Wednesday, January 16, 2013

திமுக ஸ்டாலின் கையில்....அதிமுக யார் கையில்?

நீண்டநாட்களாகவே திமுக தொண்டர்களும் அரசியல் நோக்கர்களும் எதிர்பார்த்த அறிவிப்பு ஒருவழியாக வந்துவிட்டது. திமுக தலைவர் ஒருவாறாகத் துணிந்து அறிவித்துவிட்டார் ‘ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்’ என்று.

இந்திய ஜனநாயகம் பல கட்சி ஜன்நாயகமாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் இருகட்சி ஆட்சிமுறையே செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளாக அதிமுகவும் திமுகவுமே செயல்பட்டு வந்திருக்கின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும்கட்சிக்கு இணையாக அல்லது ஆளும்கட்சியை விடவும் வலுவுள்ளதாக எதிர்க்கட்சி இருக்க வேண்டியது அவசியம். அதுவே ஆளும்கட்சிக்கு லகானாகச் செயல்படும். அந்த வகையில் அதிமுக வைத் தவிர்த்த கட்சிகள் என்று பார்த்தால், திமுக-மதிமுக-பாமக-தேமுதிக இருக்கின்றன.

இவற்றில் மதிமுகவும் பாமகவும் கூட்டணி அல்லக்கைகளாகவே தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுவிட்ட நிலையில், தேமுதிக இன்னும் ‘நானும் ரவுடி தான்’ என்று களத்தில் நிற்கிறது.

சென்ற தேர்தலில் வாக்களித்த தமிழக வாக்காளர்களே எதிர்பார்க்காத வகையில் ‘எதிர்க்கட்சித் தலைவர்’ எனும் பெரும் பொறுப்பு விஜயகாந்த்திற்குக் கிட்டியது. திமுக-அதிமுகவிற்கு மாற்றாக தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த், அந்தப் பொன்னான வாய்ப்பை சரியான முறையில் உபயோகப்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். என்ன தான் சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களைப் பொறுத்தவரை திமுக தான் உண்மையான எதிர்க்கட்சியாக இப்போதும் திகழ்கிறது.(திமுக இல்லாத, ஜெயலலிதா-விஜயகாந்த் மட்டுமே இருக்கும் அரசியல் சூழ்நிலையை கற்பனை செய்யவே பயமாக உள்ளது.)

ஆளும்கட்சியாக இருக்கும்போதைவிட, எதிர்க்கட்சியாக இருக்கும்போது சிறப்பாகச் செயல்படும் ஒரே கட்சி திமுக தான். ஆனால் அதன்’வலிமையான எதிர்க்கட்சி’எனும் பிம்பத்திற்கு ஊறு விளைவிப்பதாக இருந்தது ஸ்டாலின் அழகிரி இடையேயான வாரிசுச் சண்டை. தொண்டர்கள்-கட்சி நிர்வாகிகளில் பெரும்பான்மையானோர் ஸ்டாலினை ஆரம்பம் முதலே ஆதரித்தாலும், அழகிரியின் வளர்ச்சியும் கட்சியின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கவே செய்தது.

கட்சியில் ஸ்டாலின் - அழகிரி என இரு பிரிவுகள் உண்டாகியிருந்தாலும், தொண்டர்கள் அனைவருமே கலைஞருக்கு கட்டுப்பட்டவர்கள் தான். அந்த வகையில் கலைஞரின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. கலைஞரின் காலத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், எம்.ஜி.ஆருக்குப் பின் அதிமுக உடைந்தது போல் திமுகவும் உடைய நேரிடும். பின்னர் வந்த தேர்தலில் அதிமுக ஜெ-ஜா அணி தோல்வி அடைந்தது போலவே, திமுகவும் பெரும் தோல்வியை அடைந்திருக்கும். அதன்பின்பும் ஸ்டாலின் - அழகிரி இணைந்திருக்காவிட்டால், கட்சியே காணாமல் போகும் அபாயமும் உண்டு.இதை அழகிரி தரப்பு உணர்ந்து கொள்வது அவசியம். ஏனென்றால் திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்.

மாற்று என்பது தற்போதையதை விட மேம்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வலிமையான மாற்று இன்னும் உருவாகிவிடாத நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பை வரவேற்போம்.(இது வாரிசுத் திணிப்பு ஆகாது என்பதை நண்பர் கஸாலியின் இந்தப் பதிவு விளக்குகிறது.)

திமுக தனது அடுத்த தலைமுறைத் தலைவரை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து அதிமுகவும் தனது அடுத்த தலைமுறைத் தலைவரை இப்போதிலிருந்தே முன்னிறுத்துவது அவசியம். ஸ்டாலின் போன்றே அந்தத் தலைவரும் நீண்ட அரசியல் அனுபவம் பெற்றவராய் இருப்பதும் அவசியம். தமிழகத்தின் பெரும் கட்சியான அதிமுகவிற்கான அடுத்த தலைமையை தொண்டர்களுக்கு அடையாளம் காட்டும் பொறுப்பு ஜெயலலிதாவிற்கு உண்டு.

இன்னும் இருபது வருடங்களுக்கு ஜெயலலிதாவே நீடிப்பார் என்று வைத்துக்கொண்டாலும், ஸ்டாலின் போன்ற மற்றொரு அனுபவமிக்க தலைவர் அதிமுகவிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்க, இப்போதே ஒருவரை முன்னிறுத்த வேண்டும். முதுமை-தள்ளாமை-ஓய்வு எனும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, சீக்கிரமே ஜெயலலிதா அதற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

  1. வணக்கம்,செங்கோவி!அருமையான நடுநிலை ஆய்வு.///திமுக தனது அடுத்த தலைமுறைத் தலைவரை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து அதிமுகவும் தனது அடுத்த தலைமுறைத் தலைவரை இப்போதிலிருந்தே முன்னிறுத்துவது அவசியம்.////நடக்கிற காரியமா,இது??????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. அப்போ வருங்கால அ.தி.மு.க. தலைவர் நாஞ்சில் சம்பத் இல்லையா? அ.தி.மு.வில் இருக்கும் ஆண்மையுள்ள ஒரே தலைவன் நாஞ்சில் சம்பத்-தான். ஜெ.வின் கொட்டத்தை அடக்கி அ.தி.மு.க. வின் தலைமைப் பீடத்தை அலங்கரிக்கும் ஆற்றலும், தகுதியும், ஆண்மைத் திறனும் வாய்த்தவன்.

    ReplyDelete
  3. மாம்ஸ்... சைலண்ட்டா கொளுத்தி போட்டுடிங்க.....

    ReplyDelete
  4. அம்மா கட்சியில குழப்பமே இல்லைன்னு கவலைப்படுறீங்க போல?

    ReplyDelete
  5. திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்./////அர்த்தம் பொதிந்த வரிகள்...இந்த யதார்த்த வரிகளை அழகிரி புரிந்துகொண்டால் போதும் எந்தக்காலத்திலும் தி.மு.க.,விலேயே நீடிப்பார்.

    ReplyDelete
  6. திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்./////
    அர்த்தம் பொதிந்த வரிகள்.....இந்த யதார்த்த உண்மையை அழகிரி புரிந்து கொண்டால் போதும்.... தி.மு.க.விலேயே காலம்காலமாக நீடித்திருப்பார்.

    ReplyDelete
  7. அருமையான அலசல்! திமுக தலைவராகும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டுதான்! அதிமுகவிற்கு தலைவராகவோ பொதுச் செயலராகவோ யாருக்கு தகுதி உண்டு என யோசிக்க்கையில் குழப்பமே வருகிறது! கட்சிக்கு உழைத்த பலர் காணாமல் போனவர்கள் பட்டியலில்! விடைதெரியா வினோதம்தான்!

    ReplyDelete
  8. Next CM Vijayakanth... So no option for Stalin

    ReplyDelete
  9. அது ஒன்னும் பிரச்சின இல்லண்ணே, ரெண்டு நாள்ல அதுவா சரியாயிடும்!!

    ReplyDelete
  10. சுப்ரீம் ஸ்டார் அண்ணாச்சி தான் அடுத்த அதிமுகவின் முக்கியமான ஒருவராக இருக்கலாம் என்பது என் கணிப்பு - ஆகாய மனிதன்

    ReplyDelete
  11. காலம் சரியான தலைமையைத் தேர்ந்துகொள்ளும். என்று பெரிய கட்சிகள் கண்மூடுகின்றனவோ அன்று மாற்று எளிதாகும். எம் ஜி ஆர் தனது வாரிசாக ஒருவரையும் நியமிக்கவில்லையே!. பெரியார் வாரிசாக நியமித்தும் சோபிக்கவில்லையே!... சென்றமுறை வாரிசாக தத்தெடுத்தது சரியாக நடக்கவில்லையே. எனவே காலமும் மக்களும் தங்களுக்கான தலைமையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவர், ஒரு நிறுவனம் போல சக்ஸசன் திட்டம் கொண்டு செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் இல்லை. எந்தக் கட்சியும் அந்த அளவு யோக்கியமான, மிகவும் அத்தியாவசியமான கட்சியுமில்லை.

    ReplyDelete
  12. அருமையான அலசல்...

    ஆமா இப்போ அம்மா யாரைச் சொன்னாலும் அங்க அடிதடி குத்து கொலைதான் நடக்கும்... வாரிசு இல்லாத சொத்துக்கு வர்றவன் போறவனெல்லாம் ஆசைப்படுவான்ல...

    ReplyDelete
  13. தி.மு.க.-அ .தி.முக ரெண்டுமே தமிழகத்துக்கு கொடுப்பட்ட சாபம் என்றுதான் நான் சொல்வேன். ஒன்னு திருடன் கையில் கொடுத்த சாவி, இன்னொன்னு கட்டு சோற்றில் வச்சு கட்டப் பட்ட பெருச்சாளி. இவங்க கட்சி என்ன பண்ணினால் உடையாது, மவனுங்க ஒத்துமையா இருக்கணும் அப்படி இப்படின்னு நீங்க எழுதுவதைப் படிக்கும் போதே உள்ளுக்குள்ள வேகுது. இவனுங்க எல்லாம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன. அம்மாவைப் பொருத்தவரை அவருக்கப்புறம் கட்சி டுமீல்தான். அவரும் சரி, MGR ம் சரி, திறமையானவர்களையே பொறுப்புகளில் நியமித்திருந்தனர் எனினும் அவர்களைத் தவிர அவர்கள் கட்சியில் இருந்து யாரையும் மக்களுக்குத் தெரியாது, தனியே நின்றால் டெபாசிட் கூட மிஞ்சாது. இதையடுத்து விஜயகாந்துன்னு பார்த்தா இன்னமும் பயமா இருக்கு. ஏன்னா இவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே கொள்ளையடிச்சி வச்சிட்டாங்க, அவரு புதுசா சொத்து சேர்க்கணும். நினைக்கும் போதே கண்ணை கட்டுது.

    \\ஏனென்றால் திமுக இல்லாமல் ஸ்டாலினால் வாழ முடியும். ஆனால் அழகிரிக்கு அரணாக இருப்பது திமுக தான்.\\ என்ன கண்டுபிடிப்பைய்யா இது? அழகிரி அப்பா சென்னைக்கு வந்தது போலவே மதுரைக்கு வெறும் மஞ்சள் பையோடு பொய் இறங்கி, வாடகை வீட்டில் தங்கி, ஆதரவாளர்களைச் சேர்த்து கட்சிக்கு எதிரா வேட்பாளர்களை நிறுத்தி திணற அடித்து கடைசியாக வேறு வழியே இல்லாமல் அவருக்கும் கட்சியில் இடத்தை தர வேண்டிய அளவுக்கு செய்தவர். ஸ்டாலின் எப்போவும் கட்சி நிழலிலேயே இருந்தவர். என்னைக்கு அவரு தனியா எதைவாது சாதிச்சாறு? வாயைத் திறந்து பேசுவதையே பார்ப்பது அபூர்வம். இவரை அடுத்த தலைமையாக்கியது வாரிசு அரசியல் இல்லை என்பது பெரிய பித்தலாட்டம். கட்சியில் இவரை விட வயதிலும் அனுபவத்திலும் வேறு யாருமே இல்லையா? இல்லை ஜனநாயக முறைப்படி இவர் தேர்ந்தெடுக்கப் பட்டாரா? கருணாநிதி சொன்னார் அவ்வளவுதான். இதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை மன்னராட்சி.

    செங்கோவி ஏன் இப்படி ஒரேயடியா சாஞ்சு போயிட்டீங்கன்னு மட்டும் விளங்கவில்லை.

    ReplyDelete
  14. சாய்வதற்கு ஒன்றுமில்லை..பதிவிலேயே சொன்னபடி வேறு மாற்று உருவாகும்வரை, இருப்பதை சிதைப்பது அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும்.அது தொங்கு சட்டமன்றத்திற்கும்வித்திடலாம். மேலும், .......மேலே இருக்கும் கேப்டனின் ஸ்டில்லைப் பார்த்தால், என் பயம் உங்களுக்குப்புரியும்!!

    ReplyDelete
  15. //Yoga.S. said...
    நடக்கிற காரியமா,இது?

    காட்டான் said...
    அம்மா கட்சியில குழப்பமே இல்லைன்னு கவலைப்படுறீங்க போல?

    மனு - தமிழ்ப் புதிர்கள் said...
    காலம் சரியான தலைமையைத் தேர்ந்துகொள்ளும். //

    ஒரு அரசியல் இயக்கம் என்பது மக்களுக்குச் சொந்தமானது. அந்த மக்களே அதன் தலைமையை நிர்ணயிக்க வேண்டும் என்பது தியரி அளவில் சரி தான். ஆனாலும், ஒரு மக்கள் இயக்கத் தலைவர், தன் தொண்டர்களை சரியான நபரின் கையில் ஒப்படைப்பது அவசியம் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.