Saturday, January 1, 2011

ஒரு ZOOM - OUT கந்தன் கருணை பாடல்

என்னுடைய கனவுக்கன்னிகளில் ஒருவர் ஔவையார். அவரது பல பாடல்கள் என்றும் மனதை விட்டு நீங்காத அழகும் அறிவும் கொண்டவை அவரது பாடல்கள். அந்த ஔவையாரிடம் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், நமது வாழ்வில் விளையாடும் முருகனின் வேலைப் பிடுங்கி, அதை முருகனின் கண்ணில் விட்டு ஆட்டும் உரிமையும் தவ வலிமையும் கொண்டவர் அவர்.

கந்தன் கருணை படத்தில் முருகனுக்கும் ஔவைக்கும் நடக்கும் இந்த உரையாடலும் பாடலும் என் மனதைக் கவர்ந்த ஒன்று. அதுவும் ’என்றும் புதியது’ என்று ஆரம்பிக்கும் பல்லவியில் ஒரு விஷேசமுண்டு. அதில் புகைப்படக் கலையில் பயன்படும் ஜூம்-அவுட் (Zoom-Out) டெக்னாலஜியை பயன்படுத்தியிருப்பர்.

முருகா, உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது” என்ற வரியை பல்லவியாக எடுத்துக் கொண்டு கடைசியில் இருந்து ஆரம்பித்து ஜூம்-அவுட் செய்து கே.பி.சுந்தராம்பாள் பாடியிருப்பார். தமிழ் விளையாடும் அந்தப் பல்லவி கீழே:
என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா, உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

ஔவையின் தமிழும் கண்ணதாசனின் தமிழும் இணைந்து ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும் பாடல் அது. “அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது” என்ற வரிகள் இந்தப் பாடலின் உச்சம் என்றே சொல்லலாம்.

பாடலின் ஒளி வடிவம் :



இந்தப் புத்தாண்டில்,எங்கும் நிறைந்த பரம்பொருளின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க என்னப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன். 

முழுமையான பாடல் வரிகளும் பாடல் பற்றிய விவரங்களும் கீழே:

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: ஔவையார், கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
திரைப்படம்: கந்தன் கருணை
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே

பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே

இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே

என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் 
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

  1. முதல் பதிவு பக்திமயமாக...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தமிழ்க்கடவுள் அழகன் முருகனிடம் அதிக ஆசை போலும். நல்ல பகிர்வு. பாடலை முழுமையாக தட்டச்சு செய்து.... கலக்கல்.

    ReplyDelete
  3. @ஜீ...நன்றி ஜீ..’முதல்’ விஷயங்களில் முருகனை முன்னிறுத்துவது எமது வழக்கம்..

    ReplyDelete
  4. உண்மைதான் குமார்..’அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.’ (பாடல் வரிகள் காப்பி பேஸ்ட் தான்)

    ReplyDelete
  5. சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்துயவிட்டு இந்தப் பாடல் வரிகள் டவுன்லோட் செய்ய நினைத்தேன். அரிதான பாடல் எளிதாகக் கிடைக்க வழி செய்தீர்கள். நன்றி.

    ReplyDelete
  6. "சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா" என்று அந்தக் கிழவியிடம் கேட்டு அதிரடி செய்த முருகனைப் புகழ்ந்து வந்துள்ள பதிவு அருமை.நன்றி!

    ReplyDelete
  7. அருமையான பாடல் , நேற்று கூட கேட்க நேர்ந்தது, இன்று உங்கள் பதிவில் வரிகளோடு. புத்தாண்டை மங்களகரமாக தொடங்கியிருக்கிறீர்கள். அருமை.

    ReplyDelete
  8. //இனிது இனிது ஏகாந்தம் இனிது//

    //முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது//
    / கொடிது இளமையில் வறுமை//
    ரசித்த வரிகள்.

    ReplyDelete
  9. இந்த பாடல் திருவிளையாடல் என்றே நினைத்திருந்தேன்..

    ReplyDelete
  10. செங்கோவி அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @middleclassmadhavi: இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே இனிமையானவை தான் சகோதரி.

    ReplyDelete
  12. @kmr.krishnan:பாராட்டுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. @பாரத்... பாரதி...: திருவிளையாடலில் வருவது ‘பழம் நீயப்பா தானே’..அதையும் இன்னொரு நாள் பார்ப்போம் பாரதி.

    ReplyDelete
  14. முதலில் முடிவது முடிவில் முதலது

    இதன் தெளிவுறை யாயேனும் தர இயலுமா

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.