சமீபத்தில் எழுத்துப்பிழை என்ற ஒரு குறும்படத்தை நல்ல படம் என மாத்தியோசி மணி பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். எல்லா குறும்படங்களையுமே நல்ல படம் என சிலாகிக்கும் பெரிய மனது கொண்டவர் அவர். எனவே சந்தேகத்துடன் கமெண்ட்ஸை பார்த்தபோது, உண்மையிலேயே நல்ல படம் தானோ என்று தோன்றியது. எனவே துணிந்து படத்தைப் பார்த்தால், அட்டகாசமான படம்.
நல்ல வாழ்க்கைத்துணை அமையாத, ஒரு பாவிக்கு வாக்கப்பட்ட பெண்.அவளை விபச்சாரத்தொழிலில் ஈடுபடுத்திப் பிழைக்கிறான் அந்த இழிபிறவி. அவன் எப்படி தன் தவறை உணர்ந்து, திருந்துகிறான் என்பதே கதை. குறும்படத்தின் கதையிலேயே ஒரு கச்சிதமான சிறுகதையின் அழகு இருக்கிறது.
படத்தின் ஓப்பனிங் ஷாட்டிலேயே, இது கத்துக்குட்டித்தனமான குறும்படம் அல்ல என்று நிரூபித்துவிடுகிறார்கள். இருட்டில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும் ஒரு பால் மணம் மாறாச் சிறுமி. அவுட் ஆஃப்போகஸில், பேக்ரவுண்ட்டில் சிறுமியின் ஒருபுறம் ஒரு பெண்ணும் மறுபுறம் ஒரு ஆணும் உடைகளைச் சரிசெய்கிறார்கள். அந்த பெண்மணி, சிறுமியை நெருங்கி வாவென்று தட்டியபடி நடக்க ஆரம்பிக்கிறாள்.
அது அந்தச் சிறுமியின் அம்மா என்பதும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறாள் என்பதும் நமக்கு விளக்கப்பட்டு விடுகிறது. வீட்டிற்கு வரும் அந்த பெண்ணிடம் இருந்து, சம்பாதித்த காசு அவள் கணவனால் பிடுங்கபடுகிறது. இந்த இரு காட்சிகளிலேயே கதையின் சூழ்நிலையும் கதை மாந்தர்களும் அழகான திரை மொழியுடன் சொல்லப்பட்டுவிடுகிறது.
குறும்படத்தின் இன்னொரு சிறப்பு, மிகக்குறைந்த வசனங்களே உபயோகப்படுத்தப்பட்டிருப்பது. 'காட்சிகளால்சொல்ல முடியாது என்ற சூழ்நிலையிலேயே வசனத்தை உபயோகிப்பேன்' என்று பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அதை மிகச்சரியாக பின்பற்றியிருக்கும் குறும்படம் இது. மேலும் என்னைப்போன்ற ஈழத்தமிழ் பரிச்சயம் இல்லாதோரும், படத்தைப் புரிந்துகொள்ள அது உதவுகிறது.
படத்தில் பாராட்டப்பட வேண்டியது மனைவியாக நடித்திருக்கும் அந்த நடிகை தான். குறும்படத்திற்கு நடிகை கிடைப்பதே பெரும்பாடு, அதிலும் இத்தகைய கேரக்டர் என்றால் ரொம்பவே கஷ்டம். இதற்கு ஒத்துக்கொன்டதற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இயல்பாகவே சோகம் நிறைந்த கண்கள், இந்த கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. 'என்னத்த வாழ்ந்து..' எனும் விரக்தியான தொனியைக் காட்டும் குரலும், முகமும் அருமை.
குடிகாரராக வரும் அவரும் உண்மையிலேயே அப்படித்தானோ என எண்ண வைக்கும் தோற்றம். நீண்ட தலைமுடியும், சட்டை போடாத தோற்றமும் அந்த கேரக்டருக்கு கனகச்சிதம். படத்தின் மையப் பாத்திரமாக வரும் குழந்தை அழகோ அழகு. அன்று மலர்ந்த மலர்போல இருக்கும் அந்த குழந்தை, அம்மாவின் சூழ்நிலை அறிந்து 'எங்காவது போவோமா?' என்று கேட்கும்போதும், இறுதிக்காட்சியிலும் கலங்க வைத்துவிடுகிறாள்.
படத்தின் குறையென்று பார்த்தால், வசனத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை சாரயக்கடை சீனில் கட்டாயமாக கடைபிடித்திருப்பது. ஒரு வார்த்தை டயலாக்கூட அந்த இடத்தில் போதுமானது. ஆனால் வசனத்தைத் தவிர்க்கிறேன் பேர்வழி என சாடையிலேயே பேசவிட்டிருப்பது நாடகத்தனமாக இருக்கிறது. பாட்டில் வாங்கிக்கொடுக்கும் நபரிடம் தெரிவது ஓவர் ஆக்ட்டிங்.
அதே போன்றே ஓப்பனிங் ஷாட்டில் சிறுமியின் பின்னாலிருந்து எடுத்திருக்கும் ஷாட் தேவையற்றது. 180 டிகிரியைத் தாண்டி படமெடுக்க, வலுவான காரணம் வேண்டும். சிறுமிக்கு முன்னால் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் ஷாட்களே, அவள் விளையாடுவதையும் பின்னால் நடப்பதையும் விளக்கப்போதுமானது.
எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் தான் இந்த குறும்படத்தின் பெரும்பலம். ஒரு மனிதனின் மனதை சரியான ஆட்களால் சரியான நேரத்தில் சொல்லப்படும் ஒரே ஒரு வசனமோ, வார்த்தையோகூட மாற்றிவிடும். இங்கே கிளைமாஸில் நடப்பது அது தான்.
படத்தின் ஓப்பனிங் ஷாட், மகளின் கண்முன்னே ரூமுக்குள் போகும் அந்த நீண்ட ஷாட், படத்தின் கலர் டோன் என சிவராஜின் ஒளிப்பதிவு அபாரம். சுகன்ஜனின் இசை, சுதர்சன் கனகராஜாவின் எடிட்டிங் & இயக்கம் என எல்லாவிதத்திலும் சிறப்பான படைப்பு. எந்த இடத்திலும் கத்துக்குட்டித்தனமோ, அமெச்சூர்த்தனமோ வெளிப்படாத பெர்பெக்சன்.
ஆரம்பக் காட்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், விபச்சாரம் வீட்டிலேயே நடக்கிறது. ஆனாலும் காட்சியல் அழகுக்காகவும், சிறுமி கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ஆரம்பக்காட்சியை ஒதுக்குப்புறமாய் வைத்த திரைக்கதையாசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாராட்டப்படவேண்டியவர்கள்.
குழந்தைகள் நாம்சொல்வதைக் கேட்டுக் கற்றுக்கொள்வதில்லை, ஆனால் செய்வதைக் கவனித்தே கற்றுக்கொள்கிறார்கள். இதை முகத்தில் அறைந்து சொன்னது தான் இந்த குறும்படத்தின் வெற்றிக்குக் காரணம். படக்குழுவிற்கு வாழ்த்துகள்.
நன்று,நன்றி விமர்சனத்துக்கு!பார்ப்போம்.............
ReplyDeleteபடத்தை பார்க்கத்தூண்டிய விமர்சனம்! இணைய இணைப்பு ஸ்லோவாக உள்ளதால் பிறகு பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநல்ல இருக்கு ..............என்னுடைய பதிவில்.....2008-2013 வருடத்தில் அதிக லாபத்தை /நஷ்டத்தை ஏற்படுத்திய பங்குகள்- See more at: http://pangusanthaielearn.blogspot.in/2013/12/2008-2013.html
ReplyDeleteகுறும்படத்தினை பார்க்கத்தூண்டும் விமர்சனம் விரைவில் பார்ப்போம்.
ReplyDeleteகுறும்படம் ஸ்ட்ரீமிங் ஆகவில்லை.. பார்த்துவிடுகிறேன்..
ReplyDelete