Tuesday, December 30, 2014

ஹிட்ச்காக் : Foreign Correspondent (1940) - ஒரு பார்வை

ஹாலிவுட் தயாரிப்பாளர் Walter Wanger-க்கு ஒரு ஆசை. ஒரு பத்திரிக்கையாளர்(Vincent Sheean) எழுதி, பெரும் வரவேற்பைப் பெற்ற Personal History எனும் சுயசரிதை நூலை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்று. அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விஷேசம் என்றால், அந்த பத்திரிக்கையாளர் உலகப்போருக்குச் சற்று முன்னால், வேறொரு நாட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது நடந்த சம்பவங்களை விவரித்தது அந்த நூல்.

ஆனால் அதை திரைக்கதையாக்க பலரும் முயற்சித்து, சரி வராமல் கிடப்பில் போடப்பட்டது. அதில் தயாரிப்பாளர் வால்டர் வெக்ஸ் ஆகிக் கிடந்தபோது தான், ரிபெக்கா மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார் நம் ஹிட்ச்காக். ஏற்கனவே 39 ஸ்டெப்ஸ் போன்ற சாகசக்கதையை இயக்கியவர் என்பதால், ஹிட்ச்காக்கை வாடகைக்கு எடுத்தார் வால்டர்! (ஆம், எப்படியும் ஹிட்ச்காக் பெரிய ஆளாக வருவார் என்று ரிபெக்கா தயாரிப்பாளர் Selznick நம்பியதால், ஹிட்ச்காக்கை ஒரு கான்ட்ராக்ட் போட்டு லாக் செய்திருந்தார்.!)

 ஹிட்ச்காக்கைப் பற்றி இயக்குநர் Sidney Lumet ஒருமுறை கிண்டலாக 'அந்தாளு ஒரே கதையைத் தான்யா மாற்றி மாற்றி படமா எடுக்கிறார்' என்று சொன்னார். ஹிட்ச்காக் படங்கள் ஒரே ஸ்டைஇல் இருப்பதைப் பற்றிய நக்கல் அது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. Personal History புக்கைப் படித்ததும், ஹிட்ச்காக் அதில் இருந்து ஒன்லைனை மட்டும் தான் எடுத்தார் : ஒரு ரிப்போர்ட்டர் - ஒரு கொலை - தப்பி ஓடுதல்/நிரூபித்தல்.

அவரது ஃபேவரிட் ஒன்லைன். 'மாப்பிள்ளை அவர் தான்..ஆனால் சட்டை என்னுது' என்பது மாதிரி கதை யாருடையதாக இருந்தாலும், படம் முடிவில் ஹிட்ச்காக்குடையதாகவே வெளிவரும். இங்கேயும் அதே கதை தான். ஏற்கனவே இந்தக்கதையை வாங்கி நொந்துபோயிருந்த வால்டரும் ஹிட்ச்காக்குடன் மல்லுக்கட்ட தெம்பின்றி, வாயை மூடிக்கொண்டார்.

 உலகப்போர் உலகத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேரம். பத்திரிக்கைகள் செய்தியை முந்தித்தருவதில் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. அப்போது ஒரு பத்திரிக்கை சார்பில் Foreign Correspondent-ஆக ஒரு நிருபர்(ஹீரோ) அனுப்பி வைக்கப்படுகிரார். அங்கே ஒரு பெரும்தலையை பேட்டி காண முற்படும்போது, அந்தப் பெரும்தலை கொல்லப்படுகிறார். ஹீரோ கொலைகாரனை விரட்டிச் செல்ல, அது ஒரு நீண்ட மற்றும் சாகசம் நிறைந்த பயணமாக ஆகிறது. முடிவில் சுபமே! (பயணத்தில் ஹீரோயினும் இணைந்தார் என்று சொல்லவும் வேண்டுமா?).

கேரக்டர்கள் மற்றும் இடம் தான் மாறியதேயொழிய, 39 ஸ்டெப்ஸ் மற்றும் young & Innocent ஸ்டைலில் உருவானது Foreign Correspondent. ஹாலிவுட்டில் அது முதல்முறை என்பதால், ஹிட்ச்காக் துணிந்து திரைக்கதையை அதே பாணியில் அமைத்தார். இன்றளவும் ஹாலிவுட்டில் வெற்றிகரமான திரைக்கதை டெம்ப்ளேட் அது. உதாரணம், Fugitive.

ஹிட்ச்காக்கின் இந்த மாதிரியான படங்களுக்கென்றே சில மசாலா ஐட்டங்களையும், ஒரு செய்முறையையும் கைவசம் வைத்திருக்கிறார்.

உற்சாகமான ஹீரோ.

அவனுக்கு உதவ அல்லது உதவுவது போல் நடிக்க, (படம் முழுக்க) கூடவே வரும் ஹீரோயின். (ரசிகன்ஸ் ஹேப்பி)

ஹீரோவின் பயணத்தில் சாகசங்கள், அதுவும் பிரபலமான இடங்களில். (இந்தப் படத்தில் Wind Mill, Tower, Flight)

வில்லன் யார் என்று ஆடியன்ஸுக்கு மட்டும் முதலிலேயே சொல்லிவிடுவது. அது தெரியாமல் ஹீரோ அப்பாவியாக எங்காவது போய் சிக்கிக்கொள்வது(சஸ்பென்ஸ் உத்தி..நோ சர்ப்ரைஸ்)

முடிவில் வில்லனுக்கு சாவு...ஹீரோவுக்கு டாவு.

சுவாரஸ்யமான சீன்களால் இந்த திரைக்கதை டெம்ப்ளேட்டை அலுக்காத ஒன்றாக ஆக்கிவிடுவது ஹிட்ச்காக் வழக்கம். இதிலும் அப்படியே.

படத்தில் குறை என்றால், இதை ஏறக்குறைய டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக எடுத்தது. ரிபெக்காவின் கள்ளக்காதலனாக வந்த George Sanders இதில் இரண்டாவது ஹீரோவாக வந்து துப்பறிகிறார். அவர் வரும் காட்சிகளில் நம் மனம் ஹீரோ-ஹீரோயினைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கேரக்டர் ஒட்டவேயில்லை.
இந்தப் படத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இந்தப் படம் வெளியான நேரத்தில் அமெரிக்க மக்கள் உலகப்போரில் பங்கு கொள்ளும் ஐடியாவே இல்லாமல் இருந்தனர். பிரிட்டனுக்கு ஆதரவாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கும் சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. அதற்கு மக்களை மறைமுகமாக தயார்படுத்தும்வேலையை இந்தப் படம் செய்தது. ஒரு பிரிட்டிஷ் குடிமகனாக ஹிட்ச்காக், அந்த வேலையைச் செவ்வனே செய்தார். உலகப்போர் சமயம்.பிரிட்டனுக்கு உதவும் அமெரிக்க ஹீரோ எனும் கான்செப்ட்டை அப்போதைய அமெரிக்க அரசே ரசித்தது. படத்தின் வெற்றி, மக்களும் ரசிப்பதைக் காட்டியது.

கிளைமாக்ஸில் வந்த ஃப்ளைட் சீனை எப்படி எடுத்தார் என்று அப்போது அனைவரும் வியந்தார்கள். கடலில் விழும் ஃப்ளைட்டை, ஒரே ஷாட்டில் கட் செய்யாமல் காக்பிட்டில் கேமிரா வைத்து படம் பிடித்த எஃபக்ட்டை உண்டாக்கினார். இன்றளவும் ரசிக்கப்படும் ஷாட் அது.

இந்தப் படம் ஹிட்ச்காக்கின் பெஸ்ட் அல்ல. அதிலும் ரிபெக்காவின் குவாலிட்டியுடன் கம்பேர் பண்ணும்போது, இது ஒரு சாதாரணப்படமே. பின்னாளில் North by Northwest எனும் அட்டகாசமான ஆக்சன் படம் கொடுக்க, ஹிட்ச்காக் எடுத்துக்கொண்ட ட்ரெய்னிங் என்று இந்தப் படத்தை வைத்துக்கொள்ளலாம்.

மேலும் வாசிக்க... "ஹிட்ச்காக் : Foreign Correspondent (1940) - ஒரு பார்வை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, December 28, 2014

திரைக்கதை சூத்திரங்கள் – II - பகுதி 31

Blake Snyder எனும் குரு

ஒரு டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு மகனாகப் பிறந்தவர் ப்ளேக் ஸ்னிடர். எனவே கலைக்கும் அவருக்குமான தொடர்பு, அவரது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ப்ளேக் ஸ்னிடரும் முதலில் டிஷ்னியின் டிவி சீரியலுக்கே எழுத ஆரம்பித்தார். அங்கிருந்து, தனது முதல் திரைக்கதையான Stop! Or My Mom Will Shoot (1992) மூலம் ஹாலிவுட்டில் களமிறங்கினார். பின்னர் திரைக்கதை ஆலோசகராகவும், திரைக்கதை வித்தையைக் கற்றுத்தரும் குருவாகவும் ஆனார். அவர் எழுதிய மூன்று புத்தகங்களும், திரைக்கதையை கற்றுத் தேற விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள், குறிப்பாக அவரது முதல் புத்தகமான ‘Save the Cat’.

சிட் ஃபீல்டு சொன்ன மூன்று அங்க வடிவத்தினை வைத்து, முழு திரைக்கதையை எப்படி எழுதுவது என்று பலரும் குழம்பியதைச் சென்ற பதிவில் பார்த்தோம். ப்ளேக் ஸ்னிடர், பல படங்களை ஸ்டடி செய்து எல்லா நல்ல திரைக்கதையிலும் சில அம்சங்கள் இருப்பதைக் கண்டுகொண்டார். அவற்றை 15 பீட் ஷீட் எனும் பெயரில் ஒரு வடிவத்திற்குக் கொண்டுவந்தார்.

இன்றளவும் ஹாலிவுட் படங்களின் திரைக்கதையில் செல்வாக்கு செலுத்தும் வடிவம் அது. அவதார் போன்ற பெரிய பட்ஜெட் படங்களானாலும் Miss Congeniality போன்ற சிறிய படங்களானாலும், ப்ளேக் ஸ்னிடர் சொல்லும் வடிவத்தை அடியொற்றியே திரைக்கதைகள் அமைக்கப்படுகின்றன. நான் ஏற்கனவே சொன்னபடி, மற்ற திரைக்கதை வடிவங்களைவிட, இவரின் மெத்தட் நம் சினிமாவிற்கு ஒத்துவருகின்ற ஒன்று என்பதால், 15 பீட் ஷீட்டைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். தொடர்ந்து அது எப்படி தமிழ் சினிமாவிற்கு ஒத்து வரும் என்றும் பார்ப்போம்.


15 பீட் ஷீட்டில் ப்ளேக் ஸ்னிடர் 15 விஷயங்கள் ஒரு திரைக்கதையில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அவை:

  1. Opening Image
  2. Theme Stated
  3. Set up
  4. Catalyst
  5. Debate
  6. Break Into Two
  7. B Story
  8. Fun & Games
  9. Mid Point
  10. Bad Guys Close In
  11. All is Lost
  12. Dark Night of the Soul
  13. Break Into Three
  14. Finale
  15. Final Image

இந்த தொடரின் முதல் பகுதியின் முடிவிலேயே ஒரு கதையை முப்பது சீன்கள்வரை உருவாக்கிவிட முடியும் என்று பார்த்தோம், இல்லையா? அதை என்ன ஆர்டரில், எப்படி சுவாரஸ்யமாக வடிவமைப்பது என்பதற்கு இந்த பீட் ஷீட் உதவும். இந்தத் தொடரின் முதல் பாகத்தையும், இந்த பிட் ஷீட்டையும் கற்றுத் தேர்ந்தாலே திரைக்கதை எழுதுவது 75% பிடிபட்டுவிடும். மீதி 25%, உங்கள் கிரியேட்டிவிட்டியால் மட்டுமே நிரப்ப முடியும்!

இந்த 15 விஷயங்களும் உங்கள் திரைக்கதையில் இருந்தே ஆக வேண்டுமா? என்னைப் பொறுத்தவரை, இந்த பதினைந்தில் பத்தாவது இருந்துவிட்டால், அது ஒரு நல்ல திரைக்கதையாக உருவம் பெறும். 

இப்போது பீட் ஷீட்டில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும், விரிவாகப் பார்ப்போம். முதலில்....

Opening Image:

உங்கள் திரைக்கதையின் முதல் பக்கத்தில் நீங்கள் எழுதப் போகும் முதல் சீன், சில நேரங்களில் முதல் ஷாட் தான் இந்த ஓப்பனிங் இமேஜ்.

நாம் பார்த்த சில படங்களின் ஓப்பனிங் சீனை நினைத்துப் பார்ப்போம்.
தேவர் மகன் – ட்ரெய்னில் பங்க் தலையுடன் வந்திறங்கும் ஹீரோ தாரை தப்பட்டக்கு ஆடும் சீன்.

சுப்ரமணியபுரம் – சிறையில் இருந்து விடுதலையாகும் ஒருவன், சிறை வாசலிலேயே கத்தியால் குத்தப்படும் சீன்

சித்திரம் பேசுதடி – பைக்கில் ஹாயாக வரும் ஹீரோயினை, யாரையோ துரத்தும் ரவுடிகள் இடித்துவிட, அவள் சிறு ஆக்சிடெண்டில் சிக்குகிறாள்.
இந்த சீன்கள் எதையாவது நமக்குச் சொல்ல முயல்கின்றனவா?

ப்ளேக் ஸ்னிடர், ஓப்பனிங் இமேஜ் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்த்துவிடுவோம். ஓப்பனிங் இமேஜ் என்பதற்கு இரண்டே இரண்டு குறிக்கோள்கள் தான் இருக்க முடியும் என்கிறார் ப்ளேக் ஸ்னிடர்.  

ஒன்று : ஹீரோவின் கேரக்டர் ஆர்க்கின் ஆரம்ப நிலையைக் காட்டுவதற்கு. இப்படி இருந்த ஹீரோவுக்கு, இப்படி இப்படி நடந்ததால், இறுதியில் இப்படி ஆனான் எனும் Joseph Campel வட்டத்தினை மையமாகக் கொண்ட படங்களுக்கு ஒப்பனிங் சீன், இந்த வகையில் தான் வரும்.

தேவர் மகனின் ஆரம்பத்தில், கமல் ஊர்ப்பிரச்சினை பற்றி அலட்டிக்கொள்ளாத, நடுரோட்டில் ஆடுகிற ஜாலியான மனிதனாக வந்திறங்குகிறார். ஆனால் அது ஒரு ரத்தபூமி என்பது பின்னர் தான் தெரியவருகிறது. அவரது வாழ்வை தலைகீழாக அடுத்து நடக்கும் சம்பவங்கள் புரட்டிப் போடுகின்றன. ஆடியன்ஸ் ஹீரோவுடன் தான் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள் என்பதால், இந்தவகைப் படங்களில் ஓப்பனிங் இமேஜ் மிக முக்கியமானது. இது தான் ‘save the cat’ சீனாக இருக்கும்.

ஓப்பனிங் இமேஜின் இரண்டாவது வகைக் குறிக்கோள் : படத்தின் தன்மை அல்லது படத்தின் கரு எப்படிப்பட்டது என்று காட்டுவது.

சுப்பிரமணிய புரம் படத்தின் மையம், துரோகம். நாம் எதையோ நம்பிக்கையுடன் எதிர்பார்க்க, இந்த உலகம் நமக்கு அளிப்பது நம்பிக்கை துரோகம் தான். இந்த கசப்பான உண்மையை உடைத்துச் சொன்ன படம், சுப்பிரமணியபுரம். கவுன்சிலர், ஹீரோயின், நண்பன் என படத்தில் வரும் பல கேரக்டர்களும் துரோகம் செய்துகொண்டே செல்கின்றன. அது அவர்களாலேயே தவிர்க்க முடியாததாக, ஒரு நியாயத்துடன் செய்யப்படும் செயலாக துரோகம் இருக்கிறது.

படத்தின் ஓப்பனிங் சீனில், ஒருவன் ஜெயிலில் இருந்து விடுதலை பெறுகிறான். அப்போது நாம் எதிர்பார்ப்பது, அவன் வெளியே வந்து வானத்தைப் பார்க்க, அங்கே பறவைகள் பறந்து செல்லும் காட்சியை. ஆனால் நம் நம்பிக்கை, ஓப்பனிங் சீனிலேயே தகர்க்கப்படுகிறது. வன்முறையும், நம்பிக்கையைக் குலைக்கும் செயல்களுமே அடுத்து வரப்போகின்றன என்று ஆடியன்ஸின் சப்கான்ஷியஸ் மைண்ட்டை செட் செய்ய, இந்த ஓப்பனிங் சீன் உதவுகிறது. இது தான் ஒரு நல்ல திரைக்கதையின் முதல் அடையாளம்.

சித்திரம் பேசுதடியில் ஏன் அந்த சீன் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். கூடவே, உங்கள் திரைக்கதையின் முதல் சீன் என்னவாக இருக்கிறது என்று பாருங்கள்.

ஓப்பனிங் சீனில் இன்னொரு வகை உண்டு. அது, ஏற்கனவே நடந்த சில விஷயங்களை சுருக்கமாகச் சொல்வது. மேட்டுக்குடியில் ஒரு சரித்திர நிகழ்வு சொல்லப்படுவது ஒரு உதாரணம். இரு குடும்பப் பகை, முக்கியக் கேரக்டரின்(குறிப்பாக வில்லனின்) இயல்பைக் காட்டும் ஏதோவொரு சம்பவம் என திரைக்கதையில் பின்னால் சொன்னால் ஒட்டாமல் துருத்திக்கொண்டு தெரியும் சீன்களை, முதலிலேயே முன்கதைச் சுருக்கமாகச் சொல்வதும் மரபு.

பீட் ஷீட்டின் அடுத்த அம்சங்களை அடுத்த வாரம் பார்ப்போம். ஒரு முக்கிய வேலையில் இருப்பதால், தொடர் இடையில் எழுதமுடியாமல் போனது. இனி தொடர்ந்து வரும் என்று நம்புகிறேன். அக்கறையுடன் கேட்ட நண்பர்களுக்கு நன்றி.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் – II - பகுதி 31"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 26, 2014

மீகாமன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
டி.வியில் ஒருநாள் சேனல் மாற்றிக்கொண்டே வரும்போது, ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. சும்மா ஐந்து நிமிடம் பார்ப்போமே என்று ஆரம்பித்தால், சட்டென்று என்னை உள்ளே இழுத்துக்கொண்டது அந்தப் படம். அது ‘தடையறத் தாக்க’. 
 
அந்தப் படம் ஏன் ஓடவில்லை என்றும் எனக்குப் புரியவில்லை, அதன் இயக்குநருக்கு ஏன் அடுத்த பட வாய்ப்பு உடனே வரவில்லை என்றும் புரியவில்லை. ஒவ்வொரு சீனிலும் இது ஒரு சினிமா தெரிந்த இயக்குநரின் படம் எனும் முத்திரை இருந்தது. அப்படி என் மனதில் பதிந்த இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு என்பதே, இந்தப் படத்தை நான் பார்க்கப் போதுமானதாக இருந்தது.

ஒரு ஊர்ல..:


தாதாக்கள் கூட்டத்துக்குள் ‘காக்கிச்சட்டை-போக்கிரி’ ஊடுருவும் கதை தான். ஆனால் திரைக்கதை.....

உரிச்சா....:
தடையறத் தாக்க போன்றே நல்ல ஒரு ஆக்சன் த்ரில்லரைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் படத்தினை எடுத்திருக்கிறார்கள். அச்சுப்பிச்சுக் காமெடியன் இல்லை, ஃபேமிலி செண்ட்டிமெண்ட் இல்லை. தொட்டுக்கொள்ள ஊறுகாயாக காதலை மட்டும் கொஞ்சூண்டு வைத்துக்கொண்டு, ஹாலிவுட் படங்கள் போன்றே முழுமையான ஆக்சன் படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஜோதி (அஷுடேஷ் ராணா) எனும் கடத்தல் கும்பல் தலைவனை போலீஸ் உட்பட யாருமே பார்த்ததில்லை. அவனைப் பிடிக்க ஆர்யா அவனது கூட்டத்துக்குள் ஊடுறுவி இருப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. வேறு ஆள் என்றால், இந்த ரகசியத்தை இண்டர்வெல்லுக்கு அப்புறம் தான் சொல்வார்கள். மகிழ் திருமேனி அசால்ட்டாக படம் ஆரம்பித்த கால்மணி நேரத்திலேயே போட்டு உடைக்கிறார். ஆனால் அடுத்த சீனிலேயே வில்லனுக்கும் யாரோ ஒருவன் ஊடுறுயிருப்பது தெரிந்துவிடுகிறது. இப்படி பல சீன்களில் எதையும் ஒளித்து வைக்காமல் ஆடியன்ஸுக்கு விஷயத்தைச் சொல்லிக்கொண்டே, சஸ்பென்ஸையும் மெயிண்டெய்ன் செய்துகொண்டே செல்கிறார்கள்.

யாருமே பார்க்காத வில்லன் எனும் கான்செப்ட் தான் படத்தின் பலமே. தடையறத் தாக்க படத்தில் யாருமே பார்க்காத பெண் என்று ஒரு முக்கியக் கேரக்டர் வரும். அதே போன்றே இதில் இந்த வில்லன். இப்படி ஒரு அழுத்தமான வில்லன் கேரக்டரைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. தமிழ்சினிமா இந்த அஷுடேஷ் ராணாவை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். 
ஆர்யாவிற்குப் பக்கத்து வீட்டுப்பெண்ணாக ஹன்சிகா. வழக்கம்போல் அரை லூஸ் டைப் ஹீரோயின் கேரக்டர் தான். ஆனால் அவரும் ஆர்யாவும் பேசும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரே கலகலக்கிறது. அதிலும் அந்த கிளைமாக்ஸ் யதார்த்தமாகவும் டச்சிங்காகவும் இருந்தது.

படத்தில் நம்மை நெளிய வைக்கும் விஷயம், அதீத் வன்முறை தான். அதிலும் ரமணா டார்ச்சர் செய்யப்படும் சீன், கொடுமை. அவ்வளவு டீடெய்லாகக் காட்டியிருக்கத் தேவையில்லை. நிச்சயம் ஃபேமிலி ஆடியன்ஸ் அந்த சீனிலேயே தெறித்து ஓடிவிடுவார்கள். படத்திற்கு திருஷ்டி, அந்த சீன். இப்போது கூட, அங்கே கொஞ்சம் கட் செய்யலாம். மற்றபடி, அனல் அரசு அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளில் பொறி பறக்கிறது.

படத்தில் ஒவ்வொரு சீனையும் யோசித்து எழுதியிருக்கிறார்கள். படத்தில் சாதாரணமாக வரும் காட்சிகள்கூட, பின்னர் முக்கியத்துவம் பெறுவது ரசிக்க வைக்கிறது. படத்தில் ஏகப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் காட்டி, ஒவ்வொருவரும் யார் என டீடெய்ல்ஸ் போடுவது வேண்டாத வேலை. அத்தனைபேரையும் ஞாபகம் வைக்க, அசாத்தியத் திறமை வேண்டும். ஒவ்வொரு ஷாட்டையும் முடிந்தவரை அர்த்தத்துடன் அமைத்திருக்கிறார்கள். ஆர்யா பற்றி உண்மை தெரியாதபோது, அரைமுகத்தை இருட்டில் காட்டுவது, அனுபமா ஆண்ட்டியும் அந்த இன்னொரு போலீஸும் கொல்லப்படும் சீன் என விஷுவலாக மிகவும் அக்கறை எடுத்துச் செய்திருக்கிறார்கள். வெல்டன்!

ஆர்யா:

நவரசங்களில் ஆர்யாவுக்கு வரும் ஒரே ரசம், ஆக்சன் தான் என்று நிரூபித்திருக்கிறார். இறுகிப்போன உடம்பும், முகமும் அந்த கேரக்டருக்கு சரியாகப் பொருந்துகின்றன. கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை அவர் உணரும் காட்சியில் நுணுக்கமான நடிப்பு. ஆக்சன் காட்சிகளில் துப்பாக்கியுடன் அனாயசமாக விளையாடுகிறார்.
ஹ..ஹ...ஹன்சிகா:
’பச்சை மைதா மாவு’ ஹன்சிகா வழக்கம்போல் நம் மனதில் மாவு பிசைகிறார். முன்பு நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டவர், இப்போது எக்ஸ்பிரசன்களில் பின்னி எடுக்கிறார். ஆனால் கதையில் அவருக்கு இடமில்லை என்பதால். அவ்வப்போது வந்து போகிறார். ஆர்யா என்று நினைத்து, தோழியிடம் ரொமான்ஸ் பண்ணுமிடத்தில் தியேட்டரே கலகலக்கிறது. பைக் ஓட்டத்தெரியாமல் டபுள்ஸ் போவது, ஆர்யாவை ஐ.டி.ஆள் என்று நினைத்து ரூட் விடுவது என படத்தில் நம்மை ரிலாக்ஸ் பண்ணும் ஒரே புண்ணிய ஆத்மா, நம் ஹன்ஸி தான்.

அஷுடேஷ் ராணா:
வில்லனாக நல்ல அறிமுகம். அமைதியான ஆளாக வந்து, அதகளம் பண்ணுகிறார். இவர் யாரென்று எல்லாரும் தேட, கேஷுவலாக ரோட்டோரக்கடையில் உட்கார்ந்திருப்பது செம சீன். கிளைமாக்ஸில் ஆர்யாவிடம் அவர் மாட்டிக்கொள்ளும்போது, நமக்கே அடடா என்று இருக்கிறது!.

சொந்தபந்தங்கள்:

ஆர்யாவை ஆபரேசனுக்கு அனுப்பும் போலீஸ் அதிகாரியாக, நம் மனம் கவர்ந்த ‘அனுபமா குமார்’. ஆபரேசன் சக்ஸஸ் ஆகப் பதறுவதும், ஆர்யாவைக் காப்பாற்றத் துடிப்பதுமாக நல்ல நடிப்பு.
ஆஷிஷ் வித்யார்த்தி, ‘மேட்டரில் துப்பாக்கி வெடித்த அடியாள், மகாதேவன், குருவாக வருபவர் என எல்லாருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
 
நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- வன்முறை. ரமணா டார்ச்சர் செய்யப்படும் சீன்.

- ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டே பழகிய தமிழனுக்கு, ஆக்சன் மட்டும் போதுமா என்பது கேள்விக்குறியே. ஹாலிவுட்டில் காமெடிக்கு, ஆக்சனுக்கு என தனித்தனிப் படங்கள் வந்து ஜெயிக்கின்றன. ஆனால் நம் மக்கள் இன்னும் இதற்குப் பழகிக்கொள்ளவில்லை என்பதே உண்மை. எனவே ஆக்சன்/சஸ்பென்ஸ் தாண்டி வேறு எதுவும் எதிர்பார்த்து வருவோர்க்கு, இந்தப் படம் ஏமாற்றத்தையே கொடுக்கும். ஆக்சன் விரும்பிகளுக்கு, இது ஹாலிவுட் பிரியாணி!
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நீட்டான திரைக்கதை. அழகாக அவிழும் முடிச்சுகள்.
- நறுக்குத் தெறித்தாற்போன்று வசனங்கள்.
- விஷுவலாகக் கதை சொல்ல முயலும் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும். படத்தின் தரத்தை உயர்த்துபவையே இவை தான்.
- பரபர ஆக்சன் படத்தில் சிரிக்க வைக்கும் ஹன்ஸிகா போர்சன்
- அனல் அரசுவின் அதிரடி ஃபைட்
- ஆர்யா இந்த கேரக்டருக்கு சரியாக செட் ஆகியிருப்பது
- எல்லாரையும் சரியாக வேலை வாங்கியிருக்கும் இயக்கம்

பார்க்கலாமா?


ஆக்சன் பட விரும்பிகள் கண்டிப்பாகப் பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "மீகாமன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, December 17, 2014

The Double Life of Véronique (1991) - சினிமா அறிமுகம்

சினிமா ஒரு விஷுவல் மீடியம்.

இது ஒரு புளித்துப்போன வசனம் தான் என்றாலும், இதை உணர்ந்து படம் எடுப்பவர்கள் மிகவும் குறைவு. வசனங்களிடமும் ஓவர் ஆக்டிங்கிடமும் சரணடைபவர்களே அதிகம். ஆனால் தான் வைக்கும் ஷாட்களின் மூலமே, கதையை நமக்குப் புரிய வைப்பதும், வசனங்களை முடிந்தவரை குறைப்பதுமே சினிமா ஒரு விஷுவல் மீடியா என்பதற்கு அர்த்தம். அத்தகைய படைப்பாளிகளில் ஒருவர் போலந்து இயக்குநர் Krzysztof Kieslowksi.

அப்போது சாதாரண நடிகையாக இருந்த Irène Jacob-ஐ ஹீரோயினாக வைத்து, Kieslowksi எடுத்த காவியம் தான் ' The Double Life of Véronique'. 1991ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே, பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தின் கதை சிம்பிளானது தான். ஒரே நாளில் வெவ்வேறு நாட்டில் (போலந்து & ஃப்ரான்ஸ்) பிறந்த இரு கதாநாயகிகள் வெரோனிக்கா & வெரோனிக். இருவரும் ஒரே போன்ற தோற்றம் உடையவர்கள். ஒரே போன்ற மேனரிசம் உடையவர்கள். ஒருவருக்கு ஒரு நாட்டில் நடப்பதை, இன்னொருவர் கனவு போன்றோ உள்ளுணர்வாகவோ உணர்கிறார்கள். ஆனாலும் தன்னைப் போன்ற இன்னொருவர் இருப்பது மற்றவருக்குத் தெரியாது.அதில் வெரோனிக்கா இறந்தபின்,  தன்னைப் போலவே தன்னில் இன்னொரு பாதியாக, தனக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக ஒருத்தி போலந்தில் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறாள் என்று ஃப்ரான்ஸ் வெரோனிக் உணர்ந்துகொள்கிறாள்.

படம் பார்க்கும்போது நாமும் ஒரு கனவு காண்கிறோமோ எனும் தோற்றத்தை ஏற்படுத்தியது தான் இயக்குநர் கீய்ஸ்லோவ்ஸ்கியின் வெற்றி. திரைக்கதையும், ஒளிப்பதிவும், ஜாகோப்பின் நடிப்பும் சேர்ந்து, விஷுவலாகக் கதை சொல்ல பேருதவி செய்திருக்கின்றன.

படம், போலந்தில் வாழும் வெரோனிக்காவுடன் ஆரம்பிக்கிறது. எனர்ஜெடிக்கான, நன்றாகப் பாடும் திறமையுள்ள, ஆனால் ஹார்ட் பிரச்சினையுள்ள பெண்ணாக அவரது கேரக்டர் விவரிக்கப்படுகிறது.

சிறுவயதிலேயே அம்மாவை இழந்தவர்..

அன்பான அப்பா..

ஃபைல் லேஸை விரலில் சுற்றிக்கொண்டேயிருக்கும் மேனரிசம் கொன்டவ்ர்..

தங்கமோதிரத்தால் இமையை வருடும் மேனரிசம் கொண்டவர்.

ஒளிஊடுருவும் ரப்பர் பால் ஒன்றின்வழியே உலகத்தை தலைமீழாகப் பார்ப்பதில் ஆர்வம்..

பாடும்திறமை உள்ளவர்.
இதயநோய் உள்ளவர்

- இப்படி படத்தின் முதல் அரைமணி நேரம் வெர்னிகாவுடன் மட்டுமே க(ளி)ழிக்கிறோம். வெர்னிகாவிற்கு திடீரென பாடும் வாய்ப்பு வர, முதல் மேடை நிகழ்ச்சியிலெயே இதயநோய் காரணமாக சுருண்டு விழுந்து இறந்து போகிறார். அதன்பின் படம் ஃப்ரான்ஸில் வெரோனிக் உடன் ஆரம்பிக்கிறது. (வெரோனிக்காவின் கதையை எந்த ஷாட்டில், எங்கே கட் செய்து, வெரோனிக்கின் கதையை எங்கேயிருந்து ஆரம்பிக்கிறார் என்று கவனித்துப்பாருங்கள். இறப்பில் இருந்து பிறப்புக்குத் தாவும் மேஜிக்கை அனுபவியுங்கள்.)

தான் தனி ஆள் அல்ல எனும் அதே உணர்ச்சியுடன் வாழும் வெரோனிக், நம்மூர் பொம்மலாட்டம் போன்ற பப்பெட் ஷோ நடத்தும் ஹீரோவுடன் காதலில் விழுகிறார். ஹீரோ யார் என்றே தெரியாத நிலையில், ஹிரோ அனுப்பும் க்ளூ எல்லாம் தற்செயலாக வெரோனிக்காவின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அவன் தான் தன்னுடைய இன்னொரு பாதி என்று நினைத்து அவனைத் தேடிச் செல்லும் ஹீரோயின், அவன் ஒரு சுயநலவாதி என்பதையும் தன்னுடைய உண்மையான பாதி யார் என்பதயும் அங்கே தெரிந்துகொள்கிறாள்.

படத்தின் விஷேசமே, மேலே சொல்லப்பட்ட எதுவும் விலாவரியாக விளக்கப்படுவதில்லை. இருவருக்கும் ஹார்ட் பிராப்ளம் என்பதை இரு காட்சிகளில் சொல்கிறார் இயக்குநர்.
வெரோனிக்கா தெருவில்  போகும்போது நெஞ்சைப் பிடித்தபடி வலியை உணர்கிறாள்.

வெரோனிக் ஹீரோ அனுப்பிய லேஸை ஒரு ECG ரிப்போர்ட் மேல் வைத்துப் இருக்கிறாள்.

---------- அவ்வளவு தான். வசன விளக்கம் எதுவும் இல்லை. நுணுக்கமான நடிப்பு, கதை சொல்லும் ஷாட்ஸ் என இரண்டை வைத்தே முழுப்படமும் நகர்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் காரணத்தோடு, நுணுக்கமான டிடெய்ல்ஸுடன் வைக்கப்பட்டுள்ளது. ஒரு செகன்ட் அசந்தாலும், அதைத் தவறவிட்டுவிடுவோம்.


படம் முழுக்க குறியீடுகளால் நிரம்பி வழிகிறது. படத்தின் முதல் ஷாட், குழந்தையாக இருக்கும் வெரோனிக்காவை அவளது அம்மா தலைகீழாகப் பிடித்தபடி, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் காட்டுகிறார்.

அடுத்த ஷாட், வெரோனிக்கின் அம்மா ஃப்ரான்ஸில் ஒரு மரத்தின் இலையைக் காட்டி, இது முதல் இலை. வ்சந்தகாலத்தில் இன்னும் பெருகும் என்று சொல்கிறாள்.

மறையும் நட்சத்திரம் வெரோனிக்காவிற்கு...வளர்ந்து செழிக்கும் இலை வெரோனிக்கிற்கு...ஏன் அப்படிக் காட்டப்படுகிறது என்று யோசியுங்கள்.
வெரோனிக்கா இறந்தபின்னர், வெரோனிக் உடன் ஆவியாக இருக்கிறாள் என்பதும் பல காட்சிகளில் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதில் ஒரு காட்சி தான் வெளிப்படையாக இருக்கும். மற்றவை கவனித்தால் தான் தெரியும்.


அதே போன்றே, போலந்தில் வாழும் வெரோனிக்காவின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகளில், பெரும்பாலும் வெரோனிக்காவின் ஒரு மிரர் இமேஜும் தெரிந்துகொண்டேயிருக்கும். இரட்டைத்தன்மையை விளக்க, ஹிட்ச்காக் கடைப்பிடித்த பாணி அது. அதை கீய்ஸ்லோவ்ஸ்கியும் வெற்றிகரமாக இங்கே உபயோகப்படுத்தியிருக்கிறார். (கீய்ஸ்லோவ்ஸ்கி வெள்ளைக்காரத்துரை என்பதால், இதை காப்பி லிஸ்ட்டில் அறிவுஜீவிகள் சேர்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.)

மர்மம், ஆவி, தற்செயல் என பல தளங்களில் படம் பயணிக்கிறது.  இயக்குநர் Keislowski இந்தக் கதையைச் சொல்லியிருக்கும் விதத்தில் தான், இந்தப் படம் உலக சினிமாவாக ஆகிறது.

தற்செயலாக நடக்கும் சம்பவங்கள் முடிவில் வேறு அர்த்தத்தை அல்லது ஒரு முழுமையை உண்டாக்குகின்றன. இந்த படத்தின் திரைக்கதையையும் அப்படியே அமைத்திருக்கிறார். முதலில் வேண்டாத சிறுவிஷயம் என்று நாம் நினைப்பது எல்லாம் பிற்பாதியில் முக்கியமானதாகவும் கதையை நமக்கு விளங்கவைப்பதாகவும் இருக்கின்றன. இந்த சிம்பிளான கதையை அர்த்தமுள்ளதாகவும், ரசிக்கவைப்பதாகவும் ஆக்குவது அந்த உத்தி தான்.

கூடவே, ஒளிப்பதிவு. “Every Frame is Painting’ என்று சொல்வது இந்தப் படத்திற்குத் தான் சாலப்பொருந்தும். லைட்டிங்கும், கேமிராக்கோணங்களும், ஹீரோயினும் நுணுக்கமான எக்ஸ்பிரச்ன்களும் சேர்ந்து, இந்தப் படத்தின் தரத்தை எங்கோ கொண்டுசென்றுவிடுகின்றன.

ஹீரோயினுக்கு நடப்பது என, அவள் யோசிப்பது என்ன. இருவருக்குமான பிணைப்பு என்ன என்று எதுவுமே வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. கிளமாக்ஸில் தான் நமக்கு மொத்தக்கதையுமே 'ஓரளவு' புரிகின்றன. மர்மமும் சுவாரஸ்யமும் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்கிறது.

Preisner-ன் இசையும் Irène Jacob-ன் நடிப்பும் அழகும் நம் மனதைவிட்டு ரொம்பநாளைக்கு நீங்காது.

‘ட்வின்ஸ், ஒருவருக்கு நடப்பதை இன்னொருவர் உணர்வார்கள்’ எனும் கான்செப்ட்டில் எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் படமும், ஜாக்கிசானின் 'ட்வின் பிரதர்ஸ்' படமும் ஏற்கனவே வந்திருக்கின்றன. (கீய்ஸ்லோவ்ஸ்கி வெள்ளைக்காரத்துரை என்பதால்….ரிப்பீட்டேய்!) அந்தப் படங்கள் கமர்சியல் என்டெர்டெய்ன்மென்டுக்காக அந்த கான்செப்ட்டை யூஸ் செய்திருந்தன. இங்கே தன் கதை சொல்லும் முறையால் இயக்குநர் கீய்ஸ்லோவ்ஸ்கி    இந்த உலகத்தில் யாரும் தனியல்ல, ஏதேனுமொரு விதத்தில் இன்னொரு விதத்தில் இன்னொருவருடன் பிணைக்கப்பட்டவர்கள் தான் என்று நமக்கு உணர்த்த உபயோகித்திருக்கிறார்.

விளக்க ஆரம்பித்தால், ஒவ்வொரு காட்சியையும் விளக்க வேண்டும். அது நீங்கள் படம் பார்க்கும் அனுபவத்தைக் கெடுக்கும் என்று அஞ்சுவதால்....

ஏதாவது நல்ல புத்தகத்தைப் படிக்கும்போதோ அல்லது இணையத்தில் நல்ல படங்கள் பற்றிப் படிக்கும்போதோ ‘The Double Life of Véronique ' எனும் இந்தப்பெயர் திரும்பத் திரும்ப கண்ணில் பட்டுக்கொண்டே யிருக்கும். நீண்டநாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த படம்..இந்த வாரம் தான் பார்க்க முடிந்தது. அடுத்த நாளே மறுபடியும் பார்த்தேன்.... மெய் மறந்தேன்!

 இதுவரை நான் பார்த்த படங்களில் டாப் 5 லிஸ்ட்டில் இந்தப் படத்திற்கு மூன்றாம் இடத்தைத் தருகிறேன். உலக சினிமா ரசிகர்களுக்குப் பொக்கிசம் இந்தப் படம். ஒரு திரைப்படத்தின் கூறுகளான நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கதை, திரைக்கதை என சகல அம்சங்களும் ஒன்றுபோல் பெர்ஃபெக்ட்டாக வருவது அபூர்வம். அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது. அதனால் தான் இயக்குநர் Krzysztof Keislowski உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

எச்சரிக்கை/நல்ல செய்தி : படத்தில் கில்மா சீன்கள் உண்டு.
 
மேலும் வாசிக்க... "The Double Life of Véronique (1991) - சினிமா அறிமுகம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, December 15, 2014

திரைக்கதை சூத்திரங்கள்-II (பகுதி-30)


Syd Field எனும் புயல்
 தற்போது தமிழில் இருக்கும் சூழல் போன்றே, 1970களில் ஹாலிவுட்டிலும் திரைக்கதை என்றால் என்ன என்பது குருகுல மர்மமாக இருந்து வந்தது. '(திரைக்கதை) எழுத்து என்பது சும்மாவா? அதெல்லாம் தவம் மாதிரி' எனும் பில்டப்புகள் வேறு பீதியைக் கிளப்பும். திரைக்கதையைக் கற்க வேண்டும் என்று விரும்புவோருக்குப் பயன்பட்ட நூல்கள் எவையும் திரைக்கதையை மனதில் வைத்து எழுதப்பட்டவை அல்ல. உதாரணம், அரிஸ்டாட்டிலின் Poetics, கேம்பலின் 'A Hero with thousand faces'.

 அந்த நூல்களைப் படிப்பவர்களே, அந்தப் புத்தகங்களில் உள்ள கருத்துக்களை சினிமாவுடன் ஒப்பிட்டு, அவர்களே அரைகுறையாகப் புரிந்துகொண்டு, பின் தங்கள் சொந்தத் திறமையால் கற்று வெளியே வந்தார்கள். இத்தகைய சூழலில் தான் Syd Field எனும் புயல், ஹாலிவுட்டைத் தாக்கியது. சிட் ஃபீல்ட் எழுதிய Screenplay - Fundamentals of Screenwriting புத்தகம் பெரும் அதிர்வை சினிமா ஆர்வலர்களிடையே உண்டாக்கியது. அதுவரை ரகசியமாய் இருந்த பல விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்தார் சிட் ஃபீல்ட்.
அவர் சொன்ன 3 ஆக்ட் வடிவம், இன்றளவும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாக நீடிக்கிறது. அவர் வழியில் வந்த பலர், அதை இன்னும் மேம்படுத்தி அடுத்த நிலைகுக் கொண்டுசென்றுவிட்டார்கள் இப்போது. அவரது 3 ஆக்ட் வடிவத்துடன் மாறுபட்டவர்கள்கூட, அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட அடிப்படை விஷயங்களை ஏற்றுக்கொண்டே தான் ஆக வேண்டும். அந்தப் புத்தகத்தின் பெயருக்கேற்ப, திரைக்கதைக்கே அடிப்படையாக, பைபிளாக ஆனது Screenplay புத்தகம்.

Syd Field-ன் 3 ஆக்ட் வடிவத்தைப் பற்றி இன்று பார்த்துவிட்டு, Blake Snyder நோக்கி அடுத்து நகர்வோம். 

கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் தன் Poetics நூலில் நாடகம் பற்றி எழுதுகையில் ‘ஆரம்பம், மத்திமம், முடிவு ஆகிய மூன்றைக் கொண்ட நாடகமே முழுமையானது’ என்று சொல்லியிருப்பது பற்றி, ஏற்கனவே பார்த்தோம். அது தான் சிட் ஃபீல்டின் மூன்று அங்க வடிவத்திற்கு அடிப்படை. அதை வைத்து, அவர் திரைக்கதையை மூன்றாகப் பிரித்தார். ஆக்ட்-1, ஆக்ட்-2 மற்றும் ஆக்ட்-2 என்று பிரித்துக்கொண்டார். கூடவே அவரது கண்டுபிடிப்பாக, Plot Points-களைச் சேர்த்தார். அவர் பரிந்துரைத்த வடிவம் இப்படி வந்தது:


ஆக்ட்-1 (Set-up): 
இதில் கதையின் முக்கிய மாந்தர்களின் இயல்பு, சூழ்நிலை போன்றவை விளக்கப்படும். ஹீரோவின் வழக்கமான வேலைகளும், அவனது உலகத்தின் இயல்பு நிலையும் ஆடியன்ஸுக்கு செட்டப்பில் தெரியப்படுத்தப்படும். படத்தின் தீம் எதைப்பற்றியது என்பதும் ஆக்ட்-1ல் விளக்கப்படும். ஆக்ட்-1 என்பது ஒரு திரைக்கதையில் 25% நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆக்ட்-1ல் இரு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தேறும். அவை Inciting Incident மற்றும் Plot Point 1(Key Incident).

Inciting Incident: அவ்வாறு சுமூகமாக்ச் செல்லும் ஹீரோவின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது ஹீரோவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ சவாலுக்கு அழைப்பதாக, சாகசத்திற்குத் தூண்டும் ஒரு நிகழ்வாக, காதல் கதையென்றால் ஹீரோ ஹீரோயினைச் சந்திப்பதாக இருக்கும். இந்த Inciting Incident-ல் தான் ஹீரோவை படத்தின் மையப்பிரச்சினை சந்திக்கும்.

Plot Point 1:  ஹீரோ தனக்கு விடப்பட்ட சவாலை ஏற்றுக்கொள்ளும் தருணம் அல்லது அவனது வாழ்க்கையை மாற்றிப்போடும் தருணம் இந்த ப்ளாட் பாயின்ட். இந்த நிகழ்விற்குப் பின் அவனது வாழ்க்கை, பழைய மாதிரி இருக்கப்போவது இல்லை. இனி சுமூகநிலைக்கு அவன் திரும்பவேண்டும் என்றால், அவன் படத்தின் மையப்பிரசிச்னையை சால்வ் பண்ணியே ஆக வேண்டும். இந்த சம்பவம் தான், ஹீரோவை ஆக்ட்-2க்குள் தள்ளுவது.

ஆக்ட்-2(Confrontation):
ஹீரோ  பிரச்சினைகளைச் சந்திப்பது, தனது குறிக்கோளை நோக்கிய பயணத்தில் தற்காலிகத் தோல்விகளை அடைவது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும் இடம், இந்த ஆக்ட்-2 எனும் கன்ஃப்ரன்டேசன். இது திரைக்கதையில் 50% நிகழ்வுகள் நடந்தேறும் இடம். இதில் நான்கு முக்கியப் பகுதிகள் உள்ளன. Pinch-1, Mid Point, Pinch-2 மற்றும் Plot point-2. முதலில் Mid Point & Plot point-2-ஐ மட்டுமே தன் புத்தகத்தின் பரிந்துரைத்த சிட் ஃபீல்ட், பின்னர் அதன் போதாமையை உணர்ந்து, பின்ச்-1 & 2-ஐச் சேர்த்தார்.

Pinch 1: ஆக்ட்-2வில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறும்போது, கதையின் முக்கியப்பிரச்சினையை ஆடியன்ஸ் மறந்தே போகும் அபாயம் உண்டு. எனவே அவர்களுக்கு அதை ஞாபகப்படுத்தும்பொருட்டு, ஹீரோவுக்கு உள்ள முக்கியமான சிக்கலை ஞாபகப்படுத்தும் ஒரு சீன் வைக்க வேண்டும் என்று சொன்னார் சிட் ஃபீல்ட். அதுவே இந்த பின்ச்-1.

Midpoint: இது நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான இண்டர்வெல் ப்ளாக். பொதுவாக, சமாதானத்திற்கான எல்லா வழிகளும் அடைபடும் இடம், இந்த மிட் பாயிண்ட். இனிமேல் சாகசத்தைத் தவிர வேறு வழியில்லை ஹீரோவுக்கு. கதையின் போக்கையே மாற்றும் ஏதோவொரு முக்கிய நிகழ்வு நடந்தேறும் இடமாகவும் இந்த சீன் இருப்பதுண்டு.

Pinch 2: இதுவும் பின்ச்-1 போன்றே, இன்னொரு ஞாபகப்படுத்தும் சீன் தான்.

Plot Point 2: இது திரைக்கதையின் இன்னொரு முக்கியமான இடம். ஆக்ட்-2 முடிந்து, ஹீரோவை மூன்றாவது ஆக்ட்டிற்குத் தள்ளும் சீன், இந்த ப்ளாட் பாயிண்ட்-2. இது பொதுவாக ஹீரோ எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இடமாகவோ அல்லது ‘பொறுத்தது போதும்’ என்று பொங்கி எழும் இடமாகவோ இருக்கும். அங்கேயிருந்து கிளைமாக்ஸ் நோக்கி, ஹீரோவை புல்லட் போல் தள்ளும் நிகழ்வாக, இந்த ப்ளாட் பாயிண்ட் இருக்கும்.

ஆக்ட்-3 (Resolution): ஹீரோ எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து அல்லது தானாகவே அவை தீர்ந்து, கிளைமாக்ஸில் சுபம் போடும் பகுதியே இந்த ஆக்ட்-3.
சிட் ஃபீல்ட் குறிப்பிடும் இந்த ப்ளாட் பாயிண்ட்கள், திரைக்கதை எழுதும்போது மைல் ஸ்டோன்ஸ் போன்று உதவக்கூடியவையாக அமைந்தன. ஆனால் இந்த பாயிண்ட்களுக்கு இடையே என்ன செய்வது என்பது பற்றிய பிராக்டிகல் விளக்கங்களை சிட் ஃபீல்டின் தியரி தரவில்லை. குறிப்பாக ஆக்ட்-2 என்பது ஒரு மணிநேரத்திற்கு ஓடக்கூடிய சம்பவங்களால் நிறைந்தது. அதை எப்படி நிரப்புவது? பின்ச்-1&2 மற்றும் மிட் பாயிண்ட் மட்டுமே போதுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. சிட் ஃபீல்ட், திரைக்கதையின் அடிப்படைக்கு மட்டுமே உதவுவாரே ஒழிய, முழு திரைக்கதை எழுத அவரது 3 ஆக்ட் வடிவம் பயன்படாது எனும் எதிர்குரல்கள் எழுந்தன.

சிட் ஃபீல்டின் வழியைப் பின்பற்றி, பலரும் அவரது 3 ஆக்ட் வடிவத்தை மேலும் வளர்த்தெடுத்தார்கள். 5 ஆக்ட், 7ஆக்ட் என்று பல்வேறு வடிவங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றை சிலர் வெற்றிகரமாக இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். திரைக்கதை எழுதும்போது, ஆக்ட்-1ஐத் தாண்டியபின் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை தான் பலருக்கும் ஏற்படும். நல்ல ஓப்பனிங் சீன், ப்ளாட் பாயிண்ட்-1, மிட் பாயிண்ட், ப்ளாட் பாயிண்ட்-2 வைத்திருப்பார்கள். ஆனால் இடையில் உள்ள பக்கங்களை எதனால் நிரப்புவது?

இப்படி எல்லோரும் குழம்பிக்கொண்டிருந்தபோது தான், Blake Snyder எனும் அடுத்த குரு, தன் தியரியை வெளியிட்டார். நாம் ஏற்கனவே சொன்னபடி Joseph Campell & Syd Feild-ன் கலவையாக அவர் பரிந்துரைத்த வடிவம் இருந்தது. சிட் ஃபீல்டின் வழியில் இறங்கி, எல்லையை அடையமுடியாமல் தட்டுத்தடுமாறிகொண்டிருந்த பலருக்கும், ப்ளேக் ஸ்னிடர் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார். 

அவர் பற்றி அடுத்த வாரம்...
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள்-II (பகுதி-30)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 12, 2014

செங்கோவியின் திரைவிமர்சனம் : லிங்கா (2014)

அதாகப்பட்டது:
எந்திரன் வெளியானது அக்டோபர் 2010. முழுதாக நான்கு வருடங்களுக்கும் மேல் ஆன பிறகு, சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளிவரும் படம் 'லிங்கா'. சூப்பர் ஸ்டார் படத்திற்கு அறிமுகம் தேவையா என்ன?..நேரே களத்தில் இறங்குவோம்.

ஒரு ஊர்ல...:
தாத்தா ராஜா லிங்கேஸ்வரன் கஷ்டப்பட்டுக் கட்டிய அணைக்கு, பேரன் லிங்கா காலத்தில் ஆபத்து வருகிறது. அணையையும் போனஸாக அனுஷ்காவையும் லிங்கா காப்பாற்றுவதே கதை.

உரிச்சா...:
நோய்வாய்ப்பட்டு, இனிமே நடிக்கவே மாட்டாரோன்னு நாம எல்லாம் கவலைப்பட்டதற்குப் பதிலாக, அதே ஸ்பீடுடன், அதே ஸ்டைலுடன் ‘நண்பா..நண்பா’ பாடலில் அறிமுகமாகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினியை பணக்காரன், சைண்டிஸ்ட் என்று பார்ப்பதைவிட, லோக்கல் ஆளாகப் பார்ப்பது தான் நமக்கு அதிகம் பிடிக்கும். இதில் லோக்கல் திருடனாக, சிவாஜிக்கு முந்தைய ரஜினியாக வருகிறார். கூடவே கூட்டணிக்கு சந்தானமும், கருணாகரனும்.

முதல்பாதி செம ஜாலி. சந்தானம் வழக்கம்போல் ஒன்லைன்களில் சிக்ஸர் விளாச, ரஜினியும் வழக்கம்போல் காமெடியில் கலக்குகிறார். மரகத நெக்லஸைத் திருடும் சீனில் ஆக்சனைவிட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். 

சோலையூர் அணையை செக் செய்த எஞ்சினியர் கொல்லப்படுகிறார். அவர் சாகும்போது, கோவிலைத் திறந்தால்தான் ஊரையையும் அணையையும் காப்பாற்ற முடியும் என்று சொல்லிவிட்டுச் சாகிறார். கோவிலை ராஜா அல்லது அவரின் வாரிசான லிங்கா தான் திறக்க வேண்டும். ராஜா அணையையும் சோனாக்‌ஷியையும் கட்டியே ஓட்டாண்டி ஆன கோபத்தில் இருக்கும் லிங்கா ரஜினி, வரமறுக்கிறார். அவரை விடாமல் விரட்டி, ஊருக்கு அழைத்து வரும் வேலை அனுஷ்காவிற்கு!

அனுஷ்கா-ரஜினி ரொமான்ஸிலும் ரஜினி ஸ்டைல் காமெடி தான். தாத்தா ரஜினி பற்றிய கிளைமாக்ஸ் ஆரம்பிக்கும்வரை, படம் செம ஸ்பீடு, செம மசாலா.

ஃப்ளாஷ்பேக்கில் ‘ராஜா லிங்கேஸ்வரன்’ ரஜினி சாதாரணமாக, நமது Joseph Campbell எழுதிய The Hero with a Thousand Faces புத்தகத்தைப் படித்தபடியே அறிமுகம் ஆகிறார். ரஜினி படங்களில் குறியீடு இருக்காது. ஆனால் இதில் அதிசயமாக அந்த ரஜினி கேரக்டர் எப்படி என்று இந்த புத்தகத்தின் மூலமே சொல்லிவிடுகிறார்கள். உடனே அடுத்து வரும் ஃபைட், ரஜினி ரசிகர்களுக்குச் செம விருந்து. ட்ரெய்னிங் மேல் ஓடியபடியே பறந்து, பறந்து பட்டையைக் கிளப்புகிறார். கிராஃபிக்ஸ் அதிகம் என்றாலும் ரசிக்க முடிகிறது.

பிறகு தான் ஆரம்பிக்கிறது பிரச்சினை. ரஜினிக்கு அல்ல, நமக்கு. அவர் சோலையூர் வருவதும், மக்கள் வறட்சியில் வாடுவதும், அவர் அணை கட்ட முயற்சிப்பதுமாக நகரும் காட்சிகளில் சுவாரஸ்யம் அதிகம் இல்லை. வெள்ளைக்கார வில்லன் அணைகட்டுவதைத் தடுக்க முயற்சிப்பதும், அதைமீறி ரஜினி அணைகட்டி ஜெயிப்பதையும் விலாவரியாகக் காட்டுகிறார்கள்.

படத்தின் துவக்கித்திலேயே அணை கட்டிவிட்டார் என்று ஆடியன்ஸுக்குச் சொன்னபிறகு, ஃப்ளாஷ்பேக்கில் அவர் அணைகட்டப் போராடுவது நம்மிடம் எந்த ஒரு எஃபக்ட்டையும் உண்டாக்கவில்லை. அணைகட்டி முடிக்கும்வரை ஒரு இருபது நிமிடம், நாமும் அந்த கஷ்டத்தில் பங்கேற்கிறோம். இதெல்லாம் ரஜினிக்கு சப்பை மேட்டர், வெற்றிக்கொடிகட்டு என்று ஒரே பாட்டில் அணையைக் கட்டி முடித்திருக்கலாம்.!

ஆனால் அணை கட்டிமுடித்ததும் வரும் செண்டிமெண்ட் பகுதி அட்டகாசம். வழக்கமான முத்து எஃபக்ட் என்றாலும், ராஜாவின் தியாகம் நம்மையும் நெகிழ வைத்துவிடுகிறது. ஃப்ளாஷ்பேக் முடியும்போது, மிச்சம் இருப்பது அரைமணி நேரம். வில்லன்கள் வேகமெடுக்க, லிங்கா களத்தில் இறங்க, படமும் விறுவிறுப்பாக முடிகிறது.


பொதுவாகப் படங்களில் ஃப்ளாஷ்பேக் இரண்டுவகை தான். ஒன்று பாட்ஷா டைப் தீப்பொறி பறக்கும் ஃப்ளாஷ்பேக். இரண்டாவது, முத்து டைப் ‘வள்ளல்-தியாகி’ ஃப்ளாஷ்பேக். பாட்ஷா டைப் ஃப்ளாஷ்பேக்கை எவ்வளவு வைத்தாலும் போரடிக்காது, ஆனால் முத்து டைப் ஃப்ளாஷ்பேக்கை முத்து மாதிரியே சுருக்கமாக வைப்பது நல்லது. இதில் நீட்டி முழக்கி, ஒருமணி நேரத்திற்கு இழுத்தது தான் சறுக்கல்.

ஆனாலும் இடைவேளைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பத்து நிமிடங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், செம டைம்பாஸ் மூவி

சூப்பர் ஸ்டார்:

எமனுக்கு ஹாய் சொல்லித் திரும்பியபின் ரஜினி நடித்திருக்கும் படம். எனவே படம் எப்படி என்பதை விட, தலைவர் எப்படி இருக்கிறார் என்பதில் தான் நமக்கு முதலில் ஆர்வம். எந்த மாற்றமும் இல்லாமல், அதே ரகளையான ரஜினியாக களமிறங்கியிருக்கிறார். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன் பாட்ஷாவில் என்ன வைப்ரேசனை உண்டாக்கினாரோ, அதையே 25 ஆண்டுகளுக்குப் பின்பும் உண்டாக்க முடிகிறதென்றால்...அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.

திரையில் அவர் காட்டும் எனர்ஜியைப் பார்க்கும்போது, இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் அவரை அடுத்த தலைமுறையால் நெருங்க முடியாது என்றே தெரிகிறது. தன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து, விருந்து வைப்பதில் வல்லவர் அவர். உலக சினிமா ஆர்வலர்கள் புழுங்கிச் செத்தாலும் கவலையில்லை என்று, ரஜினி மார்க் மசாலாவுடன் இறங்கி அடித்திருக்கிறார்.

ஒருவிதத்தில் ரஜினியும் ரஜினி படங்களும் ஒன்று தான். அங்கே என்ன ஸ்பெஷலாக இருக்குன்னு புரியாது, ஆனாலும் பிடிக்கும். இந்தப் படமும் அதே வகை தான்!

அனுஷ்கா:
இப்போது இருக்கும் நடிகைகளில் அழகும், நடிப்புத்திறமையும் கூடவே கொஞ்சம் முதிர்ச்சியும் உள்ள நடிகை. எனவே ரஜினிக்குப் பொருத்தமான ஜோடியாக செட் ஆகிறார். டிவி நிருபர் என்று சொல்கிறார்கள். ஆனாலும் ஃபுல் டைம் டூட்டி, லிங்காவுடன் தான். 


சோனாக்ஷி சின்ஹா:
 நீண்ட நெற்றியழகி..நடிப்பதற்கு கொஞ்சம் ஸ்கோப் உள்ள கேரக்டர். ஃப்ளாஷ்பேக்கில் கிராமத்துப் பெண்ணாக, ராஜா மேல் ஆசை கொள்ளும் பெண்ணாக வருகிறார் துடுக்குத்தனமான நடிப்பு. தைரியமாக ஜாக்கெட் இல்லாமல் நடித்திருக்கிறார். (ஆனால் சேலை அணிந்திருக்கிறார். - உபரித் தகவல்!!!)

சந்தானம் & கருணாகரன்:
எந்திரனுக்குப் பிறகு இதிலும் சந்தானம். ஆனால் எந்திரனைவிட இதில் காமெடி அதிகம். ’நண்பேண்டா’ என்று சொல்ல வந்து, ரஜினியைப் பார்த்து யோசித்து ‘நண்பேன்’ என்று நிறுத்துவதும், ரஜினி ‘டா’ என்று சொல்லிமுடிப்பதுமாக அறிமுகமே அமர்க்களம். இருவருக்குமான ஃப்ரீக்வென்ஸி அதிலேயே செட் ஆகிவிடுகிறது.

சமீபத்தில் நல்ல காமெடி நடிகராக உருவாகிவரும் கருணாகரன், இதிலும் இருக்கிறார். ரஜினி, சந்தானம் என இரண்டு காமெடி ஜாம்பவான்களுக்குப் பின், இவரும் சிரிக்க வைக்கிறார்.


கே.எஸ்.ரவிகுமார்:
 இந்தப் படத்தின் இரண்டாவது ஹீரோ. (பயப்படாதீங்க, அவர் நடிக்கலை. கிளைமாக்ஸில் தான் வருகிறார்!) இவ்வளவு பிரம்மாண்டப் படத்தை, ஆயிரக்கணக்கான நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் நிரம்பிய ஒரு படத்தை ஆறுமாதத்தில் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. குவாலிட்டியிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல், ரஜினியையும் கஷ்டப்படுத்தாமல், இப்படி ஒரு படத்தைக் கொடுப்பதற்கு அதீத திறமை வேண்டும். அவரது பெரும்பாலான படங்களில்பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் இருக்கும். இதிலும் அப்படியே. 
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
 - அதீத எதிர்பார்ப்பு. ரஜினி படத்திற்கு வில்லனே, நாம் அதிகமாக எதிர்பார்ப்பது தான். ரஜினி படம் பார்க்கப் போகவேண்டுமென்றால், அறிவுஜீவி மூளையையும் அதிக எதிர்பார்ப்பையும் கழற்றி வைத்துவிட்டுத் தான் செல்ல வேண்டும்.

- நீளமான ஃப்ளாஷ்பேக். அதை ஃப்ளாஷ்பேக்காக சொல்வதை விட, அது தான் முக்கியக் கதை போன்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மற்ற காட்சிகளை விட ஃப்ளாஷ்பேக் வேகமாக இருந்திருக்க வேண்டும். 20-30 நிமிடங்கள் மொக்கை போடுகிறார்கள்.

- ஃபைட் சீன்களில் ஓவர் கிராபிக்ஸ் காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸில். எந்திரனிலும் இதே பிரச்சினை தான். அனிமேசன் படமோ என்று டவுட் வந்துவிடுகிறது.

- வலுவான வில்லனோ, வில்லனுடன் ரஜினி ஆக்ரோசமாகச் சவால்விடும் காட்சிகளோ இல்லாதது ஏமாற்றமே. அந்த பிரிட்டிஷ் வில்லன் ரசிக்க வைத்தாலும், டெரராக இல்லை. ஜெகபதி பாபுவும் வேஸ்ட்.

- மக்கள் எதிர்பார்க்காங்க, நீங்க வரணும் என்பது போன்ற கி.மு. காலத்து அரசியல் கிளுகிளுப்பு வசனங்கள். இங்கே யாரும் எதிர்பார்க்கலை சாமிகளா, புரிஞ்சிக்கோங்க!

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்
- பொன்.குமரனின் வலுவான கதை
 - ரஜினி+ரவிகுமார் காம்பினேசனுக்காகவே ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் கொடுக்கும் ஸ்பெஷல் மசாலா டைப் பாடல்கள். ஓ நண்பா, மோனா, சின்னச் சின்ன....என எல்லாமே கலக்கல்.
 - ரத்னவேலுவின் கேமிரா. அதிலும் அந்த அணை காட்சிகள் கொள்ளை அழகு. வயதான ரஜினியை ரசிக்க வைப்பதில் ரத்னவேலுவின் கேமிராவிற்குப் பங்கு அதிகம். (ஆனால் கூட்டத்தைக் காட்டிக்கொண்டே கேமிரா நகரும்போது ப்ளர் அடிப்பது ஏனோ?)
- ரஜினி படங்களுக்கே உரிய அனைத்து மசாலாக்களும் ஆஜர் ஆகியிருப்பது.
- அந்த ட்ரெய்ன் ஃபைட்டும் கிளைமாக்ஸ் ஃபைட்டும்
- ஷூட்டிங் நடந்த நாட்கள் மிகவும் குறைவு. எனவே இருக்கிற ஷாட்டை வைத்து, பல இடங்களில் திருப்பித்திருப்பிப் போட்டு ஒப்பேற்றியிருக்கிறார்கள். ’வாங்கப்பா’ என்று சோனாக்‌ஷி சொல்லும் ஷாட், மீண்டும் பாடலில் வரும் அளவிற்கு ஃபுட்டேஜ் பற்றாக்குறை. சமாளித்த எடிட்டர் சம்ஜித் வாழ்க.
பார்க்கலாமா?
பக்கா ரஜினி மூவி...பார்க்கலாம்.

மேலும் வாசிக்க... "செங்கோவியின் திரைவிமர்சனம் : லிங்கா (2014)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.