Sunday, June 1, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-4)

4. ஒன் லைன் எனும் கதைச் சுருக்கம்

தொடர் எந்த ஆர்டரில் போகிறது என்று இப்போது உங்களுக்குப் பிடிபட்டிருக்கலாம். இருப்பினும் சிறு விளக்கம்.

ஒரு கரு உருவாகிறது

அதை வைத்து ஒரு ஒன்லைன் உருவாகிறது.

அதை டெவலப் செய்தால் ஒரு கதை உருவாகிறது. (இது 1-4 பக்கங்கள் வருவதாக, முக்கிய கேரக்டர்களை மட்டும் கொண்டிருக்கும்)

அந்தக் கதையை குறிப்பிட்ட ஆர்டரில் மேலும் சில கேரக்டர்களுடன் சொல்லும்போது ஒரு குறுநாவல் வடிவம், அந்த கேரக்டர்க்கு கிடைக்கும்.

பின்னர் அது திரைக்கதையாக ஆகிறது. (இது இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் வரும்)

முதல் மூன்று விஷயங்களும் அதே ஆர்டரில் நடக்காமல் மாற்றியும் நடக்கலாம். ஆனால் அவை திரைக்கதை எழுத உட்காரும் முன், நமக்கு தெளிவாகி இருக்க வேண்டும். அதைத் தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் அடிப்படையில் இருந்து, ஒவ்வொன்றாகப் பார்த்தபடி செல்லப்போகிறோம். இப்போது........

சென்ற பகுதியில் பார்த்தபடி ஒரு கரு உங்களுக்குத் தோன்றி இருக்கலாம். திரைக்கதை எழுதுவதில் அடுத்த படி கதையின் ஒன் லைன் ( One Liner) என்ன என்பதை முடிவு செய்வது தான். முழுக் கதையோ அல்லது எல்லா கேரக்டர்களுமோ அல்லது கிளைமாக்ஸோ தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுவாரஸ்யத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அந்த ஒன் லைனை யார் கேட்டாலும், ‘அப்புறம் என்னாச்சு?’ என்று திருப்பிக்கேட்கும் அளவிற்கு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சில ஒன் லைன்களைப் பார்ப்போம். 

பலரது லவ்வுக்கும் ஐடியா கொடுத்து ஹெல்ப் பண்ணும் ஒருவன், ஹீரோவும் காதலில் ஜெயிக்க உதவுகிறான். பின்னர் தான் அவனுக்குத் தெரிகிறது, ஹீரோ லவ் பண்ணியது தன் தங்கச்சியை என்று! (தீயா வேலை செய்யணும் குமாரு)

ஹீரோவின் ஊரில் அவமானப்படுத்தப்படும் வில்லன், ஹீரோவைப் பழிவாங்க தன் கோட்டைக்கே ஹீரோவை வரவைக்கிறான். (சிங்கம்)

இருவேறு இடங்களில் வளரும் வேறுபட்ட குணாதிசயம் கொண்ட ஒரே தோற்றமுடைய ஹீரோக்கள் இடம் மாறுகிறார்கள். (எங்க வீட்டுப்பிள்ளை, நீரும் நெருப்பும், ராஜாதி ராஜா........இது பெரிய லிஸ்ட் பாஸ்!)

பிரிந்து கிடக்கும் இரு குடும்பங்களை இணைக்க எங்கிருந்தோ வந்த ஒருவன் முயல்கிறான். (பூவே உனக்காக)

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் குடும்ப உறுப்பினன், கொள்ளைக்கூட்டத்துடன் இணைந்திருக்கிறான். (தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல்)

மறுமணம் பற்றி நினைக்காத ஒருவன் வாழ்க்கையில் ஒரு பெண் வந்தால்...(முதல் மரியாதை, முந்தானை முடிச்சு)

பல பெண்களுடன் எஞ்ஜாய் பண்ணித் திரியும் ஒருவன் மனதிலும் காதல் பூக்கிறது. (வசந்த மாளிகை, சிவப்பு ரோஜாக்கள்.......)

சோழர்-பாண்டியன் வம்சாவளி இப்போதும் இருந்து, அந்த சண்டை தொடர்ந்தால்...(செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்)

இதே மாதிரி பல வெற்றிப்படங்களுக்குப் பின்னாலும் ஒரு சுவையான ஒன் லைன் இருக்கும். இந்த ஒன் லைன் என்பது ஏற்கனவே வந்த படங்களின் சாயலில் இருந்தாலும் பிரச்சினை இல்லை என்பது தான் விஷேசமே. எனவே யாரும் சொல்லாத சாயலில், சொல்லாத கேரக்டர்களுடன் ஒரு கதைக்கருவை உண்டாக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரே கருவினை காமெடியாக அணுகும்போது ஒருவிதமாகவும், சீரியஸாக அணுகும்போது வேறுவிதமாகவும் திரைக்கதை கிடைக்கும். அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்ட படங்களிலேயே அந்த வித்தியாசத்தை உணர முடியும்.


அந்த ஒன் லைன்களை இப்போது கொஞ்சம் டெவலப் செய்து பார்ப்போம். சிறுவயதில் தாயன்புக்கு ஏங்கி கிடைக்காத ஒருவன், நாயகியின் அன்பில் விழுவது வசந்த மாளிகை. இப்போது வசந்த மாளிகைக்கு ஒரு தாய் கேரக்டர் வந்துவிட்டது. ஏன் தாயன்பு இல்லை? அப்படி என்ன நாயகியிடம் இருந்தது? என்று டெவலப் செய்துகொண்டே போனால், அது தான் திரைக்கதை. சிறுவயது அனுபவத்தினால், பெண்களின் மேல் கொலை வெறியுடன் திரியும் ஒருவன் நாயகியால் ஈர்க்கப்பட்டால், அது சிகப்பு ரோஜாக்கள். பெண்கள் மேல் ஏன் வெறுப்பு? என்ன நடந்தது? அதனால் என்ன செய்தான்? ஏன் நாயகி மேல் காதல் ஆனான்? என்று டெவலப் செய்தீர்கள் என்றால், அது ஒரு அற்புதமான த்ரில்லராக உருவாகும்.

ஒன் லைன் என்றால் என்ன, ஒன் லைனர் திரைக்கதைக்கு அடிப்படையான விஷயம் என்று புரிகின்றது அல்லவா? அந்த ஒன் லைனுக்கு காரணங்களை முன்பகுதியாகவும் அதன் விளைவுகளை பின்பகுதியாகவும் டெவலப் செய்து கொள்ளலாம். பொதுவான ஒன் லைன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

இரு எதிர்மறையான விஷயங்கள் சந்திக்கும் புள்ளியாக (ஆண்களை வெறுக்கும் ஹீரோயினும் பெண்களை வெறுக்கும் நாயகனும் - போலீஸ்/திருடன் அல்ல்து தாதா) ஒன் லைனை அமைத்தால், ஆட்டோமேட்டிக்காக அங்கே சுவாரஸ்யம் வந்துவிடும். திரைக்கதை பாடத்தில் இதை முரண்பாடு என்பார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு முரண்படுதல் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சுவாரஸ்யமும் கூடும். எனவே ஒன் லைனிலேயே இருவேறு துருவங்களை மோத வைப்பது நல்லது.

சென்ற பகுதியில் பார்த்தது போல், சில நேரங்களில் சுவாரஸ்யமான கேரக்டரில் ஆரம்பித்துக்கூட நல்ல ஒன் லைனை பிடித்துவிட முடியும். முள்ளும் மலரும் நாவலில் காளிக்கு கை போனதுவரை படித்த இயக்குநர் மகேந்திரன், மீதி நாவலை படிக்காமலேயே திரைக்கதை எழுதிவிட்டார். ஏன்?

அதீத ஈகோ கொண்ட ஒருவன் கையை இழந்து மற்றவரின் பரிதாபப்பார்வைக்கு ஆளானால்..................இந்த ஒன் லைன் கிடைத்தபின் அந்த நாவல் தேவையில்லை. நாவல் அல்லது சிறுகதையை திரைக்கதையாக்க முயன்றால், முதலில் கண்டுகொள்ள வேண்டியது இம்மாதிரி முரண்பாடு நிறைந்த, அடுத்து என்ன என்ற ஆவலை உண்டாக்கும் ஒன் லைன் இருக்கிறதா என்று தான். அதை சரியாகப் பிடித்துவிட்டால், காரணங்களையும் விளைவுகளையும் நாவலில் உள்ளபடியேவோ அல்லது மாற்றியோ நாம் அமைத்துக்கொள்ளலாம். 

அதை விட்டுவிட்டால் நாவலையும் கெடுத்து, படத்தையும் கெடுத்துவிடுவோம். உதாரணம், மோகமுள். நாவல் என்பது எழுத்து ஊடகம். அங்கே படிப்பவன் என்ன உணர வேண்டும் என்பதைக்கூட வர்ணனைகளால் சொல்லிவிடலாம். இங்கே சினிமாவில் அது முடியாது. இது காட்சி ஊடகம். இங்கே வெளிப்படையாக தெரியும் உணர்வுகள், முரண்பாடுகளே செல்லுபடியாகும். எனவே உங்கள் ஒன்லைனில் வரும் முரண்பாட்டை, எப்படி விஷூவலாகக் காட்ட முடியும் என்றும் யோசிக்க வேண்டும்.

ஒன் லைன் பற்றி மேலும் பேசுவோம்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

 1. நன்றாக விளக்கி எழுதுகிறீர்கள்.நன்று!

  ReplyDelete
 2. அருமையான விளக்கவுரை தொடரட்டும் இன்னும்.

  ReplyDelete
 3. ஒன் லைன்கள் பற்றிய விளக்கம் அருமை! சினிமா நுணுக்கம் அறியாத என்னையும் கவர்ந்தது! நன்றி!

  ReplyDelete
 4. சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்க!!

  ReplyDelete
 5. கருத்துரையிட்ட நண்பர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 6. ஏன்யா.. முந்தானை முடிச்சு படத்துக்கு எதுக்கு சிவப்பு கலர்???

  ReplyDelete
 7. @தமிழ்வாசி பிரகாஷ் அந்த ஒன்லைனில் ஒரு சிக்கல் உண்டு. பின்னால் வரும் பதிவுகளில் விளக்குகிறேன், பிரகாஷ்.

  ReplyDelete
 8. முன் பகுதிகளும் பொறுமையாக கைப்பேசியூடாகவே படித்ததால் அங்கு கருத்திட முடியவில்லை அண்ணா....

  இன்னும் ஜென்ரில்மென் தொடர்பான விளக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை

  மிகுதி அடுத்த வாரம் இனி சந்தேகக் கணைகளால் துளைப்பேன் கோபிக்க வேண்டாம்

  ReplyDelete
 9. @mathi sutha நீங்கள் கேட்கக் கேட்கத்தான் எனக்கும் தெளிவு பிறக்கும் சுதா!

  ReplyDelete
 10. சூப்பர் நண்பா.... அட ஆமாம்ல.... என்று தோன்ற வைக்கிறது.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.