Monday, April 30, 2012

முருக வேட்டை_5 (அதிரடித் தொடர்)


ரவணன் தனக்குத் தான் சரியாகக் கேட்கவில்லையோ என்று நினைத்தான்.

“என்னம்மா சொன்னே?”

“யூரின் அடிக்கடி வருது..ரெண்டு நாளாவே கோல்டு பிடிச்ச மாதிரி தலை கிண்ணுன்னு இருக்கு. தலையும் வலிக்குது. நல்லா தூக்கம் தூக்கமா வருது”

”ஏன் இப்படி..நான் இல்லாதப்போ பீர் ஏதாவது அடிச்சிட்டயா?”

“என்ன பேசுறீங்க நீங்க?”

“பின்னே..தலை வலிக்குது..பிஸ் வருதுன்னு காலங்கார்த்தால கம்ப்ளைண்ட் பண்ணிக் கடுப்பைக் கிளப்பிக்கிட்டு இருக்கே?”

“உங்ககிட்டப் போய்ச் சொன்னேன் பாருங்க..நானே டாக்டர்கிட்டப் போய்க்கிறேன்”

“என்னமோ டெல்லிக்குப் போற மாதிரிப் பேசுற..இந்தா தெருமுனைல இருக்கிற டாக்டரைப் பார்க்க இத்தனை பில்டப்பா?”

“என் கோவத்தைக் கிளப்பாதீங்க..நானே சுகர் ஏதும் வந்திருக்குமோன்னு பயந்துபோய் இருக்கேன்”

“சுகர் வந்தா என்ன? எல்லார்கிட்டயும் மை ஸ்வீட் வைஃப்-னு இண்ட்ரடியூஸ் பண்ணிப்பேன்ல?”

”ஹாஆஆ..ஹாஆஆ.ஹாஆ! உங்களுக்கு வேலை தானே முதல் பொண்டாட்டி..அதையே கட்டிக்கிட்டு அழுங்க. நான் என்னைப் பார்த்துக்கிறேன்”

“நோ..நோ..வேலை எனக்கு செகண்ட் வைஃப் தான்..இந்தக் காலத்துல எவன் ஃபர்ஸ்ட் ஒய்ஃபைக் கவனிக்கிறான்?”

கவிதா சோஃபா மேல் இருந்த தலையணையை அவன்மேல் விட்டெறிந்தாள். சரவணன் இனியும் இங்கே இருக்கக்கூடாதென பாத்ரூமை நோக்கி ஓடினான்.


ரவணன் கிண்டி ஆஃபீசில் நுழையும்போதே, கவிதாவிடம் இருந்து ஃபோன் வந்தது. 

”என்னம்மா?’

“ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துட்டேன்.”

“என்ன சொன்னாங்க?”

“கன்சீவ் ஆகியிருக்கலாம்னு சொன்னாங்க..பிரக்னன்சி டெஸ்ட் எடுத்துக்கச் சொன்னாங்க”

“நிஜமாவா?..எப்போ டெஸ்ட் எடுத்துக்கணுமாம்?”

“லாஸ்டா மென்சஸ் வந்ததுல இருந்து 45 நாள் கழிச்சு”

“அப்போ..ம்ம்..இன்னும் 4-5 நாள் இருக்கே?”

“நான் பார்த்துட்டேன்”

“என்ன?”

“ஆமா, நானே மெடிக்கல்ல வாங்கிட்டு வந்து இப்பவே பார்த்துட்டேன்..பாசிடிவ்”

சரவணனுக்கு குபீரென்று சந்தோசம் பொங்கியது.

“அப்படீன்னா...?”

அப்படீன்னா புராஜக்ட் சக்ஸஸ், நீங்க இனிமே தேவையில்லைன்னு அர்த்தம். நீங்க தாராளமா உங்க செகண்ட் ஒயிஃப்கூடவே இருக்கலாம்னும் அர்த்தம்”

“ஹே...நான் வர்றேன்..இப்போத்தான் வந்திருக்கேன்..மேடத்துகிட்டப் பேசிட்டு வந்திடறேன்”

----------------------------------------------------------------------------------------------------------------
ஃபீசில் நுழைந்ததும் சரவணன் நேரே அகிலாவின் ரூமுக்குப் போனான். அகிலாண்டேஸ்வரி-டி.எஸ்.பி என்ற போர்டைப் புன்சிரிப்புடன் வாசித்தான். ‘ஐ அம் நாட் அகிலாண்டேஸ்வரி..அகிலா..ஜஸ்ட் அகிலா..ஓகே?’ என்று அகிலா முன்பொருமுறை பொங்கியது ஞாபகம் வந்தது.

“குட் மார்னிங் மேம்”

“ஒருநாளைக்கு எத்தனை குட் மார்னிங்? உட்காருங்க”

“சார் வீட்டுக்குப் போனீங்களா மேம்?”

“ப்ச்..இல்லை சரவணன்..ஃப்யூனரலுக்கு போய்க்கலாம்..இப்போப் போய்ப் பார்த்தாக் கஷ்டமா இருக்கும்”

“அதுவும் சரி தான்..எனக்கே கஷ்டமா இருந்துச்சு மேம்”

“கேஸ் சீக்கிரமே நம்ம கைக்கு வந்திரும்..பேசிட்டேன்..சிஎம் வேற கடுப்பாகிட்டாங்க.”

“ஆமா, கேப்பிட்டல்ல, அதுவும் முன்னாள் ஏ.டி.ஜி.பி. கொலை மற்றும் கொள்ளைன்னா எதிர்க்கட்சிகள் ரகளை பண்ணிடுவாங்களே..அசெம்ப்ளி வேற போய்க்கிட்டு இருக்கு”

“நாம சீக்கிரம் கொலையாளியைக் கண்டுபிடிச்சாகணும் சரவணன்.”


”சில கேஸ்ல ஒன்னுமே தடயம் இருந்ததில்லை..அதையே கண்டுபிடிச்சிருக்கோம். இப்போ நிறைய தடயங்கள் இருக்கே..ஈஸியா பிடிச்சுடலாம் மேம்”

“ஓகே, உங்களுக்கு அசிஸ்டெண்ட்டா நான் ஒரு ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன்..யாருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க”

சரவணன் ஆவலுடன் “யாரு மேம்?” என்றான்.

“செந்தில் பாண்டியன்”

சரவணன் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான். பேச நாவே எழவில்லை.

“என்ன சரவணன், ஆச்சரியப்படச் சொன்னா பேயறைஞ்ச மாதிரி ஆகுறீங்க?”

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_5 (அதிரடித் தொடர்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

முருக வேட்டை_4 (அதிரடித் தொடர்)


அகிலாவின் ஃபோன் ஒலித்தது.

"குட் மார்னிங் மேம்”

“சொல்லுங்க சரவணன்..என்ன ஆச்சு?”

சரவணன் பார்த்ததைச் சொன்னான்.

“டார்ச்சர் பண்ணியா கொன்னிருக்காங்க? முத்துராமன் சார் ரொம்ப சாஃப்ட் கேரக்டர்ப்பா..நல்ல மனுசன்..அவரைப் போய் அப்படிப் பண்ண யாருக்கு மனசு வந்துச்சு?..பூஜை ரூம்ல என்ன எழுதியிருந்துச்சு?”

“மார்ஸ்-1024 மேம்”

“தமிழ்லயா எழுதியிருந்துச்சு?”

“இல்லை மேம்..இங்லீஷ்ல!”

“அப்போ அது M-A-R-S-1024-வாக் கூட இருக்கலாம் இல்லியா?”

“ஆமாம் மேம்”

“அந்த ஆங்கிள்லயும் யோசிங்க..நான் மேலிடத்துல பேசி இந்தக் கேஸை நமக்கு மாத்தச் சொல்றேன்..”

“ஓகே மேம்..போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா, இன்னும் சில விஷயங்கள் க்ளியர் ஆகும் மேம்..அவர் எப்போக் கொலை செய்யப்பட்டார், ஸ்ரீனிவாசன் எப்போ இங்கே வந்தார்னு..”

“ஸ்ரீனிவாசனைச் சந்தேகப்படுறீங்களா?”

“எல்லாரையும் சந்தேக வளையத்துக்குள்ள வைக்கிறது நல்லது தானே மேம்..உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா, யார் பண்ணியிருப்பாங்கன்னு?”

“ரவுடிகளுக்கும் போலீஸ்காரனுக்கும் ஊரெல்லாம் எதிரிகள்தான்..யாரைன்னு சந்தேகப்பட? முத்துராமன் சார் பதவியில இருந்தவரைக்கும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..எதற்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டார். சரி, நீங்க கிளம்பிக்கோங்க. நாம ஆஃபீசில் மீட் பண்ணுவோம்”.

சரவணன் பைக்கை ஸ்டார்ட் செய்தான். சரவணனைப் பொறுத்தவரை சிந்திப்பதற்கு ஏற்ற நேரம் பைக் ஓட்டும் நேரம் தான். பல சிக்கலான நேரஙக்ளிலும் பைக்கை எடுத்துக்கொண்டு சும்மா சுற்றி வருவது சரவணனின் வழக்க்ம். இப்போதும் பைக்கை தன் வீடு இருக்கும் எம் எம்.டி.ஏ.காலனி நோக்கி ஓட்டியாடியே ’இதுவரை நடந்தது என்ன? இனி செய்ய வேண்டியது என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

-- முத்துராமன் வீட்டில் தனியே இருக்கையில் கொலையாளியின் வருகை-ஏதோ வாக்குவாதம்+சித்திரவதை - கொலை-பூஜை ரூமில் நகைத் திருட்டு - மார்ஸ் 1024 என்று ஓர் அறிவிப்பு.

முத்துராமன் தனியே தான் இருக்கிறார் என்று தெரிந்து வந்திருப்பதால், நிச்சயம் கொலையாளிகள் அருகிலேயே தான் இருக்கிறார்கள்.

நகைக்காகத்தான் திருட்டு என்றால், மற்ற பீரோக்கள் எதுவும் திருடப்படவில்லை. பூஜை அறையில் மட்டுமே திருட்டு நடந்திருக்கிறது. பூர்வீக நகைகள் தான் திருடு போயிருக்கின்றன. அப்படியென்றால் இது குடும்பப் பிரச்சினையாகக்கூட இருக்கலாம். முத்துராமனின் பிள்ளைகளுக்கிடையே ஏதாவது பூசல் உண்டா என்று விசாரிக்க வேண்டும். அல்லது முத்துராமனுக்கு வேறு ஏதேனும் ஃபேமிலி உண்டா என்றும் பார்க்க வேண்டும்.

சரவணன் தலையை உதறிக்கொண்டான். ச்சே..விசாரணை என்று வந்துவிட்டால், நல்ல மனிதரைக்கூட சந்தேகப்பட வேண்டியிருக்கிறதே என்று நொந்துகொண்டான். ஆனாலும் வேறு வழியில்லை.

ஸ்ரீனிவாசன் மட்டும் ஏன் திரும்பி வந்தார்? அவரும் கொலை நடந்தபோது உடன் இருந்திருப்பாரா? எப்போது சென்னை வந்து சேர்ந்தார்-எப்போது கொலை நடந்தது என இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்க்க வேண்டும்.

பூர்வீக நகைக்காகத்தான் கொலை என்றால், அவரை சித்திரவதை செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வந்தவர்களுக்கே அது இருக்குமிடம் தெரிந்திருக்கலாம்..’வேறு ஃபேமிலி’ என்றால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

மார்ஸ்-1024...இது தான் குழப்பமாக உள்ளது. சரவணனுக்கு விழுப்புரத்தில் பார்த்த கேஸ் ஒன்று ஞாபகம் வந்தது, இதே போன்ற கொலை+கொள்ளை கேஸில் சுவரில் நம்பர்-1 என்று எழுதியிருந்தார்கள். அது என்னவென்று மொத்த டீமும் குழம்பியது. கடைசியில் கொலையாளிகளைப் பிடித்துக் கேட்டால் ‘ஹி..ஹி.சும்மா உங்களை சுத்தல்ல விடுறதுக்கோசரம் பண்ணோம் சார்’னு சொல்லி கடுப்பைக் கிளப்பினார்கள். இதுவும் அது மாதிரி தானா?

ஒன்றும் தெளிவாகாமல் குழப்பமாகவே இருந்தது. பைக்கை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.

பெட்ரூமில் கவிதா இல்லை. 

"அச்சு.....” என்று கூப்பிட்டான். கவிதாவை செல்லமாக அச்சு என்றே அழைப்பான். அது அச்சுப்பிள்ளை-நல்ல பிள்ளை என்பதன் மரூஉ!

“இங்கே இருக்கேன்” என்று பாத் ரூலில் இருந்து சத்தம் வந்தது.

ஹாலில் வந்து உட்கார்ந்தான்.

கவிதா பாத்ரூமில் இருந்து வெளியே வந்தபடியே “இப்போத் தான் வந்தீங்களா?” என்றாள்.

“ஆமாம்”

“எனக்கு ஒரு பிரச்சினைங்க..ரெண்டு நாளா சொல்லணும்னு நினைக்கிறேன், மறந்துடறேன்”

’முத்துராமன் கொலைகேஸே பெரும் தலைவலியாக இருக்கையில் இவள் வேறு ஏதோ பிரச்சினை என்கிறாளே’ என்று யோசித்தபடி, ”என்னம்மா பிரச்சினை, சொல்லு” என்றான்.

“எனக்கு அடிக்கடி யூரின் வருதுங்க” என்றாள்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_4 (அதிரடித் தொடர்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 28, 2012

முருக வேட்டை_3 (அதிரடித் தொடர்)


இன்ஸ்பெக்டரும் சரவணனும் மாடிப்படிகளில் வேகமாக ஏறினார்கள். 

‘குளிக்காம, பல்லுகூட விளக்காம பூஜை ரூமுக்குள்ள வர்றீங்களே..கொஞ்சமாவது இது இருக்கா?’ என்று கவிதா திட்டுவது ஞாபகம் வந்தது. ‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்று நினைத்துக்கொண்டான். மேலே ஸ்ரீனிவாசனும் பூஜை ரூம் வாசலில் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தார்.

சரவணன் அவரை விலக்கிக்கொண்டு பூஜை ரூமுக்குள் பார்த்தான். முதலில் பூஜை ரூமின் அளவு தான் அவனை ஆச்சரியப்படுத்தியது. அவன் வீட்டு ஹால் அளவிற்குப் பெரியதாக இருந்தது. எப்படியும் 20 பேர் நின்றுகொண்டு சாமி கும்பிட முடியும். தெருமுனைப் பிள்ளையார் கோவில்கூட இந்தளவுக்கு இருக்காதே என்று தோன்றியது. 

பூஜை ரூமில் வாசலுக்கு நேரே, ஒரு ஆள் ஏறிப் படுக்கும் அளவுக்கு கிடைமட்டமாக நீண்ட மூன்று செல்ஃப்கள் இருந்தன. 

முதல் அடுக்கில் ஏதும் இல்லை. இரண்டாவதில் வரிசையாக சாமி படங்கள் வைக்கப்பட்டிருந்தன. கீழேயுள்ள செல்ஃபில் பூஜை சாமான்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் கீழே குத்துவிளக்கு ஒன்று அணைந்துபோய் நின்றுகொண்டிருந்தது.

மூன்று செல்ஃப்ஃபுகளுக்கும் மேலே ரத்தத்தால் சிவப்பு நிறத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ரத்தம் வழிந்திருந்ததால் கவனித்துப் படிக்க வேண்டியிருந்தது.

MARS - 1024

சரவணன் குழம்பினான். மார்ஸ்-1024ஆ?..என்ன இது? பூஜை அறையைச் சுற்றிலும் வேறு ஏதாவது எழுதியுள்ளதா என்று பார்த்தான். ஒன்றுமில்லை. ஆனால் பூஜை ரூமின் மூலையில் ஒரு லாக்கர் பெட்டி இருந்தது.

“என்ன அது?” என்று சரவணன் ஸ்ரீனிவாசனிடம் கேட்டான்..

“அது..அது வந்து..ஒன்னுமில்லை..சும்மா பூஜை சாமான்களும் கொஞ்சம் பூர்வீக நகைகளும் வைக்கறதுக்கு...”

”அதோட கீ இருக்கா?”

கான்ஸ்டபிள் “கீழ் செல்ஃப்ல இருக்கு சார் “என்றார்.

இன்ஸ்பெக்டர் “அதைத் திறங்க பார்ப்போம்” என்று அவசரமாக, கொஞ்சம் கடுப்புடன் சொன்னார். சரவணனிடம் இன்னும் கேஸ் கொடுக்கப்பாத நிலையில் அவன் என்கொயரி செய்வது எரிச்சலைக் கிளப்பியது.

கான்ஸ்டபிள் சாவிகொத்துடன் லாக்கரை நெருங்கினார். சரவணன் ஸ்ரீனிவாசனையே பார்த்தபடி இருந்தான். ‘சம்திங் ராங் நித் ஹிம்’ என்று தோன்றியது. ஸ்ரீனிவாசன் படபடப்புடன் நிற்பது போல் இருந்தது.

வீட்டில் எல்லோரும் டூர் போயிருந்த நிலையில் இவர் மட்டும் சீக்கிரம் திரும்பி வந்ததேன்? இப்போதைய படபடப்பு அப்பா இறந்ததாலா அல்லது வேறு எதையாவது மறைப்பதாலா? 

க்ளிக் என்று லாக்கர் திறந்த ஓசை சிந்தனையைக் கலைத்தது. கான்ஸ்டபிள் அனைவரும் பார்க்கும்படி நன்றாகத் திறந்துவிட்டு, ஒதுங்கி நின்றார். லாக்கருக்குள் இரண்டு செல்ஃப்கள் இருந்தன. மேல் செல்ஃபில் கற்பூரம், பத்திகள் இருந்தன. கீழே இருந்த செல்ஃபில் ஏதும் இல்லை. 

இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசனிடம் ” அதுல ஏதாவது இருந்ததா?” என்றார்.

“ஆமா சார்..அதுல தான் சார் எங்க பூர்வீக நகைகள் இருந்துச்சு...அதையும் வச்சு சாமி கும்பிடுவோம்”

“ஓ..அப்போ நகைக்காகத் தான் யாரோ இதைச் செய்திருப்பாங்களோ?’என்றார் இன்ஸ்பெக்டர்.

“இருக்கலாம் சார்” என்று சொல்லும்போதே ஸ்ரீனிவாசனுக்கு வேர்த்துக் கொட்டியது.

சரவணன் பேசக்கூடாது என்று இருந்தாலும், அடக்க முடியாமல் கேட்டான்”சார், கொலையாளியும் வாசல் வழியாத்தான் வந்திருக்கிறான். பூர்வீக நகை பத்துன விஷயங்கள் உங்க குடும்பத்தார்க்கு மட்டும் தானே தெரிஞ்சிருக்கும்?”

“ஆ..ஆமா சார்”

‘ஏன் இவர் இப்படி திக்கித் திணறுகிறார்..சமிதிங் ராங்’ என்று சரவணன் நினைத்தான். பழகியவராயிரற்றே.. என்று சரவணன் முகத் தாட்சண்யத்திற்காக தயங்கிக்கொண்டிருந்தபோது, இன்ஸ்பெக்டர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“ஸ்ரீனிவாசன், அப்போ நீங்களோ உங்க குடும்பத்தில் ஒருத்தரோ கூட பூர்வீக நகைக்காக அப்பாவைக் கொன்னிருக்கலாம், இல்லியா?”

“என்ன சார் இப்படிக் கேட்கிறீங்க?”

“இப்படிக் கேட்கக்கூடாது தான். வேற யாரும்னா ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் முட்டிக்குமுட்டி தட்டிக் கேட்போம். நீங்க பெரிய இடத்துப்பிள்ளை..அப்படிச் செய்யமுடியுமா? செஞ்சா யாராவது பெரிய்ய கைகிட்டப் போவீங்க..என்னை ட்ரான்ஸ்ஃபர்னு தூக்கி அடிப்பீங்க..எனக்கு அது தேவையா? ஆனா ஒன்னு, போலீஸ்காரனை கேணப்பயன்னு நினைக்காதீங்க..நாங்க குற்றவாளியை விடுவோம். ஆனால் கண்டுபிடிச்சுட்டுத் தான் விடுவோம்”

சரவணன் தான் இடையில் புகுவது நல்லது என்று நினைத்தான்.

“ஸ்ரீனிவாசன், மார்ஸ்-1024 அப்படீன்னா என்னன்னு உங்களுக்கு ஏதாவது புரியுதா?”

“இல்லை சார்”

இன்ஸ்பெக்டர் கோபத்துடன் முணுமுணுத்தார் “புரியாது..புரியாது..ஸ்டேசனுக்குக் கொண்டுபோகாதவரைக்கும் இந்தாளுக்கு ஒன்னும் புரியாது”

"என்ன சார் இப்படி ஈவிரக்கமில்லாமப் பேசுறீங்க..நானே என் அப்பாவை இப்படி கொடூரமா கொன்னுட்டாங்களேன்னு வருத்ததுல இருக்கேன்..நீங்க இப்படி அநியாயமா என்மேலயே பழி போடுறீங்களே?”

“வருத்தமா? நான் வரும்போது நல்லாத்தானேய்யா இருந்தீங்க? இப்போ பூஜை ரூமுக்கு வந்தப்புறம்தானே உங்க மூஞ்சி பேயறைஞ்ச மாதிரி ஆச்சு?”

ஸ்ரீனிவாசன் பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_3 (அதிரடித் தொடர்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, April 24, 2012

நாம ஏங்க இப்படி இருக்கோம்?



குவைத்தில் நாங்கள் இருக்கும் ஏரியாவில் ஹைவேஸ் என்றொரு கடை உண்டு. கடைப் பெயர் ஹைவேஸ் என்பதால், முதல் முறை கேட்கும் பலரும் குழம்பி விடுவார்கள், நானும்..

என் அண்ணன் ஒருவர் நான் இங்கு வந்தபோது சொன்னார் :’ நம்ம ஊர் திங்ஸ் எது வேணும்னாலும் ஹைவேஸ் போ..கிடைக்கும்” நானும் ஏதோ ஹைவேஸ் ரோடைத் தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு “அப்படியாண்ணே, அங்க நிறையக் கடை இருக்கா?” என்றேன்.

அவரும் சளைக்காமல் “ஆமா, அந்த ஏரியால நிறையக் கடை இருக்கு. ஹைவேஸும் இருக்கு” என்றார்.
“ஹைவேஸ்ன்னா ரொம்ப லென்த்தா இருக்குமே..அதுல கடைகள்லாம் எந்த இடத்துல வரும்? ஏதாவது லேண்ட் மார்க் சொல்லுங்க “என்றேன். 


பிறகு தான் அவர் சுதாரிச்சுக்கொண்டு “தம்பி, ஹைவேஸ்ங்கிறது ரோடு இல்லை, கடை” என்றார்.

அதன்பிறகு பெரும்பாலும் அங்கேயே பொருட்களை வாங்குவது வழக்கம். ஒரு ட்ராலியில் பையனை உட்கார வைத்துக்கொண்டு (பின்னே, உன்னையா உட்கார வைக்க முடியும்னு கமெண்ட் போட்டீங்க........) ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம்.


சென்ற மாதத்தில் ஒருநாள் அதே போன்று போயிருந்தோம்..மகனும் சந்தோசமாக ட்ராலியில் உட்கார்ந்தபடியே வந்தான். அப்போது 25 வயது மதிக்கதக்க ஒருவர் என் மகனைப் பார்த்து “ஏ, செல்லக்குட்டி, கட்டித்தங்கம்’ என்று கொஞ்சினார். அநேகமாக ஏதோ கூலி வேலை செய்வதற்காக இங்கு வந்திருப்பார்போல் தோன்றியது. கொஞ்சம் பழுப்பேறிய இன் பண்ணாத சட்டையும் கலைந்த தலையுமாக கொஞ்சம் கரடுமுரடான தோற்றம் தான்.

என் மகனை அறியாதோர் கொஞ்சுவது புதிதல்ல என்பதால் நானும் தங்கமணியும் சிரித்தபடியே அவரை விலகிக்கொண்டு வெஜிடபிள் செக்சன் நோக்கி நகர்ந்தோம். 

கொஞ்ச நேரம் கழித்து அதே ஆள் மீண்டும் வந்தார். “என்னய்யா..செல்லக்குட்டி..”என்று ஆரம்பித்தார்.நாங்களே அன்று லேட் ஆகி விட்டதே என்று அவசர அவசரமாக வந்திருந்தோம். ‘இந்தாளு வேற இம்சை பண்றானே’ என்று எரிச்சலாய் வந்தது. ஆனாலும் நாம் டீஜண்டு பீப்பிள் இல்லையா, எனவே மீண்டும் புன்சிரிப்புடன் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு மில்க் செக்சன் போனேன். அருகிலேயே சாக்லேட்ஸும் இருந்ததால், பையன் இறங்கிப் போய் சாக்லேட்ஸை எடுக்க ஆரம்பித்தான்.

ஒரு ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது, அதே ஆள் மீண்டும் பையன் முன் வந்து நின்றார். “எப்படிய்யா இருக்கே...என் ராசா” என்று ஆரம்பித்தார். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. அவர் தொடர்ந்து அருகே இருந்த சாக்லேட் பார் ஒன்றை எடுத்து பையனிடம் நீட்டி “இந்தா வச்சுக்கோய்யா..காசு ஏதாவது வேணுமா..இந்தா” என்றபடியே பாக்கெட்டிலிருந்து கசங்கிய தினார்களை எடுக்க ஆரம்பித்தார்.

நான் கோபத்துடன் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்று சொன்னேன், அல்லது கத்தினேன். அவர் முகம் சுண்டிப் போயிற்று. என்னையும் தங்கமணியையும் பரிதாபமாக மாறி மாறிப் பார்த்தவர், பையன் முன் மண்டியிட்டு உட்கார்ந்தார். பையனின் கன்னத்தைத் தாங்கியபடியே “எம் புள்ளை மாதிரியே இருக்கியேய்யா...வந்து மூணு வருசமாச்சு..அவ மாசமா இருக்கும்போது வந்தவன்..ஃபோட்டோல தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்...அதாம்யா இப்படி” என்று சொன்னார்.

சொல்லும்போதே கண் கலங்கியது. என்னையும் தங்கமணியையும் நிமிர்ந்து பார்க்காது தலையைக் குனிந்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

நாங்கள் விக்கித்துப் போய் நின்றோம்.

தன் குடும்பத்திற்காக, தன் சந்தோசங்களைத் துறந்து அரபு தேசத்திற்கு வந்த பல சொந்தங்களை நான் அறிவேன். மூணு வருசம் தான்,,கொஞ்சம் காசு சேர்த்துட்டுப் போயிடணும் என்று ஆரம்பித்து பிள்ளைகளை நல்ல ஸ்கூலில் படிக்க வைக்கணும்..நல்ல இஞ்சினியரிங் காலேஜில் சேர்க்கணும்..நல்ல இடத்துல கட்டிக்கொண்டுக்கணும் என்று தேவைகள் கூடிக்கொண்டே போக, முப்பது வருடங்களுக்கும் மேலாக அரபு தேச வெயிலையும், குளிரையுமே துணையாகக் கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்பவர்கள் பலர் இங்கே உண்டு.

அவரும் அத்தகையோரில் ஒருவராய் இருக்கலாம். அறியாமல் செய்த தவறு தான் என்றாலும் இன்னும் மனது உறுத்திக்கொண்டே இருக்கிறது. 

’சக மனிதனின் அன்பைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நம்மை நாம் சுருக்கிக்கொண்டதின் காரணம் தான் என்ன..அன்பைக் கண்டுகூட நமக்குப் பயம் வருவது ஏன்..மனிதர்களின் மீதான நம்பிக்கையை நாம் முற்றிலும் இழந்து விட்டோமா?’ என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்.


மேலும் வாசிக்க... "நாம ஏங்க இப்படி இருக்கோம்?"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, April 22, 2012

முருக வேட்டை_2 (அதிரடித் தொடர்)


முத்துராமன் வீட்டின் முன் போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. சரவணன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, கேட்டை நோக்கி நடந்தான்.

கேட் வாசலில் நின்றிருந்த போலீஸ்காரர் மறித்தார்.

“சரவணன்..சிபிசிஐடி” என்றபடியே ஐடெண்டிகார்டைக் காட்டினான் சரவணன். ஸ்விட்ச் போட்டாற்போல் சட்டென்று விறைப்பாகி சல்யூட் அடித்தார் கான்ஸ்டபிள்.

சரவணன் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தான். அகிலாவுடன் இங்கே ஒருமுறை வந்தது ஞாபகம் வந்தது. அகிலா அப்போது தான் சிபிசிஐடி டிஎஸ்பியாக புரமோட் ஆகியிருந்தார். எனவே முத்துராமனிடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள். அப்போதே அவர் வயதாகி தளர்ந்துபோய் இருந்தார். அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? பணத்திற்காகவா? என்று யோசித்தபடியே வீட்டினுள் நுழைந்தான்.

தடித்த உருவமுள்ள போலீஸ்காரர் ஒருவர் “யாருப்பா நீ? உன்னை யார் உள்ளே விட்டது?’ என்றபடியே பாய்ந்து வந்தார்.

“சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சரவணன்..ஸ்ரீனிவாசன் ஃப்ரெண்ட்”என்றபடியே கையில் இருந்த கார்டைக் காட்டினான்.

“ஓ..வாங்க சார் வாங்க..நான் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்..நினைச்சேன், என்னடா இவ்வளவு நேரம் ஆச்சே..சிஐடி குரூப்பைக் காணோமேன்னு..தண்ணி லாரியில பன்னி அடிபட்டாலே சிபிசிஐடி தான் கரெக்டா விசாரிக்கும்னு கேஸை உங்ககிட்டத் தூக்கிக் கொடுத்துடுவாங்க..இப்போ யானையே அடிபட்டிருக்கு..விட்ருவீங்களா? நீங்கள்லாம் எங்களை விட புத்திசாலிங்க..துப்ப்ப்பறியறதுல வல்லவங்க..நாங்க சாதா போலீஸ் தானே..”

இந்த மாதிரிப் பேச்சுகள் சரவணனுக்குப் புதிதல்ல. எப்போதெல்லாம் கேஸ் கை மாறுகிறதோ, அப்போதெல்லாம் இதே போன்ற வார்த்தைகள் வந்து விழும். எனவே அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக “அப்படியில்லை சார்..ஸ்ரீனிவாசன் ஃபோன் பண்ணாரு..அதான் வந்தேன்..அவரை எங்கே?”

“மேல ஆறு ரூம் இருக்கு..ஆறையும் ஒன்னுன்னா செக் பண்ணச் சொல்லியிருக்கேன். அவரையும் கூட வச்சுக்கிட்டே செக் பண்றாங்க”

”ஓகே, உள்ளே போய்ப் பார்க்கலாமா?” என்றான் சரவணன்.

"ம்..போங்க..லெஃப்ட் சைடுல ரெண்டாவது ரூம்..”

“தெரியும் சார்..ஏற்கனவே வந்திருக்கிறேன்”

சரவணன் முத்துராமனின் ரூமை நோக்கி நடந்தான். இரண்டு போலீஸார் தரையில் கிடந்த முத்துராமனைச் சுற்றி சாக்பீஸால் கோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். முத்துராமன் வெறும் அண்டர்வேயருடன் கிடந்தார். கட்டியிருந்த கைலியை இரண்டாகக் கிழித்து, பாதி காலைக் கட்டவும், பாதி வாயைக்கட்டவும் யூஸ் பண்ணியிருந்தார்கள். சரவணன் நெருங்கி உடலை உற்றுப்பார்த்தான்.

உடம்பு முழுக்க அடி வாங்கி கன்னிப்போயிருந்தது. கை நகக்கணுவில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. கழுத்து இறுக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. டார்ச்சர்..ரொம்ப டார்ச்சர் பண்ணிக் கொலை செய்திருக்கிறார்கள். இவ்வளவு டார்ச்சர் செய்திருக்கிறார்கள் என்றால், ஏதாவது தனிப்பட்ட குரோதம் காரணமாக இருக்கலாம். இல்லையென்றால் பணம் அல்லது ஏதாவது தகவல் கேட்டு சித்திரவதை செய்திருக்கலாம்.

சரவணன் இது போன்ற எத்தனையோ பிணங்களைப் பார்த்திருக்கிறான். ஆனாலும் ஏற்கனவே அறிந்த மனிதரை இந்தக் கோலத்தில் பார்ப்பது கஷ்டமாக இருந்தது. இதனால்தான் அகிலா இங்கு வரவில்லை என்று புரிந்தது.
 அந்த அறையை நன்கு பார்த்தான்.கட்டில்கூடக் கசங்கவில்லை. வீட்டில் வேறு எங்கோ வைத்து சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, இங்கு வந்து போட்டிருக்க வேண்டும்.

சரவணன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். இன்ஸ்பெக்டர் ஹாலில் நின்றுகொண்டிருந்தார். 

“என்ன சார்..பார்த்தாச்சா?” என்றார்.

“பார்த்தாச்சு சார்..டார்ச்சர் பண்ணிக் கொன்றுப்பாங்க போல..?”

“ஆமாம்..ஹால் சோஃபாவைப் பாருங்க..உட்கார்ந்து பேசியிருக்காங்க..அப்புறம் தான் தகராறு ஏதோ நடந்திருக்கு”

“கரெக்ட் சார்..அப்போ வாசல் வழியாத் தான் உள்ளே வந்திருக்காங்களா?”

“ஆமா..அப்படித்தான் இருக்கணும்..வேற எங்கயேயும் ப்ரேக் பண்ணலை”

"அப்போ கொலையாளிகள் முத்துராமன் சாருக்கு நல்லாத் தெரிஞ்சவங்களாத்தான் இருக்கணும், இல்லியா?”

சரவணன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, மேலேயிருந்து “சார்..” என்ற அலறல் கேட்டது.

நிமிர்ந்து பார்த்தால் கான்ஸ்டபிள் ஒருவர் “உடனே மேல பூஜை ரூமுக்கு வாங்க சார்” என்றார் வெளிறிய முகத்துடன்.


(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_2 (அதிரடித் தொடர்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, April 21, 2012

முருக வேட்டை_1 (அதிரடித் தொடர்)


முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எங்கள் குமரன் என்று மறைமொழி கூறும்

உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ.... 

தூக்கத்தில் ஆழ்ந்திருந்த கவிதா ‘யாரு..இந்த நேரத்துல?’ என்று யோசித்தபடியே கண்ணைத் திறக்காமலேயே மொபைல் ஃபோனை எடுத்தாள். சுசீலாவின் தேவகுரலை கட் செய்தபடியே “ஹல்ல்லொ” என்றாள்.

”ஹாய் கவி, சாரி டூ டிஸ்டர்ப் யு..குட் மார்னிங்”

குரலைக் கேட்டதும் அகிலாக்கா என்று தெரிந்தது.

“அக்காவா..குட் மார்னிங்கா?..மணி என்ன?” கண்ணைத் திறக்காமலே கேட்டாள் கவிதா.

“ஏர்லி மார்னிங்..4.10..சரி சரி..நல்ல தூக்கத்துல இருக்கேன்னு தெரியுது..சரவணனை எங்கே? அவன்கிட்ட ஃபோனைக் கொடு”

”ம்..” என்றபடியே கண்ணைத் திறக்காமலேயே அருகில் படுத்திருந்த சரவணனை தட்டி எழுப்பினாள்.

“என்னங்க..என்ன்னங்க”

சரவணன் திடுக்கிட்டு விழித்தான். 

”என்னம்மா?”

“ஃபோன்..அகிலாக்கா”


அகிலா சிபிசிஐடியில் டிஎஸ்பி. சரவணனின் உயரதிகாரியாக இருந்தும், கவிதாவிடம் உரிமையோடு பழகுபவள்.

ஃபோனை வாங்கியவுடன் “குட் மார்னிங் மேம்” என்றான்.

”மார்னிங் சரவணன்..உங்க மொபைல் என்னாச்சு?”

“என்னாச்சு? ஒன்னும் ஆகலையே..இங்க தான் இருக்கு”

“நல்லாப் பாருங்க..ஸ்விட்ச்டு ஆஃப்-னு வருது.”

‘ஃபோனை எங்கே வச்சோம்?’ என்று இருட்டில் உட்கார்ந்தபடியே யோசித்தான். சார்ஜ் போட்டது ஞாபகம் வந்தது. ஸ்விட்ச் போர்டைப் பார்த்தான். சார்ஜர் மாட்டியிருப்பது தெரிந்தது. கூடவே ப்ளக் பாயிண்டின் ஸ்விட்ச்சை ஆன் செய்யாததும் தெரிந்தது. க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டராக இருந்தும், இப்படிச் சொதப்புகிறோமே என்று நினைத்துக்கொண்டான்.

“அடடா..சார்ஜ் இல்லாம ஃபோன் ஆஃப் ஆயிடுச்சு போல”

“சரி, இப்போ உடனே கிளம்புங்க..நான் சொல்ற இடத்துக்குப் போங்க”

எப்போது போலீஸ் வேலையில் சேர்ந்தானோ, அப்போதிருந்து இரவில் எழுந்து ஓடி ஓடி பழகிவிட்டதால், கேசுவலாக “’ஓகே..எங்கே போகணும்னு சொல்லுங்க.” என்று கேட்டுக்கொண்டே வாஷ் பேசினில் முகம் கழுவினான்.

“முத்துராமன் சார் வீட்டுக்குப் போ”

முத்துராமன் சிபிசிஐடிப் பிரிவின் ஏ.டி.ஜி.பி.யாக இருந்து ரிட்டயர்ட் ஆனவர்..ஆனாலும் இப்போதும் ஏதாவது சிக்கலான கேஸ் என்றால் அவரிடம் சென்னை டீம் அறிவுரை கேட்பது வழக்கம். 

”அவர் வீட்டுக்கா? இப்படி விடியற்காலையில் அவரைத் தொந்தரவு செய்யுமளவிற்கு, கேஸ் ஒன்றும் இல்லையே மேம்?”

“இனிமே நாமளே நினைச்சாலும் அவரைத் தொந்தரவு செய்ய முடியாது”

“அப்படீன்னா?”

“அப்படீன்னா அதே தான்”

“ச்சு..ச்சு..இறந்துட்டாரா? ரொம்ப நல்ல மனுசராச்சே”

“சும்மா சாகலை...ஹி’ஸ் மர்டர்ட்”

“என்ன?”

“ஆமாப்பா..சாரை யாரோ மர்டர் பண்ணிட்டாங்களாம்..அவர் பையன் ஸ்ரீனிவாசன் ஃபோன் பண்ணியிருந்தார். ஃபேமிலில எல்லாரும் வெளில எங்கேயே போயிருந்தாங்களாம்..சார் மட்டும் போகலை..தனியா இருந்திருக்கார்..அப்போத் தான் யாரோ இப்படிப் பண்ணிட்டாங்க..ஸ்ரீனிவாசன் அங்கே தான் இருக்கார்”

அகிலா பேசிக்கொண்டிருக்கும்போதே ட்ரெஸ் மாற்றி முடித்திருந்தான் சரவணன்.

“லோக்கல் போலீஸும் ஸ்பாட்ல இருக்கு. எப்படியும் இந்த கேஸ் நமக்குத்தான் வரும்.நீங்க உடனே அங்கே போங்க”

சரவணன் கவிதாவைப் போய்ப் பார்த்தான். தூங்கிப்போயிருந்தாள். இது வழக்கமான விஷயம் தான் என்பதால் வீட்டுச் சாவியையும் பைக் சாவியையும் எடுத்துக்கொண்டு, வெளியேறினான்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_1 (அதிரடித் தொடர்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, April 16, 2012

குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்...


குவைத் முத்தமிழ் கலை மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் கலந்துகொள்ளப் போவதாய் அறிந்த போது, சந்தோசத்தில் துள்ளினேன். பலவருடங்களாக ஜெயமோகனின் வாசகன் என்பதாலும், அவருக்கு அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்புவன் என்பதாலும் கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்தே தீருவது என்று முடிவு செய்தேன். எனவே ஒரு வரவேற்பு மின்னஞ்சலை அனுப்பிவைத்தேன். அவரும் நேரில் சந்திப்போம் என்று பதில் அனுப்பிவிட குஷியானேன்.

அதே நேரத்தில் என் மனம் கவர்ந்த சில எழுத்தாளர்களை சந்தித்த தருணங்கள் ஞாபகத்தில் வந்தன. சுஜாதாவை மெரீனா பீச்சில் திடீரென நேரில் பார்த்து, இன்ப அதிர்ச்சியில் ஒன்றுமே பேசாமல் சிலை மாதிரி நின்றேன். அவர் சிறுபுன்னகையுடன் கடந்து சென்றார். திரும்பிச் சென்று பேசலாம் என்றால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. "நான் உங்க வாசகன் சார்..நல்லா எழுதுறீங்க” என்று மட்டுமே சொல்லத் தோன்றியது. ஆனாலும் சொல்லாமல் நடையைக் கட்டினேன். அதே போன்றே பாலகுமாரனைப் பார்த்தபோதும் ‘என்னத்தைப் பேச...’ என்று வியப்புடன் பார்த்தபடி நகர்ந்திருக்கிறேன்.
நாஞ்சில் நாடன் பேசுகிறார்
எனவே ஜெயமோகன் வருகிறார் என்றதும் என்ன செய்வது என்று யோசித்தேன். எழுத்தாளனை வாசகன் சந்திப்பது அவசியம் தானா? எழுத்தாளன் சொல்ல விரும்புவது அனைத்தையும் எழுத்தின் மூலமே சொல்லியிருப்பாரே..நேரில் சொல்வதெற்கென்றே தனியாகக் கருத்துக்களை வைத்திருப்பார்களா என்று யோசனை ஓடியது. ’ஜெயமோகனை எதற்காகச் சந்திக்க வேண்டும்?’ என்று யோசிக்கையில் ‘ஜெயமோகன் ஏன் எனக்கு முக்கியமானவராய் ஆனார்?’ என்று யோசித்தேன். எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்து, எத்தனையோ உபயோகமான கருத்துக்களை சிறுவயது முதலே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த வகையில் ஜெயமோகன் எனக்கு முக்கியமானவர். ஏன் என்றால், அதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

மூன்றாவது காரணம், காந்தியடிகளை இந்த தலைமுறையிடம் புதிய வெளிச்சத்தில் இன்றைய காந்தி மூலம் அறிமுகப்படுத்தியது. உள்நாட்டு-வெளிநாட்டு சக்திகளால் தொடர்ந்து வசை பாடப்பட்டு, ’காந்தியம் என்பது வழக்கில் இருகக்கூடாத, இருக்க முடியாத போலி கற்பனாவாதம், காந்தியத்தை ஏற்பது நவநாகரீக உலகில் கோமாளித்தனம்’ என்று பெரும்பாலான அறிவுஜீவிகள் சொல்லிகொண்டிருந்த வேளையில் ஜெயமோகன் துணிந்து இன்றைய காந்தியை எழுதினார். மானுட தரிசனங்களில் மகத்தான ஒன்றாக சத்தியாக்கிரகத்தை முன்னிறுத்தினார். காந்தியத்தின் மேல் ஈடுபாடு கொண்ட எனக்கு அது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

இரண்டாவது காரணம், முரணியக்கம் என்ற ஒன்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது மார்க்ஸிய சிந்தனைகளில் இருந்தே தான் பெற்றதாகச் சொன்னாலும், பெருவாரியான தமிழ் வாசக வட்டத்திடம் தொடர்ந்து அதை எல்லா முக்கியமான விஷயங்கலிலும் போட்டுக்காட்டி, விளக்கியது ஜெயமோகன் தான். 
மேடையில் ஜெயமோகன்
முதல் காரணம், அவர் எனக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலில் சொல்லிய ஒரு வாக்கியம். “நமது மனநிலையையும் கருத்துக்களையும் நாமே தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமே தவிர எதற்கும் எதிர்வினையாக அவற்றை உருவாக்கக்கூடாது” எனது சொந்த வாழ்விலும் அலுவலக வாழ்விலும் அந்த வாக்கியம் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. எதற்கும் எளிதில் ரியாக்ட் பண்ணாமல், நமது இயல்பு/சுயதர்மத்தின்படியே நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆணியடித்தாற்போன்று அவ்வாக்கியம் சொல்லியது. பல இக்கட்டான தருணங்களிலும், உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை இழக்கும் சூழ்நிலைகளிலும் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருக்கும் ஆற்றலை அது கொடுத்தது.


எனவே இந்த மூன்று காரணங்களுக்காக ஜெயமோகனைச் சந்தித்து நன்றி கூறுவது என்று முடிவு செய்தேன். ஒரு வாசகன் எழுத்தாளனைச் சந்திக்க, இதை விடவும் நல்ல காரணம் இருக்க முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.

விழாவுக்குச் செல்ல ஆஃபீசில் பெர்மிசன் வாங்கிக்கொண்டேன். (எனக்கு ஜெயமோகனை நல்லாத் தெரியும் சார்..நான் போகலேன்னா ஃபீல் பண்ணுவார் சார்..ஹி..ஹி) அதன்பிறகே தெரிந்தது என் நெருங்கிய நண்பரின் நண்பர் பழமலை.கிருஷ்ணமூர்த்தி தான் விழா ஏற்பாட்டாளர் என்று. பின்னர் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கே ஆவலுடன் போய் காத்திருந்தேன்.  இலக்கிய விழாவுக்கு கூட்டம் வராது, ஜெயமோகனுடன் நன்றாகப் பேசலாம் என்று நினைத்தால், குடும்ப சகிதம் பலரும் வந்து அரங்கத்தையே நிறைத்திருந்தார்கள். ’அவரை இந்தக் கூட்டத்தில் எப்படி நெருங்குவது? அப்படியே நெருங்கினாலும் பிரபல எழுத்தாளர் ஆயிற்றே..நம்மை ஞாபகம் வைத்திருப்பாரா..சொக்கா..எனக்கில்லே..எனக்கில்லே’ என்று மனதிற்குள் புலம்பியபடியே உட்கார்ந்திருந்தேன். 

ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் வந்து சேர்ந்தார்கள். நாஞ்சிலார் கல்லூரி பேராசிரியர் போல் தோற்றமளித்தார். ஜெயமோகன் ஜீன்ஸில் கேசுவலாய் வந்திருந்தார்.விழா ஆரம்பமாக குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது ஜெயமோகன் யாரையோ பார்க்க எழுந்து அரங்கத்தை விட்டு வெளியே வந்தார். நானும் இது தான் சமயமென கூட்டத்தில் இருந்து நழுவி, வெளியேறினேன். அதற்குள் அவர் அரங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார். ‘வடை போச்சா..’ என்று அவசரமாக நெருங்கினேன்.
ஜெயமோகனுடன் நான்..ஒளிவட்டத்துடன்!
“ஹலோ சார்..”என்றபடியே கைகுலுக்க கை நீட்டினேன். அவரும் சிரித்தபடியே கை குலுக்கும்போது “நான்..செங்கோவி” என்றேன். அதற்கு அவர் ‘அப்படி யாரையும் தெரியாதே’ என்று சொல்லவில்லை..”செங்கோவியா..மெயில் அனுப்புவீங்களே..”என்றார். மிக மென்மையான குரலுடன் அவர் கேட்டதும் சந்தோசம் தாங்கவில்லை..அவரை வழிமறித்திருப்பது ஞாபகம் வந்ததால் ‘ஓகே சார்..விழா முடியட்டும் பார்ப்போம்’ என்று சொல்லி வழிவிட்டேன். அவரும் சரியென்றபடியே நகர்ந்தார்.

விழாவில் ஜெயமோகன் ‘அறம் எனப்படுவது யாதெனின்..’ என்ற தலைப்பில் பேசினார். அறம் என்ற வார்த்தையின் வேர்ச்சொல்லில் ஆரம்பித்து சங்ககாலம்-சிலப்பதிகாரக் காலம்-தற்கால அறம்-இல்வாழ்வில் அறம்-துறவு அறம்-அரசியல் அறம் என பிரமிடு போல் அடுக்கிகொண்டே வந்து அனைவருக்கும் பொதுவான மானுட அறத்தில் பேச்சை முடித்தார். ‘குழந்தையிடம் விளையாட்டுப் பொருளைக் கொடுத்துவிட்டு உடைக்காமல் விளையாடு என்று சொல்வதைப் போல இந்தப் பிரபஞ்சம் மனிதனிடம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று ஜெயமோகன் சொன்னதை மிகவும் ரசித்தேன். (இப்போதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்).

நாஞ்சில் நாடன் “தமிழில் கலை இலக்கியங்கள்-எதுவரை சென்றோம்..எங்கே நிற்கிறோம்”என்ற தலைப்பில் பேசினார். சங்ககாலப் பாடல்கள் பலவற்றையும் விளக்கிச் சொல்லி, அப்பேர்ப்பட்ட பெருமைமிகு பாரம்பரியம் மொண்ட நாம், நம் பிள்ளைகளுக்கு மரங்களின்/பறவைகளின் பெயர்களைக்கூட தமிழில் சொல்லித் தருவதில்லையே..புறநானூறு-கம்பராமாயணம் போன்றவற்றைச் சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை..அடிப்படை விஷயங்களையாவது சொல்லலாம் அல்லவா” என்று கேள்வி எழுப்பி, மொத்தக்கூட்டத்தையும் சிந்திக்க வைத்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல் எழுத்தாளர்களை கூட்டம் மொய்த்துக்கொண்டது.கூட்டம் காலியாகி சாப்பாடை நோக்கி நகர்ந்ததும் நான் மெதுவாக முன்னேறி நாஞ்சிலாருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, ஜெயமோகனை அடைந்தேன். 
மீண்டும் நாங்கள்...
“உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம் சார்..நாலு வருசம் முன்ன எனக்கு மெயிலில் நீங்கள் சொன்ன ‘நம் மனநிலையையும்....’ வாக்கியம் இன்னைக்கும் எனக்கு உபயோகமா இருக்கு சார்” என்றேன்.

“அது உண்மை..அப்படித்தானே நாம இருக்கணும்” என்றவர் தொடர்ந்து “செங்கோவி..இது என்ன பெயர்?” என்று கேட்டார். செங்கோவி-பெயர்க்காரணம் பதிவை சுருக்கமாகச் சொன்னேன்.

“கோவில்பட்டியா நீங்க? அங்கே எங்கே? செண்பகப்பேரியா? அது எங்கே இருக்கு? தேவதச்சன் தெரியுமா? பார்த்ததில்லையா? அடுத்த முறை வரும்போது அவரைப் போய்ப் பாருங்க..முடிந்தால் நாமளும் மீட் பண்ணுவோம்” என்று சகஜமாகப் பேசிக்கொண்டே போனார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, இளைஞர் கூட்டம் ஒன்று அவரை நெருங்கி விஷ்ணுபுரம் பற்றிப் பேச ஆரம்பித்தது.

“படிக்கவே கஷ்டமா இருக்கு சார்” என்று ஒரு அன்பர் புகார் செய்தார். நானும் அதிமேதாவியாக "முதல்-40-50  பக்கங்கள் தான் அப்படி இருக்கும்..பிறகு எளிதாக இருக்கும்..ஏன் சார், பர்ப்பஸாவே அப்படி எழுதினீங்களா? இதைத் தாண்டி வர்றவங்க வரட்டும்ங்கிற மாதிரி...?”என்றேன். 

அவர் சிரித்தபடியே “அப்படி இல்லை..மொத்தமும் ஒன்னுபோல தான் இருக்கு..படிக்கப் படிக்க பழகிடுது”என்றார்.

மேலும் பலரும் அவரைச் சந்திக்க,பொண்ணு பார்க்க வந்தவர்கள் போல் அவரை உற்றுப்பார்த்தபடியே நின்றுகொண்டிருந்ததால், அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன். நாஞ்சில் நாடனை அதிகம் நான் படித்ததில்லை என்பதால், அவரை நான் நெருங்கவில்லை.

அவர் காந்தியத்தை எழுத மட்டுமே செய்யவில்லை, வாழ்க்கையிலும் காந்திய எளிமையை கடைப்பிடிக்கிறார் என்று தெரிந்தது. எவ்வித அலட்டலும் இன்றி, சிரித்த முகமாய் பேசிக்கொண்டிருந்தார். தினமும் 1000 ஹிட்ஸ் வந்தாலும் தலைகால் புரியாத நபர்களுக்கு மத்தியில் இப்படி ஒருவரா? கொஞ்சம்கூட கெத்து காட்டாமல் ஏமாற்றி விட்டாரே என்று தோன்றியது. ‘ஒரு படைப்பாளியை நேரில் சந்திக்கும்போது நீங்கள் ஏமாற்றம் அடையாவிட்டால், அவர் ஒரு போலி என்று கண்டுகொள்ளுங்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் ஒருமுறை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. 


அதுவொரு இனிய பொன்மாலைப் பொழுதாகவே முடிந்தது.

மேலும் வாசிக்க... "குவைத்தில் ஜெயமோகன் & நாஞ்சில் நாடன்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் வலையுலகில் எனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்குகிறேன். 

உதயநிதியின் ஹீரோ அறிமுகம், சந்தானம்-இயக்குநர் ராஜேஸின் கலக்கல் காம்பினேசன், தங்கத்தலைவி ஹன்சிகாவின் நான்காவது படம்(!!!) என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியிருக்கும் படம் ஓகேஓகே!

இந்தப் படத்தின் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வராத கதை ஒன்றும் அல்ல. இயக்குநர் ராஜேஸ் எப்போதும் போல ரொம்ப சிம்பிளான கதையைவே எடுத்துக்கொண்டிருக்கிறார். உதயநிதி ஹன்சிகாவைக் கண்டதும் காதல் கொள்கிறார். நண்பன் சந்தானம் துணையுடன் காதலில் வென்றாரா இல்லையா என்பதே கதை. இந்த சிம்பிளான கதையை சொல்லியிருக்கும் விதம் தான் சினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம் என்பதற்கு இன்னொரு சாட்சி. சீனுக்கு சீன் சிரிப்பு வெடிகளுடன் ரகளையாக படத்தைக் கொண்டு சென்றுள்ளார் ராஜேஷ்.

உதயநிதி தமிழ்சினிமாவுக்கு புதிய நல்வரவு. அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத கேரக்டரைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி ஜெயித்து விடுகிறார். பிரபலத்தின் வாரிசாகக் களமிறங்குவதில் உள்ள சிக்கல், ஆடியன்ஸ் அனைவரும் வாத்தியாராக மாறி எப்படி நடக்கிறார்/சிரிக்கிறார்/நடிக்கிறார்/ஆடுகிறார்/ஃபைட் செய்கிறார் என உன்னிப்பாகக் கவனிப்பார்கள். எனவே அதிகம் நடிப்புத் திறமை தேவைப்படாத, அடுத்த வீட்டுப் பையன் போன்ற கேரக்டரில் இயல்பாகப் பொருந்திப் போகிறார். டான்ஸ் ஆடவும் முயற்சி செய்கிறார். நடிப்பில் ஹன்சிகாவை விட பெட்டர் (கடமைன்னு வந்தப்புறம் உண்மையைச் சொல்லணும்ல!).இதே போன்று பில்டப் இல்லாத கேரக்டர்களைத் தேர்வு செய்தால், நல்ல எதிர்காலம் உண்டு. ஓகே ஓகே-ல் உதயநிதி ஓகே!

உதயநிதிக்கு படத்தில் பில்டப் ஏதுமற்ற அறிமுகக் காட்சி தான். ஆனால் சந்தானம் தான் ஹீரோ மாதிரி அறிமுகம் ஆகிறார். ஏனென்றால் படத்தின் ரியல் ஹீரோவே அவர் தானே! ஒவ்வொரு நகைச்சுவை நடிகருக்கும் ஒரு பீக் பீரியட் வரும். அந்த நேரத்தில் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும், டைமிங்-லும் நகைச்சுவை பொங்கும். சந்தானத்திற்கு இது அப்படியான நேரம். உள்ளத்தை அள்ளித்தா - கவுண்டர், வின்னர்-வடிவேலு போன்று இந்தப் படத்தில் சந்தானம் கலக்கி எடுத்துவிட்டார்.

பல காட்சிகளிலும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தானே நகைச்சுவையில் நம்பர்-1 என்று அழுத்தமாக நிரூபிக்கிறார். படத்தின் ட்ரெய்லரிலேயே பல காட்சிகள் வெளியாகிவிட்டதே, இனி படத்தில் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் போனால், மனிதர் பட்டாசாக வெடித்துள்ளார். விடிய விடிய மிமிக்ரி செய்யும் காட்சி அதகளம். ஓகேஓகே-ல் சந்தானம் ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே!

பச்சை கோதுமை மாவு என்று படத்தில் சந்தானத்தாலும் வெளியில் நம்மாலும் வர்ணிக்கப்படும் ஹ..ஹ..ஹன்சிகா, இதிலும் அழகாக வருகிறார், போகிறார், சிரிக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கேரக்டர் என்பதால் நாமும் தப்பித்தோம். இந்தப் படத்திற்காக ஹன்சிகா மெலிந்ததாக செய்தி வெளியானது. நமக்கென்னவோ இன்னும் உலக உருண்டை போல்தான் தெரிகிறார். ஆண்ட்டி மாதிரி இருக்கிறார் என்று படத்தில் வரும் மோசமான வில்லன் கேரக்டர் பேசுவதற்கு மன்றம் சார்பில் கடும் கண்டனங்கள்!

உதயநிதியின் அப்பாவாக வரும் அழகம்பெருமாளை விட அம்மா சரண்யா வழக்கம்போல அசத்துகிறார். இம்முறை அழுகாச்சி அம்மாவாக இல்லாமல் காமெடி கேரக்டரில் வந்துள்ளார். ஹன்சிக்காவின் அப்பாவாக வரும் சாயாஜி சிண்டே கேரக்டரை வேஸ்ட் செய்துள்ளார்கள். சந்தானத்தின் காதலியாக வருபவருக்கும் நன்றாகவே காமெடி வருகிறது. காமெடியில் ஒரு ரவுண்டு வருவார்.

லாஜிக் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதது ஒரு குறை தான். டிஎஸ்பியாக இருந்தும் மகள் காதலனுடன் சுற்றுவதை சாயாஜி தெரிந்துகொள்ளாதது, திரும்பத் திரும்ப வரும் நண்பனா-காதலியா காட்சிகள், கிளைமாக்ஸில் வழக்கம்போல் நாடகத்தனமாக ஆர்யா வருவது என படத்தில் குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதால் ராஜேஸிற்கு ஹாட்ரிக் வெற்றி இந்தப் படம்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். வேணாம் மச்சான் பாடலை காட்சிப் படுத்தியிருக்கும் விதமும், நடனமும் சூப்பர். 

ஓகேஓகே - ஓகே!

மேலும் வாசிக்க... "ஒரு கல் ஒரு கண்ணாடி - விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

65 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.