Thursday, July 5, 2012

என்னை வளர்த்த புத்தகங்கள்...


டிஸ்கி : மின்னஞ்சல் அனுப்பி. எனது புத்தக வாசிப்பு பற்றி பதிவெழுதத் தூண்டிய தம்பி கோபிக்கு நன்றி.

இணையம் இல்லாத முந்தைய காலகட்டத்தில், எமது அறிவை வளர்ப்பதற்கான ஒரே வழியாக இருந்தவை புத்தகங்கள் தான். எனது புத்தக வாசிப்பு, எனக்கு விவரம் தெரியுமுன்னே தொடங்கிவிட்டது. கிராமத்தில் நாங்கள் கடை வைத்திருந்தோம். எனவே கடையில் பார்சல் போட வாங்கப்படும் புத்தங்களே, முதலில் நான் வாசிக்க ஆரம்பித்தவை எனலாம். சிறுவயதில் குமுதம்/விகடனை விட தினசரிகள் இலவசமாகத் தரும் சிறுவர்மலர்கள் தான் என்னைக் கவர்ந்தன.

புத்தகங்கள் மேல் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கியவர் என ‘கொக்காடி’ தாத்தாவைச் சொல்லலாம். அவர் ராமநாதபுரம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொக்காடியில் இருந்து எங்கள் ஊருக்கு இடம்பெயன்று வந்தவர். மகாபாரதம், ராமாயணத்தை கரைத்துக்குடித்தவர். எனவே யார் அகப்பட்டாலும் ‘பீஷ்மன் ஏன் அப்படிச் செஞ்சான்னா....’ என்று ஆரம்பிப்பார். நண்பர்கள் சிதறி ஓடிவிடுவார்கள். ஆனால் எனக்கு மட்டும் அவரிடம் கதை கேட்பது அலுப்பதேயில்லை. பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை போன்ற புத்தகங்களை அவரிடம் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மகாபாரதம், கந்தபுராணம் போன்ற புராணங்கள் சிறுவயதிலேயே அறிமுகம் ஆனது என் கொடுப்பினை என்று தான் சொல்ல வேண்டும்.

அதன்பின் கோவில்படி ஸ்கூலுக்குப் போனபின், பாக்கெட் நாவல்கள் அறிமுகம் ஆகின. 

பல்சுவை நாவல்கள் : 
ஏழாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்பு வரை சுஜாதா, ராஜேஸ்குமார்,சுபா. பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் ஏதேனும் ஒரு கொலை முதல் அத்தியாயத்திலேயே விழும். கொலையாளி யார் என அந்தந்த எழுத்தாளர்களின் டிடெக்டிவ்கள் கண்டுபிடிப்பார்கள். பெரும்பாலும் கால்வாசிக் கதையிலேயே யார் கொலையாளி என்று ஒரு ஐடியா வந்துவிடும். ஆனால் ஒருகட்டத்தில் பொழுதுபோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் (சுஜாதா நாவல்கள் தவிர!) போரடிக்க ஆரம்பித்தது. சுஜாதா போன்ற பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியை மட்டுமே கடைசிவரை நம்மால் ரசிக்க முடிகிறது. 

பாலகுமாரன்: 
அதன்பின் ஆரம்பித்தது பாலகுமாரன் பைத்தியம். பாலகுமாரனின் தொடக்கக்கால நாவல்கள் நல்ல கற்பனை வளமும் நல்ல மொழிநடையும் கொண்டவை. (உதாரணம் - இரும்புக் குதிரைகள்). அவரது ஆன்மீக நாவல்களில் காதற்பெருமான், தங்கக்கை போன்ற நல்ல முத்துக்களும் உண்டு. மனதோடு பேசுவது, மனதிற்குள் வளரும் கற்பனைகள் போன்றவற்றை இது இயல்பானவை, ஆனால் எல்லை மீறினால் ஆபத்தானவை என நம் கை பிடித்துச் சொல்லித்தந்தது பாலகுமாரன் தான். 

எப்போதும் நிதானமாக ஆழ்ந்து யோசிக்கும் அவரது ஹீரோக்களின் பாதிப்பு என் ஆளுமையை மாற்றியது என்றே சொல்ல வேண்டும். பாலகுமாரனே ஓஷோவை அறிமுகப்படுத்தி வைத்தார். அது ஆன்மீகரீதியில் பேருதவியாக இருந்தது. ஆனாலும் பிற்காலத்தில் புகழ்போதையில் மயங்கி, தன்னை ஞானியாக பாலகுமாரன் எண்ண ஆரம்பத்த பின் நல்ல படைப்புகள் அவரிடமிருந்து வரவில்லை. உடையாரே அவரின் கடைசி நல்ல நாவல் என்று நினைக்கின்றேன். இருப்பினும் ஒரு தமிழ் வாசகன் பாலகுமாரனை கடந்து வருவது அவசியம்.

தி. ஜானகி ராமன்: 
மென்மையான உணர்வுகளுடன் கதை சொல்வதில் வல்லவர். மோகமுள் நாவல் இவரது உச்சம். மற்ற படைப்புகளும் வாசிக்க வேண்டியவையே. மென்மையான மொழி நடையுடன் பெரும்பாலும் கற்புக்கோட்டில் நின்று உரையாடும் கதைகள் இவருடையவை. திருச்சி காவிரியைக் கடக்கும்போதெல்லாம் தி.ஜானகிராமன் தான் எனக்கு ஞாபகம் வருவார்.

ஜெயகாந்தன்: 
அதன்பின் நானும் என்னை எழுத்தாளனாக கற்பனை செய்துகொண்டு கதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்படியே தொலைந்து போக இருந்த என்னைக் காப்பாற்றியது ஜெயகாந்தன் தான். அவரது கதைகளைப் படித்தபிறகே, ‘இதுல்லய்யா கதை! ‘ என்று ஞானோதயம் பிறந்தது.

உண்மையை அப்பட்டமாக முகத்தில் அறையும் வண்ணம் சொல்லும் கதைகள் இவருடையவை. சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான் போன்ற நாவல்கள் மனதைத் தொட்டவை, மறக்க முடியாதவை. இவரது கதைகளை விட கட்டுரைகள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு. தற்போதைய அவரது அரசியல்/சமூக நிலைப்பாடு நம்மால் ஜீரணிக்க முடியாதது, சிங்கம் அடிமாடாகப் போன சோகக் கதை அது. ஆனாலும் தமிழ் இலக்கிய உலகில் பழைய ஜெயகாந்தனின் இடத்தை யாரும் இன்னும் நிரப்பவில்லை என்றே சொல்லலாம்.

அகிலன்: சாதாரண சமூகக் கதைகள் தான். ஆனாலும் சரளமான மொழிநடையால் என் மனம் கவர்ந்தவர். குலமகள் ராதை திரைப்படம் இவரது நாவலை அடிப்படையாகக் கொண்டு வந்தது. 

கல்கி :
கல்கி என்றாலே பொன்னியின் செல்வன் தான். ஒரு தமிழ் வாசகன் பொன்னியன் செல்வனை அவசியம் படித்திருக்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து. 5 பாகங்களும் எடுத்தால் கீழே வைக்க முடியாத தன்மை கொண்டவை.

இவர்கள் தவிர கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி போன்றோரை நான் கடந்து வந்திருந்தாலும், அவர்களை நான் அதிகம் ரசித்ததில்லை. ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கலாம்.

தற்கால இலக்கிய ஆளுமைகளாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா இருக்கிறார்கள். இவர்களது அத்தனை படைப்புகளும் முக்கியமானவை என்பது என் கருத்து. குறிப்பாக,

ஜெயமோகன் - விஷ்ணுபுரம், கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல்

எஸ்.ராமகிருஷ்ணன் - துணையெழுத்து(கட்டுரைகள்), உப பாண்டவம்

சாரு நிவேதிதா - ராசலீலா, எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் 

ஆகியவற்றைச் சொல்லலாம்.

(நாஞ்சில் நாடனை நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை, ப்ளாக்கால் நான் இழந்தது புத்தக வாசிப்பைத் தான்.)


இலக்கிய வாசிப்பிற்கு நம் அனுபவமும் ஆர்வமும் முக்கியம். நமக்கு ஆன்மீக நாட்டம் உண்டென்றால் ஜெயமோகன், எஸ்.ரா உதவுவர். சமூக நாட்டமென்றால் ஜெயகாந்தன் உதவுவார். உங்கள் ரசனையோடு எவர் ஒத்துப்போவார் என்று பார்த்துவிட்டு நாம் படிக்க ஆரம்பிப்பது நல்லது. நமக்கு எல்லா இலக்கியகர்த்தாவையும் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 

புத்தகங்களே நல்ல நண்பனாகவும், ஆசானாகவும் எனக்கு இருந்திருக்கின்றன. புத்தகங்களைப் பற்றிப் பேசுவது எனக்கு எப்போதுமே சந்தோசமான விஷயமாக இருந்திருக்கின்றன. இன்னும் படிக்க வேண்டிய எழுத்தாளர்களும் நிறைய இருக்கின்றார்கள். எழுதுவதும், படிப்பதும் மட்டுமே வாழ்க்கையாக அமைந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்!!

பிஸ்கி: பதிவின் நாகரீகம் கருதி நான் படித்த ‘வாழ்க்கைக் கல்வி’ புத்தகங்களை இங்கே குறிப்பிடவில்லை. விவரம் வேண்டுவோர் ஆயிரம் ரூபாய் மணியார்டருடன், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

  1. சாண்டில்யனை விட்டு விட்டீர்களே?

    ReplyDelete
  2. இரவு வணக்கம்,செங்கோவி!வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பது எவ்வளவு பெரிய சத்திய வாக்கு?உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது,இது!புத்தகங்களில் பைத்தியமாக இருந்தவன் ஒரு காலத்தில்!இப்போதெல்லாம்................!?

    ReplyDelete
  3. அந்தக் கடைசிப் பதிவை எனக்கு வேண்டிய ஒருவருக்கு(அவரும் பதிவர் தான்!)படிக்க லிங்க் கொடுத்தேன்.படித்து விட்டு அவர் சொன்னது;எவ்வளவு பெரிய சீரியசான விடயங்களையும்,நகைச்சுவையோடு விழிப்பாக்கி எழுதுகிறார் என்று!(வெற்றுப் புகழ்ச்சி அல்ல!)

    ReplyDelete
  4. எண்டரீமூநாத் அவர்களையும் சேர்க்க வேண்டும் தமிழில் சுசீலா கனகதூர்க்கா மொழிபெயர்த்தா தொடர்ந்து இறுதியாக வந்த நாலாவது தூண் தேடி நான் ரீநகரில் அலையாத பதிப்பகம் இல்லை கடந்த ஆண்டில்!ம்ம்

    ReplyDelete
  5. இப்போது ராமகிருஸ்ணம் மற்ற விஸ்ணுபுரத்தார் ???ம்ம் வேண்டாம் இன்னும் ஈழத்தவனாக வாழ்கின்றோம் ஐயா!

    ReplyDelete
  6. ஜெயக்காந்தன் எனக்கும் பிடிக்கும் ஒரு காலத்தில் பின் அவரே ஒரு சொல் கேளீர் கட்டுரைத்தொகுப்போடு மூட்டைகட்டிவிட்டேன் எல்லாரும் நடுவன் அரசு தாண்டி நிஜம் பேசமாட்டார்கள் என்ற உண்மை தெரிந்த வாசகனாக ம்ம் ஆனாலும் சினிமாவுக்குப் போன சித்தாளும் ஒரு பிடி சோறும் என்னை அதிகம் பாதித்தது!

    ReplyDelete
  7. மணிமேகலை பிரசுரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக் கல்வி புத்தகத்தை வரவழைத்தோமே !!! :)))

    ReplyDelete
  8. சிறு வயதில் வாசிப்பு பழக்கம் இருந்தது, நாள் ஆக நாள் ஆக குறைந்து போனது வருத்தமே. அதுவும் இங்கே வந்த பின் முற்றாக நின்று விட்டது. உங்கள் குறிப்பில் யாராவது ஈழ தமிழ் படைப்பாளிகளையும் சேர்த்திருக்கலாம். ஏதாவது நமக்கு கிட்டக் கூடிய சஞ்சிகைகள் இருந்தா சொல்லுங்கண்ணே, சந்தா கட்டியாவது பாப்போம், அப்படியாவது எழுத்து வளருதான்னு.

    ReplyDelete
  9. Vaazhthukkal sagothara; menmelum vaasippu perugattum!

    ReplyDelete
  10. ////
    பிஸ்கி: பதிவின் நாகரீகம் கருதி நான் படித்த ‘வாழ்க்கைக் கல்வி’ புத்தகங்களை இங்கே குறிப்பிடவில்லை. விவரம் வேண்டுவோர் ஆயிரம் ரூபாய் மணியார்டருடன், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்////

    ரொம்ப எதிர்பார்த்து வந்தோம் பாஸ்
    இதை ஒரு தனிப்பதிவில் எழுதவேண்டும்.ஹி.ஹி.ஹி.ஹி.....

    ReplyDelete
  11. உண்மைதான் பாஸ் தற்போது புத்தக வாசிப்பு பழக்கம் எனக்கும் வெகுவாக குறைந்துவிட்டது குறைந்துவிட்டது என்று சொல்வதை விட முற்றாக தொலைந்துவிட்டது.ஆனால் சில புத்தகங்களை பார்த்தால் வாங்கிவிடுவேன்

    அப்படி சமீபத்தில் இந்தியா போன போது பார்த்ததும் மனதை தூண்டிவிட்ட உடனே வாங்கி வாசிக்க தோன்றிய........யோவ் நீங்க நினைக்கிறமாதிரி வாழ்க்கை கல்வி புத்தகம் இல்லை இது ”சிம்ம சொப்பனம்” பிடல்காஸ்ரோ வின் வாழ்க்கை வரலாறு பலவருடங்களுக்கு பின் நான் படித்த புத்தகம்

    ReplyDelete
  12. காலை வணக்கம்,செங்கோவி!நலம் தானே?

    ReplyDelete
  13. "காணவில்லை":::::கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,ஒரு அணா தரப்படும்!(நேத்து நைட்டு போட்ட ரெண்டு கமெண்டு காணாப் போயிடிச்சு!)

    ReplyDelete
  14. சூப்பர்ணே!
    அண்ணன் காமிக்ஸ் வாசிச்சதில்லையா?
    பாலகுமாரன் பற்றி கூறியிருப்பது செம்ம! அநேகமாக எல்லோரும் பாலகுமாரனுக்கு அடுத்ததாக ஓஷோவுக்குப் போவார்கள்..நானும்!
    தி.ஜானகிராமனின் மோகமுள் எனக்கு இன்னும் கிடைக்கல. ஜெயகாந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் பற்றிக் கூற வேண்டியதில்லை. சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் வாசித்து முடிக்க வேணும் என்பதற்காகவே கஷ்டப்பட்டு..முடியல! அவரின் 'ஒரு புளிய மரத்தின் கதை' நல்லாயிருக்கும்!

    ReplyDelete
  15. இப்போது வாசிப்புப் பழக்கம் சுத்தமாக இல்லை. ஏழு வசுஷமாச்சு! அப்பப்போ ஏதாவது...தற்போது எழுதுபவர்களில் அழகிய பெரியவன், ராஜூ முருகன் (எஸ்.ரா டைப் - விகடனில்) நல்லாயிருக்கும்! கடைசியாக சில மாதங்களுக்குமுன் வாசித்த நாவல் பெருமாள் முருகனின் 'கங்கணம்' - நல்லாயிருந்தது. ஜெமோவின் 'ஊமைச்செந்நாய்' செம்ம! பதிவெழுத வந்ததில் வாசிப்புப் பழக்கம் தொலைந்து போனது!

    ReplyDelete
  16. ////புத்தகங்களே நல்ல நண்பனாகவும், ஆசானாகவும் எனக்கு இருந்திருக்கின்றன. புத்தகங்களைப் பற்றிப் பேசுவது எனக்கு எப்போதுமே சந்தோசமான விஷயமாக இருந்திருக்கின்றன. இன்னும் படிக்க வேண்டிய எழுத்தாளர்களும் நிறைய இருக்கின்றார்கள். எழுதுவதும், படிப்பதும் மட்டுமே வாழ்க்கையாக அமைந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்!!////

    சூப்பர்ணே! நானும் அடிக்கடி யோசிக்கிறது. வாசிப்பது எப்போதுமே மிகப்பிடித்த விஷயமாகவே இருக்கிறது. விகடனில் எழில்வரதன் என்று ஒருவர் சிலகாலம் (2005 -2006 )எழுதினார். செமையா இருக்கும்!

    ReplyDelete
  17. @Dr. Butti Paul
    //உங்கள் குறிப்பில் யாராவது ஈழ தமிழ் படைப்பாளிகளையும் சேர்த்திருக்கலாம்//

    ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களாக அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரையும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ஈழத்து மொழிநடையில் எள்ளல், நக்கல் கலந்து இறங்கி அடிப்பவர் ஷோபாசக்தி. மெல்லிய புன்னகை இழையோட நகைச்சுவை உணர்வுடன் வருடிச் செல்பவர் அ.முத்துலிங்கம்! சமீபத்தில் அவரது 'பத்மினி' கட்டுரையைப் பகிர்ந்திருந்தார் அட்ராசக்கை சி.பி!

    ReplyDelete
  18. நம்ம பதிவர்களில் 'பொன்னியின் செல்வன்'- கார்த்திகைப் பாண்டியன் செமையாக எழுதுபவர். அவரது 'உதிரிப்பூக்கள்'தொடரை வாசிக்கவும்!

    ReplyDelete
  19. கலைஞரின் நெஞ்சுக்கு நீதி?

    ReplyDelete
  20. @Yoga.S.

    ஐயா, உங்கள் கமெண்ட்டுகள் பெரும்பாலும் ஸ்பேம்-க்கு போய்விடுகின்றன. ஆகவே அவ்வப்போது நான் செக் பண்ணி, ரிலீஸ் செய்கிறேன்..லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் உங்கள் கமெண்ட்ஸ்!

    ReplyDelete
  21. //! சிவகுமார் ! said... [Reply]
    கலைஞரின் நெஞ்சுக்கு நீதி?//

    யோவ், நல்லா வருது வாயில...ஓடிப் போயிரும்!

    ReplyDelete
  22. நீங்கள் சாண்டில்யன், கோவி மணிசேகரன் போன்ற வரலாற்று நூல்களையும் வாசிக்கலாம் அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  23. செங்கோவி said...
    ஐயா, உங்கள் கமெண்ட்டுகள் பெரும்பாலும் ஸ்பேம்-க்கு போய்விடுகின்றன. ஆகவே அவ்வப்போது நான் செக் பண்ணி, ரிலீஸ் செய்கிறேன்..லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் உங்கள் கமெண்ட்ஸ்!/////ஓஹோ!ஸ்பேம் தான் நமக்கு வில்லனா?ஒ.கே.ஒ.கே...!!!!!

    ReplyDelete
  24. நல்ல முறையில் அலசி ஆராய்ந்த புத்தகவாசிப்பு! நானும் ஒரு காலத்தில் புத்தகமும் கையுமாக திரிந்தவன் தான்! உங்கள் பதிவு மீண்டும் வாசிப்பை நேசிக்கத்தூண்டுகிறது நன்றி!

    ReplyDelete
  25. ஜீ... said... [Reply]
    @Dr. Butti Paul
    //உங்கள் குறிப்பில் யாராவது ஈழ தமிழ் படைப்பாளிகளையும் சேர்த்திருக்கலாம்//

    ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர்களாக அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இருவரையும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். ஈழத்து மொழிநடையில் எள்ளல், நக்கல் கலந்து இறங்கி அடிப்பவர் ஷோபாசக்தி. மெல்லிய புன்னகை இழையோட நகைச்சுவை உணர்வுடன் வருடிச் செல்பவர் அ.முத்துலிங்கம்! சமீபத்தில் அவரது 'பத்மினி' கட்டுரையைப் பகிர்ந்திருந்தார் அட்ராசக்கை சி.பி!

    ரொம்ப நன்றி ஜீ. சோபா சக்தியை படித்திருக்கிறேன், அவரது "தேவதைகளின் நகரம்" சிவில் யுத்தத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துக்காட்டியது. முத்துலிங்கம் அவர்களை படித்ததில்லை. கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது முயற்ச்சிக்கிறேன். இப்போ கிடைக்கிற நேரம் எல்லாம் சினிமா பார்பதற்க்கே செலவாகி விடுகிறது. கொஞ்சம் குறைச்சிக்கனும்.

    ReplyDelete
  26. படித்ததை அழகா சொல்லியிருக்கீங்க...
    வாழ்க்கை கல்வி உள்பட...

    ReplyDelete
  27. அருமையாக வெளிப்படுத்தியுள்ளீரகள் அண்ணா...

    எனக்கு ஆரம்பம் காமிக்ஸ் அப்புறம் ராஜேஸ்குமார்...

    ஆனால் தாங்கள் சொல்வது போல புளொக் எனது புத்தக மேய்ச்சலையும் குறைத்து விட்டது..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

    ReplyDelete
  28. இதுல சிறுவர் மலர் வரலியேண்ணே....?

    ReplyDelete
  29. /////! சிவகுமார் ! said...
    கலைஞரின் நெஞ்சுக்கு நீதி?///

    கலைஞரின் சங்கத்தமிழ்....? (எப்பூடி..... நமக்கும் கொஞ்சம் எலக்கியம் வருது போல....?)

    ReplyDelete
  30. குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

    /மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

    http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.