Sunday, January 16, 2011

முந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)

இந்த முறை போட்டி கடுமைதான். 

மூச்சு வாங்கியதால் நீச்சலின் வேகத்தைக் குறைத்தேன். சுற்றிலும் பார்த்தேன். 

இன்னும் சிலர் தான் எனக்கு முன் இருந்தனர். எப்படியும் இந்த முறை ஜெயித்துவிடவேண்டும். இல்லையென்றால், நினைக்கவே கஷ்டமாக இருந்தது. பல கொடுமையான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தன.

‘டேய் நாயே, ஓரமாகப் போக முடியாதா” என்றொரு குரல் கேட்டது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண் நீந்திக்கொண்டிருந்தாள்.

“என்னை ஏற்கனவே தெரியுமா உனக்கு?” என்றேன்.

இல்லையெனத் தலையசைத்தவாறே “ ஏன் கேட்கிறே?” என்றாள்.

“நீ பேசியவிதம் என் அம்மாவை ஞாபகப்படுத்தியது. அதனால்தான்” என்றேன்.

“கண்டார ஓளி..உன்னைக் கொல்லாம விடமாட்டேன்” எனக் கூறியபடியே என் அம்மாவின் வாயில் மிதித்தேன். உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

“அய்யய்யோ..கொல்றானே” என்று அலறினாள் அம்மா. வழக்கம்போல் பக்கத்துவீட்டு மாமா ஓடி வந்தார்.

“விடுப்பா..குடிச்சாலே உனக்கு புத்தி கெட்டுப் போகுது..எந்திரிம்மா. நீயும் கொஞ்சம் வாயைக் குறைக்கணும் தாயி” என இருபக்கமும் சமாதானப் படுத்துவதில் இறங்கினார். 

இது வழக்கமான நிகழ்வு என்பதால் வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை.

“அப்புறம்?” என நீந்தியவாறே கேட்டாள் அவள். “கொஞ்ச நாளில் அம்மாவை விட்டுவிட்டு, வேறு ஊருக்குப் போய்விட்டேன்”

“அப்படியென்றால், இப்போது நீ உன் அம்மாவை நல்லபடியாக்க் காப்பாற்றவேண்டும்” என்றாள்.

“அப்படி ஒரு எண்ணமே இல்லை” என்றேன்.

“அப்படிச் சொல்லாதே. நீ ஏன் இந்தப் போட்டியில் இறங்கினாய். இது உனக்குச் சரியான இடமல்ல. இதில் நீ ஜெயித்தால் உடனே தாயில்லாப் பிள்ளை ஆவாய். தெரியாதா?” என்றாள்.

“தெரியும்..செத்து ஒழியட்டும். நிம்மதி.. பெண்கள் இல்லாத வாழ்க்கையை நோக்கியே என் பயணம் போகிறது. பெண்கள் இருந்த இடங்களில் மட்டுமே நான் தவறு செய்திருக்கிறேன். பெண்களிடம் எப்போதும் நான் கருணையுடன் நடந்துகொண்டதில்லை, இப்போதும்” என்று சொல்லியவாறே அவளின் இடுப்பில் எட்டி உதைத்தேன்.

‘வீல்’ என அலறியபடியே மூழ்கினாள்.

இந்தப் பெண்களால் எத்தனை தவறுகள்..அதனால் எவ்வளவு வலி..தூங்க  விடாமல் துரத்தும் நினைவுகள்..அப்பப்பா..நகக் கணுவில் குத்தியிருக்கும் மரத் துணுக்கு போல பழைய நினைவுகள் என்னைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றன, அதை மறப்பதற்கே இந்தப் போட்டியில் குதித்தேன்.

எல்லையை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். திரும்பிப்பார்த்தேன். வெகுதொலைவில்தான் சிலர் களைப்புடன் வந்துகொண்டிருந்தனர். 

முன்னால் பார்த்தேன். ஒரே ஒரு ஆள். அவன் இடுப்பையும் ஒடித்தால், வெற்றிதான். சர சர வென அந்த ஆளை நெருங்கினேன். அருகில் போனதும் அது ஒரு பெண் எனப் புரிந்தது. கோபத்துடன் நெருங்கினேன்.

எல்லைக்கோட்டின் மிக அருகில் இருந்தோம். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவுடன் இருவரும் ஒருசேர அதிர்ந்தோம்.

“கலைக்கிறதுன்னா சீக்கிரம் சொல்லுங்க..ஏற்கனவே ரெண்டு மாசம் முடியப்போகுது” டாக்டர் அக்கறையுடனும் கடுப்புடனும் சொன்னார்.

“யோசிச்சுச் சொல்றோம்” என்று சொல்லிவிட்டு அவளுடன் வெளியே வந்தேன்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு..எதுக்குக் கலைக்கணும்.நாம எங்காவது ஓடிப்போயிடலாம். என் வீட்டில் ஏற்கனவே ஒத்துக்க மாட்டாங்க. இப்போ கர்ப்பம்னு வேற சொன்னா..அவ்வளவு தான்.” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் யோசித்தவாறே நின்றிருந்தேன்.

“இன்னைக்கு நைட் கொஞ்சம் துணிமணியோட வர்றேன். எங்காவது போய்ப் பிழைச்சுக்கலாம்” என்றாள்.

“சரி, ஆனால் நைட் வேண்டாம். நளைக்குக் காலையில் வெறும் கையோட வா. அப்போதான் உன் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராது. பஸ் ஸ்டாண்டில் இருக்கிற லாலாக் கடை முன்னாடி காலையில் 9 மணிக்கு வந்து நில். நாம் மெட்ராஸ் போயிடலாம்” என்றேன்.

அவளுக்கு முகமெல்லாம் சிரிப்பு பொங்கியது. சந்தோசத்துடன் கிளம்பினாள். 

‘இனியும் இங்கு இருந்தால் சரிப்படாது’ என்பதால் அன்று இரவே நான் மட்டும் ஊரைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினேன்.

அதன்பின் இப்போதுதான் அவளைப் பார்க்கிறேன். ’இவள் எப்படி இங்கே? அதன்பின் என்ன நடந்தது, அந்தக் குழந்தை என்ன ஆனது? என நான் யோசிக்கும்போதே அவள் திடீரென பின்னோக்கி நீந்த ஆரம்பித்தாள்.

”நில்” எனக் கத்தினேன்.

என்னைப் பார்க்கக்கூட அவள் தயாராக இல்லை. நான் நீந்துவதை நிறுத்தினேன். ஆனாலும் நீரோட்டம் என்னை எல்லைக் கோட்டில் கொண்டு சேர்த்தது.

நான் திரும்பி அவளிடம் போக வேண்டுமென விரும்பினேன். 

ஆனால் வந்த வேகத்தில் அண்ட அணுவின் மீது மோதினேன். 

அது என்னைச் சூழ்ந்துகொண்டு என் பழைய நினைவுகளை அழிக்க ஆரம்பித்தது. “வேண்டாம்...வேண்டாம்...என் குழந்தை..என் குழந்தை.”என நான் கதறக் கதற என்னைச் சித்திரவதை செய்த நினைவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

கருப்பையில் பேரமைதி சூழ்ந்தது. விந்துவாக இருந்த நான் கரு ஆனேன்..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

  1. புதுக் கவிதை போல இது ஒரு புதுக் கதையா? நன்றாக வடிவ‌மைத்துள்ளீர்கள்.ந‌வீன ஓவியத்தைப் பார்க்கும் ஒவ்வொருவனும்
    தன் மன வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல கற்பனை செய்து கொள்வதைப் போன்று தங்க‌ளுடைய இந்த ஆக்கமும் பல எண்ணங்களை தோற்றுவிக்கும்.பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. வாவ்..கலக்கல் செங்கோவி...ரொம்ப வித்யாசமான நடையில் ஒரு அழகான கதை படித்த பீல்...

    ReplyDelete
  3. சூப்பர் பாஸ்! என்னடாது....யோசிச்சிட்டே வாசித்தேன் கடைசியில்!!! :-)

    ReplyDelete
  4. வாவ்..கலக்கல் செங்கோவி.

    ReplyDelete
  5. @kmr.krishnan: தங்களைப் போன்ற பெரியவர்கள் பாராட்டுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  6. @ஆனந்தி..: நன்றி சகோதரி..ரொம்ப நாட்களாக மனதில் சுமந்த கதை..blogger புண்ணியத்தில் பதிவு ஏற்றியுள்ளேன்.

    ReplyDelete
  7. @ஜீ...: யூகிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  8. @சே.குமார்: தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி குமார்.

    ReplyDelete
  9. இரண்டு நாட்களாக தமிழ்மணம் தொல்லை கொடுத்ததால் வலைத்தளம் பக்கம் வரமுடியவில்லை

    நிச்சயம் இந்த கதையை நாளை வெளியிட்டு இருந்தால் வரவேற்ப்பு அதிகம் இருந்திருக்கும்.

    ReplyDelete
  10. தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாஇருந்தாதான். ஒருசிலர் திரும்பி பார்ப்பாங்க.

    வலையுலகில் நான் கத்துக்கிட்டது. கொஞ்சம் நீளமா வைங்க

    ReplyDelete
  11. //தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாஇருந்தாதான். ஒருசிலர் திரும்பி பார்ப்பாங்க.// இதுவரை அதைக் கவனத்தில் கொண்டே பதிவிட்டுள்ளேன். ஆனால் இந்தக் கதைக்கு இதுதான் நல்ல தலைப்பாகத் தெரிந்தது..100 பேர் படித்தாலே சந்தோசம்தான்..தொடர்ந்து என்னைக் ‘கவனிப்பதற்கு’ நன்றி..பேசாம தலைப்பை ‘கருத்தரிப்பது எப்படி?(அஜால்..குஜால்)’-ன்னு மாத்திடலாமா?(சும்மா..சும்மா..)

    ReplyDelete
  12. அருமையான கதை செங்கோவி.அழகாய் வடிவமைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. @அன்புடன் மலிக்கா: பாராட்டுக்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  14. உண்மையிலேயே சீக்கிரம் யாராலும் கணிக்க முடியாத அருமையான கதை, மிக நன்றாக இருந்தது :-)

    ReplyDelete
  15. @இரவு வானம்: இன்னும் நைட் ஸ்கையைக் காணோமே-ன்னு நினைச்சேன் வந்துட்டீங்க..நன்றி..சிறு இடைவேளைக்குப் பின் சந்திப்போம்.

    ReplyDelete
  16. //தீக்குளிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்//குளிக்கவே நேரம் இல்லாம திரியறோம். வெளிநாட்டு பயணம் வெற்றி பெறட்டும். நானும் நாளை பாரீஸ் கிளம்புகிறேன் (சென்னை பாரிமுனை. நான் நிஜமாவே பாரீஸ் போயிட்டாலும்.......)

    ReplyDelete
  17. @சிவகுமார்:நீங்களும் கிளம்பிட்டா, இந்தியாவை யாரு பாத்துக்கிறது?..

    ReplyDelete
  18. வித்தியாசமா இருக்கு . வாழ்த்துக்கள் .
    வசவு வார்த்தையை தவிர்த்திருக்கலாம் .

    ReplyDelete
  19. @Vijay @ இணையத் தமிழன்: வாழ்த்துக்கு நன்றி விஜய்..நீங்க சொல்றது சரிதான்..ஆனாலும் அது அந்த கேரக்டரை நல்லா விளக்கும்னு தோணுச்சு, அதான்!

    ReplyDelete
  20. வித்தியாசமான ஓர் படைப்பு, படிமங்கள்- குறியீடுகள் கொண்டு விரசமின்றி ஓர் உணர்வின் வெளிப்பாட்டினைக் கவி கலந்த உரை நடையாகத் தரலாம் என்பதற்கு இப் பதிவும் ஓர் எடுத்துக்காட்டு.

    ‘தந்தை தவறு செய்தான்
    தாயும் இடங் கொடுத்தான்
    வந்து பிறந்து விட்டோம்
    வாழ வழியில்லையே....எனும் கவியரசரின் பாடல் வரிகளை உங்களின் இப் படைப்பு எனக்கு ஞாபகமூட்டுகிறது.

    கூடவே ஒரு ஜனனத்தினை இலக்கிய ரசனையுடனும் வெளிப்படுத்தி நிற்கிறது.

    ReplyDelete
  21. @நிரூபன் பாராட்டுக்கு நன்றி நிரூ.

    ReplyDelete
  22. முதல்ல படிக்கும் போது ஒண்ணும் புரியல ... அப்புறம் மேலே படிக்க படிக்க தான் புரிஞ்சிது... அருமையான பதிவு..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.