அன்பு நண்பர்களுக்கு,
(தொடரும்)
நாங்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தோம், சமூகத்தில் எவ்வளவு மரியாதையுடன் இருந்தோம், மக்களும்தான் அப்போது எவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள்..- என்பது போன்ற புலம்பல்களை அதன்பிறகே பிராமணர்களாகிய நீங்கள் ஆரம்பித்தீர்கள். ஆனால் உண்மையில் இழப்பு உங்களுக்கு மட்டும் தானா?
சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்த நீங்கள், ஜனநாயகத்தில் வலுவான ஆயுதமான கல்வியைப் பிடித்தும் உடனே மேலேறினீர்கள். ஆனால் மற்ற ஜாதிகளுக்கு நடந்தது என்ன?
மன்னர்களாக வாழ்ந்த பரம்பரை, அரசு மானியம் பெற்று வாழவேண்டிய நிலை பல இடங்களில் ஏற்பட்டது. எந்த மக்கள் மத்தியில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்தார்களோ, அந்த மக்களை விட தாழ்ந்த நிலையில் வாழும் துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
மன்னர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேயருடன் போரிட்டபோது, அந்தப் போரில் செத்து மடிந்த போர் வீரர்கள் ஏராளம். அவர்களில் பெரும்பான்மையானோர் வன்னியர், தேவர், நாயக்கர் போன்ற இனத்தைச் சேர்ந்தோர்களே. நாட்டுப்பற்றும், விசுவாசமுமே அவர்களை அவ்வாரு போரிட வைத்தது. போரில்லா சமயங்களில் நாட்டின் காவல் பொறுப்பும் அவர்களிடமே இருந்தது.
நிலப்பிரபுத்துவ காலகட்ட முடிவில், ஆங்கிலேயர்களால் பழைய காவல்முறை தூக்கியெறியப்பட்டு, தற்போதைய காவல்துறை கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தில் பழைய சாதி அடிப்படையிலான காவல்முறைக்கு இடம் இல்லை.
அதனால் நேர்ந்த அவலம் உங்களுக்குத் தெரியுமா? போர்த் தொழில் தவிர வேறெதையுமே அறியாத அந்த சமூகங்கள், ஒரே நாளில் தங்கள் வேலையையும் மரியாதையையும் இழந்து நின்றன.
அதற்கு அவர்கள் தெரிவித்த எதிர்ப்பும். போராட்டங்களும் ‘திருநெல்வேலி வரலாறு -கால்டுவெல்’ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தச் சமூகங்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் அனுபவமே யில்லாமல் இறங்கி, மேலும் சீரழிவுக்கு ஆளாகின. அவர்களுக்கு மாற்றுவழி ஏதும் காட்டப்படவில்லை.
‘போரிட ராணுவம் - காவலுக்கு போலீஸ். உனக்கு வேலையில்லை, போகலாம். விரும்பினால் ராணுவத்தில்/போலீஸில் சேர முயற்சி செய்’ - என்பதே அந்த மக்களுக்கு சொல்லப்பட்து. அதுவே சமூக ஒழுங்கை அதிக அளவில் பாதித்தது. இப்போதும் வட-தென் மாவட்டங்களி தறிகெட்ட, வழிதெரியாத ஆட்களாக அவர்களை ஆக்கிவைத்துள்ளது. தங்களுக்குள்ளேயே அவர்களை போரிட வைத்து, தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள வைப்பதும் அதுவே.
ஆனால் உங்களுக்கு நடந்தது என்ன? ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வேலைகளும், கற்றதனால் வந்த வாய்ப்புகளும் சமூகத்தில் உங்கள் நிலை தாழாமல் காப்பாற்றின. பிற ஆதிக்க சமூகங்கள் இழந்ததை ஒப்பிடுகையில் உங்களது இழப்பு பெரிதல்ல. அவர்கள் திரும்ப பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதில் இருந்து தான் நாம் இடஒதுக்கீடு பற்றிப் பேசவேண்டும்....
பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் தொழிலான காவல் தொழிலை ஆங்கிலேயர் உடனடியாகக்ப் பிடிங்கியதற்குக் காரணம் அவர்கள் ம்ல் இருந்த பயமே. நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தை இருகட்டங்களாகப் பிரிக்கலாம்.
இரண்டாவது கட்டம் காந்தியால் முன்னெடுக்கப்பட்டு, அனைத்து ஜாதிகளின் பங்கெடுப்புடன் 1920களில் ஆரம்பித்து நடந்த சத்யாக்கிரக போராட்டம். முதல் கட்டத்தில் ஆங்கிலேயரை உள்ளே நுழையவிடக்கூடாது என்ற நோக்கில் சுதந்திரப் போராட்டம் வெடித்தது. தமிழகத்தில் பூலித்தேவன், கட்டபொம்மன், வெள்ளையத் தேவன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் போன்ற ஷத்ரிய ‘வர்ணத்தார்’ போராடியது அந்தக் காலகட்டதிலேயே.
ஒட்டுநோக்க, அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அந்தப் போராட்டங்கள் போர்களாகவே நடத்தப்பட்டன. எனவே ஷத்ரியர்களே அதில் பங்கேற்றார்கள். அதில் வெற்றி பெற்று ஆங்கிலேயர் ஆட்சியைப் பிடித்தபின்னர், அந்த ஷத்ரிய குலத்தின் கட்டுப்பாட்டில், நாட்டின் காவல் பொறுப்பை விடுவது ஆபத்து என்பதை உணர்ந்தனர். இன்னும் அவர்களை ஆயுதங்களுடன் நடமாட விடுவது தமக்கு எப்போதும் நல்லதல்ல என்ற முடிவுடன், அதுவரை இருந்த காவல் கட்டமைப்பு விலக்கப்பட்டது.
ஏற்கனவே பாளையக்காரர்களின் தோல்வியால் படைவீரன் என்ற பெருமையும் போயிருந்தது. மிஞ்சியிருந்த காவல் பொறுப்பும் பிடிங்கப்பட்டபின், அந்த மக்களிடம் எஞ்சியது வறுமையும் வன்முறையுமே. அந்த மாற்றம் நாட்டை ஜனநாயகப்படுத்த நிச்சயம் அவசியமான ஒன்று. ஆனால் அது அவசர அவசரமாக எவ்வித மாற்று வழியும் தராமல் நடைமுறைப்படுத்தப்பட்டதால், சமூகத்தில் பெரும் குழப்பத்தை அது ஏற்படுத்தியது.
விவசாயக்கூலிகளாகவும் தோட்டத்திற்கு காவல்காரர்களாகவும் திருடர்களாகவும் அவர்களை அது ஆக்கியது. சமூக அளவில் பெரும் மரியாதைக் குறைவை அது ஏற்படுத்தியது. பாரதியின் வரிகளில் சொல்வதென்றால்...
மண்வெட்டிக் கூலிதின லாச்சே;-எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே-இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!
( முழுப்பாடலுக்கு : http://bharathiarsongs.blogspot.com/2009/06/blog-post_7225.html )
அந்த மரியாதையைப் பெற வன்முறையை கையில் எடுத்தன சில சமூகங்கள். அந்த வன்முறை சகஜாதியினர் மீதே பிரயோகிக்கப்பட்டது. திருட்டும் வன்முறையும் கட்டுக்கடங்காமல் போக, கைரேகைச் சட்டம் போன்ற கடும் அடக்குமுறைச்சட்டங்கள் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டன.
1900களில் மிஷனரிகள் அந்த ஜாதிகளுக்கு கல்வி தர முன்வந்தன. ஆனாலும் அதுவும் இந்த சமூகங்களால் புறக்கணிக்கப்பட்டன. அதிலும் பெண்கள் யாரும் கல்விகற்க முன்வரவில்லை. ‘தாசிக்கும் அரசிக்குமே படிப்பு தேவை. எங்களுக்கு எதற்கு?’ என்ற கேள்வி அவர்களால் கேட்கப்பட்டது.(திருநெல்வேலி சரித்திரம்-கால்டுவெல்). நிலப்பிரபுத்துவ மனநிலையை விட்டு வெளிவராததால் அறியாமையுடன் அந்த மக்கள் கல்வியை புறக்கணித்தனர். அதே நேரத்தில் பிராமண சாதி 90%க்கு மேல் கல்வி கற்று 90% வேலைகளில் உட்கார்ந்திருந்தது.
அது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘இட ஒதுக்கீட்டாலேயே’ சாத்தியம் ஆனது. அவ்வாறு பெரும் பதவிகளில் அமர்ந்த பின்னர், தங்களுடைய இடங்களை தக்கவைக்க பல பிராமணர்களும் முனைந்தார்கள். காங்கிரஸ் போன்ற இயக்கங்களில்கூட பிராமணர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், தாழ்த்தப்பட்டோரிடம் அதே ஆதிக்கத்தைச் செலுத்தி தங்கள் இருப்பை நிலைநாட்டின.
1930களுக்குப் பின்னரே கல்வி கற்றால் ஆங்குலேய அரசில் வேலை உள்ளிட்ட பல வாய்ப்புகள் இருப்பதை பிற ஜாதிகள் புரிந்துகொண்டன. எனவே கல்வியை நோக்கி அவை வந்தன.
இறுக்கமான அமைப்பாக ஆகிவிட்டிருந்த பிராமணீயம், அவ்வளவு எளிதில் அதை அனுமதிக்கவில்லை. படிக்கும் இடங்களில் தனிக்குவளை என்பதில் ஆரம்பித்து சமஸ்கிருத நுழைவுத்தேர்வில் வென்றால் தான் மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற நிபந்தனை வரை பல இன்னல்களை பிற ஜாதிகள் சந்திக்கவேண்டியிருந்தது.
அதே நேரத்தில் பாரதி போன்றோரே அனைவருக்கும் கல்விக்கான அவசியத்தை உணர்ந்து, தம் மக்களுக்கு அதை விளக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலேயே தந்தை பெரியாரின் எழுச்சியும் நடந்தது.
வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட இயக்கம் என்பதைத் தவிர்த்துப் பார்த்தால், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு பெரியார் செய்த பங்களிப்பு என்றும் அவர்களால் போற்றப்பட வேண்டியது.
கடும் வெறுப்புடனே அவர் பிராமணீயத்தை எதிர்கொண்டார். எல்லா மட்டத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று போராடினார். முடிவில் வென்றார். ஏன் இட ஒதுக்கீடு தேவையென்பதை அரசுகள் ஏற்றுக்கொண்டன? வெறும் ஓட்டுக்காகவா? ஜனநாயகத்தில் வெறும் ஓட்டுக்காக மட்டுமே ஒரு விஷயத்தைச் செய்து நிலைநாட்டிவிட முடியாது.
கல்வி கற்க ஆரம்பித்த பின்னரும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு சரியான வழிகாட்டல்கள் இல்லை. இதுவரை கலைகளின் மூலமாக மட்டுமே பல விஷயங்களை அறிந்துகொண்டிருந்த மகக்ளுக்கு, எழுத்தின் மூலம் கற்றுக்கொள்தல் என்பது மிகவும் சிரமானதாக இருந்தது. இதைப் புரிந்துகொள்ள 1930களுக்கு போக வேண்டியதில்லை. இப்போதும் நிலைமை அது தான்...
1990களில் நான் +2 முடித்து 77% மார்க் வாங்கினேன். அடுத்து என்ன செய்வது என்று என் பெற்றோருக்கு எதுவும் தெரியவில்லை. என் அப்பா 3ம் வகுப்பு வரை படித்தவர். அம்மா அதுவும் கிடையாது.
எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு குடும்பம், பல வருடங்களுக்கு முன் டவுனுக்கு குடிபெயர்ந்திருந்தது. அவர்களின் மகன் மெக்கானிகல் இஞ்சினியரிங் முடித்திருந்தார். எனவே +2 முடித்தால், மெக்கானிகல் எஞ்சினியர் ஆகலாம் என்று நான் ‘அறிந்து’ கொண்டேன். கவுன்சலிங் போனபோது, என்ன குரூப் வேண்டும் என்று கேட்க எல்லாவற்றையும் விட்டுவிட்டு மெக்கானிகலை எடுத்தேன்.
எங்கள் கிராமத்தில் இருந்து படித்து இஞ்சினியர் ஆன முதல் ஆள் நானே. இதை பெருமைக்காக சொல்லவில்லை. 1990களில் ஒரு பிறபடுத்தப்பட்ட ஜாதியின் நிலைக்காக சொல்கிறேன்.
அதன்பிறகு கல்லூரியில் உங்களப் போன்ற பிராமண நண்பர்கள் இந்த இடஒதுக்கீடு விஷயமாக பலமுறை என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்:
’நான் 87% மார்க் எடுத்தும், எனக்கு நினைத்த குரூப் கிடைக்கவில்லை. ஆனால் 70-80% மார்க் எடுத்தவன் எல்லாம் என்னை விட நல்ல குரூப்பிற்குப் போய்விட்டான். இங்கே திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லை. அதிக மார்க எடுத்த எனக்குத் தானே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்? ’- இந்த வாதம் பலவிதங்களில் திரும்பத் திரும்ப உங்களால் வைக்கப்படுகின்றது.
90% எடுத்த உன் அப்பா யார்? - பேங்கில் பெரிய ஆஃபீசர்
அம்மா யார்? - ஆசிரியை / இல்லத்தரசி..ஆனால் பட்டதாரி
உன் மாமா/சித்தப்பா/பெரியப்பா எல்லாம் யார்? - ஏதேனும் அரசு வேலையிலோ, சாஃப்ட்வேர் கம்பெனியிலோ நல்ல வேலையில் இருப்பவர்கள்.
அவர்களின் வழிகாட்டலால் அந்த குரூப் வேணும், இந்த குரூப் வேணும் என்று கேட்கும் அளவிற்கு உனக்கு அறிவிருக்கிறது. எங்களுக்கு என்னென்னெ குரூப் இருக்கிறதென்று சொல்லவே ஆள் இல்லை.
படிக்காத அப்பா-அம்மா, எங்கே நல்ல சாரயம் கிடைக்கும் என்று மட்டுமே தெரிந்த மாமா/சித்தப்பா, ஏன் இப்படி கஷ்டப்பட்டு படிக்க வைக்கணும், ஏதாவது கொத்து வேலைக்கு அனுப்பினால் நல்ல காசு கிடக்குமே- என்று அறிவுரை சொல்லும் சொந்தங்கள், பள்ளி விட்டு வந்தபின்னும், சனி-ஞாயிறுகளில் தீப்பெட்டி ஆஃபீஸ்/கடையில் வேலை செய்ய வைக்கும் வறுமை --------இந்தச்
சூழ்நிலையில் படித்து 70% மார்க் வாங்குபவன் புத்திசாலியா?
அனைத்து வசதிகளோடும், படிக்க தனியறை, வழிகாட்ட சொந்தபந்தங்கள், சுற்றிலும் படிப்பில் போட்டி போடும் சொந்தங்கள், டியூசன்கள் ---- இந்தச் சூழ்நிலையில் 87% எடுப்பவன் புத்திசாலியா? இவ்வளவு வசதியிருந்தும் 87% என்றால், மேலே சொன்ன சூழ்நிலையில் படித்தால் உன் மார்க் என்னவாக இருக்கும்?
இட ஒதுக்கீடு என்பது இதனால் தான் தேவையாகியது. ஒரு பந்தயம் நடக்கிறதென்றால் இருவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி அதற்கு முன் வழங்கப்பட்டிருக்கவேண்டும். பலநூறு
பல வருடங்களாக/வம்சங்களாக கல்வியிலேயே உழலும் சமூகத்துடன், இப்போது தான் தட்டுத்தடுமாறி மேலெழுந்து வரும் சமூகத்தை மார்க் அடிப்படையில் மட்டுமே போட்டியிடச் சொல்வது எந்த வகையில் நியாயம்?
இப்போதும் எந்தத் துறை நன்றாகப் போகிறது, அதில் எந்தப் பிரிவு நன்றாக இன்னும் மேலே செல்லும், அதற்கு எதைப் படித்தால் நல்லது------போன்ற அனைத்து விஷயங்களும் பிற ஜாதிகளை விட பிராமண ஜாதிக்கே முதலில் தெரிகிறது. அதற்குக் காரணம் முன்பே கல்வி கற்று அனைத்துத் துறைகளின் உயர்மட்டத்தில் அவர்கள் இருப்பதால் தான். அதுவே இவ்வளவு வெறுப்பு+எதிர்ப்புக்கு இடையிலும் உங்களை கிழே விழாமல் காக்கிறது.
மார்க் என்பது மட்டுமே ஒருவரின் தகுதியை நிர்ணயிப்பது என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். இங்கே மனப்பாடம் செய்து, நன்றாக ஒப்பிப்பவனே அதிக மார்க் எடுப்பவனாகவும், புத்திசாலியாகவும் பார்க்கப்படுகிறான். ஆனால் அது சரியான மதிப்பீடு தானா?
எனவே தான் மார்க் மட்டுமே பார்க்கப்படாமல், அவனது பின்புலமும் பார்க்கப்படவேண்டிய அவசியம். அதைச் செய்வதே இட ஒதுக்கீடு.
ஆனால் இட ஒதுக்கீடு முறையிலும் குறைகள் உண்டு.
அதுபற்றியும் பேசுவோம்....
(அனுமார் வால் மாதிரி போய்க்கிட்டே இருக்கே..இதுக்குத் தான் நான் வாயே திறக்கற்தில்லை!...உங்க நண்பர்களுக்கும் இதை பகிரலாம். மாற்றுக்கருத்தைப் பெறுவோம்..தொடர்ந்து பேசுவோம்..பிராமண சமூகமும் பிற சமூகங்களும் ’பேசுவதே’ இல்லை..வசை/திட்டு,பொருமல் தான்...........நாமாவது பேசுவோம்...)
அன்புடன்
செங்கோவி
(தொடரும்)
நல்ல அலசல்! ஆனால் போரில் உயிரிழந்தது "ஷத்ரிய" வருணமே என்பது ஒரு நெருடல். அனைத்து சாதியினருமே படைவீரர்களாக இருந்தார்கள் என்று தான் நான் நினைத்து கொண்டிருந்தேன்
ReplyDeleteஇன்னும் எத்தனை தொடரும் போடுவிங்க?
ReplyDeleteநல்ல அலசல் அவர் சொல்லும் திறமையின் அடிப்படையில் அவரின் பின்புலம் படிக்கவில்லை என்பதற்காக அவரின் கல்வியில் போடப்பட்ட முட்டுக்கட்டை இப்படியான வர்க்க வேறுபாட்டை இன்னும் அதிகரிக்கும்.
ReplyDeleteMay be this 'short story' written 4 years ago would be RELEVANT to the last few paragraphs of this blog post.
ReplyDeletehttp://vinaiooki.blogspot.com/2007/04/blog-post.html
Interesting post.
ReplyDeleteI also liked the fact that your audience isnot (yet) calling names and sticking to their view.
நல்ல தெளிவாகவும், கலந்துரையாடுவதற்குமான அணுகுமுறையோடு எழுதுகிறீர்கள். சகோதரர்கள் வாசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஅன்புள்ள் செங்கோவி! வணக்கம்.முதலில் உங்கள் மொழி நடைக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.தெளிந்த நீரோடைபோல அமைதியாக ஆனால் சொல்ல வந்த கருத்தை மிக அழகாகச் சொல்லி உள்ளீர்கள்.ஆரவாரம் இன்றி, சவால்கள் இன்றி எதிர் கருத்துக்களை வரவேற்கும் நோக்கில் அதற்கு வழிவிட்டு முகத்தில் அறைந்தார் போல கதவைச் சாத்தி விடாமல் எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteஉங்களுக்குக் கிடைத்த கல்வியின் படி அல்லது கையில் கிடைத்த வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து ஒரு கருத்தோட்டத்தைப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.அதில் ஒன்றும் தவறு இல்லை.நாம் அறியாத வரலாறு அல்லது நம்மீடமிருந்து வேண்டு மென்றே மறைக்கப்பட்ட வரலாறு ஒன்று இருக்கலாம் என்பது உங்களுக்கு ஒன்றும் நான் சொல்லித் தெரிய வெண்டியதில்லை.
கல்வியைப் பொறுத்தவரை நான் ஏற்கனவே சென்ற பகுதி 2ல் சுட்டியுள்ள
தரம்பாலின் "இந்திய நாட்டார் கல்விமுறை 18ம் நூற்றாண்டில்" என்ற ஆய்வு நூலைப் படித்தால்தான் 1800 கள் போல அல்லது அதற்கும் முன்பாக நம்து
கல்விமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்.
அவருடைய ஆய்வு நூலகள் 5 புத்தகங்களாகக் கிடைக்கின்றன
Vol 1: Indian Science and Technology in the Eighteenth Century
Vol 2: Civil Disobedience in the Indian Tradition
Vol 3: The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century
Vol 4: Panchayat Raj and India's polity
Vol 5: Essays on Tradition, Recovery and Freedom (which included the
Bharatiya Chit, Manas and Kaal)
இதில் 3வது புத்தகம் "பேரழகான மரம்=இந்திய நாட்டார் கல்வி=18ஆம் நூற்றாண்டில்" என்பது நமது மக்களுடைய கல்வி முறையைப் பற்றி,பள்ளிகளில் மாணவர் வருகை பற்றி விரிவாகப் பேசுகிறது.
கீழ்க்காணும் வலதளத்தில் இருந்து தரவிரக்கம் இலவசமாகச் செய்து கொண்டு அனைவரும் படிக்க வேண்டுகிறேன்,
http://www.samanvaya.com/dharampal/
இந்த ஆய்வு நூலில் இருந்துதான் சென்ற பதிவில் புள்ளிக் கணக்குக் கொடுத்து
'விஜயகாந்த்' என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டேன்.
இந்நூலைப் படிக்காதவர்கள் அல்லது படிக்க விருப்பம், நேரம் இல்லாதவர்கள்
பிராமணன் தங்கள் கல்விக்கான வாய்ப்பைக் கெடுத்தான் என்ற ஆதாரமில்லாத குற்றச் சாட்டை இங்கே வைக்க வேண்டாம் என்று இரு கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
கல்வி அப்போது 3 வகைப்படும்.
1.தமிழ் மொழி, கணிதம்,வாழ்வுக்கு விளக்கம் சொல்லும் நீதிக்கதகள்,புராணக் கதைகள்,இறை வழிபாட்டுக்கான பாடல்கள்,மனப்பாடப் பயிற்சி,...
இது எல்லா தரப்பினருக்கும் கிடைத்து வந்துள்ளது.இந்த ஆரம்பக்கல்வி வகுப்பில்தான் நான் ஏற்கனவே பேசிய லெளகீகப் பிராமணனின் குழந்தைகள்
படித்துள்ளனர்.சாதிக்கு ஒரு வீதி, வீதிக்கு ஒரு திண்ணைப்பள்ளி என்ற நிலை இருந்துள்ளது. ஆசிரியர் அந்தந்த சாதியைச் சார்ந்தவர்தான்.
2.ஆரம்பக்கல்வி முடிந்தவுடன் உயர்கல்வி குலத் தொழில் சார்ந்தது.அதற்கான பயிற்சிப்பள்ளி அவர் அவர் சமூகத்தால் அவர் அவர் வீதியிலேயே நடத்தப் பெறும்.சில சமயம் அது பள்ளியைப் போல் அல்லாமல் தன் சொந்த விடாகவோ அல்லது குருவின் வீடாகவோ இருக்கும். பெரும்பாலும் குருவும் தந்தையும் ஒருவரே.பல இடங்களில் தன்னிடம் தொழில் கற்க மறுக்கும் தன் பிள்ளயை வேறு குருவிடம் அனுப்பும் முறையும், சில இடங்களில் அதற்கு முறையான பயிற்சி வகுப்புக்களும் இருந்துள்ளன.இது இப்போதய டெக்னிகல்
எஜுகேஷனுடன் ஒப்பிடத் தகுந்தது.இது மேலே பேசிய உலகாயதப் பிராமணனின் பிள்ளைகளுக்கு கிடைக்காது. அதாவது இஞ்சினியரிங், மருத்துவப் படிப்பு பிராமணப் பிள்ளைக்கு இல்லை.இல்லை என்பதைவிட
அப்போது இருந்த சமூக அமைப்பில் பிராமணன் அவற்றை கற்க வாய்ப்பே இல்லை.
3.வேதக் கல்வி(வேதத்தை மனப்பாடம் செய்தல்), சமஸ்கிருத மொழி,சடங்குகள் செய்விப்பதற்கான மந்திரம், புராணங்கள் மூல நூல் தேர்ச்சி,
ஆகியவை ஆரம்பக்கல்வி.இவற்றிலேயே உயர்கல்வி, நியாயம், தர்க்கம்,பிற மத தத்துவங்கள், மேடையில் உபன்யாசம் செய்வதற்கான வழிமுறைகள்....
இதைப் படிப்பவர்களுக்கு மேலே சொன்ன இரண்டு வகைக் கல்வியும் இல்லை.
இந்த 3வது வகைப் படிப்பு வேதப் பிராமணனுக்கு உரியது.இவனே உண்மையில் பிராமணன். 1ல் சொன்ன லெளகீகப் பிராமணர்கள் வேதப் பிராமணனின் சொந்தக்காரர்கள் மட்டுமே.
(தொடரும்)
என் தாயார் 5 வது வரைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து உள்ளார்கள்.
ReplyDelete1923ல் பிறந்தவர்கள்.1928 முதல் 1933 வரை படிப்பு.
வீட்டில் ஏழ்மை நிலை.எனவே பள்ளிக்கான ஸ்லேட் பலபம் கூட வாங்கித்தர
மாட்டார்களாம்.ஒரு பள்ளியில் விரட்டி விட்டால் அடுத்த பள்ளியில் போய்
உட்கார்ந்து காதால் கேட்டுக் கொண்டு வருவார்களாம்.
ஜாதிக்கான தெருக்கள்.அக்கிரகாரம், செட்டித்தெரு, முதலித்தெரு,
பிள்ளைத்தெரு, கொசத்தெரு, வண்ணார்தெரு பறைச்சேரி என்று.ஒவ்வொரு
தெருவுக்கும் ஒவ்வொரு திண்ணைப் பள்ளி உண்டாம் அந்தந்த சாதி வாத்தியார்
இருப்பாராம். தலித் தெருவில் கூடப் பள்ளி உண்டு.விருப்பப்பட்ட யார்
வேண்டுமானாலும் லிடெரேட் ஆகலாம்.
பிராமணன்தான் எங்களைப் படிக்கவிடவில்லை என்பதெல்லாம் பொய்.அரசியல்
பிராமணன் வேதக் கல்வியை மற்றவருக்கு விவேகானந்தர், தயானந்தர்(ஆர்ய
சமாஜ்)வரும் வரை தரவில்லை என்பதே உண்மை.1900க்குப்பிறகு அவையும் புத்தகம்
ஆகிவிட்டன.
நான் துலா ஸ்நானம், மற்றும் முடவன் முழுக்கு ஆகியவற்றிற்காக 4 'ஓல்டீ'சைக் கூட்டிக் கொண்டு மயிலாடுதுறை செல்கிறேன். 17 இரவுதான் திரும்புவேன்,அதன்பின்னர் தொடருவேன்.
அதுவரை இந்த எண்ணங்களை அசைபோடுங்கள்.
"பெரியாரும் அம்பேத்காருமே இட ஒதுக்கீட்டுக்காக முதலில் குரல் கொடுத்தனர்" நான் இதை மறுக்கிறேன்.
"அம்பேத்கரும் பெரியாரைப் போல,திராவிடக் கட்சிகளைப்போல பிராமணர்களை ஆரியர் என்றுதான் சொல்லி வந்தார்" நான் இந்தக் கருத்தை மறுக்கிறேன்
"அம்பேத்கர் பெரியாரைபோல நாத்திகர்" நான் இல்லை என்கிறேன்
"அம்பேத்கர் திராவிடக் கட்சிகளை போல சமஸ்கிருதம் ஹிந்தி எதிர்ப்பாளர்"
நான் இல்லை என்கிறேன்
"ஆங்கிலேயன் சாதிவாரியாக ராணுவத்தினை வைக்கவில்லை சாதி வாரியான ராணுவத்தினை வெள்ளையன் அழித்துவிட்டான்"
இது ஓரளவுதான் உண்மை.
"நீ என்ன படிச்சுட்டு கலெக்டரு உத்யோகமா பார்க்கப் போற. பேசாம ஆட்டப் பத்திக்கிட்டுப் போடா?" இந்த வசனம் பேசியது எந்த சமூகம்?பிராமண சமூகமா?
'அடுப் பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று சொல்லிய சமூகம் எந்த சமூகம், பிராமண சமூகமா?'
மாற்றங்கள் வரும் போது எந்த சமூகம் அதனை உடனே தாவிப் பிடித்துக் கொள்கிறது? பிராமண சமூகமா அல்லது ஏனையோரா?
ஏனையோர் மாற்றங்களை ஸ்வீகரிக்க தாமதப் படுத்திப் பின்தங்கினால் அவர்கள் பிற்படுத்தப்பட்டோரா?அதற்கு பிரமணன் என்ன செய்ய முடியும்?
பிராமணன் பிற்படுத்தியது போல 'பிற்டுத்தப்பட்டோர்' என்று தாங்களே பெயர் சூட்டிக் கொள்ளலாமா? 'பின்தங்கியோர்' என்பதுதானே சரி?
'தாழ்த்தப்பட்டோர்' என்பது 'நில உடைமைக்காரர்களால் தாழ்த்தப்பட்டோர்' என்பதுதானே சரியாக இருக்கும்? தாழ்த்தியது யார்?பிராமணனா?
கோவிலில் இன்றளவும் பூசைகளை விடாமல் செய்தி கொண்டு"ஏ அய்யரே!"
என்று அதிகார தொனியுடன் கூப்பிடும் கோவில் நிலங்களை அநுபவித்துவரும்
நில உடைமயாளர் தாழ்த்தினாரா அல்லது வெறும் மணி அடிக்கும் குருக்கள் அவர்களைத் தாழ்த்தினாரா?
சாதி வித்தியாசத்தால் தலித்துக்களை கோவிலுக்குள் வர விடாமல் அடிப்பது ஐயரா, மற்றவர்களா?
யோசியுங்கள்.
(18ம் தேதி மீண்டும் வருவேன்)
This comment has been removed by the author.
ReplyDeleteவாசித்தேன் விவாதம் தொடரட்டும்
ReplyDeleteநிதானமாக, கவனமாக கையாண்டுள்ளீர்கள். தொடருங்கள் நண்பா...
ReplyDeleteஉங்களது ஆழ்ந்த சிந்தனை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
ReplyDeleteஅதீத உணர்வு வெளிப்பட்டாலும் வார்த்தைகள் நிதானமாக விழுந்திருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த விவாதம் தேவையற்றது என்றுதான் எண்ணினேன். இப்போது இது என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது. எல்லாம் தானாக நடப்பதுபோல் நிகழவைப்பதுதான் சூழ்ச்சி. அப்படித்தான் இவைகள் நடந்திருக்கின்றன. இனிமேலாவது நல்ல விழிப்பு அவசியம் தான்.
வாழ்த்துக்கள்.
God Bless You.
திரு வெட்டிப்பேச்சு தனது வாக்கியத்தை சிறிது விளக்கினால் தேவலை.
ReplyDeleteஅது இந்த விவாதத்தை முன்னெடுக்க மிகவும் உதவும்,
உண்மை தான் அண்ணே, தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் வளர்ந்தவர்களில் நானும் என்பதால் உங்களின் வார்த்தைகளின் வலி உணர முடிகிறது.
ReplyDelete"அவர்கள் நன்றாக படிக்கின்றார்கள், முன்னேறியிருக்கிறார்கள" என்ற வாதத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் பதில் "இதெல்லாம் வாய்ப்புகளால் வந்த வலிமை".
ReplyDeleteவலிமையான, காயப்படுத்தாத வாதங்கள். தொடருங்கள்.
வணக்கம் சகோ, விவாதம் அருமையாகச் செல்கின்றது, இவ் விடயத்தில் எம் தமிழக நண்பர்கள் பலர் கலந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteயாரையுமே காணலை!
உண்மயான ஒரு தகவல் நல்ல கருத்துக்கள் ஆதாரத்துடன் பஹிர்கிரீர்கள் நானும் இது போன்ற சூழ்நிலைகளை கடந்து வந்ததால் இதன் வலி உணர முடிகிறது. நன்றி தொடர்ந்து அலசுங்கள் வெற்றி நமதே
ReplyDeleteஉண்மயான ஒரு தகவல் நல்ல கருத்துக்கள் ஆதாரத்துடன் பஹிர்கிரீர்கள் நானும் இது போன்ற சூழ்நிலைகளை கடந்து வந்ததால் இதன் வலி உணர முடிகிறது. நன்றி தொடர்ந்து அலசுங்கள் வெற்றி நமதே
ReplyDeleteஎனக்கும் இந்த எக்ஸ்பீரின்ஸ் கீதுபா.
ReplyDeleteநான் 1983 லெ காலேஜ்லெ சேந்தேன். என் தாத்தா டெய்லர். அப்பா சவூதிலெ வேலை. 84லெ திடீர்னு ஏழெட்டு பேரு டீஸீ வாங்குனாங்க. இன்னாடா இப்டீன்னு கேட்டா, எஞ்சினீர் படிக்க போய்ட்டனுங்கன்னு சொன்னாங்கபா. அப்போதான் என்க்கே தெரிஞ்சுது. 8000 ரூபாய் கொடுத்தா, பிரைவேட் காலேஜ்லெ புதுசா என்ஜீனீரிங் சீட் கிடைக்குதுனு. நான் இத எங்கப்பாக்கு சொல்லி அவர் அந்த பணத்த ஏற்பாடுபண்ணி கொடுக்ரதுகொள்ள, நான் லாஸ்ட் யியர் வந்துட்டேன். அப்படியே எல்லாம் பாயாபோச்சுபா. இப்போ நான் துபாய்லே குப்பெ கொட்றேன். ஆனா ஒரு விஷயம்பா... இப்போ அந்த அய்யர் பசங்கள பாத்தா பாவமா கீதுபா. 96, 98 % எடுத்தாலும் சீட் கெடெக்கமாட்டேங்குதுபா.
நல்ல பதிவு..எழுத்தாளுமை அருமை..
ReplyDeleteஎழுத்தாளனின் பார்வை தனக்குண்டான வலிகளை விலக்கிவிட்டு வந்துவிழ வாய்ப்புகள் இல்லை..ஒவ்வொரு எழுத்தாளனும் காமெண்டேட்டரும் இதையேதான் செய்யமுடியும்..
சுய அனுபவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வரலாற்றிலே இதுபற்றிய பதிவுகள் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்று படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்தப்பதிவு..
வரலாறே திருத்தி எழுதியிருக்கப்பட்டிருக்கும் அபாயமும்கூடவே இருக்கலாம்..
பள்ளியிலிருந்து கல்லூரி வரும் வரைக்குமான பயணத்தில் இருந்த குழப்பம் மட்டுமே இங்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது..
படிக்கும் காலங்களிலும் எதற்குப் படிக்கிறோம், படித்தபின் எதற்கு இந்தப்படிப்பை உபயோகமாக்கப் போகிறோம், placement பற்றிய விழிப்புணர்வு,சம்பாத்தியத்துக்கான வேலையைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம், என்ற எந்த விஷயங்களுக்குமான ஆயத்தம் ஏதுமின்றியே களமிறக்கப்படுகிறான் இந்தவகைப் பிரிவைச் சேர்ந்த அந்தக்கால மாணவன்..(1990 -2010 என்று கடந்த இருபது வருடங்களில் மாறிவிட்டிருக்கும் தற்போதைய நிலைமை வேறு..)
இந்தக் குழப்பங்களிலேயே வாழ்வின் கணிசமான இளம்பாகத்தைத் தொழிலுக்கான, சம்பாத்தியத்துக்கான வேலையைக் கண்டுபிடிக்கவேண்டிய தேடலிலேயே தொலைத்து எஞ்சியுள்ள காலத்தை 'இந்த எட்டுச் சுரைக்காயை வைத்துக்கொண்டு போராடவேண்டாம்..இடையிலே நாலஞ்சு வருஷத்திலே வந்து சேர்ந்த பதவி, பட்டத்தை எல்லாம் காற்றிலே பறக்கவிடுவதே புத்திசாலித்தனம்' என்று சுயதொழிலைக் கண்டறிந்து சமூகத்து சூழலில் போராடி ஒரு நிலைக்குவருமுன் வாழ்வின் காலகட்டம் பாதிக்குமேலே கடந்துபோவதுதான் சோகம்..
பல நெருங்கிய நண்பர்களின் பட்டங்கள் இப்படிக் காற்றிலே பறக்கவிடப்பட்டுள்ளது என்னவோ உண்மை..
தொடர் போராட்டத்தில் வெற்றிக்கனி சுவைத்த கொஞ்சம் பேரும் விடாமுயற்சியுடையவர்களாக, சளைக்காத வெறிகொண்ட வேதாளங்களாக இருந்துதான் சாதிக்க முடிந்திருக்கிறதே தவிர இங்கே இயல்பாக எளிதாக எதுவுமே இந்த சமூகச்சூழலில் நடந்திருப்பதாக எனக்குத்தெரியவில்லை..
மீண்டும் நிகழ்கால வர்ணத்தின் அடிப்படையில்தான் செய்யும் தொழில் வந்தமைகிறதோ என்று ஒரு குழப்பமே ஊசலாடுகிறது..
தனிமனிதனின் சுய அனுபவம், பார்வை என்பதை விடுத்து சமுதாயத்தைக் கருத்தில் கொண்டு போராடிப் பெற்ற உரிமைகளை சமைத்துக் கொடுத்த தலைவர்களின்பார்வை,எல்லோருக்குமாக நிரந்து சலுகைகள் அளிக்கப்படவேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் நடப்பில் நிலுவையிலுள்ள கோரிக்கைகள்
என்று அவரவர் தாம் சார்ந்துள்ள சமுதாய அடிப்படையிலே படித்துத் தெளியவேண்டிய விஷயங்கள் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன்..
இப்போதுள்ள சூழலில் இவற்றைவிட்டுத் தொலைதூரம் கடந்து வந்திருக்கும் எனக்கு சமுதாயரீதியிலான அவசியத்தைத் தவிர்த்து சுயத்தின் அவசியமே இல்லாத நிலையில் இந்த விஷயத்தின் மேலான தேடலும் படிப்பும் அவசியமா?என்ற கேள்வியும் கூடவே எழுகிறது..
நேரமின்மைதான் காரணம்..
எனினும் சிறிது சிந்திக்கத் தூண்டிய செங்கோவிக்கு நன்றி..
பதிவுக்குப்பின் மிகுந்த உழைப்பு இருப்பதாகத் தெரிகிறது.
ReplyDeleteஅருமையான விவாதங்கள்
ReplyDeleteஆனால் ஒரு வருத்தம்
மொக்கை பதிவுக்கு எல்லாம்
நூறு கமெண்ட் மேல வரும்
ஏன் எங்க மட்டும் வெறும் இருபத்து ஐந்து கூட தாண்ட வில்லை ?why why why ?
விளக்கங்கள் போதும்
என்று அமைதியா ?
ஆனால் ஒரு விடயம் அண்ணா
சரியான வழிக்காட்டுதல்
நீங்க சொன்ன காலகட்டங்களில் இல்லை
நூறு சதவீதம் சரி .
தெளிவான பார்வைகள்
வாழ்க வளமுடன்
வரலாற்றுப் பின்னணியில் முக்குலத்தோருக்கு ஏற்பட்ட தாழ்வை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.அதற்குக் கால்டுவெல்லின் நூலைத் துணைக்கு அழைத்துள்ளீர்கள்.நல்லது.
ReplyDeleteசிப்பாய்க் கலகம் என்று சிறுமைப்படுதப்பட்ட 1857 இந்திய சுதந்திரப் போர்(இதுதான் முதல் இந்தியர் எழுச்சி என்று இந்தியா முழுதும் பரப்பி வைத்துள்ளார்கள், உள் நோக்கத்த்டன்) நடந்தபின்னரே இங்கிலாந்து அரசியின் ஆளுகைக்குள் இந்தியா எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுவரை கிழக்கு இந்தியக் கம்பனியின் சுயநல ஆதிக்கமே இருந்துள்ளது.
இந்திய் ராணுவத்தில் பெங்கால், பாம்பே, மெட்ராஸ் ரெஜிமெண்ட்ஸ் இருந்துள்ளன.பெங்கால் ரெஜிமெண்டில் பிராம்ணர்களும் ராஜபுத்திரரகளும் வீரர்களாகப் பணியாற்றியுள்ளனர். என்ன காரணத்தினாலோ இந்த சாதிக்குக்கீழே இருந்தோர் பெங்கால் ராணுவத்தில் சேர்க்கப் படவில்லை.கவனிக்கவும் பிராமணர்கள் ராணுவத்தில்!
அதே சமயம் மெட்ராஸ் ரெஜிமென்டில் பறையர் ரெஜிமெண்ட் இருந்துள்ளது. அதேபோல் சாதி இந்துக்ளுக்கான ரெஜிமெண்ட் உண்டு, பாம்பேயிலும் மெட்ராஸ் போல சமுதாய அமைப்பில் கீழாக இருப்பவர்கள் என்று உருவகப் படுத்தப் பட்டவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆகவே பறையர், முக்குலத்தோர் அனைவரும் ஒன்றாக ஒரு படையாகக் கருதப்படாமல், விலகியே இருந்துள்ளனர்;ஆங்கிலேயனும் கூட அவர்கள் ஒன்றுபடாமல் பார்த்துக்கொண்டான்.அவர்களும் தங்கள் சாதி மேட்டிமைத் தனத்தையும், கீழ்மை உணர்வையும் விடாமல் வைத்துக் கொண்டனர்..
பாரம்பரியமாக முக்குலத்தோர் போர்த் தொழில் செய்பவர்கள் என்றாலும்,அவர்கள் தங்களுக்குள்ளாகவே உள் குத்து செய்பவர்களாகவும் இருந்துள்ளானர் என்று நினைக்க இடமுண்டு. கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் போல ஒவ்வொரு குறுநில மன்னருக்கும் ஒரு துரோகியும் உள்ளேயே இருந்துள்ளனர்.எனவே முக்குலத்தோர் 1857க்குப்பிறகு சாதிரீதியான
படைகள் கலைக்கப்பட்ட பின்னர் திடீரென வேலை இழந்தன்ர் என்பதனை எற்றுக் கொள்ள இன்னும் ஆராய்ச்சி தேவை.
பாரதி பாடிய 'போச்சே' புலம்பல், 'ஏன் போச்சு?' என்ற கேள்வியுடன் அதே பாரதியின் கீழ்க்காணும் பாடலுடன் ஒப்பிட வேண்டும்.:
ஜாதிச் சண்டை போச்சோ? -- உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய் -- கண்முன்
நிற்கொ ணாது போடா.
ஒற்றுமை பயின்றாயோ? -- அடிமை!
உடம்பில் வலிமையுண்டோ!
வெற்றுரை பேசாதே -- அடிமை
வீரியம் அறிவாயோ?
சேர்ந்து வாழுவீரோ? உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல்போச்சோ -- உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ?
சேனை நடத்துவாயோ? -- தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈனமான தொழிலே -- உங்களுக்கு
இசைவதாகும் போடா.
(continued)
பாண்டியர்கள் சோழர்களை போல படைபலம் இல்லாமல் போனதற்குக் காரணம்
ReplyDeleteபாண்டிநாட்டு போர்த் தொழில் புரிவோர் ஒற்றுமை அற்றவர்கள் என்பது ஒரு காரணம். அவர்களினை சோழர் போல ஒரு படையாகத் திரட்ட முடியாது.
வீர மரணம் அடைய ஒரு தேவன் விரும்புவானே தவிர போரில் எவ்வாறு வெற்றி பெறுவது என்ற போர் தந்திரம் இல்லாதவர்களாக 'டாக்டிக்கல்'பின் வாங்குவது அவமானம் என்று கருதுபவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இன்னொன்று, பிராமணன் போர்த் தொழில் செய்யவில்லை என்பது சரியா?
உங்களுக்கு மேஜர் ஜெனெரல் கே.சுந்தர்ஜியை நினைவு படுத்துகிறேன்.பங்ளாதேஷ் போரின் போது பணியாற்றியவர்.அதில் நாம் வெற்றி பெற்றோம் அல்லவா?அவ்ர் சீஃப் ஆஃப் ஆர்மி ஸ்டாஃப் ஆக இருந்தவர்.செங்கல்பட்டைச் சேர்ந்த அய்யங்கார் பிராம்மணத் தமிழர்.
சரி. என் குடும்பத்தில் என் பெரியப்பா ஒருவர் மிலிடரியில் சேர்ந்து பயிற்சியில் சேர்ந்து இறந்துபோனார்.என் அப்பாவின் நினைவுக் குறிப்பிலிருந்து:
"என் மூத்த சகோதரர் ஹரிஹரசுப்பிரமணியன் 1898-99ஆம் ஆண்டு பிறந்திருக்க வேண்டும். அவரை அடுத்தவர் ரங்கசாமி 1900ம் ஆண்டு பிறந்ததாக அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என் மூத்த சகோதரர் V Form படித்தபோது ஒரு ஆண்டு பரிட்சை சமயம் டைபாய்டு ஜுரத்தாலும் மறு ஆண்டு கைகால்களில் அழுகச் சிறங்கு ஏற்பட்டு தேர்வு எழுத முடியாது போனதாலும்,அவருடைய தம்பி 1916ல் SSLC தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று சென்னை கிண்டி எஞ்ஜினியரிங் கல்லூரியில் Upper Subordinate வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டதாலும், என் மூத்த சகோதரர் மேலே படிக்க விரும்பவில்லை.
அது சமயம் 1914ம் ஆண்டு ஆரம்பித்த முதலாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பட்டாளத்திற்கு ஆள் சேர்ப்பு நடந்தது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் 18 வயது நிரம்பியதும் என் மூத்த சகோதரர் பட்டாளத்தில் சேரக் கையெழுத்திட்டு விட்டார். அதை வாபஸ் பெற என் தகப்பனார் எவ்வளவோ முயன்றும் முடிய வில்லை. ஆகவே அவர் (என் சகோதரர்) நெல்லையை விட்டு 1919 ஆகஸ்டு மாதம் சென்னை Army Campக்கு ஓரு வியாழக்கிழமை ரயிலேறினார். அடுத்த வாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை General Hospitalல் இறந்து போனார். அவர் தம்பி ரங்கசாமி, ஆஸ்பத்திரிக்குச் சென்று மிகுந்த சிரமங்களுக்கிடையே உடலைப்பெற்று, கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்தார்."
இதுபோல பல பிராமண இளைஞரகல் போர்த் தொழிலும் செய்துள்ளனர்.புராண காலத்திலேயே போரில் பிராமணர் பங்கு ஏற்றுள்ளனர்.
வட ஆர்காடில் ஒரு கிராமத்தினர் இன்றளவும் பட்டாளத்தில் சேர்வதையே அவர்களுடைய கிராமப் பெருமையாகக் கருதி சி றுவயது முதல் ஆண்மகன் களைத்தயாரிக்கின்றனர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்.
இப்போதும் அவர்கள் படையில் சேர எது தடையாக உள்ளது?
///1900களில் மிஷனரிகள் அந்த ஜாதிகளுக்கு கல்வி தர முன்வந்தன. ஆனாலும் அதுவும் இந்த சமூகங்களால் புறக்கணிக்கப்பட்டன. அதிலும் பெண்கள் யாரும் கல்விகற்க முன்வரவில்லை. ‘தாசிக்கும் அரசிக்குமே படிப்பு தேவை. எங்களுக்கு எதற்கு?’ என்ற கேள்வி அவர்களால் கேட்கப்பட்டது.(திருநெல்வேலி சரித்திரம்-கால்டுவெல்). நிலப்பிரபுத்துவ மனநிலையை விட்டு வெளிவராததால் அறியாமையுடன் அந்த மக்கள் கல்வியை புறக்கணித்தனர்.///
ReplyDeleteகால்டுவெல் என்ற வெளிநாட்டுக்காரருக்கு நமது நாட்டார் கல்வி முறைமீது நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்த எளிமையான கல்வி முறை தொடர்ந்தால் தங்களுடைய ஆங்கிலேய/கிறித்துவ அரசுக்கு ஏதும் லாபமில்லை என்று கணக்கிட்டு இருக்கலாம்.கல்வி என்பதே கால்டுவெல் காலத்தில் கிறித்துவ மதப் பிராச்சம்தான். இங்கு மட்டும் அல்ல. இங்கிலாந்திலும் ஏழைகளுக்கு சன்டே பைபிள் பள்ளி மட்டுமே அக்காலத்தில் இருந்துள்ளது.
இந்நிலையை மாற்ற பெல் என்ற பாதிரியார் நமது திண்ணைப் பள்ளிகள் குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள், பள்ளிக்கான இடம் ,தளவாட சாமான்களின் சிக்கனம் ஆகியவற்றையும், சீனியர் மாணவன் ஜூனியர்களுக்குக் கற்றுக் கொடுப்பதையும் கண்ணுற்று அதனைக் காப்பி அடித்து இங்கிலாந்து கொண்டு சென்றார். அந்த வகையில் இந்தியா ஃபாரின் ஏழைகளுக்குக் கல்வி கிடைக்க வழிகாட்டியுள்ளது. Madras Mmonitorial System
என்று கூகிளில் கேட்டுப் பாருங்கள்.
மிஷனரிகளுக்கு முன்பே நமது திண்ணைப் பள்ளிகளில் படித்து இருந்தாலும் கூட அவர்கள் லிடெரேட் ஆகி இருக்க முடியும்.ஏன் செய்யவில்லை? புரியவில்லை.1928=33ல் என் தாயார் படித்ததைச் சொன்னேன். அதுபோலக் கூட முக்குலத்தோர் முயற்சி செய்யவில்லை என்பது வருத்ததை அளிக்கிறது.
இதில் பிராமணன் செய்த தவறென்ன?
//காங்கிரஸ் போன்ற இயக்கங்களில்கூட பிராமணர்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.//
ReplyDeleteஇந்த 'ஆதிக்கம்' என்ற சொல் இந்த இடத்தில் கொஞ்சம் நெருஞ்சி முள்ளாகக்
குத்துகிறது.இது பெரியாரிஸ்டுகள் கிளப்பிவிட்ட பொய்ப் பிரசாரம்.
கம்யூனிஸ்டுகளிலும் பிராமணர் 'ஆதிக்கம்' என்று அந்தக் கட்சியையும் உடைத்தார்கள்.
காந்தி கால கங்கிரசில் பிராமணர்கள் எண்ணிக்கை(ஆதிக்கம்) அதிகம் இருந்தது என்பது எனக்குப் பெருமைக்கு உரிய செய்தியே. ஆனால் காந்தியின் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸில் பிராமணர்களின் எண்ணிகை எவ்வளவு? என் தந்தையார் போன்றவர்கள் காந்திஜி சொல் கேட்டு கங்கிரசில் இருந்து விலகிவிட்டனர்.உண்மை தேச பக்தர்கள் விலகிவிட்டனர்.
அந்த அரசியல் மாற்றத்தில் பலன் அடைந்தவர்கள் எப்போதும் அரசில் இருப்பவர்களை கால்கை பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளே.ஏற்கனவே ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்கள் காங்கிரசில் பதவிகளைப் பிடித்தார்கள்.
காமராஜர் அமைச்சரவையில் ஆர். வெங்கடராமன் பதவியில் இருந்தார்.
அவரைத் தவிர 1947ல் இருந்து எத்தனை பிராமணன் அமைச்சராக இருந்தான்?
1967 க்குப்பிறகு எத்தனை எம் எல் ஏ பிராமணன்?
சுதந்திரப் போராட்டதில் தியாகங்களில் ஆதிக்கம் செலுத்தினோமே தவிர அதிகாரத்தில் அல்ல.
என் தந்தையாரின் டயரிக்குறிப்பில் இருந்து:
"1916ம் வருடம் அன்னி பெஸன்ட் அம்மையார் தோற்றுவித்த Indian Home Rule Movement தீவிரமாக நடந்து வந்தது. அப்போது எனக்கு எட்டு வயது. மகாகவி பாரதியாரின் 'வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம்' என்ற பாட்டை உரக்கப் பாடும் ஆற்றல் என்னிடம் இருந்தது. அப்போது பிரபல வக்கீலான சாது கணபதி பந்துலு என்பவர் இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பொதுக் கூட்டங்களில் என்னை மேஜை மீது ஏற்றி நிறுத்தி பாடச் சொல்வார். நானும் பாடுவேன். கையில் சாக்லேட்டும் நீளமான பெரிய Safety Pin கொண்ட Home Rule Badgeம் எனக்குத் தருவார்கள். இப்படியாகத்தானே தேசப்பற்று என்னை வந்து தொற்றிக் கொண்டது."
எட்டுவயதுஇல் நாட்டுப்பற்று அடைந்த என் அப்பா ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடனா தியாகம் செய்தார்.
இந்த காந்திஜயந்தி அன்று 2 அக்டோபெர் 2011 அன்று
http://classroom2007.blogspot.com இல்
என் கட்டுரை காண்க.
காந்திஜி பிரபலமாவதற்கு முன்னரே தஞ்சை மாவட்டம் கோவிந்தபுரம் என்ற
குக்கிராமத்தில் இருந்து 18 வயது நிரம்பாத பையன் காந்திஜியைத்தொடர்பு கொண்டுள்ளான். அவன் ஒரு வேதம் படித்த சாஸ்திரியார் மகன்.
காந்திஜியின் நூல் தொகுப்பு 15வது வால்யூம்.
6. LETTER TO P. G. BALASUNDARA SASTRI
=====================================================
AHMEDABAD,
June 1, 1915
DEAR SIR,
Mr. Natesan1 has sent me your letters addressed to him and to
me. I thank you for both. Your son2 has been in correspondence with
me. His last letter stated that he was driven away by you. I therefore
wrote to him yesterday saying that in that case he was free to come to
me. His ultimate aim seems to be to join the Servants of India Society.
If your boy comes here and is found to be not of mature age so far as
I am concerned he will be certainly sent back to you. I take no
boysunder age without the consent of their parents. You may
therefore fully depend upon my co-operation with you.
Yours faithfully,
M. K. GANDHI
MR. P. G. BALASUNDARA SASTRI
GOVINDAPURAM VILLAGE
ADUTURAI POST
THANJAVUR DISTRICT, MADRAS PRESIDENCY
From a photostat C.W. 11016. Courtesy: Balachandran
/ சமஸ்கிருத நுழைவுத்தேர்வில் வென்றால் தான் மருத்துவப்படிப்பில் சேர முடியும் என்ற நிபந்தனை வரை பல இன்னல்களை பிற ஜாதிகள் சந்திக்கவேண்டியிருந்தது.//
ReplyDeleteசாதிவாரியாக இருந்த கல்வி அமைப்பில் உலகாயதப் பிராமணனுக்கு தமிழ் கணிதம் ஆரம்பக் கல்வி தவிர எதுவும் தெரியாது.வேதப் பிராமணனுக்கு சடங்கு செய்வித்தல், உபன்யாசம் செய்தல் , யாகம் செய்தல் இவற்றில் வருமானத்திற்கு வழி உண்டு.ஆனால் உலகாயதப் பிராம்னனுக்கு வேறு தொழிற் கல்வியும் இல்லை,அவன் ஒரு 'லிடரேட்' என்பதைத் தவிர அவன் படிப்பால் அவனுக்குப் பயன் ஒன்ற்ம் இல்லை. மற்ற சாதியைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவக் கல்வியும், மெடல்லர்ஜியும்,சிவில் எஞ்சினியரிங்கும், லெதர் டெக்னால்ஜியும், விவசாயக் கல்வியும் இன்னும் பல தொழிற் கல்வியும் கிடைத்தன..
ஆங்கிலேயனின் புதிய கல்வி முறைக்குத் தன்னை சீக்கிரம் 'அடாப்ட்' செய்து கொண்டான் என்பது தவிர பிராமணன் எந்தத் தவறும் செய்யவில்லை.யாருடைய இடத்தையும் தட்டிப் பறிக்கவில்லை.
அந்தக் காலத்தில் ஆங்கில் மருத்துவமும் கொய்னா மாத்திரை அளவில் தான் இருந்தது. எனவே இங்குள்ள் ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்தப் பட வேண்டிய கட்டாயம் இருந்தது.ஆங்கிலேயன் இங்குள்ள பிராமணர்களை விட
ReplyDeleteசமஸ்கிருதத்தை நன்கு கற்றான். சமஸ்கிருதத்தில் உள்ள விஞ்ஞான அறிவைக் கடத்திக் கொண்டு போனான்.
அயூர் வேத சொற் பிரயோகங்கள் புரிந்தால்தான் மருத்துவம் புரியும். எனவே அந்தக் கட்டுபாடு ஆங்கிலேயன் கொண்டு வந்தான்.பிராமணன் அல்ல.இன்றும்
டோஃபல், போன்றவற்றில் தேரினால்தான் வெளிநாட்டு பலகலையில் படிக்க முடியும். அதுபோலத்தான் அன்று சமஸ்கிருதம் மருத்துவத்திற்குத் தேவையாக்கப்பட்டது, ஆங்கிலேயனால்.
ஏற்கனவே எனது பின்னூட்டத்தில் எனது கல்லூரியின் ஃப்வுண்டர் முதல்வர் ராமசாமி கவுண்டர், சுவாமி சித்பவனந்தர் போன்ற ஏனைய வகுப்பைச் சேர்ந்தவர்கள் சமஸ்கிருதத்தில் அதாரிட்டியானதைச் சொல்லியுள்ளேன்.
சுவாமி விவேகானந்தர் தெற்கே சஞ்சாரம் செய்த போது ஒரு பெண் மலையாளம்,சமஸ்கிருதம் அறிந்தவள் அவருடன் உரையாட விரும்பினாளாம். சுவாமிஜிக்கு மலையாளம் தெரியாது;அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே இருவரும் சமஸ்கிருதத்தில் உரையாடினார்கள்.
இன்றும் கர்நாடகத்தில் மாட்டூர் என்ற கிரமத்தில் அனைவரும் தாய்மொழியாக சமஸ்கிருதததைக் கொண்டு அதிலேயே பேசுகின்றனராம்.
சிற்ப சாஸ்திரம், கோவில் நிர்மாணம், சோதிடம் ஆகியவைகளுக்கு சமஸ்கிருத அறிவு முக்கியம்.சமீபத்தில் மறைந்த கணபதி ஸ்தபதி சமஸ்கிருதம் அறிந்தவரே, அவரது மூதாதையர் போலவே.
//கடும் வெறுப்புடனே அவர் பிராமணீயத்தை எதிர்கொண்டார். எல்லா மட்டத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று போராடினார். முடிவில் வென்றார்.///
ReplyDeleteஆனால் பெரியாருக்கு முன்னரே தமிழகத்தில் கூட இட ஒதுக்கீடு பற்றிப் பேசி சரியான பார்வையோடு அதனை முன்னெடுத்துச் சென்ற அயோத்திதாச பண்டிதர் பெரியாரிஸ்டுகளால் மறைக்கப்பட்டனர். அயோதிதாசர் போட்ட அஸ்திவாரத்தின் மீது கட்டிடம் எழுப்பினர்,சாதி இந்துக்களான பெரியாரும்,
பனகல் அரசரும். டி எம் நாயரும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் பண்டிதரை தலித் சமூகம் கண்டெடுத்துப் படித்து வருகிறது.
பிராமணணைப் பொது எதிரி ஆக்க தலித்துக்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டதாகப் பம்மாத்து செய்தனர்.
எப்போதும் ஃபாஸிச்டு இயக்கங்களுக்கு ஏதாவது ஒரு பொது எதிரி வேண்டும்.
அதற்குத் தமிழகத்தில் பிராமணன் என்ற பலி ஆடு கிடைததான்.
ஆனால் பண்டிதரின் பார்வை சீரானது.வெறுப்பற்றது.அவர் ஆன்மிகவாதி. தன்னை ஆதி பெள்த்தர் என்றார். அவருடைய இயக்கம் "சாதிபேதமற்ற திரவைட சங்கம்"
//கல்வி கற்க ஆரம்பித்த பின்னரும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு சரியான வழிகாட்டல்கள் இல்லை.//
ReplyDeleteஎன் தாயார் 5வது வரை படித்து இருந்தாலும், ஆங்கிலத்தைத் தன் சுய முயற்சியால் கற்றார்.தினமும் ஹிந்து பத்திரிகையில் வேலை வாய்ப்புச் செய்திகளைப் படித்துவிட்டு சாதி வித்தியாசம் இன்றி அனைவருக்கும் அறிவுறுத்துவார். அம்மா சொல்லி விண்ணப்பித்தவர் ஏராளம்.
எங்கல் இல்லத்துக்கு மிளகாயும் புளியும் கொண்டு விற்கும் மூதாட்டிக்கு 3 பேரனக்ள்.அவர்கள் கிராமத்துப்பள்ளியில் படித்தனர். எந்த சந்தேகம் இருந்தாலும்மிளகாய் மூதாட்டி பேரன்களுடன் வீடு தேடி வரும். அம்மாவின் கவுன்சலிங்கில்பட்டதாரி ஆகி,மூவரும் அரசு வேலையில் அமர்ந்து விட்டனர். ஏற்கனவே என்னளவில் ஒரு ஏழை வன்னியர் பையனை பொறியியல் படிக்க வைத்துள்ளேன்
சென்னையில் சேவாலயா என்ற அமைப்பு பிராமணர்களால் நடத்தப்பட்டாலும்
அதில் படிக்கும் அனைத்து சாதி சிறார்களுக்கும் நல்ல வழிகாட்டுதல் கொடுக்கின்றனர்.
//’நான் 87% மார்க் எடுத்தும், எனக்கு நினைத்த குரூப் கிடைக்கவில்லை. ஆனால் 70-80% மார்க் எடுத்தவன் எல்லாம் என்னை விட நல்ல குரூப்பிற்குப் போய்விட்டான். இங்கே திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லை. அதிக மார்க எடுத்த எனக்குத் தானே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்? ’- இந்த வாதம் பலவிதங்களில் திரும்பத் திரும்ப உங்களால் வைக்கப்படுகின்றது.//
ReplyDeleteஇதை கேட்கும் பிராமண இளைஞனுக்கு உண்மையாகவே கிராமம் தெரியாது.
ரொட்டி கிடைக்காவிட்டால் கேக் சாப்பிடுங்கள் என்ற ஆங்கில அரசகுமாரி போன்றவர்கள்தான் அவர்கள்.சமூக நீதி பற்றியெல்லாம் அறியாத வயசு.அவனுக்கு ஒப்பீட்டுக்கு மதிப் பெண்ணைத் தவிர ஒன்றும் தெரியாது.
நீங்கள் கிராமம்.நகரத்தில் என் பெண்ணுடனேயே எல் கே ஜி முதல் படித்த முக்குலத்தோர் உயர் அதிகாரியின் மகன் இப்போது எம் டி. என் பெண்ணிடம் எல்லாவற்றையும் கேட்டு படித்துக் கொள்வான். அவனைக் காட்டிலும் என் பெண் 10% கூட. அவனுக்கு எம் பி பி எஸ் கிடைத்தது. என் பெண்ணுக்கு இல்லை. அவனுடைய ஸ்டேடஸ், வாய்ப்புக்கள் எல்லாம் என் மகளுக்கு சமம். மதிப்பெண் குறைவு. ஆனாலும் என் மகளுக்குக் கிடைக்கவில்லை.
சுதந்திரப்போராட வீரரின் பேத்திக்கான இடஒதுக்கீடும் காரணமின்றி மறுக்கப்பட்டது.
அதேபோல நான் முன்னர் சொன்ன வன்னியர் பையன் அர்ர் ஈ சி கவுன்சிலிங்கில் தனக்கு முன் உரிமை கிடைத்த தலித் பெண்ணிடம் இதே 'டயாலாகை'ச்சொன்னான்.
இட ஒதுக்கீடு இனி பொருளாதர அடிப்படையில்,ஏற்கனவே பலன் அடைதவர்களை விலக்குதல், படிப்படியாக விகிதாரசாரத்திக் குறைத்தல் ஆகியவை செய்ய வேண்டிய மாறுதல்களாகும்.
"கால்டுவெல் எழுதிய History of Tinnevelly என்ற நூலின் மூலமும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மண்டல வரலாற்றுத் தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழர்களின் வரலாற்று உணர்வு குறித்து கால்டுவெல் கொண்டிருந்த ஏளனமான கண்ணோட்டம் புலப்படுகிறது.
ReplyDeleteபாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸியால் 1803ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டன. இவ்வம்சாவளி வரலாறுகள் குறித்துக் “கட்டுக்கதையைவிட மோசமான புனைவுகள்” என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இவ்வரலாறுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருப்பினும் நம்பகமான வரலாற்று அடிப்படையைக் கொண்டவையே என்பதில் ஐயமில்லை.
அவ்வாறிருக்க, இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இவ்வரலாறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைத்ததன் நோக்கம் என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றுப் பார்வை அறவே இல்லை என்ற எண்ணம் கொண்டவர் கால்டுவெல் என்பதுதான் இதற்குப் பதில்." (From puthu.thinnai.com)
கால்டுவெல் நல்ல அறிஞர்தான்.அவருடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழுக்கு அவர் தந்த கொடை. அதற்காக அவரைக்ககூப்பித்தொழுகின்றோம். ஆனால்,அவர் உள்நொக்கம் கொண்ட, ஆங்கிலேயனின் பிரித்தாளும்ம்சூழ்ச்சிக்குப் பலம் சேர்க்கும் வண்ணம் வரலாற்றினை மாற்றி எழுதும் எண்ணமும் உடையவர் என்றே தோன்றுகிறது.
"
"கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர். ஞானப்பிரகாசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான். " (From puthu.thinnai.com)
///"மார்க் என்பது மட்டுமே ஒருவரின் தகுதியை நிர்ணயிப்பது என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். இங்கே மனப்பாடம் செய்து, நன்றாக ஒப்பிப்பவனே அதிக மார்க் எடுப்பவனாகவும், புத்திசாலியாகவும் பார்க்கப்படுகிறான். ஆனால் அது சரியான மதிப்பீடு தானா?///
ReplyDeleteஎல்லாவற்றிலும் ஏதோ ஒரு பென்ச் மார்க்,அளவீடு, குறியீடு இருந்துதான் ஆக வேண்டும்.மனப்பாடக் கல்வி சுய சிந்தனையைக் கெடுத்து விடுகிறது என்பது ஒரு வாதம்.
வேதம் சுவடியில் எழுதுதல், புத்தகம் ஆக்குதல் என்பவை இல்லாத காலத்தில் ஓதி ஓதி மனப்பாடம் செய்யப்படது.அந்த முறை தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டதால்தான் இன்றளவும் ஒலிக்குறிப்பு மாறாமல் அது காக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் ஆரம்பப்பள்ளிகளில் கணக்குப் பெருக்கல் வாய்ப்பாடு 16வரை மனப்பாடம் செய்யச்சொல்லித் தருவர். அதனால் அன்றோ நாம் கணக்கில்
கெட்டியாக உள்ளோம்.
நல்ல மெசூரிடி வரும் போது மனப்பாடம் குழந்தையில் செய்தவர்களுக்கே மூளை செல்கள் ஷார்ப்பாக வேலை செய்கின்றன. அதற்குப் பல ஸ்லோகங்களை மனப்பாடமகச் சொல்ல கூடிய பிராமணனே சாட்சி.
மனப்பாடம் செய்வது மர்ர்க்கு வாங்க உதவுமெனில் செய்யத்தான் வேண்டும்.
மனப்பாடம் செய்வதால் தான்னக சிந்திக்கும் திறம் இல்லாமல் போய்விடும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.மனப்பாடம் செய்து தினமும் ஒப்பித்து
வருவது மூளைக்கு அளிக்கும் பயிற்சி ஆகும்.அது பலவகையிலும் உதவும்.
இன்று நான் கட்டுரை எழுதும்போது புத்தகத்தைத் தேடாமல் பல பாடல்களை
நினைவில் இருந்தே எழுதுகிறேன் என்பது எனக்குச் சிறுவயதில் அளிக்கப்பட
நினைவாற்றல் பயிற்சியான மனப்பாடப் பயிற்சியே ஆகும்.
மனப்பாடம் செய்து மனதில் வைத்து விட்டால் அது வெள்ளத்தால் அடித்துச் செல்ல முடியாது.வெந்தணலால் எரிக்கப்பட முடியாது.கள்ளர்கள் தூக்கிச் செல்ல முடியாது.
முற்றிலும் மனப்பாடம் செய்வதினை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும், மனப்பாடக்கல்வியும் ஓரளவு நன்மை செய்யக்கூடியதே. அது மூளைக்கு நினைவாற்றல்லை அதிகரிக்கும்.
//பல வருடங்களாக/வம்சங்களாக கல்வியிலேயே உழலும் சமூகத்துடன், இப்போது தான் தட்டுத்தடுமாறி மேலெழுந்து வரும் சமூகத்தை மார்க் அடிப்படையில் மட்டுமே போட்டியிடச் சொல்வது எந்த வகையில் நியாயம்?//
ReplyDeleteஏற்கனவே சொல்லியபடி பிராமணர்களில் வைதீகன் என்றும், லெளகீகன் என்றும் இருவகை உண்டு.வைதீகனுக்குத் தான் தானம் கிடைக்கும். லெளகீகன் வைதீகனுக்கு எடுபிடியாகவும், கல்யாண சமையல் வேலை செய்தும் பிழைக்க வேண்டிய நிலை. சவுண்டி சடங்குகள், பிணம் தூக்குவது, போன்ற வேலைகளையும் லெளகீகன் செய்ய வேண்டும். அவனுக்குக் கைத்தொழில் ஏதும் தெரியாது.அன்றைய சமூகம் அதனை அவனுக்கு அளிக்காது.எனவே லெளகீகன் கற்ற கல்வியால் ஏதும் பயனில்லை. அப்போதுதான் ஆங்கிலேயனின் நிர்வாகச் சீர்திருத்தம் வந்தது.
மற்றசாதியினரும் லெளகீகன் அளவு படித்து இருந்தாலும்,அவர்களுக்கு இருந்த
கைத்தொழில் காரணமாக அவர்கள் அரசுப் பணியினை அலட்சியம் செய்தனர்.
மேலும் அவர்கள் சொந்த நிலத்தினை விட்டுவிட்டு நகரத்திற்கு மைகிரேஷன் செய்ய விரும்பவிலை.நிலம், மாடு போன்ற பந்தங்கள் இல்லாத லெள்கீகப் பிராமண ஏழை சட்டென்று ஆங்கிலேயனுக்கு குமாஸ்தாவாகத் தன்னை மாற்றிக் கொண்டான்.ஆங்கிலத்தினால் விளையப்போகும் வளர்ச்சியினை தன் முக்கால அறிவுத்திறனால் ஆய்ந்துணர்ந்து ஆங்கிலேயனே வியக்கும் அளவுக்கு
ஆங்கில மொழியினைக் கற்றான்.
தேவைதான் கண்டுபிடிப்புக்களின் அன்னை. வாடிய வயிற்றிற்கு ஆங்கிலக்கல்வி, உத்யோகம் மிகுநத தன்னம்பிக்கையை லெளகீகனுக்கு அளித்தது.
//சுய அனுபவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வரலாற்றிலே இதுபற்றிய பதிவுகள் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்று படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்தப்பதிவு..
ReplyDeleteவரலாறே திருத்தி எழுதியிருக்கப்பட்டிருக்கும் அபாயமும்கூடவே இருக்கலாம்..//
ஆம்! மைனர் வாள்! என் பின்னூட்டம் முழுவதுமே மறைக்கப்பட்ட , மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாற்றுத் தடங்களை இளைய தலை முறைக்குக்
காண்பிப்பதுதான்
dont be so naive.i had chances to play only goli and kitti.so am i a better cricketer than sachin?
ReplyDelete@Cheena
ReplyDeleteWill you please elaborate Mr.Cheena?
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
ReplyDeleteவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் 8
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்."
மனப்பாடம் பற்றி அவ்வைப் பாட்டி கூறியது