Friday, August 31, 2012

முகமூடி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
ஸ்பைடர்மேன், பேட் மேன் என ஆங்கிலத்தில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் தமிழில் அத்தகைய சூப்பர் ஹீரோ கேரக்டர்கள் இதுவரை இல்லை எனலாம்..அந்த வகையில் தமிழில் முதல் சூப்பர் ஹீரோப் படம் என்ற பெருமையுடன், தமிழில் குங்பூ கலையை மையமாக வைத்து, யுடிவி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் முகமூடி.

ஸ்டோரி லைன் :
ப்ரூஸ் லீ என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹீரோ குங்பூ மேல் உள்ள மோகத்தால் (கவனிக்க: குஷ்பூ அல்ல குங்பூ) வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றுவதோடு கமிசனர் நாசரின் பெண்ணான ஹீரோயினையும் சுற்றுகிறார், ஒன் சைடு லவ் தான். அதே நேரத்தில் ஊரில் பல இடங்களில் ஒரு குரூப் கொலை/கொள்ளையில் ஈடுபடுகிறது. அதைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் நாசர் இறங்குகிறார். ஹீரோயினை ஒன் சைடாக லவ் பண்ணும் ஹீரோ, ஹீரோயினை எப்படி லவ் பண்ணுவது என்று யோசிக்கையில், ‘பேண்ட்டுக்கு மேல் ஜட்டி போட்டுக்கொண்டு போனால் லவ் பீறிட்டுக்கொண்டு கிளம்பும்’ என்ற விபரீத ஐடியா தோன்றுகிறது. எனவே ஸ்பைடர் மேன் கெட்டப்பில் சிவப்புக்கலர் ஜட்டி போட்டுக்கொண்டு ராத்திரி நேரத்தில் போகிறார். (பின்னே, பகல்ல அப்படிப் போனா நாய் கடிச்சுடாது? நமக்கு இருக்கிறதோ ஒரே ஒரு ஹீரோ...!).

அப்போது அந்த ஏரியாவில் திருட வரும் கொள்ளைக்கார கும்பலில் ஒருவனைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கிறார். யார் நீ என்று போலீஸ் கேட்க, முகமூடி என்று சொல்லி, அதே பெயரில் ஃபேமஸ் ஆகிறார். மீண்டும் ஹீரோயினை பார்க்க சாதா உடையில் (பத்திரமாக!) செல்லும்போது, நாசரை வில்லன் குரூப் சுட்டுவிட, பழி ஹீரோ மேல் விழுகிறது. ஹீரோவும் வில்லன் குரூப் ஆள்  என போலீஸ் தேடுகிறது. ஹீரோ தான் குற்றவாளி அல்ல என்று போலீஸிடம் நிருபித்தாரா? வில்லன் குரூப்பை துவம்சம் செய்தாரா? ஹீரோயினிடம் தான் தான் சிவப்பு ஜட்டி முகமூடி என்று நிரூபித்து காதலில் ஜெயித்தாரா என்பதே கதை.

திரைக்கதை :
படத்தின் ஓப்பனிங் கொள்ளை சீனிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்கள். கொள்ளைக்கார கும்பல் பற்றியும், அதைத் தேடும் போலீஸ் பற்றியும் அறிமுகம் செய்துவிட்டு, ஹீரோ போர்சனுக்கு கதை நகர்கிறது. முதல் ஃபைட் சீனிலேயே குங்பூ வீரனாக ஹீரோவைக் காட்டுவதால், சூப்பர் ஹீரோவாக ஜீவாவை எளிதில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஹீரோவுக்கு ஒரு காதல் என கமிசனர் வீட்டிற்கு அதன் மூலம் லின்க் கொடுத்து, விரைவாகவே ஹீரோவுக்கும் வில்லன் குரூப்புக்கும் இடையே நேரடி மோதலுக்கு படம் வந்துவிடுவதால், முதல் பாதி ஜெட் வேகத்தில் பறக்கிறது.

ஈவிரக்கமற்ற கொள்ளைக்கும்பல் - பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் - களமிறங்கும் சூப்பர் ஹீரோ  என படம் சூடாகும் நேஅத்தில் இண்டர்வெல் வருகிறது. அதன்பிறகு ஹீரோ, ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. மொத்த கொள்ளைக்கூட்டமும் யார் என போலீஸே கண்டுபிடித்துவிடுகிறது. அதற்கு உடந்தையான போலீஸ் அதிகாரி மூலம் எல்லா உண்மைகளும் போலீஸே தெரிந்துகொள்கிறது..ஹீரோ ஒன்றும் செய்யாமலேயே எல்லாம் சுபமாக முடியப்போகும் நேரத்தில், வில்லன் நரேன் ஹீரோயின் உட்பட சில குழந்தைகளை கடத்தி வைத்துக்கொண்டு, ’முகமூடி எங்கள் தங்கக்கட்டிகளோடு நேரில் வந்தால் தான் பணயக்கைதிகளை விடுவிப்போம்’ என்று அந்தக்கால நம்பியார்த்தனமான கோரிக்கையை வைப்பதிலேயே படம் புஸ்ஸாகிவிடுகிறது. ’யூ டூ மிஷ்கின்?’ என்று கேட்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் அட்டகாசம். முதல் சீன் முதல் இண்டர்வெல் வரை படம் பிசிறு தட்டாமல், நிச்சயம் ஹிட் தான் என்று நினைக்க வைக்கிறது. மிஷ்கினின் வழக்கமான ‘கால் க்ளோசப்’களை இங்கே குங்பூவுக்கு பயன்படுத்தியிருப்பதால், ரசிக்க முடிகிறது. ஏற்கனவே இதே மாதிரி சூப்பர்ஹீரோப் படங்கள் ஆங்கிலத்தில் வந்துவிட்டாலும், படத்தில் குங்பூ கான்செப்ட்டைக் கலந்ததன் மூலம் தனித்துத் தெரிகிறது முகமூடி. யுத்தம் செய் படத்தை விட, முகமூடி ஸ்பீடு தான்

 ஜீவா :
இந்த படத்திற்காக ஆறுமாதம் ஜீவாவும் நரேனும் குங்பூ கத்துக்கிட்டதாக செய்தி வெளியானது. அது உண்மை தான் என்று படம் பார்க்கையில் புரிகிறது. சூப்பர் ஹீரோ கேரக்டருக்குப் பொருந்தும் வண்ணம் உடம்பில் முறுக்கேற்றி, ஃபைட் சீன்களில் நிறையவே ரிஸ்க் எடுத்து கலக்குகிறார் ஜீவா. காதல் காட்சிகளிலும் வழக்கமான குறும்புக்கு பஞ்சமில்லை. ஒரே நேரத்தில் வீட்டுக்கு தண்டச் சோறாகவும், ஊருக்கு சூப்பர்மேனாகவும் மாறும் கேரக்டருக்கு நன்றாகவே பொருந்திப் போகிறார் ஜீவா.

குஜிலி :
இதிலும் பூஜா ஹெக்டே என்ற தேறாத கேஸ் ஒன்று தான் ஹீரோயின். நல்லவேளையாக அதிக காட்சிகள் இல்லை. தமிழ் சினிமாவிற்கு சீக்கிரமே நல்ல ஹீரோயின்கள் கிடைக்க பிரார்த்திப்போம்.
நரேன்/செல்வா :
நரேன் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆரம்பக்காட்சிகளில் பயங்கர வில்லனாக தோன்றும் அவர், பெண்மை கலந்த நடையாலும்/பேச்சாலும் டம்மியாகத் தெரிகிறார். ஜீவாவின் மாஸ்டராக வரும் செல்வா, அந்த கேரக்டருக்கு ஒத்துவரவில்லை. புரோட்டா மாஸ்டரைவிடவும் பலவீனமானவராக அவர் இருப்பதால், மாஸ்டர் கேரக்டருக்கு வேறு ஸ்ட்ராங்கான ஆளைப் போட்டிருக்கலாம்.

வசனம் :

’புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’ என்பது போன்ற பல நல்ல வசனங்கள் நம்மைக் கவர்கின்றன. ஹீரோ தான் ஒரு ஐ.டி.டீம் லீடர் என ஹீரோயின் தோழியிடம் அளந்துவிடும்போது, ஹீரோவின் அப்பா வந்து பேசும் டயலாக் அட்டகாசம். சிரிப்பில் தியேட்டரே அதிர்கிறது.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- மிஷ்கினின் ஃபேவரைட் கேமிரா ஆங்கிள்ஸும், தனித்துவமான காட்சியமைப்பும்

- குங்ஃபூ ஸ்டைல் சண்டைக்காட்சிகள்

- ஜீவா

- ஸ்டைலிஷான மேக்கிங். நச்சென்ற ஒளிப்பதிவு (சத்யா)

- சண்டைக்காட்சிகளில் வில்லன் ஹீரோ/மாஸ்டரை உணர்ச்சிவசப்பட வைத்து, அடித்து வீழ்த்துவது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இண்டர்வெல் வரை பெப்பை ஏற்றிவிட்டு, கடைசியில் சொதப்பியது

- நரேன் தான் வில்லன் என்ற சஸ்பென்ஸை உடனே, சப்பென்று உடைத்தது

-  9 மாதத்திற்கு ஒரு மாநிலம் என திட்டம் போட்டு, திருடும் கும்பல் என்று சொல்லிவிட்டு, அவர்கள் பெரிய குங்பூ ஸ்கூலை நடத்துவதாகவும், பப்ளிக் முன்னிலையில்  போட்டி நடத்துவதாக காட்டியிருப்பது.

-  கிளைமாக்ஸ் சண்டையில் ஹீரோவின் தாத்தா கோஷ்டி செய்யும் நகேஷ்காலத்து காமெடி..என்ன கொடுமை சார் அது!

- படத்தின் தரத்துடன் ஒட்டாத கிளைமாக்ஸ் காட்சியும், அதற்கான லீடும்

- மிஷ்கின் யதார்த்ததையும் விட முடியாமல், சூப்பர் ஹீரோயிசத்துக்குள்ளும் முழுக்க போக முடியாமல் ரெண்டும் கெட்டானாய் தவித்திருக்கிறார். நம்பக்கூடியவகையில் காட்சிகளை அமைப்பதற்கான கதை இதுவல்ல. ஹீரோ கடைசிவரை சாதாரண மனிதனாகவே போராடுவதால், ஜட்டி வித்தியாசத்தைத் தவிர இதுவும் வழக்கமான படம் தானோ என்று எண்ணவைக்கிறது.

அப்புறம்....:

- கே-யின் இசையில் பார் ஆந்தம் பாட்டு நன்றாக இருக்கிறது. பாடல்களைவிட பிண்ணனி இசையில் அதிக உழைப்பு தெரிகிறது.

- தனித்தனிக் காட்சிகளாகப் பார்த்தால், நீட்டாக இருக்கிறது. மிஷ்கினும் இன்னொரு பார்த்திபன் ஆகிவிடுவாரோ?

- இது எந்தப் படத்தின் காப்பி என்று அடுத்து விவாதம் ஆரம்பிக்கும் என்று நம்புகிறேன்..இருந்தாலும், ஸ்பைடர்மேன் - பேட் மேன் - அயன்மேன் எல்லாம் கான்செப்ட் படி ஒன்றுதான் என்றாலும், அவை முந்தையதன் காப்பி என்று நாம் சொல்வதில்லை..எனவே இந்தப் படத்தையும் விட்டுவிடலாமே!

- நந்தலாலா படம் தோற்றதுக்குக் காரணமே பதிவர்கள்தான் என்று குற்றம் சாட்டினார் மிஷ்கின். சித்திரம் பேசுதடி-அஞ்சாதே மாதிரி படம் கொடுத்தால், நாங்கள் ஏன் குறை சொல்லப் போறோம்?

பார்க்கலாமா? :

-  முக்கால்வாசிப் படம் வரை பார்க்கலாம் (மிஷ்கின் / ஜீவாவுக்காக!)

மேலும் வாசிக்க... "முகமூடி - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, August 29, 2012

திமுக / அதிமுக ஆட்சியில் பதிவு எழுதுவது எப்படி?

ப்போதெல்லாம் முன்பு போல் அதிக அரசியல் பதிவுகள் வருவதில்லை..பல பதிவர்களுக்கு அதிமுக ஆட்சிக்கு ஏற்றாற்போல் பதிவு எழுதுவது எப்படி என்ற குழப்பம் வந்திருப்பது போல் தெரிகிறது. எனவே சில செய்திகளை வைத்து, எப்படி ஆட்சிக்கு ஏற்றாற்போல் பதிவு எழுதுவது என்று பார்ப்போம். 
திமுக ஆட்சியில் செய்தி : 2ஜி வழக்கில் அரசுக்கு பல கோடி நஷ்டம். திமுக அமைச்சர் ராசா - கனிமொழி மேல் குற்றச்சாட்டு! வழக்கு - குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இழுத்தடிப்பு

பதிவு எழுதும் முறை : என்ன ஒரு அநியாயம்? யார் அப்பன் வீட்டுக் காசு? இவங்களையெல்லாம் நடுரோட்ல வச்சுச் சுடணும்..கோர்ட்டு-கேஸ்னு இழுத்தடிக்கிறதே தப்பு..எப்படி இவ்ளோ பெரிய ஊழல் பண்ணிட்டு, கூச்சமில்லாம மக்கள்கிட்ட ஓட்டும் கேட்டு வர்றாங்க? சே..சே..கேவலம்!

அதிமுக ஆட்சியில் செய்தி : ஜெ-சசிகலா அதிக சொத்துக்குவித்த வழக்கில் பெங்களூர் அரசு வழக்கறிஞர் ராஜினாமா..வழக்கு பல வருடங்களாக இழுத்தடிப்பு

பதிவு எழுதும் முறை : போன வாரம் குரு பகவான் மீன ராசில இருந்து ஜம்ப் ஆகி ஸ்ட்ரெய்ட்டா சிம்ம ராசில இறங்கிட்டாரு. அதை ராகு பார்த்துட்டாரு..பார்த்ததை சுக்கிரன்கிட்ட வேற சொல்லிட்டாரு..இனிமே அவ்ளோ தான்..அம்மாவை ஒன்னும் செய்ய முடியாது..எல்லா வக்கீலும் ஓட வேண்டியது தான்..இந்த வழக்கே பிசுபிசுத்துப் போகும்..ஹா..ஹா!

திமுக ஆட்சியில் செய்தி : அழகிரி குரூப்புக்கு எதிராக, ஆ.ராசாவிற்கு எதிராக எழுதிய பத்திரிக்கை மேல் வழக்குப் பதிவு

பதிவு எழுதும் முறை : இந்த திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித் தாம்யா..கலிஞரு நானும் பத்திரிக்கையாளன்தான்னு சொல்லிக்கிட்டே, மீடியாவை நசுக்கிடுவாரு..இது சுதந்திர நாடு தானே? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, ஊடக சுதந்திரம் என்பது நம் பிறப்புரிமை. பத்திரிக்கை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண். (மீதி மூன்று தூண்கள்...குஷ்பூ, நமீதா, ஹன்சிகா!)

அதிமுக ஆட்சியில் செய்தி : ஜெ பற்றி அவதூறுச் செய்தி வெளியிட்ட விகடன் மேல் வழக்குப் பதிவு. விகடன் ஆசிரியர் கோர்ட்டில் ஆஜர்.

பதிவு எழுதும் முறை : என்ன இருந்தாலும் விகடன் இப்படி எழுதியிருக்கக்கூடாதுய்யா..ஒரு நாட்டோட சி.எம்-அவரோட உடன்பிறவா சகோதரிங்கிற மரியாதை கொஞ்சமும் இல்லாம, அவங்களைப் பத்தி குறைசொல்லி எழுதலாமா? சசிகலா வெளியேற்ற நாடகத்தை உண்மைன்னு நம்பி, குதியாட்டம் போட விகடனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்யா!

திமுக ஆட்சியில் செய்தி : பள்ளிகளில் சமச்சீர்க் கல்வி

பதிவு எழுதும் முறை : ஆஹோ..அய்யாஹோ...எப்படி இதைக் கொண்டு வரலாம்? இதனால படிப்பின் தரமே பாழாப் போயிடும். இதுல சி.எம் பற்றியெல்லாம் பாடம் இருக்கு..அதை மட்டும் நீக்கினால் போதாது..மொத்தமா எல்லாத்தையுமே தூக்கி குப்பையில போடணும்..இது வந்தா அவ்ளோ தான்..நாடே கெட்டுக் குட்டிச் சுவராப் போயிடும்..அரசுப் பள்ளியிலயும் மெட்ரிக்குலேசன் ஸ்கூல்லயும் ஒரே பாடத்திட்டமா? என்ன அநியாயம்?

அதிமுக ஆட்சியில் செய்தி : பள்ளிகளில் சமச்சீர்க் கல்வி

பதிவு எழுதும் முறை : இந்தத் திட்டம் மாணவர்களின் செயல்திறனை ஊக்குவிப்பதாக உள்ளது. அவர்களை வெறுமனே மனப்பாடக் கருவிகளாக ஆக்காமல், சுயமாக சிந்திப்பவர்களாக ஆக்குகிறது. சமத்துவம் என்பது மானுடத்தின் மாபெரும் கனவு. அது பள்ளிப்பாடத்திட்டத்தில் இருந்து ஆரம்பிப்பது மிகமிக அவசியமாகும். இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் தமிழக அரசுக்கு பாராட்டுகள்!
திமுக ஆட்சியில் செய்தி : நகைக்கடையில் கொள்ளை..வாக்கிங் போன பிரபல புள்ளி கொலை!

பதிவு எழுதும் முறை : திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தாம்யா..சட்டம் ஒழுங்கு கெட்டுக் குட்டிச்சுவராப் போயிடும்..ஒரு கேஸ்லயும் குற்றவாளிகளைப் பிடிக்கவே மாட்டாங்க..இப்படி பகல்லயே கொலை-கொள்ளைன்னு நடக்குதே..இது தான் ஆட்சி நடத்தற லட்சணமா?

அதிமுக ஆட்சியில் செய்தி : நகைக்கடையில் கொள்ளை..வாக்கிங் போன பிரபல புள்ளி கொலை!

பதிவு எழுதும் முறை : முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கட்டுக்குள் இருந்தது என்பது நீங்கள் அறிந்ததே..ஆனால் சென்ற திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு அதிக செல்லம் கொடுக்கப்பட்ட காரணத்தாலேயே, இப்போதும் அவர்கள் திருந்த முடியாமல் அவதிப்படுகிறார்கள். மாற்றம் என்பது உடனே வருவதில்லை. இப்போது தானே அம்மா ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்..எப்படியும் இன்னும் நான்கு ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் வந்துவிடும்!


ஃபேஸ் புக்/ட்விட்டர் பயனாளர்களுக்கு :

அதிமுக ஆட்சியில் செய்தி : எதிர்க்கட்சித் தலைவர் ஃபேஸ் புக்கில் கணக்கு துவங்கினார்.

கமெண்ட் போடும் முறை : டாய் மவனே..வர்றியா? ஒண்டிக்கு ஒண்டி வர்றியா? சோமாறி..பேமானி..உனுக்குல்லாம் இன்னாத்துக்கு ஒரு ஃபேஸு..அதுக்கு ஒரு புக்கு?

திமுக ஆட்சியில் செய்தி : எதிர்க்கட்சித் தலைவர் ஃபேஸ் புக்கில் கணக்கு துவங்கினார்.

கமெண்ட் போடும் முறை : என்னை ஃபாலோயராகச் சேர்த்துக்கொள்ளும்படி, எங்களையெல்லாம் வாழ வைக்கும் தாயுள்ளம் கொண்ட, அகிலமெல்லாம் வணங்கும் அங்காள பரமேஸ்வரி-புரட்சித் தலைவி அம்மா அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் வாசிக்க... "திமுக / அதிமுக ஆட்சியில் பதிவு எழுதுவது எப்படி?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, August 25, 2012

முருக வேட்டை_27


சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்!-அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலைமேல், அயன் கையெழுத்தே!
-( கந்தர் அலங்காரம்)

ரவணனும் கவிதாவும் கென்யா டூரை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பினர். வீட்டிற்கு வந்ததும் கவிதா அகிலாவிற்கு ஃபோன் செய்தாள்.

கவிதா..வந்தாச்சா? வெரிகுட்..நான் பயந்துக்கிட்டே இருந்தேன்..ஆப்பிரிக்க நாட்டுக்குப் போயிருக்கே..எப்படி இருக்கறயோன்னு!

ஹா..ஹா..அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லைக்கா..நல்லபடியாப் போய்ட்டு வந்துட்டோம்.
ஓகே..இன்னிக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க..நாளைக்கு மதியம் லன்சுக்கு எங்க வீட்டுக்கு 
வந்திடுங்க

வீட்டுக்கா? எதுக்குக்கா?”

சரவணனை சஸ்பெண்ட் பண்ணதுல இருந்து மனசே சரியில்லை. அப்பாவும் ரொம்ப வருத்தப்பட்டார். அதான்..நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தீங்கன்னா, எங்களுக்கு ஆறுதலா இருக்கும்.

கவிதாவால் அதன்பிறகு மறுக்க முடியவில்லை. சரியென்று சம்மதித்தாள்.

சரவணன் பெட்டியில் இருந்து ஒவ்வொரு பொருளாக, எடுத்து பெட் ரூம் பீரோவில் வைத்துக்கொண்டிருந்தான். கவிதா சரவணனுக்கு சூடாக காஃபி கொண்டுவந்தாள். ஒரு வாரமாக காஃபி குடிக்காதது சரவணனுக்கு அப்போது தான் உறைத்தது. சந்தோசமாக வாங்கிக்கொண்டான்.

சரவணனிடம் திரும்பிய கவிதா அப்போ நான் ஆரம்பத்துல சொன்னது சரி..MARS-ங்கிறது முருகன் தான்என்றாள்.

சரவணனும் இப்போது தெளிவாக இருந்தான். உண்மை தான்..நான் தான் நீ சொன்னதைக் கேட்கலை

பாண்டியன் ஏன் வலுக்கட்டாயமா என்னை இதில இறக்கி விட்டாருன்னு எனக்கு இப்போப் புரியுது.என்றாள் கவிதா.

ஆமாம்..முருகன், ஆன்மீகம்னு சுத்தல்ல விட்டா எனக்கு ஒன்னும் புரியாதுன்னு அவனுக்குத் தெரியும். அதனாலயோ, என்னமோ திரும்பத் திரும்பச் சொன்னான்..உன்னால கண்டுபிடிக்கவே முடியாதுன்னு!

கவிதா சிரித்தாள்.

ஆமா..அதனால தான்னு நினைக்கிறேன்..கடைசியா அவர் சவால் விட்டதுகூட என் ஃபோன்ல தான்..அவரோட ஒரே நோக்கம், நான் இந்தக் கேஸில் தீவிரமா இறங்கணும்ங்கிறது தான்..ஆனால் ஏன்? ஒரு கொலையும் செஞ்சுட்டு, என்னைப் பிடின்னு க்ளூவும் கொடுத்துட்டு, கரெக்டா என்னையும் தூண்டிவிட்டு...ஏன் இப்படி? ஏன் அவர் வலிய மாட்டிக்கணும்னு நினைக்கிறார்?”

அவன் என்னை டெஸ்ட் செய்றது சரி..ஏன் உன்னையும் சேர்த்து டெஸ்ட் பண்றான்?” என்று திரும்பக் கேட்டான் சரவணன்.

உஸ்ஸ்..அதானே தெரியலை..இப்போ நமக்கு மார்ஸ் தான் க்ளியர் ஆகியிருக்கு..1024....அது என்ன?” என்றாள் கவிதா.

ம்க்கும்..அதுக்கு இன்னும் எத்தனை நாடு சுத்தணுமோ? உனக்கு ஒரு மாமா தானா? வேற மாமா யாராவது உகாண்டா/சோமாலியால இருக்காங்களா?” என்றான் சரவணன் கிண்டலுடன்.

கவிதா சிரித்தபடியே மார்ஸையே பிடிச்சாச்சு..நாலு நம்பரைப் பிடிக்க மாட்டோமா? பிடிப்போம்!என்றாள்.

கரெக்ட்..நீ ரொம்ப டயர்டாத் தெரியறே..நீ வேணாத் தூங்குஎன்றான் சரவணன்.

நானும் அதைத் தான் நினைச்சேன்...ஓகே, இங்கேயே படுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கட்டிலில் படுத்தாள் கவிதா.

யுத்தம்..கடுமையான யுத்தம் அவர்கள் இருவரிடையே நடந்தது கொண்டிருந்தது. கவிதா நினைத்தது போல் சூரன் ஒன்றும் சாதாரண வீரனல்ல. முருகனுக்கு இணையாக அவன் போரிட்டுக்கொண்டிருந்தான்.

கவிதாவிற்கு முருகனைப் பார்க்கும்போது, பயமாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது. பொதுவாகவே முருகனை அவள் கனிவானவன், இனிமையான சுபாவமுள்ளவன் என்றே எண்ணி வந்தாள். ஆனால் இப்போது போரிட்டுக்கொண்டிருக்கும் முருகன் ஆக்ரோசத்துடன் அசுரனைப் போன்றே தோற்றமளித்தான்.

இப்படித் தனியாக வந்து கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறோமேஎன்று கவிதாவிற்குக் கவலையாக இருந்தது. முருக பக்தை என்பதால் நம்மிடம் கோபத்தைக் காட்ட மாட்டான் என்றும் தோன்றியது.

சுழற்றி அடித்த காற்று, மணலை வாரி இறைத்தது. காற்று கடலில் இருந்தா அல்லது இவர்களில் ஆவேச சண்டையில் இருந்தா என்று கவிதாவிற்குப் புரியவில்லை. கடலைத் திரும்பிப் பார்ப்போம் என்று நினைத்தாள். ஆனால் திரும்ப முடியவில்லை. திரும்பாமலேயே பின்னால் இருப்பது தண்ணீர்க்  கடல் அல்ல, அது பெரும் மணலால் ஆன கடல் என்று புரிந்தது. பின்னால் மணல் ஆளுயரத்திற்கு அலைபோல் எழும்பி, கரையில் மோதித் திரும்பிக்கொண்டிருந்தது.

கவிதா மீண்டும் யுத்தத்தை வேடிக்கை பார்த்தாள். மல்யுத்தம் போன்று இருவரும் ஒருவரை ஒருவர் தூக்கி எறிந்து கொண்டிருந்தனர். ஒருவேளை முருகன் தோற்றுவிட்டால் என்னாவது?’ என்று யோசித்தாள். அப்படியெல்லாம் ஆகாது, சூரசம்ஹாரம் என்றால் முருகன் தானே வெல்வான்என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.

திடீரென முருகன் கையில் வேல் தோன்றியது. அதுவரை ஆக்ரோசமாகப் போரிட்ட சூரன் பயந்தான். முருகன் வேகத்துடன் வேலை எறிந்தான். வேல் சூரனை இரண்டாகப் பிளந்தது.

சூரன் கீழே விழும்போதே, முருகன் கவிதாவை நோக்கி வேகமாக ஓடிவந்தான். கவிதா பயத்துடன் எழுந்து நின்றாள்.வந்த வேகத்தில் முருகன் கத்தினான் :

நடந்த அனைத்திற்கும் நீயே சாட்சி! இனி நடக்கப் போவதற்கும் நீயே பொறுப்பு!

கவிதா திடுக்கிட்டு கண்விழித்தாள்.

சரவணன் என்ன?” என்று கேட்க, ”ஒன்றுமில்லைஎன்று பதில் சொல்லிவிட்டு நான் தூங்கி, ரொம்ப நேரம் ஆச்சா? என்று கேட்டாள்.

இல்லை, ஒன் அவர் தான் ஆகுது என்றான் சரவணன்.

கவிதா கனவைப் பற்றி யோசித்தபடியே, எழுந்து கிச்சனை நோக்கி நடந்தாள்.

 (தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_27"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, August 24, 2012

முருக வேட்டை_26

அருவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரெண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் உதித்தனன் உலகம் உய்ய!

மார்ஸா?” என்று ஒரே நேரத்தில் கவிதாவும் சரவணனும் கேட்டனர்.

ஆமா..MARS தான்என்றார் கூகி.

மார்ஸ் என்பது ரோமானியப் போர்க்கடவுள். அதனோட பேரைத் தான் செவ்வாய் கிரகத்திற்கு வச்சாங்கன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். உண்மையில் எட்ரூஸ்கன் இனத்து மக்களின் போர்க்கடவுளின் பெயர் மாரிஸ். அங்கேயிருந்து தான் ரோமானியர்களிடம் மார்ஸ் வழிபாடு வந்து சேர்ந்தது. எட்ரூஸ்கன் மக்கள் மாரிஸை மாரிஸ் ஹஸ்ரன்னா’-ங்கிற பேர்லயும் வழிபடுறாங்க.அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை மாரிஸ்!என்று சொல்லிவிட்டுக் கவிதாவைக் கூர்ந்து பார்த்தார் கூகி.

கவிதா நாங்க பால முருகன்னு சொல்றோமே? அது மாதிரியா?” என்றாள்.

கரெக்ட்..நீ இதைச் சொல்வேன்னு எதிர்பார்த்தேன். அதே மாதிரி தான்...ரோமானியர்கள் மட்டும் இல்லை, பண்டைய கிரேக்கர்களும் அரேஸ்-ங்கிற போர்க்கடவுளை வணங்கினாங்க. அந்தக் கடவுள் தான் செவ்வாய் கிரகத்தை கண்ட்ரோல் பண்ணுதுன்னும் நம்பினாங்க

ஏன் அப்படி?”

தெரியலை..முன்னோர்களுக்கும் நமக்கும் இடையில் முழுமையான தகவல் பரிமாற்றம் நடக்கலை..ஏன் எல்லாப் போர்க்கடவுளையும் செவ்வாயோட லின்க் பண்ணாங்கன்னு தெரியலை. ஆனால் செவ்வாய் கிரகம் உக்கிரமானது, அழிவைத் தரக்கூடியது எனும் நம்பிக்கையும் உலகம் முழுக்க இருந்திருக்கு, இருக்கு.

ஆமா..இந்திய ஜோதிடத்துல அதுக்கு முக்கிய இடம் இருக்கு

ம்...ரோமானியர்கள், கிரேக்கர்கள் மட்டுமில்லை, நார்வேலயும் டைர் எனும் போர்க்கடவுளை வழிபட்டிருக்காங்க. அவர் ஓடின் எனும் கடவுளுக்கும் ஓடினின் மனைவியான ஃப்ரிக் எனும் கடவுளுக்கும் பிறந்தவர் என்பது அவங்க நம்பிக்கை.

எங்க சிவன் - பார்வதி மாதிரியா?”

ஏறக்குறைய..அந்த டைர் கடவுளோட பேர்ல இருந்து தான் ட்யூஸ்டே’ -ங்கிற செவ்வாய்க்கிழமை வந்துச்சு..உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்..வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு கோள்களுக்கானவை. அதன்படி ட்யூஸ்டே என்பது செவ்வாய் கிரகத்துக்குரியது.

ஆமா..எங்க மொழில ட்யூஸ்டே-வை செவ்வாய்க்கிழமை..அதாவது டே ஆஃப் மார்ஸ்-ன்னு தான் சொல்றோம். வட இந்தியாலயும் மங்கள் வார்’-னு அதே அர்த்ததுல தான் சொல்றாங்க..ஆங், இப்போத் தான் ஞாபகம் வருது, முருகனுக்கு மங்களேஸ்வரர்-னு ஒரு பேரும் உண்டு..தமிழ்ல அவரை செவ்வாய்க்கு அதிபதின்னு சொல்வோம்..முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தான்

ஓ..சைனீஸ் பழங்குடி மக்கள்கிட்டக்கூட வே த்வோ எனும் போர்க்கடவுள் இருக்காரு..அவரும் அப்படித் தான்..அவரை ஸ்கந்தன்னும் சொல்றாங்க
எப்படி சார் இவ்வளவு ஒற்றுமை, இந்தக் கடவுள்கள் மத்தியில.?” ஆச்சரியத்துடன் கேட்டான் சரவணன்.

கூகி சிரித்தார்.

அது முன்னோர்கள் ஞானம் மூலமா அறிஞ்ச விஷயம்..இந்தியால இருக்கிற ஒரு ஞானியால எதை உணர முடியுமோ, அதையே கென்யால இருக்கிற ஞானியாலயும் உணர முடியும், இல்லியா? உங்க இந்து மதமே அதைத் தானே சொல்லுது..ஒவ்வொருத்தரும் ஞானி ஆக முடியும்..இல்லியா? அப்போ கிரெக்கத்துக்காரன், நார்வேக்காரன்னு எல்லாருமே ஆக முடியும்..ஆகியிருக்காங்க..அதனால தான் இது மாதிரி பல ஒற்றுமைகள், பல மதங்களுக்கு இடையில இருக்கு. ஆனால் இன்னிக்கு வரைக்கும் ஏன் போர்க்கடவுள்களை செவ்வாயோட தொடர்புபடுத்தினாங்கன்னு தெளிவாப் புரியலை..மார்ஸ்க்கு லத்தின்ல மார்மார்-னு பேரு..மார் என்பது இந்திய-ஐரோப்பிய மொழிகள்ல மரணம்னு தான் பொருள்தரும்..போர்-மரணம் இரண்டையும் தொடர்புபடுத்தி, அவங்க இதைச் சொல்லியிருக்கலாம்.
முருகனுக்கு இன்னொரு பேரும் இருக்கு..சேந்தன்னு..சேந்தன்னா சிவந்த நிறமுடையவன்னு பொருள்படும்.செவ்வாய்க்கு ரெட் ப்ளானட்னு ஒரு பேர்  இருக்கு. அப்போ செவ்வாய்க்கு அதிபதி என்பதால் தான் சேந்தன்னு சொன்னாங்களோ?” என்று கேட்டாள் கவிதா.

இருக்கலாம்..என்றார் கூகி.

சார்..அப்போ மார்ஸ்என்பதை முருகன்னு பொருள் கொள்ளலாமா?” என்று கேட்டான் சரவணன் ஆர்வத்துடன்.

ஆமா..மார்ஸ் தான் முருகன்..முருகன் தான் அரேஸ்..அரேஸ் தான் முரிக்..முரிக் தான் மார்ஸ்..அப்படித் தானே உங்க இந்துத் தத்துவமே சொல்லுது? ‘நீ எந்தப் பெயரில் வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்னு பகவத்கீதை சொல்லலை? பேரு மாறும்..பிரம்மம் ஒன்னு தானே?” என்று கேட்டார் கூகி.

:சார்..பகவத் கீதையும் தெரியுமா, உங்களுக்கு?” என்று ஆச்சரியமானாள் கவிதா.

பின்னே, படிக்கலேன்னா உங்க மாமா விட்ருவாரா?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் கூகி.

கூகியின் மனைவி நேரமாகிவிட்டதை ஞாபகப்படுத்த, அனைவரும் எழுந்தனர்.
கவிதாவிற்கு உடனே இந்தியா செல்ல வேண்டும் போல் இருந்தது.

அடுத்த நாள் காலையில் கூகி மட்டும் சென்று நிலைமையைக் கண்காணித்துவிட்டு வந்தார். ஓரளவு அமைதி திரும்பியிருந்தால், சிவநேசன் வீட்டிற்குத் திரும்பினர்.

சரவணனும் கவிதாவும் MARS பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால், அடுத்த இரண்டு நாட்களையும் கஷ்டப்பட்டு ஓட்டிவிட்டு, இந்தியா கிளம்பினர்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_26"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, August 23, 2012

முருக வேட்டை_25

உலகில் உள்ள தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்!

உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் பேசும்! – ( கண்ண தாசன் )

மா..எங்க சாமியோட பேரு முருங்கு’. நீங்க முருகன்னு பாடவும் அவ முருங்குன்னு நினைச்சுட்டா

என்ன....உங்க சாமிப் பேரும் முருங்கா?”

"ஆம்..எங்கள் மலைக்கடவுளின் பெயர் முருங்கு தான்!

கூகி சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தில் உறைந்தாள் கவிதா.

"மலைக்கடவுளா? எங்க முருகரும் மலைக்கடவுள் தான்

கூகி சிரித்தார். ஹா..ஹா..இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இங்கே இருக்கிற குஷைட் இனக்குழுகிட்டயும் ஒரு மலைக்கடவுள் இருக்கார். அவர் பேரு முரிக்’.”

என்ன சார் சொல்றீங்க?” அதுவரை அமைதியாக சரவணன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

ஆமா..இங்கே...ஆப்பிரிக்க நாடுகள்ல ஏறக்குறைய 21 பழங்குடி இனங்கள் முரிக்’-ங்கிற பேர்ல கடவுளை வணங்குறாங்க. சிலர் மலைக்கடவுள்னு சொல்வோம். சிலர் போர்க்கடவுள்னு சொல்வாங்க

போர்க் கடவுளா? எங்க சாமியும்..என்று கவிதா இழுக்கும்போதே கூகி தெரியும்..தெரியும்என்று சிரித்தார்.

ஆனால் இங்கே ஒரே ஒரு பிரச்சினை உண்டு. எங்க கடவுள்தான் சரின்னு ஆபிரகாமிய மதங்கள் மாதிரியே நாங்களும் நம்புறோம். அதனால ஒரு குழுவோட முரிக்’-க்கை இன்னொரு குழு கும்பிட மாட்டாங்க. இந்தியால வேற வேற பேருல இருக்கிற சாமிகளைக்கூட ஒன்னா இணைக்க முடிஞ்சது. ஆனால், இங்கே ஒரே பேர்ல இருக்கிற சாமிகளைக்கூட இணைக்க முடியலை. ஏன்னா, உங்ககிட்ட..உங்க முன்னோர்கிட்ட இருந்த தொலைநோக்குப் பார்வை எங்ககிட்ட இல்லை. உங்க முன்னோர்கள் உங்களுக்குக் கொடுத்த பொக்கிஷம்  
பிரம்மம்தான்

பிரம்மமா?”

ஆமாம்..இதுபத்தி சிவநேசன்கிட்ட நான் நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்..வேற வேற இன மக்களை, வேற வேற கடவுளைக் கும்பிடற மக்களை, பிரம்மம்-ங்கிற தத்துவம் தானே இணைச்சது? அப்போ ஆறு பெரிய மதங்கள் இருந்தது இல்லியா? சைவம், வைணவம்..அப்புறம் இன்னும்.....

கூகி யோசிப்பதைப் பார்த்து கவிதா உள்ளே புகுந்தாள். கணாபாத்யம், சாக்தம், சௌரம் & கௌமாரம்

ஆங்..கரெக்ட்..கரெக்ட்..நீங்களே யோசிச்சுப்பாருங்க..இப்போ எங்க நாட்டு மக்கள் பண்ற மாதிரியே உங்க ஆறு பிரிவு மக்களும் எங்க சாமி தான் சரின்னு கிளம்பியிருந்தா, இந்தியா மாதிரி பல இன மக்கள் வாழும் நாடு என்ன ஆகியிருக்கும்? மிகப்பெரிய மனித அழிவில்லையா நடந்திருக்கும். உங்க துறவி ஒருத்தர் தானே எல்லாத்தையும் இணைச்சது?”

ஆமா..ஆதிசங்கரர்

ம்..அவர் மகான்...எப்பேர்ப்பட்ட தீர்க்க தரிசனம்..அவர் இணைச்சதுக்கு ஆன்மீகக் காரணம் மட்டுமில்லே, சமூகக்காரணமும் இருந்திருக்கணும்..அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்..இந்த பூமியை பிரம்மம்மட்டுமே காக்கும்னு..அதனால தானே உங்களால காசியையும் ராமேஸ்வரத்தையும் ஒன்னா கும்பிட முடியுது..மிகப்பெரிய விஷயம்..மிகப் பெரிய விஷயம்..இல்லேன்னா..இப்படித் தான்..எங்களை மாதிரி ஓரமா ஒளிஞ்சு வாழ்ந்துக்கிட்டு இருந்திருப்பீங்க..உலக அரங்கில் உங்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் வந்திருக்குமா? இந்தியாவே ரத்தக்களறியாகி, துண்டு துண்டாச் சிதறி இருக்கும்

இப்பவும் பலவிதத்துல அதுக்கான முயற்சி நடந்துக்கிட்டே இருக்கு..ஆனாலும் எங்கும் நிறைந்த பரப்பிரம்மம் எங்களைக் காக்கும்னு நம்புறேன்

ம்..காக்கணும்..காக்கணும்..அது காக்கலேன்னா, வேற யாரு நம்மைக் காப்பா?” உணர்ச்சிவசப்பட்டவராக பேசிய கூகி சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

நீங்களே பாருங்க..கொஞ்ச நேரம் முன்ன, போய் சாமி கும்பிடுங்கன்னு சொன்னேன்..நீங்க சரின்னு போய்க் கும்பிட்டீங்க. உண்மையைச் சொல்லணும்னா நாங்ககூட அப்படிப் பண்ண மாட்டோம். உங்களால எப்படி முடியுது? ஏன்னா உங்களுக்குத் தெரியும்..அல்லது தெரியாமலும் இருக்கலாம்..வம்ச வம்சமாச் சொல்லி ஊறிப்போன விஷயம் இல்லியா..தெரியாமலும் இருக்கும்..உங்களுக்கு..உங்களுக்குத் தெரியும்..நீங்க கும்பிடறது இந்த சிலையை இல்லை..இந்தக் கல்லை இல்லை..அதுக்குள்ள உறைஞ்சிருக்கும் இறையைன்னு..அப்படி ஒரு தத்துவம் இந்த மண்ணில் வரலை..எங்க துரதிர்ஷ்டம்..எங்க சாமியை குஷைட் ஒத்துக்க மாட்டான்..குஷைட் சாமியை கம்பா ஒத்துக்க மாட்டான்..கம்பா சாமியை நாங்க ஒத்துக்க மாட்டோம்..அப்புறம் எப்படி நாங்க விளங்குவோம்?”

கூகி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூகியின் மனைவி அனைவருக்கும் உணவு கொண்டுவந்தார். எவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருப்பீங்க..சாப்பிடுங்கஎன்பது போல் ஏதோ சொன்னார். ஹாலில் இருந்த டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

கவிதா இன்னும் ஆச்சரியம் அகலாதவளாக மீண்டும் அது எப்படி சாமி பேரெல்லாம் ஒரே மாதிரி இருக்கு? நம்பவே முடியலைஎன்றாள்.

கூகி புன்சிரிப்புடன் சாமிப் பேரு மட்டுமில்லை, சாமியோட குணநலன்களும் பெரும்பாலும் ஒன்னாத் தான் இருக்கு..ஒன்னு அது மலைக்கடவுளா இருக்கும் அல்ல்து போர்க்கடவுளா இருக்கும். போர்க் கடவுள்-ங்கிறது எங்கெல்லாம் இருக்குன்னு உலக அளவுல பார்த்தா, ரொம்ப ஆச்சரியப்படுவீங்க..அதுக்கான ஆரம்பம் மார்ஸாத் தான் இருக்கும்.

மார்ஸா?” என்று ஒரே நேரத்தில் கவிதாவும் சரவணனும் கேட்டனர்.

ஆமா..MARS தான்என்றார் கூகி.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_25"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.