Saturday, July 2, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - 32

விஜய்யின் நடிப்பை(!) சிலாகித்து, இயக்குநர் மகேந்திரன் விகடனில் கொடுத்த பேட்டி தான் சென்ற வார பரபரப்பு

இதனால் சிலர் மகேந்திரனை செமயாக ஓட்டுவதைப் பார்க்க முடிந்தது. இன்னும் சிலரோ அவரைவாய்ப்புக்காக...’எனும் ரீதியில் தாக்கியும் எழுதினர்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற காவியங்களைப் படைத்தவர், விஜய் ரசிகரா எனும் அதிர்ச்சி தான் இதற்கெல்லாம் அடிப்படை.

ஆனால் மனித மனம் அப்படித்தான் செயல்படும். ஜி.கிருஷ்ணமூர்த்தி மாபெரும் தத்துவமேதை. ஓஷோவாவது கொஞ்சம் ஜோக் அடித்து நம்மை ரிலாக்ஸ் செய்வார். இவர் படு சீரியஸ். அப்படிப்பட்டவர் படிப்பது, காமிக்ஸ் புத்தகங்களை!

ஒரு பக்கம் மிகத்தீவிரமாக இயங்குபோது, இன்னொரு பக்கம் நேரெதிரான பொழுதுபோக்கினை வைத்துக்கொள்வது பலவகைகளில் மனநலத்திற்கு நல்லது. எக்ஸாம் முடிந்ததும் தியேட்டரை நோக்கி நாம் ஓடுவதில்லையா, அது போல!

எனவே, உண்மையிலேயே மகேந்திரன் விஜய்யைஆரம்ப காலத்தில்இருந்தே ரசித்து வந்திருந்தால், அதில் வியப்பேதும் இல்லை!


------------------
இரண்டு நாட்களாக நல்ல காய்ச்சல். இருந்தாலும், இரவில் தூங்கும் முன் பையனுக்கு ராமாயணம் கதை சொன்னேன். ராமர் பிறந்ததில் ஆரம்பித்து, வில்லை உடைத்து சீதையை மணந்தது வரை சொல்லி நிறுத்தினேன்.

மீதியை நாளைக்குச் சொல்றேண்டா
 
ஏன்?’
 
கல்யாணம் ஆகிடிச்சுன்னா, அவங்களை கொஞ்ச நேரம் தொந்தரவு செய்யக்கூடாது..அதான்!’
 
..அப்படீன்னா இப்போ என்ன செய்ய?”
 
இப்போ என்ன செய்யறோம்னா, அந்த இடத்துல கட் பண்ணி ராமருக்கும் சீதைக்கும் ஒரு ஃபாரின் டூயட் வைக்கிறோம்..தூங்கறோம்!’.
என்று சொல்லிவிட்டு தூங்கினால், கனவு மேல் கனவு.

எத்தனையோ காஷ்மீர் தீவிரவாதிகளின் வில்லை உடைத்தவர் எங்கள் கேப்டன்என்று பிரேமலதா மிரட்ட, என் பாஸ் வந்துஷட் டவுன் முடியறதுக்குள்ள வில்லை உடைக்கணும்என்று என்னிடம் கெஞ்ச, வைகோ ஏதோ மேடையில் சொன்னதும் மேடையில் இருந்தவர்களேஅய்யய்யோஎன்று தெறித்து ஓட, நமக்கு நாமே பேனருக்குக்கீழே இருக்கும் ஸ்டாலின்எல்லோரும் வாங்க, வில்லை உடைப்போம்என்று பேச, கேப்டன் வந்து லவோசுவாஹி மொழியில் பேசியதைக்கேட்ட கூட்டம்அவர் வில்லைப் பற்றித்தான் பேசுகிறார்என்று புரிந்துகொண்டு கைதட்ட, ‘ராமர் தான் ஏற்கனவே வில்லை உடைச்சுட்டாரேஎன குழம்பியபடியே நான் படுத்து உருள, ஃபாரின் லொகேசனில் சோகமாய் அமர்ந்திருந்த ராமரிடம் வந்த அசிஸ்டெண்ட் டைரக்டர்சார், சீதைக்கு விசா கிடைக்கலை. விந்தியாவை வச்சு டூயட் எடுத்திடலாமா?’ என்று கேட்டபோது...

அம்மேஎன்று அலறி எழுந்தேன். விடிந்திருந்தது. தேர்தல் நேரத்தில், ராமாயணத்தில் ஃபாரின் டூயட் வச்சது ஒரு குத்தமாய்யா?

------------------
சினிமா மாணவர்களுக்கு, மிஷ்கினின் ஒவ்வொரு பேட்டியிலும் கற்றுக்கொள்ள ஒரு விஷயமாவது இருக்கும். வெறுமனே ஹீரோ துதி என்று இல்லாமல், பார்க்க வேண்டிய படங்களில் ஆரம்பித்து ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்கள்வரை பல தகவல்களை கொட்டிக்கொண்டே இருப்பவர் அவர்.

அந்த வரிசையில் தமிழ் ஹிந்துவிற்கு அவர் அளித்திருக்கும் இந்த பேட்டி, மிக முக்கியமானது:

//நான் உதவி இயக்குநராக சேர்ந்த உடனே மொட்டை அடித்துக் கொண்டேன். நான்கு வருடங்களாக முடியே வளர்க்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டேன். அதை ஓர் இலக்காக வைத்து கொண்டேன். எந்த ஓர் இடத்திலும் எனது கவனம் சிதறக் கூடாது, சாலையில் போகும்போது கூட யாருமே என் பக்கத்தில் வரக்கூடாது என்று நினைத்தேன். என் வேலை, என் படிப்பு, என் சினிமா என்று இருந்தேன். அந்த நான்கு வருடக் காலங்களில், பாலைவனத்தில் தாகத்தில் தவிக்கும் ஒருவனுக்கு தண்ணீர் கிடைத்தால் எப்படிக் குடிப்பானோ அப்படித்தான் சினிமாவைக் குடித்தேன்.

இப்போதும் ஞாபகம் இருக்கிறது. 'தேவர் மகன்' படம் பார்த்து இடைவேளை முடிந்ததும், தியேட்டரிலே உட்கார்ந்து முதல் 40 காட்சிகளுக்கான ஒன்லைனை எழுதினேன். படம் முடிந்த பிறகு திரையரங்க வளாகத்திலேயே உட்கார்ந்து எஞ்சிய 35 காட்சிகளை ஒன்லைனை எழுதி முடித்தேன். ஒரு நல்ல படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இதே முறையைப் பின்பற்றுவேன்.//
முழுதும் படிக்க:

--------------------------------
அது ஒரு அழகிய கிராமம். அங்கே ஒரு பெரும் பிரச்சினை. அந்த ஊரில் வாழும் இளைஞர்கள் எல்லாம் சரோஜாதேவி புத்தகம் என்று அந்த ஊர் முன்னோர்களால் அழைக்கப்பட்ட ஆபாசப் புத்தகங்களைத் தான் படிக்கிறார்கள்

பிரபல சினிமாப்பாடல்களை ஆபாச வார்த்தைகளுடன் எழுதி, பாடிப் பரப்புகிறார்கள். வண்ணத்திரை, சினிக்கூத்து, டைம் பாஸ் போன்ற புத்தகங்களை சில நல்லவர்கள் மட்டும் அவ்வப்போது படிப்பது உண்டு. மற்றபடி தி.ஜா, ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி போன்ற பெயர்களை விடுங்கள், ஆனந்த விகடன், குமுதத்தைக்கூட அந்த கிராமத்தில் யாருக்கும் தெரியாது.
பெரிசுகள் முதல் இளைஞர்கள்வரை எல்லோரிடமும் இதே பிரச்சினை தான். சமீபகாலமாக, சின்னப் பசங்களுக்கும் இதே போன்ற புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. விஷயம் கைமீறிப் போவதை உணர்ந்த, கிராமம் நாட்டாமையிடம் முறையிட்டது.

எல்லாத் தரப்பையும் ஆராய்ந்த நாட்டாமை, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு தீர்ப்பினைக் கூறினார். அது: ”இவங்க பள்ளிக்கூடம் போய் படிக்கிறதால தான் எழுதப் படிக்கத் தெரியுது; கண்டதையும் படிக்கிறாங்க. அதனால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடுங்கள். குழந்தைகளை இனிமேல் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.”

- ‘நான் சினிமாவே பார்க்கிறதில்லீங்க..சமூகம் கெட்டுப்போறதுக்குக் காரணமே சினிமா தான்என்று வாதிட்ட நண்பருக்குச் சொன்ன குட்டுக்கதை!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.