Monday, January 6, 2014

மதயானைக்கூட்டமும் தேவர் மகனும்

டிஸ்கி: இன்றைக்கு மொத்தமாக மூன்று பதிவுகள். இந்த பதிவு தேவர் மகன் பற்றிய முதல் இரண்டு பதிவுகளின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம்..முந்தைய பதிவுகளுக்கு:
 
 

மீபகால படங்களில் வித்தியாசமான முயற்சி என்று விளம்பரப்படுத்தப்பட்ட மதயானைக்கூட்டத்தை தற்போது தான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் பார்த்து முடித்ததும் சட்டென்று மனதில் ஒரு வெறுமை படர்ந்துவிட்டது. ‘ஓடும்..ஓடாது..ஆவரேஜ் படம்’ என்று ஒற்றை வார்த்தையில் வரையறுத்துவிட முடியாத படைப்பு. பாலு மகேந்திராவின் சிஷ்யப்பிள்ளை, குருவின் பெயரை டெக்னிக்கலாக காப்பாற்றி இருக்கிறார். ஆடுகளத்திற்கு மாதிரியே திரைக்கதை தான் இந்த படத்தின் பெரும் பலம்.
இழவு வீட்டில் ஆரம்பிக்கும் படத்தில், ஆட்டக்காரர்கள் மூலமாக படத்தின் முற்கதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தப்படுகிறது. ஜெயக்கொடித் தேவரில் ஆரம்பித்து அவரின் மனைவிமார்களைச் சொல்லி, பிள்ளைகளோடு சொந்த பந்தங்களையும் அறிமுகம் செய்யும் பாங்கில் அசந்து தான் போகிறோம். விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாற்கு ஒரு நல்வரவு என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் இரண்டாவது தாரத்தின் நிலை பற்றி இவ்வளவு தெளிவாக எந்தப்படமும் பேசியதில்லை என்றே நினைக்கிறேன். ஆம்பிடையான் இருக்கும்வரை மரியாதையாக நடத்தப்படுவதும், அவர் காலத்திற்குப்பின் பலரின் நிஜமுகங்களை காணும் அவலமும் இரண்டாவது குடும்பத்தின் சாபக்கேடு. அதைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது படம். கூடவே தேவர் சாதியின் சடங்குகள், சம்பிரதாயங்கள், செய்முறையில் நடக்கும் சண்டைகள் என ஒரு தரமான ஆவணப்பட ரேஞ்சில் பதிவு செய்கிறார் இயக்குநர். அருமையான ஒளிப்பதிவு, கிராம மணம் கமழும் இசை, இயல்பான வசனங்கள் என டெக்னிக்கலாக இந்தப் படம், உயர்ந்த தளத்தில் இயங்குகிறது.

அந்த டெக்னிக்கல் ஸ்டேண்டர்டு தான் இந்தப் படத்தினை நல்ல படம் என்று பலரையும் கொண்டாட வைக்கிறது. ஆனால் கருத்தியல்ரீதியாக, மிக ஆபத்தான படம் இந்த மதயானைக்கூட்டம். நல்ல சினிமாவாக வந்திருக்க வேண்டிய படத்தினை கிளைமாக்ஸ் காட்சிகளும், சாதீயத்தை முன்வைக்கும் பிற்போக்குத்தனமும் கெடுத்துவிடுகின்றன. படத்தின் முடிவில் மிஞ்சுவது வெறுப்பும், சாதிப்பெருமையும், பழி வாங்குதலை பாடமெடுக்கும் பிற்போக்குத்தனமுமே.
தேவர்சாதி மட்டுமல்லாது, சென்றதலைமுறையைச் சேர்ந்த எல்லா சாதிப்பெண்களுக்குமே முடிவெடுக்கும் உரிமை என்பது கிடையாது. ஒரு எல்லைக்குள் நின்றே தான் அவர்களால் செயல்பட முடியும். இங்கே சிவனம்மா கேரக்டர், அந்தவகையில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் மனிதத்தன்மையை நிலைநாட்டும் வாய்ப்புள்ள ஒரே கேரக்டர், அந்த சிவனம்மா தான். ஆனால் படத்தின் முடிவு, அந்த நம்பிக்கையை சின்னாபின்னமாக்கி விடுகிறது. துரோகத்தின் கதை நமக்குப் புதிதல்ல. சுப்பிரமணியபுரம் எனும் உலக சினிமா அதை விலாவரியாகப் பேசியிருக்கிறது. அந்த துரோகத்தால் நாயகன் வீழ்ந்ததில், ஒரு செய்தி இருந்தது. வன்முறை என்பது திரும்பி வரமுடியாத ஒற்றையடிப்பாதை என்று முகத்தில் அறைந்து சொன்னது.

இங்கே மதயானைக்கூட்ட கதாநாயகன், அப்படி வழிதவறிய மனிதன் அல்ல. ஒரு சாமானியன். அந்த அப்பாவி மனிதனை இயக்குநர் சாகடிப்பதன்மூலம் சொல்ல வரும் செய்தி தான் என்ன? என்ன  ஆனாலும் அந்த சாதியினர் பழிக்குப்பழி வாங்கியே தீருவார்கள் என்கிறாரா? அல்லது அண்ணனின் பாசத்திற்கு முன்னே நியாய தர்மத்திற்கு இடமில்லை என்கிறாரா? ஒட்டுமொத்தமாக படம் சொல்ல வருவது இதைத் தானா? இதற்கா இந்த தரமான டெக்னிக்கல் உழைப்பு? தங்கத்திலே ஊசி செய்து, கண்ணிலே குத்துவதை எப்படிப் பாராட்டுவது?

தேவர் சாதியை எப்போதும் வீச்சருவா தூக்கும் சண்டியராகவே தமிழ் சினிமா சொல்கிறது. அமைதியான ஆள் என்று காட்ட பிராமண சாதியைக் குறிப்பிடுவதும், சண்டியர் என்று நிறுவ தேவர்சாதியைக் குறிப்பிடுவதும், கதை சொல்லலை எளிதாக்கும் காரணியாக இருக்கலாம். தமிழ் இலக்கிய உலகில் ஆரம்பித்து, இயக்குநர்-நடிகர்-கவிஞர் என எல்லா கலைகளிலும் தேவர்சாதியினர் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் என எல்லாமட்டத்தில் கல்வியில் தேர்ந்து நவீன உலகில் புகுந்துவிட்டார்கள். ஆனாலும் ஒருகூட்டம், இன்னும் பின் தங்கியே இருக்கிறது. அவர்களின் கதையைச் சொல்ல முயன்றால், அவர்களை மேம்படுத்தும் வழியுடன் கதையைச் சொல்வது தான் ஒரு நல்ல படைப்பாளிக்கு அடையாளமாக இருக்கும். ‘சபாஷ்..என்னமா வெட்டுறான்யா’ என பாராட்டுப்பத்திரம் வாசிப்பது போன்று எடுப்பது, கருத்தியல்ரீதியில் மிகமிக ஆபத்தானது.

தேவர் மகனில் கமலஹாசன், அவர்களை மிகுந்த கருணையுடன் அணுகி இருப்பார். அய்யோ..இன்னும் இப்படியே இருக்காங்களே எனும் கனிவு அங்கே இருக்கும். ‘எப்படி இருக்கோம் பார்த்தியா’ எனும் பெருமை பீத்தல் அங்கே இருக்காது. காட்டுமிராண்டிக் கூட்டம் என்று நேரடியாக வார்த்தையிலேயே திட்டி இருப்பார். அது ஒரு ஆசிரியன் மாணவனைத் திட்டிச் சரி செய்வது போல இருக்கும். அப்படி இருந்துமே, அந்தப் படம் தேவர்சாதியால் எப்படி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, இப்படி நேரடியாகவே வன்மத்தையும் வெறுப்பையும் மட்டுமே வாழ்க்கை முறையாகக் காட்டுவதன் ஆபத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை ‘காட்டுமிராண்டிக்கூட்டம்..இப்படித்தான் வெட்டிக்கிட்டுச் சாவாங்க’ என்று ஆவணப்படுத்துவது மட்டுமே இயக்குநரின் நோக்கம் என்றால், அதைச் செவ்வனே செய்திருக்கிறார் என்று பாராட்டுவோம். ஆனால் அப்படிப்பட்ட படம், டாகுமெண்டரி தானேயொழிய, நல்ல சினிமா ஆகாது.

எழுத்தாளர் பாலகுமாரனின்  முதல் சிறுகதை 'வழி மயக்கம்’ வெளியான நேரம். அது ஒரு பெண்ணைப் பற்றி, ஆணின் நோக்கில் சொல்லப்பட்ட கதை. அது பத்திரிக்கையில் வெளியான சந்தோசத்தில், மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பார்க்கப் போனார். தன் கதை பற்றி அவரது அபிப்ராயத்தைக் கேட்டார். ஜெயகாந்தன் அவரை கிழிகிழியென்று கிழித்துவிட்டார். ’அந்த பெண்ணின் தாயாக நீ இருந்தால் இப்படி எழுதுவாயா? அன்பு என்பதை அடிப்படையாகக் கொள்ளாத, அறமில்லாத எதுவும் இலக்கியமாகாது’ என்று சொல்லி பாலகுமாரனை அனுப்பிவைத்தார்.

சிறந்த ஒரு திரைக்கதை ஆசிரியராக, இயக்குநராக தன்னை நிரூபித்திருக்கும் விக்ரம் சுகுமாரன் கற்றுக்கொள்ள வேண்டியதும் அது தான். மானுட நேயத்துடன் கூடிய கதையை உருவாக்குங்கள். ஒரு நல்ல உலக சினிமாவைப் படைக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை இந்த மாதிரி டெக்னிக்கல் தேனில் விஷத்தை ஊட்டும் படத்தினை எடுத்து வீணாக்காதீர்கள். பாலா, அமீர், சசிக்குமார், வெற்றிமாறன், மிஷ்கின் என இளம்படைப்பாளிகள் மூலம் தரமான படங்களும் இங்கே வரவேற்கப்படும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம், அடுத்து வருகின்ற படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்று ஒரு சினிமா ரசிகனாக நம்புகிறேன். விக்ரம் சுகுமாரனிடமும் இனி வரும் காலங்களில் அதையே எதிர்பார்ப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

 1. அடடே அருமை தல... இதே தலைப்பில் நானும் ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்... நீங்க எப்போதும் ஃபாஸ்ட் தான் :-)

  ReplyDelete
 2. நன்று!விமர்சிக்கும் பாங்கு நன்று!!'நாணயத்துக்கு' ம் இரண்டு பக்கங்கள்!!!

  ReplyDelete
 3. நன்று!விமர்சிக்கும் பாங்கு நன்று!!'நாணயத்துக்கு' ம் இரண்டு பக்கங்கள்!!!

  ReplyDelete
 4. நிஜம் தான்..அவர்களை எதோ எப்போதும் பழி வாங்க பிறந்தவர்கள் போன்று காண்பித்து மோசமான உதாரணத்தை காண்பித்து உள்ளார்கள்...அது தவிர சில படங்களில் எப்படா பாட்டு வரும்னு மாதிரி இதுல எப்படா சாவு வரும் அத எப்படி விலாவரிய காட்ட போறங்கனு ஒரே எரிச்சல்..எனக்கு முடிவு பிடிக்கலை..அந்த அம்மாவோட பில்டப் எல்லாம் மொத்தமா சரிச்சு விட்ருச்சு..

  ReplyDelete
 5. I didn't have the opportunity to watch movies in the recent past. However, I read reviews. Your opinion about this movie seems to be spot on. I was born and brought up in Kamuthi near Pasumpon. I am a witness to the incredible achievements of Thevar community. However, I also feel a worrisome development. In 80s, the number of people visiting Pasumpon during Thevar jeyanthi was minuscule compared to the gathering in the last decade. A section of the community making huge strides in education and business and the remaining is sliding further down. I sincerely hope that the sliding mass doesn't pick up momentum from this kind of movies!

  ReplyDelete
 6. //Manimaran said...
  அடடே அருமை தல... இதே தலைப்பில் நானும் ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்... நீங்க எப்போதும் ஃபாஸ்ட் தான் :-)//

  தமிழ்ஸ்ஸ்.காமிற்காக இந்த வாரம் தேவர் மகன் பார்த்தேன்..அடுத்து மதயானைக்கூட்டமும் பார்த்ததால், சேர்த்தே எழுதிவிட்டேன்..மேலே லின்க் அப்டேட் செய்துள்ளேன்.

  ReplyDelete
 7. // Subramaniam Yogarasa said...
  நன்று!விமர்சிக்கும் பாங்கு நன்று!!'நாணயத்துக்கு' ம் இரண்டு பக்கங்கள்!!!//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 8. //ஸ்ரீ அப்பாsaid...
  எனக்கு முடிவு பிடிக்கலை..அந்த அம்மாவோட பில்டப் எல்லாம் மொத்தமா சரிச்சு விட்ருச்சு..//

  ஆமாம் பாஸ்..முடிவு தான் பெரிய சறுக்கல்..சிறந்த படம் என்று பாராட்ட முடியாமல் செய்தது முடிவு தான்.

  ReplyDelete
 9. //kicha said...
  I sincerely hope that the sliding mass doesn't pick up momentum from this kind of movies! //
  நமது கவலையும் இது தான் பாஸ்.

  ReplyDelete
 10. இந்த படத்தைப் பார்த்துட்டு பங்காளிச் சண்டைக்கு முன்னாடி நிக்கிறவங்க கூட, ஏன் சண்டை போடணும்னு யோசிக்கிறாங்க. கோர்ட்ல அமைதியா கொண்டு வரணும்னா சைலன்சு என சத்தமாக கத்துவார்கள்.

  ReplyDelete
 11. இந்த படத்தோட நோக்கத்த பார்த்து திருந்த விரும்புரதுல நானும் ஒருத்தன். நம்ம ஊர் கண்ணோட்டத்தில பார்த்தா வேறு ஒரு அர்த்தம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

  ReplyDelete
 12. // siva said...
  இந்த படத்தோட நோக்கத்த பார்த்து திருந்த விரும்புரதுல நானும் ஒருத்தன். நம்ம ஊர் கண்ணோட்டத்தில பார்த்தா வேறு ஒரு அர்த்தம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.//

  நீங்க சொல்வது ஒரு வகையில் சரி தான்..ஆனால் என் கவலையெல்லாம், அப்படி ஒரு பிரச்சாரப்படம் எடுக்க விக்ரம் சுகுமாரன் தேவையில்லை என்பது தான்.

  கதை சொல்லும் உத்தி, அவர் பயன்படுத்தியிருக்கும் திரைமொழி என அவர் செயல்பட வேண்டிய தளமே வேறு.

  ReplyDelete
 13. சினிமா பார்த்து தான் ஒரு கூட்டம் தங்களோட எண்ணங்களை மாதிக்க போறாங்க என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.வளர்ந்த மனிதனை சினிமாவால மாத்திர முடியும்னு நீங்க நம்புறீங்களா...
  தமிழ் சினிமா இப்படி தான் இருக்கனும், நல்லவன் ஜெயிக்கணும்..ஹீரோ எல்லோரையும் வெட்டி சாய்க்கனும், நீதி நிலைநாட்ட படனும், என்கிற பல கோட்பாடுகளை இந்த படம் உடைச்சு இருக்கு. உண்மையில் வித்தியாச மான முயற்சி இது..

  ReplyDelete
 14. //ராஜ் said...
  சினிமா பார்த்து தான் ஒரு கூட்டம் தங்களோட எண்ணங்களை மாதிக்க போறாங்க என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.வளர்ந்த மனிதனை சினிமாவால மாத்திர முடியும்னு நீங்க நம்புறீங்களா...//

  புத்தகம் படித்துத்தான் ஒரு கூட்டம் திருந்தும்னு நான் நினைக்கலை..அதனால எல்லா அறம் போதிக்கும் விஷயங்களையும் விட்டு விடலாமா?..அது ஒரு ஒட்டு மொத்த இஅக்கம் ராஜ்..ஒரே ஒரு புத்தகமோ, சினிமாவோ எதையும் மாற்றிவிட முடியாது. ஆனால் மிகத்தவறான விஷயம், சரியென்று தொட்ர்ந்து போதிக்கப்பட்டால்......?

  உதாரணம், இன்றைய சினிமாக்களில் வரும் ஃப்ரெண்ட்ஸ் குடிகள்!

  ReplyDelete
 15. //ராஜ் said...
  நல்லவன் ஜெயிக்கணும்..ஹீரோ எல்லோரையும் வெட்டி சாய்க்கனும், நீதி நிலைநாட்ட படனும், என்கிற பல கோட்பாடுகளை இந்த படம் உடைச்சு இருக்கு. உண்மையில் வித்தியாச மான முயற்சி இது//

  ராஜ், நான் ஒப்பிடும் தேவர் மகனில் கமல் ஜெயிக்கவா செய்தார்? தன் குறிக்கோளில் படுதோல்வி அடைவார்..நாம் போற்றும் பருத்திவீரன், சுப்பிரமணியபுரத்தில் ஹீரோக்கள் ஜெயித்தார்களா?

  ஆடுகளத்தில் நல்லவன் ஊரை விட்டு ஓடினான்.சேதுவில் ஹீரோ பாண்டி மடத்திற்கு ஓடினான்.

  நாம் இங்கே பேசுவது ஹீரோவின் தோல்வியை அல்ல..அடிப்படை தர்மத்தின் தோல்வியை..எந்த மாரல் வேல்யூஸையும் முன்வைக்காத விபரீதத்தை!

  ஹீரோ தோற்றாலும், எல்லா நல்லவர்களும் தோற்றாலும்..அங்கே அறம் மிஞ்ச வேண்டும்..ஒரு உலகத்தரமான சினிமாவாக ஆகியிருக்க வேண்டிய படம், சறுக்கிவிட்டதே என்ற ஆதங்கம் தான் ராஜ்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.