அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.-
என்று பாட்டன் வள்ளுவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டான். இன்னும் பல கதைகளும் காவியங்களும் அடக்கம் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனிதனுக்கு அது உறைப்பதில்லை. கொஞ்சம் காசு, பணம் சேர்ந்ததும் ‘தான் செய்வதெல்லாம் சரியே..என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்’ என்று ஆடித் தீர்த்து அழிந்து போகிறான். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதையே ரத்தக்கண்ணீர்
அந்தக் காலத்திலேயே வெளிநாட்டில் சென்று படிக்கும் வசதியுள்ள லட்சாதிபதி மோகன். வெளிநாட்டு நாகரீகமே உயர்ந்தது, வாழ்க்கையை எஞ்சாய் பண்ணும் அவர்களின் வாழ்க்கை முறையே சரியானது எனும் மனநிலைக்கு வருகிறான் மோகன். இந்தியா திரும்பியபின்னும் அதே எண்ணத்துடன் வாழ்கிறான். கலைக்கூடம் என்ற பெயரில் பெண்களுடன் கூத்தடிக்க காமக்கூடத்தைக் கட்டி, காந்தா எனும் நாட்டியக்காரியுடன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான். அம்மாவின் வற்புறுத்தலால் திருமணமும் ஆகிறது. கட்டறுந்து காமத்தைக் கொண்டாடியவனுக்கு கட்டுப்பெட்டியான மனைவியைப் பிடிப்பதில்லை.
மோகனின் நண்பன் பாலுவின் அறிவுரைகளையும் அவன் மதிப்பதில்லை. மோகனின் போக்கால் மனம் உடைந்த அவன் தாயும் இறந்துவிட, காந்தாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறான் மோகன். அதன்பின் சொத்துக்கள் ஒவ்வொன்றாகப் பறிபோக, குஷ்டரோக நோய் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே போகிறது. காந்தா அவனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறாள். ஆளே உருமாறி தெருவில் பிச்சைக்காரனாய் அலையும் மோகன், இறுதியில் நண்பன் பாலுவை தன் மனைவியுடன் சேர்த்து வைத்துவிட்டு இறக்கிறான்.
ஒரு ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்டை எப்படி சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்பதற்கு உதாரணம், இந்தப் படம். ஏற்கனவே நாடகமாக வெற்றிபெற்ற கதை தான் இது. அதையே படமாக எடுத்து, மாபெரும் வெற்றி பெற்றார்கள். அதற்கு எம்.ஆர்.ராதா அவர்களின் நகைச்சுவை உணர்வே முக்கியக் காரணம். தொழிலாளர் கூட்டம் என்றாலும், அம்மா இறக்கும் சீன் என்றாலும், பிச்சையெடுக்கும் சீன் என்றாலும் அவரின் வசனங்களில் ஓடும் எள்ளல்தான், படத்தை ரசிக்க வைக்கிறது. ஒரு சோகமான அழுகாச்சி படமாக ஆகியிருக்க வேண்டிய கதை. எம்.ஆர்.ராதாவின் நடிப்பால், இன்றளவும் போற்றப்படும் படமாக ஆகிவிட்டது. ஃபாரின் ரிட்டர்னாக ஆரம்பத்தில் தோன்றுவதற்கும், இறுதிக்காட்சியில் அவர் தோன்றுவதற்கும் இடையே பாடி லாங்குவேஜில் எவ்வளவு மாற்றம். நோய் கூடிக்கொண்டே போவதை, ஒவ்வொரு சீனிலும் தன் உடல்மொழியால் அற்புதமாகக் காட்டியிருப்பார். எஸ்.எஸ்.ஆர் உடன் வாக்குவாதம் செய்தபடியே சொறிவது ஒரு உதாரணம்.
காந்தாவாக வரும் எம்.என்.ராஜம், ஒரு தாசியை அப்படியே கண் முன் கொண்டுவருகிறார். ஆரம்பத்தில் மோகன் மேல் பிரியமாக இருப்பதும், அவருக்கு நோய் வந்தாலும் விட்டுவிடாமல் போராடுவதும், பின்னர் மனித இயல்புப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி எம்.ஆர்.ராதாவை விரட்டி விடுவதும் நுணுக்கமான சித்தரிப்பு. பொதுவாக இம்மாதிரிக் கதைகளில் அந்த கேரக்டரை கெட்டவள் என்று மட்டுமே காட்டுவார்கள். ஆனால் இங்கே மனதின் மாற்றம் படிப்படியாக விவரிக்கப்படுகிறது. இது அந்தக் காலத்துப் படங்களில் (இக்காலத்திலும்!) ஒரு அரிய விஷயம். ஏறக்குறைய சிலப்பதிகார மாதவி கேரக்டராக ஆரம்பித்து, சராசரி பெண்ணாக அவர் வாழ்க்கை முடிகிறது.
நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக, தமிழை இனிமையாகப் பேசுவதில் வல்லவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இதிலும் ஒரு நியாயமான மனிதனாக, எம்.ஆர். ராதாவை திருத்த முயலும் நண்பனாக அருமையாக நடித்திருப்பார். எம்.ஆர்.ராதாவின் மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனிக்கு இயல்பிலேயே அப்பாவியான முகம் என்பதால், அந்த கேரக்டர்க்கு சரியாக செட் ஆகிறார்.
படத்திற்கு கதை-வசனம் எழுதிய திருவாரூர் தங்கராசு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். லட்சாதிபதியான ஒருவன், தன் தவறான நடத்தையால் எப்படி தெருவுக்கு வருகிறான் என்று காட்ட, தெளிவாக காட்சிகளை நகர்த்தியிருப்பார். எம்.ஆர்.ராதா பேசும் ஒவ்வொரு வசனங்களும் சிரிக்க வைப்பவை. ’கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியால இன்னும் சரியாத் தெரியாது-தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி, சாமியார் கட்சி இதே வேலை. இந்தியால க்ரோர்ஸ் கணக்கா வச்சுட்டு இருக்கான் கட்சிய! எல்லா கட்சியும் பிசினெஸ்ல பூந்துட்டான்… பெக்கர்ஸ்…. வேற ஒண்ணுக்கும் லாயக்கில்ல… - திங்கிறதுக்குக்கூட கட்சியாடா,எப்பா!-சந்திரனையும் குருவையும் நாளைக்கு வரச்சொல்லு’ என்று படம் முழுக்க பட்டாசாக வெடிக்கின்றன ஒவ்வொரு வசனங்களும். படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், அந்த வசனங்கள் இன்னும் ஃப்ரெஷாக இருக்கின்றன, இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போகின்றன.
சிலப்பதிகாரம் சொல்லும் செய்தியும் இந்தப் படத்தின் செய்தியும் ஒன்று தான்.வித்தியாசம், கேரக்டர்களின் குணாதிசயம். கண்ணகி அடக்கமானவள் என்றாலும் போராளி. இங்கே மனைவி கேரக்டர் ஒரு அப்பாவி மட்டுமே. கோவலன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மதிமயக்கத்தில் வீழ்ந்தவன். இங்கே மோகன் இயல்பிலேயே கெட்டவன், விரும்பி சகதியில் இறங்குபவன். மாதவி தாசிகுலத்தில் பிறந்தாலும், வேறு ஒருவனை ஏறெடுத்துப்பார்க்காதவள். இங்கே காந்தா சினிமா வாய்ப்பு வந்தவுடன், மனம் மாறிவிடுகிறாள். நேரெதிரான கேரக்டர்கள் சிலப்பதிகாரச் சூழ்நிலையில் உலா வருகின்றன.
பொதுவாக அந்தக் காலத்துப் பாடல்களை நாம் ரசிப்பது கஷ்டம். ஆனால் இந்தப் படத்தில் சிதம்பரம் ஜெயராமனின் இசையில் பெரும்பாலான பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ‘ஆளை ஆளைப் பார்க்கிறான், காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி’ போன்ற பாடல்கள் அருமை. குறிப்பாக ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் என்றுமே நிம்மதி கொள்வதேது?’ எனும் பாடல்வரிகள் ஒரு பழமொழி போன்றே தமிழர் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டன. அந்தப் பாடலில் சிதம்பரம் ஜெயராமனின் குரலும் எம்.ஆர்.ராதாவின் வசனங்களும் இணைந்து, ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
நல்ல குடும்ப வாழ்க்கை வாழும் சிலர்கூட, சபலத்தால் இன்னொரு பெண்ணிடம் சிக்கும்போது ஒட்டுமொத்த வாழ்க்கையே நாசமாவதை நாம் இப்போதும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. அதையறியாமல் முறையில்லாக் காமத்தில் இறங்கும் மனிதர்கள் கொடுக்கும் விலை, பணம் மட்டுமல்ல குடும்ப சந்தோசமும் தான். காந்தா மாதிரிப் பெண்களின் தொடர்பு உடும்புப் பிடி போன்றது. அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அவர்கள் மட்டுமே தனக்கு நல்லது செய்வதாகவும் மனைவி-மக்கள் எல்லாம் தனக்கு எதிராளிகள் என்றும்கூட சிலருக்கு தோன்றிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் தான் பெரும் ஞானிகள்கூட காமம் என்றால் பதறி ஓடுகிறார்கள்.
சிலப்பதிகாரக் கண்ணகி முதல் தற்கால அபலைகள்வரை இதே அவலத்தை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். காவியமாகவும், கதையாகவும் படமாகவும் புலனடக்கம் பற்றிப் பேசப்பட்டு வந்தாலும், மோகன் போன்ற ஆட்கள் காமத்தின் பின்னே சென்று தானும் அழிந்து, குடும்பத்தின் நிம்மதியையும் சீரழிக்கிறார்கள். அதை இந்தப் படம் நகைச்சுவை முலாம் பூசிச் சொல்கிறது.
படம் சொல்லும் செய்தி, படத்தின் வசனங்கள், எம்.ஆர்.ராதாவின் நடிப்பு என எல்லாமே காலத்தைக் கடந்து நிற்கும் விஷயங்கள் என்பதால், தமிழில் வந்த முக்கியமான படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது ரத்தக்கண்ணீர்.
அடியே காந்தா என்ற சொல் பட்டி தொட்டியெல்லாம் பரவி விட்டது !
ReplyDelete