Tuesday, July 8, 2014

ஹிட்ச்காக்கின் Secret Agent (1935) - திரை விமர்சனம்


டிஸ்கி: நிறுத்தி வைக்கப்பட்ட சீக்ரெட் ஏஜெண்ட். இப்போ ரிலீஸ்! 

18 படங்கள் எடுத்து ஒரு திறமையான த்ரில்லர் பட இயக்குநராக ஹிட்ச்காக் தன்னை நிலைநாட்டியபின் எடுத்த படம், Secret Agent.  படம் பெரும் தோல்வியை அடைந்தது. வெற்றியை விட தோல்வியே நல்ல ஆசான் என்பதால், ஹிட்ச்காக் பல பாடங்களை இந்தப் படம் மூலம் கற்றுக்கொண்டார். படத்தையும் பாடத்தையும் பார்ப்போம், வாருங்கள்.
முதல் உலகப்போரின் பிண்ணனியில் நடக்கும் கதை. பிரிட்டிஷ் உளவுத்துறை ஹீரோ(John Gielgud)வை ஒரு மிஷனுக்காக ஸ்விட்ச்சர்லாந்துக்கு அனுப்புகிறது. ஒரு ஜெர்மன் உளவாளியைக் கொல்ல வேண்டும் என்பதே அந்த மிஷன். அங்கே அவருக்கு உதவ, ஹீரோவின் மனைவியாக நடிக்க ஹீரோயின்(Madeleine Carroll) வருகிறார். கூடவே ஜெனரல் என்பவரும் இதில் சேர்ந்துகொள்ள, மூவரும் சேர்ந்து அந்த உளவாளியை கொன்றார்களா என்பதே கதை.

வெறும் ஆக்சன் கதை போல் தோன்றினாலும், இந்தப் படம் ஸ்பைகளின் இருண்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. அவர்கள் போலி முகத்துடன் தான் நடமாடுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் நபர்களும் போலிகளாகவே இருக்கிறார்கள். எது உண்மை என்று பிரித்தறிவதிலேயே  அவர்களின் வாழ்க்கை கழிகின்றது. தேசத்திற்காக, உலக அமைதிக்காக எனும்பெயரில் கொலை செய்யும் நிலைக்கும் ஆளாகிறார்கள். ஆனாலும் அவர்களின் மனசாட்சி அவர்களை உறுத்தவே செய்கிறது. Secret Agent படம், அந்த மன உறுத்தலை மையமாகக் கொண்டே நகர்கிறது. இது ஒரு டார்க் சப்ஜெக்ட், ஒரு கமர்சியல் த்ரில்லருக்கான டாபிக்கே இல்லை இது. படத்தின் முதல் சறுக்கல் அங்கே தான் ஆரம்பிக்கிறது.

முந்தைய படத்தைப் போல் அல்லாமல் ஹீரொ கேரக்டர் மிகவும் சீரியசான ஆளாக வலம்வருகிறது. யாரோ ஒரு மனிதனைக் கொல்வது மட்டுமே ஹிரோவின் குறிக்கோள் என்பதும் நம்மை படத்துடன் ஒன்றவிடாமல் அன்னியப்படுத்திவிடுகிறது. நகைச்சுவை உணர்வற்ற, குறிக்கோள் மீது பெர்சனலாக ஆர்வமற்ற ஹீரோ என்பது படத்தின் மிகப்பெரும் குறை. 
அடுத்து, குறிக்கோள் என்பது ஒரு மனிதனைக் கொல்வது எனும் நெகடிவ் விஷயம். அந்த மனிதனை ஏன் கொல்ல வேண்டும் என்பதற்கான நியாயங்கள் எதுவும் விவரிக்கப்படவில்லை. எதிரி நாட்டு ஆள், எனவே கொல்லப்பட வேண்டும் எனும் சிம்பிளன Maccuffin உத்தி, இந்தப் படத்திற்கு ஆப்பு வைத்தது.

படத்தில் வரும் ஜெனரல் எனும் கேரக்டர், காமெடியனா அல்லது வில்லனா என்பதில் பெரும்குழப்பமே நிலவுகிறது. ஹீரோயினுடன் இருக்கும்போது காமெடியனாகவும்(லூசாகவும்), டார்கெட்டை நெருங்கும்போது கொலைகாரனாகவும் மாறும் அந்த கேரக்டரை நம்மால் ரசிக்க முடிவதில்லை.

முதலில் ஹீரோ ஒரு தவறான ஆளைக் கொல்ல முயற்சிக்கிறான். படத்தில் கொல்லப்படும் அந்த ஜெர்மானியருக்கும் அவரது நாய்க்குட்டிக்குமான உறவு நன்றாகச் சொல்லப்பட்டிருக்கும். அவர் வேறொரு இடத்தில் கொல்லப்படுவதை உள்ளுணர்வால் அறிந்து நாய் துடிக்கும் காட்சி நன்றாக இருக்கும். அதில் ஒரே பிரச்சினை, அந்தக் கொலையைச் செய்வது ஹீரோ குரூப் என்பதால் நம்மால் முழுமையாக அந்தக் காட்சியில் ஒன்ற முடியாது. ஆரம்பத்தில் ஜெர்மன் உளவாளியைக் கொல்ல ஆவலாக இருக்கும் ஹீரோயின், அந்த உயிரிழப்பு ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் வேதனையைப் புரிந்துகொள்கிறாள். ஹீரோவின் மனதையும் மாற்றப் போராடுகிறாள். ஆனாலும் உடன் இருக்கும் ஜெனரலாலும் ஹீரோவாலும் அவள் விருப்பம் முழுக்க நிறைவேறுவதில்லை. எனவே ஹீரோயினுக்கு இருந்த பாசிடிவ் குறிக்கோளும் நிறைவேறவில்லை.

ஹிட்ச்காக் எந்த ஊரில் படத்தை எடுக்கிறாரோ, அந்த ஊரில் உள்ள புகழ்பெற்ற இடங்களை கதையுடன் இணைப்பது வழக்கம். இதிலும் ஆல்ப்ஸ் மலையை ஒரு கொலை நடக்கும் இடமாகவும், அங்குள்ள சாக்லேட் ஃபேக்டரியை வில்லன்களின் கூடாரமாகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருப்பார். The 39 Steps-ல் ஆரம்பித்த ஸ்டைல் அது. இதிலும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும். அதே போன்றே ஹீரோவின் பயணத்தில் இணையும் ஹீரோயின் எனும் உத்தியும் இங்கே உண்டு.

ஹீரோ, அவனுக்கு மனைவியாக நடிக்க வரும் ஹீரோயின் என்பதை வைத்து காமெடியாக சில காட்சிகளை வைத்திருக்கலாம். The 39 Steps-ல் பத்து நிமிடத்திற்கே ரகளை செய்திருப்பார் ஹிட்ச்காக். ஆனால் இங்கே படம் முழுக்க அப்படி ஹீரோ-ஹீரோயின் நடித்தாலும், படம் சீரியசாகவே நகர்கிறது. ஹீரோவை சவசவ கேரக்டராக படைத்தது தான் பிரச்சினை.
தவறான குறிக்கோள் மற்றும் தவறான ஹீரோ பாத்திரப்படைப்பு தான் இந்தப் படத்தின் குறை என்று ஹிட்ச்காக் உணர்ந்துகொண்டார். ஒரு படத்தின் வெற்றி என்பது பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றுவதில் இருக்கிறது. அவர்கள் ஹீரோ கேரக்டருடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, ஹீரோவின் குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங் என்று ஹிட்ச்காக் பின்னர் உணர்ந்தார். இருப்பினும் தொடர்ந்து ஹிட் கொடுத்த இயக்குநர் என்பதால், இந்தப் படமும் வணிகரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் படைப்புரீதியில் தான் தோற்றுவிட்டதை ஹிட்ச்காக் உணர்ந்திருந்தார். யானைக்கும் அடி சறுக்கும், இல்லையா?

Download Link: http://kickass.to/secret-agent-1936-internal-dvdrip-xvid-qim-t6109014.html
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

 1. நல்லது. இந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்பதற்காக வருந்த வேண்டியதில்லை என்பதில் மகிழ்ச்சி. திகில்கதை மன்னன் யானைதான்.

  ReplyDelete
 2. arumai
  http://www.puthiyatamil.net/

  ReplyDelete
 3. விமர்சனம் நன்று.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.