Sunday, July 20, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-16)


16. ஃப்ளாஷ்பேக் எனும் ஆயுதம்
கதை என்றால் என்ன என்று ஆய்வு நோக்கில் அணுகினால், அது சில தகவல்களின் தொகுப்பு தான் என்பது புலப்படும். உதாரணமாக, ஒரு கதையை உடைத்தால் இப்படி வரும்:
ஒரு ஊரில் ஒருவன் அமைதியாக வாழ்ந்து வந்தான்.
அவனுக்கு திடீரென இப்படி நடந்தது. அதனால் அவன் கோபம் கொண்டான்.
அதற்குக் காரணமானவர்களை பழி வாங்க ஆரம்பித்தான்.
பழிவாங்கிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான் அல்லது ஜெயிலுக்குப் போனான்.

நீங்கள் உருவாக்கியிருக்கும் கதையும் இப்படிப்பட்ட தகவல்களின் தொகுப்பாகவே இருக்கும். திரைக்கதை என்பது அந்த தகவல்களை எந்த ஆர்டரில், எப்படி சுவார்ஸ்யமாகச் சொல்கிறோம் என்பது தான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மேலே சொன்ன மூலக்கதையைக் கொண்டிருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அவை. அந்த படங்களின் சாயலில் எத்தனையோ படங்கள் அதன்பின் தமிழில் வந்தன. வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக 1980களில் அது விளங்கியது.

பின்னர் 1990களில் எஸ்.ஏ.சந்திரசேகரின் சிஷ்யர் ஷங்கர், அதே மூலக்கதையுடன் திரும்பி வந்தார். கதையில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்தார். ஷங்கரின் ஹீரோக்கள், ‘காரணமானவர்களை’ மட்டும் பழிவாங்குவதில்லை. அந்த காரணத்தையே அழிக்க முயல்பவர்கள். காலேஜில் சீட் கொடுக்காத வில்லனை ஜெண்டில்மேன் அழிப்பதில்லை. இடஒதுக்கீட்டை அழிக்க முற்படுகிறான். லஞ்சம் வாங்கிய அதிகாரியை மட்டும் இந்தியன் அழிப்பதில்லை, லஞ்சத்தையே அழிக்க போராடுகிறான். வெறுமனே ‘பழிக்குப் பழி’ கதையாக இருந்ததை, இந்த மாற்றங்களின்மூலம் ‘சமூக மாற்றம்’ கோரும் கதையாக ஆக்கினார் ஷங்கர்.

அடுத்து திரைக்கதையில் அவர் செய்த துணிச்சலான ஒரு மாற்றம். ஆக்ட்-1/செட்டப் என்று சொல்லப்படும் முன்கதையை, எல்லோரையும் போல் படத்தின் முதலில் வைக்காமல் இடைவேளைக்குப் பின், ஃப்ளாஷ்பேக்காக ஆக்ட்-2 முடியும்போது வைத்தார். படம் ஆரம்பிக்கும்போதே, ஹீரோ பழி வாங்கலில் இறங்கியிருப்பார். போலீஸ் தேட ஆரம்பித்திருக்கும்.
முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த ஓஷோ, ஹிட்ச்காக் தியரிகளை நினைவில் கொண்டுவாருங்கள். ஷங்கர் செய்த மாற்றம், எவ்வளவு சுவாரஸ்யத்தைக் கூட்டியது என்று புரிகிறதா? ஹீரோவை போலீஸ் பிடிக்குமா எனும் சஸ்பென்ஸ் ஒரு பக்கமும், ஹீரோ ஏன் அப்படிச் செய்கிறான் எனும் சர்ப்ரைஸ் மறுபக்கமும் இணைய, நமக்கு அதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை, அந்த திரைக்கதை ஃபார்மேட் நமக்குக் கொடுத்தது. இந்தியன், அந்நியன், ரமணா, சாமுராய், ஆரம்பம் என பல படங்களில் பயன்படுத்தப்பட்ட, இன்றளவும் வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக ஷங்கர் உருவாக்கிய ’ஜெண்டில்மேன்,திரைக்கதை வடிவம்’ இருக்கிறது. அதனால்தான் அவர் தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக போற்றப்படுகிறார்.

ஜெண்டில்மேன் போன்றே தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இன்னொரு வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட், பாட்ஷா. ஒரு சாமானியனாக வாழும் ஒரு ஹீரோ(செட்டப்-1)-அவனை துரத்தும் வில்லன்கள்(ஆக்ட்-2)-ஒரு முன்கதை(செட்டப்-2)-முடிவு(ஆக்ட்-3) என்று அமைந்திருக்கும் பாட்ஷா ஃபார்மேட். இரண்டு செட்டப் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட்டுடன் ஒத்திருக்கும். அதாவது ஜெண்டில்மேன் ஃபார்மேட் என்பது, எஸ்.ஏ.சி ஃபார்மேட்டுடன் பாட்ஷா ஃபார்மேட் இணைந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம்.

ஒரே கதை, எப்படி வெவ்வேறு வடிவம் எடுக்கிறது என்று புரிகிறதல்லவா? (கூடவே இந்த காப்பிக்கூச்சல் ஆட்களை ஏன் கண்டுகொள்ளக்கூடாது என்றும்..!)

சமீபகாலப் படங்களில் ஃப்ளாஷ்பேக் உத்தி இல்லாமலேயே முன்கதையைச் சொன்னபடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இதே கதைக்கருவுடன் முன்பு சிவாஜி நடித்த நீதி படமும் வந்திருக்கிறது. அது நேர்க்கோட்டில் எழுதப்பட்ட திரைக்கதை. அதையே முன்கதை நீக்கிச் சொல்லும்போது, சுவார்ஸ்யமான த்ரில்லர் கிடைத்தது. அந்த முன்கதையை காட்சிகளாகச் சொல்லியிருந்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட் ஆகியிருக்கும். மிஷ்கின் புதுமையாக, ஒரு கதை சொல்லும் காட்சி மூலம் முன்கதையைச் சொல்லியிருப்பார்.
ஒரு கதையை தகவல்களாகப் பிரித்து, வெவ்வேறு ஆர்டரில் அந்தக் கதையை அடுக்கும்போது, எப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான திரைக்கதையாக உருவெடுக்கிறது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நேர்க்கோட்டில் கதை சொல்லாமல், ஆர்டரை உடைத்து ஃப்ளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தும்போது, புதுவகையான அனுபவத்தை நாம் உருவாக்க முடியும். அப்படி ஆர்டர் கலைத்து விளையாட, ஓஷோ மற்றும் ஹிட்ச்காக் தியரி உதவும்.


இத்தகைய புரிதல்கள் இல்லாமல் நேரடியாக ஆக்ட்-1 என்று நுழைந்தால், 1980களில் வந்த திரைக்கதை அளவிற்குக்கூட உங்களால் எழுத முடியாது என்பதாலேயே, நாம் சில அடிப்படை விஷயங்களை இந்ததொடரின் முதல் பாகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் பார்ப்போம்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

  1. சிறப்பான கண்ணோட்டம் சிறப்பான பதிவு, பேசாம நீரே ஏன் டைரக்டர் ஆகக்கூடாது ?

    ReplyDelete
    Replies
    1. பேசாம நீரே ஏன் புரடியூசர் ஆகக்கூடாது?

      Delete
    2. பேசாம நானே 'ஹீரோ' ஆயிடுறேன்!

      Delete
  2. அழகான உதாரணம் அருமையான தொடர்!

    ReplyDelete
  3. கடேசி பாரா.............செம!நம்மளப் பத்தி நன்னா தெரிஞ்சு வச்சிருக்கேள்,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  4. சிறப்பான விளக்கங்களுடன் செல்கிறது தொடர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பிளாஷ் பேக்கில் கதை சொல்லும் உத்தியில் முழுக்கதையும் சொல்வார்கள்.ஆனால் அதில் சஸ்பென்ஸ் முற்றிலுமாக போய்விடும் வாய்ப்பு உள்ளது.அதற்கு சரியான முறையில் கதையை கொண்டுசெல்ல வேண்டும்."வருஷம் பதினாறு" அந்த வகையில் வெற்றி பெற்ற படம். அதே பிளாஷ் பேக்கில், கதை இரண்டுவிதமாக சொல்லி முடிவில் எது சரியானது என்று அறியும் விதமாக மிச்சமுள்ள கதையை நடத்தி சென்று வெற்றி கண்ட படம் "விருமாண்டி"

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாஸ்...//ஹீரோவை போலீஸ் பிடிக்குமா எனும் சஸ்பென்ஸ் ஒரு பக்கமும், ஹீரோ ஏன் அப்படிச் செய்கிறான் எனும் சர்ப்ரைஸ் மறுபக்கமும் இணைய, // அதற்குத் தான் சஸ்பென்ஸ்+சர்ப்ரைஸ் இரண்டும் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஃப்ளாஷ்பேக் முடியவும் சப்பென்று ஆகிவிடும்.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.