Friday, August 17, 2012

முருக வேட்டை_22

டிஸ்கி:

இந்தத் தொடரை எழுதுன எனக்கே, இதுவரை என்ன நடந்துச்சுன்னு சரியா ஞாபகம் இல்லை..அப்படிருக்கும்போது, உங்க நிலைமை அதைவிட மோசமா இருக்கும் இல்லியா? அதனால ஒரு முன்கதைச் சுருக்கம்:

முன்னாள் சிபிசிஐடி டி.ஜி.பி.கொலை செய்யப்படுகிறார். அதை விசாரிக்க சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில் சரவணனும் செந்தில் பாண்டியனும் நியமிக்கப்படுகின்றனர். கொலை நடந்த இடத்தில் எழுதப்பட்டிருந்த ‘MARS 1024' மட்டுமே அவர்களுக்குக் கிடைத்த ஒரே க்ளூ. இடையில் செந்தில் பாண்டியன் தான் தான் அந்தக் கொலையைச் செய்ததாக சரவணனிடம் சவால் விடுவதோடு, சரவணன் சஸ்பெண்ட் ஆகவும் காரணம் ஆகிறார். ஒரு மாத சஸ்பென்சன் பீரியடில் சரவணன் கவிதாவுடன் கென்யா கிளம்புகிறான். இனி................


அனைத்துப் படைப்புகளின் கடவுளே!

இம்மண்ணையும் தேசத்தையும் ஆசீர்வதியும்.

நியாயமே எங்களுக்கு கேடயமாகவும் காப்பானாகவும் ஆகட்டும்.

ஒற்றுமையே நம் வாழ்வாகட்டும்.

அமைதியும் அதீத சுதந்திரமும் எங்கள் எல்லைக்குள் கிடைக்கட்டும். 

- கென்ய தேசிய கீதம்.

விமானம் சிறிது நேரத்தில் தரையிறங்கப்போவதாக நன்றியுடன் ஏர்ஹோஸ்டஸ் அறிவித்தார். சரவணனும் கவிதாவும் சீட் பெல்ட்டை அணிந்துகொண்டு, கென்யாவைக் காணும் ஆவலுடன் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தனர். இயற்கை வளமிக்க, மிக அழகான இடமாகத் தெரிந்தது கென்யா. 

கென்யத் தலைநகர் நைரோபியை ஒரு வட்டம் அடித்துவிட்டு, விமானம் தரையிறங்கியது. ஏர்போர்ட்டில் லக்கேஜ் எடுக்கும் செக்சனில் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு கென்யக் கறுப்பின முதல்வர் ‘மே ஐ ஹெல்ப் யு?..ஐ அம் ஏர்போர்ட் செர்வண்ட்’ என்று அணுகினார்.

இந்த மாதிரி உதவி செய்ய முன்வருபவர்கள், முடிவில் 50 டாலர் 100 டாலர் என மிரட்டி காசு பிடுங்குவது அங்கு சகஜம் என்றும், அதனால் இத்தகைய எந்த உதவியையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கவிதாவின் மாமா சிவநேசன் எச்சரித்திருந்தார். எனவே கவிதா ‘நோ தேங்க்ஸ்’ என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள். அவர் அடுத்த ஆள் தேடி நகர்ந்தார்.

லக்கெஜ் எடுத்துவிட்டு, இமிக்ரெசன் முடித்து வெளியே வர இரண்டு மணி நேரம் ஆயிற்று. சிவநேசன் கவிதாவையும் சரவணனையும் முகம் மலர வரவேற்றார்.

சிறுவயதில் இருந்தே கவிதாவின் மேல் சிவநேசனுக்கு தனிப்பாசம் உண்டு. கவிதா, இறந்து போன அவளது அம்மாவின் சாயலில் இருப்பதும் ஒரு காரணம். அக்காவின் ஞாபகத்தில் அவர் கண்கள் கலங்கின. கவிதாவும் புரிந்துகொண்டு “போலாமா, மாமா?” என்றாள்.

சிவநேசன் சுதாரித்துக்கொண்டு “ஆங்..போலாம்..சாரி, இவரை இண்ட்ரடியூஸ் செய்ய மறந்துட்டேன்”என்றபடி அருகில் நின்றிருந்த ஒரு கறுப்பின முதியவரைக் காட்டினார். 

“இவர் மிஸ்டர் கூகி. என்னோட ட்ரைவர்” என்றார் சிவநேசன்.

நல்ல திடகாத்திரமான உடம்புடனும் கனிவான முகத்துடனும் கூகி “வணக்கம்” என்றார் தமிழில்.

சரவணனும் கவிதாவும் பதிலுக்கு ‘வணக்கம்’ சொல்லிவிட்டு, “தமிழ் தெரியுமா?” என்றனர்.

“இல்லை, ஒரு சில வார்த்தைகள் மட்டும்.என்கூடவே இருப்பதால் “என்ற சிவநேசன், தொடர்ந்து “டிரைவர்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க. நல்ல அறிவாளி. உலக அரசியல்ல இருந்து உள்ளூர் வரலாறு வரைக்கும் கரைச்சுக் குடிச்சவர். என்னோட ஃப்ரெண்ட்டுன்னும் சொல்லலாம்” என்றார்.

“நான் ஒரு புத்தகப் புழு..அவ்வளவு தான். சார் அதிகமாப் புகழ்றார்” என்றார் கூகி.

சரவணன் “இந்தப் பெயரைக் கேள்விப்பட்ட மாதிரி இருக்கே?” என்றான்.

கூகி சிரித்தபடியே “கூகி வா தியாங்கே..தி ஃபேமஸ் ரைட்டர் ஆஃப் கென்யா..அவர் பேரும் என் பேரும் ஒன்னு தான்” என்றார்.

சரவணனும் ஞாபகம் வந்தவனாய் சிரித்துக்கொண்டான்.

நால்வரும் காரில் சிவநேசன் இருக்கும் இடத்தை நோக்கி காரில் கிளம்பினர்.

“நீங்க இருக்கிறது என்ன ஏரியா மாமா?” என்று கேட்டாள் கவிதா.

“மும்பாசா..பீச் ஏரியா. அங்கே தான் நம்ம ரெஸ்டாரண்ட் இருக்கு.” என்றார் சிவநேசன்.

நைரோபியைக் கார் கடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாய் இருந்தது.
 “நம்ம மும்பை மாதிரி இருக்கு” என்றான் சரவணன்.

“ஆமா..உலகிலேயே பெரிய சேரி இங்க தான் இருக்குன்னு நினைக்கிறேன். ஆனால் மும்பாசால இந்தளவுக்கு நெரிசல் இருக்காது..நிறைய டூரிஸ்ட் வர்ற இடம்.” என்றார் சிவநேசன்.

அதனால் தானோ என்னவோ, மும்பாசா செல்லும் சாலை நன்றாக இருந்தது. செல்லும் வழியெல்லாம் காடுகளும் மலைகளும் அழகாகக் காட்சியளித்தன.

"இந்த நாட்டுல 50க்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள் இருக்கு. பலவிதமான மிருகங்களைப் பார்க்கலாம். சில ஏரியாவுக்கு ஜிப்ல போனா, சிங்கத்தைக்கூட பக்கத்துல பார்க்கலாம்..பக்கத்துலன்னா ஜூவுக்குள்ள இல்லை..நேராவே..ஆனால் கவிதா கன்சீவ் ஆகியிருக்கிறதால, இப்போ அங்கே போக வேண்டாம்” என்றார் சிவநேசன்.

“இந்த ஏரியாவுமே ஜூ மாதிரி தான் இருக்கு. ப்யூட்டிஃபுல் கண்ட்ரி “என்றான் சரவணன்.

“ப்யீட்டிஃபுல் & டேஞ்சரஸ் கண்ட்ரி” என்றார் கூகி.

“டேஞ்சரஸா?”

“ஆமாம்..இப்போல்லாம் முன்ன மாதிரி இல்லை. மக்களுக்கு நாம எல்லாம் ஒரே நாட்டின் குடிமக்கள்ங்கிற எண்ணம்கூட குறைஞ்சிடுச்சு. மதவெறி தான் தலைவிரிச்சாடுது “என்று கவலையுடன் சொன்னார் கூகி.

”கூகி..அதெல்லாம் சொல்லி இவங்களை ஏன் பயமுறுத்துறீங்க? ஒரு வாரம் ரிலாக்ஸ் பண்ண வந்தவங்களை எஞ்சாய் பண்ண விடுங்க..கவிதா, தனியா எங்கேயும் போகாதவரைக்கும் பிரச்சினை இல்லை. ஒரு வாரமும் கூகி உங்ககூடவே இருப்பாரு.” என்றார் சிவநேசன்.

ஆனாலும் கவிதாவைக் கவலை சூழ்ந்தது.

(தொடரும்) 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

  1. என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை எங்களுக்கும்!

    ReplyDelete
  2. என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை எங்களுக்கும்!

    ReplyDelete
  3. விறுவிறுப்பான தொடர்! தொடர்கிறேன்!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  4. அய்!கென்யா பாக்கப் போறோம்!!!!கவிதாவை மட்டுமில்லை,எங்களையும் கவலை சூழ்கிறது!மதக் கலவரம் நடக்குற நேரத்துல டூர் போயிருக்காங்க!

    ReplyDelete
  5. இப்போ ஒரு வேகம் வருது. அடுத்தபகுதிக்கு நிறைய வெய்ட்டிங்..!

    ReplyDelete
  6. அப்ப நைரோபியில் சந்திப்போம் சரவணனை !ம்ம் மதக்கலவரம் ம்ம்ம் தொடருங்கள் .

    ReplyDelete
  7. தொடரில் அதிகம் இடைவெளிவிட்டால் ஐயா வாசிக்கும் எமக்கும் கதையின் நிலை கொஞ்சம் குழம்பிவிடும் :))

    ReplyDelete
  8. என்ன பாஸ். இவ்ளோ லேட்டா இந்த தொடரை எழுதுறீங்க:(. தொடர்ந்து எழுதுங்க... ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு.

    ReplyDelete
  9. தொடரட்டும், நல்லவேள முன்கதைச் சுருக்கம் போட்டீங்க...
    வாழ்த்துகள் விகடன்ல வந்ததுக்கு...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.