Tuesday, July 29, 2014

LA Confidential (1997)- திரை விமர்சனம்

திரைப்பட ஜெனர்களில் எனக்குப் பிடித்தது ஃபிலிம் நுஆர்(Film Noir)-ம் அதன் நவீன வடிவமான நியோ-நுஆர்(Neo-Noir)-ம் தான். சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசும்படங்கள் என்பதாலும், மற்றபடங்களைவிட இவற்றில் ஒளிப்பதிவு நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஜெனரில் வரும் நல்ல படங்களைத் தவறவிடுவதில்லை. ஆனாலும் எப்படியோ இந்தப் படத்தை கவனிக்காமல் விட்டிருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ‘மதிமுக ஸ்ரீதரன்’, இந்தப் படத்தைப் பார்க்கும்படி சொன்னார். அவருக்கு ஆயிரம் நன்றிகள்.
வித்தியாசமான மூவி போஸ்டர்
ஹாலிவுட் வீற்றிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கென்று ஒரு கலர்ஃபுல் இமேஜ் நம் மனதில் இருக்கிறது. இந்தப் படம், அங்கே நடக்கும் திரைமறைவு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. போலீஸ், கோர்ட், மீடியா, ஹாலிவு என எல்லாவற்றிலும் இருக்கும் ஊழலையும் குற்றங்களையும் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிறது. ஒரு இரண்டாந்தர நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான், இந்தப் படம். ஆனால் திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் அசத்திவிட்டார்கள்.

கதை கொஞ்சம் சிக்கலானது தான். மூன்று போலீஸ் ஆபீசர்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இரண்டாம்பாதியில் மூன்றுபேருமே ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அதைக் குழப்பாமல் சொல்லியதில் தெரிகிறது, திரைக்கதை ஆசிரியரின் திறமை.

1. எட்மண்ட் எக்ஸ்லி (Guy Pearce) : புதிதாக வேலைக்குச் சேரும் நேர்மையான ஆபீசர். சட்டப்படியே எல்லாம் நடக்கவேண்டும் எனும் கொள்கை உடையவர். அவர் தந்தையும் போலீஸ்காரராக இருந்து, அடையாளம் தெரியாத யாரோ ஒரு திருடனால் கொல்லப்பட்டவர். அந்த திருடன் பிடிபடவேயில்லை. அவனுக்கு எக்ஸ்லி வைத்திருக்கும் பெயர் ‘Rollo Tomasi’. 

ஒரு கிறிஸ்துமஸ் இரவில், போலீஸ்காரர்கள் சில கைதிகளை அடித்தே கொல்கிறார்கள். அதை எதிர்த்து சாட்சி சொல்லி, புரமோசன் வாங்குகிறான் எக்ஸ்லி. அதனால் மற்ற போலீஸ்காரர்களை பகைத்துக்கொள்கிறான். எக்ஸ்லியைப் பொறுத்தவரை சட்டத்தை தன் கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இவனது சாட்சியத்தால், Stensland எனும் ஒரு ஆபீசர் வேலையை இழக்கிறான். கொஞ்சநாள் கழித்து, ஒரு ரெஸ்டாரண்டில்(Nite Owl) நடக்கும் கூட்டுக்கொலையில் Stensland கொல்லப்படுகிறான். அந்த கேசை விசாரிக்கும் பொறுப்பும் எக்ஸ்லிக்கே வருகிறது.
2. பட் ஒயிட் (Russell Crowe): நேர்மையான, அதே நேரத்தில் ப்ராக்டிகலான போலீஸ் ஆபீசர். கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்காமல் குற்றவாளிகளை ‘டுமீல்’ ஆக்குவது நல்லது என்று நினைப்பவன். பெண்கள் மீதான வன்முறை என்றால், காண்டாகிவிடுபவன். வேலையை இழந்த Stensland-ல் நண்பன். எனவே எக்ஸ்லியை வெறுப்பவன். தொடர்ந்து நண்பன் கொலை செய்யப்பட, அந்த கேஸை அவனே துப்பறிய ஆரம்பிக்கிறான். (இந்தப் படத்தில் நடிக்கும்போது ரஸ்ஸல் சாதாரண நடிகர். படம் வெளியானதும் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். அசத்தலான நடிப்பு.)

3. ஜாக் வின்சென்ஸ் (Kevin Spacey): லஞ்சம் வாங்காமல் பொழைக்க முடியாது என்று லட்சியவாதத்தை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு வாழும் சராசரி போலீஸ்காரன். ஒரு கேஸை சால்வ் செய்தால், டிடெக்டிவாக புரமோட் ஆகலாம் என்று உழைத்துக்கொண்டிருப்பவன். ஆனாலும் மெயின் வேலை, போலீஸ்காரர்கள் பற்றி எடுக்கப்படும் ஒரு டிவி சீரியலுக்கு டெக்னிகல் அட்வைஸாராக இருப்பதும், Hush-Hush எனும் பத்திரிக்கைக்கு பரபரப்பான கவர் ஸ்டோரியை ‘உருவாக்கி’ கொடுப்பதும் தான். எக்ஸ்லி Stensland கேஸ்க்கு உதவ, ஜாக்கையும் கூப்பிடுகிறான்.

இப்படி மூன்று பேரையுமே இணைக்கும் விஷயமாக Stensland கொல்லப்பட்ட நைட் ஔல் கேஸ் இருக்கிறது. அந்த கேஸை விசாரிக்க இறங்கும்போது, மூன்றுபேரின் வாழ்க்கையுமே புரட்டிப்போடப்படுகிறது. சட்டப்படியே எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது என்று எக்ஸ்லி உணர்கிறான். ஜாக், தன்னைத் திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக நைட் ஔல் கேஸை எடுத்துக்கொண்டு, அந்த நேர்மைக்காக உயிரையும் விடத் துணிகிறான்.

படம் பார்க்கும் நமக்கு, யார் ஹீரோ என்பதில் தான் ஆரம்பத்தில் தடுமாற்றம் வருகிறது. ஜாக் நிச்சயம் ஹீரோ அல்ல, யதார்த்தத்திற்கு பலியாகிவிட்ட சாமானியன். எக்ஸ்லியின் நேர்மை அவனை ஹீரோவாக காட்டினாலும், பெர்சனலாக அவனுடன் நாம் அதிகம் ஒன்ற முடிவதில்லை. பிரக்டிகலான ஆளாக வரும் பட் ஒயிட் தான் நம்மை அதிகம் கவர்கிறான். சிறுவயதில் அவனுக்கு நிகழ்ந்த சம்பவங்கள், பிராஸ்டிடியூட்(ஹீரோயின்) உடன் அவனுக்கு ஏற்படும் காதல், நண்பனின் கொலைக்கு பழி வாங்க அலையும் ஆவேசம் ஆகியவை அவனையே ஹீரோவாக முன்னிறுத்துகின்றன. எக்ஸ்லி, பட் ஒயிட்டின் எதிர் பிம்பமாக வருகிறான். இரு எதிர் துருவங்களும் கதை நகரும்போது, எப்படி இணைகிறார்கள் என்று காட்டப்படுவதால், நம்மால் பட் ஒயிட்டை ஹீரோவாக எடுத்துக்கொள்ள முடிகிறது.

மீடியாவில் வரும் செய்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை படம் முழுக்க போட்டு உடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். வில்லனைக் கூட மக்கள் மத்தியில் தியாகிகளாக மீடியாக்கள் ஆக்க வேண்டிய அவசியம், குற்றங்களை மீடியாவும் போலீஸுமே சேர்ந்து உருவாக்கிவிட்டு அதைச் செய்தியாக்குவது என பல அண்டர்வேர்ல்டு விஷயங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது படம்.

ஃபிலிம் நுஆரில் வரும் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று, femme fatale. அதாவது ஒரு பெண்(ஹீரோயின்) ஹீரோவுடம் பழகுவதும், பின்னர் ஹீரோவை ஏமாற்றுவது அல்லது பெரும் ஆபத்தில் மாட்டிவிடுவது. தமிழில் femme fatale கேரக்டரின் உச்சம், சுப்ரமணியபுரம் சுவாதி. பழைய படங்களில் ‘எல்லாமே நடிப்பா?’ என்று கேட்கப்பட்ட ‘புதிய பறவை’ சரோஜா தேவி ஞாபகம் வருகிறது. இந்தப் படத்திலும் femme fatale கேரக்டர் வருகிறது.
ஹாலிவுட் ஸ்டார் போன்றே ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட ப்ராஸ்டிடியூட்களில் ஒருவராக, லின் ப்ராக்கென் (Kim Basinger) கேரக்டர் வருகிறது. நண்பனுடன் கொல்லப்பட்டவள், ஹீரோயினின் தோழி என்பதால் பட் ஒயிட் இவளிடம் வந்து சேர்கிறான். பார்த்தவுடனே, காதலில் விழுகிறான். ஆனாலும் இந்த femme fatale கேரக்டர், ஹீரோவை ஏமாற்றுவதில்லை. ஏமாற்றப் போகிறாள் என்று நாம் நம்பும்போது, சர்ப்ரைஸாக லின் நல்லவளாக ஆகிறாள்.

மேலும், ஃபிலிம் நுஆரில் சந்தோசமான முடிவு என்பதும் அபூர்வம். இந்தப் படம், சுபமாக முடிகிறது. வில்லனை எக்ஸ்லி கொல்ல மாட்டான் என்று நம்மை நினைக்கவைத்து, கடைசி நிமிடத்தில் மனம் மாறி வில்லன் கொல்லப்படும்போது நமக்கு கை தட்டத் தோன்றுகிறது.

முதலில் எக்ஸ்லி கேரக்டரை நாம் புரிந்துகொள்ளப் பயன்படும் ‘Rollo Tomasi’வார்த்தை, இறுதியில் வில்லன் பிடிபடக் காரணம் ஆவது சுவாரஸ்யம்.  ‘நீ எதற்காக போலீஸில் சேர்ந்தாய்?’ என்ற கேள்விக்கு லஞ்சப் போலீஸ் ஆகிவிட்ட ஜாக், ஒருநிமிடம் கண் கலங்கி ‘ஞாபகம் இல்லை’ என்று சொல்லும் சீன், ஒரு விஷுவல் இலக்கியம். பல லட்சியங்களுடன் வேலையில் சேர்ந்த ஒருவன், மனசாட்சியை அடகு வைத்து எப்படி சராசரி போலீஸாக ஆகிவிட்டான் என்பதை பல காட்சிகள் மூலம் சொல்லாமல், அந்த ஒரு சின்ன ஷாட்டிலேயே முடித்திருப்பார்கள்.

நேர்மையான, புனிதமான விஷயங்கள் என்று நாம் நம்புவதையெல்லாம் கலைத்துப் போடுவதும், ஏமாற்றமும் விரக்தியுமே சகமனிதர்களால் நமக்கு அதிகம் கிடைக்கின்றன என்று உணர்த்துவதுமே ஃபிலிம் நுஆரின் அடிப்படைக் குறிக்கோள். ஊழல், கொலை, செக்ஸ், femme fatale, ஏமாற்றுதல், வாய்ஸ் ஓவர் போன்ற எல்லா ஃபிலிம் நுஆரின் கூறுகளையும் ஒரே படத்தில் கொண்டுவந்திருப்பது தான் -ன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதுவே நம்மை ‘என்னா படம்டா’ என்று அசர வைக்கிறது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. உலக விமர்சகர் ஆகிடிங்க...

    ReplyDelete
  2. நான் இரண்டு வருடம் முன்பு பார்த்த படம்... அருமையான ஒளிப்பதிவு, தேர்ந்த நடிப்பு, பிசிரில்லாத திரைக்கதை.... super review bro

    ReplyDelete
  3. This movie is a treat for Russell Crowe fans like me. My another favorite movie of this genre is Sean Penn's mystic river. Try to watch it

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.