Friday, June 13, 2014

முண்டாசுப்பட்டி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
குறும்படமாக வந்து கலக்கிய படங்கள், சினிமாவாக வரும் காலம் இது. அந்த வரிசையில் உருவாகி, ராம்குமார் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம், முண்டாசுப்பட்டி. குறும்படமாக நம் மனதைக் கவர்ந்த இந்தப் படம், எப்படி இருக்கிறதென்று பார்ப்போம், வாருங்கள்.

ஒரு ஊர்ல..:
படம் பிடித்தால் இறந்துவிடுவோம் எனும் மூடநம்பிக்கை உள்ள கிராமம் முண்டாசுப்பட்டி. இறந்தவர்களை மட்டும் பிணமாக போட்டோ பிடிக்கும் வழக்கம் உண்டு என்பதால், போட்டோகிராபரான ஹீரோ ஊர்ப்பெரியவர் பிணத்தை படம்பிடிக்கச் செல்கிறார். பெருசு அவுட் ஆஃப் போகஸில் போய்விட, பெரிசின் பேத்தி டீப் போகஸில் வந்துவிடுகிறார். காதலிலும் போட்டோ பிரச்சினையிலும் எப்படி வென்றார் ஹீரோ என்பதே கதை.

உரிச்சா....:
பெரிய படமாக நீட்டிக்கும் அளவிற்கு பெரிய கதை இல்லையே எனும் யோசனை நமக்கு ஆரம்பத்திலேயே வந்தது. நந்திதாவின் காதல் போர்சனும், காமெடி வில்லன் ஆனந்தராஜ் போர்சனும், விண்வெளிக்கல் எனும் கான்செப்ட்டும் இணைய, ஒரு முழுநீளப்படம் உருவாகிவிட்டது. 

படத்தின் முதல் அரைமணி நேரம், போரடிக்கவே செய்கிறது. கிராமத்தின் கதையைச் சொல்லவும் வில்லன் விண்வெளிக்கல்லைத் தேடுகிறான் என்பதை விளக்கவும், ஹீரோ-ஹீரோயின் முதல் சந்திப்பு என பிட்டுப் பிட்டாக படம் நகர்கிறது. ஹீரோ விஷ்ணுவும் காளியும் முண்டாசுப்பட்டிக்குள் நுழைவதில் இருந்து தான் படமும் காமெடியும் சூடுபிடிக்கிறது. பெருசு எப்போது சாவார் என்று எல்லோரும் காத்திருப்பதும், விஷ்ணு தன் காதலை டெவலப் பண்ணுவதுமாக படம் ஜாலியாகவே நகர்கிறது.

குறும்படக் கதை இண்டர்வெல்லுடன் முடிந்துவிடுகிறது. பெருசு மாதிரியே இருக்கும் முனீஸ்காந்த்தை(ராமதாஸ்) பிணமாக நடிக்க வைத்து போட்டோ எடுப்பதும், அவரே நந்திதாவின் சித்தப்பாவாக இரண்டாம்பாதியில் கிராமத்திற்குள் நுழைய ரகளை ஆரம்பம் ஆகிறது. அதில் இருந்து கிளைமாக்ஸ்வரை அவர் காமெடியில் பின்னி எடுக்கிறார். தன் போட்டோவிற்கு தானே மாலை போடுவதும், படையல் வைப்பதும், சாப்பாடு என்றால் எல்லாவற்றையும் மறப்பதுமாக நல்ல கேரக்டரைசேசன் & நடிப்பு.
இண்டர்வெல்லின்போதே கிராமத்தில் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறார்கள் எனும் கேள்வி எழுகிறது. பிறகு கிளைமாக்ஸ்வரை கதை நகராமல் அந்த இடத்திலேயே நொண்டியடிப்பது, ஒரு பலவீனம் தான். கிளைமாக்ஸை நெருங்க, நெருங்க காமெடி கூடிக்கொண்டே செல்வதால் படத்தை ரசிக்க முடிகிறது. ஆனாலும் கத்தரி போடவேண்டிய இடங்கள் நிறைய!

காமெடிப்படம் என்பதாலோ என்னவோ, விஷ்ணு-நந்திதா காதலையும் லைட்டாகவே சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சேர வேண்டுமே எனும் எதிர்பார்ப்பெல்லாம் நமக்கு வரவே இல்லை. நந்திதா காதலை ஏற்றுக்கொள்ள முக்கால்வாசிப்படம் வரை யோசித்துக்கொண்டே இருப்பதும் ஒரு குறை தான். 

விஷ்ணு:
நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விஷ்ணு. இதிலும் வித்தியாசமான கதைக்களனுடன் களமிறங்கி இருக்கிறார். பழைய படங்களின் நினைப்பில், காமெடிக் காட்சிகளிலும் சீரியசாக வசனம் பேசுகிறார். ஆனாலும் ஒட்டுமொத்தமாக, நடிப்பில் பாஸ் மார்க் தான்.

நந்திதா:
கண்ணாலேயே நடிக்கும், அடுத்த வீட்டுப்பெண் போன்ற அழகி நந்திதா. தனியாக வரும் சில ஷாட்களில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். ஒரு கிராமத்துப்பெண்ணாக, கேமிராவுக்குப் பயப்படுபவராக நல்ல நடிப்பு.

காளி-முனீஸ்காந்த்:
சமீபகாலமாக நம் மனதைக் கவரும் வளரும் நகைச்சுவை நடிகர் காளி. குறும்படத்தில் ஹீரோவாக வந்தவர், இதில் காமெடியனாக/நண்பனாக வருகிறார். முதல் பாதியில் கலகலக்க வைப்பது இவர் தான். தலையில் தேங்கா உடைப்பது, விஷ்ணுவை முணுமுணுக்கும் ஒன்லைன்களால் அட்டாக் பண்ணுவது, சாமியாடியை கலாய்ப்பது என காளிக்கு படம் முழுக்கவே நல்ல வேலை.

முனீஸ்காந்த்தாக நடித்திருப்பவர் பெயர் தெரியவில்லை. சாதாரணமாக அறிமுகம் ஆகி, போகப் போக படத்தையே தன் கண்ட்ரோலில் கொண்டுவந்துவிடுகிறார். ‘போட்டோ மட்டும் என் போட்டோ..ஆனால் படையல் ரத்தக்கறி எனக்குக் கிடையாதா?’ என பொங்கும்போது செம காமெடி. ’துருப்பிடிச்ச துப்பாக்கி....துப்பாக்கி கலாச்சாரம்’ என வசனங்களிலும் கமல்-ரஜினிக்கு செய்வினை வைக்கும் சினிமா வெறியிலும் மனிதர் பின்னுகிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- படத்தை இழுத்திருப்பது வெளிப்படையாகவே தெரிவது
- காமெடிப் படத்தை ரொம்ப சீரியஸான காட்சிகளால் ஆரம்பித்திருப்பது
- முதல் அரைமணிநேரம் 
- பாடல்வரிகளில் இருந்த காதல்கூட படத்தில் காட்சிகளாக இல்லாதது
- படத்துடன் ஒன்றமுடியாமல், ஒரு அந்நியத்தன்மை இருந்துகொண்டே இருப்பது
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- காமெடி + வசனங்கள்
- இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் முத்தமிழின் பாடல்கள். ராசா மகாராசா பாடல் சூப்பரோ சூப்பர்.
- காளி
- ராமதாஸ் (முனீஸ்காந்த்)
-மூட நம்பிக்கையால் வந்த பிரச்சினையை, அதே ’சாமியாடி’ மூடநம்பிக்கையை வச்சே தீர்ப்பது

பார்க்கலாமா? :
காமெடிக்காக.........ஒருமுறை பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

  1. படத்துல முதல் 10 நிமிஷங்களை தவற விடாதீஙகன்னு விளமபரம செஞசாஙக. முதல அரைமண நேரம் கழிச்சே மக்கள உள்ள போயிரக் கூடாதுன்னுதானா அது...? ஹி... ஹி.... நலல விமர்சனம்.

    ReplyDelete
  2. //பிடித்தால் இறந்துவிடுவோம்//படம் பிடித்தால் ன்னு இருக்கணும் தல..

    ReplyDelete
  3. //காமெடிக்காக.........ஒருமுறை பார்க்கலாம்.//அப்போ நந்திதாவுக்காக?

    ReplyDelete
  4. //அறிமுக இசையமைப்பாளர்// அவர் அறிமுகம் இல்லை நண்பா.. வாயை மூடி பேசவும் படத்துக்கு அவர் தான் மீசிக் போட்டார் .. :)

    ReplyDelete
  5. விமர்சனத்துக்கு,நன்றி!

    ReplyDelete
  6. கோவை ஆவி said... //காமெடிக்காக.........ஒருமுறை பார்க்கலாம்.//அப்போ நந்திதாவுக்காக?////பலமுறை பாருங்க,ஆ.வி.(அப்போ.....நஸ்........?)ஹி!ஹி!!ஹீ!!!!

    ReplyDelete
  7. பார்த்துட்ட போச்சு!

    ReplyDelete
  8. காமெடிக்காக எதிர்பார்த்துகிட்டு இருந்த படம்.. கொஞ்சம் மொக்கையாயிடுச்சோ!

    ReplyDelete
  9. ////அறிமுக இசையமைப்பாளர்// அவர் அறிமுகம் இல்லை நண்பா.. வாயை மூடி பேசவும் படத்துக்கு அவர் தான் மீசிக் போட்டார் .. :) ///

    ஆமா ஆமா!

    ReplyDelete
  10. //பால கணேஷ் said...
    படத்துல முதல் 10 நிமிஷங்களை தவற விடாதீஙகன்னு விளமபரம செஞசாஙக. முதல அரைமண நேரம் கழிச்சே மக்கள உள்ள போயிரக் கூடாதுன்னுதானா அது...? ஹி... ஹி.... நலல விமர்சனம்.//

    அவங்க ஏன் ஃபோட்டோவுக்கு பயப்படுறாங்கன்னு ரொம்ப சீரியஸாச் சொல்றாங்க. காமெடிப் படத்துக்கு அந்த ஓப்பனிங் தப்பு.

    ReplyDelete
  11. கோவை ஆவி said...
    //பிடித்தால் இறந்துவிடுவோம்//படம் பிடித்தால் ன்னு இருக்கணும் தல..//

    நைட்டு 2 மணிக்கு டைப் பண்ணினால் அப்படித்தான்....ஹிஹி.

    //அப்போ நந்திதாவுக்காக?// அப்போ மறுபடியும் பாருங்க.

    // அவர் அறிமுகம் இல்லை நண்பா.. வாயை மூடி பேசவும் படத்துக்கு அவர் தான் மீசிக் போட்டார் .. :)//

    இசை விமர்சகர் சொன்னால் சரி தான்.

    ReplyDelete
  12. //Subramaniam Yogarasa said...
    பலமுறை பாருங்க,ஆ.வி.(அப்போ.....நஸ்........?)ஹி!ஹி!!ஹீ!!!!//

    இது கேள்வி.

    ReplyDelete
  13. //நாமக்கல் சிபி said...
    பார்த்துட்ட போச்சு!//

    பாருங்க தல.

    ReplyDelete
  14. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    காமெடிக்காக எதிர்பார்த்துகிட்டு இருந்த படம்.. கொஞ்சம் மொக்கையாயிடுச்சோ!//

    காமெடியில் டைமிங் ரொம்ப முக்கியம்..டைமிங் எக்ஸ்பிரசன், டைமிங் பதில், இசைன்னு...சில இடங்கள்ல இது காமெடியா, சீரியசான்னு கன்ஃபியூஸ் ஆகறோம்.

    ReplyDelete
  15. விமர்சனப்பகிர்வு நன்றி ஐயா இழுவைக்கு ஏன் போவான்/ஹீ நேரம் மிச்சம் !ஹீ

    ReplyDelete
  16. நம்ம ஊர்லயும் சில பெருசுங்க போட்டோ எடுக்க அனுமதிப்பதில்லை, செத்துருவோம்ன்னு எவனோ கொளுத்தி போட்டது அது, என் பையன் பிறந்தபோது அவனை போட்டோவே எடுக்க விடவில்லை என் மாமியார், அவர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து ஒளித்து வைப்பது உண்டு, அப்புறம் அவர்களே போட்டோ எடுத்துக் கொண்டதும் நாம செய்த விழிப்புணர்ச்சி !

    விமர்சனம் அருமை !

    ReplyDelete
  17. ஏற்கனவே ரொம்ப பிடிச்ச குறும்படங்களில் ஒன்று. காமடிப்படங்களில் அளவுக்கதிகமாக கதை தேடுவதில்லை ஆகவே நிச்சயம் திருப்திப்படுத்தும்.....
    நன்றி அண்ணா

    ReplyDelete
  18. //MANO நாஞ்சில் மனோ said...
    என் பையன் பிறந்தபோது அவனை போட்டோவே எடுக்க விடவில்லை என் மாமியார், //

    இங்கேயும்..! காரணம், வெளியாள் பார்த்தால் கண் திருஷ்டி விழுமாம்!

    ReplyDelete
  19. //mathi sutha said...
    ஏற்கனவே ரொம்ப பிடிச்ச குறும்படங்களில் ஒன்று. காமடிப்படங்களில் அளவுக்கதிகமாக கதை தேடுவதில்லை ஆகவே நிச்சயம் திருப்திப்படுத்தும்.....//

    முழுக் காமெடியாக எடுத்திருக்க வேண்டிய படம்..!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.