Tuesday, June 17, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-8)


8.கதாநாயகனும் குணாதிசயமும்

உங்கள் கதையின் உண்மையான நாயகர் யார் என்று நீங்கள் புரிந்துகொள்வதின் அவசியத்தை சென்ற இருபகுதிகளில் பார்த்தோம். உங்களிடம் நல்ல கதை இருந்தாலும், கதையின் நாயகர் யார் என்பதில் கோட்டை விட்டீர்கள் என்றால் எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஏனென்றால் அந்த கேரக்டர் தான், ஆடியன்ஸ் உங்கள் கதைக்குள் நுழையும் நுழைவாயில். மேலும் எந்த கேரக்டரை நாயகராக அமைத்தால், சுவாரஸ்யமான திருப்பங்களையும் சீன்களையும் உண்டாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொண்டே கதை நாயகரை முடிவு செய்ய வேண்டும்.


திரைக்கதை என்பது ஒரு ஹீரோ பல தடைகளைத் தாண்டி, தன் குறிக்கோளை அடையும் பயணமே ஆகும். அந்த பயணத்தில் முரண்பாடுகளை அதிக அளவு உருவாக்க வேண்டும். அப்போது தான் படம் பார்ப்போருக்கு சுவார்ஸ்யம் குறையாமல் இருக்கும். ஹீரோவின் குணாதிசயங்களிலேயே முரண்பாடுகளை உருவாக்கலாம். ஹீரோவின் சூழ்நிலையில் முரண்பாட்டைக் கூட்டலாம். இதை மீறி ஹீரோ எப்படி ஜெயிப்பார் என்ற யோசனையில் ஆடியன்சை ஆழ்த்துவது அவசியம்.

முதல்மரியாதையில் சிவாஜி ராதாவுடன் இணைய வேண்டும். ஆனால் சிவாஜி யார்? ஊரில் மரியாதைக்குரிய மனிதர். ராதா பின்னால் போனால், மரியாதை அடி வாங்கும். செய்வாரா? அவர் மனைவியோ ராட்சசி. அவள் சும்மா விடுவாளா? படத்தின் முதல்பாதியில் இந்த முரண்பாடுகள் எழுப்பும் கேள்விகளே நம்மை படத்துடன் ஒன்றவைக்கின்றன. 

அவ்வாறு இல்லாமல், ஒரு பொறுக்கி-அவனுக்கு அன்பான மனைவி-அவனுக்கு ராதா மேல் காதல் என்றால் நமக்கு பெரிய ஆர்வம் ஏதும் வந்துவிடாது. சிவாஜி நல்லவராக இருப்பது தான் அந்த காதலுக்கு முதல் பிரச்சினை. அவர் முதலில் தன் மனசாட்சியை மீறி, காதலை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது மனப்போராட்டம் தெளிவாக நமக்கு காட்டப்படுகிறது. மனைவியை மீறுவதைவிடவும் பெரிய கஷ்டம், அவர் தன் மனசாட்சியை சமாதானப்படுத்துவது தான்.

எனவே ஹீரோவின் குறிக்கோள் என்னவோ, அதற்கு தடையை ஹீரோவின் குணத்தில் ஆரம்பித்து சுற்றுச்சூழல், வில்லன் என எல்லாப் பக்கமும் கொண்டுவர வேண்டும்.
 
 இதற்கு மற்றொரு உதாரணம், பாண்டிய நாடு திரைப்படம். அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதே ஒன் லைன். நாம் பல படங்களில் பார்த்த ஒன் லைன் தான் இது. அந்த ஹீரோ கேரக்டரின் குணாதிசயத்தைப் பாருங்கள். பயந்த சுபாவம் உள்ள, அடிதடிக்குப் பழக்கமில்லாத, யாரும் அடித்தாலும் வாங்கிவிட்டு வருகின்ற ஒரு சாமானிய கதாபாத்திரம். பழி வாங்குதல் எனும் குறிக்கோளிற்கு முரண்பாடான கேரக்டர் இல்லையா? அது தான் படத்தினை நாம் ரசித்துப் பார்க்க காரணமாக ஆனது.

சினிமாவின் அடிப்படை பலம், படம் பார்ப்பவன் ஹிரோவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது தான். தியேட்டரின் இருட்டில், அவன் தன்னை ஹீரோவாகவே நினைத்துக்கொள்கிறான். அப்படி அவன் நினைப்பதற்கு ஏற்றவகையில், ஹீரோ கேரக்டரை உருவாக்குவது அவசியம்.

வேற்றுகிரகத்தில் இருந்து வரும் பயங்கர சக்தியுள்ள ஏலியன் தான் ஹீரோ என்றால், நம் ஆட்கள் யார் வீட்டு எழவோ என்று தான் படம் பார்ப்பார்கள். பாண்டிய நாடு ஹீரோவை எடுத்துக்கொண்டால், அவன் நம்மைப் போன்ற சராசரி மனிதனைப் பிரதிபலிக்கும் கேரக்டர். ஆரம்பக் காட்சிகளிலேயே, ஹீரோவுடன் நாம் ஒன்றிவிடுகிறோம்.

குறிக்கோளுக்கு முரண்பாடு ஏற்படுத்தும் குணாதிசயம், பார்வையாளனை அடையாளப்படுத்திக் கொள்ளவும் உதவினால் நமக்கு வேலை எளிது. திரைக்கதையின் ஆரம்பத்திலேயே ‘இவன் நம்ம ஆளு’ என்ற எண்ணத்தை படம் பார்ப்போர் மனதில் ஹீரோ கேரக்டர் உருவாக்கிவிட வேண்டும். அதை உருவாக்க, யதார்த்தமான கேரக்டராக மட்டுமே அது இருக்க வேண்டும் என்பதில்லை.
நல்லவன் என்ற பிம்பத்தை எல்லாருமே ரசிக்கிறார்கள். அந்த பிம்பத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளவே மக்கள் விரும்புவார்கள். இதை ப்ளேக் ஸ்னிடர் ‘Save the Cat’ என்கிறார். ஒரு ஹீரோ கேரக்டர் ஒரு சாதாரண பூனையைக் காப்பாற்றினாலே போதும், இவன் நம்ம ஆளு என்ற எண்ணம் சராசரி ரசிகனுக்குத் தோன்று விடும். அந்த ஹீரோ கேரக்டருடன் ரசிகன், ஐக்கியம் ஆகிவிடுவான் என்று சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர்.

இது நமக்குப் புதிய விஷயம் அல்ல. இந்தக் காட்சியை நினைவுகூறுங்கள். ஒரு வயதான பெரியவர், ஒரு மாட்டுவண்டியில் லோடு ஏற்றிக்கொண்டு, தானே அதை இழுத்துக்கொண்டு தள்ளாடி வருகிறார். அப்போது மிஸ்டர்.எக்ஸ், ஓடி வந்து அந்த வண்டியை வாங்கி பெரியவருக்கு உதவுகிறார். இது ஒரு பாடல் காட்சியில் வரலாம், தனிக்காட்சியாகவும் வரலாம். அந்த மிஸ்டர்.எக்ஸ் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே?

ஆம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் அவர். Save the Cat பாலிஸியை ப்ளேக் ஸ்னிடருக்கு முன்பே ஃபாலோ செய்து, படத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வெற்றிகரமானதாக ஆக்கியவர் அவர்.

ப்ளேக் ஸ்னிடர் பாலிசிப்படி, நீங்கள் ஹீரோவை பார்வையாளனுடன் இத்தகைய சிறிய விஷயங்கள் மூலம் இணைக்காவிட்டால், அதன்பிறகு அந்த ஹீரோ என்ன செய்தாலும் வேஸ்ட் தான்.

சேது படத்தின் ஆரம்பக்காட்சிகளில் காலேஜில் ரவுடித்தனம் செய்பவராக வருவார் விக்ரம். ஆனால் ஊமைப்பெண்ணின் பாவாடையை ஒருத்தன் அவிழ்க்கவும் ஓடிப்போய் ;ஒன்னுமில்லை..ஒன்னுமில்லை என்றபடியே கட்டிவிடுவார். அந்த காட்சியில் விக்ரமின் நண்பர்கள் தான் அவிழ்த்தவனை அடிப்பார்கள். ஆனால் விக்ரம் நம் மனதில் ஆழமாக ஊடுருவி விடுவார். அதன்பின் அவர் அபிதாவைக் கடத்திக்கொண்டு போய் மிரட்டினாலும், நாம் அதைத் தவறு என்று நினைப்பதில்லை. Save the cat பாலிசியின் பவர் அப்படி! அதனால் தான் ப்ளேக் ஸ்னிடர், திரைக்கதை பற்றிய தன் புத்தகத்திற்கு Save the cat என்று பெயர் வைத்தார்.
ஹீரோ எவ்வளவு கெட்ட பழக்கங்களைக் கொண்டவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒருவிதத்தில் ரசிகன் ஹீரோவுடன் சிங்க் ஆக, வாய்ப்பு இருக்க வேண்டும். அதைச் செய்யாமல், எத்தனை கோடிகளைக் கொட்டி படம் எடுத்தாலும் வேஸ்ட் தான்.

எனவே ஹீரோவின் கேரக்டர், ரசிகனை இம்ப்ரஸ் செய்யும் அதே நேரத்தில் குறிக்கோளுக்கு முரண்பாட்டைக் கூட்டுவதாக அமைகிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள்.


(தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 comments:

  1. நன்று.ஒவ்வொரு காவியங்களை உதாரணத்துக்கு எடுத்து,சகலரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தொடர்கிறீர்கள்,தொடரட்டும்!தொடர்வோம்.

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணா
    இந்த ‘Save the Cat’ என்ற வசனம் எனக்கு இப்பத் தான் புதித ஆனால் அதன் அர்த்தம் ஓரளவு தெரியும்.
    இது தொடர்பாக நான் கெக்கேபிக்கே என சிரித்த விடயம்

    ” ஒரு படத்தின் முதல் காட்சியில் விக்ரந் இந்த விதிமுறைக்கமைவாக ஆற்றில் ஒரவர் பிடித்த மீனை பணம் கொடுத்து வாங்கி திருப்பி ஆற்றில் விடுவது போல சீன். அவர் பணம் கொடுத்து வாங்கும் போது பார்ப்பவனுக்கும் அந்த மீன்கள் மீது பரிவு வந்திருக்கும் ஆனால் அதே மீனை காட்சி நீட்சிக்காக ஒவ்வொன்றாக ஆற்றில் கொட்டும் போது எப்படி கடுப்பு ஏறும்”

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete
  3. சிறப்பான உதாரணங்களுடம் அருமையாக செல்கிறது தொடர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சேது உதாரணம் சூப்பர்!

    ReplyDelete
  5. நல்ல முறையில் மேற்கோள் விளக்கங்கள் தொடரட்டும் திரைத்தொடர்.

    ReplyDelete
  6. சூத்திரங்கள் அருமை !

    ReplyDelete
  7. ஆளவந்தான் எதிர்மறை உதாரணம்

    ReplyDelete
  8. @mathi sutha Save the cat கான்செப்ட்டை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் நாடகத்தனமாக ஆகிவிடும். ‘இவன் என்ன பெரிய எம்.ஜி.ஆரா?’ என்றும் கேட்பார்கள். இண்டைரக்டாக சொல்வதே சரி.

    ReplyDelete
  9. //Sara Suresh said...
    ஆளவந்தான் எதிர்மறை உதாரணம்// உண்மை தான். ஆளவந்தான் பின்னால் வரும் பகுதியில் வருகிறது.

    ReplyDelete
  10. இன்றைக்குத்தான் அனைத்து பதிவுகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    தனிதனி பதிவுகளாக படிப்பதற்கும் மொத்தமாக படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    தனித்தனியாக படிக்கும் போது அது ஒரு பதிவு அவ்வளவே, ஆனால் மொத்தமாகப் படிக்கும் போது இருக்கும் சவால் வேறுமாதிரியானது. எங்காவது தொய்வடைந்தாலும் மூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவோம். தொய்வில்லாத எழுத்து நடை.

    திரைக்கதை சூத்திரங்கள் பகுதியைப் படித்துவிட்டு நான் படம் எல்லாம் எடுக்கப் போவதில்லை. ஒருபடத்தை எவ்விதங்களில் அணுகுகிறார்கள் அணுகலாம் என்று கற்றுகொள்ளலாம். அற்புதமாக செல்கிறது வாழ்த்துக்கள்.

    மொ.ராசு - தொடர் முழுக்கவும் இடம் பெற்றிருந்த உங்கள் கருத்துக்களைப் படித்து யாம் பெரிதும் உவகையுற்றோம் :-)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.