இணையத்தில் கடந்த சில நாட்களாகவே ’God Is Dead’ படம் பற்றி பலர் எழுதிக்கொண்டு இருந்தார்கள். ஈழத்தமிழரின் வலியைப் பற்றிப் பேசுகிற படம் என்று சிலாகிக்கப்பட்டது. ஈழத்தமிழர் மேல் தனிப்பட்ட அன்புள்ளவன் என்றாலும், இதுவரை சேனல்4-ன் ஆரம்பகட்ட வீடியோக்கள் முதல் இசைப்ரியா வீடியோ வரை எதையுமே நான் பார்த்ததில்லை. காரணம், அதைப் பார்க்கும் அளவிற்கு எனக்கு மனவலிமை இல்லை என்பது தான். எனவே God Is Dead படத்தைப் பார்க்கவும், பயந்துகொண்டு ஒரு வாரமாகத் தவிர்த்து வந்தேன்.
அந்த குறும்படம் மொத்தமே ஒரு நிமிடம் தான் ஓடக்கூடியது என்ற செய்தியை பின்னர் தான் அறிந்தேன். அது கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. எனவே பாஸ் பட்டனில் கர்சரை வைத்தபடி, பார்க்க ஆரம்பித்தேன். பரிதாபத்தை வலிய வரவழைக்கும் கோர காட்சிகளோ, அழுகை காட்சிகளோ ஏதும் இல்லை. ஆனாலும் சொல்ல வந்ததை ஆணித்தரமாக ஒரு நிமிடத்தில் சொல்லியது படம். உண்மையில் அதைப் பார்த்துவிட்டு அடுத்த 5 நிமிடங்களுக்கு ஒன்றும் யோசிக்காமல் உட்கார்ந்திருந்தேன். எந்தவித வார்த்தைகளாலும், படம் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்லிவிட முடியாது என்பது புரிந்தது. God Is Dead என்ற நீட்சேவின் வார்த்தைகளைத் தவிர வேறு ஒன்றையும் சொல்ல முடியவில்லை.
தனிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் என்று ஒருவன் இருக்கின்றானா என்று வேதனைப்படும் கையறுநிலையை நாம் எல்லாருமே கடந்திருப்போம். பொதுவாழ்க்கையில் இயற்கை இடர்களின்போதும், ஈழப்போரின் முடிவிலும் அதை அனுபவித்திருக்கிறோம். இந்த படம், போருக்குப் பின் ராணுவத்தின் பிடியில் இருப்போரின் நிலையைப் பேசுகிறது. ஒரு நிமிடத்தில் மாபெரும் வரலாற்று சோகத்தை பார்ப்போரின் மனதில் பதிய வைப்பது தான் இந்த படத்தின் வெற்றியே.
இந்தப் படம் பிரான்சில் நடைபெறும் குறும்படப் போட்டிக்காக இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மொபைல் மூலம் எடுக்கப்பட்டதாக, ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடியதாக இருக்கவேண்டும் என்பது போட்டியின் கண்டிசன். எனவே வசனமே இல்லாமல் எடுப்பது என்று முடிவெடுத்ததிலேயே இயக்குநர் சதா பிரணவன், பாதி ஜெயித்து விடுகிறார். இந்த படத்தை மட்டுமல்லாது, போட்டியில் இருக்கும் மற்ற சில படங்களையும் பார்த்தேன். (நமக்கு புரியாவிட்டாலும்) வசனங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் கதை சொல்ல அவர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதை விட, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படமே, அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மொபைலில் எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால்தான் தெரிகின்ற அளவிற்கு, தரத்தில் மிரட்டி இருக்கிறார்கள். மிகத்துல்லியமான ஒளிப்பதிவு, நேர்த்தியான இயக்கம், நடிகர்களின் டைமிங் மூவ்மெண்ட்ஸ், நடைபிணங்களாய் வாழும் சோகத்தைக் காட்டும் முகபாவம் என பாராட்ட பல விஷயங்களைத் தாங்கி நிற்கிறது இந்தப்படம். சிறந்த 50 படங்களில் ஒன்றாக God Is Dead தற்பொழுது தேர்வாகியுள்ளது. அந்த ஐம்பது படங்களில் சிறந்த படத்தினை தேர்ந்தெடுக்க http://fr.mobilefilmfestival.com/video/god-is-dead740 என்ற இந்த தளத்தில் ஓட்டெடுப்பு நடக்கிறது. முதல் படமாக தேர்வாகும் தகுதி, இந்த படத்திற்கு இருக்கிறதென்றே நம்புகிறேன்.
இந்த பதிவைப் படிக்கும் உங்களிடம் மேலும் இரண்டு நிமிடங்களைக் கோருகின்றேன். முதல் நிமிடத்தில் படத்தினை இங்கே பாருங்கள். பிடித்திருந்தால், இது தரமான படம் தான் என்று நீங்கள் நம்பினால், அடுத்த ஒரு நிமிடத்தில் அதற்கு ஓட்டு போடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருவர் 10 ஓட்டுக்கள்வரை தினமும் போடலாம். ஓட்டுப் போடும்முறை கீழே தரப்பட்டுள்ளது. ஒரு தரமான படைப்பிற்கு நீங்கள் தரப்போகும் ஆதரவிற்கு, எமது நன்றிகள்!
Facebook Account மூலம் வாக்களிக்க! |
நல்ல முயற்சி !
ReplyDeleteஉண்மை அண்ணா. இன்றும் பத்து வாக்குகள் அளித்தேன். என் பங்கு.நன்றிகளும் வாழ்த்துக்களும் அண்ணா.
ReplyDelete10 தடவை வாக்களித்து விட்டேன்... (12685 முதல் 12694 வரை) தொடரும்...
ReplyDeleteகருத்திட வரும் நண்பர்களுக்கு ஓட்டு எவ்வாறு போட வேண்டும் என்பதின் விளக்கமான பகிர்வை, இனிய நண்பரின் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்...
http://www.tamilaathi.com/2014/01/blog-post.html
நல்ல முயற்சி. நானும் ஓட்டு போட்டுடுறேன்
ReplyDelete