சனமெல்லாம் அடித்து துவைத்து தொங்கவிட்டீர்கள். நானும் தேகம் படித்தேன். எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. ஒரு 20 பக்கங்கள் படித்தேன். Fetish எழுத்து. தூக்கி கடாசி விட்டேன்.90 ரூபாய் போச்சு.
  தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். பணி நிமித்தம். இன்றைய காந்தியும், விஷ்ணுபுரமும் வாங்கி வந்தேன். இன்றைய காந்தி படித்துக் கொண்டிருக்கிறேன். முடித்தவுடன் இது குறித்து ஒரு பதிவு எழுதும் எண்ணம் உண்டு. மற்றபடி சிறப்பாக ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.

  அன்புடன்
  ராஜேஷ்

  ReplyDelete
 4. ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’////

  சத்தியமான வார்த்தைகள்...

  ReplyDelete
 5. நாஞ்சில் நாடனின் பனமர வாசத்துடன் .இருக்கும் எழுத்துகள் கிராமிய எதார்தத்தை பிரதிபலிக்கும், திரைப்படமாக வந்த "பூ" உட்பட...வாய்ப்பு கிடைத்தால் சுவைத்து பாருங்கள்

  ReplyDelete
 6. @Rajesh kumar சாருவின் எழுத்து நடை மேல் இப்போதும் எனக்குப் பிரியம் உண்டு நண்பரே..ராசலீலையும் ஜீரோ டிகிரியும் இப்போதும் எனக்குப் பிடித்தவையே..சாருவின் எழுத்து வாழ்க்கையை வாழ்வது பற்றி அதிகம் பேசுகிறது, ஜெ.வின் எழுத்து வாழ்க்கையை புரிந்துகொள்வது பற்றிப் பேசுகிறது..மற்றபடி, கட்சி கட்டுவதில் பெரிதாக எனக்கு ஆர்வம் இல்லை, ராஜேஷ்..

  ஜெ.வுக்குப் பக்கத்து வீட்டுக்காரரா நீங்கள்? கொடுத்து வைத்தவர் தான்!

  ReplyDelete
 7. //வீடு சுரேஸ்குமார் said... [Reply]
  நாஞ்சில் நாடனின் பனமர வாசத்துடன் .இருக்கும் எழுத்துகள் கிராமிய எதார்தத்தை பிரதிபலிக்கும், திரைப்படமாக வந்த "பூ" உட்பட...வாய்ப்பு கிடைத்தால் சுவைத்து பாருங்கள்//

  அவரை அதிகம் படிக்காதது என் குறை தான் சுரேஸ்..நிச்சயம் படிக்கிறேன்.

  ReplyDelete
 8. செங்கோவி, எனக்கு இந்த புகை படங்களை பார்க்கும் போது உங்களுடைய பிரதிபலிப்பாக தான் ஜெய மோகன் தோன்றுகிறார். எனக்கு ஜெய மோகனின் எழுத்துக்கள் பரிச்சயம் இல்லை.

  ReplyDelete
 9. ஜெய மோகனின் சிறுகதைகள் சில படித்திருக்கிறேன். சமீபத்தில் 'ஊமைச் செந்நாய்'.
  கேரளாவில் கிறிஸ்தவம் பரவியதைப் பற்றி அட்டகாசமாக விவரிக்கும் நாவல் ஒன்று (பெயர் ஞாபகம் வரவில்லை) படித்திருந்தேன். மிகக்கவர்ந்தது. காரணம் அது அன்றைய பழைய யாழ்ப்பாணத்தின் சூழ்நிலைக்கும் அப்படியே பொருந்திப் போகக் கூடியதாக இருந்ததும் ஒரு காரணம்!

  ReplyDelete
 10. //“நமது மனநிலையையும் கருத்துக்களையும் நாமே தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமே தவிர எதற்கும் எதிர்வினையாக அவற்றை உருவாக்கக்கூடாது”//
  சூப்பர்! ஆனால் பல சந்தர்ப்பங்களில் மிகக் கடினமானது இல்லையா?

  ReplyDelete
 11. //சுஜாதாவை மெரீனா பீச்சில் திடீரென நேரில் பார்த்து, இன்ப அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் சிலை மாதிரி நின்றேன். அவர் சிறுபுன்னகையுடன் கடந்து சென்றார்.//
  சொக்கா..எனக்கில்லே..எனக்கில்லே :-(

  ReplyDelete
 12. அண்ணன் பிளான் பண்ணி போட்டோ எடுத்திருக்காப்ல! :-)

  ReplyDelete
 13. முரணியக்கம் பற்றி எளிமையா உங்கள் ஸ்டைலில் எழுதும் முயற்சி ஏதாவது...
  கொடுத்து வைத்தவர் நீங்கள் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன்....எல்லோரையும் சந்தித்திருக்கிறீர்கள். சுஜாதாவை ஒருமுறையாவது நேரில் பார்ப்பது (சந்திப்பதுகூட இல்லை ) எனது லட்சியமாக இருந்தது!

  ReplyDelete
 14. வணக்கம் செங்கோவி சார்,ஹி!ஹி!ஹி!!!!நல்ல சந்திப்பு.நல்ல புகைப் படப் பிடிப்பு.(யாராச்சும் சினிமா டைரக்டருங்க கண்ணுல பட்டுடப் போவுது,ஹ!ஹ!ஹா!!!)

  ReplyDelete
 15. //சாருவின் எழுத்து வாழ்க்கையை வாழ்வது பற்றி அதிகம் பேசுகிறது, ஜெ.வின் எழுத்து வாழ்க்கையை புரிந்துகொள்வது பற்றிப் பேசுகிறது..//

  அருமை. நாநும் இருவரின் எழுத்துககளையும் தொடர்ந்து படிப்பவன். எனக்குமட்டும் ஏன் இந்த மாதிரி நச்சென்ற கருத்துக்கள் தோணவே மாட்டேனென்கிறது?

  ReplyDelete
 16. வணக்கம் செங்கோவி ஐயா!
  இதுவரை ஜெயமோகனைப்படித்ததில்லை.நாஞ்சில் விகடனில் எழுதிய தொடர் படித்தேன் பிடித்திருந்தது.வாசகனுக்கு எழுத்தாளரைச் சந்திக்கும் ஆர்வம் இருக்கும் ஆனால் எல்லாராலும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடையாது நீங்கள் கொடுத்து வைத்திருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 17. படம் எடுக்கும் போது நல்லா கவனமாக இருந்திருக்கின்றீர்கள் .ஹீ
  இப்ப எல்லாம் இரவில் எட்டிப்பார்க்க காவல் இருந்தால் ???பதிவு மதியம் வருகின்றது.

  ReplyDelete
 18. தேவதச்சன் கவிதைகள் கேள்விப்பட்டேன் ஜெயமோகனும் அவர் ஊர்காரர் போல???

  ReplyDelete
 19. வில்லங்கம் புடிச்ச ஆளுய்யா நீரு, போட்டோவ இப்படியா புடிக்கிறது? உங்களுக்குன்னு நேரா நிக்கிற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டீங்கதானே?

  ReplyDelete
 20. உங்க ப்ளாக் பத்தியெல்லாம் சொன்னீங்களா?

  ReplyDelete
 21. மத்தபடி நமக்கும் இந்த எலக்கியங்களுக்கும் ரொம்ப தூரமுங்கோ.........

  ReplyDelete
 22. அடடே... திரும்பவும் வந்தாச்சா? மீண்டும் கலக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. மாம்ஸ், பெரும் எழுத்தாளருடன் சந்திப்பு... மிக்க மகிழ்ச்சியான தருணம் உங்களுக்கு...

  ReplyDelete
 24. பிளான் பண்ணி போட்டோ எடுத்துப்புட்டு சமாளிப்பு வேற? ம்ஹும்....

  ReplyDelete
 25. // ஜீ... said...
  முரணியக்கம் பற்றி எளிமையா உங்கள் ஸ்டைலில் எழுதும் முயற்சி ஏதாவது...//

  முரணியக்கம்னா அது இல்லை தம்பி..அதனால அது வேணாம்!

  ReplyDelete
 26. // Yoga.S.FR said...
  வணக்கம் செங்கோவி சார்,ஹி!ஹி!ஹி!!!!நல்ல சந்திப்பு.நல்ல புகைப் படப் பிடிப்பு.(யாராச்சும் சினிமா டைரக்டருங்க கண்ணுல பட்டுடப் போவுது,ஹ!ஹ!ஹா!!!)//

  ஹா..ஹா..ஐயா, அது தற்செயலாய் நண்பர் எடுத்தது...மற்றபடி அஜித்-விஜய்யின் பொழைப்பைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே! (அப்புறம், பையன் நலம்!)

  ReplyDelete
 27. // தனிமரம் said...
  தேவதச்சன் கவிதைகள் கேள்விப்பட்டேன் ஜெயமோகனும் அவர் ஊர்காரர் போல???//

  இல்லை நேசரே, தேவதச்சன் கோவில்பட்டிக்காரர்..எங்கள் ஊர்!

  ReplyDelete
 28. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  வில்லங்கம் புடிச்ச ஆளுய்யா நீரு, போட்டோவ இப்படியா புடிக்கிறது? உங்களுக்குன்னு நேரா நிக்கிற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டீங்கதானே? //

  பின்னே, விட்டுடுவோமா!

  //உங்க ப்ளாக் பத்தியெல்லாம் சொன்னீங்களா?//

  அவருக்குத் தெரியும்னு நினைகிறேன்..அதுபற்றி பேசிக்கொள்ளவில்லை.

  ReplyDelete
 29. // ரஹீம் கஸாலி said...
  அடடே... திரும்பவும் வந்தாச்சா? //

  ஆமாய்யா..காந்தித் தாத்தாவை சுட்டுட்டாங்க!

  ReplyDelete
 30. // தமிழ்வாசி பிரகாஷ் said...
  மாம்ஸ், பெரும் எழுத்தாளருடன் சந்திப்பு... மிக்க மகிழ்ச்சியான தருணம் உங்களுக்கு...//

  ஆமாம் பிரகாஷ்..!

  ReplyDelete
 31. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவம் பெற்றேன்.

  மு.இளங்கோவன்
  புதுச்சேரி

  ReplyDelete
 32. செங்கோவி said... ஹா..ஹா..ஐயா, அது தற்செயலாய் நண்பர் எடுத்தது...மற்றபடி அஜித்-விஜய்யின் பொழைப்பைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே!////தெரியும்,சும்மா!!!!!

  ReplyDelete
 33. இதுக்குன்னே ஒரு கேமராமேனை கூட்டிட்டு போயிருக்காருயா மனுஷன்!!

  ReplyDelete
 34. சுஜாதா ஒரு முறை சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது " உங்களது ஹீரோவை நேரில் பார்த்தபின்பு அவர்கள் பற்றிய கண்ணோட்டத்தில் / கருத்தில் / பிரியத்தில் மாற்றம் வரலாம்"
  //‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் ஒருமுறை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.//
  "Great men think alike" chandru

  அது சரி உங்களுக்கு பிரியத்தில் மாற்றமோ அல்லது ஏமாற்றமோ இருக்கிறதா?

  ReplyDelete
 35. செங்கொவி அண்ணே கடைசி வரைக்கும் உங்க முகம் பார்க்க முடியாமல் போச்சுதே...

  ReplyDelete
 36. தங்களின் திக், திக் அனுபவத்தை பதிவு செய்த விதம் அருமை .ஆனால் கடைசியில் ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்று முடித்து எனக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்திவிட்டீர்கள் .ஆம் உங்களை போலவே (1990 ஆம் என்று நினைக்கிறன் ) என் சொந்த மண்ணுக்கு (திண்டுக்கல் ) வைரமுத்துவும் ,பாலா சாரும் ஒரு பதிப்பக திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்கள .விஷயம் தெரியாத நான் நண்பரின் அண்ணனின் கல்யாண வேலையில் மிக மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தோம் .அப்போது நான் பாலா சாரின் பைத்தியம் அவருக்கு நான் நிறைய கடிதமும் எழுதி பதிலும் கிடைத்திருக்கிறது .எனவே மிகவும் சிரமப்பட்டு பேச ஏற்பாடு செய்தார்கள் .மேடை பின்புறம் வரை போனபின் நான் பேசினால் அவர் ஒரு ஹலோ சொல்வார் என மனதில் பட்டது .மிக அருகில் போனபின் மறுத்தேன் .நண்பர்களனைவருக்கும் என்மேல் கோபம் .அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள் .நன்றி

  ReplyDelete
 37. அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. http://www.facebook.com/media/set/?set=a.356792274369471.74930.100001161044568&type=1

  ReplyDelete
 39. http://www.facebook.com/arifmaricar

  ReplyDelete
 40. வணக்கம் செங்கோவி. நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நிகழ்ச்சி நடந்த நாள் காலை முதல் மாலை வரையில் அவர்களுடனேயே இருந்து அவர்களின் உரையாடல்களை ரசித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். விரைவில் தீவிர வாசகர்களுடனான ஒரு சந்திப்பை குவைத்தில் ஏற்பாடு செய்வோம். நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 41. manjoorraja said...
  //வணக்கம் செங்கோவி. நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. விரைவில் தீவிர வாசகர்களுடனான ஒரு சந்திப்பை குவைத்தில் ஏற்பாடு செய்வோம். நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.//

  நன்றி சார்..

  ReplyDelete
 42. //S.M. Arif Maricar said...
  http://www.facebook.com/media/set/?set=a.356792274369471.74930.100001161044568&type=1//

  ஃபோட்டோக்களுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 43. ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’////ஜெய மோகனின் சத்தியமான வார்த்தைகள்.....Ravi,Kuwait

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.