Saturday, June 9, 2012

முருக வேட்டை_11


சரவணன் உடனே ஆஃபீசினுள் நுழைந்தான். முன்பு இன்ஸ்பெக்டர் விசாரித்த கேஸ் கட்டை தன் டேபிளில் இருந்து எடுத்தான்.


முத்துராமனுக்கு கடைசியாக வந்த நம்பர் என்ன என்று பார்த்தவன் அதிர்ந்தான்.


23242526.


கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் நம்பர்.



சரவணன் தன் கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். அது கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் நம்பரே தான்.

எவ்வளவு புத்திசாலியான கொலைகாரனாக இருந்தாலும், மாட்டிக்கொள்ளும்படி ஏதேனும் ஒரு க்ளூவை விடுவான் என்பது சிபிஐடி போலீசின் பால பாடம்.

செந்தில் பாண்டியனும் அதே தவறைச் செய்திருப்பது சரவணனுக்கு ஆச்சரியம் அளித்தது.

’அப்படியென்றால், முத்துராமனுக்கு சரவணன் அன்று மாலை ஃபோன் செய்திருக்கிறான். இரவு சந்திப்பதாய்ச் சொல்லியிருக்கிறான். அவரும் காத்திருந்திருக்கிறார்..குட்..வெரிகுட் பாண்டியன்..’ முணுமுணுத்தபடியே சரவணன் அகிலாவின் ரூம் நோக்கி ஏறக்குறைய ஓடினான்.

அங்கே பாண்டியன் அகிலாவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். தயங்கியபடியே சரவணன் வெளியே நின்றான்.

சரவணன் காத்திருப்பதைப் பார்த்ததும் பாண்டியன் வெளியே வந்தான். முறைத்த பார்வையுடன் சரவணனைக் கடந்து சென்றான்.

சரவணன் வேகமாக அகிலாவின் அறைக்குள் நுழைந்தான்.

“மேம், நம்ம கேஸ்ல முக்கியமான எவிடன்ஸ் கிடைச்சிருக்கு”

அகிலா சுவாரஸ்யமே இல்லாமல் “என்ன எவிடன்ஸ்?’ என்றாள்.

“இங்க பாருங்க..முத்துராமன் சாருக்கு கடைசி நாள்ல வந்த ஃபோன் கால்ஸ் லிஸ்ட்..அதுல கடைசி நம்பரைப் பாருங்க”

அகிலா பார்த்தாள். சாதாரணமான “சரி, அதுக்கு என்ன?” என்றாள்.

“மேம், நீங்க கவனிக்கலையா?..இது நம்ம ஆபீஸ் நம்பர்..கொலையாளி முத்துராமன் சாருக்குத் தெரிஞ்சவனாத் தான் இருக்கணும் இல்லியா? அப்போ அவன் அவருக்கு ஃபோன் பண்ணியிருப்பான், இல்லியா? அந்த நம்பர் தான் இது” என்று ஒருவித வெற்றிப் புன்னகையுடன் சொன்னான் சரவணன்.

“ஓ..அப்போ கொலையாளி நானா?” என்றாள் அகிலா.

சரவணன் அதிர்ச்சியாகி “என்ன மேம் சொல்றீங்க..நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்றான்.

“பின்னே? சாருக்கு கடைசியாக் கால் பண்ணது நான் தான். உங்களுக்கே தெரியும், டெய்லி காலைலயும் ஈவ்னிங்லயும் அவர்கிட்ட நான் பேசுவேன்னு...”

சரவணன் குறுக்கிட்டு “நான் உங்களை நினைக்கலை மேம்..பாண்டியன்னு நினைச்சேன்..” அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் சரவணன் நிறுத்தினான்.

அகிலா தொடர்ந்தாள். “தெரியும் சரவணன்..கொஞ்ச நாளாவே உங்க நடவடிக்கைகளை நான் வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கிறேன்..பாண்டியன்கூட நீங்க சரியா கோ-ஆபரேட் பண்ணலைன்னு அவர் புலம்புறாரு..ரங்கசாமிகிட்ட பாண்டியனோட பெர்சனல் ஃபைலை வாங்கிப் பார்த்திருக்கீங்க..அவர் மேல் உங்களுக்கு இன்னும் கோபம் குறையலை..அதான் பாண்டியனையே சந்தேகப்படற அளவுக்குப் போய்ட்டீங்க..சரவணன், நல்லா யோசிச்சுப்பாருங்க..நியாயத்துக்கு பாண்டியன் தான் நம்ம மேல கோபப் படணும். பெர்ஃபார்மன்ஸ் வைஸ் நீங்க ரெண்டு பேருமே ஈகுவல் தான். நாந்தான் உங்களுக்கு ரெகமண்ட் பண்ணி, புரமோசன் வாங்கிக் கொடுத்தேன். அது பாண்டியனுக்கும் தெரியும்..ஆனாலும் அவர் அதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்ககூட பழையபடி ஃப்ரெண்ட்டா இருக்கணும்னு நினைக்கிறார்..ப்ளீஸ், உங்க வே ஆஃப் திங்கிங்கைக் கொஞ்சம் மாத்துங்க”

சரவணன் அதிர்ச்சியாகி நின்றான். பாண்டியன் தொடர்ந்து தன்னைப் பற்றித் தவறாக போட்டுக் கொடுத்திருக்கிறான் என்று புரிந்தது. இனியும் பேசிப் பயனில்லை என்று சரவணன் ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்தான்.

சோர்வுடன் தன் சீட்டில் வந்து உட்கார்ந்தான் சரவணன்.

’பாண்டியன் தான் தான் கொலையாளி என்று சொன்னது உண்மை தானா? ஒருவேளை தன்னை சுற்றலில் விடுவதற்காக அவன் சொன்ன பொய்யா அது? பாண்டியன் கொலையாளியாக இருப்பதற்குத் தானே அதிக வாய்ப்பிருக்கிறது? இல்லையென்றால், கேஸை வேறு எப்படி நகர்த்துவது?’ யோசிக்க யோசிக்க தலை வலித்தது. எழுந்து ஆஃபீசை விட்டு வெளியே வந்தான். 

அருகில் இருந்த டீக்கடைக்குப் போய் காஃபி குடித்தான் சரவணன். டீக்கடைப் பெஞ்சில் தினத்தந்தியைப் படித்தபடியே காரசாரமாக அரசியல் விவாதம் போய்க் கொண்டிருந்தது.

“அரசியல் ஒரு சாக்கடைங்கிறது சரி தாம்யா..இந்தாளு அப்பனும் அந்தாளு அப்பனும் பரம எதிரியா அடிச்சுக்கிட்டாங்க. இப்போப் பாரு, ரெண்டு பேரு பிள்ளைகளும் சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுக்கிறாங்க” என்றார் ஒரு பெருசு.

அருகில் இருந்தவர் “அரசியல்ல நிரந்த எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க? இவங்க அப்பங்களுக்கு இடையில என்ன பிரச்சினைப்பா?” என்றார்.

“ஏதோ ஒரு கோயில்ல இருந்த நகைங்க, தங்க வேல், தங்க கிரீடம் எல்லாத்தையும் இந்தாளு திருடிட்டாருன்னு அவரு பெரிய பெரிய போராட்டமெல்லாம் பண்ணாரு..அப்போ ..”

“அய்யே..அதுவா..அது சும்மா புரளிப்பா..இந்தாளு எதிர்க்கட்சித் தலைவரு..அதனால சும்மா ரவுண்டுகட்டி ஆடுனாரு.”

சரவணன் யாரு அந்த ‘இந்தாளு’ என்று அருகில் போய் பேப்பரைப் பார்த்தான்.

பிரபல அரசியல்வாதி ஒருவர் மற்றொரு பிரபலமில்லா அரசியல்வாதியுடன் சிரித்துக்கொண்டிருந்தார்.

சரவணனுக்கு எப்போதுமே இந்த டீக்கடை விவாதம் ஆச்சரியம் கொடுக்கும். பத்திரிக்கைகளில் வராத, சில நேரங்களில் சிபிசிஐடிக்கு மட்டுமே தெரிந்த சில விஷயங்கள்கூட சர்வசாதாரணமாய் பாமர மக்களால் பேசப்படுவதைப் பார்த்திருக்கிறான். பலநேரங்களில் அவர்கள் உண்மை என்று நம்புவது பொய்யாகவும் இருக்கும்..ஆனாலும் அரசியல் பேச்சு நம் மக்களுக்கு அலுப்பதேயில்லை.

இப்போது மனம் கொஞ்சம் லேசாகியிருப்பது போல் தோன்றியது. ‘எப்படியும் இந்தக் கேஸில் உண்மையான குற்றவாளியைப் பிடித்தே தீருவது’ என்று உறுதியுடன் நினைத்தபடி ஆபீசுக்குள் நுழைந்தான்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

  1. யோவ் என்னய்யா இந்த வாட்டி ட்விஸ்ட்டை திருப்பி விட்டுட்டீரு.........

    ReplyDelete
  2. வணக்கம் செங்கோவி!ம்.....பார்ப்போம்!

    ReplyDelete
  3. வணக்கம்,ப.ரா சார்!/////////////////பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] யோவ் என்னய்யா இந்த வாட்டி ட்விஸ்ட்டை திருப்பி விட்டுட்டீரு.........////ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!

    ReplyDelete
  4. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் என்னய்யா இந்த வாட்டி ட்விஸ்ட்டை திருப்பி விட்டுட்டீரு.........///

    வழி மொழிகிறேன்...

    ReplyDelete
  5. என்ன மாம்ஸ்,
    யாரு கொலையாளின்னு சரவணன் தடுமாடுறார்?

    ReplyDelete
  6. ///// Yoga.S. said...
    வணக்கம்,ப.ரா சார்!/////////////////பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] யோவ் என்னய்யா இந்த வாட்டி ட்விஸ்ட்டை திருப்பி விட்டுட்டீரு.........////ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!//////////

    வணக்கம் யோகா ஐயா, எப்படி இருக்கீங்க?

    ReplyDelete
  7. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

    ///// Yoga.S. said...
    வணக்கம்,ப.ரா சார்!/////////////////பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] யோவ் என்னய்யா இந்த வாட்டி ட்விஸ்ட்டை திருப்பி விட்டுட்டீரு.........////ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!//////////

    வணக்கம் யோகா ஐயா, எப்படி இருக்கீங்க?///வணக்கம்,வணக்கம்!நான் நல்லாருக்கேன்,நீங்க எப்புடி இருக்கீங்க?ஊரில கரண்டு வருதா?ஹி!ஹி!ஹீ!!!!!

    ReplyDelete
  8. யார் தான் உண்மையில் கொலையாளி ஒருவேலை அகிலா மேடம்! தொடருங்கோ!!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.