11. குறிக்கோள்..EXTENDED!
குறிக்கோள் என்பது
ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிகவும் சிக்கலான ஒன்றாக அமைத்துவிடக்கூடாது.
அது எல்லாருக்கும் புரியும்படி எளிதானதாக இருக்க வேண்டும். கதை சொல்லும் முறையில் வேண்டுமானால்,
நீங்கள் அறிவுஜீவி என்று நிரூக்கலாம்.
ஆனால் குறிக்கோளையே
மிகவும் அறிவுஜீவித்தனமாக அமைத்தால், எதற்காக இதெல்லாம் நடக்கிறது என்று பார்வையாளர்கள்
குழம்பி விடுவார்கள். குறிக்கோளில் கோட்டை விட்ட படத்திற்கு உதாரணம், ஆளவந்தான்.
மனநிலை தவறிய நந்து,
தன் தம்பியை மணக்கப் போகும் ஹீரோயினை தன் சித்தியின் மறுபிறவி(? அல்லது ஆவி அல்லது
ஏதோவொன்று!) என்று கருதிக்கொள்கிறான். அதனால் ஹீரோயினைக் கொன்று, தம்பியைக் காப்பாற்றுவது
என்று முடிவு செய்கிறான். குறிக்கோளே ஒரு கற்பனையின் அடிப்படையில் அமைவது முதல் பிரச்சினை.
‘நல்ல டாக்டர காட்டுங்கப்பா’ என்று தான் நமக்குத் தோன்றியதே ஒழிய, நந்து ஜெயிக்க வேண்டும்
என்று தோன்றவில்லை, தோன்றினால் நமக்கும் ஒரு டாக்டரைத் தேட வேண்டியிருக்கும்!
இப்போது நாம் முன்பு
படித்த ஒரு பாயிண்ட் ஞாபகம் வருகிறதா? இந்த கதையின் நாயகன் யார்? ஹீரோ தன் மனைவியை
ஒரு சைக்கோவிடம் இருந்து காப்பாற்றப் போராடுகிறான் என்பதே தம்பி கமலின் பார்வையில்
வரும் ஒன்லைன். அதனுடன் நாம் ஐக்கியமாக முடியும்.
ஆனால் ஒரு கற்பனைக்
காரணத்துக்காக, நியாயமற்ற குறிக்கோளுடன் அலையும் ஒருவனுடன் நாம் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள
முடியும். அதிலேயே நாம் கதையில் ஒன்ற முடியாமல் விலகிவிட்டோம். அதையும் சகித்துக்கொண்டு
பார்த்தால், கிளைமாக்ஸ் இப்படி வருகிறது:
அவ்வப்போது வரும்
அம்மா(கற்பனை உருவம்), திடீரென வந்து ‘டாய், அவ உன் சித்தி இல்லைடா’ என்று சொல்கிறது.
நம்மைப் போலவே கமலும் பேஸ்த் அடித்து ‘ஏம்மா, முதல்லயே சொல்லலை? சொல்லியிருந்தா இந்தப்
படத்தையே எடுத்திருக்க மாட்டேனே? குறிக்கோள்லயே கை வைச்சுட்டயே?’ என்று கேட்கிறார்.
அதற்கு மம்மியின் பதில் அற்புதமானது : ‘நீ கேட்கலியே’. (சூப்பரப்பு!)
எந்த குறிக்கோளை
மையப்படுத்தி இரண்டரை மணிநேரம் படம் ஓடியதோ, அதையே காலி செய்துவிட்டது அந்த பதில்.
படம் பார்த்தவர்கள், காதில் ரத்தம் வடிய வெளியே ஓடிவந்தார்கள்.
எல்லா சூப்பர்ஹிட்
படங்களுக்கும் அடிப்படையாக இருப்பது, சிம்பிளான குறிக்கோள் தான். தமிழில் வந்த சிறந்த
ஆக்சன் படங்கள் என்ற பட்டியலில் இயக்குநர் தரணியின் தில், தூள், கில்லி ஆகிய மூன்றுமே
இடம்பெறும். அந்த மூன்று படங்களிலும் குறிக்கோள் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
தில் படத்தின்
ஹீரோவின் லட்சியம், போலீஸ் ஆவது. அவன் வாழ்வதே அதற்காகத் தான். காதலா, லட்சியமா என்று
வரும்போது, லட்சியமே பெரிது என்று முடிவெடுக்கிறான். அந்த லட்சியத்துக்கு வில்லனால்
இடையூறு வரும்போது, படம் பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அது ஒரு
எளிமையான குறிக்கோள் தான் இல்லையா?
தூள் படத்தில்
ஊரை நாசமாக்கும் கெமிக்கல் ஃபேக்டரியை மூடி, ஊரைக் காப்பாற்றுவது தான் ஹீரோவின் வேலை.
படிக்காத கிராமத்து ஆளாக ஹீரோ கேரக்டரைப் படைத்தது சுவாரஸ்யத்தைக் கூட்டும் முதல் முரண்பாடு.
அவன் அரசு இயந்திரத்தை எதிர்த்து, தனது குறிக்கோளை எப்படி அடைகிறான் என்று சுவாரஸ்யமாகச்
சொன்னது படம். மிகவும் சிம்பிளான, எல்லோருக்கும் புரியும் குறிக்கோள்.
கில்லி படத்தில்
ஹீரோயினை காப்பாற்றும் வழக்கமான குறிக்கோள் தான். இதிலும் வேலைவெட்டியற்ற ஒரு இளைஞன்,
எப்படி அதிகாரவர்க்கத்தை வெல்கிறான் என்று சொல்லி இருப்பார்கள். ஆந்திரா மசாலா என்றாலும்,
படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எந்திரன் படத்தில்
சைண்டிஸ்ட் ரஜினி, ரோபோ ரஜினியை உருவாக்குகிறார். அது வில்லன் ரோபோவாக ஆகிவிடுகிறது.
அதை சைண்டிஸ்ட் அழிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். ஆனால் அங்கே ரஜினியின் அத்தியாவசியத்
தேவை, ஐஸ்வர்யா ராயை ரோபோவிடம் இருந்து மீட்டெடுப்பது தான். அந்த தேவை தான், படத்துடம்
நம்மை ஒன்ற வைத்தது. இல்லையென்றால், சைண்டிஸ்ட்டுக்கும் நமக்கும் என்ன பாஸ் சம்பந்தம்?
எந்திரனில் அந்த
அடிப்படைத் தேவை இல்லையென்றால் ‘இந்த ஆளை யாரு ரோபோல்லாம் பண்ணச் சொன்னா? வேண்டாத வேலையைப்
பண்ணிட்டு குத்துதே, குடையுதேன்னு அழுதா எப்படிய்யா?’ என்று தான் கேட்டிருப்போம். ஆனால்
காதலியைக் காப்பாற்றுதல் எனும் தேவை வந்தபிறகு, ‘தலைவா..ரொம்ப வருசமாப் போராடி ஐஸ்
கிடைச்சிருக்கு..விட்றாதே’ என்று சயிண்டிஸ்ட்டுக்கு
ஃபுல் சப்போர்ட் கொடுத்தோம்.
தமிழில் வந்த,
வருகின்ற படங்களைக் கவனியுங்கள். குறிக்கோள் என்ற அம்சம் எப்படி கையாளப்பட்டிருக்கிறது
என்று கவனியுங்கள். குறிக்கோள் புரியும்படியும் லாஜிக்கலாகவும் அதே நேரத்தில் சிம்பிளாகவும்
இருக்கிறதா என்று பாருங்கள்.
இப்போது உங்கள்
ஒன் லைனை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் குறிக்கோள், மனிதனின் அடிப்படைத் தேவையா
என்று பாருங்கள். இல்லையென்றால், அப்படி ஒரு தேவையை கூடுதலாக உருவாக்குங்கள்.
(தொடரும்)
15 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.