Sunday, August 19, 2012

முருக வேட்டை_24


மேலே விழுந்த தூசியைத் தட்டுவதைப் போல், கூகி தன் மேல் சிதறிக்கிடந்த கண்ணாடித்துண்டுகளை உதறித் தள்ளினார். கூகி மிகவும் இயல்பாக இருப்பதைப் பார்த்தபோது, குண்டுவெடிப்பு என்பது அன்றாட நிகழ்வு என்று கவிதாவுக்குப் புரிந்தது.

கூகி ஜீப்பை வந்தவழியே திருப்பினார்.

 “இப்போ என்ன செய்றது?” என்றான் சரவணன் கவலையுடன்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை..எங்க வீட்டுக்குப் போயிடலாம். நீங்க எதிர்பார்க்கிற வசதிகள் இருக்காது. ஆனாலும் விடியறவரைக்கும் வேற வழியில்லை. நைட் முழுக்க மாத்தி மாத்தி அடிச்சுப்பாங்க. காலையில எல்லாம் சரியாயிடும்.”

“மாத்தி மாத்தி-ன்னா? யாரு யாரை அடிப்பாங்க?”

“இங்கே..இங்கே மட்டுமில்ல பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள்ல கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சரி-சமமா, பெரும்பான்மையா இருக்கிறாங்க. அதனால இந்த நாட்டை கிறிஸ்துவ நாடா ஆக்க வாடிகன் ட்ரை பண்ணுது. இஸ்லாமிய நாடா ஆக்க இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ட்ரை பண்றாங்க. ரெண்டுமே பெரிய கைங்க. அதனால இது தீராத பிரச்சினையா ஆகிட்டு வருது. ஏற்கனவே சோமாலியாவை இப்படி மாத்தி அடிச்சுக்கிட்டுத் தான் ஒழிச்சுக்கட்டினாங்க. இப்போ கென்யா..”

“இதை ஒன்னுமே செய்ய முடியாதா?”

“தேச நலனைவிட, மத நலனே முக்கியம்னு ஒரு நாட்டுக் குடிமக்கள் முடிவு பண்ணிட்டாங்கன்னா........ஒன்னுமே செய்ய முடியாது, அடிச்சுக்கிட்டு அழிய வேண்டியது தான்..எங்களோட மக்கள் தொகையாவது பரவயில்லை. குஷைட் மாதிரி சில இனக்குழுக்களோட மொத்த மக்கள்தொகையே நாலாயிரத்துக்குள்ள தான் இருக்கும். அதனால கலவரம்னா, இருக்கிற ஜனக்களைக் காப்பத்தறதே எங்களுக்குப் பெரும்பாடு ஆகிடுது. எங்கேயாவது ஓரமா ஒளிஞ்சிக்குவோம்...இந்த நாட்டோட பழங்குடி மக்களான எங்களோட, எங்கள் இனத்தின், மதத்தின் நிலைமை இது தான்”

பேசிக்கொண்டே கூகி, ஜீப்பை மெயின் ரோட்டில் இருந்து ஒரு காட்டுப்பாதை வழியே திருப்பினார். கொஞ்சதூரம் சென்றதும், மலையடிவாரத்தில் ஒரு குக்கிராமம் தெரிந்தது. கூகி, ஜீப்பை அங்கே சென்று நிறுத்தினார்.

அவரைப் பார்த்ததும், ஒரு பெண் கைக்குழந்தையுடன் ஓடிவந்து ஏதோ கேட்டாள். கூகி பதில் சொல்வதைப் பார்த்தபோது, யாரையோ அவள் தேடுவது போன்றும், ’கவலைப்படாதே, வந்துவிடுவார்கள்’ என்று கூகி ஆறுதல் சொல்வது போன்றும் தெரிந்தது. பிறகு கூகி செல்ஃபோனை எடுத்து சிவநேசனுக்குக் கால் செய்து, விஷயத்தைச் சொல்லிவிட்டு, ஃபோனை கவிதாவிடம் கொடுத்தார்.

“ஒன்னும் கவலைப்படாதேம்மா..கூகி வீட்ல தங்கிக்கோ..காலையில இங்க வந்திரலாம்” என்றார் சிவநேசன் ஆறுதலுடன்.

”சரிங்க மாமா..” என்று கவிதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஒரு வயதான பெண்மணி கூகி அருகில் வந்து நின்று கவிதாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

நல்ல கருப்பு நிறமென்றாலும், சாந்தமான முகத்துடன் கனிவு பொங்கப் பார்த்தாள் அவள்.

கவிதா ஃபோனைக் கட் செய்ததும் “இது என் மனைவி ‘வே’. வே, இது கவிதா..இவரு சரவணன். சாரோட ரிலேட்டிவ்..சொன்னேன் இல்லியா? அவங்க” என்று அறிமுகப்படுத்தினார்.

பரஸ்பர வணக்கத்திற்குப் பின், கூகியின் வீட்டிற்குள் நுழைந்தனர். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து வீடு போன்றே கூகியின் வீடும் இருந்தது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து, அந்த ஏரியாவையே ரம்மியமானதாக ஆக்கியிருந்தது.

காலையில் இருந்தே சுற்றிக்கொண்டிருந்தது, கவிதாவை சோர்வாக்க்கியிருந்தது. உள்ளேயிருந்த மர நாற்காலியில் கவிதா அமர்ந்துகொண்டாள். சரவணனும் கூகியும் அங்கே இருந்த மரக்கட்டிலில் அமர்ந்தார்கள். கூகியின் மனைவி உள்ளே சென்று, கவிதாவிற்கு குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்தாள்.

கவிதா சந்தோசத்துடன் நீரை அருந்தினாள். கூகி தன் மனைவிடம் கிகூயூ மொழியில் ஏதோ சொன்னார். அவளும் சரி என்பது போல் தலையாட்டிவிட்டு, அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

கூகி கவிதாவிடம் “நீங்க கொஞ்சம் அதிர்ச்சியாகிட்ட மாதிரித் தெரியுது. உள்ளே பூஜை ரூம்ல விளக்கு ஏத்தச் சொல்லியிருக்கிறேன். போய் சாமி கும்பிட்டு வாங்க” என்று தன் மனைவி சென்ற அறையைக் காட்டினார் கூகி.

கவிதா அந்த அறையினுள் நுழைந்தாள். எண்ணெய் விளக்கிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சம், அந்த சிறிய அறையை அழகாக்கியிருந்த்து. அங்கே கறுப்பின இளைஞன் போன்ற ஒரு உருவம் கடவுளாக நின்றுகொண்டிருந்தது. கூகியின் மனைவி, அந்தச் சிறு சிலையின் ஓரமாக நின்று கும்பிட்டுக்கொண்டிருந்தாள்.

கவிதாவிற்கு முருகர் ஞாபகம் வந்தது. இங்கு வந்த மூன்று நாட்களில் அவரை மறந்தே போய்விட்டதும் ஞாபகம் வந்தது. நீண்டநாள் கழித்து, மகனைப் பார்க்கும் தாய் போல், கண்கள் கலங்கியபடி கவிதா பாட ஆரம்பித்தாள்:

மனமே முருகனின் மயில் வாகனம் -என்
மாந்தளிர் மேனியே குகனாலயம் - என் குரலே
செந்தூரின் கோவில் மணி -அது
குகனே..சண்முகனே என்றொலிக்கும் இனி!
மனமே முருகனின் மயில்வாகனம்!

கவிதா பாடி முடித்துவிட்டு, விளக்கினைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

கூகி மனைவி அவர்களது கிகூயூ மொழியில் ஏதோ கேட்டாள். கவிதா புரியாமல் விழிப்பதைப் பார்த்து, கணவனிடம் சென்று அதையே கேட்டாள். அவரும் சிரித்தபடியே ஏதோ சொன்னார்.அதில் ‘முருகா’ என்பது மட்டுமே கவிதாவிற்குப் புரிந்தது.

“என்ன?” என்றாள் கூகியைப் பார்த்து.

“ஹா..ஹா.அதுவா..நம்ம சாமிப் பேரு எப்படி இந்தப் பொண்ணுக்குத் தெரியும்னு கேட்கிறா?”

“உங்க சாமிப் பேரா?”

“ஆமா..எங்க சாமியோட பேரு ‘முருங்கு’. நீங்க முருகன்னு பாடவும் அவ ‘முருங்கு’ன்னு நினைச்சுட்டா”

“என்ன....உங்க சாமிப் பேரும் முருங்கா?”

"ஆம்..எங்கள் மலைக்கடவுளின் பெயர் முருங்கு தான்!”

கூகி சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தில் உறைந்தாள் கவிதா.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

 1. வணக்கம்,செங்கோவி!தொடர் நன்றாகவே போகிறது.இந்து மதம் எங்கெங்கெல்லாம் விரவி நிற்கிறது என்று சான்றுகளைத் தேடி..................வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. செங்கோவி ஸார்! கென்யாவில் கத்தோலிக்கர்கள் 23 % மட்டுமே. 50%க்கும் மேற்பட்ட மக்கள் protestants. இவர்கள் வாடிகனுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்லர். வாடிகன் கென்யாவின் மதப்போரை நடத்துகிறது என்பது நம்ப கடினமாக இருக்கிறது.
  மற்றபடி தொடர் நன்றாகவே போகிறது!.

  ReplyDelete
 3. அண்ணே இந்தப்பகுதி ரொம்பப் பிடிச்சிருக்கு..முருகன் இப்பதான் அறிமுகமாகிறான் இல்ல! :-)) இனித்தான் வேட்டையா?

  ReplyDelete
 4. “தேச நலனைவிட, மத நலனே முக்கியம்னு ஒரு நாட்டுக் குடிமக்கள் முடிவு பண்ணிட்டாங்கன்னா........ஒன்னுமே செய்ய முடியாது, அடிச்சுக்கிட்டு அழிய வேண்டியது தான்..எங்களோட மக்கள் தொகையாவது பரவயில்லை. குஷைட் மாதிரி சில இனக்குழுக்களோட மொத்த மக்கள்தொகையே நாலாயிரத்துக்குள்ள தான் இருக்கும். அதனால கலவரம்னா, இருக்கிற ஜனக்களைக் காப்பத்தறதே எங்களுக்குப் பெரும்பாடு ஆகிடுது. /.ம்ம் தொடருங்க வலி அதிகம்!ம்ம்

  ReplyDelete
 5. நல்ல கதை  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 6. செம்ம வேகத்துல தொடர் போகுது . தொடர்ந்து எழுதுங்க ? Long break vitturathenga!

  ReplyDelete
 7. //Gangaram said...

  செம்ம வேகத்துல தொடர் போகுது . தொடர்ந்து எழுதுங்க ? Long break vitturathenga!//

  நன்றி கங்காராம்..இனி ப்ரேக் வராது..!

  ReplyDelete
 8. சிறப்பாகசெல்கிறது!தொடர்கிறேன்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  அஞ்சு ரூபாய் சைக்கிள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

  ReplyDelete
 9. தொடர் அருமை , ரொம்ப எதிர்பார்க்க வச்சுடீங்க

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.