நல்ல கமர்சியல் படம் தருபவர்கள், நல்ல சினிமா தருபவர்கள் என்று நாம் நம்பும் பலர் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் சிலரின் திரைப்படங்கள் இந்த ஆண்டும் வெளியாகியது. அதில் கமலஹாசனைத் தவிர மற்ற எல்லாருமே கடும் தோல்வியைத் தழுவினார்கள்.(இப்போ உங்களுக்கு விஸ்வரூபம் பற்றி என்ன தோணுதுன்னு எனக்குத் தெரியும்!). பாரதிராஜாவின் அன்னக்கொடியை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டதால், மீதிப் படங்கள் கீழே :
காவியம் # 5: கடல்
மணிரத்னம்...தமிழ் சினிமாவின் கதை சொல்லும் உத்தியை மாற்றிக்காட்டியவர். சினிமா ஒரு காட்சி ஊடகம் என்று புரிந்து படம் எடுப்பவர்களில் ஒருவர். அதன்மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். அதனாலேயே தமிழுக்கும் ஹிந்திக்கும் ஒத்துவரும் (என்று நினைத்து) படங்களை எடுத்து, ஏற்கனவே தோல்வியைக் கண்டார். இந்தமுறை தமிழுக்கு மட்டுமே என்று கடல் படம் எடுக்க ஆரம்பித்தபோது, நமக்கு நம்பிக்கை இருந்தது. மேலும் கார்த்திக்-ராதா ஜோடியின் மகன் - மகள் இணையும் படம் என்று வேறு பரபரப்பைக் கிளப்பினார்கள். அப்போ அவங்க அண்ணன் - தங்கை முறை தானே என்றெல்லாம் நாம் குதர்க்கமாக யோசிக்காமல், இன்னொரு அலைபாயுதே வரும் என்று ஆசையுடன் இருந்தோம். படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணமாக, அந்த விளம்பரமே அமைந்தது.
நாம் எதிர்பார்த்தது போல் காதலைப் பற்றியோ, மீனவர் பிரச்சினை பற்றியோ பேசாமல் படம் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு பேசியது. கிறிஸ்துவத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆங்கிலப்படங்கள் வந்திருந்தாலும், உவமை வடிவில் கடல் படம் ஆன்மீகம் பேசியது. தமிழில் இது ஒரு முக்கியமான முயற்சி என்று சொல்லலாம். ஆனால் கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு, இது பெரும் கசப்பாக அமைந்தது. குறிப்பாக கதாநாயகியின் கேரக்டரைசேசன், படுமோசமாக அமைந்தது. முதல் பாதியில் இருந்த நேர்த்தி, இறுதிக்காட்சிகளில் இல்லாமல் போய் படம் பப்படம் ஆனது. மணிரத்னம் அடுத்த படத்திலாவது வெற்றிக்கனியைப் பறிப்பார் என்று நம்புவோம்.
காவியம் # 4: ஆதி பகவன்
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் என மூன்று வித்தியாசமான ஜெனர்களில் அசத்திய இயக்குநர் அமீர். குரு பாலாவையே அந்த விஷயத்தில் மிஞ்சியவர். என்றைக்கு அரசியல், சங்கம், பதவி என்று போனாரோ அப்போதே நமக்கு பாதி நம்பிக்கை போனது. அடுத்து யோகி என்று அப்பட்டமான காப்பி படத்தை எடுத்து, சுத்தமாக தன் மரியாதையைக் கெடுத்துக்கொண்டார். ஆனாலும் நான்கு வருடங்களாக(!) இந்தப் படத்தை எடுத்தபோது, மீண்டும் பழைய அமீராக வருகிறார் என்று நினைத்தோம். படம் பார்த்தபோது, எப்படி இருந்த அமீர் இப்படி ஆகிட்டாரே என்று தான் தோன்றியது.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அம்மா கேரக்டரைசேசனை பார்க்க முடியாது. வறுமை காரணமாக பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் பாங்காக் சென்ற உத்தமத் தாய் அவர். பாங்காங் என்ன தொழிலுக்கு ஃபேமஸ் என்று எல்லாருக்கும் தெரியும். பஞ்சம் பிழைக்க குடும்பத்துடன் வெளிநாடு போவதே ஓவர், அதிலும் பாங்காங் என்றால்..உஸ்ஸ்! ஏன்யா இப்படி என்று கேட்டதுக்கு ‘நிறைய சேஸிங் சீன் வைக்கணும்னு முடிவு பண்ணோம். அதுக்கு பாங்காங் ரோடு தான் கரீக்டா இருக்கும்னு தோணுச்சு. அதான் அங்க போனோம்’ என்று உலகமகா விளக்கம் கொடுத்தார். இதில் சேஸிங் சீன் என்பது அம்மா கேரக்டருக்குமா, சென்சாரில் அதெல்லாம் போச்சா என்று தகவல் இல்லை.
பாலிடிக்ஸ்களில் இருந்து மீண்டு, அமீர் மீண்டும் ஒரு படைப்பாளியாக திரும்ப வரவேண்டும் என்பதே நம் விருப்பம். ராம் படத்தின் மேக்கிங், இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. பருத்திவீரன் முத்தழகு இன்னும் நம் நெஞ்சுக்குள் நிற்கிறார். அந்த மாதிரிப் படங்களைத்தான் அமீரிடம் நாம் எதிர்பார்க்கிறோம். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் அமையும்வரை, சசிகுமார் போல் இயக்கத்தை விட்டு ஒதுங்கியே இருக்கலாம், தப்பில்லை!
காவியம் # 3: இரண்டாம் உலகம்
‘ஆய்..ஊய்’ என்று கடந்த ஒரு வாரமாகவே இணையத்தில் ஒரே ஜண்டை!..ஒன்னுமில்லை, நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...ராஸ்கல்ஸ். ஒரு பூலோக வாசி..அதாவது பூமியில் இருக்கும் ஒருவன் (இப்போல்லாம் சுத்த தமிழ்ல எழுதுனா, கெட்ட வார்த்தையான்னு கேட்காங்க பாஸ்)..சரி, பூமியில் இருக்கும் ஒரு ஹீரோ, இரண்டாம் உலகத்திற்கு பயணித்து அங்கு செய்யும் சாகசமே கதை. சாகசம் என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம், அங்கே பூ பூப்பதில்லை. எனவே எல்லா செடிக்கும் தண்ணி ஊத்துறது அல்லது அனுஷ்காவுக்கு பன்னும் டீயும் வாங்கிக் கொடுத்து காதல் வரவைப்பது தான் அந்த சாகசம். இதில் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார் ஆர்யா. அங்கே தான் படம், ப்பூ..என்று ஆனது.
முதல் பாதியில் இரண்டு உலகத்தையும் மாற்றி, மாற்றி காட்டியவரைக்கும் நன்றாகவே கொண்டுபோயிருந்தார் செல்வா. இரண்டாம் உலகத்தில் ஆர்யா நுழையவும் தான் பிரச்சினை ஆரம்பித்தது. அங்கே கடவுள் என்று ஒரு...ச்சே, கடவுளா நடிச்சவரை அந்த வார்த்தைல விவரிக்கலாமா, தப்பாச்சே..சரி, ஒரு ஃபாரின் குட்டியை காட்டியபோதே புஸ்ஸென்று ஆனது. அதிலும் அவரைக் கடத்துவதாக வசனத்தில் சொன்னதால் புரிந்தது, இல்லையென்றால் ‘லெட்ஸ் கோ’ என்று அந்த கடவுளே கடத்த வந்தவனின் மடியில் தொத்திக்கொண்டார் என்றே நினைத்திருப்போம். கடவுளின் சக்தி என்ன, ஏன் அந்த உலகத்தில் மொத்தமே 50 பேர் தான் இருக்கிறார்கள்? கடவுளையே கடத்துனாலும் ‘கரண்ட் போச்சா’ங்கிற தமிழர்கள் மாதிரி ஏன் அப்படி ஒரு சவசவ ரியாக்சன் என்று கேள்வி மேல் கேள்விகளை எழுப்பிய படம்.
படத்தின் கதையே ஆர்யா இரண்டாம் உலகத்தில் பயணம் செய்வது தான் எனும்போது, அங்கே போனபின் அவர் என்னென்னவோ செய்திருக்கலாம். பூமி அனுஷ்காவின் ஃபோட்டோவை இன்னொரு அனுஷ்காவிடம் காட்டியதையும், அனுஷ்காவுக்கு சாப்பாடு கொண்டுவந்து தந்ததையும் தவிர வேறெதுவும் செய்யவில்லை. இருக்கிற கடுப்பு போதாதென்று, அனுஷ்கா ட்ரெஸ் மாற்றும்போது திரும்பிக்கொள்ள வேறு செய்கிறார்.(சீன் போச்சே!). கடவுளின் நோக்கம் என்ன என்று ஆர்யாவுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆர்யா அதன் நியாயத்தை உணர்ந்து, அதற்காக முழு ஈடுபாட்டுடன் அனுஷ்கா-ஆர்யா2 ஜோடியை சேர்க்க முயன்றிருக்க வேண்டும். அப்படி சேர்த்துவைத்தால், செத்துப்போன அனுஷ்கா திரும்பக் கிடைப்பார் என்று ஒரு நல்ல ஆஃபரைக்கூட கொடுத்திருக்கலாம்.
இப்படி அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டு, குறியீடினால் மட்டும் படத்தின் தரத்தை உயர்த்திவிடலாம் என்று நினைத்தால்..சாரி பாஸ்!...செல்வராகவனுக்கு இந்தப் படம் பெரும் அடி தான். 67 கோடியில் 6 கோடி தான் தேறியதாகச் சொல்கிறார்கள். செல்வா தன் வீடு ஒன்றையும் தயாரிப்பாளருக்கே எழுதிக்கொடுத்துவிட்டதாக கிசுகிசு. ஒரு நல்ல இயக்குநர் இப்படியெல்லாம் சீரழிவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. இனியாவது திருந்துகிறாரா என்று பார்ப்போம்.
காவியம் # 2: தலைவா
இயக்குநர் விஜய் எப்போது ஜாம்பவான் ஆனார் என்று யோசிக்காதீர்கள். நடிகர் விஜய் படம் என்பதால், இந்த லிஸ்ட்டில் தலைவா. (அதுக்கும் கடுப்பானீங்கன்னா, சாரி பாஸ்!)
விஜய்யிடம் ரொம்ப வருசமாகவே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தொடர்ந்து 2-3 படம் ஹிட் ஆகிவிட்டால், அடுத்த முதல்வர் ஆவதற்கான வேலைகளில் துரிதமாக இறங்கிவிடுவார். ‘அண்ணா’ எஸ்.ஏ.சி அறிவுரைபடி, அரசியலில் இறங்குவதற்கான பில்டப்பை ஏற்றும் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார். நாமும் தெளிவாக அதை ஃப்ளாப் ஆக்குவோம். ஆனாலும் அவர் திருந்துவதில்லை. நாம் தியேட்டருக்குப் போவது பொழுதுபோக்கிற்குத் தானே ஒழிய, விஜய் கட்சியில் சேருவதா வேண்டாமா என்று கொள்கை முடிவு எடுக்க அல்ல. இது விஜய்&கோவிற்குப் புரிவதேயில்லை.
டைம் டூ லீட் என்று பில்டப்புடன் படம் ஆரம்பிக்கப்பட்டபோதே, இது வழக்கம்போல் புஸ்ஸ் ஆகப்போகிறது என்று தெரிந்தது. ஆனால் இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, படம் ரிலீஸ் ஆனபின் அசிங்கப்படாமல், ரிலீஸ் ஆகும் முன்பே அசிங்கப்பட்டார்கள். அதிலேயே படத்தின் இமேஜும் அடிவாங்கிவிட, இனி குப்பையிலா போட முடியும் என்று தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள்.
பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் படத்தில் இரண்டு சினிமாவை காட்டியிருப்பார். அதையும் மிஞ்சும்விதமாக பாட்ஷா-தேவர் மகன் - நாயகன் என மானாவாரியாக பல தமிழ்ப்படங்களை மிக்ஸியில் போட்டு அடித்து இந்த படத்தைக் கொடுத்து நம் வயிற்றைக் கலக்கினார்கள். ’ஹாலிவுட் படத்தைச் சுடும் இயக்குநர்’ என்று நாம் திட்டியதற்கு இப்படி கொடூரமாக பழி தீர்த்துக்கொண்டார் இயக்குநர் விஜய்.
"Give me the same thing...........in different way' என்று திரைக்கதை பற்றிய பால பாடத்தில் சொல்வார்கள். பழைய அரதப்பழசான கதையைக்கூட புதிய கோணத்தில், புதுமையான காட்சிகளுடன் சொன்னால் ரசிக்கப்படும். ஆனால் இங்கே கதையும் பழசு, திரைக்கதையும் காட்சிகளும் பல படங்களில் பார்த்துச் சலித்த அரதப்பழசு. பழைய படங்கள் அளவிற்காவது இருந்ததா என்றால், அதுவும் இல்லை. தேவர் மகனில் கமல் கெட்டப் மாற்றி வந்த காட்சியில் புல்லரித்தது. இங்கே விஜய் டீ-சர்ட் மாற்றிவிட்டு வந்து நிற்கவும் ’ங்கொய்யால..’ என்று தான் தோன்றியது.
அதுகூடப் பரவாயில்லை, மக்கள் அந்த கெட்டப்பில் விஜய்யைப் பார்த்துவிட்டு வாயைப் பிளந்தபடி கூடியதைத்தான் தாங்க முடியவில்லை. தேவர்மகனில் ’அப்படி’ தான் ஆக முடியாது என கமல் சிவாஜியிடம் வாதாடியிருப்பார். ஆனால் இங்கே விஜய் நான் அப்படித்தான் ஆவேன் என்று ஃபோட்டொவுக்கு முண்டிக்கிட்டு போஸ் கொடுக்கும் தயாநிதி மாறன் மாதிரி ஆரம்பத்தில் இருந்தே முண்டிக்கொண்டு நிற்பார். கமலைப் பார்த்து நாம் வியந்தது கெட்டப் சேஞ்சிற்கு மட்டும் அல்ல, அந்த மனமாற்றத்திற்கும் சேர்த்துத் தான்.
அதே போன்ற இன்னொரு கொடுமை ‘டமுக் டுமுக்’ போலீஸ் அமலா பாலூ. (அவர் போலீஸ் கெட்டப்பில் நடக்கும்போது நாம் போட்ட பிண்ணனி இசையே அந்த டமுக் டுமுக் ஆகும்!). ஒரு பெரிய படத்தில் நடிக்கும் அளவிற்கு அமலா பாலூவிடம் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஒன்றும் இல்லை. அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றர்கள். அதுக்குப் பதிலா அஞ்சு ரூபாய்க்கு ரெண்டு எலுமிச்சைம்பழம் வாங்கி, டைரக்டரு தலையில தேச்சு குளிச்சிருக்கலாம்.
கிளைமாக்ஸில் விஜய் வில்லன் கோஷ்டியை கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறார். ’முடிஞ்சதா..அப்பாடா தப்பிச்சோம்டா’ என்று நாம் ஓட எத்தனிக்கும்போது, நம் டமுக் டுமுக் போலீஸ் வந்து அந்த டெட் பாடி வில்லன் கோஷ்டியை சுட்டு வழக்கில் இருந்து விஜய்யைக் காப்பாற்றுகிறார். என்னங்கடா இது..போஸ்ட் மார்ட்டத்துல கத்திக்குத்து தெரியாதா கேட்டா ‘சுட்டேன் சார்..ஆனாலும் நம்ம டிபார்ட்மெண்ட் குண்டை நம்ப முடியுமா? அதான் கத்தியை எடுத்து வரிசையா சொருகிட்டேன்’னு அமலா பாலூ சொல்லுமோ என்னவோ! சீன் படத்துலகூட இதைவிட பெட்டரா சீன் யோசிக்கிறாங்க மக்கா.
‘சார்..ஒயிட் டீசர்ட் கூலிங்கிளாஸ் போட்டு வெளில வர்றீங்க..ஜனங்கள்லாம் தலைவான்னு உங்களைப் பார்த்து ஓடி வர்றாங்க..தியேட்டர்ல உள்ளவன்லாம் ஃபீல் ஆகுறான்’ என்று இந்த ஒருவரியை மட்டும் தான் டைரக்டர், விஜய்யிடம் சொல்லியிருப்பார் போல. இது போதுமே, அடுத்த சி.எம் நாம் தான் என்று அணில் தாவிக்குதித்து, அடுப்பில் விழுந்துவிட்டது. ஒரு கெட்டதிலும் நல்லது இருக்கும்னு சொல்வாங்க. அது மம்மி, விஜய்க்கு கொடுத்த ட்ரீட்மெண்ட்க்கு சரியாப் பொருந்தும். ஜெயலலிதா செய்தது ஒருவகை அராஜம் என்றால், விஜய் செய்து வந்ததும் அதற்கு இணையான இன்னொரு அராஜகம் தான். எப்படியோ நெகடிவ்வும் நெகடிவ்வும் சேர்ந்து, நமக்கு பாசிடிவ் ஆகிவிட்டது.
மொத்தத்தில் Time to Lead என்பது Time to Hide ஆகிவிட்டது.
காவியம் # 1: பரதேசி
பாலாவைக் குறை சொல்லலாமா, அப்படி குறை சொல்லிட்டு முழுசா ஒருத்தன் பதிவுலகத்துல நடமாட முடியுமா? இருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கே நியாயமாரே!
எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. முதன்முதலாக கலைஞர் ஆட்சியில் தான் மினிபஸ் வந்தது. எனவே அதுபற்றி சன் டிவியில் இருந்து மக்களிடம் பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். ஒரு ஆளிடம் மைக்கை நீட்டி ‘மினிபஸ் உங்க ஊருக்கு வந்திருக்கே..அதைப் பத்தி சொல்லுங்க’ என்றார். ‘ரொம்ப வருசமா கேட்டுக்கிட்டிருந்தோம்யா..யாருமே கண்டுக்கலை. இப்போ தான் ஒருவழியா பஸ்ஸை விட்ருக்காங்க..ரொம்ப சந்தோசமா இருக்கு. இனிமே எங்க புள்ளைங்க..’ என்று அவர் சொல்லும்போதே, மைக் பார்ட்டி ‘நிப்பாட்டுங்க..நிப்பாட்டுங்க..இந்த திமுக ஆட்சியில பஸ் விட்ருக்காங்க..நன்றின்னு சொல்லணும் சரியா?’ என்றார். நம் ஆளும் சரிங்க என்ற் சொல்லிவிட்டு ரொம்ப வருசமா...-ன்னு ஆரம்பித்து கடைசியில் திமுக ஆட்சிக்கு நன்றி சொன்னார். ஆனாலும் மைக் பார்ட்டிக்கு திருப்தி இல்லை. ‘நீங்க என்ன பண்றீங்க..மினிபஸ் விட்ட ஐயா கலைஞர் அவர்களுக்கும் திமுக ஆட்சிக்கும் நன்றின்னு சொல்லுங்க..எங்க, முதல்ல இருந்து சொல்லுங்க பார்ப்போம்’ என்றார்.
நம்ம ஆளு அடுத்து அதைச் சொல்லும்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே..அவருக்கு கலைஞர்மீதோ திமுகமீதோ கோபம் ஏதும் இல்லை. உண்மையிலேயே அவர் நன்றி சொல்லவே விரும்பினார். முதல் டயலாக்கை அவர் சொல்லும்போது அவர் முகம் நிறைய சந்தோசத்துடன் பேசினார். கொஞ்சநேரம் விட்டிருந்தால், அவரே கலைஞருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஆனால் மைக் பார்ட்டி கைங்கர்யத்தால், அவர் பேசிய ஸ்டைல் எப்படி இருந்தது என்று தெரியவேண்டும் என்றால், நீங்கள் அவசியம் பரதேசி படத்தின் முதல் பகுதியைப் பார்க்க வேண்டும்.
சகிக்க முடியாத செயற்கைத்தனத்துடன் நடிகர்கள் நடித்த ஒரே படம் பரதேசி தான். அதிலும் அந்த கதாநாயகி இருக்கிறாரே..அடடா!. சாக்கடைக்குள் தவறி விழுந்த மனநிலை தவறிய சேட்டு பெண் என்று தான் அந்த கேரக்டரைச் சொல்லவேண்டும். இடலாக்குடி ராசா எனும் அழகான இலக்கியத்தை ஒடித்து, நெளித்து தன் திரைக்கதையில் வலுக்கட்டாயமாகத் திணித்திருந்தார் பாலா. ராசாவை ஏன் எல்லாரும், குறிப்பாக ஹீரோயின் அப்படி நடத்துகிறார்கள்? எல்லாருமே ஏர்வாடி கேஸ் தானா? என்று நாம் எரிச்சல் அடையும்வண்ணம் முதல் பாதி எடுக்கப்பட்டிருந்தது.
சினிமா என்பது கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்-ஒளிப்பதிவு-நடிப்பு-இசை என பல விஷயங்களின் சங்கமம். ஆனால் இங்கே புதிதாக ஒரு கதையையோ, கதைச்சூழலையோ எடுத்துக்கொண்டாலே போதும். உலக சினிமா என்று கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். சேது-நந்தாவில் பாலா வாங்கிய நடிப்பிற்கும், பரதேசியில் பாலா வாங்கிய நடிப்பிற்கும் தான் எவ்வளவு வித்தியாசம். பிதா மகனில் ஆரம்பித்த பித்து, பரதேசியில் முற்றி நிற்கிறது. பாலாவை உசுப்பேற்றியே, உண்மையை உணர விடாமல் செய்து, ஊர்வலம் போன அம்மண ராஜா போல் ஆக்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.
சேதுவில் வந்த ஏர்வாடி காட்சியில்கூட ஒரு நேர்த்தி இருக்கும், அந்த துணைநடிகர்களின் நடிப்பில் ஒரு ஒழுங்கு இருக்கும். இங்கே ஹீரோ-ஹீரோயின் கூட அந்த துணை நடிகர்களைவிட மோசமாக நடித்திருந்தார்கள். வித்தியாசமான கதைச்சூழலும், கதையும், கிளைமாக்ஸும் மட்டுமே படத்தில் உருப்படி. மற்றபடி, இந்தப் படம் ஒரு குப்பை தான். அதனாலேயே நம்மை அதிகம் ஏமாற்றிய பாலாவின் இந்தப் படம், காவியம் # 1 ஆகிறது.
டிஸ்கி: இந்த வரிசைப்படுத்தல் என் தனிப்பட்ட ரசனை சார்ந்தது. மாற்று ரசனைக்கு எம் வந்தனங்கள்!
11 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.