அதாகப்பட்டது... :
தயாநிதி அழகிரியின் தயாரிப்பில், மௌனகுரு படத்திற்குப் பின் அருள்நிதி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தகராறு. மதுரைக்கதை, அருள்நிதியின் புதிய பரிமாணம் என்றெல்லாம் எதிர்பார்ப்பைக் கிளப்பினார்கள். படம் எப்படின்னு பார்ப்போம், வாங்க!
ஒரு ஊர்ல..:
அருள்நிதி, பவன் உள்ளிட்ட நான்குபேர் நண்பர்கள். பகலிலேயே வீடு புகுந்து திருடுவது அவர்களின் தொழில். போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டிலேயே திருடிவிட, இன்ஸ்பெக்டருடன் இவர்களுக்கு தகராறு. ஒரு லோக்கல் தாதாவிடம் மோதியதால் அவருடனும் தகராறு. கந்துவட்டி தாதாவின் பெண்ணான பூர்ணா-அருள்நிதி காதலால், கந்துவட்டி தாதாவுடனும் தகராறு. திடீரென அருள்நிதியின் நண்பர்கள் மேல் நடக்கும் கொலை முயற்சியில், ஒரு நண்பன் கொல்லப்படுகிறார். அதைச் செய்தது யார்? அதை இவர்கள் கண்டுபிடித்தார்களா? கண்டுபிடித்து...?
உரிச்சா....:
மதுரையைக் களமாகக் கொண்டு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதே ஒரு ஆச்சரியம் தான். படத்தின் முதல் காட்சியிலேயே கொலை விழுகிறது. அடுத்த காட்சியில் ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்து, நான்கு நண்பர்களின் கதையைச் சொல்கிறார்கள். புதுப்புது டெக்னிக்களுடன் திருடுவது சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும், இப்படி திருட்டை நியாயப்படுத்தலாமா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. லாரியில் அடிபட்டுக்கிடக்கும் பூர்ணாவை அருள்நிதி காப்பாற்றும் (அதாவது கத்தி ஊரைக்கூட்டும்) காட்சி அருமை. அடுத்து இருவருமே அடுத்தவர் முகத்தை மறந்துவிட, உன்னை எங்கேயே பார்த்திருக்கேனே என்று படம் முழுக்க யோசித்துக்கொண்டே இருப்பது யதார்த்தம் + செம ரகளை.
மூன்று (ஆக்சுவலா 4..சஸ்பென்ஸு!) தகராறுகளில் சிக்குவதை இடைவேளைக்கு முன்பே சொல்லிவிட்டு, இடைவேளைக்குப் பின் சஸ்பென்ஸ் த்ரில்லர் போன்று கொண்டுபோகிறார்கள். இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்று நாமும் யூகித்தபடியே இருக்கிறோம். கொலையாளி ஒரு லெப்ட் ஹேண்ட் என்று க்ளூ கிடைத்த பின் பார்த்தால், இன்னொரு நண்பன், தாதா, கொலைகாரன், கொலைகாரனை ஏவிய ஆள் நான்கு பேருமே லெஃப்ட் ஹேண்டாக இருக்கிறார்கள். இவரில்லை, இவரில்லை என கண்டுபிடித்துக்கொண்டே போகும் காட்சிகளில் நல்ல விறுவிறுப்பு. ஆனால்...
த்ரில்லர் கதையில் சஸ்பென்ஸை உடைப்பது ஒரு கலை. அதை சமர் படத்தை அடுத்து இதிலும் கோட்டை விடுகிறார்கள். நண்பர்களே கொலையாளியை புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கே கொலையாளியே நேராக வந்து நின்று கொண்டு ‘ஆமாண்டா..நாந்தான் கொன்னேன்’ என்று சொல்லும்போது சப்பென்று ஆகிறது. அதையடுத்து கிளைமாக்ஸ் ஃபைட்டைப் போட்டு படத்தை முடிக்கிறார்கள். அவர் தான் கொலையாளி என்பதற்கு படத்தில் முதலில் இருந்தே நிறைய க்ளூ இருக்கிறது. (நான் முக்கால்வாசிப் படத்திலேயே கண்டுபிடிச்சுட்டேன்..மூளை, மூளை!). அந்த க்ளூவை வைத்து, ஹீரோ கொலையாளியை கண்டுபிடிப்பதாக வந்திருந்தால், ஒரு திருப்தி வந்திருக்கும். இப்போது ஃபுல் மீல்ஸில் சாம்பார் மிஸ்ஸிங் என்பது போல் ஆகிவிட்டது. கொலையாளி யார் என்பதிலேயே ஆடியன்ஸ் ஷாக் ஆகி, திருப்தி ஆகிவிடுவார்கள் என்று திரைக்கதையாசிரியர் நினைத்திருக்கலாம். நமக்கு அது பத்தலை!..பி&சி ஏரியாவில் அது எடுபடலாம்.
அருள்நிதி:
அருள்நிதி எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேடி தேர்ந்தெடுப்பவர். இதிலும் அப்படியே. வழக்கமான கதை/படம் என்று ஒதுக்கிவிட முடியாது இதை. எப்போதும் சொங்கி போல் வரும் அருள்நிதி, இதில் கலகல பார்ட்டியாக வருகிறார். பூர்ணாவை விரட்டி விரட்டி லவ் பண்ணும்போது, செம கலகலப்பு. ஆக்ரோசம்கூட ஓரளவு வருகிறது. என்ன ஒன்னு, கழுதை இந்த நடிப்பு தான் இன்னும் வர மாட்டேங்குது. ஆனாலும் மனிதர் முந்தைய படங்களைவிட ஒருபடி மேலாகவே நடித்திருக்கிறார். தொடர்ந்து இப்படி நல்ல கதை, கேரக்டர் என்று நடித்தால் என்னிக்காவது ஒருநாள் நடிப்பு வந்துவிடலாம்.
பூர்ணா:
பூர்ணாவுக்கு இது முக்கியமான படம். வெறுமனே டூயட் ஆடும் ஹீரோயினாக இல்லாமல், மதுரைப் பெண்ணை கண்முன்னே கொண்டுவருகிறார். ஒரு கந்துவட்டி பார்ட்டியின் மகளாக, காலேஜ் ஸ்டூடண்ட்டாக, பிடிவாதக்காரராக, ஹீரோவின் காலைப்பிடித்து காதலுக்காக கெஞ்சுபவராக என நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர். கலக்கியிருக்கிறார். திருட்டுப் பய மவளே பாடலில் அழகோ அழகு.
நண்பர்கள்:
கதையே நான்கு நண்பர்களைப் பற்றியது தான் என்பதால், நான்கு பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். அருள்நிதிக்கு ரொமான்ஸ் என்றால், பவன் (பொல்லாதவன் ‘அவுட்’) மற்றும் கொலையாகும் நண்பர்களுக்கு ஆக்சன், தனி ஃபைட் என்று ஈகுவலாக வாய்ப்பு கொடுத்தே எடுத்திருக்கிறார்கள். அருள்நிதியும் அண்ணாச்சி தயாரிப்பு தானே என்று அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ளாமல், கதைக்கு ஏற்றபடி விட்டுக்கொடுத்து நடித்திருக்கிறார். ஆடுகளம் ஒத்தச்சொல்லாலே பாடலில் தனுஷுடன் வரும் காமெடியன் முருகதாஸ் தான் இதில் இன்னொரு நண்பர். கவனிக்கப்பட வேண்டிய நடிகர்.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- தகராறினால் தான் கொலை என்று படம் நகர்கிறது. ஆனால் மூன்று தகராறுமே இவர்களே வலிய இழுத்ததாகவே இருக்கிறது. கைது செய்ய வரும் இன்ஸ்பெக்டரையே அடித்து, கட்டிப்போட்டு கேவலப்படுத்துகிறார்கள். ஜெயிலுக்குப் போவது புதிதில்லை எனும்போது, இன்ஸ்பெக்டரின் கொலைவெறியை இவர்களே தூண்டவேண்டிய அவசியம் இல்லை. மற்ற தகராறுகளிலும் நிதானமற்ற, முட்டாள்தனமான இவர்களின் நடத்தையே காரணாமாக இருக்கிறது. பின்னர் அதனாலெயே கொலை எனும்போது, இவர்கள் மேல் பரிதாபம் வருவதற்குப் பதில் கொஞ்சம் எரிச்சலே வருகிறது. தகராறு இவர்கள்மேல் திணிக்கப்பட்டதாக காட்டியிருக்க வேண்டும்.
- கிளைமாக்ஸில் கொலையாளியே வந்து சொல்லும்படி காட்சி வைத்தது.
- முதல்பாதி ஜாலி என்றாலும் நீளமாகத் தெரிந்தது. நான்கு தகராறையும் விளக்க வேண்டிய கட்டாயத்தால் இருக்கலாம்.
- சண்டைக்காட்சிகளில் தெரியும் ஓவர் வன்முறை. சாதாரண சண்டையில்கூட கை அல்லது கழுத்தை முறிப்பது அவசியமா?
- கொலையைக் கண்டுபிடிக்க புத்திசாலித்தனமாக ஏதும் செய்யாமல், தகராறு1,2.. என வரிசையாக சண்டை போட்டு அவர்கள் தான் இல்லையென்று சொன்னதும் ’ஓகே..அடுத்த ஆளைப் பார்ப்போம்’ ரேஞ்சில் திரும்புவது. அவர்கள் இல்லையென்பதற்கு ஆதாரங்களையும் வைத்திருக்கலாம்.
- கொலையாளி ஒத்துக்கொண்டதில் இருந்து இறுதிவரையான காட்சிகள் ஏமாற்றத்தையே அளித்தன. என்ன தான் சொல்ல வர்றாங்க என்று தோன்றிவிட்டது.
- இன்ஸ்பெக்டர் கேரக்டரை வடிவமைத்த விதம். நல்லவரென்றால் கொலையாளியை கண்டுபிடிக்க உதவியிருக்கலாம். கெட்டவரென்றால் கொலையாளியாக அவரே இருக்கலாம். கிளைமாக்ஸை முடித்துவைப்பதற்கென்றே உருவானவர் மாதிரித் தெரிந்தது.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வித்தியாசமான, நல்ல முயற்சி. கிளைமாக்ஸில் சொதப்பினாலும் சரக்கு உள்ள ஆளாகத் தெரிகிறார் புதிய இயக்குநர் கணேஷ் விநாயக்.
- தருண்குமார் என்பவரின் திருட்டுப் பயமகளே உள்ளிட்ட அனைத்துப் பாடல்களுமே நன்றாக இருந்தது
- சத்யா என்பவரின் பிண்ணனி இசை.
- பவன் மற்றும் பூர்ணா கேரக்டர்
- நட்பின் அருமையை சொல்லும் கதை+காட்சிகள்
-முதல்பாதி ஜாலியாக நகர்ந்தாலும், கொலையாளி யாராக இருக்கும் என்று நம்மை யோசித்தபடியே படம் பார்க்க வைத்திருக்கும் திரைக்கதை அமைப்பு சூப்பர். கொலையை முதலில் காட்டுவது என்று முடிவெடுத்த திரைக்கதை ஆசிரியருக்கு ஒரு சபாஷ்.
பார்க்கலாமா? :
ஒருமுறை பார்க்கலாம்.
காலையில் சுடச்சுட காபி மாதிரி சுடச்சுட விமர்சனம். கலக்கிடீங்க பாஸ்...! தலைவரின் கலை வாரிசுகளில் அருள்நிதியை மட்டும் கொஞ்சம் பிடிக்கும் . ஓவர் பில்டப் இல்லாமல் ஹீரோயிசம் காட்டாமல் அமைதியாக நடிப்பவர். நேற்றே பார்க்கலாமா வேண்டாமா என்கிற யோசனையில் வந்துவிட்டேன். ஆனால் படம் ஓகே போல... உங்கள் கிட்டேயே பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. இன்று போகலாம் என்றிருக்கிறேன்.
ReplyDeleteஆடுகளம் ஒத்தச்சொல்லாலே பாடலில் தனுஷுடன் வரும் காமெடியன் தான் இதில் இன்னொரு நண்பர். கவனிக்கப்பட வேண்டிய நடிகர். (பேர் என்னன்னு யாராவது சொல்லுங்கய்யா..மற்ந்திடுச்சு.)//arulthaas
ReplyDelete//Manimaran said...
ReplyDeleteநேற்றே பார்க்கலாமா வேண்டாமா என்கிற யோசனையில் வந்துவிட்டேன். ஆனால் படம் ஓகே போல... உங்கள் கிட்டேயே பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. இன்று போகலாம் என்றிருக்கிறேன்.//
படம் ஆவரேஜ் தான்..ஆனாலும் மொக்கை அல்ல.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... arulthaas//
ReplyDeleteநன்றிய்யா..சிப்புக்குத் தெரியாத மேட்டரே கிடையாது போல!
அப்ப பார்க்கலாம்ன்னு சொல்லுறீங்க...
ReplyDeleteவம்சம் படம் போல இதிலும் அடக்கி வாசித்திருக்கிறாரா ஹீரோ!?
ReplyDelete//ஆனால் இயக்கம் என்று வரும் போது சாரி பிரசன்னா,//
ReplyDeleteஆமாம் குமார்.
//Blogger ராஜி said...
ReplyDeleteவம்சம் படம் போல இதிலும் அடக்கி வாசித்திருக்கிறாரா ஹீரோ!?//
ஆமாம்க்கா..அவர்கிட்ட இருக்கிற நல்ல விஷயம் அது!
friend name is not aruldass... HIS NAME IS MURUGADOSS...
ReplyDeleteஅப்போ பார்த்திடறேன்.. ஹிஹி.. மொய் தானே போட்டுடறேன்..
ReplyDelete//saravanakumar said... [Reply]
ReplyDeletefriend name is not aruldass... HIS NAME IS MURUGADOSS...//
ஆமாம் பாஸ். அந்த நல்ல தாதா பெயர் தான் அருள்தாஸ்..சிப்பு கன்ஃபியூஸ் ஆகிட்டாரு போல!
//கோவை ஆவி said...
ReplyDeleteஅப்போ பார்த்திடறேன்..//
பார்த்துட்டுச் சொல்லுங்க ஆவி.
நேரம் ஒதுக்கி ஆறுதலாக பார்ப்போம் இப்போது பதிவை வாசித்தாச்சு செங்கோவியாரே.
ReplyDelete