அதாகப்பட்டது... :
வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து வழங்கி நம் நம்பிக்கை நாயகனாக விளங்கிவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் புதுமுக இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் ரம்மி. ஆட்டம் எப்படின்னு எப்படின்னு பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
வெளியூர்க்காரன் யாராவது வந்து காதல் செய்தால், ஆளையே வெட்டும் கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு படிக்க போகிறார்கள் இனிகோ பிரபாகரும் விஜய் சேதுபதியும். அந்த ஊரில் இருக்கும் இரு பெண்களை அவர்கள் காதலிக்க ஆரம்பிக்க, அதன்பின் என்ன ஆகிறது என்பதே கதை
உரிச்சா....:
எப்படியும் இந்த படத்தை நீங்க தியேட்டர்ல பார்க்கப் போறதில்லை. அதனால கதையை/படத்தை டீடெய்லாவே அலசுவோம்.
மார்க் கம்மியாக எடுத்ததால் வேறு வழியேயின்றி, ஒரு கிராமத்தில் இருக்கும் காலேஜிற்கு இனிகோ பிரபாகர் படிக்கப்போவதுடன் துவங்குகிறது படம். எந்த படத்திலும் இல்லாத அதிசயமாக ஹீரோயினும் அதே காலேஜிற்கே, அட அதே கிளாஸிற்கே படிக்க வருகிறார். அதே கிளாஸில் சேரும் சூரியும் இன்னொருத்தரும் இனிகோவிற்கு நண்பர் ஆகிறார்கள். அங்கு சேர்ந்த கொஞ்சநாளிலேயே, உள்ளூர் பெண்ணை காதலித்தால் வெட்டுவதை கண்ணால் பார்க்கிறார்கள். வெட்டு, குத்து மனிதர்கள் நிறைந்த திகில் கிராமமாக செம பில்டப்புடன் படம் ஆரம்பிக்கிறது. காலேஜில் இவர்கள் சேர்ந்து இனிகோவிற்கு ஹீரோயின்மேல் காதல் வர, அந்த இன்னொரு ஃப்ரெண்ட்டும் இன்னொரு பெண்ணை லவ் பண்ண ஆரம்பிக்க, சூரி பதறிப்போய்த் திரிய என ஆரம்ப அரைமணி நேரம் அமர்க்களம் தான்.
எந்த நிமிடம் காதல் ஜோடிகள் பிடிபடுவார்களோ என்று நாம் பதற ஆரம்பிக்கிறோம். ஹீரோயின் ஊர்த்தலைவரின் தம்பி மகள் வேறு என்பதால் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். அப்பாடா! அப்புறம் காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். என்ன இது? அப்புறம் காதல் ஜோடிகள் மாட்டுவது போல் சீன் வருகிறது. ஆனால் மாட்டவில்லை, தப்பிக்கிறார்கள். என்னங்கடா இது? இப்படியே ஏதோ நடக்கப்போகிறது என்று நாம் எதிர்பார்த்து உட்கார, திரும்பத் திரும்ப இந்த பூச்சாண்டியிலேயே அடுத்து ஒரு மணி நேரம் ஓடுகிறது.
நான் பக்கத்து சீட்டுக்காரரை திரும்பிப்பார்க்க, யாரோ அந்த மனுசனும் ஜெர்க்காகி சிக்கிட்டமோன்னு என்னைப் பார்க்க, ச்சே,,ச்சே..அப்படில்லாம் இருக்காதுன்னு தலையை உலுப்பிட்டு, ஸ்க்ரீனைப் பார்க்க ஆரம்பிச்சோம். இப்போ ஹீரோ ஊருக்கு போய்ட்டு வர்றாரு. வந்தா ஃப்ரெண்டைக் காணோம். ஒரு லெட்டர். மச்சான், வேற வழியில்லை. பொண்ணைக்கூட்டிட்டு ஓடிப்போறோம். நீயும் தப்பிச்சிடுன்னு லெட்டர். அந்த லெட்டரை எங்க வச்சிருக்காரு? ஹீரோயின் ஊருக்கு மத்தில வாடகைக்கு எடுத்து தப்பிச்ச ரூமுக்குள்ள. அட ஓடிப்போற மூதேவி, வழில ஹீரோ ஊருக்கு போயோ, இல்லே ஏதாவது வழியிலோ ஹீரோ இனிகோக்கு சொல்லக்கூடாதா? சரி, அது போகட்டும். அப்போ வைக்கிறாங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்டு. அந்த இன்னொரு ப்ரெண்டு லவ் பண்ணது, இழுத்துட்டுப் போனது ஊர் தலைவரின் பெண்ணை-ன்னு!
என்னாங்கடா இது..ஊருக்குள்ள தங்கி இருக்கானுக..தலிவரு பெரிய அப்பாடக்கர்ன்னு தெரியுது..அவரு பொண்ணு தெரியாதா? அது பரவாயில்லை, லவ் பண்றவன்கிட்ட தன் அப்பன் யார்னு கூட சொல்லாதா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுன்னு சொல்வாங்களே அதெல்லாம் கிடையாதா? சரி, எப்படியோ தப்பிச்ச ஹீரோ இனிகோ, ஃப்ரெண்ட்டைத் தேடுதாரு. அதுக்குள்ள தலைவர் கோஷ்டி ஃப்ரெண்ட்டை போட்டுத்தள்ளிட்டு, பொண்ணை ஊருக்கு கொண்டுவந்திடுது.
ஒரு ஃப்ரெண்ட்டு ஜோடி கதை முடிஞ்சதா? இப்போ ஹீரோ-ஹீரோயின் ஜோடிக்கு என்னாகுமோன்னு பதறாம ‘ம்..அப்புறம்’ன்னு கேட்கிறோம். அந்த தலைவரு, குடும்ப மானத்தை பஸ்ல ஏத்துன பொண்ணை கொல்ல போறாரு. அந்த பொண்ணு தலைவரை கொன்னுட்டு, ஹீரோ-ஹீரோயினை சேர்த்துவச்சுட்டு, கையில அருவாளோட நடக்க ஆரம்பிக்குது. ’ஏலேய்..அது நம்மளைப் பார்த்துத்தான் வருதுலே’ன்னு நாம அலறும்போது, படம் முடிஞ்சிடுது.
ம்....எப்படி அசந்துட்டீங்களா?.தண்ணியைக் குடிங்க..தண்ணியைக் குடிங்க. இப்போ என்ன பிரச்சினைன்னு பார்ப்போம். படத்தோட மிகப்பெரிய பலமே கிளைமாக்ஸ் தான். ”காதலனை கொன்ன அப்பனையே வெட்டிட்டு, ஊரில் காதல் பூ பூக்க வைக்கிற (நன்றி: இரண்டாம் உலகம்) பத்ரகாளி நாயகி “ அப்படிங்கிற ஒன் லைனை வச்சுத்தான் டைரக்டர், இந்த சான்ஸையே வாங்கியிருப்பாருன்னு நம்புறேன். உண்மையில் நல்ல நாட் தான் அது. ஆனா அவங்க அப்பன் - மகள் அப்படிங்கிறதையே சஸ்பென்ஸா வைக்கிறதா முடிவுபண்ணது தான், ஆப்பு ஆகிடுச்சு. முதல்ல தெளிவாகவே அந்த அப்பனுக்கும் பொண்ணுக்கும் இடையில என்ன மாதிரி உறவு, ரொம்ப பாசமான அப்பனா இருந்தும் ஜாதி/அந்தஸ்து வெறியினால இப்படி ஆகிட்டானா? பாசமான அப்பாவாவே இருந்தாலும், தன் புனிதமான காதலை ஏத்துக்காம, கண்ணு முன்னாலேயே காதலனை கொன்னதால பத்ரகாளியா ஆகிட்டாளா?-ங்கிறதை டீடெய்லா சொல்லி இருந்தா, ஒரு டச்சிங் வந்திருக்கும். அப்பாவும் பொண்ணும் பேசிக்கிற சீனே இல்லைங்கிறது தான் பெரிய மைனஸ். அதனால கிளைமாக்ஸ் ஐடியா சூப்பரா இருந்தும் வேஸ்ட் ஆகிடுச்சு.
படத்தை த்ரில்லர் மாதிரி கொண்டு போனது ஏன்னும் புரியலை. கிணத்துல வாளி விழுந்தாக்கூட டெரர் மியூசிக். வில்லேஜ் த்ரில்லரா கொடுக்கணும்ன்னு நினைச்சிருக்காங்க. முதல்பாதியில் திகிலாவே ஃபீல் பண்றோம். கேமிரா ஆங்கிள்ல ஆரம்பிச்சு, ஒவ்வொரு சீன்லயும் வில்லேஜ் பீட்சாங்கிற அளவுக்கு டெரரா காட்டுறாங்க. ஆனா லாஜிக்கே இல்லாமல் கதை அந்தரத்தில் ஆடும்போது, டெரர் எஃபக்ட் எடுபடாம போயிடுது.
அதெல்லாம் சரி..விஜய் சேதுபதியை எங்கய்யான்னு கேட்கிறீங்களா? மேலே ‘இன்னொரு ஃப்ரெண்ட்டு’ன்னு ஒரு துணை நடிகரைப் பத்தி படிச்சீங்க இல்லியா? அவர் தான் விஜய் சேதுபதி...ஆ.......-வா? ம்..அதே ஃபீலிங் தான் இங்கயும். ஓரமா வர்றாரு, ஓரமா லவ் பண்றாரு, பொசுக்குன்னு செத்துப்போறாரு. ஆமா பாஸ், இது இனிகோ பிரபாகர் படம் பாஸ்!
இனிகோ பிரபாகர்:
சுந்தர பாண்டியன் மாதிரி இல்லாம, இதுல முழு ஹீரோ. நல்ல சான்ஸ். நல்லாவே யூஸ் பண்ணி இருக்காரு. ஆனா விஜய் சேதுபதியை எதிர்பார்த்து போனதால, ரொம்ப இவரை ரசிக்க முடியலை. காதல், காமெடி, ஆக்சன்னு எல்லா ஏரியாலயும் புகுந்து அடிக்கிறாரு. செகண்ட் ஹீரோவா ஒரு ரவுண்டு வர சான்ஸ் இருக்கு!
விஜய் சேதுபதி:
எதுக்கு இதுல நடிக்க ஒத்துக்கிட்டாருன்னு கேட்கத் தோணுது. நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. ஹீரோக்கு அல்லக்கை, ஹீரோயின் வாய்யா ஓடிப்போவோம்ன்னா, ஓகேன்னு ஓடற மொன்னை கேரக்டர். நட்புக்காக இதைப் பண்ணினாருன்னா, பெரிய விஷயம் தான். ஆனாலும் ஆடியன்ஸை ஏமாத்தக்கூடாதுல்ல அப்பு?
அவரோட ஊர்ல ஏதோ மர்மக்கதை இருக்கிற மாதிரியே பில்டப்பு, அம்மா செத்துப்போச்சுன்னு ஊருக்கு போய்ட்டு வர்றாரு. ஆனாலும் அப்படி இல்லேங்கிற மாதிரியே பேக்ரவுண்ட் மியூசிக்ல டெரரை கூட்டுறாங்க. இனிகோ தான் அப்புறம் படிக்க வைக்கிறாரு. சரி, அவருக்கு ஏதோ பண்ணப்போறாருன்னு பார்த்தா அதுவும் இல்லை. ஓடிப்போய் சாகறதுக்கு விஜய் சேதுபதி எதுக்குய்யா?
ஹீரோயின்ஸ்:
முடியலை..காயத்ரி பொண்ணை பார்க்கவே பாவமா இருக்கு. அதை டூயட்லாம் ஆட வச்சு, குளோஷ் அப் வச்சு நம்மளை மிரட்டின்னு ஏக அட்டகாசம்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியா ஐஸ்வர்யா நடிச்சிருக்கு. படத்தையே தாங்கி நிற்கிற கேரக்டர்ன்னா எப்படி இருக்கணும்? ஏற்கனவே திரைக்கதையில அதுக்கு முக்கியத்துவமே இல்லாம கோட்டை விட்டாச்சு. ஆளாவது கெத்தா இருக்க வேண்டாமா? கடைசி சீன்ல அப்பனையே வெட்டிட்டு, கையில அருவாளோட பத்ரகாளியா நிக்கணும்ன்னா எப்படி இருக்கணும்? இங்க கண்ணு மட்டும் தான் அந்த கேரக்டருக்கு பொருந்துது. மத்தபடி அப்பங்காரன் இது மேல விழுந்திருந்தாலே செத்திருக்கும்.
சொந்த பந்தங்கள்:
சூரிக்கு ஓரளவு நல்ல கேரக்டர். ரொம்ப மொக்கை போடாம, காலேஜ் சீன்கள்ல (பத்து நிமிசம்) நல்லாவே காமெடி பண்றார். அப்புறம் ஒரு நல்ல குணசித்ர நடிகராவும் ஆகிடறார். ஊர்ப் பெரியவரா கும்கில ஊர்த்தலைவரா வந்த அதே பெரியவர். அவரைவிட அவரோட அடியாளா வர்றவர் நல்லா நடிச்சிருக்கார். வில்லத்தனமா கண்கள். ஆளு ஸ்க்ரீன்ல வந்தாலே, என்னாகப்போகுதோன்னு (ஆரம்பத்துல) பயப்படறோம்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- காதல் + புரட்சி படத்தை த்ரில்லரா கொடுக்க நினைச்சது
- முக்கிய கேரக்டர்களோட கேரக்டர் ஸ்கெட்ச்சை ஆடியன்ஸுக்கு சொல்லாம மறைச்சு, சஸ்பென்ஸ் வைக்கிறதா நினைச்சு ஆப்பு வச்சிக்கிட்டது
- விஜய் சேதுபதியை வீணடிச்சதோட நில்லாம, இது விஜய் சேதுபதி படம்ன்னு எங்களை ஏமாத்துனது (அவருக்கு டூயட் இருந்தாலும் கேரக்டர் எடுபடலை)
- கிராமத்துல ஊர்ப்பெரியவரைத் தவிர வேற யாருமே காதலுக்கு எதிரியா இல்லைங்கிற மாதிரி காட்டுனது. அதுல அந்த கேரக்டரும் காலி
- முத்தழகு மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டிய ஐஸ்வர்யா கேரக்டரை சஸ்பென்ஸுக்காக சப்பை ஆக்கியது.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- இமானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அட்டகாசம். ஒரு த்ரில்லர் படத்துக்கு தர வேண்டிய இசையை பெர்ஃபெக்ட்டா அண்ணன் கொடுத்திருக்காரு. ஆனா படம் தான் த்ரில்லரா இல்லாமப் பூடுச்சு!
- ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் சஸ்பென்ஸை கூட்டுறதுல கேமிரா கோணங்களும் எடிட்டிங்கும் நல்லா கை கொடுத்திருக்கு
- ஆரம்ப காட்சிகள்
- கிளைமாக்ஸில் மட்டுமே தெரியும் உக்கிரம்.
பார்க்கலாமா? :
என்னத்தைச் சொல்ல!
40 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.