அவன் இவன் படத்திற்கு அடுத்து விஷால் நடிப்பிலும் எங்கேயும் காதல் தோல்விக்குப் பின் பிரபுதேவா இயக்கத்திலும் ஆக்சன் மசாலாவாக இன்று வெளிவந்திருக்கும் படம் ‘வெடி’. இது 2008ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ’சவுரியம்’ படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் ரீமேக்கியிருக்கிறார்கள்.
ஒளித்து மறைக்கிற அளவிற்கு கதையில் ஒன்னுமில்லை..அதனால.....
விஷாலும் பூனம் கவுரும் அண்ணன் - தங்கை. வறுமையால் சிறுவயதிலேயே மிஷனரியில் தங்கையைச் சேர்த்துவிட்டுப் பிரிகிறார் விஷால். அது புரியாமல், விஷாலை வெறுக்கிறார் பூனம். விஷால் பெரிய ஆளாகி போலீஸ் ஐ.பி.எஸ்.ஆகிறார். தூத்துக்குடி தாதா ஷாயாஜி ஷிண்டேவுடன் மோதி, அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.
விஷால், தங்கை கல்கத்தாவில் இருப்பதை அறிந்து லீவ் போட்டு போகிறார். ஷாயாஜியும் விஷாலைப் பழி வாங்க, பூனத்தைத் தேடி கல்கத்தா வருகிறார். அப்புறம் என்னாச்சு, அண்ணன் - தங்கை சமாதானம் ஆனாங்களா, வில்லன் பழி வாங்கினாரா என்பதே கதை.
ஏதோவொரு ஊரிலிருந்து டவுனுக்கு வரும் ஹீரோ - அங்கே காமெடியன் + ஹீரோயினுடன் கொஞ்சம் சீன்ஸ் - திடீரென ஹீரோவைத் தேடி வரும் தடித்தடியான அடியாட்கள் - திடீர் பாட்ஷா ஆகி, அவர்களை துவம்சம் செய்யும் ஹீரோ - என்ன பிரச்சினை என ஒரு ஃப்ளாஷ்பேக் (இங்கே 2...தங்கச்சிக்கு ஒன்னு- வில்லனுக்கு ஒன்னு) - முடிவில் ரணகளமாகி, சுபமாகும் கிளைமாக்ஸ்!!!
-- இப்படி ஒரு திரைக்கதையுடன் 2008ல் ஆந்திராவில் ஒருபடம் வந்து வெற்றி பெற்றது ஆச்சரியம் இல்லை. ஆனால் அதன்பின் அதே சாயலில் பல படங்கள் (அதில் விஷாலின் திமிரும் ஒன்று) வந்து, நம்மை நையப்புடைத்துவிட்ட பின், அதே டெம்ப்ளேட்டில் வெடியைப் பார்க்க ‘சவுரியமாய்’ இல்லை.
பிரபுதேவாவின் திரைக்கதையில் அவரது டச் இருக்கும். இதில் டைட்டிலில் மட்டுமே பிரபுதேவா இருக்கிறார். வழக்கமாக ஏதாவது ஒரு பாடல் காட்சியில் தலையைக் காட்டுவார், இங்கே அதுவும் மிஸ்ஸிங். எனவே ஏதோவொரு தெலுங்குப்படம் பார்த்த ஃபீலிங் தான் வருகிறதேயொழிய, பிரபுதேவா படம் என்று சொல்ல ஏதுமில்லை.
விஷாலிற்கு பொருத்தமான கேரக்டர் தான். அவரது பாடியும் ஆக்சன் ஹீரோ வேஷத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். முகத்தில் முன்பெல்லாம் எக்ஸ்பிரசன்ஸ் வராது. இப்போது நன்றாகவே நடிக்கின்றார். நன்றி பாலா! ஏற்கனவே சத்யம், தோரணை, மலைக்கோட்டை என ஆப்பு வாங்கியபின்னும் விஷால் இப்படியொரு விஷப்பரிட்சையில் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை.
சமீரா ரெட்டி லாங் ஷாட்டில் மட்டும் இளமையாக, அழகாக இருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமும் உண்டு. எல்லா பிரபுதேவா பட ஹீரோயின் போலவே, இவரும் ஜோதிகா ஸ்டைல் எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறார், நன்றாகவே இருக்கிறது. ஆனால் கதைக்கும் இவருக்கும் சம்பந்தம் கிடையாது. பூனம் கவுருக்கு கதையின் முக்கியப் பாத்திரம். ஹீரோயினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தங்கையாகி விட்டார். சமீரா ரெட்டியை விட பளிச்சென்று இருக்கிறார். ஆனால் ஸ்டில்லில் இருக்கும் அழகு, படத்தில் நடிக்கும்போது இல்லை.
படத்தில் கொஞ்சம் ரிலீஃப், விவேக் தான். சில காட்சிகளில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். அவரும் இடைவேளைக்கு மேல் காணாமல்போய்விட, அரிவாளும் ‘ஏய்’-ம் தான் மிஞ்சுகிறது.படத்தின் முக்கிய பலம், பாடல்கள் தான். எல்லாப் பாடலுமே நன்றாக இருக்கின்றன. ஆனால் நடன அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ’இச்சுக் கொடு’ பாட்டில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்.
படத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் டாக்டராக ஒரு சீனில் வரும் ஊர்வசி. அவரது அப்பாவித்தனமான படபட பேச்சு, இப்போதும் சிரிப்பை வரவழைக்கிறது. வில்லனுடன் அவர் ஆம்புலன்சில் ஊர் சுற்றும் காட்சி நீளம் என்றாலும், ஊர்வசி கலக்குகிறார்.
படம் வழக்கமான படமாக ஆகிவிட்ட நிலையில், ஆர்.டி.ராஜசேகரின் கேமிராவைப் பற்றியும், வி.டி.விஜயனின் எடிட்டிங் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
படத்தில் லாஜிக் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்ன தோணுதோ, அதைச் சொல்கிறார்கள், செய்கிறார்கள். தூத்துக்குடி தாதா, கல்கத்தாவிற்கு வருகிறார், தன் அத்தனை அடியாட்களுடன். எப்படியும் 100 பேர் இருக்கும். அத்தனை தடியர்களையும் மெயிண்டய்ன் பண்ணதிலேயே அவர் ஆண்டி ஆகியிருக்க வேண்டும். கல்கத்தாவில் நடுரோட்டில் வெட்டுக் குத்து நடந்தாலும், போலீஸோ மீடியாவோ கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலை. ஒருவேளை வெளியூர்க்காரங்க அடிச்சுக்கிட்டா, அந்த ஊர்ச் சட்டப்படி அரெஸ்ட் பண்ண முடியாதோ என்னவோ..
படத்தில் நம்மை ஒன்ற விடாமல் செய்வதே தெலுங்கு மசாலா வாடை தான். ஐம்பது பேர் வந்தாலும் அசராமல் அடிக்கும் ஹீரோ, யாராலும் கட்டுப்படுத்த முடியாத, நகரில் அட்டகாசம் செய்யும் வில்லன்கள் (லேடி போலீஸையே ரேப் பண்ணினாலும், நோ ஆக்சன்), பாடல்காட்சிக்காகவே வந்து போகும் ஹீரோயின் என பக்கா தெலுங்குப் படமாகவே வந்திருக்கிறது வெடி. இன்னும் கொஞ்சம் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.
வெடி - ஆந்திராப் புஸ்வாணம்
101 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.