Thursday, July 9, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II – பகுதி 50


ஜெனர் – திகில் படங்கள் (Horror)

ஆடியன்ஸை பயமுறுத்தவும் கவலைப்பட வைக்கவும் எடுக்கப்படுகின்ற, பெரும்பாலும் அதிர்ச்சி தரும் முடிவுடன் எடுக்கப்படுகின்ற, அதே நேரத்தில் பொழுதுபோக்கிற்கும் உத்தரவாதம் தருகின்ற ரோலர் கோஸ்ட்டர் பயண அனுபவத்தைக் கொடுக்கும் படங்களே திகில் படங்கள் ஆகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்களை வைத்து, திகில் படங்களை மூன்றுவகைகளாகப் பிரிக்கலாம்.

1.பேய்ப் படங்கள்:
தமிழில் வந்த பேய்ப்படங்கள் பெரும்பாலும் பழி வாங்கும் கதைகள் தான். தன் குடும்பத்தைக் கொன்றவர்களை, தன்னை கற்பழித்தவர்களை (அதாவது மனுஷியா இருக்கும்போது), தன்னை பேயாக ஆக்கியவர்களை(!) பேய் பழி வாங்குவது தான் பல பேய்ப்படங்களின் கதை.

சில பேய்கள் சின்னப்புள்ளைத்தனமாக தன் பொருளை வேறொரு ஆள் எடுத்தால், ரவுண்டு கட்டி அடிக்கும். அந்தப் பொருள் பேய் வாழ்ந்த பங்களாவாக, நெக்லஸாக இருக்கலாம் அல்லது காதலனாகவும் இருக்கலாம். ’நீயே மண்டையைப் போட்டுட்டே..இனிமே உனக்கெதுக்கு பணம், சொத்து, நகையெல்லாம்?’ போன்ற லாஜிக்கலான கேள்விகளை நம் பேய்கள் விரும்புவதில்லை! தொடப்படாதுன்னா தொடப்படாது, அவ்ளோ தான்.

சிலபேய்கள், காதலனுடன் ஒருமுறையாவது ‘சேர்ந்து’ விட வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்துடன் அலையும். தன் கணவன் அதையெல்லாம் தாங்க மாட்டான் எனும் அனுபவ உண்மை, இரண்டாவது ஹீரோயினான மனைவிக்குத் தெரியும் என்பதால் பேயுடன் அவர் போராடுவார். இவையெல்லாம் இதுவரை தமிழில் வந்த சீரியஸான பேய்க்கதைகள் ஆகும்!

நீயா போன்ற பாம்புப் படங்களையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

யார், பிள்ளைநிலா, வா அருகில் வா, உருவம், யாவரும் நலம், பீட்சா, டிமாண்டி காலனி போன்றவற்றை இத்தகைய கேட்டகிரியில் முக்கியமாகக் கொள்ளலாம். (பீட்சாவில் அந்த ட்விஸ்ட் மூலம் அசத்தினார்கள்.)

2. கலப்பின பேய்க்கதைகள்:
திகில் எனும் த்ரில்லர் ஜெனருடன், காதல்/காமெடி போன்ற மெலோடிரமா ஜெனரைச் சேர்க்கும்போது, அதிகம் பயப்படாமல் பார்க்கக்கூடிய பொழுதுபோக்குக் கதைகள் கிடைக்கின்றன. 

சமீபத்திய ட் ரெண்ட், காமெரி ஹாரர் என்பதை நீங்கள் அறிவீர்கள். லாரன்ஸ் அட்டகாசமாக இந்த ஜெனரை ஒரு வடிவத்திற்குக் கொண்டுவந்தார். 

இதற்கு முன் காமெடியன்கள் மட்டும் செய்த விஷயம். அதை ஹீரோவே செய்வதாக ஆக்கினார். 

அடுத்து அவர் செய்த முக்கிய மாற்றம், பேய் கெட்ட பேய் அல்ல, நல்ல பேய். எனவே பேய் நமக்குப் பிடித்த கதாபாத்திரங்களை என்ன செய்துவிடுமோ எனும் பயம் இல்லை. ஆடியன்ஸ் ரிலாக்ஸாக ரஜினி/எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது போல் பார்க்க முடிந்தது. 

பேயின் செயல் அல்ல, வருகையே பயம். அதற்கு நாம் கொடுக்கும் ரியாக்சனை கோவை சரளாவே கொடுக்க, நம்மைப் பார்த்து நாமே சிரித்துக்கொள்வது போன்ற ஒரு எஃபக்ட்டை அது கொடுத்தது.

இத்தகைய படங்களின் வெற்றிக்குக் காரணம், இந்த இவை தான்.

திகில் ஜெனருடன் காதல் ஜெனரை மிக்ஸ் செய்து, ஒரு அழகிய பிசாசைக் கொடுத்தார் மிஷ்கின். ’இறந்தால் மட்டும் நல்லவர்கள், கெட்ட பேய் ஆகிவிடுவார்களா?’ எனும் லாஜிக் இந்தப் படத்திற்கு பெரும் பலமாய் அமைந்தது. திகில்+காதல் ஜெனரில் வந்த படங்களில் ‘கிளிப்பேச்சு கேட்கவா?’ முக்கியமான படம்.

3. ராட்சசக் கதைகள்:
இங்கே பேயின் இடத்தில் ஒரு சிகப்பு ரோஜாக்கள் ஹீரோ போன்று சைக்கோவோ அல்லது நாளைய மனிதன் போன்று ‘டெக்னாலஜிக்கல் மிஸ்டேக்’கோ(!) இருக்கும். பேய் உண்டாக்கும் உணர்ச்சிகளையே இவர்களும் உண்டாக்குவர்.

பேய்க்கு மாதிரியே இவர்களுக்கும் ஒரு பின்கதை இருப்பது வழக்கம். முடிவு பெரும்பாலும் ஃபிலிம் நுஆர் போன்று ஹீரோவின் தோல்வியாகவே இருக்கும். 

இதில் இந்த ராட்சசனை நாளைய மனிதன் போன்று முழு வில்லனாகவும் ஆக்கலாம். ஹீரோவாகவும் ஆக்கலாம். படத்தின் கிளைமாக்ஸ், அதைப் பொறுத்து மாறுபடும். ஒரே நேரத்தில் ஹீரோ மேல் நாம் பயமும் பரிதாபமும் கொள்ள வைப்பது தான் சைக்கோ படங்களின் ட்ரிக்.

இந்தவகையில் மிக அரிதான படங்களே வந்திருக்கின்றன. ஹிட்ச்காக்கில் சைக்கோ பாதிப்பில் மூடுபனி, சிகப்பு ரோஜாக்கள், நாளைய மனிதன், அதிசய மனிதன் ஆகிய படங்களே தேறுகின்றன. ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக சைக்காலஜிக்கலாக பாதிக்கப்படும் The Shining, Repulsion போன்ற படங்கள் தமிழில் அதிகம் வரவேயில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. சந்திரமுகி மட்டுமே அத்தகைய  சைக்காலஜிகல் த்ரில்லராக நினைவில் வருகிறது. இன்னும் இந்த ஜெனரில் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

இனி ஒரு திகில் படத்திற்கு திரைக்கதை எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

ஹீரோ:
பேய்ப்படங்கள் என்றால், பேய்/சாமி மேல் நம்பிக்கை அற்றவனாக ஹீரோ கேரக்டர் இருக்கும். சைக்கோ படங்கள் என்றால், ஃபிலிம் நுஆர் போன்று கடந்தகால சம்பவம் ஒன்று, ஹீரோவிற்கு ஒரு குறைபாட்டை உண்டாக்கி இருக்கும். அந்தக் குறைபாடு, அவனை மேலும் மேலு ராட்சசனாக ஆக்கும். ஹீரோவின் குறைபாடு, முந்தைய இறந்துபோன காதலியாக இருக்கலாம் அல்லது ஏதோவொரு உளவியல் பிரச்சினையாக இருக்கலாம்.

சைக்காலஜிக்கல் படங்களில் ஹீரோவுக்கென்று சிறப்பான குணச்சித்திர வளைவு இருக்கும். நார்மல் ஆளாக இருந்த ஹீரோ எப்படி உருமாறினான் என்பது தான் அத்தகைய படங்களின் அடிநாதம் என்பதால், குணச்சித்திரத்தை முடிந்தவரை வளைக்க வேண்டும்.

கதைக்களம்:
ஒரு குடும்பம் ஒரு புதுவீட்டில் குடியேறுகிறது. அங்கே அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன என்பது தான் பொதுவான கதைக்களம்.
சம்பவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளேயே நடக்க வேண்டும். கதாபாத்திரங்கள் வெளியே தப்பிச்சென்றுவிடாதபடி சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். அதனால்தான் பேய்பங்களா என்பது திகில் படங்களில் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

திரைக்கதை:
படத்தின் முதல்காட்சி, பேய்/ராட்சசனின் சக்தியைக் காட்டுவதாக இருக்கும். இந்த சீனில் பேயைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

செட்டப் தான் இத்தகைய படங்களில் முக்கியம். ஒவ்வொரு கேரக்டர்களின் இயல்பு, அந்த பங்களாவின் அமைப்பு போன்றவற்றை தெளிவாக ஆடியன்ஸுக்கு உணர்த்திவிடுவது இங்கே முக்கியம்.

செட்டப் முடிந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அமானுஷ்ய காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும். பேய்க்கு போதிய பில்டப் அவசியம். பேயின் இருப்பை முதலில் ஒரே ஒரு கேரக்டர் தான் உணரும். அதை யாரும் நம்ப மாட்டார்கள்!!

பிறகு வலுவாக பேயின் இருப்பு மற்ற கேரக்டர்களுக்கு தெளிவாகத் தெரிந்ததும், ஹீரோ பேய் மற்றும் சம்பவங்கள் பற்றிய விசாரணையை ஆரம்பிப்பார். உண்மையில் ஏதோ இருக்கிறது அவர் உணரும்வரை இது தொடரும். அப்படி ஹீரோ உணரும்போதே, ஆடியன்ஸும் கதையில் ஒன்றுவார்கள். எனவே இந்த சீன், டெரராக இருக்க வேண்டியது அவசியம்.

பீதியைக் கிளப்பும்வகையில் ஒரு கிறுக்குக்குழந்தை அல்லது நாய் போன்ற கேரக்டர்களை உருவாக்குவது அவசியம். மனநலம் பாதித்தவர்களும் நாய்களும் அமானுஷ்யத்தைக் காணும் சக்திபடைத்தவர்கள் எனும் ஆடியன்ஸின் நம்பிக்கையை இதில் நாம் உபயோகித்துக்கொள்கிறோம்.

பாதிக்கப்படும் கேரக்டர்களை நினைத்து ஆடியன்ஸ் கவலைப்பட வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர்களைப் படைப்பது இங்கே முக்கியம். அதில் மிஸ் ஆனால், ஆடியன்ஸ் படத்தில் அதன்பிறகு என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் எனும் பீதியில் ஆடியன்ஸை வைத்திருப்பது தான் இங்கே முக்கியம்.

இந்தப் படங்களில் வில்லன் பேய்/ராட்சசன் தான். அவர்களுக்கென்று சுருக்கமாக, ஆனால் நச்சென்று ஒரு கதை இருக்க வேண்டும். உண்மையில் திகில் படங்கள் இரண்டு சரிசமமான கதைகளால் ஆனவை. ஒன்று ஹீரோவின் கதை. இரண்டாவது பேயின் கதை. இரண்டுமே ஆடியன்ஸை படத்துடன் ஒன்றவைப்பதாக இருக்க வேண்டும். யாவரும் நலம், டிமாண்ட்டி காலனி போன்ற நல்ல திகில் படங்களைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும்.

முதலில் ஆடியன்ஸை நம்பிக்கை இழக்க வைக்க வேண்டும். சிக்கிட்டாங்க. மீள வழியேயில்லை என்று நினைக்கும்போது, தீர்வினை வேறு ஆங்கிளில் கொண்டுவருவது தான் நமக்குள்ள பெரிய சவால்.

படத்தின் முடிவு ஆச்சரியப்படுத்துவதாகவும், ஆடியன்ஸை திருப்திப்படுத்துவதகாவும் இருக்க வேண்டும்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.