இன்று வந்துள்ள செய்தி அதிகார வர்க்கத்தின் ஆணவத்தைக் காட்டுவதாக உள்ளது. கடந்த தேர்தலில் 49ஓ-விற்கு ஓட்டுப் போட்டவர்களுக்கும் நக்ஸலைட் அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டா என்று கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை செய்கிறார்களாம். இன்று வக்கீல் சத்தியன்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நலமனு தாக்கல் செய்து, கியூ பிராஞ்சின் விசாரணைக்குத் தடை வாங்கி உள்ளார்.
எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த விசாரணையை நடத்துகின்றார்கள் என்றே தெரியவில்லை. 49ஓ-வுக்கு ஓட்டுப் போடுவது சட்டப்படி தவறு அல்ல, அது நம் உரிமை. நியாயத்திற்கு 49ஓ-வை வாக்களிக்கும் இயந்திரத்தில் சேர்க்க வேண்டும். அதற்கு வக்கற்ற தேர்தல் கமிசனும் புத்திசாலி அதிகாரிகளும், 49ஓ போட வந்தவர்களை தனிப்படிவம் நிரப்பச் சொல்லி, பூத் ஏஜெண்டுகளுக்குக் காட்டிக் கொடுத்ததே தவறு. அத்தோடு நிறுத்தாமல், இப்போது 49ஓ போட்ட 24,594 பேரின் விவரங்களை கியூ பிராஞ்சுக்குக் கொடுத்துள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
49ஓ என்பது தான் என்ன? ‘எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைய அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை இல்லை. அவர்களின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவைக்கவும், நல்ல மாற்று சக்திகளை அரசியலுக்கு வரவழைக்க விரும்புகிறேன்’ என்பது தானே. நக்ஸலைட்கள் அடிப்படையில் இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். அவர்களும், அவர்கலோடு தொடர்புடையவர்களும் மெனக்கெட்டு, வாக்குச்சாவடிக்கு வந்து 49ஓ போடுவார்கள் என்று நிஜமாகவே இந்த அரசு நினைக்கிறதா? கொஞ்சம் யோசிக்கும் திறமை உள்ளவனனுக்குக் கூட இதில் உள்ள அபத்தம் புரிந்திருக்குமே!
உண்மையில் இவர்கள் செய்ய விரும்புவது மிரட்டல் தான். அடுத்த முறை 49ஓ போட மக்கள் யோசிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனே இந்த விசாரணையை இவர்கள் செய்வதாகத் தெரிகிறது. 49ஓ-விற்கு ஆதரவாக இணையதளங்களும், பத்திரிக்கைகளும் செய்தி வெளியிடுவதும், 24,000 பேர் துணிந்து ஓட்டுப் போட்டிருப்பதும் இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்று நாமோ, வேறு யாருமோ வெளியில் சொல்வது சட்டப்படி தவறு. அப்படி இருக்கையில், இந்த கியூ பிராஞ் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டுயது அந்தப் பட்டியலை அவர்களிடம் கொடுத்தோர் மீது தான்!
நீதிமன்றம் தேர்தல் கமிசனிடமும் க்யூ பிராஞ்ச் போலீஸிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் கமிசனும் ‘நாங்கள் கொடுக்கவில்லை, பூத் ஏஜெண்ட்டுகளோ தேர்தல் அதிகாரிகளோ கொடுத்திருக்கலாம்’ என்று பதில் சொல்லி உள்ளது. இவர்களை நம்பித் தான் நமது ஓட்டுப் பெட்டியை ஒரு மாதத்திற்கு ஒப்படைத்துள்ளோம்!
தேர்தல் கமிசன் கொடுக்கவில்லை என்றால், கியூ பிராஞ்சிற்கு அந்தப் பட்டியலைக் கொடுத்தது யார் என்று நீதிமன்றத்தில் அவர்கள் சொல்ல வேண்டும். அதைக் கொடுத்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏதோ தா.கிருட்டிணன் வழக்கு, சன் டி.வி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகளையெல்லாம் தீர விசாரித்து முடித்துவிட்டதாகவும், வேறு வேலையே இல்லாதது போன்றும் கியூ பிராஞ்ச் போலீஸ் இந்த விசாரணையில் இறங்கி இருப்பதைப் பார்த்தால் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
35 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.